கூந்தல்பனை- கடிதம்

ஜெமோ,

திருவண்ணாமலை முத்துவேலின் கூந்தல்பனை தொடர்பான ஐயத்திற்கு தாங்கள் பதிலளித்திருந்தீர்கள். எனக்குத்தெரிந்த கூந்தல்பனை தொடர்பான விளக்கங்களை எழுதுவதற்குள் பின்னூட்டங்கள் மூடப்பட்டு விட்டது.

1980களில் அறந்தாங்கியில் பேருந்து நிலையம் அருகே பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு பெரிய பனைமரம் இருக்கும். பெருத்த பனை ஓலைகளுடன் செதில்களின்றி வழவழப்பான நடுப்பகுதியுடன் வித்தியாசமாக ஒரு விதமான ராஜகம்பீரத்துடன் அது இருக்கும். என் தந்தையாரிடம் அது என்ன மரம் என்று கேட்டபோது அவர் அந்த கூந்தல்பனை மரத்தைப்பற்றிக் கூறியதாவது:

1. கூந்தல்பனை அரிய மரம். வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் பூத்துக் காய்க்கும்.

2. பூத்துக்காய்த்தபின் அந்த மரம் தானே இறந்துவிடும். இலைகள் கொட்டி மரம் தளர்ந்து தானே விழுந்து விடும்.

3. அதன் பூக்கள் ஏறக்குறைய அதன் தொகைகளை விடப் பெரிதாக இருக்கும்.

4. அதன் காய்கள் வெடித்துப் பல ஃபர்லாங்குகளுக்குப் பறந்து அப்பால் போய் விழும். ஆனால் அக்கொட்டைகள் மிகவும் குறைந்த எடையுடன் கருப்பாகவும் கோலிக்குண்டு போலவும் இருக்கும். அதனால் அக்கொட்டைகள் பறந்து வந்தாலும் காயப்படுத்தாது. அக்கொட்டைகளை எளிதில் ஆடுமாடுகள் கடித்து விடவும் முடியாது.

5. ஆயிரக்கணக்கில் கொட்டைகள் பல திசைகளிலும் வெடித்து விசையுடன் பறந்து செல்லும். ஆனால் ஒரே நாளில் இவை அப்படிப் வெடிப்பதில்லை. ஏறக்குறைய மூன்று முதல் ஆறு மாதங்களாவது இப்படிக் கொட்டைகள் பறத்தல் நடக்கும்.

நான் அறந்தாங்கி அரசுமேல்நிலைப்பள்ளியில் சேரும்போது பார்த்த அந்த கூந்தல்பனை பூத்திருக்க வில்லை. எப்பொழுது பூக்கும் என்று ஆவலுடன் தினமும் பார்ப்பேன். ஒரு நாள் பூத்தது. ஊருக்கே அதிசயமாக இருந்தது அந்த நிகழ்வு. அப்போதைய மாலைமுரசில் படத்துடன் கூந்தல்பனை மலர்ந்தது என்று செய்திகூட வந்தது. பள்ளி முடிவதற்குள் மேற்சொன்ன அத்தனை நிகழ்வையும் பார்த்தேன். அந்த கூந்தல்பனை மரம் பட்டுப்போனதையும் நான் ஆற்றாத சோகத்துடன் பார்த்தேன். பூத்தபின் அதன் காய்களைத் தேடிப் பொறுக்கினேன். அவைதான் கூந்தல்பனைக் கொட்டைகள் என்பதை என் தந்தையாரிடம் காட்டி உறுதிப்படுத்தினேன். வெகுகாலம் அவற்றைப் பொக்கிஷமாக வைத்திருந்தேன். வீடுமாறி, ஊர் மாறி, நாடு மாறிப் போனதால் அந்தக் கூந்தல்பனைக் கொட்டைகள் எங்கிருக்கின்றன என்று இப்போது தெரியவில்லை.

சிறுவயதில் சந்தோசம் தந்த விஷயங்கள் அவ்வளவு மறப்பதில்லை. அதில் கூந்தல்பனையும் ஒன்று.

அன்புடன்,
திருவடியான்
சிங்கப்பூர்

முந்தைய கட்டுரைஅன்னியநிதி – ஒரு வரைபடம் [மறுபிரசுரம்]
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் இரு புதியவர்கள்