«

»


Print this Post

ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை: சைவசித்தாந்த முன்னோடி


சென்னை நண்பர் ஒருவர் என்னிடம் சைவம் குறித்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது ‘சிவஞான போதத்’துக்கு ஆங்கில மொழியாக்கம் உண்டா என்று கேட்டார். நான் என் நினைவில் இருந்து ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை அவர்களின் மொழியாக்கம் மிக முக்கியமானது என்றும் அதற்கு முன்னர் அவ்வளவு தெளிவில்லாத ஒரு மொழியாக்கம் ஆங்கிலேயர் ஒருவரால் செய்யப்பட்டிருக்கிறது என்றும் சொன்னேன். பதினேழுவருடங்களாக சைவத்தில் ஊறிய நண்பர் கேட்டார், ”நல்லுசாமிப்பிள்ளையா, அது யார்?” ஒருகணம் பேச்சிழந்து போய்விட்டேன்.

அதன்பின் தொலைபேசியில் வேண்டுமென்றே நாலைந்து நண்பர்களிடம் நல்லுசாமிப்பிள்ளை என்ற பேரைச் சொன்னேன். எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்காலம் தாண்டிவிட்டிருக்கிறது, ஜெ.எம்.என் முழுமையாகவே காலத்தில் மூழ்கிப்போய்விட்டிருக்கிறார்.

சைவத்துக்கு மட்டுமே இந்த வீழ்ச்சி நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று எனக்குப்படுகிறது. பதினெட்டு பத்தொன்பதாம் நூற்ரண்டுகளில் தமிழ்நாட்டில் சைவம் ஒரு புத்தெழுச்சியை அடைந்தது. ஒருவேளை தமிழ் வரலாற்றில் பௌத்த சமண மதங்களின் எழுச்சிக்குப்பின்னர் நிகழ்ந்த ஆகப்பெரிய அறிவார்ந்த கொந்தளிப்பே இதுவாக இருக்கலாம். சைவசித்தாந்தம் புது வீச்சுடன் மறுபிறப்புகொண்டது. நூற்றுக்கணக்கான சைவ அறிஞர்கள் உருவாகி பல்லாயிரக்கணக்கில் நூல்களை எழுதினார்கள். நூறாண்டுகண்ட ஒரு நூலகத்தில் அந்நூல்களில் கணிசமானவை தூசடைந்து தேங்கிக்கிடப்பதைக் காணமுடியும். ஓர் உதாரணமாக சைவமணி சொக்கலிங்கம் செட்டியாரைச் சொல்லலாம். அவர் எழுதி அச்சில்வந்த நூல்கள் மட்டும் நூற்றுக்கும் மேல். பல சைவ அறிஞர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்கள்.

அந்நூல்களின் பொதுவான அம்சம் என்ன? என் எளிய வாசிப்பில் மூன்று கூறுகளை நான் சுட்டமுடியும் 1. சைவ சித்தாந்த ஞானத்தின் தனித்தியங்கும் தன்மையும் தனக்கேயுரிய மீட்புவிளக்கமும் 2. தமிழுக்கும் சைவத்துக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவு. 4 ஆகம முறைசார்ந்த வழிபாட்டின் முக்கியத்துவம்.

இந்தக் கருத்தியல் இயக்கத்தின் விளைவாகவே தமிழ்நாட்டில் தமிழ் மறுமலர்ச்சி உருவானது. நவீனத்தமிழாய்வு என்ற அறிவியக்கமே இந்த கருத்தியல் கொந்தளிப்பின் விளைவே என்று சொல்லிவிடமுடியும். தமிழ் வரலாற்றை வகுப்பது, காலவரிசைபப்டுத்துவது, நூல்களைப் பதிப்பிப்பது ஆகியவற்றில் இவ்வியக்கம் ஆற்றிய பங்களிப்பு வரலாறாகும். தனித்தமிழ் இயக்கம், தமிழ்சை இயக்கம் போன்றவை இக்கருத்தியல் அலையின் விளைவுகளே.

