எச்.ஜி.ரசூல்

பெருமாள் முருகனுக்காக பொங்கியவர்களின் மேலான கவனத்துக்கு…..

2007ல் வெளிவந்த இஸ்லாத்தில் குடி பண்பாடு பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரைக்காக ஜமாத் என்னை ஊர்விலக்கம் செய்தது. சமூக புறக்கணிப்பு, காபிர் பத்வா மதவிலக்கம் என இரட்டை வன்முறை ஆயுதத்தை என் மீது கர்ண கடூரமாக வீசியது.

என் குடும்பத்தினர் பட்ட வலியை என்னால் தாங்க முடியவில்லை. எங்கேயாவது ஒரு படைப்பாளியின் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் இவ்வாறு நடந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவராக படைப்பாளியான கவிக்கோ அப்துல் ரகுமான் இருந்தபோது கூட சட்டத்துக்கு உட்பட்டு இந்த பிரச்சினையை அவர் ஒரு முடிவுக்கு கொண்டு வராததை இன்னமும் மிகுந்த வலி நிறைந்த ஒன்றாகவே கருதுகிறேன்.

நான்காண்டு கால சட்டப் போராட்டத்தின் விளைவாக ஜமாத்தின் ஊர்விலக்கத்துக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்றத்திலும், சார்நிலை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் எனக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் இன்னமும் ஜமாத்தினர் எனக்கும் எனது குடும்பத்திற்குமான அடிப்படை உரிமைகளை தராமல் மறுத்து வருகின்றனர்.

எழுதிய ஒரு படைப்புக்காக ஏழு வருடங்களாக படைப்பாளியும் அவனது குடும்பமும் நசுக்கப்பட்டு துயரப்பட வேண்டுமா என்ன?

இந்த விசயத்தில் ஊடகங்கள் சாதித்த மவுனத்துக்கான காரணம் என்னவென்று இன்னமும் விளங்கவில்லை.

எழுத்தாளர் ஹெச்.ஜி. ரசூல்

ஜெ,

இந்த குறிப்பை உங்கள் கவனத்துக்காக அனுப்புகிறேன்.

சாமிநாதன்

rasuul
அன்புள்ள சாமிநாதன்,

எச்.ஜி ரசூல் என் நண்பர். அவருக்கு எதிரான பத்வாவுக்கு எதிராக நடந்த கண்டனக்கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். தமிழிலும் மலையாளத்திலும் எழுதியிருக்கிறேன்

ரசூல் வலுவான இடதுசாரி அமைப்பான கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சேர்ந்தவர். அவர்கள் அவர்களால் முடிந்தவரை எதிர்ப்பை தெரிவித்துவிட்டனர். அதற்கு அப்பால் நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசு. ஆனால் தமிழகச்சூழலில் அரசு இவ்விஷயங்களில் தலையிடுவதில்லை. தலையிட்டாலும் பெரும்பான்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்கும்

இதில் இரட்டைவேடம் போடுபவர்கள் இஸ்லாமிய ஆதரவு பேசும் முற்போக்குப் பாவனையாளர்கள், பெரியாரியர்கள். அவர்கள் இதில் எப்போதுமே தந்திரமான மௌனம் ஒன்றையே கடைப்பிடித்துவருகிறார்கள்

இன்னொன்று, பெருமாள் முருகனுக்கு ஆதரவாக ஒரு பெரிய வலை உண்டு. அது இன்று அவரை இந்திய -சர்வதேச ஊடகங்களில் தூக்கி நிறுத்தியிருக்கிறது. அத்தகைய ஆதரவு ரசூலுக்கு இல்லை

பெருமாள் முருகனுக்குப்பின்னர்தான் துரை குணா, கண்ணன் ஆகியோர் தாக்கப்பட்டு ஊர்விலக்கு செய்யப்பட்டுள்ளனர். அதிலும் துரைகுணாவுக்கு நிகழ்ந்துள்ளதுதான் மிகமோசமான பாதிப்பு. ஊரார் வரைந்த ஓவியம் என்ற குறுநாவலுக்காக மட்டும் இந்த ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறார். அதில் நேரடியாக எந்த ஊரின் பெயரும் வாழும் மனிதர்களின் பெயரும் சுட்டப்படவில்லை. வெறும் சமூகச்சூழல் பற்றிய சித்தரிப்பே உள்ளது அதன்பொருட்டு இத்தண்டனை.அது ஆங்கில ஊடகங்களில் ஒரு செய்தியாககக் கூட ஆகவில்லை
duraisamy_2063580h

இந்த வகையான தாக்குதல்கள் சென்ற ஐந்தாண்டுக்காலத்தில் பதினைந்துக்கும் மேல் நிகழ்ந்துள்ளன. பெருமாள் முருகன் விஷயத்தில் அவரது வலுவான பின்புலம் அறியாமல் தாக்குதலில் ஈடுபட்டு திருச்செங்கோட்டுச் சாதி- மதவாதிகள் சிக்கிக்கொண்டார்கள் என்பதே உண்மை. தமிழகத்தில் தொடர்ந்து நடந்துவரும் எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை தேசிய அளவில் கவனப்படுத்தி ஒரு சுயப்பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள இதை தமிழ் எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இன்று வேறு வழியில்லை.

ரசூல் உண்மையில் பெரும் சிக்கலில் இருக்கிறார். ஓர் இஸ்லாமியரை காஃபிர் என அறிவிப்பதென்பது அவரது மொத்தக்குடும்பத்தையும் பாதிப்பது. உண்மையில் அத்தகைய பாதிப்புகளேதும் பெருமாள் முருகனுக்கு இல்லை. ரசூலுக்காகவும் ஊடகங்கள் கவனம் கொள்ள இந்தச் சந்தர்ப்பம் உதவட்டும்

ஜெ

துரை குணா மீதான தாக்குதல்

முந்தைய கட்டுரைஎன் உரை காணொளிகள்
அடுத்த கட்டுரை‘நிதிப்பிள்ளை’களைப் பற்றி…