«

»


Print this Post

ஓருலகம்- கடலூர் சீனு


Earth boy - Africa

மழை தரும் விண் என் தந்தை,

வளம் தரும் மண் என் தாய்,

நான் இந்த பூமியின் மைந்தன்…

[பழம்பாடல் ஒன்று]

இனிய ஜெயம்,

மிக சமீபத்தில் ஒரு சம்பவம். அவர் ஒரு சாமியார் .இல்லறத் துறவி. நான் அத்து அலைந்து கொண்டிருந்தபோது பழக்கமானவர்களில் ஒருவர். புதுவை அருகே ஒரு கிராமத்தில் வசிக்கிறார். அவர் அடிக்கடி ஊழ்கத்தில் ஆழ்ந்துபோவார் அந்நிலை சில சமயம் இரு நாள் கூட நீடிக்கும். பெயர் பரவி. சிறு சிவன் கோவில் ஒன்று நிறுவினார். அனைத்துக்கும் மேல் அவர் பெயர் பரவ முக்கிய காரணம், அவர் பல வருடங்களாக கையில் காசே தொடுவதில்லை. அதை ஒரு விரதமாகவே ஏற்று வாழ்ந்தார். நல்ல தேஜஸ்.புகழ்.கம்பீரம். சில மாதங்கள் முன்பு சில நண்பர்கள் அவரை காசிக்கு அழைத்து சென்றார்கள். அவர் எதோ சுடுகாட்டில் ஊழ்கத்தில் அமர்ந்து விட்டார். நண்பர்கள் அவரை எழுப்பி பார்த்தார்கள். அவர் அசைவதாக இல்லை. சரி சாமியார் அப்படித்தான் என்று சமாதனம் ஆகி, அவர்கள் மட்டும் ட்ரைன்ஏறி புதுவை வந்து விட்டனர். சாமியின் மனைவிக்கும் பெரிய கவலைகள் இல்லை. ஐந்து நாள். சாமி கதறியபடி வீடு வந்து சேர்ந்தார். ஊழ்கம் கலைந்த சாமி ‘கைவிடப் பட்டது ‘ அறிந்து கத்தி கதறி கூப்பாடு போட்டு காவல் துறை உதவியுடன் வீடு வந்து சேர்ந்தார்.

மனைவியைக் கண்டதும் காணாமல் போன கைப்பிள்ளை அன்னையைக் கண்டது போல ஏங்கி ஏங்கி அழுதார். ஒரு வாரம் அழுதார். பேச்சு இல்லை.உணவு இல்லை. அழுகை மட்டுமே. பத்து நாள் நல்ல காய்ச்சல். சரியாக இருபதாவது நாள் இறந்துபோனார்.

சமணத் துறவியாக வாழ்ந்து அதிலிருந்து விலகிய சதீஷ் குமார். எதோ ஆற்றல் உந்த உலக சமாதானத்தை வலியுறுத்தி உலக நடை பயணம் கிளம்புகிறார். அப்போது அவரது குரு மகாத்மா பூலே அவருக்கு ஒரு கட்டளை விதிக்கிறார் அது. கையில் காசு எடுத்துக் கொள்ளாதே. அடுத்த வேளை உணவை சேமித்துக் கொள்ளாதே. எனும் இரு கட்டளைகள். சதீஷ் புறப்படுகிறார். ஆம் கையில் பைசா இல்லாமல், அடுத்த வேளை உணவு இல்லாமல், தொடர்பு மொழி இல்லாமல் புறப்பட்டு , முக்கிய உலக நாடுகளின் பிரதமர்கள் ,பேட்ரண்ட் ரசால் போன்ற சிந்தனையாளர்கள் அனைவரையும் சந்தித்து தனது கருத்தை முன் வைத்து விட்டு பல வருட பயணத்தை இமயமலையில் வந்து முடிக்கிறார்.

