‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -12

பகுதி 4 : தழல்நடனம் – 2

சிசிரன் வந்து வணங்கியதை ஆடியிலேயே நோக்கி அர்ஜுனன் தலையசைத்தான். ஆடியில் நோக்குகையில் உடலெங்கும் பரவும் சினத்தை உணர்ந்தான். ஏனென்றறியாத அந்தச் சினம் அவனிடம் இருந்துகொண்டே இருந்தது. இரவில் மஞ்சத்தில் புரண்டு புரண்டு படுத்து துயிலின்றி எழுந்தமர்ந்து விண்மீன்களை நோக்கி அமர்ந்திருந்து மீண்டும் படுத்து விடியற்காலையில்தான் கண்ணயர்ந்தான். துயில் வந்து மூடும் இறுதிக்கணம் எஞ்சிய சினம்பூசப்பட்ட எண்ணம் அப்படியே விழிப்பின் முதல்கணத்தில் வந்து ஒட்டிக்கொள்வதன் விந்தையை ஒவ்வொருமுறையும் எண்ணிக்கொண்டான். நாளெல்லாம் எண்ணங்களுடன் அன்றாடச்செயல்களுடன் அத்தனை உரையாடல்களுடன் அந்தச்சினமும் உடனிருந்தது.

ஆனால் ஆடியை நோக்காமலிருக்கவும் முடியவில்லை. அது அவனருகே அவனுக்கு நிகரான ஒருவனை படைத்து நிறுத்தியிருந்தது. அவனை உற்றுநோக்கிக்கொண்டிருப்பவன். துயிலற்றவன். அதன் ஓசையின்மையைப்போல குரூரமானது ஏதுமில்லை என்று தோன்றியது. அதனுள் கிளைகள் ஓசையின்றி காற்றிலாடின. காகம் ஓசையின்றி கரைந்த பின் எழுந்து சிறகடித்து அதன் ஒளிமிக்க ஆழத்திற்குள் சென்று மறைந்தது. அது தனக்குள் ஒரு வான்வெளியை கொண்டிருந்தது.

குழலை மீண்டும் நீவி தோளில் அமைத்தபின் சால்வையை சரிசெய்தபடி அர்ஜுனன் வெளியேவந்தான். சிசிரன் “சூதர்கள் காத்திருக்கிறார்கள்” என்றான். அப்போதுதான் சகதேவன் சொன்னதை அர்ஜுனன் நினைவுகூர்ந்தான். தனக்கென அவன் தெரிவுசெய்த கதை எதுவாக இருக்கும்? அவன் தலையை அசைத்துக்கொண்டான். அவனுக்கு சகதேவன் எப்போதுமே பெரும் புதிர். அவன் தேவைக்குமேல் பேசுவதில்லை. எப்போதும் நகுலனின் வெண்ணிறநிழல் போல உடனிருப்பான். “நிழலை உருவம் தொடர்வதை இப்போதுதான் பார்க்கிறேன்” என்று திரௌபதி அவனை ஒருமுறை கேலிசெய்தாள். அவனுக்கென்று விருப்போ செயல்களோ இல்லை என்பதுபோல நகுலனுடன் இருந்தான்.

ஆனால் அவன் முற்றிலும் வேறானவன். நகுலனின் உள்ளம் குதிரைகளுடன் வாழ்வது. விரிவெளியில் வால்சுழற்றிச்செல்வது. சரிவுகளில் பாய்ந்திறங்குவது. விழித்துத் துயில்வது. சகதேவனிடம் எப்போதுமே சோழிகள் இருக்குமென்பதை அர்ஜுனன் கண்டிருந்தான். தனிமையில் அவற்றை கோடுகள் மேல் பரப்பி விழியூன்றி அமர்ந்திருப்பவனுக்கு பலநூறாண்டுகால வயது ஆகியிருக்குமென்று தோன்றும். அவனறியாத ஏதுமில்லை. அவன் முன்னரே அறிந்ததை மீண்டும் நடிக்கும் எளிய நடிகர்களுக்கு நடுவே சற்றே சலிப்புடன் அவன் நோக்கியிருக்கிறான்.

இசைக்கூடத்தில் மூன்று சூதர்கள் இளஞ்செந்நிறப் பட்டாடை அணிந்து செந்நிறத் தலைப்பாகையுடன் அமர்ந்திருந்தனர். பெரிய பதக்கமாலை அணிந்திருந்த நடுவயதான சூதர் அவனைநோக்கி வரவேற்கும்முகமாக தலையசைத்தார். அவன் பீடத்தில் அமர்ந்துகொண்டதும், சிசிரன் தலைவணங்கி வெளியேறினான். சூதர் அவனை நோக்கி தொடங்கலாமா என்று விழிகளால் கேட்க அவன் கையசைத்தான். அவர் திரும்பி முழவேந்தியை நோக்க அவன் விரல் தொட்ட குறுமுழவு தண்ண்ண் என்றது. யாழ் ஆம்ம்ம்ம்ம் என்று இணைந்துகொண்டது. ‘ம்ம்ம்ம்’ என அதனுடன் குரலை இணைத்து சுதிகொண்ட சூதர் வாழ்த்துரைகளை தொடங்கினார்.

