காந்தி-இந்துத்துவம்- அரவிந்தன் கண்ணையன்

mohandas-gandhi-painting-H (1)

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் சில நாட்களுக்கு முன்பு எழுதியது போல் என் கட்டுரை/மடல் எழுதி முடித்து விட்டேன். அதை சற்று முன்பு தான் பதிவேற்றமும் செய்தேன். அதன் சுட்டி http://contrarianworld.blogspot.com/2015/01/blog-post.html .

எந்த கருத்தும், யார் கூறிய போதும், அது அறிவு தளத்தில் சந்திக்கப் பட வேண்டும் என்றே என்னுபவன் நான். எப்படி தமிழச்சியை ‘திராவிட பேச்சாளர்’ என்று ஒதுக்காமல் மறுத்துரைத்தேனோ அதே மனோ நிலையில் தான் இதையும் எழுதினேன். மறுப்பது மரியாதை குறைவு என்று நான் என்றுமே எண்ணியதில்லை. ஆர்.எஸ்.எஸ் காரர் என்று உதாசீனப்படுத்துவதுதான் மரியாதைக் குறைவு என்று எண்ணுபவன் நான். மேலும் இது போன்ற பதிவுகளை எழுத முனையும் போது வரலாறு மட்டுமல்ல என்னையே கூட நான் கண்டடைகிறேன். இந்த பதிவினை எழுத முற்பட்டு நான் செய்த என்னளவிலான ஆராய்ச்சிகள் பல திறப்புகளை எனக்களித்தது. அதற்கு உங்களுக்கு என் நன்றிகள் பல.

என்றும் உங்களை ஆர்வத்துடன் வாசிக்கும்,
அரவிந்தன் கண்ணையன்.

Baptism-59
அன்புள்ள அரவிந்தன்,

முதல் விஷயம், நீங்கள் தமிழில் எழுதியிருப்பது. நான் தொடர்ந்து உங்களிடம் கோரிவந்தது அது. நீங்கள் எதிர்கொள்ளும் வாசகர்கள் தமிழில் வாசிப்பவர்கள். அவர்களிடம் தமிழில் பேசுவதே சிறப்பு. உங்கள் தரப்பு வலுவாக நிறுவப்படவும் அதுவே உதவிகரமானது. தொடர்ந்து தமிழின் அனைத்து ஊடகங்களிலும் நீங்கள் எழுதவேண்டுமென கோருகிறேன்.

உங்கள் தமிழ்நடை செறிவானதும் நேரடியானதுமாகும். தமிழின் நல்ல தமிழ் உரைநடைகளில் எளிதாக அதை வைக்க முடியும்.

*

உங்கள் கட்டுரையில் உள்ளவற்றை புரிதல்பிழைகள் என்றே எடுத்துக்கொள்கிறேன். அரசியல் மற்றும் கொள்கை விவாதங்கள் உணர்ச்சிகரமாக முன்வைக்கப்படும்போது அந்தப்பிழை நிகழ்கிறது.ஒருவரின் பொதுவான எழுத்துக்கள் மற்றும் அவரை எதிர்ப்பவர்களின் பார்வைகளிலிருந்து அந்தப்பிழையான புரிதல் உருவாகி விவாதங்களில் கலக்கிறது.

நீங்கள் சென்றகாலங்களில் எழுதிய எழுத்துக்கள் பெரும்பாலும் இந்தியசிந்தனை மற்றும் இலக்கியங்களுக்கு எதிராக அமெரிக்காவின் சிறப்பை விதந்தோதுபவையாக இருந்தன என்ற எண்ணம் எனக்கும் இருந்தது. உங்கள் எதிர்த்தரப்பினரிடமிருந்து உங்கள் மதச்சார்பு அதற்கான காரணமாக இருக்கலாமென்ற எண்ணம் ஒரு பொதுவாசகருக்கு வருவது நம் சூழலின் இயல்பை வைத்து நோக்கினால் புரிந்துகொள்ளக்கூடியதே.

