[நகைச்சுவை]
யோகம் என்றால் சும்மா இருப்பது. பெரும்பாலும் நாம் சும்மாதான் இருக்கிறோம், ஆனால் யோகம் என்பது சும்மா இருக்கிறோம் என்று நமக்கே தெரியும் நிலை. அப்போது அடாடா சும்மா அல்லவா இருக்கிறோம் என்று நினைத்து மனச்சள்ளைப்படும் செயலைச் செய்ய ஆரம்பிப்பதனால் நம்மால் சும்மா இருக்க முடியவில்லை. அசங்கி அமர்கிறோம். இடுப்பைச் சொறிகிறோம். ஏப்பம் விடுகிறோம். மணி என்ன இருக்கும் என நினைக்கிறோம். வெளியே அம்பாசிடர் இருமுவதை கவனிக்கிறோம். அவ்வப்போது அரைக்கண்ணைத் திறந்து என்ன நடக்கிறது உலகில் என்று பார்த்துக்கொள்கிறோம். பக்கத்தில் இருக்கும் மளிகைக்கடைக்காரர் ஏன் புருவத்தை அப்படி சுளித்து ஏதோ துர்நாற்றம் வருவதுபோல முகத்தை வைத்திருக்கிறார் என்று புரிவதில்லை.
எதிரே இருக்கும் பெண்ணின் பின்பக்கம் அத்தனை சப்பையாகத் தரையில் பதிந்திருப்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆண்களுக்கு இப்படி சப்பையாகப் பதிவதில்லையோ என்ற ஐயம் ஏற்படுகிறது. இடுப்பு வேறு கொஞ்சம் வலிக்கிறது. எப்போது இவ்வளவு நேரமா என்ற எண்ணம் எப்போது வருகிறதோ அப்போதே பொறுமை இழந்து விடுகிறோம். ஒருவழியாகக் கண்ணைத்திறந்ததும் இருபது நிமிடம்கூட ஆகவில்லை என்பதைக் கண்டு எரிச்சல் உறுகிறோம். சுற்றியிருப்பவர்கள் பரவசமாக எதையாவது சொல்வதைக் கண்டு நாமும் பரவசம் அடைந்து அவர்கள் சொன்னதற்கு அரை இஞ்ச் மேலே ஏற்றி நாமும் எதையாவது சொல்கிறோம்.
”அப்டியே மேகத்திலே போறது மாதிரி. ஒடம்பு வெயிட்டே இல்ல. அப்ப பாத்தீங்கன்னா, இந்த சுவத்திலே ஒரு வெளக்கு தெரிஞ்சா எப்டி இருக்கும் அதுமாதிரி ஒரு லைட்டு… ஜோதி.. அது குளுமையா நெலா மாதிரி இருக்குங்க. அப்டியே அமைதியா நின்னுட்டிருக்கு. ஓம்னு ஒரு முழக்கம் கேட்டுட்டே இருக்கு. ஜோதி அப்டியே நம்மள நெருங்கி வராப்ல இருந்தது. நேரா நெத்திப்பொட்டைப்பாத்து…கிரேட்’ என்று தோளைக் குலுக்கி புன்னகை செய்கிறோம்.
வீட்டிலே எழவெடுத்தவள் சமைத்தாளா இல்லை சீரியலிலேயே உட்கார்ந்துவிட்டாளா என நினைத்துக்கொண்டிருந்திருக்கக்கூடிய பக்கத்து மளிகைக்கடைக்காரர் உற்சாகமாக, ”அதாங்க முதல் ஸ்டெப்பு. உங்களுக்கு குண்டலினி கண் திறந்திருக்கு. அப்டியே கொஞ்சநாள் வந்திட்டே இருங்க. பாருங்க, அந்த லைட்டிலே சின்னதா ஒரு வேரியேஷன் இருக்கும். ப்ளூ லைட் மாதிரி ஆகி அதுக்கு சுத்தி ஆரஞ்சு நெறத்திலே ஒரு ஓரா தெரியும். அதாங்க சௌரஞ்சினீங்கிற ஒளி. அது வந்தா மனசே வேற மாதிரி ஆயிடும்ங்க. எதுவுமே பெரிசில்லைண்ணு தோணிடும். அது ஒரு ஸ்டேட். அது வந்துட்டுதுன்னா விடமாட்டீங்க”
மனதுக்குள் சௌரஞ்சினி என்று ஒருமுறை சொல்லிக்கொள்கிறீர்கள். ஆபீஸில் போய் அசத்திவிடவேண்டியதுதான். ஆனால் எதிர் ஆள் உண்மையிலேயே அந்த மாதிரி எதையாவது உணர்ந்திருக்கிறாரா இல்லை பீலா விடுகிறாரா? வீட்டிலே மனைவியிடம் சண்டை என்றால் வாசலில் கிடந்த செருப்பைத் தூக்கி உள்ளே அவள் மேல் எறிகிற ஆள். ஏதாவது உறைக்கிற மாதிரி சொல்லலாமா? சொல்லப்போய் உண்மையிலேயே இந்த ஆளுக்கு அந்தமாதிரி ரஞ்சிதாஒளி தெரிந்து விட்டிருந்தால்? அய்யய்யோ, ரஞ்சிதா இல்லை வேறு யாரோ.
