«

»


Print this Post

மனிதாபிமான வணிகம்


தங்கள் பழைய கீதை உரைகளைத் தற்போது வாசித்து வருகிறேன். சங்கடமான கேள்விகள் தோன்றுகின்றன. காலங்காலமாய்க் கேட்கப்பட்டவைதான், இருந்தும் விடைகள் திருப்தி அளிப்பதாக இல்லை. இத்தனை ஞானம் பிறந்த மண்ணில் இப்படிச் சொல்லொண்ணா வறுமையும் இன்ன பிற துன்பங்களும். என்னுடன் பணியாற்றும், அடிக்கடி வேலை நிமித்தமாக இந்தியா செல்லும், அமெரிக்க நண்பர் கேட்டார், “சுனாமிப் பேரழிவின்போது ஏன் திருப்பதி போன்ற கோடிகள் குவிந்திருக்கும் கோவில்களிலிருந்து ஒரு பிடி அரிசி கொடுக்கக் கூட மனம் வரவில்லை? வைணவ, சங்கர மடங்கள் என்ன செய்தன? ஆனால் உதவப் போகும் ‘மதமாற்றி’ கிறித்துவர்களை மட்டும் ஏன் தூற்றுகிறீர்கள் ?” என்னிடம் எதற்கும் விடை சொல்லும் விஷய ஞானமும், முகமும் இல்லை.

baski
[email protected]

அன்புள்ள பாஸ்கி,

உங்களை விட விஷயஞானம் இல்லாதவர்களால் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அல்லது ஐயங்கள் அவை என்பதை முதலில் சொல்ல விரும்புகிறேன். உங்கள் அமெரிக்க நண்பர் அவரது மதமாற்றி நண்பர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்களை நம்பி சொல்கிறார். அப்படிச் சொன்னால் மட்டுமே அவரால் மேற்கொண்டு பணம் கொடுக்க முடியும்.

உங்கள் முதல் கேள்வி. இந்திய நிலத்தில் உலகின் மெய்ஞானம் முதிர்ந்த மூன்று மதங்கள் உருவாயின. இந்து, பௌத்த, சமண மதங்கள். பழங்குடித்தொகையாக இருந்த இந்த நிலத்தை பேரழிவுகள் இல்லாமல் ஒரு பண்பாட்டுவெளியாக அவை மாற்றின.

உலகில் பெரும்பண்பாடுகள் நிகழ்ந்த எந்த ஒருநாட்டிலாவது அவர்களின் அனைத்துப் பழங்குடிகளும், அத்தனை சிறு பண்பாடுகளும் அழியாமல் இன்றும் நீடிக்கின்றன என்றால் அது இந்தியாவில் மட்டுமே.

இதற்கு ‘மதசார்பற்ற’ நிபுணர்களின் சான்றிதழ் வேண்டும் என்றால் டி.டி.கோஸாம்பியின் ஆய்வுகளை வாசியுங்கள். எப்படி இந்த மாபெரும் சமரசவளர்ச்சி நிகழ்ந்தது என மிகமிக விரிவாக விளக்குகிறார் அந்த மார்க்ஸிய அறிஞர்.

அந்தப் பண்பாட்டு வளர்ச்சியினால்தான் இது குறைந்தது ஆயிரத்து ஐநூறு வருடங்களாக கல்வியும் கலைகளும் செல்வமும் செழித்த நிலமாக இருந்தது. உலகமே இந்த நிலத்தை தன் கனவுபூமியாக எண்ணியது. இங்கிருந்து சிந்தனை உலகமெங்கும் சென்றது.

அதன்பின்னர் ஒரு மாபெரும் வீழ்ச்சியின் காலகட்டம். இந்த வீழ்ச்சிக்கான காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். நான் ஊகிக்கும் முக்கியமான காரணம் இந்தியாவின் பண்பாட்டு வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்த அதே விஷயமே மாறிவிட்ட காலகட்டத்தில் அரசியல் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது என்பதுதான்.

அதாவது, தன்னை மையம் நோக்கிக் குவித்துக் கொள்ளாமல் இருப்பது இந்திய இயல்பாக இருந்தது. எல்லா தளத்திலும் பன்மைத்தன்மையை அது அங்கீகரித்தது. பிரிந்து பிரிந்து வளர்வதே அதன் இயல்பு. இன்றுவரை அப்படித்தான். ஆகவே உறுதியான ஒற்றையமைப்புகள் இங்கே உருவாகவில்லை.