விவாதத்தில் அதை கேட்ட என் நண்பர் உங்களிடமிருந்து அதற்கு திட்டவட்டமான ஒரு பதிலை- அதாவது மறுப்பை – எதிர்பார்த்தே எழுதினார் என்று என்னிடம் சொன்னார். குறிப்பாக காந்திய வெறுப்பை பயிரிட்டதில் இங்குள்ள கிறித்தவ அமைப்புகளுக்குள்ள பெரும் பங்கை சற்றும் முன்வைக்காமல் நீங்கள் பேசிச்செல்வதைக் கண்டபின் அப்படி அவர் எண்ணியதும் இயல்பே.அவர் தன் தரப்புக்கு வருத்தம் தெரிவித்தது நான் அவரிடம் உங்களைப்பற்றி பேசியபிறகுதான்.

துரதிருஷ்டவசமாக அதேபோன்ற ஒரு பொதுப்புரிதலின் தளத்தில் நின்றபடித்தான் நீங்களும்கூடப் பேசுகிறீர்கள். அது நான் சொன்னவற்றை எல்லாம் திரிபடையச்செய்து புரிந்துகொள்ளச் செய்கிறது.அனைத்தையும் என்னைப்பற்றிய ஒரு முன்முடிவிலிருந்து அணுகியிருக்கிறீர்கள் என்று படுகிறது.

நீங்கள் சொல்லியிருப்பனவற்றுக்கு மிக விரிவான பதில்களை நான் ஏற்கனவே சொல்லியிருந்தாலும் ஓரிரு மையங்களையாவது மீண்டும் சொல்லவேண்டிய இடத்தை நோக்கி என்னைக் கொண்டுசெல்கிறது.

*

இந்தியாவில் காந்திவெறுப்பை நிறுவிய பொறுப்பில் இருந்து இந்துத்துவர்களை விடுவிக்கும்பொருட்டு பிறரைக் குற்றம் சாட்டுகிறேன் — என்பது என் கூற்றைப்பற்றிய உங்கள் புரிதல்.

நான் பலமுறை தெளிவாகவே எழுதிவிட்டேன். இந்தியா ஐரோப்பாவிடமிருந்து பெற்ற மூன்றுவகையான தேசியங்கள் நவீன ஜனநாயகத் தேசியம், பண்பாட்டுத் தேசியவாதம், கம்யூனிச சர்வாதிகார தேசியம்.

காந்தி நேரு அம்பேத்கர் முன்வைத்தது நவீன ஜனநாயக தேசியம். நான் அதன் ஆதரவாளன்- பிரச்சாரகன். இந்த்துவம் இரண்டாம் வகை. அவர்கள் முதல்வகையை எதிர்ப்பது இயல்பானது, அவர்களின் அரசியலே அதுதான்

ஆனால் முதல்வகையான நவீன ஜனநாயகத் தேசியத்தால் பாதுகாக்கப்படுபவர்களும், அரவணைக்கப்படுபவர்களுமான சிறுபான்மையினரும், ஒடுக்கப்படும் எளியமக்களும் கூட அதன் பதாகையான காந்தியை கடுமையாக நிராகரித்தது, அவதூறுசெய்து அந்தப் படிமத்தை அழித்ததுதான் உள்ளிருந்து செய்யப்பட்ட பேரழிவு. அந்த இடைவெளியை இயல்பாக இரண்டாம் வகை தேசியம்தான் நிரப்பும். இதுதான் நான் சொன்னது, மீளமீளச் சொல்லிவருவது.

தென்னகத்தில் எங்கும் இந்துத்துவ அரசியல் வலுவாக இருந்ததில்லை. 90கள் வரைக்கும்கூட அது இங்கே ஓர் இருப்பே அல்ல. ஆனால் தென்னகத்தில் உள்ள அளவு காந்திய வெறுப்பு வங்கம்,பஞ்சாப் தவிர எங்கும் கிடையாது. ஏன் என்று யோசித்தால் தெரியும், எவர் கடந்த ஐம்பதாண்டுக்காலமாக அதை இங்கே நிறுவனரீதியாக வளர்த்தனர் என்பது. மேடைமேடையாக அவதூறுகளைச் சொல்லிச்சொல்லி நிலைநாட்டினர் என்பது. அவர்கள் தட்டிக்கழிக்க முடியாது. குறைந்தது இனியேனும் அவர்கள் செய்த வரலாற்றுப்பிழையை அவர்கள் உணர்ந்தாகவேண்டும். இதுவே அக்கட்டுரையில் நான் சொல்வது