இங்கே நிற்கிறது, வரமாட்டேன் என்கிறது. பாரதிராஜா படத்தில்கூட நடித்திருக்கிறாள். கனகா? அவள் கரகாட்டக்காரனில் அல்லவா நடித்தாள்? ஆரம்பத்தில் இருந்தே பார்த்தால் ஸ்ரீதேவி ,ராதிகா, ரத்தி. ரத்திதான் இதிலே பார்க்கிறதற்கு பெஸ்ட். என்ன ஒரு மூக்கு! அப்புறம் நிறைய பெண்கள். பலபேருக்கு இப்போது ஆளுயரப் பையன்கள் இருக்கலாம். கரெக்ட் ரஞ்சினி! கருப்பாக இருப்பாள். அம்சமான பெண். ரஞ்சினி விரதம் இருந்து இவருக்கு ஞானதிருஷ்டி மாதிரி எதுவோ திறந்திருக்கிறது. எதற்கு வம்பு?
உங்கள் மௌனத்தைப்பார்த்து எதிராளி உற்சாகம் கொள்கிறார். ”யோகான்னா நீங்க சும்மா சாதாரணம்னு நினைக்கிறீங்க. சத்குரு சுவாமி ஏதோ டியூஷன் நடத்துறார்னு நெனைச்சுட்டு வந்துடறீங்க. உங்களுக்கு எல்லாமே வெளையாட்டுதான். உங்க மனசிலே என்ன இருக்குன்னு இப்ப நான் சொல்றேன். சினிமா சார். தமிழ்நாட்டுக்காரன் மனசிலே வேற என்ன இருக்கும்? தமிழும் சினிமாவும் ஒண்ணுதான் சார். சினிமா மட்டும்தான். எல்லாத்தையும் செருப்ப கழட்டுற மாதிரி கழட்டிப்போட்டுட்டு வாங்க. நானே சொல்லித்தர்ரேன். யோகம்னா அது ஒரு கடல். இப்ப நான் மஹாகுண்டலினீஹாம்ஸாயசக்ராதிஃபிகேஷன் பண்ணிட்டிருக்கேன். உங்களை மாதிரி சாதாரண ஆளுங்களுக்கெல்லாம் ஒரு கோர்ஸ் அஷ்டவிரதயோகாவே போரும். என்னமோ ஏதோன்னு பயந்திடக்கூடாது பாருங்க. எதுக்குச் சொல்றேன்னா…” என்று உங்களை மிதித்து தரையில் தேய்த்ததுடன் காலைப்போட்டு அரக்கவும் ஆரம்பித்துவிடுகிறார்.