“தத்தகி தத்தகி தகதிமி திருநடனம். தித்திமி தித்திமி திமிதிமி பெருநடனம்! வெற்புகள் உடைபட இடியெழுக! அனலெழு பொற்பதம் தொட்டிடும் முடியுருக!” என்று சூதர் பெருங்குரலில் தொடங்கினார். வெடிப்புறு தாளத்துடன் முழவு இணைந்துகொள்ள யாழில் துடிதாளம் எழுந்தது. கயிலை மலைமுடியின் வெண்பனிக்குவைகள் அண்ணலின் கால்கனலில் உருகி வழிந்து பேரலையாக இறங்கின. இடியோசையென எழுந்த தாளம் முகில்களை நடுங்கச்செய்தது. மின்னலெனும் தந்தங்களைக் கோர்த்து போரிட்டுப் பிளிறின வெண்முகில் மதகரிகள்.

பின்பு பெருங்கருணை மழையெனப்பொழிந்து மண்குளிர்ந்தது. விண்ணில் பெருகியோடின பொன்னிறமான வான்நதிகள். ஒலிகள் எழுந்து ஒன்றோடொன்று இணைந்து ஒன்றென்றாகி ஓங்காரமென ஒலித்து அமைதியில் அடங்கின. கயிலை முடி மீண்டும் குளிர்ந்தது. வெண்பனிசூடி இமயமலைமுடிகள் தங்கள் ஊழியமைதிக்குள் மீண்டும் சென்றமைந்தன. தன்னுள் தானடங்கி விழிமூடி ஊழ்கத்திலமர்ந்தான் முக்கண்ணன்.

விழிகாணாததை அவன் நுதல்கண்டுகொண்டிருந்தது. அவன் பின்னால் மெல்லடி வைத்து இளநகையுடன் இடையொசிய முலைததும்ப வந்தாள் சிவகாமி. அவனருகே குனிந்து அவன் விழிகளை ஒருகையாலும் நுதல்விழியை மறுகையாலும் மூடிக்கொண்டாள். அவள் மென்முலை தொட்ட இன்பத்தில் ஒருகணம் அப்பனும் தன்னை மறந்தான். மூவிழியும் மூடியபோது விசும்பெங்கும் ஒரு கன்னங்காரிருள் கவிந்தது. மறுகணம் அவன் அவள் கைகளைப்பற்றி இழுத்து மடியிலிட்டு முகம் நோக்கி புன்னகைசெய்தபோது பேரொளி கொண்டு ககனம் பொன்வெளியாகியது.

அந்த இருள்கணம் திரண்டு ஒரு மைந்தனாகியது. இருண்ட பாதாளத்தின் மடிப்பொன்றில் கண்களேயற்ற கரிய குழந்தையென பிறந்து கால்களை உதைத்து பாலுக்கு அழுதது. அழுகையொலி கேட்டு முலைநெகிழ்ந்தாள் அன்னை. குனிந்து தன் ஒளிக்கரங்களால் அவனை அள்ளி எடுத்துக்கொண்டாள். முலைக்கச்சை நெகிழ்த்து கருமொட்டை அவன் இதழ்களில் வைத்தாள். நெற்றிப்பொட்டின் ஆயிரமிதழ்த்தாமரை அறியும் விண்ணொளியால் அவளைப்பார்த்து கைவீசி குதித்து கவ்வி அமுதுண்டான். வயிறு நிறைந்து வாய்வழிய சிரித்தான்.

விழியற்றிருந்த கரியபேரழகனை அந்தகன் என்று அழைத்தாள் அன்னை. தன் செவ்விதழ்களைக் குவித்து அவன் கன்னங்களில் முத்தமிட்டாள். அன்னையின் மென்முலைமேல் முகம் வைத்து விழியுறங்கியது மகவு. “இன்னுமொரு மைந்தனைப் பெற நன்றுசெய்தேன்” என்றாள் அன்னை. “மண்ணில் இக்கணம் என்னை நோக்கி கோருபவருக்கு இவன் மைந்தனாகட்டும்” என்றார் அச்சன்.

அப்போது ஹிரண்மயம் என்னும் அசுரநகரை ஆண்ட ஹிரண்யகசிபுவின் இளவல் ஹிரண்யாக்ஷன் தன் நகரின் உச்சிமாடம் ஒன்றில் புத்திரகாமேஷ்டி வேள்வி செய்துகொண்டிருந்தான். நூறு அஸ்வமேத வேள்விகளாலும், அந்நூறு வேள்விகளின் செல்வத்தைக்கொண்டு செய்யப்பட்ட விஸ்வஜித் வேள்வியாலும் அந்நகரை மண்ணிலிருந்து மேலெழச்செய்தார்கள் ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும். விண்ணில் முகில்களுடன் மிதந்தலைந்த அந்நகரின் அசுரர்கள் புகைச்சுருள்களென பறக்கும் வல்லமை கொண்டிருந்தனர்.