அதை இந்துத்துவர் தப்புசெய்யவில்லை, இவர்கள்தான் செய்தார்கள் என்று நான் சொல்கிறேன் எனப் புரிந்துகொள்வதில் உள்ளது நீங்களே வருந்திக்குறிப்பிடும் அதே முன்முடிவு மனநிலைதான் என்பதை சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.

*

ஆர்.எஸ்.எஸ் காந்தியை ஏற்றுக்கொண்டதைப் பற்றிய என் கூற்றையும் அதேபோல உங்கள் மனச்சாய்வின் கோணத்தில் புரிந்துகொள்கிறீர்கள் என்று குறிப்பிடவிழைகிறேன். இதைப்பற்றி நான் என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் மட்டுமே பேசுகிறேன்

ஐம்பதுகளின் இறுதியில் நேருவின் இந்தியா காந்தியப்பொருளியல் பாதையிலிருந்து முழுமையாகவே விலகிச்செல்வது உறுதியானதும் காந்தியப்பொருளியலில் ஆர்வமுள்ளவர்களில் ஒருசாராருக்கான புகலிடமாக ஆர்.எஸ்.எஸ் மாறியது. காந்தியர்கள் அன்றிருந்த அரசியல் தரப்புகளில் முக்கியமானவையான காங்கிரஸ், சோஷலிஸ்ட்,கம்யூனிஸ்டு முகாம்கள் எதிலும் சேரமுடியாது என்பதே காரணம்.பெரும்பாலானவர்கள் உதிரி சமூகசேவையாளர்களாக ஆனார்கள்- சிலர் இந்துத்துவத் தரப்பை நோக்கி வந்தனர்.

அவர்களில் சிலரை நான் தனிப்பட்டமுறையில் அறிவேன் என்பதனால் உங்களைப்போல அவர்களை மதவெறிச்சதியர்கள் என ஒற்றைப்படையாக முத்திரைகுத்த முனையமாட்டேன். பெரும்பாலும் வெளியே அறியப்படாத உண்மையான சேவகர்கள் அவர்கள். அவர்கள் ஆர்.எஸ்.எஸின் நோக்கில் பெரும் மாற்றத்தை உருவாக்கினார்கள். கிராம நிர்மாணம், சிறிய அளவிலான நீர் மேலாண்மை, தீண்டாமை ஒழிப்பு போன்ற காந்தியச் செயல்திட்டத்தை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொள்ளும்படிச் செய்தனர்.

ஆர்.எஸ்.எஸின் அமைப்புக்கள் அவற்றில் கண்டிப்பாக முக்கியமான சாதனைகளைச் செய்துள்ளன. இன்றும் பணியாற்றி வருகின்றன. அவற்றை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டுப் பேசுவது என்பது வெறும் தெருச்சண்டை அரசியல் மட்டுமே.

அதாவது சில காந்தியர்கள் காந்தியை ஆர்.எஸ்.எஸின் உள்ளே கொண்டுவந்தது என்பது காந்தியை ஆர்.எஸ்.எஸ் பாணி அடிப்படைவாத இந்துவாக உருமாற்றுவதாக அமையவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸை காந்தி முன்வைத்த சில விழுமியங்களை நோக்கிக் கொண்டுவருவதாகவே உண்மையில் அமைந்தது.

ஆர்.எஸ்.எஸ் தனது அன்றாடப் பிரார்த்தனைப் பாடலில் காந்தியைச் சொல்வது என்பது எளிய விஷயம் அல்ல. ஒரு மேடையில் ஒப்புக்காகப் பேசுவது வேறு. ஒவ்வொருநாளும் அதன் பிரார்த்தனைகளில் அது வழிபடும் மாமனிதர்களின் வரிசையில் காந்தியைச் சொல்வது வேறு.

