கருத்துச்சுதந்திரம் காப்போம் !!!

வணக்கம் நேயர்களே, கருத்துச்சுதந்திரம் எப்பவும் இல்லாதபடி இன்னிக்கு கடுமையான அடக்குமுறைக்கு ஆளாயிட்டிருக்கிற காலகட்டம். கருத்துச்சுதந்திரத்தைப் பாதுகாக்கற பொறுப்பு கருத்துக்களை சொல்லிட்டிருக்கிற நமக்கெல்லாம் இருக்கிறதனால இப்ப இந்த நிகழ்ச்சியிலே தமிழிலே இருக்கிற முக்கியமான சிந்தனையாளர்களை எல்லாம் கூட்டிவந்து வச்சு ஒரு விவாதத்தை ஆரம்பிச்சிருக்கோம். முதல்ல சிற்றிதழ் எழுத்தாளரும் கவிஞருமான சோதியப்பா அவர்கள். வணக்கம் சோதியப்பா அவர்களே, இப்ப கருத்துச்சுதந்திரம்னா என்ன?

கருத்துச்சுதந்திரம்னாக்க அது இப்ப வந்து நாம சொல்லக்கூடிய கருத்துக்கள் எந்தவகையான பிரக்ஞை மனநிலையிலே இருந்து வருதுன்னு நாம பாக்கிற அதே நேரத்திலே அதோட பின்புலமா இன்றைக்குச் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய எந்தவகையான அழகியல்கூறுகள் கருத்து மட்டுமல்லாம அறவியல் தேற்றங்களும் அதோட சமன்பாடுகளும் உண்டு பண்ணக்கூடிய நிலைபேறு என்ன அதெல்லாம் அதோட உட்கருத்துக்கு எந்தவகையிலே பின்புலமா இருக்குங்கிறத ஆராய்ச்சி பண்ணி பாக்கிறபோதுதான்…

அருமையாகக் சொன்னீர்கள் சோதியப்பா அவர்களே, வணக்கம் அன்புச்செல்வம் அவர்களே, நீங்க முற்போக்கு முகாமைச்சேர்ந்தவர். நீங்க என்ன நினைக்கிறீங்க?

இனிய நண்பர் சோதியப்பா அவர்கள் இங்க எடுத்துச் சொன்னது ஒரு பிற்போக்கு, வகுப்புவாத, சாதிவெறி,இனவெறி, தரகுமுதலாளித்துவப் பித்தலாட்டம்ங்கிறத மட்டும் ஆணித்தரமா சொல்ல கடமைப்பட்டிருக்கேன். ஒரு பரம அயோக்கியன், சுயநலவெறியன், கபடவேடதாரி மட்டுமே இதைச் சொல்லமுடியும்கிறது என்னோட தாழ்மையான கருத்து.

அதில்ல, இப்ப கருத்துச் சுதந்திரம்னா..

அதேதான் நான் சொல்லவர்ரது. கருத்துக்களை உண்டு பண்ற சுதந்திரம் கட்சி மேலிடத்துக்கும் அதை வெளிப்படுத்துற சுதந்திரம் கட்சி ஊழியர்களுக்கும் முழுமையா குடுக்கப்பட்டிருக்கிற ஒரு அமைப்பைச் சேர்ந்தவன்ங்கிற முறையிலே…

இல்ல கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுறதில்லையா? அதப்பத்தி என்ன சொல்றீங்க?

எல்லாவிதமான ஒடுக்குமுறைக்கும் எதிரா கடுமையாப் போராடுவோம். கருத்துச்சொல்றது தனிமனித உரிமை. அதை ஆதரிச்சு ஒவ்வொரு தனிமனிதனுக்காகவும் அதேநேரத்திலே…

எல்லா தனிமனிதனுக்கும் இந்த உரிமை இருக்கா?

என்ன அப்டி கேட்டுட்டீங்க? இருக்கு

சோவியத் ருஷ்யாவிலே கருத்துச் சுதந்திரம் இருந்திச்சா? இப்ப சீனாவிலே கூட —

நல்லா கேட்டுக்கணும். தனிமனிதனுக்கு கருத்துச் சுதந்திரம் வேணும். ஆனா ஒருநாட்டிலே புரட்சி வந்து அங்க கம்யூனிசம் அமலாயிடுச்சுன்னா தனிமனிதனே இல்லியே? இருக்கிறது மக்கள் மட்டும்தானே? மக்களுக்கு எல்லா உரிமையும் வந்தாச்சே?