வேள்வி முடித்து ஹிரண்யாக்ஷன் கைநீட்டிய கணம் முக்கண்ணன் தன் சொல்லை சொன்னான். வேள்வியின் கரிக்கனலில் கிடந்த அந்தகன் கைகால் உதைத்து அழுதான். கண்ணீருடன் ஓடிச்சென்று மைந்தனை எடுத்து மார்போடணைத்துக்கொண்டான் ஹிரண்யாக்ஷன். “இவனுக்கு விழியில்லை என்று வருந்தாதே. இவன் நீங்கள் காணாதவற்றையும் காண்பவனாவன்” என்றது அனலில் எழுந்த இடிக்குரல்.

அந்தகன் மழையில் கரைந்தழிந்த சிற்பமெனத் தோன்றிய தன் விழியற்ற முகத்தில் கண்களிருக்கும் இடத்தில் இரண்டு நீலவைரங்களை கருவிழிகளாகப் பதித்துச் செய்யப்பட்ட பொய்க்கண்களை பொருத்திக்கொண்டான். அவன் விழிகள் தன்னைச் சூழ இருந்த அனைத்துக்கும் அப்பால் நோக்கிக்கொண்டிருப்பவை போலிருந்தன. அவனுடைய வைரவிழிகளை நோக்கி நின்று பேச அவன் தந்தையும் அஞ்சினார்.

ஊர்ந்து செல்லும் எறும்பையும் ஒலியால் அறியக்கூடியவனாக அவன் இருந்தான். பறந்துசெல்லும் பறவையின் ஒற்றை இறகை மட்டும் அம்பால் சீவி எடுக்கும் வல்லமை கொண்ட மாபெரும் வில்லாளியாக ஆனான். எண்ணம் சென்று தொடுவதற்குள் அந்தகனின் அம்புசென்று தைத்துவிடும் என்று அசுரர்களின் கவிஞர்கள் பாடினர். அன்னையை தந்தையை நட்பை சுற்றத்தை அவர்களின் ஓசைகளாலும் மணத்தாலும் தொடுகையாலும் அவன் பார்த்தான். அவர்களின் உள்ளங்களை தன் வைரவிழிகளால் நோக்கி அறிந்தான்.

அந்தகனுக்கு இளமை நிறைந்தபோது ஹிரண்யாக்ஷன் மணமகளைத் தேட அசுரநாடுகளெங்கும் தூதனுப்பினான். அச்செய்தியை அறிந்த அந்தகன் தந்தையை அணுகி தன்னுள் ஒரு பெண்ணின் உளச்சித்திரம் உள்ளது, அதுவன்றி எப்பெண்ணுருவும் தன் அகம் நிறைக்காது என்றான். “எங்கே எப்போது என்னுள் நிறைந்ததென்று அறியேன். நான் என என்னை உணர்ந்தபோதே என்னுள் உள்ளது இது. இவளே என் பெண்.”

”அவளை காட்டு எனக்கு. எங்கிருந்தாலும் கொண்டுவரச் சொல்கிறேன்” என்றான் ஹிரண்யாக்ஷன். நூறு சூதர்கள் அந்தகனின் அவையில் வலப்பக்கம் அமர்ந்தனர். நூறு ஓவியர் இடப்பக்கம் அமர்ந்தனர். நூறு நிமித்திகர் எதிரில் அமர்ந்தனர். அந்தகன் தன் நெஞ்சிலுள்ள சித்திரத்தை சொல்லச் சொல்ல சொல்லிலும் வண்ணங்களிலும் முத்திரைகளிலும் அவளை தீட்டி எடுத்தனர்.

அவர்களின் சித்திரங்களை எல்லாம் ஒன்றாக்கி எடுத்தபோது வந்த பெண்ணுருவம் விண்ணொளிகொண்டிருந்தது. பெருங்கருணையும் கொடுஞ்சினமும் ஒன்றாய்க்கலந்த விழிகளுடன் ஒவ்வொரு உறுப்பிலும் முழுமை நிகழ்ந்த உடலுடன் நின்றிருந்தது. “யாரிவள், தேடுங்கள்” என்று ஹிரண்யாக்ஷன் ஆணையிட்டான். மூவுலகங்களிலும் தேடிய தூதர் அந்தச் சித்திரத்தின் கால்கட்டைவிரல் நகத்தளவுக்கு எழில்கொண்டவளாகக் கூட பெண்டிர் எவருமில்லை என்றனர்.