கொலைவெறியைப் புன்னகையாக மாற்றும் கலை கற்ற நடுத்தராத்மாதானே நீங்களும்? எதிராளி உங்களுக்கு அடுத்ததாக உற்சாகமூட்ட ஆரம்பிக்கிறார். ”எதையுமே முடியாதுன்னு நெனைக்கக்கூடாது சார். நம்மாலே முடியும். நினைச்சா நம்மால சாதிக்க முடியும். என்னாலேயே முடியும்கிறப்ப உங்களுக்கு என்ன சார்? படிச்சவர். நல்ல வேலையிலே இருக்கீங்க. நாம யாரு சார்? வெறும் புழுக்கள். இப்ப என்னையே எடுத்துக்கிடுங்க. நான் யாரு? ஒண்ணுமே இல்ல. கட வச்சு வியாபாரம் பண்றவன். சத்குருவோட கால் பட்டா கல்லெல்லாம் மாணிக்கமாயிடும் சார். இன்னைக்கு நான் சொன்னா அது நடக்குது. ஒரு கை விபூதி எடுத்துக் குடுத்து ‘போடா எல்லாம் நல்லபடியா நடக்கும்’னா அது நடந்திரும் சார். அற்புதம்னு சொல்றாங்க. எதுவும் நம்ம கையிலே இல்லை. நாம யாரு? புழு. எல்லாம் அவன் விளையாட்டு. அவன் நாமளா நம்ம வடிவிலே இருந்து அவன் ஆட்டத்த நடத்திட்டிருக்கான். ஏன் சார்?”
கடைஞானி அடுத்த கட்டத்துக்கு எப்படி நளினமாக நழுவிச்செல்கிறார் என்பதை நீங்கள் அதிகமும் உணர்வதில்லை.”நாம ஒண்ணு சொன்னா அது நடக்குது சார். நம்ம சொல்லால ஜனங்களுக்கு நல்லது நடக்கணும். அதானேசார் நமக்கு வேணும். பின்ன நமக்கு என்ன? அன்னைக்கு இப்டித்தான் ஒருத்தன் வந்து என் வாழ்க்கையிலே ஒளி ஏத்திட்டீங்க, நீங்க மனுஷனே இல்லை கடவுள்னு பொத்துன்னு காலிலே விழறான். கூடவே அவன் பொஞ்சாதி வேற. டேய் எந்திரிடா, மடப்பயலே, நான்லாம் ஒண்ணுமே இல்லைடா. சத்குருதான் கடவுள் அங்க போன்னு சொல்லி விபூதி குடுத்தேன். அவரு சூரியன், நான்லாம் சாட்டிலைட். ஏன் சார்? நம்ம கையிலே என்ன இருக்கு?”
அவர் காலிலே விழ வேண்டுமென எதிர்பார்க்கிறாரா என்ற ஐயம் உங்களுக்குள் எழுகிறது. பையிலேயே விபூதி வைத்திருப்பாரோ? ”எதுக்குச் சொல்றேன்னா, என்னடாது நம்ம பக்கத்திலேயே இருக்கானேன்னு உங்களுக்கு தோணிடப்படாது. அதிலே நாம கவனமா இருந்துக்கறது. நாம யாரு என்னன்னு எங்கியுமே காட்டிக்கிடறதில்லை. பேசாம போறது, வாறது, நம்ம ஜோலிகளைக் கவனிச்சுக்கிடறது. அவ்ளவுதான். நீங்க யாரு? எனக்கு சமானமான மனுஷன்தானே. அப்டித்தானே சார் நான் உங்கள நடத்தறேன். ஒரு நாலஞ்சு ஸ்டெப் மேலே போயிட்டோம்கிறதுக்காக நாம மனுஷனே இல்லேன்னு ஆயிடுமா? எல்லாருமே மனுஷங்கதான். சத்குரு மட்டும்தான் தெய்வம். ஓம் சத்குருவே நமஹாயஹாஹ! நான் டீ சாப்புடறதில்லை சார். பால்தான்”
டீக்கும் பன்னுக்கும் பணம் நீங்கள்தான் கொடுத்தாகவேண்டுமென ஆகிவிட்டது. அந்த ஆளின் கடைக்குப் போய் சாமான் வாங்கலாமா கூடாதா என்றே உங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. வெள்ளாடு மாதிரி கண்களுடன், டம்ளரை சுழட்டிச் சுழட்டிப் பாலை ஊதி ஊதிக் குடிக்கிறான். ”மாஸ்டர், கொஞ்சம் சக்கரை” என்று கேட்டு வாங்கிக் கொள்கிறான். உண்மையிலேயே எத்தனை ஸ்டெப் போயிருப்பான்? பீலா விடுகிறானா ,இல்லை? என்ன சந்தேகம், பீலாவேதான். ஆனால் இதே பீலாவை ஆபீஸிலே நாம் விட முடியும். இரண்டுக்கும் துணிந்து ஆபீஸுக்குப் போய் கிழட்டு பிராஞ்ச் மேனேஜரை ‘குழந்தாய்’ என்று கூப்பிட்டுவிட்டால் என்ன?