தன்னை உறுதியான ஒற்றையமைப்பாக திரட்டிக்கொண்டு மூர்க்கமான போர்வல்லமையுடன் வந்த தாக்குதல்களை எதிர்கொள்ள இந்தியாவால் இயலவில்லை – அரசியல் ரீதியாக. முதலில் இஸ்லாமிய படையெடுப்புகள். பின்னர் பிரிட்டிஷ் ஆதிக்கம். பண்பாட்டு ரீதியான பன்மை இந்தியாவை அரசியல் ரீதியாகவும் பன்மையாகவே வைத்திருந்தது.

ஏறத்தாழ ஐநூறு வருடம் இந்திய நிலம் அரசியல் அடக்குமுறைக்கு எதிராகப் போராடியிருக்கிறது. இந்தியா எப்போதுமே முழுமையாக அடிமையாக இருந்ததில்லை. இந்திய நிலத்தில் எந்தக் கணத்திலும் மாபெரும் அரசியல் எதிர்ப்பு நிகழ்ந்துகொண்டுதான் இருந்தது. ஆகவே ஒருபோதும் போர் ஓய்ந்ததில்லை.

அதைவிட தீவிரமாக பண்பாட்டு எதிர்ப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. அதி உக்கிரமாக பண்பாட்டு அடக்குமுறை நிகழ்ந்த காலகட்டத்தில்தான் இந்தியாவில் பண்பாட்டு மறுமலர்ச்சி நிகழ்ந்தது என்பது வரலாறு.

இஸ்லாமிய ஆட்சியின்போது இஸ்லாமிய ஆட்சியை எதிர்த்து உருவான நிலங்களை நோக்கி குடிபெயர்ந்த அறிஞர்களால்தான் வேதாந்தமும் பக்தியும் புத்துயிர்கொண்டன. சாயனர் போன்றவர்களால் வேதங்கள் முழுமையாக உரையுடன் மீட்கப்பட்டது விஜயநகர ஆட்சியிலேயே. மத்வர் பாஸ்கரர் போன்ற தத்துவமேதைகள் அப்போதுதான் உருவானார்கள்.

அதுதான் பிரிட்டிஷ் ஆட்சியிலும். இந்தியாவின் தனித்தன்மையும் கடந்தகாலச் சிறப்புகளும் முழுமையாக மறுக்கப்பட்ட காலகட்டத்தில்தான் சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், நாராயணகுரு விவேகானந்தர் போன்றவர்களால் இந்து ஞானமரபு தன்னை மறு ஆக்கம் செய்துகொண்டு எழுந்தது.

ஓயாதபோர்கள் வழியாக உடைந்து சிதிலமாகிக்கிடந்த இந்திய நிலம் பிரிட்டிஷ் ஆட்சியால் முழுமையாகவே பொருளாதார ரீதியாகச் சுரண்டப்பட்டது. இந்தியாவிலிருந்த உபரிசெல்வம் முழுக்க உறிஞ்சி எடுக்கப்பட்டது. இந்தியாவில் பிரிட்டிஷார் வந்த பிறகுதான் இன்று ஆப்ரிக்காவில் நிகழ்வதுபோல லட்சக்கணக்கில் மக்கள் இறந்த மாபெரும் பஞ்சங்கள் நிகழ்ந்தன. கோடிக்கணக்கில் மக்கள் தங்களையே அடிமைகளாக விற்றுக்கொண்டார்கள்.

1947ல் நாம் சுதந்திரம் அடைந்தபோது நம்மிடம் எஞ்சியது ஒரு பிச்சைக்கார தேசம். வெள்ளையர் செல்லும்போது பெரும் பஞ்சத்தில் நம்மை விட்டுச்சென்றார்கள். 1943 முதல் வட இந்தியாவில்  ஆரம்பித்த பஞ்சம் 1950களில்தான் கட்டுக்கு வந்தது. அத்துடன் அரசியல் நிலையில்லாமை. இந்தியாவை இரண்டாகப் பிளந்து மதமோதல்களின் நடுவே நம்மை விட்டுச்சென்றார்கள் வெள்ளையர்.

அனைத்துக்கும் மேலாக இந்தியாவை அவர்கள் ஒரேநாடாக விட்டுச்செல்லவில்லை, சம்ஸ்தானங்களுக்குச் சுதந்திரம் அளித்து, தனிநாடாகப் போகும் படி ஊக்குவித்து, ஒரு மாபெரும் அராஜகத்துக்கு வழிகோலிவிட்டுச் சென்றார்கள். இன்று பல ஆப்ரிக்க நாடுகளில் நிகழ்வது போல மாபெரும் உள்நாட்டு போர்களில் நாம் செத்து அழிவோம் என எதிர்பார்த்தார்கள்.