செய்தியறிந்து அந்தகனின் தமையனான பிரஹலாதன் தேடிவந்தான். அந்த ஓவியத்தைக் கண்டதுமே கண்ணீருடன் கைகூப்பி “என் விழிகள் இதற்கென்றே முகத்தில் மலர்ந்தன போலும். இதோ இவ்விசும்பை புரக்கும் பேரன்னையை கண்டேன். வெறும்வெளியை ஆடையாக்கி காலத்தை இடையணியாக்கி பேரொளியை மணிமுடியாக்கி அமர்ந்திருக்கும் ஆற்றல்முதல்வியை கண்டேன்” என்றான். அவனருகே வந்த அந்தகன் “யார் அவள்?” என்றான். “இவளே அன்னை சிவகாமி. ஆடவல்லான் கொண்ட துணையான உமை” என்றான் பிரஹலாதன்.

”அவ்வண்ணமென்றால் உடனே கிளம்பட்டும் நமது படைகள். கயிலையை வென்று அவளை இக்கணமே கவர்ந்து இங்கே கொண்டுவரட்டும்” என்று அந்தகன் ஆணையிட்டான். அசுரர் படைத்தலைவன் சம்பாசுரன் நடத்திய ஆயிரத்தெட்டு அக்ரோணி படைகள் விண்ணிலேறி கயிலையை சூழ்ந்துகொண்டன. தன்னுடைய எட்டு பெருஞ்சிறைகளை வீசி இடிப்புயலென ஒலியெழுப்பி கயிலையை சூழ்ந்தான் சம்பன். அசுரப்படைகள் பூதகணங்களால் கொல்லப்பட்டன. சிவன் தன் சூலாயுதத்தால் குத்தி அவனைக் கொன்று விண்ணிருளில் வீசினார்.

படைத்தலைவனின் இறப்பை அறிந்த அந்தகன் விண்பிளக்கும் இடியோசையுடன் சுஃப்ரு என்னும் வில்லையும் முடிவிலாது அம்புகள் ஊறும் குரோதாக்ஷம் என்னும் அம்பறாத்தூணியையும் எடுத்துக்கொண்டு முகில்கள் மேல் பாய்ந்து பாய்ந்து விண்ணிலேறி கயிலை முடியை அடைந்தான். அவன் வருகையைக் கண்ட பூதகணங்கள் எழுந்து பேரொலி எழுப்பி தாக்கவந்தன. அவன் சிவமைந்தன் என்பதனால் அவற்றால் அவனை தடுக்கமுடியவில்லை. அவனுடைய குறிபிழைக்காத அம்புகள் கொண்டு அவர்கள் உதிர்ந்து விண்ணை நிறைத்துப்பரவினர்.

கயிலையின் பனியாலான பெருவாயிலை உடைத்துத் திறந்து அறைகூவியபடி உள்ளே சென்றான் அந்தகன். “என்னை எதிர்ப்பவர் எவரேனும் உளரென்றால் வருக. என் உளம்கவர்ந்த பெண்ணை கவராது இங்கிருந்து செல்லமாட்டேன்!” என்று கூச்சலிட்டான். மைந்தனுக்கு முன் நீறணிந்த செம்மேனியும் மான்மழுவேந்திய கரங்களுமாக சிவன் தோன்றினார். “மைந்தா, உன்னுடன் போரிடுவது எனக்கு உகந்தது அல்ல. நாம் நாற்களம் ஆடுவோம். அதில் நீ வென்றாயென்றால் அவளை கொள்க” என்றார்.

”ஆம், அதற்கும் நான் சித்தமே” என்று அந்தகன் அமர்ந்துகொண்டான். பனியில் களம் வரைந்து பூதகணங்களை சிறுகாய்களாக ஆக்கிப்பரப்பி அவர்கள் ஆடத்தொடங்கினர். தங்கள் குலத்தையும் உறவுகளையும் காய்களாக்கி அவர்கள் ஆடிய அந்த விளையாட்டு காலம் மலைத்து விலகி நின்றிருக்க முடிவில்லாமல் தொடர்ந்தது. பின் அந்தகன் அசைவற்று சிலைத்திருக்க அவன் கனவில் அந்த ஆடல் நீடித்தது.

தன் தந்தை என்று ஹிரண்யாக்ஷனை முன்வைத்த ஒவ்வொரு முறையும் தன் காய் நிலைக்காததை கண்டான் அந்தகன். புன்னகையுடன் அவனை தன் மைந்தன் என்று காயை வைத்த சிவன் அவனுடைய காவல்களை எல்லாம் உடைத்தார். நிமிர்ந்து அவர் முகத்தை நோக்கியதுமே அவரை அறிந்துகொண்ட அந்தகன் தந்தையே என்றான். தன் துணைவியாக பார்வதியை வைத்தார் சிவன். அனல்கொண்டது போல துடித்து எழுந்த அந்தகன் தன் தந்தையருகே புன்னகையுடன் நின்றிருந்த தாயை கண்டுகொண்டான்.