நீண்ட காவிஜிப்பா, ஜீன்ஸ், தோளில் புரண்ட தலைமுடியுடன் வரும் ஆசாமியை தியான மையத்தில் பார்த்திருக்கிறீர்கள். அலட்சியமாக வந்து ”என்ன கிருஷ்ணன், என்ன பாலா? ம்ம்? மாங்காய்ப்பால் வேணாம்னு தேங்காய்ப்பால் குடிக்கிறீங்களாக்கும்?” என்று சொல்லி கடைக்காரரிடம் ”ஒரு வில்ஸ் ·பில்டர்” என்கிறார்.
அவரது தோரணை மட்டுமல்ல, அவரைப்பார்த்து கிருஷ்ணன் குறுகுவதும் உங்களிடம் ஆழ்ந்த விளைவை உருவாக்குகின்றன.”நமஸ்தேஜி” என்கிறீர்கள். ”நமஸ்தே..இந்த பார்மாலிட்டிகள்லாம் எதுக்கு? பார்மாலிட்டியோடா பொறந்தோம்? அம்மணமா பொறந்து வந்து மேனர்ஸே இல்லாம கீ கீன்னு அழுதவங்கதானே நாமள்லாம். என்னை நீங்க சும்மா ராஜான்னே கூப்பிடுங்க. மரியாதயெலலாம் மனசிலே இருந்தாப்போரும்…என்ன சொல்றீங்க கிருஷ்ணன்?” என கிருஷ்ணன் முதுகிலே தட்டிக்கொடுத்து சிகரெட்டைப் பற்றவைக்கிறார்.
”நீங்க இங்கதான் இருக்கிறீங்களா?” என்று சொல்லிவிட்டு ”ராஜா சார்” என்று கேட்கிறீர்கள். ”இங்க இருக்கிறேன்னு நீங்க நினைக்கிறீங்க. நான் எங்க இருக்கிறேன்னு நான் நினைக்கணும்ல? இங்க இருக்கிறதுதான் எங்கியுமே இருக்கு. எங்கயுமே இருக்கிறது இங்க இருக்கு. எங்க இருக்கிறோம்ங்கிறதிலே என்ன இருக்கு? எங்கியுமே இருக்கிறோம்கிறதுதான் முக்கியம். என்ன கிருஷ்ணன்?” என்று புகைவிட்டு ”சும்மா, வெளையாட்டுக்குச் சொன்னேன். பயந்திராதீங்க. எல்லாமே வெளையாட்டுதான். நான் வெளையாடுறேன், நீங்களும் வெளையாடுறீங்க. நம்ம சாமியாரும் வெளயாடுறார்…”
”சத்குருவ சொல்றீங்களா?”
”குருவா? யாருக்கு யார் குரு? குருவிலே இருந்து குருவா நிக்கிறது எது? எல்லாரும் நண்பர்கள். நாமெல்லாம் நண்பர்கள். சேர்ந்து ஆடிப்பாடணும். ஒரு பீர் அடிக்கிறதானா அடிக்கணும். ஓஷோ சொல்றது மாதிரி ஆடறவங்க ஆடட்டும் பாடறவங்க பாடட்டும் ..என்ன கிருஷ்ணன்…” கிருஷ்ணனை முதுகில் ஓங்கி அறைந்து ”கிருஷ்ணன் நல்ல பக்தியுள்ள ஆத்மா. கோயிலுக்கு தேங்காயோட போறதுக்கு பதிலா இங்க வர்ரார்.. சினிமா சந்தேகம்லாம் நெறைய கேப்பார். வெட்கப்படாதீங்க கிருஷ்ணன். தமிழன் சினிமாவத்தானே கேப்பான். தமிழ்நாட்டுக்காரன் மனசிலே வேற என்ன இருக்கும்? தமிழும் சினிமாவும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு” கடைசி பஃபை ஆழ இழுத்து வீசி உற்று நோக்கி ”மனசு திறந்தா சினிமாவே எல்லா வாசல்களையும் திறக்கிற சாமியா ஆயிடும்”
தத்துவமாக எதைக்கேட்டாலும் பரவச பாவனையைக் காட்டப்பழகிய நடுத்தராத்மா நீங்கள். ”நீங்க ஸ்க்ரீன்ல பாக்கிற சினிமா உண்மையிலேயே அங்க இருக்கா? இல்ல. எல்லாமே வெறும் பிம்பங்கள். உண்மையிலே இருக்கிறது என்ன? ஒரு பிலிம். எல்லாமே அதிலே இருக்கு. அதன் மேலே நாம வீசுற ஒளிதான் பிம்பங்களா ஆகுது. கார்கள் ஓடுது, லவ்வர்ஸ் டான்ஸ் ஆடுறாங்க, மனுஷங்க சாகிறாங்க” அவர் படுதீவிரமாக உங்களைப் பார்த்து ”லிஸன், ஆனா அந்த பிலிம், அது ரியலா? கடையாது. அது எங்கியோ நாலுபேரு ஷூட் பண்ணின டிராமா. அந்த டிராமா உண்மையா? கடையாது. அதை எவனோ யோசிச்சிருக்கான் இல்லை. அவன் மூளைதான் ரியல்.. ”.