இந்தியா அந்த அராஜகங்களை அன்று எதிர்கொண்டமைக்கு ஒரே காரணம் அன்று இந்தியமக்கள் மானசீகமாக ஒன்றாக இருந்தார்கள் என்பதே. அந்த ஒற்றுமையை நிகழ்த்தியது இங்கே இருந்த பண்பாட்டு ஒற்றுமை. அது இந்து,சமண,பௌத்த மதங்களால் பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டு மக்களின் ஆழ்மனதில் நிலைநாட்டப்பட்டது. தனிந்தன்மைகளை தக்கவைத்துக்கொண்டே ஒன்றாக இருக்கும் தத்துவமும் மனநிலையும் அம்மதங்களின் கொடை

அந்த பஞ்சத்தில் இருந்து , அராஜகத்தில் இருந்து, இந்த அறுபது வருடத்தில் நாம் இன்றிருக்கும் இடத்துக்கு வந்ததே ஒரு சாதனைதான். சர்வாதிகாரமும் அடக்குமுறையும் இல்லாமல், ரத்த ஆறு ஓடாமல் இங்கே வந்திருக்கிறோம். இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும், ஆனால் இதுவரை வந்ததே சாதாரணமல்ல

இதற்கிணையான இன்னொரு சாதனையை நீங்கள் சுட்டிக்காட்ட முடியுமா என்ன? அமெரிக்கா அதன் பூர்வகுடிகளை வேருடன் பிடுங்கி வீசி இனநாசம் செய்து உருவானது. இயற்கையை அழித்து இன்றிருக்கும் நிலையை அது அடைய வறுமையும் அராஜகமும் நிறைந்த 100 வருடம் தேவையாகியது.  உலகைச் சுரண்டிக் குவித்த பிரிட்டன் அதன் வறுமையை கடைசிவரை ஒழிக்காமல் இன்றும் வைத்திருக்கிறது.
இந்தியாவை நாம் விமர்சிக்கலாம். ஆனால் நம்மை நோக்கி கைச்சுட்டிப்பேசும் தார்மீகமேதும் இவர்களுக்கு இல்லை.

கடைசியாக சுனாமி விவகாரம். ஒன்று, இந்த மதமாற்ற நிறுவனங்கள் இங்கே கொண்டு வரும் பணம் கடந்த காலங்களில் அடக்குமுறை மூலம் சுரண்டல் மூலம் மோசடிகள் மூலம் இங்கிருந்தே கொண்டுசென்றதன் சிறு பகுதி மட்டுமே. அவர்கள் தங்கள் மண்ணில் ‘நெற்றி வேர்வை சொட்டி’ உழைத்துச் சம்பாதித்தது அல்ல அது.

இரண்டு, அப்படி பணம் கொடுக்கும்போதுகூட மனிதாபிமானத்தால் கருணையால் கொடுக்க மனம் வரவில்லை. மதம்மாறவேண்டும் என்ற நிபந்தனையில்லாமல் பத்து பைசா அளிக்கக்கூட இவர்களின் கை நீளவில்லை. அப்படியானால் அது வணிகம். பணம் கொடுத்து மக்களை வாங்குகிறார்கள். இந்த முதலீடு நாளைக்கு ஒட்டுமொத்தமாக லாபம் தரும் என்று நினைக்கிறார்கள்.

அதை வணிகம் என்று சொல்லுங்கள். புனிதர் கிறிஸ்துவுக்காக இந்த பேரத்தை நிகழ்த்துவதாகச் சொல்லாதீர்கள். அந்த மகத்தான கருணையை இப்படிச் சிறுமைப்படுத்தாதீர்கள். மனிதாபிமானம், கருணை  என்ற சொற்களை தயவுசெய்து சொல்லும் தகுதி இந்த மதமாற்றிகளுக்கு இல்லை. அவர்களுக்கும் கிறிஸ்துவுக்கும் சமபந்தமில்லை.

உங்கள் தங்கையை பணம் கொடுத்து ஒருவன் பெண்டாளுகிறான் என்றால் அதை அவன் அளிக்கும் மனிதாபிமான நிதியுதவி என்றா கொள்வீர்கள்?

சுனாமி விவகாரத்தில் என்ன நடந்தது என தெரியுமா? இங்குள்ள கிறித்தவ அமைப்புகள் சுனாமி நிவாரணத்துக்காகச் செலவிட்ட தொகையைவிட பற்பல மடங்கு அதிகம் தொகை இந்து அமைப்புகளால் செலவிடப்பட்டது. திருப்பதி தேவஸ்தானமே பலகோடி ரூபாய் பணம் செலவிட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் கணிசமானோர் கத்தோலிக்கர்கள். தமிழகத்தில் கத்தோலிக்க நிறுவனங்களின் சொத்துமதிப்பு மட்டும் ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் என்கிறார்கள். ஐநூறு திருப்பதிக்குச் சமம். ஆனால் இந்து நிறுவனங்கள் கத்தோலிக்க அமைப்புகளை விட அதிக பணம் செலவிட்டன என்பதே உண்மை.