அப்ப மக்கள்–

இருங்க, சொல்லிட்டிருக்கோம்ல? அந்த மக்கள் அவங்களே பேசமுடியாதுல்ல? அதுக்குத்தான் கட்சி அதுக்குண்டான ஆட்களை நியமிக்குது. அவங்க மக்கள் கருத்தைச் சொலுவாங்க. அவங்க தப்பா சொன்னா கட்சி அவங்கள கொலை பண்ணிட்டு வேற ஆட்களை வச்சு மக்கள் கருத்தை சொல்ல வைக்கும். அது மக்கள் கருத்து இல்லேன்னு சில புல்லுருவி ஐந்தாம்படையினர் சொல்றப்ப அவர்களை கட்சி களையெடுக்கும். அது புரட்சிகர ஜனநாயகம். அதெல்லாம் இங்க வரணும்…அதான் எங்க கொள்கை

அப்ப கருத்துச் சுதந்திரம்…

அந்தக்கருத்துக்கள நாங்க மக்கள் மத்தியிலே சொல்லணும்ல? நாங்க சொல்றதுக்கு எல்லாரும் சப்போர்ட் பண்ணணும்ல? அதுக்குத்தான் கருத்துச் சுதந்திரம்…

அருமையாச்சொன்னீங்க தோழர். வணக்கம் , ஸ்ரீமான் சுப்ரமணியம் அவர்களே இப்ப நீங்க கருத்துச் சுதந்திரத்த ஒடுக்கிறீங்கன்னு குற்றச்சாட்டு இருக்கு

சத்தியமா இல்லீங்க. நான் என்னத்தைங்க கண்டனுங்க? நான் ஏதோ நான் உண்டு நம்ம பொளைப்பு உண்டுன்னு இருக்கிற ஆளுங்க.

அதில்லீங்க. நீங்கன்னா நீங்க இல்ல, நீங்க சேர்ந்திருக்கிற கட்சி அதாவது உங்களோட இந்துத்துவ தரப்பு

அதில பாத்தீங்கன்னா, கருத்துச் சுதந்திரத்த முதன்முதலா முன்வைச்சதே இந்துக்கள்தான். ஆபஸ்த்பம்ப சூத்திரத்திலே என்ன சொல்லியிருக்குன்னா–

என்னங்க சொல்லியிருக்கு?

எளுதி கொண்டாந்தனுங்க.கார்ல மறந்து வச்சிட்டேன். அதை விடுங்க. இப்ப மகாபாரதத்திலே கிருஷ்ணன் எவ்ளவு பெரிய தெய்வம்? அவரோட முகத்தப்பாத்து சிசுபாலன் என்ன சொல்றான்? நீ ஒரு சத்ரியனே இல்லே, வெளியே போடான்னு சொல்றானா இல்லியா? அந்தக் கருத்துச் சுதந்திரம் அனுமதிக்கப்பட்டிருக்கா இல்லியா?

அதை கிருஷ்ணன் அனுமதிச்சாருங்களா?

இல்ல, சக்கரத்த எடுத்து தலைய வெட்டினார். அது அவரோட கருத்துச் சுதந்திரம். நாங்க ரெண்டு பக்க கருத்துச் சுதந்திரத்தையும் ஆதரிக்கிறோமுங்க. அதை புரிஞ்சுகிட மாட்டேங்கிறாங்க. சனநாயகம்னு ஒன்னு இருக்கு இல்லீங்களா? ஏனுங்க?

அப்ப ஜனநாயக கருத்து சுதந்திரம் வேணும்னு சொல்றீங்க

ஆமாங்க, கருத்துச் சுதந்திரம் வேணும். ஏன்னா அது இந்துமதத்தோட ஆதாரம். உலகுக்கே கருத்துச் சுதந்திரத்த கத்துக்குடுத்தவங்க இந்துக்கள்தான். அது கல்வெட்டுகளிலே இருக்கு. அன்னியச் சதியாலே அதில இப்ப ஒரு கல்வெட்டுகூட இல்ல. எதுக்குச் சொல்றேன்னா, இது கருத்துச் சுதந்திரத்தோட புனிதபூமி. நாமார்க்கும் குடியல்லோம்னு சொன்னானே…

கருத்துச் சுதந்திரம் இங்க இருந்ததுன்னு சொல்ல வரீங்க?

