உடல் பாண்டமாக, உயிர் தயிராக, துக்கம் மத்தாக, துக்கத்தால் கடையப்படும் உயிர்.
இனிய ஜெயம்,
கடந்த இரு கடிதங்களைத் தொடர்ந்து ஏதோ ஆவல் உந்த சட்டென்று அறம் தொகுதியை எடுத்து பிரித்தேன். தோழி ரீங்காஆனந்த் நினைவு, நறுமணம் கொண்ட ஐஸ்க்ரீம் புகை போல எழுந்து வந்தது. அவர்களின் பெயர் பொறித்த புத்தக பக்க அடையாள அட்டை மத்துறு தயிர் கதையில் நின்றிருந்தது.
உணர்வு நிலையில் உன்மத்தம் கூடிய, தமிழ் இலக்கியம் அதிகமும் தொடாத தளம் ஒன்றை சேர்ந்த அழகிய கதை.ஆன்மீக குருவுக்கும், கலையின் குருவுக்கும் மிக மெல்லிய வேறுபாடு மட்டுமே உண்டு என்று தோன்றுகிறது.
ஆத்மீகத்தில் குரு சீடனின் மீது கொள்வது ‘பற்று’அல்ல என்று தோன்றுகிறது. அதில் நிலவும் குரு சீட உறவு, பாதையற்ற பாதை ஒன்றிலான பயணத்தில் இணைந்து கொள்ளும் சக மயணிகள்.சீடன் ‘அறியாத’ ஒன்றை குரு ‘அறிந்திருக்கிறார்’. இங்கு வழி தவறும் சீடனை, இந்த புதிர்ப் பாதை வகுத்த நியதிகளில் ஒன்றாகவே குரு காண்பார்.
கலையில் இருள் மிகுந்த இந்த வாழ்வில் ரசனையின் ஒளி பாய்ச்சி, அதில் துலங்குவதை குரு சீடனுக்கு காட்டுகிறார். குரு இருள் அடர்ந்த வனம் ஒன்றினில் கை விளக்கு தரும் ஒளியின் துணையுடன் நடந்து கொண்டிருக்கிறார். அந்த விளக்கு தரும் ஒளி வட்ட எல்லைக்குள் அவர் தனது சீடனை சேர்த்துக் கொள்கிறார்.
ஒளி வட்டத்தின் இலக்கு தாண்டி சீடன் வழி தவறினால். சீடனின் நிலை? அவனது குருவின் நிலை?
பேராசிரியர் காணும் கனவில் ராஜன் நேரு வசம் பரிசு பெறுகிறார். நன்றி உரையில்ராஜன் தனது குருவான பேராசிரியரை குறிப்பிட , அவரோ , அவரது குருவின் பெயரை ராஜன் குறிப்பிடாதது குறித்து கூவுகிறார்.
இங்கு தலைமுறை தலைமுறையாக ரத்த உறவு, சாதி முறைகள், லௌவ்கீக உறவுக் கணக்குகள் அனைத்தையும் தாண்டி தொடர்வது என்ன? மனிதர்கள் வித விதமானஉறவுத் தொடர்புகளில் கட்டப் பட்டிருக்கிறார்கள்.ஆனால் இந்த உறவு அனைத்தைக் காட்டிலும் விளங்கிக் கொள்ள இயலா ஆழமும், வீரியமும் கொண்டது.
குமாரப்பிள்ளையின் மனைவி சமையல்கட்டு வரை வரும் பேராசிரியரைக் கண்டு சீற்றம் கொள்ள. பிள்ளை ‘அவனுக்கு இல்லாத இடம்னு ஒண்ணு என் கிட்ட இல்ல’ என்கிறார் நிதானமாக. கதையின் இந்த இடம் என்னவோ செய்தது. குமாரப் பிள்ளை பேராசிரியர், பேராசிரியர் ராஜன், இவர்கள் ஒருவரை ஒருவர் கண்டு கொள்வது வேறு எல்லை. ஆனால் அந்த சொல்லுக்குப் பிறகு அந்த அம்மா பேராசிரியரை தனது பிள்ளையாகவே வரித்துக் கொள்வது. என்ன சொல்ல அந்த கணம் அந்த அம்மாள் கதையில் இலங்கும் அனைத்து காதாமாந்தர்களையும் விஞ்சி விடுகிறாள்.