கிறித்துவ அமைப்புகள் தங்கள் மதமாற்ற நிறுவனங்கள் மூலம் இங்கே கொண்டு வந்த பணத்தில் பெரும்பகுதி எங்கே சென்றதென்றே தெரியவில்லை. நேர்மையான எந்த கிறித்தவரிடமும் கேட்டுப்பாருங்கள். அவற்றுக்கு முறையான கணக்குகள் கிடையாது. சிறுபான்மை உரிமை காரணமாக கணக்கு கேட்க முடியாது.

அவர்களுக்கு நடுவே நிகழும் மோதல்களால் கோடிக்கணக்கில் நிதி மோசடி நிகழ்ந்த தகவல்கள் நாளிதழ்களில் வந்தபடியே இருக்கின்றன. இதில் மீனவர்களை வெறுக்கும், ஒருநாள்கூட சுனாமி நிவாரணத்துக்கு வராத, சி.எஸ்.ஐ நிறுவனங்கள் கூட கோடிக்கணக்காக நிதி வசூல் செய்திருப்பது செய்திகளில் வெளிவந்தது!

உங்களுக்கு ஒரு தகவல். சுனாமி மீட்புக்கு மிக அதிகமாக நிதி செலவிட்டவர் மாதா அமிர்தானந்த மயி. அவரளவுக்கு அரசு கூட செலவிடவில்லை. கன்யாகுமரியில் கத்தோலிக்க கிறித்தவர்கள் தங்கள் மத அமைப்புகள் தங்களை கைவிட்டுவிட்டார்கள் என்று அவரிடம் வந்து மன்றாடிய நிகழ்ச்சி கூட நிகழ்ந்தது.

உண்மையில் சுனாமி ஒரு மதமாற்றச் சுனாமியை உருவாக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.  மாதா அமிர்தானந்தமயி, சாயிபாபா, ரவிசங்கர் போன்ற இந்து அமைப்புகள், பல்வேறு தொழிலதிபர்கள், அமுல் போன்ற நிறுவனங்கள் ஆற்றிய பங்களிப்பால் அது நிகழவில்லை. இதுவே உண்மை. இந்த உண்மைக்கு எதிராகவே இப்போது அவதூறு கக்குகிறார்கள்.

உங்கள் அமெரிக்க நண்பரிடம் ஒன்று சொல்லுங்கள். கத்ரீனா புயலினால் பாதிக்கப்பட்ட கறுப்பர்களுக்கு நிவாரணம் அளிக்க அங்குள்ள அமைப்புகள் காட்டிய மெத்தனத்தில் நூறில் ஒரு பங்குகூட இங்கே நிகழவில்லை என. சுனாமி வீசிய மூன்று மணிநேரத்தில் மொத்த இந்தியாவே கண்ணீருடன் வந்து மீனவர்களுக்கு துணையாக நின்றது. உணவோ உடையோ நிவாரணமோ பதினைந்து நிமிடங்களேனும் தாமதிக்கவில்லை என களத்தில் நின்ற நான் சொல்கிறேன்.

ஒருமாதத்தில் சுனாமியின் தடயமே இல்லாமல் நம் கடற்கரைகள் மீண்டன. இன்று நம் கடற்கரையின் முகமே மாறிவிட்டது தெரியுமா? இன்று கட்டுமரம் என்ற ஊர்தியே காலாவதியாகிவிட்டது.  சாதாரண மீனவர்கள் இரண்டு மூன்று பைபர் படகுகள் வைத்திருக்கிறார்கள். மேலோட்டமாக கடற்கரையை பாருங்கள் தெரியும். அவையெல்லாம் எந்த மதமாற்ற சக்திகளும் கொடுத்தவை அல்ல. இந்தியாவின் தொழில் நிறுவனங்களும் இந்து-பௌத்த-சமண மத நிறுவனங்களும் அளித்தவை.

உங்கள் நண்பரிடம் கேளுங்கள், ஏற்கனவே மதம் மாறிய கறுப்பு அமெரிக்கர்கள் புயலில் நடுத்தெருவில் கிடந்தால் கிறித்தவ மனிதாபிமானம் உதவாதா என்று. மதம் மாறாதவர்கள்பால் மட்டுமே அந்தப் பணம் பாயுமா என்று.