குனிந்து அவள் காலடியில் விழுந்து பொற்பாதங்களை முத்தமிட்டு விழிநீர் சிந்தி அழுதான். “அன்னையே அன்னையே” என்று கூவி ஏங்கினான். அவனை அள்ளி எடுத்து தன் முலைகளுடன் சேர்த்துக்கொண்டு “மைந்தா” என்றாள் அன்னை. “நீ பிழையேதும் செய்யவில்லை. உனக்கு நான் அளித்த தாய்ப்பால் போதவில்லை” என்றாள். அவள் முலைகளை அவன் விழிநீர் நனைத்தது.

தந்தையும் தாயும் அமர்ந்திருக்க அவர்கள் காலடியில் அமர்ந்து அவர்கள் அருளிய இன்சொல் கேட்டான் அந்தகன். “இங்கே உங்கள் உலகில் இனிது வாழ எனக்கு அருளவேண்டும்” என்று கோரினான். “நீ விழைந்தவை எல்லாம் அங்கே மண்ணில் உள்ளன. மானுடர் மறைந்தாலும் அவ்விழைவுகள் அழிவதில்லை. திரும்பிச்சென்று அவற்றை கைக்கொள். வாழ்ந்து நிறைந்து திரும்பி வருக” என்றார் சிவன்.

”நீ விழைந்தவை வண்ணங்களை அல்லவா? ஆகவே மண்ணில் ஒரு வண்டெனப்பிறப்பாய். நூறாண்டுகாலம் மலர்களை நோக்கி நோக்கி வாழ்வாய். பின் பிருங்கி எனும் அசுரனாகப் பிறந்து காமகுரோதமோகங்களை அடைவாய். நிறைந்து உதிர்ந்து இங்கு மீள்வாய். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் சிவன். அந்தகனின் உடல் ஒளிபட்ட கருநிழல் என கரைந்தது. அவன் விழிகளாக இருந்த வைரங்கள் இணைந்து ஒரு தேன்வண்டாக மாறின. யாழிசைமீட்டி அவன் மண்ணுக்கிறங்கினான்.

”முடிவற்ற மலர்வண்ணங்களாகி நிற்பவள். எல்லையற்ற தேன் என இனிப்பவள். இப்புவியின் அன்புச்சொற்களெல்லாம் அவளுக்குரிய வாழ்த்துக்கள். இங்குள்ள முத்தங்கள் எல்லாம் அவள் முன் விழும் செம்மலர்கள். இங்கு நிகழும் தழுவல்களெல்லாம் அவள் காலடி வணக்கங்கள். என்றும் அழகியவள். குன்றா இளமைகொண்டவள். அன்னையெனும் கன்னி. அவள் வாழ்க! ஓம்! ஓம்! ஓம்!” என்று சூதர் பாடி முடித்தார்.

அர்ஜுனன் சற்றே திகைத்தவன் போல கேட்டுக்கொண்டிருந்தான். பாடல் முடிந்ததும் அவன் ஏதேனும் சொல்வான் என்பதுபோல அவர் நோக்கி அமர்ந்திருந்தார். அர்ஜுனன் சற்று அசைந்த ஒலியே ஒரு சொல்லென ஒலிக்க அவர்கள் செவிகூர்ந்தனர். அவன் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு எழுந்து ”சிறந்த பாடல். முழுமைகூடிய நல்லிசை. நன்று சூதரே” என்றான். சிசிரன் வந்து நிற்க அவன் கொண்டுவந்த பரிசில்தாலத்தை வாங்கி சூதருக்கு அளித்தான். அவர் அதை பெற்றுக்கொண்டு வணங்கினார்.

அர்ஜுனன் தன் சால்வையை சீரமைத்தபடி “இப்பாடலை என் இளவலா சொன்னான்?” என்றான். சூதர் “ஆம், நாங்கள் சொல்லவிருந்தது ஊர்வசியின் கதையைத்தான்” என்றார். அர்ஜுனன் தலையசைத்தான். “இளவரசியின் தோழி ஸ்வாஹாதேவியின் கதையை சொல்லும்படி சொன்னார்கள்…” என்றார் சூதர். “அவற்றை அடுத்துவரும் நாட்களில் சொல்கிறோம்.” அர்ஜுனன் தலையசைத்து “நன்று” என்றபின் வணங்கினான். அவர்கள் செல்வதை சிலகணங்கள் நோக்கியபின் மேலே சென்று உப்பரிகையில் அமர்ந்துகொண்டான்.

மாலைவெயிலில் மஞ்சள்நிறம் கலந்துகொண்டிருந்தது. இலைத்தகடுகளும் அலைவளைவுகளும் கண்கூச மின்னின. ஒருகணத்தில் மண்ணிலுள்ள அத்தனைபொருட்களிலும் விழிகள் திறந்துகொண்டதைப்போல தோன்றியது. நிலைகொள்ளாமல் எழுந்து சென்று தூணைப்பற்றியபடி நின்றான். உதிரி எண்ணங்கள் வழியாகச் சென்று பின்னர் இடமுணர்ந்து திரும்பியபோது நினைவு எழுந்தது. மாயை சொன்ன கதை.