அவன் மூளை உண்மையா, இல்லை என அவர் மேலே செல்வார் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அவர் காறி கால்வாயில் துப்பிவிட்டு உங்களைப்பார்த்து புன்னகை செய்து ”யோசியுங்க” என்றார்
அவரிடம் ஆழமான சந்தேகங்களைக் கேட்டாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான நீங்கள் ”சார், பத்மாசனம்னா என்ன?” என்கிறீர்கள்.
”என்ன கிருஷ்ணன், சொல்றது…” என்று அவர் கிருஷ்ணனிடம் சிரித்துக்கொண்டே சொல்ல கிருஷ்ணன் பணிவான ஒரு பாவனை காட்டிப் பேச ஆரம்பிப்பதற்குள் ”பத்மாவோட ஆசனம்னு சொல்லிடாதே. அப்றம் பத்மாசனம் போடச்சொன்னா இவர் ஓடிடப்போறார்.அஹஹ்ஹாஹா!” என்கிறார் ராஜா. ”உண்மையச் சொன்னா அது பதமாசனம். பதமா உக்காருறதுக்கான ஆசனம், அவ்ளவுதான். அதை அப்டி அலங்காரமா ஆக்கிட்டாங்க. நம்மாளுகளுக்கு எதையுமே ஆடம்பரமா சொன்னாத்தானே பிடிக்கும். மிஸ்டிஃபை பண்ணாதீங்க. மண்ணுல நில்லுங்க. அதான் நான் சொல்றது”
”சரிங்க” என்று கிருஷ்ணன் கைகூப்பி சொன்னார்.
”நாராயணனும் அதைத்தான் சொல்றான்” என்றார் ராஜா
”கீதையிலயாங்கஜீ?”
”சே, நம்ம சாமியாரைச் சொன்னேன். அவன் பேரு நாராயணன்தானே…எதையும் சாதாரணமா யோசியுங்க. ஈஸியா இருங்க. ஜாலியா இருங்க. மனசு அப்பதான் மலரும். பூமாதிரி மலர்ந்திரும். மனசு மலர்ந்தா ஆத்மா மலர்ந்திரும். ஆத்மா மலர்ந்தா பிரபஞ்சம் மலர்ந்திரும். பிரபஞ்சம் மலர்ந்தா… ” அவர் ஒருமுறை இருமுகிறார். அதை அப்படியே விட்டுவிட்டு ”அதனாலே ஈஸியா இருங்க. எதையுமே கும்பிடாதீங்க. எல்லாமே சாதாரணம்தான். நான் சாதாரணம், இவரு சாதாரணம்…”
”அப்டி சொல்லிட முடியுமாஜீ…நீங்க யாரு..எங்கியோ இருக்கீங்க?” என்று கிருஷ்ணன் கும்பிட அவர் கிருஷ்ணன் முதுகில் தட்டி ” முட்டாள், எங்க இருக்கேன்? எல்லாம் இங்க தான் இருக்கேன். உங்க கூடவேதான் இருக்கேன்… எப்பவுமே இருப்பேன்” என்று ஆதுரத்துடன் சொல்ல கிருஷ்ணன் ”எங்களுக்கு உங்க காவல்தான்” என்றார். ”நான் யாருக்குக் காவல்? பிரபஞ்சத்துக்கு பிரபஞ்சமே காவல்…”
”இப்ப பிரபஞ்சம் மலர்ந்தா என்னாகும்ங்க?” என்று நீங்கள் கேட்பதை அப்படியே விட்டுவிட்டு ”நான் எங்கியுமே என்னை மேலே காட்டிக்கிடறதில்லை. என்னைப் பத்தி அப்டி நினைக்கிறதை நான் வெறுக்கிறேன். நான் சர்வ சாதாரணமானவன். இந்த நாயி மாதிரி…எனக்குன்னு ஒண்ணுமே இல்லை. இந்தபிரபஞ்சம் மட்டும்தான் எனக்கு”