உலகம் யாவையும் கதையில் சுவாமி தம்பான் குறிப்பிடும் ஹர்மன் குண்டர்ட் போன்றோரை, அவர்களின் ஆளுமையை, இந்த புதுவை சாமியாருடன் ஒப்பிட்டு நோக்கினால் அவர்கள் எத்தகையதொரு ஆகிருதி என பிரமிப்பே எஞ்சுகிறது. ஆத்மீகத்துக்கு ஊற்று முகமான குன்றாத ‘செயல் ஆற்றல்’ ‘துணிவு”தன்னமிப்பிக்கை’என்பதன் பதாகை அல்லவா அவர்கள்.

garrydavis

அத்தகு ஆளுமைகளில் ஒருவர்தான் காரி டேவிஸ். சுவாமி தம்பான் சொற்களில் ஐரோப்பா உலக்குக்கு அளித்த பண்பாட்டுக் கொடை, அதில் டேவிஸ் போன்றவர்களின் இடம் அனைத்தும் சொல்லப்பட்டு விடுகிறது. கூடவே ஐரோப்பா இத்தகு மீறல்களையும் எப்படி ஒரு ‘மரபார்ந்த சடங்காக’மாற்றிக் கொண்டிருக்கிறது எனும் எதிர்மறை சித்திரமும் வந்து விடுகிறது.

நித்யா குருகுலம்தான் எத்தனை கனவு விதைகளை நிலம் எங்கும் தூவிஇருக்கிறது. எத்தனை ஆளுமைகளை சரடாக கோர்த்திருக்கிறது? எத்தனை நல்ஊழ்கள், நாராயணகுரு தனது மாணவரை தத்துவம் பயில மேலை நாடு அனுப்ப, அங்கு நடராஜகுருவை டேவிஸ் சந்தித்து அவரை தனது குருவாக ஏற்று, ‘உலக மனிதன்’ ஒரே உலகம் எனும் வரைவை முன் எடுக்க, தியாகம் மூலம் தனது கருத்தை அடிக்கோடிட டேவிஸ் நான்கு வருடம் தனிமை சிறையில் கழிக்க, நடராஜகுருவின் மாணவர் நித்ய சைதன்ய யதி, பதில் எதிர் நோக்காமல் காரிக்கு நான்கு வருடமும் மாதம் தவறாமல் தொடர்ந்து கடிதம் எழுதுகிறார். என்ன சொல்ல?உண்டு உறங்கி மண் மறையும் மாந்தக் கோடிளில், ஒளி கொண்டு மீளும் சிலர்

ஒரு முறை அதி காலை ஐந்துமணி ஊட்டி குரு குலம். புல்வெளியில் நாராயண குரு சிலை அருகே நின்றிருந்தேன். சுவாமி தம்பான் என்னைக் கடந்து அதிகாலைப் பனி போல ஒரு குளிர்ந்த புன்னகையை அளித்துவிட்டு நித்யா சமாதி நோக்கி, அவருக்கு விளக்கு ஏற்ற நடந்து சென்றார். சமாதி மண்டப வாசலில் நின்றிருந்தது ஒரு காட்டெருமை. தம்பான் இயல்பாக அதை தாண்டி செல்ல, எருமை சற்றே சீத்தடித்தது. சுவாமி எனக்களித்த அதே புன்னகையோடு எருமையை வினவினார்.’ஒய் திஸ் கொலை வெறி’.

உத்வேகம் கொண்டு நானும் காட்டெருதைக்கடந்து மண்டபத்துக்குள் நுழைந்தேன்.தம்பான் அதே புன்னகையுடன் வினவினார் ‘ஒய் திஸ் கொலை வெறி’?

தம்பானின் சித்திரம் கதைக்கு அழகு கூட்டுகிறது. குறிப்பாக அவர் ‘முக்காலமும்’அறியும் இடம். தம்பான் ஒரு சாமியார் அவர் கார்ல் கசனின் நூல் ஒன்றின் பெயரை குறிப்பிட்டு அதை வாசித்திருக்கிறீர்களா? என வினவுகிறார். ‘இல்லை’ என பதிலிறுக்கிறார் ஒரு எழுத்தாளர். எந்த நூலையும் திகைத்து வாய் பிளக்க வைக்கும் பதில். அவர் தந்த நூலின் வழியே காரி டேவிசை அறிமுகம் கொண்டு, குரு குலத்துக்கு வந்திருக்கும் காரி டேவிசை அணுகுகிறார் எழுத்தாளர்.

கதையின் இணை கோடாக, அதிகாலை துவங்கி அந்தி மாலை வரை, நிலம் வழங்கும் அத்தனை உயிர்ப்பும்,அழகும், சொற்களில் உயிர்கொண்டு, உள்ளங்காலில் புல்வெளியின் பனிஈரம் பதிந்தது போல ஒரு உணர்வை அளிக்கிறது.

