கருத்துரிமைப்போராட்டம், பிரபஞ்சன், தோப்பில்…

நேற்று 25-1-2015 அன்று சென்னையில் நடந்த கருத்துரிமைப்பாதுகாப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டேயாகவேண்டும் என்று முடிவெடுத்தாலும் மறுநாள் காலை பத்துமணிக்கு நாகர்கோயிலில் இருந்தாகவேண்டும் என்பது இன்னொரு கட்டாயம். வேறுவழியில்லை.ஒரேநாளில் சென்று மீண்டுவர முடிவெடுத்தேன். ஆனால் ரயில் முன்பதிவு கிடைக்கவில்லை. வரவர நாகர்கோயில் சென்னை ரயில் முன்பதிவை பலமாதங்கள் முன்னரே முடிவெடுத்துச் செய்யவேண்டிய நிலை வந்துவிட்டிருக்கிறது. ஆகவே பேருந்து

download

அமர்ந்தே வேலைசெய்வதனால் இடுப்பு – முதுகுவலி இருந்துகொண்டே இருக்கிறது. வெண்முரசு ஆரம்பித்த பின்னர் இந்த உடல்நிலைச்சிக்கலும் தொடங்கியது. எதையாவது விலைகொடுத்துத்தானே ஆகவேண்டும் என எண்ணிக்கொண்டேன். கப்பலில் பணியாற்றும் ஷாகுல் ஹமீது என்ற நண்பர் வீட்டுக்கு வந்து சில பயிற்சிகளைச் சொல்லித்தந்தார். அவை உதவுகின்றன. ஆனாலும் தொடர்ந்து இரு இரவுகள் என்பது கொஞ்சம் கடினம். முடிவெடுத்தபின் தயங்கவேண்டாம் என்று கிளம்பிவிட்டேன்

சென்னையில் காலையில் அஜிதனின் அறைக்குச் சென்றேன். குளித்துவிட்டு அவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது அன்பு வந்தார். அவரது காரில் பிரபஞ்சனைப் பார்க்கச்சென்றேன். சமீபத்தில் இதயநோய் தாக்குதல் வந்து சிகிழ்ச்சை பெற்று மீண்டு வந்திருக்கிறார். சந்திக்கவில்லை. பிரபஞ்சன் அவரது பீட்டர்ஸ்காலனி வீட்டில் இல்லை. படி ஏறமுடியாது என்பதனால் திருவல்லிக்கேணியில் ஒரு மேன்ஷனில் இருந்தார். அங்கே சென்று அவரைப் பார்த்தேன்

வழக்கம்போல உற்சாகமாக இருக்கிறார்.நிறைய புத்தகங்கள் சூழ. பாண்டிச்சேரியை தமிழகத்துடன் இணைப்பதைப்பற்றி மொரார்ஜிதேசாய் ஆலோசித்தபோது எழுந்த எதிர்ப்பைப்பற்றி ஒரு நண்பர் எழுதிய நூலுக்கு முன்னுரை எழுதிக்கொண்டிருந்தார். அவரது சிகிழ்ச்சைக்கு பாண்டிச்சேரி அரசு பெரும் உதவிசெய்திருக்கிறது.நண்பர் பாலாவும் அவர் மனைவி விஜியும் வந்தனர். ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம்

தன்னுடைய இளமைநாட்களில் குடிக்க ஆரம்பித்து பின்னர் விட்டது தற்போது சிகரெட்டை விடுவதற்கான கடும் உழைப்பு என வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தோம். பிரபஞ்சனை உற்சாகமாக பார்த்தது நிறைவளித்தது.

அப்போது கல்வெட்டு பேசுகிறது ஆசிரியர் சொர்ணபாரதியும் அவரது நண்பr ஜலாலுதீனும் வந்தனர். அருகே இன்னொரு விடுதியில் தோப்பில் முகமது மீரான் இருப்பதாக சொன்னார்கள். தோப்பிலும் கொஞ்சநாளாக உடல்நலம் குன்றித்தான் இருந்தார். நெல்லை இந்து விழாவில் அவரைச் சந்தித்தாலும் அதிகம் பேசிக்கொள்ள முடியவில்லை.

ஆகவே அங்கிருந்து கிளம்பி தோப்பிலை அவரது அறையில் சென்று பார்த்தோம். தோப்பிலும் உற்சாகமாகவே இருந்தார். அவரது மலேசியத்தோழர் ஒருவர் எழுதிய நூலின் வெளியீட்டுக்காக வந்திருந்தார். அவரது மனைவியும் உடனிருந்தார். தோப்பிலுக்கு மூன்றுமுறை பக்கவாதத் தாக்குதல் வந்திருக்கிறது. காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது நலமடைந்திருந்தாலும் தளர்ச்சியும் இருக்கிறது

மதியம் அன்புவின் சப்வே உணவகம் சென்று சாப்பிட்டேன். அங்கிருந்து நேராக வடபழனியில் போராட்டம் நிகழும் இடத்துக்கு. செல்லும்போதே நல்ல கூட்டம் வந்திருந்தது. பல ஊர்களில் இருந்தும் நண்பர்கள் வந்திருந்தனர். கோணங்கி பிரகாசமாக வந்து வரவேற்றார். நிகழ்ச்சியின் அமைப்பாளர்களில் அவரும் ஒருவர். கௌதம் சன்னா லட்சுமி மணிவண்ணன் அசதா ஆகியோர் பிற அமைப்பாளர்கள்
unnamed
அனேகமாக தமிழின் அத்தனை இளையதலைமுறை எழுத்தாளர்களையும் பார்க்கமுடிந்தது. ‘இத்தனை எழுத்தாளர்கள் இதுக்கு முன்னாடி ஒண்ணாச்சேர்ந்ததில்ல. சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்திரப்போகுது’ என்று கோணங்கியிடம் சொன்னேன். இவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களின் சொந்த நூல் அல்லது நண்பர்களின் நூல்வெளியீடுகள் அன்றி எதற்கும் செல்லாதவர்கள் என்பதனால் பார்ப்பதும் கடினம். ஒவ்வொருவரையாக அறிமுகம் செய்துகொண்டு முகமன் சொன்னேன்

ஐந்துமணிக்கு அகல் ஏற்றலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஓவியர் சந்துரு ஞானக்கூத்தன் தலைமை வகித்தனர்.லட்சுமி மணிவண்ணன் தொகுப்புரை. லிபி ஆரண்யா வரவேற்புரை. அனேகமாக அத்தனை எழுத்தாளர்களும் பேசினர். சுருக்கமாக தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் உரைகள்.

எனக்கு ஏழேமுக்காலுக்கு திரும்புவதற்கான பேருந்து. ஏழுமணிக்குக் கிளம்பி கோயம்பேடு என்னும் ரணகளத்தில் தட்டழிந்து கிளம்பப்போகும் நேரத்தில் பஸ்ஸைப் பிடித்தேன். வாழைப்பழங்களை சாப்பிட்டுவிட்டு கண்கள் மேல் துவாலையைப் போட்டுக்கொண்டேன். இன்னொரு நினைவில் நிற்கும் நாள்.

முந்தைய கட்டுரைஸ்ரீவில்லிப்புத்தூர் வெள்ளை யானை விழா ஏற்புரை
அடுத்த கட்டுரைஇரு முனைகளுக்கு நடுவே.