இவ்வியக்கத்தின் நடைமுறையில் மெல்லமெல்ல பிராமண வெறுப்பு ஓர் அம்சமாக குடியேறியதே இதன் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்வேன். இந்த இயக்கத்தின் கணிசமான முன்னோடிகள் பிராமணர்களாக இருந்தபோதிலும் கூட இவ்வியக்கம் தமிழின் தனித்தன்மை தொன்மை ஆகியவற்றை முன்னிறுத்திய காரணத்தாலேயே அக்காலத்தில் ஆதிக்கம் செலுத்திய சாதியினரான பிராமணர்களின் காழ்ப்புக்கு இரையானது. அதன் எதிர் விளைவாக இவ்வியக்கத்திலும் பிராமண எதிர்ப்பும், வடமொழி மறுப்பும் முக்கியக் கருத்தாக வலிமை பெற்றது. அந்த எதிர்மறை அம்சம் மெல்லமெல்ல வலுப்பெற்று இதன் அறிவார்ந்த அடித்தளத்தையே பலமிழக்கச்செய்தது. சைவத்தின் அகில இந்தியத்தன்மையையே நிராகரிக்கும் இடத்துக்கு பல அறிஞர்களைக் கொண்டுசென்றது இது

அடுத்தகட்டத்தில் இவ்வியக்கம் மேலோட்டமான திராவிட அரசியலியக்கத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்தது. ஆய்வறிஞர்கள் மெல்லமெல்ல வழக்கொழிந்தார்கள். ஆழமற்ற மேடைப்பேச்சாளர்கள் உருவானார்கள். அவர்களும் அரசியலுக்கு நகர்ந்தார்கள். நாத்திகம் பேசி சைவத்தை விட்டு விலகிச்சென்றனர் பலர். சைவ மறுமலர்ச்சி இயக்கமே மெல்லமெல்ல இல்லமலாயிற்று. நூல்கள் மறுபதிப்பு மறந்தன. வாசிக்கவும் விளக்கவும் ஆளில்லாமலாயினர். இந்த தலைமுறையில் பெயர் சொல்லும்படி ஒருசில சைவ அறிஞர்களே முதிய நிலையில் இருக்கிறார்கள். அதன் பின் சைவமறுமலர்ச்சி அலை ஒரு பழங்கதையாக மறையும்.

சைவ மறுமலர்ச்சி அலையை உருவாக்கிய முன்னோடி அறிஞர்களில் ஒருவர் ஜெ.எம்.நல்லுச்சாமிப்பிள்ளை. திருச்சியில் 1864 ஆம் ஆண்டு நிலக்கிழார் மாணிக்கம்பிள்¨ளைக்கு மூன்றாம் மகனாகப்பிறந்தார். திருச்சியில் பள்ளிப்படிப்பை முடித்தபின்னர் சென்னை மாநிலக்கல்லூரியில் சேர்ந்து 1884ல் பி.ஏ பட்டம் பெற்றார். 1886ல் பி.எல் பட்டமும் பெற்றார். 1887ல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பதிவுசெய்துகொண்டார். மதுரையி;ல் வழக்கறிஞராக பணியாற்றியபின் திருப்பத்தூர் மாவட்ட முன்சீப் ஆக பதவியேற்றார். பொதுவாக பல வழக்குகளில் ஆங்கில அரசுக்கு ஒத்துப்போகும் நிலையை அவர் எடுக்கவில்லை என்பதனால் அவர் விசாரணைசெய்யபப்ட்டு பதவி நீக்கம்செய்யபப்ட்டார். மீண்டும் மதுரையிலேயே வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

பி.ஏ.பட்டம் பெற்ற அதே வருடம் லட்சுமியம்மாளைமணந்தார். இவருக்கு ஒருமகன் மூன்று பெண்கள். இவரது மகன் ராமநாதன் சைவ சித்தாந்தத்தின் ஆர்வம் உடையவராக அறியப்பட்டிருந்தார். ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை 1920 ஆகஸ்ட் 11 ஆம் நாள் மதுரையில் தன் ஐம்பத்தாறாம் வயதில் புற்றுநோயால் மரணம் அடைந்தார்.

ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை மூன்று வகையில் சைவசித்தாந்த மறுமலர்ச்சிக்கு பெரும்பங்களிப்பை ஆற்றினார். ஒன்று அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர். அவரைப்பற்றி எழுதிய அனைவருமே அந்த மேடைப்பேச்சுக்களைப்பற்றி உச்சகட்ட வியப்புடன் பதிவுசெய்திருக்கிறார்கள். ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை மேலைநாட்டு தத்துவ எழுத்துக்களை ஆழ்ந்து கற்றவர். மேலைநாட்டு மேடைப்பேச்சுமுறையையும் கூர்ந்து பயின்றவர். சென்னை வழக்கறிஞர் சோமசுந்தர நாயக்கர் ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் மேடைப்பேச்சுமுறைக்கு முன்னோடி என்று சொல்லப்படுகிறது.

அக்கால ஹரிகதை, புராணப்பிரசங்கம், தர்க்க விளக்கம் போன்ற முறைகளுக்கு மாறாக கருத்துக்களைச் சங்கிலித்தொடர்போல நீதிமன்ற வாதங்களின் பாணியில் எடுத்துரைப்பது ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் முறை என்கிறார்கள். அதில் இருந்த நவீன நோக்கும் புதிய வாதமுறைகளும் அக்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் பெரும் கவற்சியை உருவாக்கின. ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் மேடைப்பேச்சின் பாதிப்பால் ஒரு தலைமுறையே சைவத்தின்பால் ஈர்க்கபப்ட்டது.கடைசியாக, மறைந்த அ.ச.ஞானசம்பந்தம் வரையிலான தமிழறிஞர்கள் பலர் அவரால் கவரப்பட்டவர்களே.

இரண்டாவதாக, ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை சைவ மூலநூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்து வெளியிட்டார். 1895ல் சிவஞானபோதம் நூலின் ஆங்கில மொழியாக்கத்தை அவர் லண்டனில் வெளியிட்டார். அப்போது அவருக்கு முப்பதுவயதுதான். 1850லேயே ஹொய்சிங்டன் என்ற கிறித்தவ போதகர் சிவஞானபோதத்தை மொழியாக்கம்செய்திருந்தாலும் அது சிறந்த மொழியாக்கமாக இல்லை. 1897ல் திருவருட்பயனை மொழியாக்கம்செய்து வெளியிட்டார். சிவஞான சித்தியார் நூலை 1902ல் நூலாக வெளியிட்டார். திருமந்திரம் அவரால் அவரது இதழில் மொழியாக்கம்செய்து வெளியிடபப்ட்டது. பல சிறிய சைவ நூல்களை மொழிபெயர்த்து அந்த இதழில் தொடர்ச்சியாக வெளியிட்டார் ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை. பெரியபுராணத்தையும் அவர் மொழியாக்கம்செய்ததாகவும் அது வெளிவரவில்லைஎன்றும் சொல்லபப்டுகிறது. இந்நூல்கள் வழியாக சைவம் குறித்த ஒரு விரிவான சித்திரத்தை இந்திய மெய்ஞானவிவாதப்பரப்பில் உருவாக்க அவரால் முடிந்தது

மூன்றாவதாக, அவர் நடத்திய ‘சித்தாந்த தீபிகை’ என்ற இதழைக் குறிப்பிடவேண்டும். இந்தியாவில் சுயமான நவீன அறிவியக்கம் ஒன்று தொடங்கிய காலகட்டம் இது என்பதை வாசகர் அறிந்திருப்பார்கள். மாக்ஸ்முல்லர் போன்ற மேநாட்டு இந்தியவியலாளர்களால் இந்திய தத்துவ-சமய நூல்கள் ஆங்கிலத்திலும் ஜெர்மன் மொழியிலும் மொழியாக்கம்செய்து வெளியிடப்பட்டன. அதை ஒட்டி நாடெங்கும் படித்த நிதியர் மத்தியில் இந்திய சிந்தனை செல்வங்களைப்பற்றிய விழிப்புணர்வு உருவானது. வேதாந்தம், விசிஷ்டாத்வைதம் போன்ற தரப்புகளை முன்வைக்கும் இதழ்களும் பல்வேறு வரலாற்று ஆராய்ச்சி இழழ்களும் உருவாகின.