டேவிஸ் தனது முதல் உரையாடலிலேயே,எல்லையற்ற நிலத்தில் வகுக்கப்பட்ட அரசியல் எல்லை, எனும் கருத்தியலில் சிக்கி இருக்கும் மனதின் எல்லைகளை நகர்த்துகிறார். இப்போது அவர் முன் வைப்பது ஒரு கருத்தியலுக்கு மாற்றான ஒரு கருத்தியல் அல்ல. ஒரு வாழ்வியல். இந்த வாழ்வியல் கண்டடைதலை அவர் அடையும் பின்புலம் இரண்டாம் உலகப்போர். போர் முடிந்து அவர் அழித்த நிலங்களில், மனம் கலங்கித் திரிகிறார். எங்கெங்கும் செழுமை. மனிதனின் கீழ்மைகளை ஒரு பொருட்டே இல்லாமல் கடந்து வந்து செழிக்கிறது இயற்க்கை. அங்கிருக்கும் எளியவன் ஒருவன் ‘ஏசுவின் பெயர் உன்னுடன் நிலவட்டும்’என வாழ்த்துகிறான். அக் கணம், அக்கணமே ஏசுவின் அக விரிவை அடைகிறார் காரிடேவிஸ். படைதவானால் கைவிடப்பட்ட மனிதர்களின் ஒரு துளி. அறியாமல் பிழை செய்வோர்களை மன்னிக்கக் கோரும் கடவுளின் ஒரு துளி.

எல்லைகள் உள்ளவரை போர். எல்லைகள் இல்லாவிட்டால் அது விளையாட்டு. தன்னை எல்லைகளுக்குள் நிறுத்தும் கடவுச் சீட்டை ஒரு குறிஈடாக மாற்றி[காந்தி தென்னாப்ரிக்காவில் செய்ததுபோல] அதை எரித்து தனது முதல் அடியை வைக்கிறார். காரிடேவிஸ். அங்கு துவங்கிய அவரது மீறலும், பயணமும், ஆப்ரிக்க தனிமை சிறையில் முற்றிலும் புதிய பரிமாணம் கொள்கிறது.

பயணத்தில் இருப்பவனை நான்கு மூலைகளுக்குள்அடைப்பதைக் காட்டிலும், பேசிக்கொண்டே இருப்பவனை தனிமையில் தள்ளுவதைக் காட்டிலும் சிறந்த தண்டனை உண்டா என்ன? கலைகளின் தாயகம் பாரிசில் கண்டுபிடிக்கப்பட்ட தண்டனை முறை. இதுவரை காரி டேவிஸ் தாண்ட வேண்டிய தடைகளில் பெரிய தடையை இப்போது எதிர்கொள்கிறார். அது அவரது போத மனம்தான்.
pasaporteCROPPED
இங்குதான் அவர் நடராஜகுரு வசம் கற்றது அவருக்கு துணை வருகிறது. தர்க்கம் ஞானம் ஆகும் தருணம். காரி அவரது போதத்தை சுவற்றில் வரைகிறார். தனது சித்தத்தின் விருத்தியை உன்னதப் படுத்துகிறார். பூமி ஆகிறார். தீராத ஆற்றலும் ,அளவற்ற பொறுமையும் கொண்ட பூமி. தம்மை அகழ்வாரை தாங்கும் பூமி.

தன்னை பூமியாக அறிந்த காரி டேவிஸ் அதன் எல்லை எது என்றே அஸ்தமன சூரியனைக் கொண்டு அறிகிறார். பூமி மட்டும்தானா நான். சூரியன் நான் இல்லையா? இப்போது அவரது போதத்தை வரைந்தால் அது வேறு படம். ஆம் அது பிரபஞ்ச சித்திரம்.

இனிய ஜெயம் வேறு தேர்வே கிடையாது உங்களது புனைவு உலகம் மொத்தத்தில் இருந்து உங்களை பிரதிநித்துவம் செய்யும் ஒரே ஒரு கதையை என்னை தேர்வு செய்யச் சொன்னால், எந்த தடுமாற்றமும் இல்லாமல் நான் தேர்வு செய்யும் கதையாக இந்த ”உலகம் யாவையும்” கதையே இருக்கும்.

கடலூர் சீனு

அறம் அனைத்து கடிதங்களும்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/70799