அவன் திரும்பி படிகளை நோக்கி நடந்த ஒலியே சிசிரனை வரவழைத்தது. “இளவரசியின் தோழி மாயையிடம் ஒரு தூதனை அனுப்புக! அவள் என்னிடம் சொல்லச்சொன்ன கதை என்ன என்று அறிய விழைகிறேன்” என்றான். சிசிரன் தலைவணங்கினான். திரும்பும்போது அர்ஜுனன் “செல்வது இருபாலினராக இருக்கட்டும்” என்றான். ”ஆம், இங்கே சமையர் கலுஷை இருக்கிறாள்… அவளை அனுப்புகிறேன்” என்றான் சிசிரன்.

மாயையின் முகத்தை நினைவில் மீட்டியபடி அமர்ந்திருந்தான். அலையடிக்கும் நீரின் படிமம் என கலைந்துகொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் சலிப்புடன் நீர்ப்பரப்பை கையால் அடித்து அனைத்தையும் கலைத்தபின் எழுந்துகொண்டான். உடலில் மீண்டும் அந்தச் சினம் ஊறி நரம்புகள் வழியாக அமிலமென பரவியது. பற்களை இறுகக் கடித்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தான். கழுத்துநரம்புகள் இறுகி இருந்தன.

மூச்சை இழுத்துவிட்டு தன்னை எளிதாக்கிக்கொண்டான். மீண்டும் கங்கையை நோக்கினான். நீர்ப்பரப்பு மேலும் கருமைகொண்டிருந்தது. உள்ளே மையநீர்வழியில் வணிகப்படகுகளின் பெரிய நிரை ஒன்று பாய்விரித்து கொக்குக்கூட்டம் போல சென்றது. ஒன்றிலிருந்து சிந்திய முழவின் ஒலி காற்றில் வந்து விழுந்தது. பறவைகள் கலைந்த குரல்களுடன் கூடணையத் தொடங்கிவிட்டிருந்தன. உப்பரிகை அருகே இருந்த மரமொன்றில் அமர்ந்திருந்த ஒரு காகம் உடலை எக்கி எக்கி குரலெழுப்பிக்கொண்டே இருந்தபின் சினத்துடன் எழுந்து பறந்தது.

ஓசையின்றி ஒரு படகு மரங்களினூடாக வருவதை அவன் கண்டான். மிகச்சிறிய அணிப்படகு. அதன் மேல் பாஞ்சாலத்தின் கொடி துடித்துக்கொண்டிருந்தது. கரிய உடலுடன் குகன் அதை துழாவிச்செலுத்த கரைதேடும் முதலை என நீர் நலுங்காமல் அது படித்துறையை நோக்கிவந்தது. தேன்மெழுகு பூசப்பட்ட பனைமரவோலை தட்டிகளால் ஆன அதன் சிறிய அறையின் வண்ணத்திரைச்சீலையை விலக்கி முழுதணிக்கோலத்தில் திரௌபதி வெளியே வந்து இடையில் ஒரு கையை வைத்து ஒசிந்து நின்றாள்.

படகின் அமரம் வந்து துறைமேடையைத் தொட்டது. குகன் பாய்ந்திறங்கி வடம் சுற்றியதும் அதன் உடல் வந்து உரசி நின்றது. நடைப்பலகையை நீட்டி வைத்த சேவகன் திரும்பி உள்ளிருந்து வந்த சிசிரனை நோக்கினான். இறங்கும்போதுதான் அவள் மாயை என்பதை அர்ஜுனன் கண்டான். புன்னகையுடன் கைப்பிடி மரத்தைப்பற்றியபடி குனிந்து நோக்கினான்.

மாயை இளநீலப்பட்டாடை நெளிய உடலெங்கும் அணிந்த அணிகள் மின்னி அலுங்க படிகளில் ஏறி மறைந்தாள். சிலகணங்களுக்குப்பின் அர்ஜுனன் புன்னகையுடன் திரும்பிச்சென்று உப்பரிகையில் போடப்பட்டிருந்த பீடத்தில் அமர்ந்துகொண்டான். சிசிரன் வந்து வணங்கி “பெருந்தோழி மாயை” என்றான். வரச்சொல் என அர்ஜுனன் கைகாட்ட அவன் பின்னால் சென்றான். மாயை வாயிலின் வழியாக வந்து ஒருகையை தூக்கி நிலையைப் பற்றியபடி நின்றாள்.