அவ்வியக்கத்தில் இணையும் ஓர் இளைஞன் அதைக்கேட்டுக்கொண்டுதான் அதனுள் வளர்கிறான். பின்னர் அவனிடமே அதெல்லாம் ஒப்புக்காகச் சொல்வது, மோசடியாகச் சொல்வது என அதே அமைப்பு சொல்லும் என்றால் அதன் நம்பத்தன்மை என்ன ஆகும்? வெறுப்பின் அடிப்படையில் எளிமைப்படுத்தாத ஒருவர் இதை புரிந்துகொள்வதில் ஒன்றும் சிக்கல் இல்லை.

ஆர்.எஸ்.எஸ் காந்தியை ஏற்றுக்கொள்வது என்றால் அவரை ஓர் இந்துத் தலைவராகத்தான் ஏற்றுக்கொள்ள முடியும். அவரை அப்படி விளக்காமல் அதனுள் அவரை முன்வைக்க முடியுமா என்ன? அவரது கிராமசுயராஜ்யம், தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றை அதை ஏற்கவைக்கமுடியுமா என்ன?

அது நிகழ்ந்தது என நான் சொல்வதற்குப்பொருள் நான் அதை ஆதரிக்கிறேன் என நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள் என்றால் என்ன சொல்ல? நான் காந்தியை எப்படி அணுகுகிறேன் என்பதை விரிவாகவே எழுதியிருக்கிறேன்.

எந்த ஒரு பெரிய அமைப்பைப்போலவும் பல்வேறு கருத்தியல்கள், பலவகை அதிகாரப்போக்குகளின் உள்மோதல்களால் ஆனதாகவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இருக்கிறது. அவர்கள் அனைவரையும் ஒற்றைப்படையான ஒரேவகை ‘வெறியர்கள்’ என்று முத்திரைகுத்திவிட்டுத்தான் பேசமுடியும் என்றால் அது வெறும் தெரு அரசியல். அதற்கு இத்தனை விவாதம் ஏதும் அவசியம் இல்லை

அறுபதுகளில் ஆர்.எஸ்.எஸுக்குள் வந்து மெல்ல வல்லமை கொண்ட இந்த காந்தியத் தரப்பு எண்பதுககளில் மெல்லமெல்ல தோற்கடிக்கப்பட்டு மையத்தில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது என்பதையே நான் சுட்டிக்காட்டினேன். அதில் காந்தியர்களை விட வெவ்வேறு வகையான தெருச்சண்டை அரசியல்குழுக்களின் செல்வாக்கு பெருகி வருகிறது. இன்றைய கோட்சே ஆதரவுக் குரலின் பின்னணி இது.

நான் எதையும் இந்தவகையான பின்னணிப்புரிதலுடன் நேர் எதிர்தரப்புகளை கருத்தில்கொடு முரணியக்கமாகவே அணுகுவேன். இந்தவகையான ஆய்வையே நான் வரலாற்று நோக்கு என்கிறேன்

நம்முடைய அரசியல் சர்ச்சைகளில் வரலாற்று நோக்குக்கு இடமில்லை. எதையும் வம்பாக,சில்லறை வாதமாக ஆக்கும் தெருமுனை அரசியலுக்கு அப்பால் செல்பவர்கள் இங்கே இல்லை.‘அப்டீன்னா இப்டிச் சொல்ல வரீயா?” என்றவகையில் ஒற்றைவரியை உருவி எடுத்துக்கொண்டு விருப்பப்படித் திரித்துக் கூச்சலிடும் வாதகதிகளே எங்கும் ஒலிக்கின்றன.நான் சொல்லும் சிக்கலான சித்திரத்தை இப்படி ஒற்றைவரியாக ஆக்குபவர்களை புறக்கணிப்பதே என் வழக்கம்.

நீங்கள் அப்படி வரலாற்று ரீதியாகப் பார்க்கவிரும்பினால் நான் சொல்வதை புரிந்துகொள்ளலாம்.