ஏகப்பட்டது இருந்தது. இப்ப சிலர் அதெல்லாம் பொய்னு சொல்லவாராங்க. அவங்கள்லாம் இந்த நாட்டுக்கு எதிரிங்க. கூசாம பொய் சொல்ற அவங்க நாக்க வெட்டுவோம். பொய்ய எழுதுற கைய ஒடைப்போம். கருத்துச் சுதந்திரம் மடித்தொட்டிலான இந்த பாரதப் பொன்னாட்டை அவமதிக்கிற எவனையும் சும்மா விடமாட்டோம்…

அருமையாச் சொன்னீங்க. வணக்கம் பேராசிரியர் கலீமுல்லா அவர்களே கருத்துச் சுதந்திரம் பற்றி உங்க தரப்பு என்ன?

அளவிடமுடியாத கருணை கொண்டவனும் அருளாளனுமாகிய…

சார் இது இருபது நிமிச செய்தி. இந்த ரெகுலர் மந்திரத்தயெல்லாம் நீங்களே முன்னாடியே சொல்லிட்டு வெயிட் பண்ணியிருக்கலாம்ல?

சரிங்க… அதாவது கருத்துச் சுதந்திரம் அவசியம். அதுக்காக நாங்க உசிரக் குடுப்போம்.

எல்லாக்கருத்துக்குமா?

கருத்தில என்ன அப்டி வேறுபாடு? எல்லா கருத்துக்கும்தான் சுதந்திரம் வேணும். கருத்துச் சுதந்திரத்தை அடக்குறது காட்டுமிராண்டித்தனம். அதுக்கு எதிரா போராடுற அத்தனை முற்போக்கு சக்திகளையும் நாங்க ஆதரிக்கிறோம்…

அப்ப உங்க மதத்த விமர்சனம் பண்ணினா?

தம்பி, ஏன் இப்டி புரிஞ்சுகிடாம பேசுறீங்க? கருத்துக்குத்தான் சுதந்திரம். அதுக்காக அளவிடமுடியாத கருணைகொண்ட அருளாளனை விமர்சிக்கிற அத்துமீறலை எப்டீங்க ஏத்துக்கிட முடியும்? அது மதநிந்தனை. அதைக் கருத்துன்னு சொல்லிர முடியுமா? அதுவேற இது வேற… கருத்துக்கு சுதந்திரம் வேணும். மதநிந்தனைக்கு கடுமையான தண்டனை வேணும். இதில என்ன குழப்பம் உங்களுக்கு?

இல்ல, அப்ப நீங்க மத்த மதங்களை விமர்சிக்கிறது–

அது கருத்து தம்பி. கருத்துக்குச் சுதந்திரம் வேணும்ல?

அற்புதமான கருத்துக்கள்… வணக்கம் அறிவுடைநம்பி அவர்களே. உங்க கருத்து என்ன?

வணேக்கம். இன்றைத் தீனம் சில அன்னிய பார்ப்பன மதவாத பண்டாரப்பரதேசி கும்பல் பெரியார் பிறந்த மண்ணிலே கருத்துச் சுதந்திரத்தை பறிக்க களமிறங்கியிருக்கும் வேளையிலே கருத்துச் சுதந்திரத்துக்காக கருத்துறுதியோடு களமிறங்கியிருக்கும் கழகமானது…

சரிங்க… ஒரு சின்ன கேள்வி, கருத்துன்னா என்னங்க?

தலைமைக் கழக அறிக்கையும் பேட்டியும்தானே?

அதுக்கு முழுச் சுதந்திரம் வேணும்கிறீங்க

ஆமாங்க

இல்லீங்க, உங்க தலைவர பழக்கருப்புனு ஒருத்தர் விமர்சனம் பண்ணினப்ப வீடு பூந்து அடிச்சீங்கள்ல?