அர்ஜுனன் அவளை சிலகணங்கள் நோக்கியபின் வருக என கைகாட்டினான். அவள் அணிகள் சிலம்ப ஆடை நலுங்க அருகே வந்து பீடத்தில் அமர்ந்துகொண்டு தன் ஆடையை கையால் நீவி அதன் அடுக்குகளை சீரமைத்தாள். தோள்களை சற்றே உலுக்கி உலைந்த முலையணிகளை சீரமைத்துக் கொண்டு நீண்ட குழலை அள்ளி பக்கவாட்டில் பீடத்தின் கைப்பிடிமேல் அள்ளி ஊற்றுவதுபோல அமைத்தாள்.

“இளவரசருக்கு வணக்கம்” என்று அவள் அவன் விழிகளை நோக்கி சொன்னாள். அவன் புன்னகையுடன் “நீ வருவதைக் கண்டேன். திரௌபதியே வருவதாக எண்ணினேன்” என்றான். “அவர்கள் இத்தனை ஓசையின்றி வருவார்களா என்ன?” என மாயை புன்னகைசெய்தாள். “நான் நிழல்… ஆகவே ஓசையின்றி வந்தேன்.” அர்ஜுனன் ”உன்னில் அவள் இருக்கிறாள். தன்னை விதவிதமாகக் கலைத்து உனக்குள் மறைத்துக்கொண்டிருக்கிறாள்” என்றான்.

மாயை ஆடையும் அணியும் இளக மெல்ல உடலசைத்துச் சிரித்து “ஆம், என்னை அவிழ்த்து அவர்களை செய்துவிடலாமென்று கலிங்கத்து அணிச்சிற்பி ஒருமுறை சொன்னார்” என்றாள். அர்ஜுனன் அவளை கூர்ந்து நோக்கி “எதுவும் எஞ்சியிராதா?” என்றான். மாயை “எஞ்சாது” என்றபின் மேலுதட்டை இழுத்து பற்களால் கவ்வியபடி மீண்டும் சிரித்தாள்.

அவள் உடலெங்கும் வெளிப்பட்டதை அர்ஜுனன் நோக்கிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு உறுப்பும் உடலெனும் தொகுதியை உதறி தனித்து எழமுயல்பவை போலிருந்தது. அவன் நோக்கைக் கண்டு அவள் நாணி விழி விலக்கியபோது அவள் உடல் முன்னெழுந்தது. பின் அவள் திரும்பி அவனை நோக்கி “பெண்பித்தனின் பார்வை” என்றாள். “ஏன் நீ அதை விரும்பவில்லையா?” என்றான் அர்ஜுனன். “அதை விரும்பாத பெண் உண்டா?” என அவள் சிரித்து தன் குழலை நீவி ஒதுக்கினாள். கைகள் கன்னத்தைத் தொட்டு கழுத்தை வருடி முலைமேல் பட்டு மடியில் அமைந்தன. “நீங்கள் இந்திரனின் மைந்தர் என்கிறார்கள் சூதர்கள்.”

“ஆம், அதை நான் உறுதியாகச் சொல்வேன்” என்றான் அர்ஜுனன். “அத்தனை பெண்களும் அதை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.” அவள் சிறிய பறவையின் ஒலி போல சிரித்து விழிகளை தாழ்த்திக்கொண்டாள். தோளிலும் கழுத்திலும் கரிய மென்தோலில் புளகத்தின் புள்ளிகளை காணமுடிந்தது. ஊசிமுனையில் ஆடிய கணம். அதை நீடிக்கவேண்டுமென்றால் கலைப்பதொன்றே வழி.

“நீ ஒரு கதையை சொல்லி அனுப்பியதாக சூதர் சொன்னார்.” ”ஆம்” என்றாள் அவள். “பராசரரின் புராணசம்ஹிதையில் உள்ள கதை. அக்னி ஸ்வாஹாதேவியை மணந்தது.” அர்ஜுனன் சால்வையை எடுத்து மடிமேல் சுழற்றி வைத்து சாய்ந்துகொண்டு “சொல்” என்றான். அவள் விழிகளை பக்கவாட்டில் திருப்பிக்கொண்டு “என்னால் பாட முடியாதே” என்றாள். “சொன்னாலே போதும்” என்றான். அவள் உதடுகளை இறுக்கி சற்றுநேரம் அமர்ந்திருந்து ‘ம்ம்’ என முனகியபின் சொல்லத் தொடங்கினாள்.

பிரம்மனின் காமமே அக்னிதேவன் என்கின்றன நூல்கள். மாளாப் பெருங்காமத்தின் அனலே அக்னி. ஆயிரம் நாக்குகளால் ஆன ஒளி. தொட்டுத்தொட்டுத்தாவும் துடிப்பு. உச்சம் கொண்டு அந்தரத்தில் எழுந்து நிற்கும் விசை. அணைந்து புகைந்து கருகி மறைகையிலும் எங்கோ தன் பொறியை விட்டுச்செல்பவன். குளிர்ந்திருக்கும் அனைத்திலும் உள்நின்று எரிபவன். அமைந்திருக்கும் அனைத்திற்குள்ளும் தழலாடும் தனியன்.