*

நான் காந்தியையும் நேருவையும் அணுகும் முறையையும் மிக எளிமைப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். காந்தியை முழுக்கமுழுக்க இந்தியத்தன்மை கொண்டவர் இந்து என்றும் நேரு ஐரோப்பிய செல்வாக்குகொண்டவர், மதச்சார்பற்றவர் ஆகவே அசடு என்றும் நான் சொல்கிறேன் என்று சுருக்கிக்கொள்கிறீர்கள்.

நான் சொல்வது நேர்மாறானது. முதல் விஷயம் , இந்தியத் தலைவர்களிலேயே ஐரோப்பாவுக்கு மிக நெருக்கமானவர் காந்தி என்பதே நான் பலநூறு பக்கங்கள் வழியாகச் சொல்லிவருவது. ஆகவேதான் ஐரோப்பியர் அவரை அண்மையாக உணர்ந்தனர். நெருங்கிவந்தனர். அவரது சிந்தனைகளை அதிகமாக முன்னெடுத்தவர்களும் ஐரோப்பியர்களோ ஐரோப்பிய நவீன சிந்தனைகளை அணுகியறிந்தவர்களோதான்.

காந்தி ஐரோப்பாவின் மிக படைப்பூக்கம் கொண்ட ஒரு தரப்புக்கு மிக நெருக்கமானவர். அதாவது அன்றைய அதிகார ஐரோப்பாவுக்கு எதிராக உருவாகி வந்துகொண்டிருந்த கலகக்கார, அரசின்மைவாத ஐரோப்பாவின் சிந்தனைகளின் தொடர்ச்சி அவர். இதைத்தான் நான் எழுதிவருகிறேன். அச்சிந்தனைகளை இந்தியாவின் மையமரபுக்கு எதிராக திகழ்ந்த சிந்தனைகளுடன் இணைத்துக்கொண்டு வளர்த்தெடுத்தார். குறிப்பாக சமணமரபு. அவரது சமணப்பின்னணி அதற்கு உதவியது. நான் உருவாக்கும் சித்திரம் இதுவே.

ஆனால் காந்தி சமணமரபில் இருந்து பெற்றுக்கொண்ட பாலியல் ஒடுக்கம் சார்ந்த கொள்கைகளையோ புஷ்டிமார்க்கத்தில் இருந்து பெற்றுக்கொண்டு செய்து பார்த்த பாலியல்யோகப் பரிசோதனைகளையோ என்னால் சற்றும் ஏற்கமுடியாது என சொல்லியிருக்கிறேன். இந்த எதிப்பை மட்டும் எடுத்துக்கொண்டு நான் காந்தியை கடுமையாக அவதூறுசெய்கிறேன் என பலர் எழுதியிருக்கிறார்கள்.

அதேபோல நேருவை நான் முழுமையாக நிராகரிக்கிறேன் என்பது நீங்களே உருவாக்கிக்கொள்ளும் ஒற்றை வாக்கியம். என் இணையதளத்திலேயே பல கட்டுரைகள் நேருவை முன்வைப்பவை உள்ளன. தர்க்கபூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும்.

நேருவை ஐரோப்பியவாதி என நான் சொல்லவில்லை. அவர் ஐரோப்பாவில் ஆதிக்கம்பெற்றிருந்த சிந்தனைகள் பலவற்றை முழுமையாக ஏற்றுக்கொண்டவராக இருந்தார், அது அவரது பார்வைகளில் உருவாக்கிய பிழைகளைப்பற்றித்தான் குறிப்பிடுகிறேன்.

குறிப்பாக இந்தியாவை ஓர்அதிகாரிவர்க்கம் சார்ந்த நிர்வாகமுறைக்குக் கொண்டுசென்றது, மையப்படுத்தப்பட்ட திட்டமிடல்முறை, பெருந்தொழில்மோகம், மரபுச்சார்பற்ற கல்விமுறையை கொண்டுவந்தது, கிராமங்களை உதாசீனம்செய்யும் திட்டமிடல் என அவர்மேல் நான் கொண்டுள்ள பல குற்றச்சாட்டுகளை எழுதியிருக்கிறேன்

