«

»


Print this Post

பழசிராஜாவுக்கு எட்டு விருதுகள்


பழசிராஜாவுக்கு எட்டு விருதுகள்

April 8, 2010 – 12:00 am

கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பழசிராஜா படம்  எட்டு விருதுகள் பெற்றிருக்கிறது. மம்மூட்டி இவ்வருடத்துக்கான சிறந்த நடிகருக்கான விருதை பெற்றிருக்கிறார். ஆனால் பழசிராஜாவுக்காக மட்டும் அல்ல, பாலேரி மாணிக்கம் ஆகிய இரு படங்களுக்காக.

பாலேரி மாணிக்கம் என் நண்பர் , கவிஞர், டி.பி.ராஜீவன் எழுதிய நாவலை ஒட்டி எடுக்கப்பட்ட படம். நாவலின் பெயர் பாலேரி மாணிக்கம், ஒரு பாதிரா கொலபாதகத்தின்றே கத. இந்தப்படம் இவ்வருடத்துக்கான சிறந்த படத்துக்கான விருதையும் பெற்றிருக்கிறது. நாவல் மென்மையான நகைச்சுவை ஓடும் கதை.

அது ஒரு துப்பறியும் கதை. பாலேரி மாணிக்கம் என்ற கிராமத்து பாலியல்தொழிலாளி கொல்லப்படுகிறார். கொலையை துப்பறிந்து செல்கிறது நாவல். கடைசியில் அந்தக்கொலை பெரும்பணம் பெறப்பட்டு ஊராராலேயே அமுக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த பணத்தில் ஊரில் கட்டப்பட்ட பள்ளிதான் ஊரை முன்னேற்றப்பாதையில் கொண்டுசென்றது என்றும் கண்டுபிடிக்கப்படுகிறது. பாவபுண்ணியங்களின் பொருளின்மையைப்பற்றிய முக்கியமான நாவல் அது .

பழசிராஜாவுக்காக ஹரிஹரன் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். பழசிராஜாவின் கம்பிகட்டி செய்யப்பட்ட சண்டைக்காட்சிகளைப்பற்றி தேர்வுக்குழுவில் விமரிசனம் எழுந்தாலும்கூட பல அகன்ற திரைக்காட்சிகளின் அமைப்பு அவரை தேர்வுசெய்ய காரணமாக அமைந்திருக்கிறது. இது ஹரிஹரனுக்கு ஏழாவது கேரள அரசு விருது.

சிறந்த  திரைக்கதைக்காக எம்.டி.வாசுதேவன் நாயர் விருதுபெற்றிருக்கிறார். திரைக்கதைக்காக அவர் பெறும் இருபத்து மூன்றாவது கேரள அரசு விருது இது. மனோஜ் கெ ஜெயன் சிறந்த குணச்சித்திர டிகருக்கான விருதைப் பெற்றார். அவர் அதில் குறிச்சியன் சந்துவாக நடித்திருந்தார். சிறந்த குணச்சித்திரநடிகை அப்படத்தில் நீலியாக நடித்த பத்மபிரியா.சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது ஸ்ரீகர் பிரசாதுக்கு.

கலை இயக்குநருக்கான விருது முத்துராஜுக்கு. பழசிராஜா அளவுக்குச் சிறந்த கலை அமைப்பு மலையாளத்தில் குறைவாகவே வந்துள்ளது. அந்தக் காலகட்ட யதார்த்தம் மீறப்படாமல் அதேசமயம் அழகான அகன்ற திரைக்காட்சிக்கு உகந்தவகையில் அமைத்திருந்தார் முத்து ராஜ். அங்காடித்தெரு படத்தில் ரங்கநாதன் தெரு செட்டை போட்டவர் அவரே. நேற்றுத்தான் கலைஞர் தொலைக்காட்சி அறையில் சிரித்துப்பேசி விடைபெற்றோம்.

சிறந்த உடையலங்கார நிபுணருக்கான விருது பழசிராஜாவுக்காக நடராஜனுக்குக் கிடைத்துள்ளது. பெரும்பாலும் ஆடம்பரமில்லாத பாரம்பரிய உடைகளையும் நகைகளையும்தான் அவர் உருவாக்கியிருந்தார். சிறந்த குரல்கலைஞருக்கான விருந்து ஷோபி திலகனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மலையாளத்தின் மிகச்சிறந்த நடிகரான திலகனின் மகன் இவர்.

ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டியும் கவனிக்கப்பட்டிருக்கலாம். பழசிராஜா அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம். சூபி பறஞ்ஞ கதா படத்துக்காக கெ.ஜி.ஜயன் ஒளிப்பதிவாளருக்கான விருது பெற்றிருக்கிறார். கெ.பி.ராமனுண்ணி எழுதிய அதே பேரிலான நாவலின் திரைவடிவம் இந்தப்படம். தமிழில் நாவல் வெளிவந்துள்ளது.

பழசிராஜா இத்தனை விருதுகள் பெறக்காரணம் அதன் தயாரிப்பாளர் கோகுலம் புரடக்ஷன்ஸ் பிரவீண். மலையாளத்தில் தொழில்நுட்பம் மேம்பட தடையாக இருப்பது செலவுக்கணக்கே. அதைப்பற்றி கவலையே படாமல் எடுக்கப்பட்ட படம் பழசிராஜா.

அதற்கான பயனும் இருந்தது. படம் பொருளாதார ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. முதல் நாளிலேயே கேரளத்தில் 1.53 கோடி ரூபாயை வசூலித்தது. கேரள திரை வரலாற்றில் அது ஒரு சாதனை. மொத்தம் 49 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கேரள அரசு கணக்கு சொல்கிறது. 2.6 கோடிக்கு ஆசியாநெட் டிவிக்கு தொலைக்காட்சி உரிமம் விற்கப்பட்டது. தமிழில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் லாபம் ஈட்டியது.  எல்லா இந்திய மொழிகளிலுமாக 19 கோடி ரூபாயை ஈட்டியது.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பழசி ராஜா

இளையராஜா,பழசி ராஜா -கடிதங்கள்

பழசி ராஜா தள்ளிவைப்பு

பழசிராஜா சில பண்பாட்டு ஐயங்கள்

பழசிராஜா கடிதங்கள்

பழசிராஜா வெள்ளிக்கிழமை…

பழசிராஜா முன்னோட்டம்

பழசிராஜா, கடிதங்கள்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7067