”பிரபஞ்சம் மலருறப்ப ..” என்று நீங்கள் கேட்கப்போக அதைத் தாண்டிச்சென்று ”என்னை யாரும் மிஸ்டிக்னு சொல்லக்கூடாது. என்னை யோகின்னு சொல்லக்கூடாது. நான் ஞானி இல்லை. பரமஹம்சர் இல்லை.சும்மா ரோட்டிலே போறவன். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அப்டித்தான் சொல்லிக்கிட்டார். கிருஷ்ணாஜி அப்டித்தான் சொல்லிக்கிட்டார். ஓஷோ அப்டித்தான் சொல்லிகிட்டார். எந்த மனுஷனையுமே கும்பிடாதீங்க. மிஸ்டிஃபை பண்ணாதீங்க. அதான் என்னோட மெஸேஜ்” என்றபின் உங்கள் முதுகில் ஒங்கி அறைந்து ”ஓக்கே பாய்…லெட்டஸ் ஸீ அகெய்ன்” என்று போகிறவரை உற்றுப்பார்த்து ஒருமாதிரி கிராக்கு இல்ல என்று சொல்லலாமா என்று நீங்கள் யோசிப்பதற்குள் ”பெரிய மகான். சத்குருவையே பேரு சொல்லிக் கூப்பிடறார் பாத்தீங்களா?” என்கிறார் கிருஷ்ணன்.
நீங்கள் யோசித்துக்கொண்டே செல்லும்போது கிருஷ்ணன் ”பெரிய பவர் உள்ள ஆளு சார். ஒருநாள் எங்கிட்ட ஒரு பூவைக்குடுத்து இதைக்கொண்டுட்டு போய் உன் வீட்டு பூஜையறையிலே வச்சு சாமிகும்பிடுன்னு சொன்னார். நானும் கொண்டுபோயி வச்சு பூஜை பண்ணினேன். என் வீட்டுக்காரி என்னவோ அழுகின வாசனை வருதுங்கிறா. எனக்கு தெரியல்லை. அப்றம் அய்யய்ய பூஜைரூம்பிலே யாருங்க எறச்சித்துண்ட கொண்டாந்து வச்சதுன்னு கேக்கிறா. நான் உள்ள போயி பாத்தா பூவு பொன்னால செஞ்சதுமாதிரி தகதகன்னு இருக்கு. என்னாடி பேத்தறேன்னேன். நீங்கதான் பேத்தறீங்கன்னு அவ சொல்றா. சொல்லிட்டே பூவ எடுத்து வெளிய போடப்போனவ ஆன்னு கத்திட்டா. கை சுட்டுட்டுது சார். அய்யோ இது தீன்னு கத்துறா. நான் போயி அதை எடுத்து கையிலே வச்சுகிட்டேன். அப்டியே என் காலிலே விழுந்துட்டா. இப்பகூட வெள்ளி செவ்வா ரெண்டுநாளும் எனக்குப் பாதபூஜை பண்ணிட்டுதான் சார் அவ பச்சத்தண்ணி குடிப்பா” என்கிறார்.
நீங்கள் விடைபெற்றுச் செல்லும் வழியில் உங்கள் பக்கத்துவீட்டுப் பெருமாளைப் பார்க்கிறீர்கள். ”பஜாஜை விக்கிறதா சொல்லியிருந்தீங்களாமே சார். உங்க வீட்டிலே சொன்னாங்க” என்கிறார்.