ஆனால் நவீன ஜனநாயக இந்தியாவை உருவாக்கியதில் நேருவின் பங்களிப்பைப் பற்றி மிகத்தீவிரமாக எழுதியிருக்கிறேன். அவரது மேலே சொன்ன குறைகள் கூட கண்ணெதிரே பெரும்பஞ்சங்களைக் கண்ட ஓரு மனிதாபிமானியின் உணர்வெழுச்சியின் விளைவே என்றுதான் வாதிட்டிருக்கிறேன்

நேரு ஓர் அசடர் என்பதை ஒரு வசையாக அக்கட்டுரையில் சொல்லவில்லை, அது ஓர் இலக்கியரீதியான சொல்லாட்சி என நீங்கள் காணலாம் [ஒரு கோணத்தில் ஏசுவும் அசடர்தான் என எழுதியிருக்கிறேன்] ஓர் அரசியல்வாதியின் கறாரான போக்கு அவரிடமிருக்கவில்லை.

நேரு மேலைநாட்டை நோக்கியது உணர்வெழுச்சி சார்ந்த மனதுடன். இந்தியாவை ஓர் ஐரோப்பியன் பார்க்கும் உணர்வெழுச்சியின் பரவசத்துடன் ‘கண்டடைந்தார்’. எப்போதுமே இலட்சியவாதிகளுக்குரிய அசட்டுத்தனம் அவரிடம் இருந்தது.

அம்பேத்கர் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து எழுந்து வந்தவர். இந்தியாவில் வன்முறையை உருவாக்கும் ‘லைசன்ஸ்’ எவருக்காவது உண்டு என்றால் அது அவருக்கு மட்டுமே. ஆனால் அவர் ஆக்கபூர்வமான அகிம்சையை மட்டுமே முன்வைத்தார். ஜனநாயகத்தின் அடிப்படைகளை உருவாக்கினார். அந்த ஒருகாரணத்திற்காகவே அவர் நவ இந்தியாவின் சிற்பி. அத்துடன் ஒரு ஞானியாக இறுதியில் கனிந்தார். ஆகவே மாமனிதர்

ஆனால் அவரது அரசியலை அவரது சமநிலையின்மையையும் கருத்தில்கொண்டே புரிந்துகொள்ளவேண்டும். எப்போதும் மிகையான உணர்ச்சிக்கொந்தளிப்புடன் எதிர்வினையாற்றி, கடுமையான சொற்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைப்பவராகவே அவர் இருந்திருக்கிறார். காந்தியைப்பற்றி மட்டும் அல்ல இந்து சட்டம் நிறைவேறத் தாமதமானபோது அவர் நேருவையும் கீழ்த்தரமனா மதவெறியன் என குற்றம்சாட்டியிருக்கிறார். அவரது தலித் அரசியல் தரப்பைச் சேர்ந்த எம்.சி.ராஜாவையும் வசைபாடியிருக்கிறார்.

நான் எப்போதுமே இருதரப்புகளையும் சொல்கிறேன். இதில் ஒரு தரப்பை எடுத்துக்கொண்டு ‘நீ இவரை திட்டுகிறாய்’ என்றவகை எதிர்வினைகளையே க்ண்டுகொண்டிருக்கிறேன். நான் அம்பேத்கரை சிறுமைசெய்கிறேன் என குற்றம்சாட்டி எழுதப்பட்ட இரு நூல்கள் வெளிவந்துள்ளன.

என் எழுத்தின் பாதிப்பங்கு வரலாற்று ரீதியான ஒரு சிக்கலான முழுமையான சித்திரத்தை அடையும்பொருட்டு செலவிடப்படுகிறது. எஞ்சிய பங்கு அதை ஒற்றைவரிகளாக எளிமைப்படுத்துபவர்களுக்கு விளக்கமளிக்கச் செலவிடப்படுகிறது

