தொலைக்காட்சியிலே…

ஏப்ரல் ஒன்றாம் தேதி நான் ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது நள்ளிரவில் ஒரு ·போன் ”சார்! என்ன சார் ஆச்சு?” அப்போதுதான் நான் ஏப்ரல் ஒன்றாம்தேதிக் கட்டுரையை நினைவுகூந்தேன். சமாளித்துவிட்டு செல்போனை அணைத்துவிட்டேன். நேராகச் சென்னை.

 

வசந்தபாலன்

அங்காடித்தெருவுக்கான ‘பிரமோ’ வேலைகளுக்காக சென்னைக்கு சென்றேன். இரண்டுநாள் அங்கே இருக்க வேண்டுமென்றார் வசந்தபாலன்.  ஆனால் மேலும் நான்கு நாள் இருக்கும்படி ஆகியது. ஏகப்பட்ட தொலைக்காட்சிகளில் அங்காடித்தெருவுக்கான விளம்பர நிகழ்ச்சிகள். நான் கடவுள் பட விளம்பர நிகழ்ச்சிகளுக்குப் பின் இப்போதுதான் மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றுகிறேன். சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்று.

பொதுவாக பெரிய நடிகர் நடித்து சூப்பர்ஹிட் ஆகிவிட்டது என தெரிந்துவிட்ட படத்துக்கு விளம்பரம் தேவையில்லை. தோல்வி என்று தெரிந்துவிட்ட படத்துக்கு மேற்கொண்டு செலவு செய்ய மாட்டார்கள். அங்காடித்தெரு நடுவிலே. வெற்றிப்படம் என்று ஆகிவிட்டது. கோடைக்கு இன்னும் வெற்றிபெற மேலும் கொஞ்சம் உந்தலாமே என்று தயாரிப்பாளர் எண்ணினார்கள்.

 

அஞ்சலி

ஆகவே சலிக்கச் சலிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். ஏற்கனவே வசந்தபாலன் பல நிகழ்ச்சிகளில் வந்துவிட்டார். படத்துக்கு பெரிய ஹீரோ இல்லை. அஞ்சலிதான் ஒரே நட்சத்திரம். தலைகள் தேவைப்பட்டது. ஆகவே இடம் நிரப்பியாக நான். விளம்பரங்களால் போட்டியை சமாளித்து அங்காடித்தெரு வெற்றிகரமாக களத்தில் இருக்கிறது என்றார்கள்.

முதலில் பாலிமர் டிவி நிகழ்ச்சி. அதில் நான் கிட்டத்தட்ட திருதிருவென விழித்தேன் என்றார்கள்.  அங்கே குரல் ஒரு இடத்தில் கேட்கும். அதை காமிரா மேல் தெரியும் சிவப்பு விளக்கில் தெரிவதாக கற்பனைசெய்துகொண்டு பேசவேண்டும். ஆனால் குரல்கேட்கும் திசைநோக்கி கவனமும் கண்ணும் செல்வதை தவிர்க்கமுடியவில்லை. அதுதான் அந்த திருதிரு தோற்றம் ஆனால் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் கற்றுக்கொண்டு விட்டேன்.

 paandi1zq6.jpg

பிளாக் பாண்டி

பாலிமர் டிவியிலேயே எனக்கான சில வாசகர்கள் கூப்பிட்டது ஆச்சரியமளித்தது. விஷ்ணுபுரம் சரவணன் கூப்பிட்டு பேசினார். இன்னொரு வாசகர் சென்னையில் என் நூல்கள் கிடைப்பதில்லை என்றார். நான் பாலிமர் டிவியிடம் கேட்டுவிட்டு நியூ புக்லேண்ட் கடையைப்பற்றிச் சொன்னேன். பொதிகை டிவியில் என் தர்மபுரி நண்பர் பசவராஜ் கூப்பிட்டு உற்சாகமாக பேசினார். நான் அவரிடம் பேரி 13 வருடங்கள் ஆகின்றன.

ஆரம்ப நிகழ்ச்சிகளில் என்னைப்போலவே தடுமாறிய அஞ்சலி பிற்பாடு உற்சாகமாக பேச ஆரம்பித்தார். பாராட்டுகள் வந்துகொண்டே இருந்தன. எவ்வளவு பழகியும் பாராட்டைக் கேட்கும்போது முகத்தில் ஓர் அசடு வழிவதை என்னால் தடுக்க முடிவதில்லை. கடைசியாக கலைஞர் டிவி. அதில் பிளாக் பாண்டி கலந்துகொண்டான். எங்கும் எப்போதும் தங்குதடையில்லாமல் நகைச்சுவையை நிறைக்க கூடிய பிறவிக்கலைஞன் அவன். ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ என்று அஞ்சலியை நோக்கிப் பாடி பட்டையைக் கிளப்பினான்.

 

பா. ராகவன்

சென்னையில் நான் தங்கியிருந்த ஓட்டலிலேயே கிழக்கு பதிப்பகத்தின் விற்பனை முகவர்கள் சென்றவருட இலக்கை அடைந்தமைக்கான பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது. விளம்பரத்தைப் பார்த்து ராகவனைக் கூப்பிட்டேன். அவரும் ஹரன் பிரசன்னாவும் அறைக்கு வந்தார்கள். உற்சாகமாக படத்தைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நான் கிழக்கு கூட்டத்தில் சும்மா தலைகாட்டினேன், மொய் வைக்கவில்லை.

ஆறாம்தேதி சென்னையை விட்டுக் கிளம்பி இன்றுதான் ஊருக்கு வந்தேன். மீண்டும் நாளை கிளம்புகிறேன், கும்பமேளாவுக்கு

முந்தைய கட்டுரைமதம் சார்ந்த சமநிலை
அடுத்த கட்டுரைகர்மயோகம் : (16 – 19)