”எல்லாம் விற்பனைதானே பெருமாள். இப்ப நீங்க உங்க மனசை விக்கிறீங்க. கைகால்களை விக்கிறீங்க. இந்த உலகமே ஒரு விற்பனை சாலை”
”வாஸ்தவமான பேச்சு” என்று அவர் சந்தேகத்துடன் சொல்ல, நீங்கள் மந்தஹாசம் பொழிந்து ”எல்லாம் லாப நஷ்டக் கணக்குதான். ஆனா லாபமும் நஷ்டமும் இல்லாத வியாபாரம்னு ஒண்ணு இருக்கு. நித்யமான வியாபாரம். அதை நாம செய்யணும், என்ன சொல்றீங்க?” என்கிறீர்கள். பெருமாள் அரண்டு போவது தெரிகிறது.
”யோகா கிளாஸ் போறதா வீட்டுல சொன்னாங்க”
”ஆமா” என்கிறீர்கள். ”ஆனா யோகான்னா என்ன? நாம ஏதோ கழுத்துவலிக்கு வைத்தியம் பாத்துப் பலனில்லாம போயி உக்காருற எடம்னு நனைச்சுட்டு இருக்கோம். சினிமாவப்பத்தி நெனைச்சுட்டு அரைமணி நேரம் உக்காந்தா யோகா ஆயிடுமா? தமிழனுக்கு சினிமாதானே சார் எல்லாமே? அவன் மனசுக்குள்ள சினிமாநடிகைகள்தானே இருக்காங்க. உங்கள சொல்லல்ல. பொதுவா சொன்னேன். செருப்பக் கழட்டுறது மாதிரி கழட்டிட்டு பதமாசனத்திலே உக்காந்து கண்ணை மூடிட்டிருந்தா ஒரு ஒளி சார். அதுக்கு மகாரஞ்சிதான்னு பேரு. இதையெல்லாம் நம்ம கிட்ட இருந்து மறைச்சிட்டாங்க. சத்குரு வாசலைத் திறந்து போட்டிருக்கார். ஓம் சத்குருவாயஹாஹாஹ நமயாயஹாஹ!”
”ஆமா சார். நான் கூட அன்னைக்கு நம்ம கர்ப்பகவினாயகர் கோயிலிலே நின்னுட்டிருந்தப்ப ஒரு வைப்ரேஷன் சார். என்னான்னே தெரியல்லை…ஒருமாதிரி ஒரு அதிர்வு…” என்று பெருமாள் சொல்ல, ”கரெக்ட். அது அதிர்வேதான். நீங்க முதல்படியிலே நின்னுட்டிருக்கீங்க. பயந்திரக்கூடாது. நிதானமா இருக்கணும். அடுத்தடுத்துப் பல நிலைகள் இருக்கு. மேலே வந்திட்டீங்கன்னா நானே பல விஷயங்களைச் சொல்றேன் உங்களுக்கு. அன்னைக்கு இப்டித்தான் நான் யோகா பண்ணிட்டிருந்தப்ப நம்ம வீட்டு ஓனர் வந்து கூப்பிட்டான். வாங்க மலையப்பன்னு சொன்னேன். மலையப்பன் அவரோட கொள்ளுத்தாத்தாவாம். அவரோட ஜாதகம் உட்பட எல்லாத்தையும் சொல்லி அவர்தாண்டா நீன்னுட்டேன். அப்டியே காலிலே விழுறான். டேய், என் காலிலே எதுக்குடா விழுறே? நான் ஒண்ணுமே இல்ல. போயி சத்குரு காலிலே விழுடான்னு சொன்னேன். நாம யாரு சார்,புழு! நம்ம கிட்ட இருக்கிற சக்தியெல்லாம் சத்குரு குடுக்கிற சக்தி. பிரபஞ்சம் மலர்ந்தா எல்லாமே சரியாப்போயிடும்….ஓம்”
பெருமாள் பீதியுடன் போவதைக் காணும்போது நீங்களே உங்களை நம்பி உங்கள் விரல்நுனிகளைப் பார்த்துக்கொள்கிறீர்கள். தேஜஸ் தெரிகிறதா? இல்லாமல் இருக்குமா என்ன என்றும் படுகிறது. ஆனால் சொந்தமாக யோகா செண்டர் உடனே ஆரம்பிக்க வேண்டாம். அதிகப்பிரசங்கமாகிவிடும். ஒரு பத்துநாள் போகட்டும்.
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jul 13, 2012