*

இந்தியாவில் கிறித்தவ,இஸ்லாமிய,இடதுசாரி, திராவிடத் தரப்பு காந்தி பற்றி, இந்தியாவின் நவீனத் தேசிய உருவகம் பற்றி கொண்டிருக்கும் பிழைபட்ட புரிதலை, அவர்கள் உருவாக்கும் திரிபுகளை அவற்றின் விளைவான பேரழிவையே நான் சுட்டிக்காட்டுகிறேன். அவை இங்கே வாழும் ஒவ்வொருவரும் நேரில் காணும் அனுபவங்கள். அவர்கள் தங்கள் குறுகல்நோக்கிலிருந்து வெளிவர தங்களைப்போன்றவர்களின் எழுத்துக்கள் உதவட்டும்

*

மற்றபடி பொதுத்துறைகளையும் பொதுக்கல்வித்துறையையும் வளர்த்ததில் நேருவின் சாதனையை நீங்கள் எழுதியிருப்பதை விடவும் தீவிரமாக நானே எழுதிவிட்டிருக்கிறேன். நவீன ஜனநாயகத்தின் தூண்களாக இன்றிருக்கும் அமைப்புக்களை உருவாக்கியதில் நேருவுக்கு இருக்கும் பங்களிப்பை நீங்கள் எழுதியதை விடவும் தீவிரமாக எழுதியிருக்கிறேன். நீங்கள் எழுதியிருப்பதில் பெரும்பகுதி என்னை ஒரு முன்முடிவுடன் வகுத்துவிட்டு நான் இப்படியெல்லாம் சொல்வேன் என நீங்களே உருவாக்கிக் கொண்டதுதான். நான் அவற்றுக்கெல்லாம் நேர்மாறாகத்தான் பேசியிருக்கிறேன்

காந்தியின் பாலியல் நோக்கை நான் நியாயப்படுத்துகிறேன் என்கிறீர்கள், அவற்றை முழுமையாக நிராகரிக்கிறேன் என்று திட்டவட்டமாகவே எழுதியிருக்கிறேன். அவை காந்தியின் அரைகுறைப்புரிதல்கள் என்றே பலமுறை சொல்லியிருக்கிறேன். மறுபக்கம் நேருவைப்பற்றிய மத்தாயின் நூலை எழுதும்போது அது ‘அடைப்பக்காரன்’ எழுதிய வம்பு வரலாறு என்றுதான் சொல்கிறேன். ஆனால் அத்தகைய கிசுகிசு வரலாற்றில்கூட மாபெரும் ஜனநாயகவாதியாக மட்டுமே வெளிப்படுகிறார் நேரு, அது மிகப்பெரிய சாதனை என்றுதான் சொல்கிறேன்.

ஒட்டுமொத்தமாக உங்கள் கட்டுரை என்பது நீங்கள் என்னைப்பற்றி முன்முடிவுகளுடன் உருவாக்கிக்கொண்ட ஒற்றைவரிகளின் தொகுதி. நீங்கள் புரிந்துகொண்டதற்கு நேர் எதிராகத்தான் பக்கம்பக்கமாக எழுதியிருக்கிறேன்.

இந்த நீண்ட பதிலையும் நான் உருவாக்கும் விரிவான வரலாற்றுச் சித்திரம் ஒற்றை வரிகளாகச் சுருக்கப்படுவதற்கு எதிரான பதில் என்ற வகைக்குள் அடக்கலாம்

ஜெ

அடிக்குறிப்புகள்
===================

முந்தைய கட்டுரைகள்

கோட்சே வீரவழிபாடு

காந்தி கோட்ஸே ஐயங்கள்

இந்துத்துவம் காந்தி

*

நேரு

நேருவும் பட்டேலும் மதச்சார்பின்மையும்

சுதந்திரமும் கனவும்

காந்தியின் சிடர்களின் செல்வம்

*
வாழ்க்கை என்பது ஒரு தீராத அறிதல். ஆகவே ஒரு தீராத போராட்டம். ஆனால் அதேசமயம் அது கொண்டாட்டமும் கூடத்தான். கலை, இலக்கியம், இயற்கை அளிக்கும் உவகை இல்லாமல் என்னளவில் வாழ்க்கை அர்த்தபூர்வமானதல்ல. ஆகவே நான் காந்தி முன்வைக்கும் காமம் குறித்த எல்லா கருத்துக்களையும் முதிராத கருத்துக்கள் என்று முற்றாக நிராகரிக்கிறேன்.

