நுண்ணுணர்வு என்பது…

மதிப்பிற்குரிய ஜெ,

வணக்கம்.தமிழ் மின்னிதழ் நேர்காணல் நன்றாக வந்துள்ளது.உங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து வாசிப்பதால் நிறைய அறிந்தவையே,என்றாலும் முழுத் தொகுப்பாக வாசிப்பது நல்ல அனுபவம்.

பெண்களின் அறிவுணர்வு பற்றி கூறியிருந்தீர்கள்.அருண்மொழி அவர்களின் ரசனை,நுண்ணறிவு குறித்து ,வான்காவின் ஓவியம்,(இம்ப்ரஷனிஸ்ட்)பற்றி கூறியது மிக அழகாக இருந்தது.அதுவே இதை எழுதத் தூண்டியது.

ஜெ, இத்தகைய மொண்ணைத்தனங்களில் ஆண்களும் அடங்குவர்.எண்ணிக்கை வேண்டுமானல் குறையலாம்.

இலக்கியவாசிப்பும் ,ஓரளவு நுண் ரசனையும் கொண்ட நான் இவற்றை கவனிப்பதுண்டு .பெண்கள் அவர்கள் வட்டத்தை தாண்டி வர விரும்புவதில்லை.சுய பிலாக்கணங்கள் அல்லது அவர்கள் பார்க்கும் குடும்ப உறவுகள்,பெருமைகள் ,புறணிகள் இவ்வளவு தான்.

. ஆண்களும் இதில் சளைத்தவர்களில்லை.போலி மேதாவித்தனங்கள்,ஏற்கனவே உருவாக்கிய முன் முடிவுகளுடன் அரசியல்,சுய புராணங்கள்,பொருளாதாரம் என்றே பெரும்பாலானவர்கள் உள்ளனர்.

பத்தாண்டுகளுக்கு முன் நான் இவர்களுக்கெல்லாம் விளக்கம் தர முயற்சித்ததுண்டு.இப்பொழுதெல்லாம் மௌனம் மட்டுமே .

சமீபத்தில் பணியிடத்தில்பெருமாள் முருகன் பற்றிய இத்தகைய பேச்சுகளைக் கேட்டேன் ….அப்பப்பா.கொஞ்சங்கூட இலக்கிய அறிமுகமே இன்றி கேணத்தனமான விவாதங்கள்.நான் சலித்துக் கொண்டே உங்கள் இணைய பக்கத்திற்கு வந்த போது தான் ,நீங்கள் ஜனநாயகத்தைப் பேணிப் பேணி என் தளமே நிறைந்து விட்டது என எழுதியதை வாசித்தேன்.வேலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த பயணத்தில் சத்தமாகச் சிரித்து விட்டேன்.

இப்படிப்பட்டவர்கள் எல்லா வயதிலும் இருக்கிறார்கள்.அதே போலத்தான் பகடிகளை இவர்கள் புரிந்து கொள்வதும்.உங்கள் எழுத்துகளை வாசித்திருந்தாலும் உங்கள் தொப்பி,திலகம் எழுத்துகளிலேயே நான் உங்கள் வாசகியானேன்.அதை ஜாலியாக நிறைய பேரிடம் அந்த வயது ஆர்வத்தில் சொல்லி நான் வாங்கிக் கட்டியதுண்டு.

நீங்கள் இதை நன்கு அறிவீர்கள். வெறும் வயது சர்வீஸ் மட்டுமே தகுதியாகக்கொண்டு பதவி உயர்வு பெறும் அதிகாரிகள் பற்றி.இவர்களின் கீழ் பணிபுரிவதே எனக்கு பல வேளைகளில் சலிப்பூட்டுவதுண்டு.இதில் இவர்களின் மொக்கைகளையும் ,அறிவு(!) பூர்வ பேச்சுகளையும் வேறு சகிக்க வேண்டும்.
இத்தகைய மொண்ணைத்தனங்களில் சலிப்புற்றே இலக்கிய வாசிப்பில் நுழைந்தேன் என்று எண்ணுகிறேன்.நான் வெண்முரசு வாசித்தால் பாண்டவர்களுடன் இடும்ப வனத்திற்கே சென்றவிடுவேன்,கிராவுடன் கரிசல் மண்ணிற்கும்,ஜேகேவுடன் கங்காவுடனும்,தி.ஜா வாசிக்கையில் பாபு ஜமுனாவுடன் காவிரிக்கும் ,விஷ்ணுபுரத்தில் சோனா நதியிலும் பயணிக்கும் இயல்புடையவள்.

மணிக்கணக்காக ,நாட்கணக்காக வாசிப்பிலும்,
அவை பற்றிய சிந்தனைகளிலும் மூழ்கி கண்ணீரிலும்,களிப்பிலும்,உணவும்,உறக்கமும் மறந்து இருக்கும் மனநிலை எனக்குண்டு.உங்கள் எழுத்துகளை வாசித்த பிறகே பிறழ்வு போன்ற நிலை வாசிப்பில் உண்டு எனஅறிந்து சமாதானமடைந்தேன்.

என் வாழ்வில் தீவிரமான ஒரு காலகட்டத்தில் அவமானங்களும்,கண்ணீர்களும் சூழ ,இருளில் வாழ்வை முடித்துக் கொள்ளும் அதிக மன அழுத்தத்தில் நானிருந்த நிலையில் என்னைக் காத்தது வாசிப்பன்றி எதுவுமில்லை.

என் முதல் குழந்தையைக் கருவுற்றிருந்த போது,அவளின் முதல் அசைவினைஉணர்ந்த கணம் என் மனதில் இன்னுமிருக்கிறது.அது எவரிடமும் முழுமையாய் பகிர இயலா என் அந்தரங்கமல்லவா?அத்தகைய சிலிர்ப்பையே சிறந்த படைப்புகள் ஏதேனும் ஒரு நொடியில் தருவதுண்டு. இப்படிப்பட்ட வாசிப்பனுபவங்களே அன்றாட வாழ்வின் சலிப்புகளிலும்,இத்தகைய மனிதர்களிடமிருந்தும் காப்பாற்றுகிறது என்று எண்ணுகிறேன்.
நன்றி

எம்

அன்புள்ள எம்

உண்மைதான் இங்கே நுண்ணுணர்வு என்பதற்கே பொருளில்லாமல்தான் உள்ளது. நுண்ணுணர்வு என்பது இயல்பிலேயே வருவது. அதை அனைவரிடமும் எதிர்பார்க்கமுடியாது. ஆனால் அப்படி இயல்பிலேயே நுண்ணுணர்வுள்ள ஒருவர் சூழல் சார்ந்து வாசிப்பும் சிந்தனையும் கொண்டு எழுந்துவருவதற்கான வாய்ப்புகளே நம் குடும்பச்சூழலில், கல்விச்சூழலில், நட்புச்சூழலில் இல்லை.

பலநண்பர்கள் இதைச்சொல்லக்கேட்டிருக்கிரேன். இணையம் போல உலகளாவிய வலையில் இணையும்போது சமானமான மனங்களை, நுண்ணுணர்வாளர்களை அதிகம் சந்திக்கமுடியும் என்று.ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் அவர்கள் இணைய அனுபவமும் காட்டியது என்று. அங்கும் இதே சில்லறை சினிமா, அரசியல் அரட்டைகள் ‘கலாய்த்தல்கள்’ . மொண்ணையான அரசியல் பேச்சுக்கள்

இதை நம் பண்பாட்டின் இன்றைய சூழல் என்று மட்டுமே எண்ணமுடியும்

ஜெ

முந்தைய கட்டுரைஎனது அரசியல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 4