அதத்தானுங்க சொல்லிட்டிருக்கேன். கருத்துங்கிறது தலைமைக்கழகம் எங்களைக் கூப்பிட்டுச் சொல்றது. அந்தக்கருத்த நடைமுறைப்படுத்துற சுதந்திரம் எங்களுக்கு வேணும் இல்லீங்களா? நடைமுறைப்படுத்தினத குத்தம்னு சொல்றீங்க. அனியாயம்ங்க

வணக்கம் கவிஞர் மானுடயுத்தன் அவர்களே, உங்க கருத்து

கருத்துச் சுதந்திரம் இந்த கொடூரமான காலத்திலே கடுமையான வாதைக்கு உட்பட்டிருக்கிற நேரத்திலே யாருடைய கையிலே நாமள்லாம் கருவிகளா இருந்திட்டிருக்கிறோம்கிறத நாம் பாக்கிறப்ப நமக்கு கிடைக்கிற சித்திரம் என்னன்னா வரலாற்றிலே வதையுண்டவர்களின் வாக்குகள் இந்த கொடுங்கனவுகள் நிறைஞ்சு வழிஞ்சிட்டிருக்கிறபோது —

சரியா புரியலிங்க

அறிவுடைநம்பி சொல்றதத்தான் நானும் சொல்றேன். அவரு லோக்கலு. அதையே நான் எலக்கியமா சொல்லுவேன்.

கருத்துச் சுதந்திரத்துக்கான இருமுனைப் போராட்டத்திலே இருக்கிற உங்களுக்கு வாழ்த்துக்கள். அய்யா, தமிழேந்தி அவர்களே உங்க கருத்து என்ன?

தமிழனுக்கு கருத்துரிமை தேவை. அதுக்காக எந்த விலையும் குடுப்போம்

அப்ப குஷ்பு–

அந்தம்மா தமிழா? தமிழ்க்கருத்துரிமைய ஏன் வடஇந்தியக் கருத்துரிமை, மார்வாடிக் கருத்துரிமை, பனியாக் கருத்துரிமை, பார்ப்பனக் கருத்துரிமையோட குழப்பிக்கிறீங்க? நீங்க என்ன ஆளு?

திரு சோதியப்பா என்னவோ சொல்ல வ்ரார்…சொல்லுஙக

அதைத்தான் நான் சொல்றேன். எழுத்தாளனுக்கு எழுதுற உரிமை இருக்கிற அதேநேரத்திலே வாசிக்கும் உரிமையை தக்கவைத்துக் கொள்ளும் தரப்பிலிருந்து எழுந்து வரக்கூடிய எதிர்மறைப்பான்மைகளின் தரவுகளும் உபதரவுகளும் அளிக்கக்கூடிய முழுமையான தரப்பு என்னன்னு பாக்கவேண்டியிருக்கிது என்பதை நாம் இங்கே கருத்துச் சொல்லவேண்டியிருக்கிறதனால

அய்யா, ரொம்ப நவீன இலக்கியமா இருக்கு. ஒண்ணுமே புரியலை

அதாங்க,எழுத்தாளன் அவனுக்கே புரியாம எதையாவது எழுதி வைக்கிறான். அதை வாசகன் அவன் இஷ்டத்துக்குப் புரிஞ்சுகிடறான். இப்ப பிரச்சினை என்னான்னா எழுத்தாளன் எழுதினதுக்காக அவனை அடிக்கிறது நியாயமா, இல்ல வாசகன் புரிஞ்சுகிடுறதுக்க்காக அவனை அடிக்கிறது நியாயமா?

வாசகன் புரிஞ்சுகிடறதை வச்சுத்தானே அடிக்கமுடியும்?

அப்ப நான் என்னங்க பண்றது? என்னோட எழுத்து பல அர்த்ததளங்கள் கொண்டது. மல்டிப்பிளிசிட்டி ஆஃப் ரீடிங்னு வெள்ளைக்காரன் சொல்றான். ஒரு கதைய எழுதிட்டு நான் எத்தனை வாட்டீங்க அடிவாங்குறது? சொல்லுங்க…படிச்சவங்க….ஒரு நியாயத்த சொல்லி முடிங்க

வருத்தப்படாதீங்க, பேசீருவோம். கருத்துரிமைக்காக வேறுபாடுகளை மறந்து களமிறங்கியிருக்கும் அனைவரையும் கருத்துரிமைக்களம் நிகழ்ச்சி வரவேற்கிறது… இப்ப நிகழ்ச்சிக்குள்ள போலாங்களா?

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 6, 2015

***

முந்தைய கட்டுரைபோலிக்குரல்- சேதன் சஷிதல்
அடுத்த கட்டுரைஇமைக்கணத்தில் நிகழ்ந்தது