பேராசிரியர் குமாரப் பிள்ளையை நினைத்துக் கொள்ளாமல் ஒரு நாளும் கழிந்ததில்லை. பிள்ளையின் நினைவு வருகையில் எல்லாம் ராஜனின் நினைவும் எழாமல் இருக்குமா என்ன?
கதைக்குள் ராஜன் குறித்த முதல் சித்திரமே , ராஜனும் பேராசிரியரும் நீண்ட நாள் கழித்து தெருவில் சந்தித்துக் கொள்ளும் சித்திரம்தான். முழு குடிகாரனாக, உடல் அழிந்து, தெரு நாய் போல குந்தி அமர்ந்து தலையில் கை வைத்திருக்கும் ராஜனின் கோலம். பேராசிரியர் தனது குருவை முதன் முதலில் சந்திக்கும் தருணம் பற்றி சொல்கையில் ”ஞானவானுக்கு ஒரு கெம்பீரம் உண்டு. எந்த ராஜாவாலும் அடஞ்சுக்கிட முடியாத ஒண்ணு”. தனது குருவின் வரிசையில் வைத்துப் பார்க்கும் ராஜனின் இந்த கோலத்தை பேராசிரியர் எப்படி எடுத்துக் கொள்வார்.
ராஜன் குறித்த சித்தரிப்பு ராஜனின் உள் உலகை துல்லியமாக முன் வைக்கிறது. ராஜன் தீமையோ, கள்ளமோ இல்லாத மனிதர் , அதனால் இயல்பாகவே எளிமையானவர். அதைக் கொண்டு பார்த்த முதல் பார்வஎலேயே கட்டிப் பிடித்துக் கொள்ளத் தோன்றும். சிவாஜி படம் கண்டு கூட கதறி அழும் இளகியவர்.
அனைத்துக்கும் மேலாக ராஜனது ‘ஆற்றல்’ அவர் என்ன செய்தது கொண்டிருக்கிறாரோ அதில் சிதறலே இல்லாமல் குவியக் கூடியது. உடல் வளர்த்தால் அதில், கலையில் தோய்ந்தால் அதில், காதலித்தால் அதில், குடியில் விழுந்தால் அதில். கிட்டத்தட்ட எகாக்கிரகம்.
ராஜனின் கண்களில் இலங்கும் கனிவில் விழுகிறாள் ஒரு நாயர் இளம் பெண். கன்னிமைக்கே உரிய கள்ளமற்ற கணம் ஒன்றில் அவள் ராஜனால் வசீகரிக்கப் படுகிறாள். சாதியோ வேறு எழவோ அவர்கள் குறுக்கே வர, அவள் ராஜனை இனி அவளுடன் பேசவே கூடாது என்று விடுகிறாள். பண்பட்ட மனிதன் எய்தும் அத்தனை துயறையும் ராஜன் அடைகிறார். குடியில் விழுந்து அனைத்திலிருந்தும் வழி தவறுகிறார்.
இங்கே எந்தப் பிரிவுக்காக வருத்தம் கொள்ள? ராஜன் அவரது காதலி பிரிவுக்கா? அல்லது ராஜனின் குரு ராஜனைப் பிரிந்த நிலைக்கா?