இக்காலகட்டத்தில் இந்திய சிந்தனையைப்பற்றிய மனவரைபடம் ஒன்று உருவானபோது அதில் சைவ சித்தாந்தத்துக்கு இடம் இருக்கவில்லை. காரணம், முன்னோடிகளான மாக்ஸ்முல்லர் மோனியர் வில்லியம்ஸ் போன்றவர்கள் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. சுவாமி விவேகானந்தரேகூட ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையிடமிருந்தே சைவ சித்தாந்தத்தின் ஆழத்தைக் கற்றார் . இதற்குக் காரணம் காஷ்மீர சைவம், வீர சைவம் போன்ற வழிபாட்டுமுறைகளாகவே சைவம் அறியப்பட்டிருந்தது என்பதே. சைவத்துக்கு தனித்துவம் கொண்ட ஒரு தத்துவ அமைப்பு தமிழகத்தில் இருந்ததை இந்திய அளவில் முன்வைக்க எவரும் இருக்கவில்லை.  அந்த வரலாற்றுப் பாத்திரத்தை ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை நிறைவுசெய்தார். அதற்கு சித்தாந்த தீபிகை பெரும் பங்களிப்பை ஆற்றியது.

1897 முதல் சித்தாந்த தீபிகை வெளிவந்தது. பெரும்பாலும் சொந்தபப்ணத்தைச் செலவிட்டே இதழை ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை நடத்தினார். அவரே மெய்ப்பு நோக்கி அச்சுவேலைகளையும் பார்த்துக்கொண்டார். அவரது செல்வம் முழுக்க அதிலேயே செலவானது. அதில் அவர் நிறைய எழுதினார். பிற ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்தன. சைவத்தமிழறிஞர்களின் கட்டுரைகளை ஆங்கிலத்தில் அவரே மொழியாக்கம்செய்து வெளியிட்டார். அதற்காக பதினெட்டு ஆண்டுகள் அவர் கடும் உழைப்பை மேற்கொண்டிருக்கிறார். அவரது மைந்தர் ராமநாதன் 1911ல் அவரது அனைத்து சைவக்கட்டுரைகளையும் ‘Studies on Saiva Sithaantha’ என்ற பேரில் வெளியிட்டார். இன்றும் சைவசித்தாந்தம் சார்ந்த ஆய்வுகளுக்கு அது ஒரு முக்கியமான மூலநூலாக உள்ளது.

ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் சைவ நோக்கு வடக்கு -தெற்கு, வடமொழி- தென்மொழி, பிரா¡மணர்- பிராமணரல்லாதவர் என்ற பிரிவினைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அவருக்கே வடமொழியில் ஆழ்ந்த பயிற்சி இருந்தது. அவரது இதழில் முக்கியமான சைவ வடமொழி ஆகமங்கள் மொழியாக்கம்செய்து வெளியிடப்பட்டன. சைவ சித்தாந்தத்தில் பெரும்பங்களிப்பாற்றிய வீ.வீ. ரமண சாஸ்திரி போன்றவர்களை ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை முன்னிலைப்படுத்தினார்.

ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை வாழ்ந்த காலகட்டத்தில் உலகமெங்கும் சமயங்களைப்பற்றிய விவாதம் உருவாகியது. பலநூறு சமயக்கருத்தரங்குகளும் விவாத அரங்குகளும் உலகமெங்கும் நிகழ்த்தப்பட்டன. ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை பல முக்கியமான இந்திய சமயமாநாடுகளில் பங்கெடுத்து சைவத்தின் தனித்தன்மையைப்பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். 1908 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த சமய மாநாட்டில் அவர் ஆற்றிய உரையும் 1911ல் அலஹாபாத் பலசமயப்பேரவையில் ஆற்றிய உரையும் முக்கியமான சமய ஆவணங்கள் என்று சொல்லப்படுகின்றன.

ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் பங்களிப்பை மிகச்சுருக்கமாக, இரு அடிபப்டைக் கருத்துக்களாக இப்படிச் சொல்லலாம். இந்தியச் சூழலில் சைவம் ஒரு வழிபாட்டு மரபாக மட்டுமே அறிமுகமாகியிருந்தது. அதற்குரிய தத்துவப்பின்புலம் அறிமுகமாகியிருக்கவில்லை. ஆகவே சைவத்தின் லிங்கவழிபாடு, சிவன் சுடலைநீறணிந்து புலித்தோல் உடுத்தது, யானைத்தோல் உரித்து போர்த்தியது போன்ற பல புராணக்கூறுகளை வைத்து அதை ஒரு தொல்சமயமாக , பழங்குடி வழிபாட்டுமுறையில் இருந்து மேலெழாத ஒன்றாக, காணும் மனப்பாங்கு அறிஞர் நடுவே இருந்தது. ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை அந்த மனப்போகுடன் தீவிரமாக வாதிட்டார். சைவத்தின் புராணக்கதைகளை தொன்மையான ஒரு சமயத்தின் ஆழ்படிமங்கள் மற்றும் குறியீடுகள் என்று வாதிட்டு, அதன் தத்துவ அடிப்படைகளை நிறுவினார். அவரது உரைகளில் பெரும்பகுதி இதற்கே செலவிடப்பட்டிருக்கிறது.

இதை அவர் வெறும் மனோதர்மம் மூலம் செய்யவில்லை. மாறாக கடுமையான உழைப்பு செலுத்தி சைவ நூல்களை ஆழக்கற்று உரிய ஆதாரங்களுடன் நிறுவுகிறார். சிவலிங்க வழிபாடு, நடராஜ தத்துவம், முப்புரமெரித்தல் போன்றவற்றைப்பற்றிய ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் ஆய்வுகளும் விளக்கங்களும் முன்னோடித்தன்மை கொண்டவை

இரண்டாவதாக, சைவ சித்தாந்தத்தை உயர்தத்துவதளத்தில் அத்வைத வேதாந்தத்தின் எளிய மறுபதிப்பாகக் காணும் ஒரு போக்கு அன்றிருந்தது. அதற்கான முகாந்தரம் சைவ சித்தாந்தத்தில் உண்டு என்பது ஒருபுறமிருக்க, அன்றைய பிராமணர் அதில் தேவைக்குமேற்பட்ட ஆர்வமும் காட்டிவந்தனர். தத்துவ நோக்கில் சைவசித்தாந்தத்தின் தனித்துவத்தை நிறுவும் பணியில் ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை தொடர்ந்து ஈடுபட்டார். பிரம்மம்,[பதி] ஆத்மா[பசு] மாயை [பாசம்] என்ற கட்டுமானத்தில் சைவ சித்தாந்தம் அத்வைத வேதாந்தத்துக்கு ஒத்துப்போனாலும் மிக முக்கியமான ஒரு வேறுபாடு அதை ஒரு படி மேலே கொண்டுசெல்கிறது என்பது ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் வாதமாகும்.

அத்வைத வேதாந்தம் பிரபஞ்ச உருவாக்கத்துக்கான காரணமாகக் காண்பது மாயையை. அதாவது பொய்த்தோற்றத்தை. இந்த பொய்த்தோற்றம் ஜீவாத்மாவின் தரப்பில் இருந்து உருவாகக்கூடியது. இந்தக் கருதுகோளை அது பௌத்தத்தின் விகல்பம் என்ற கருதுகோளில் இருந்து பெற்று வளர்த்துக்கொண்டது. பிரபஞ்சம் என்பது ஆத்மாவின் கட்சி மயக்கமே என்ற கருத்தை நிராகரிக்கும் சைவ சித்தாந்தம் அது பிரம்மத்தின் விளையாட்டே என்று சொல்கிறது. சிவசக்திநடனமாக அதை விளக்குகிறது.