ஏழுமுனிவரும் பங்குகொண்ட பெருவேள்வி ஒன்றில் மூன்று எரிகுளங்களிலாக எழுந்து பொன்னொளியுடன் நின்றாடினான் எரியிறை. அக்னியின் முன் அத்தனை பெண்களும் அழகிகளாகிறார்கள். அங்கிரஸின் அறத்துணைவி சிவை பேரழகியாக சுடர்ந்தாள். அவளை நோக்கி நா நீட்டி தவித்தாடியது நெருப்பு. அதன் நடனத்தை எதிரொளித்து தழலாடியது அவள் உடலின் மென்மை.

எரிந்து எரிந்தமைந்தது எரியிறையின் காமம். அதில் தெறித்த பொறி பறந்துசென்று அருகே ஒரு காய்ந்த மரத்தை பற்றிக்கொண்டு வானோக்கி இதழ் விரித்து பெருமலராகியது. ஒன்றிலிருந்து ஒன்றென பற்றி எரிந்துகொண்டே இருந்தான் அக்னிதேவன். அவன் காமத்தில் அவியாகி அழிந்தது காய்ந்து நின்றிருந்த மலைச்சரிவின் காடு.

அக்னிமேல் காதல்கொண்டிருந்தாள் தட்சனின் மகளாகிய ஸ்வாஹாதேவி. ஒளிரும் செவ்விழிகளும் ஏழு செந்நிற நாக்குகளும் கொண்ட நாகவடிவம் அவள். நெளியும் செந்நாகம் என அவள் அனலோனை எண்ணினாள். அவனைத் தழுவி தன்னை நிறைக்க விழைந்தாள். அவன் காமம் கொண்டு எரிந்து நின்ற காட்டை அணுகி சிவையென தன்னை உருமாற்றிக்கொண்டாள்.

அக்னிதேவனை அணுகி “தேவ, தங்கள் ஒளியால் நான் உருகும் பொற்சிலையானேன். உங்கள் விழைவு என்னிலும் எரிகிறது. என்னை ஏற்றருள்க!” என்றாள். உவகைகொண்டு குதித்தாடிய எரியோன் இரு தழல்கரங்களை நீட்டி அவளை அள்ளி தன்னுள் எடுத்துக்கொண்டான். அக்கணமே அவனறிந்தான் அவள் சிவை அல்ல என்று. ஆனால் ஸ்வாகையின் பெருங்காமத்தின் அனல் அவனை எரித்து தன்னுள் அடக்கிக்கொண்டது. ஸ்வாகை கனலோனின் அறத்துணைவியாக ஆனாள்.”

அவள் கதையை சொல்லிவிட்டு தலைசரித்து விழிகளைச் சாய்த்து அசையாமல் அமர்ந்திருந்தாள். உள்ளிருந்து பறவைக்குஞ்சால் கொத்தப்படும் முட்டையைப்போலிருந்தது அவள் உடல். அர்ஜுனன் அவளை நோக்கிய விழிகளாக இருந்தான். சிறிய உளஅசைவுடன் அப்பாலிருந்த அவள் நிழலை நோக்கினான். அது திரௌபதி வந்து நின்றிருக்கிறாள் என்று எண்ணச் செய்தது. மீண்டும் விழிகளைத் திருப்பி அவளை நோக்கினான்.

அவன் விழியசைவே அவளை கலைக்க போதுமானதாக இருந்தது. நிழல்பட்டு நீருள் மறையும் மீன்குலம் என அவளில் எழுந்தவை எல்லாம் உள்ளடங்கின. அவள் கை அசைந்து குழலை நீவி கழுத்தைத் தொட்டு கீழிறங்கியது. மூச்சில் முலைகள் எழுந்தமைந்தன. அர்ஜுனன் “உன் நிழல்” என்றான். அவள் “மாயையின் நிழல்” என்று புன்னகைத்தாள். அவன் உள்ளம் மற்போரில் உச்சகட்டப்பிடியில் திமிறி நெளியும் உடல் என அசைந்தது. அடிபட்ட தசையின் துடிப்பு என ஒன்று அவளில் நிகழ்ந்தது.

அவள் உதடுகள் மெல்ல பிரிந்தன. கீழுதடு மடிந்து உள்ளே சென்று நாக்கால் தொடப்பட்டு மெல்லிய ஈரப்பளபளப்புடன் மீண்டுவந்தது. விழிதூக்கி அவன் விழிகளை சந்தித்தாள். அவன் எழுந்து வந்து அவளை தன் கைகளில் அள்ளி எடுத்துக்கொண்ட கணமே அவள் தழல் போல அவனை சூழ்ந்துகொண்டாள்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைகருத்துச்சுதந்திரம் எவருக்கு?
அடுத்த கட்டுரைவடகிழக்குப் பயணம்