இங்கே இரு தகப்பன்களின் உக்கிரமான வாழ்க்கைச் சம்பவம் நினைவில் எழுகிறது. ஒருவர் பேராசிரியரின் தந்தை. ஒரு வேளை உச்சைக்கஞ்சி மட்டும் குடித்து [அதில் பாதியை மிச்சம் வைத்து பேராசிரியர்க்கு தருகிறார்] பேராசிரியரை கல்வியில் உயர்த்துகிறார். அந்த அப்பனைப் போல் தானே ராஜனின் தந்தையும் ராஜனை வளர்த்திருப்பார்? ராஜனின் அப்பா கோவிலில் தனது மகனை விட்டு விட சொல்லி தனது உதிரத்தை காணிக்கை தரும் சித்திரம் , ஆம் அவரும் மத்துறு தயிர்தான்.
ராஜனின் தந்தை கோவிலில் உதிரம் வடிக்கிறார். ராஜனின் குருவோ தனது ஞானத்தின் கம்பீரம் அனைத்தையும் விட்டு பெண் வீட்டார் வசம் ‘என் பிள்ளைய கொன்னுடாத’ என்று கெஞ்சுகிறார்.
ராஜன் குறித்த உரையாடல் இடையே குமார் தனது சீடன் சஜனை பற்றி பேசுகிறார் ”நல்ல பையன். ஆனா எந்த புக்கையும் பாதிதான் படிப்பான். சொல்லிக்கிட்டே இருக்கணும்”. மற்றொரு பாதி வழி பயணி.
பேராசிரியர் சொலிறார்”எந்த உறவுக்கும் கைம்மாறு செய்து விடலாம். குருவுக்கு என்ன செய்ய முடியும்” கைம்மாறு செய்ய இயலா உறவு. நீ எது செய்தாலும் சரிதான் என ஒப்புக் கொடுக்க ஒரு உறவு. உறவுகில் இணையற்றது இதுதான். இங்கே பிரிவினை நிகழ்ந்தால் அந்த துயரின் ஆழம்?
கதைக்குள் வருவது போல மனிதனுக்கு எண்ணி சொல்ல இயலா, தாள இயலா துயர்கள். அனைத்தும் ஒன்றாகி மனிதனில் கவிவது உற்றவர் பிரிவில்.
ராஜன் பேராசிரியர் காலடியை தொழுகையில் இதோ இந்த இரவில் தனிமையில், ராஜனுக்காக அவரது அப்பாவுக்காக பேராசிரியருக்காக , உறவாலும் பிரிவாலும் மனிதர்களை கட்டி ஆளும் அந்த ‘அறிய முடியாமைக்காக’ ஏங்கி அழுதேன்.
இனி ராஜனை பார்க்கவே போவதில்லை என்றானபிறகு பேராசிரியரின் அகத்தில் நிகழும் மாற்றம் முக்கியமானது. அது வரை ராஜன் அவரது மகன். கரத்த்தரின் கணக்கை அறியாமல் எனது கணக்கை போட்டேனே என்றுதான் கலங்குகிறார். கார் ஏறுகையில் பேராசிரியர் சொல்கிறார்.
‘நான் சங்கு பொட்டி சொன்ன ஜெபத்தையெல்லாம் கர்த்தாவு கேக்கல்ல. ஆனாலும் எனக்க சீவனுள்ள வரை நான் ஜெபிப்பேன் குமாரு…எனக்க பயலுக்கு ஒரு கொறையும் வரப்பிடாது…அவன் கர்த்தாவுக்க பிள்ளையாக்கும். அவனுக்க வலியெல்லாம் கர்த்தாவு எடுக்கணும்..”
ஆம் இனி ராஜன் கர்த்தாவின் பிள்ளை.துயரத்தை வழங்கி மனிதன் ஆத்மாவை சுத்தம் செய்யும் கர்த்தா. ஒப்படைத்து விட்டு கிளம்புகிறார் பேராசிரியர். இலையை, தளிரை,பூவை, பிஞ்சை மரத்தை, வனத்தை என அனைத்தையும் எரித்தபின்னும் தணியாமல் எஞ்சி நிற்கும் பிரிவுத்துயரை ஏந்தியபடி
கடலூர் சீனு