மாயைக்கோட்பாடு காரணமாக அத்வைத வேதாந்தத்தில் ஒரு உலகநிராகரிப்பும், சோர்வும் உள்ளது என்று சொல்லும் ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை சைவசித்தாந்தத்தின் சிவசக்தி நடனக் கோட்பாடு அல்லது அலகிலா ஆடல் என்ற தரிசனம் பிரபஞ்ச இயக்கத்துக்கு மேலும் கவித்துவமும் பொருத்தமும் கூடிய விளக்கத்தை அளிக்கிறது என்கிறார். நம்மைச்சுற்றி நிகழ்பவை நம்முடைய மாயத்தோற்றங்களே என்பதை காட்டிலும் பிரபஞ்சசாரமான ஒன்றின் களியாடலே என்பது வாழ்க்கையை மேலும் முழுமையானதாக ஆக்குகிறது என்கிறார்.

இந்த இரு பங்களிப்புக்காகவும் ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை சைவசித்தாந்த மரபில் என்றென்றும் நினைக்கத்தக்கவர். அவரது அழகிய ஆங்கிலம் இன்றும்கூட அவரது நூல்களை வாசிக்க உகந்ததாக ஆக்குகிறது. விவேகானந்தரின் சிந்தனைகளில் ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் பங்களிப்பு கணிசமானது. அவர்கள் விரிவான நேரடி உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் வரலாற்றை கெ.எம்.பாலசுப்ரமணியம் ‘life and history of J.M.Nalluswami Pillai’  என்றபேரில் நூலாக்கியிருக்கிறார். அவரது நூல்கள் ஏதும் சமீபத்தில் அச்சேறியதில்லை. அவரது மூலநூலான ‘Studies on Saiva Sithaantha’ தமிழில் வெளிவருமென்றால் அது ஒரு மறு தொடக்கமாக அமையலாம்.
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Oct 17, 2008 @ 2:02

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/708

1 comment

5 pings

 1. Rajkumar

  Sir this is rajkumar frm lalgudi trichy .please give me detail of அபிதானசிந்தாமணி.books. where will get the books plz give me detail.
  kindly rajkumar

 1. jeyamohan.in » Blog Archive » ஓர் அமரகாதல்

  […] ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை:à®šà¯ˆà®µà®šà®¿à®¤à¯à®¤à®¾à®¨à… […]

 2. jeyamohan.in » Blog Archive » மரபின் கடற்கரையில் :வெட்டம் மாணி

  […] ஒரு அகராதி என்றுகூடச் சொல்லலாம். ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை:à®šà¯ˆà®µà®šà®¿à®¤à¯à®¤à®¾à®¨à…  à®•à®Ÿà¯à®Ÿà¯à®°à¯ˆà®¯à¯ˆ மின்னஞ்சல் செய்ய(Email This […]

 3. நல்லுச்சாமிப்பிள்ளை

  […] […]

 4. சைவம், நல்லுச்சாமிப்பிள்ளை- கடிதம்

  […] நேற்று வெளிவந்த நல்லுசாமி பிள்ளை அவர… பல சிந்தனைகளை என்னுள் கிளர்த்தியது. அக்கட்டுரையில் மாயை குறித்து வாசித்த போது எனக்கு பாரதியின் நிற்பதுவே பாடல் ஞாபகம் வந்தது. பிறகு பாரதியின் பரசிவ வெள்ளம் என்ற பாடலை வாசித்தேன். அந்த முண்டாசுக்காரன் எவ்வளவு எளிமையாக அதே நேரத்தில் மிக ஆழமாக (என்னறிவுக்கு) பாடியிருக்கிறான். […]

Comments have been disabled.