காந்தியும் காமமும்

*

நேருவைப்பற்றி

நேருவை நான் ‘கடவுள் நம்பிக்கை அற்ற’ நவீன இந்துவின் முன்னுதாரண வடிவமாகவே காண்கிறேன். இந்துப்பண்பாட்டுக்கூறுகளிலும் விழுமியங்களிலும் நம்பிக்கை கொண்டவர். சமரசநோக்குள்ளவர். புதியவற்றை நோக்கி எப்போதும் திறந்திருந்தவர். அறிவியலுக்கும் நவீன ஜனநாயகப் பண்புகளுக்கும் எதிராக பழமைப்பிடிப்பை நிறுத்தாமல் மரபை உள்வாங்கிக்கொள்வதற்காக மட்டுமே பழைமையை கவனித்தவர். எனக்கு ஏற்புடைய இந்து காந்தியைவிட நேருவே. அவரை ’ஜனாப்’ நேருவாக முத்திரையிடுகிறது இந்துத்துவத் தரப்பு
நேரு பட்டேல் விவாதம்

*

‘ஏன்னா காந்தி ஒரு இந்திய மைண்ட் செட் அப் உள்ளவர் இல்லை. அவரோட மனசு வெஸ்டர்ன் மனசு… ‘ ‘ சுந்தர ராமசாமியின் ஆச்சரியமளிக்கும் அவதானிப்புகளில் ஒன்று இது

காந்தியும் சுந்தர ராமசாமியும் விவாதம்
*

‘எனக்கு பெருமிதமாக இருக்கிறது. தனக்காக நேரு கையெந்தவில்லை, தன் மக்களுக்காக கையேந்தினார் அந்தப்பெரிய மனிதர். அப்படி ஒரு தலைவனை அடைந்திருந்தோம், அதற்கான தகுதி நமக்கிருந்தது என நான் விம்மிதம் கொள்கிறேன்’ என்று சொன்னேன்.

சங்குக்குள் கடல் தேசம் என்னும் தன்னுணர்வு

*
நேரு பட்டேல் மதச்சார்பின்மை

கல்விச்சாலையில் இந்திய மரபிலக்கியங்கள்

*

மத்தாயின் பார்வையில் நேரு பற்றிய கட்டுரை

ஆனால் மத்தாயின் நூல் நேருவை ஜனநாயகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மாபெரும் மனிதாபிமானியாகவே சித்தரிக்கிறது. அரசியல் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் தன் மனதுக்குப்பட்ட நியாயத்தையே நேரு செய்ததாகவும் அதை மீறி நடக்க நேர்ந்த சில அபூர்வ தருணங்களில் (உதாரணம் : கேரளத்தில் இ.எம். எஸ். நம்பூதிரிப்பாடு அமைத்த முதல் கம்யூனிச அரசைக் கவிழ்த்தது) அவர் மனம் புழுங்கியதாகவும் சொல்கிறார். அநீதியோ காழ்ப்போ தீண்டாத ஆளுமையாகவே இந்த கிசுகிசு வரலாற்றிலும் நேரு வெளிப்படுகிறார் என்பது ஓர் ஆச்சரியம். .
“எந்த மனிதனும் தன் வேலைக்காரன் முன் மாமனிதனாக இருக்க இயலாது என்று ஒரு கூற்று உண்டு. நான் உயிரோடு இருக்கும் வரை நேரு மாமனிதரென்றே சொல்லிக்கொண்டிருப்பேன்” என்கிறார் மத்தாய். அப்படி ஒரு மரியாதையை ஈட்டக்கூடிய மனிதர்கள் வரலாற்றிலேயே நூற்றாண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறப்பார்கள் என நான் எண்ணுகிறேன்.

எம்.ஓ.மத்தாய்- நினைவுகள் 1

எம் ஓ மத்தாய் நினைவுகள் 2

முந்தைய கட்டுரைஇரு முனைகளுக்கு நடுவே.
அடுத்த கட்டுரைஎன் உரை காணொளிகள்