உங்களுக்கு தெரிந்திருக்கும் இந்து அமைப்புகள் எவற்றிடமும் பணம் இல்லை என்று. சபரிமலையோ பழனியோ காசியோ எல்லா பணமும் அரசுகளால் எடுக்கப்பட்டு கஜானாவில் சேர்க்கப்படுகின்றன. திருப்பதி தேவஸ்தானத்தின் பணமும் பெரும்பகுதி அரசு கஜானாவுக்குத்தான் சென்றுகொண்டிருக்கிறது. மிச்சபணத்தில் அது முந்நூறுக்கும் மேற்பட்ட கல்விநிறுவனங்களை நிகழ்த்துகிறது.

பணம் தேங்கிக்கிடக்கும் எந்த இந்து அமைப்பும் இன்று இல்லை. அமிர்தானந்தமயி சுனாமிக்காக தான் திரட்டிய பணத்தை தன்னிடம் தரவேண்டாம், நேரடியாகச் செலவிடுங்கள் என்றுதான் சொன்னார். அந்தப் பணத்தை ‘பிச்சை’ என்றுதான் அவர் குறிப்பிட்டார்.

இந்து,பௌத்த,சமண அமைப்புகள் தன் பணத்தை தன் மக்களுக்காகத்தான் செலவழிக்கின்றன. சுனாமிக்குச் செலவழிக்காமல் அமெரிக்கா வந்து கத்ரீனா புயலில் சிக்கிய கிறித்தவ கறுப்பர்களை மதம் மாற்றச் செலவழித்திருந்தால் உங்கள் நண்பர் என்ன சொல்வார்?

ஜெ

சுனாமி : மீட்சியின் இதிகாசம்

சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்

மூதாதையர் குரல்

அள்ளிப் பதுக்கும் பண்பாடு

பண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா?

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7059

40 comments

1 ping

Skip to comment form

 1. gomathi sankar

  சற்று அதிக கடுமையுடன் எதிர் வினையாற்றி விட்டதுபோல் தோன்றுகிறது

 2. Vino Kingston

  சரியாக சொன்னீர்கள்…அறுபது ஆண்டுகளில் நம் நாடு சாதித்ததை புரிந்து கொள்ளதவர்களுக்கும் , புரியாதது போல் நடிப்பவர்களுக்கும் இதை விட சிறந்த விதமாக இந்தியாவின் பெருமையை விளக்க முடியுமா என்ன? நம் நாட்டில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் கொஞ்சம் பேராசை குறைந்து, கொஞ்சம் சுய மரியாதை (ஸெல்ப் எஸ்டீம்) வந்து விட்டால், இந்திய சுவர்க்கம் தான்

 3. pearlson

  நல்லா இல்லை தலைவா. ரொம்ப சராசரிய இருக்கு? நீங்கள் RSS தான?

 4. baski

  அன்புள்ள ஜெமோ,
  என்னுடைய கேள்விகள் உங்களிடமிருந்து இப்படி ஒரு கட்டுரையைப் பெற்றுத் தந்தது உண்மையில் எனக்கு மகிழ்ச்சியே. சிரத்தை எடுத்து சந்தேகங்களைத் தீர்த்ததற்கு நன்றி. கட்டுரையில் கொடுக்கப்பட்ட சுட்டிகளை எல்லாம் இப்போதுதான் பார்க்க நேர்ந்தது. நான் படித்ததெல்லாம் மஜூம்தார் போன்றோர் எழுதிய அரசியல் வரலாறுகள்தான். போன மாதம் டெக்சாசின் கல்வித் துறையில் தீவிர மதச்சார்புடைய உறுப்பினர்களால், பள்ளிக்கூட வரலாற்றுப் பாட நூல்களில், ஆவணபடுத்தப்பட்ட நிகழ்ச்சிகளே சிதைக்கப்பட்டு, மதத்துக்குத் தோதாகக் திரிக்கப்பட்ட அவலம் நிகழ்ந்தது. என் குழந்தையை இங்குத் தொடர்ந்து படிக்க வைக்க வேண்டுமா என்றும் தோன்றுகிறது.
  இந்துக் கோயில்களின் வருமானம் அரசுக்கருவூலத்துக்குப் போகிறது என்ற அடிப்படை விஷயம் கூட எனக்குத் தெரியவில்லை. தில்லை போன்ற இடங்களிலும் இப்படித்தானா?

 5. ஜெயமோகன்

  ஆர் எஸ் எஸ் என்றால் ஆமாம் என்று சொல்ல கொஞ்சமும் தயக்கம் இல்லை பேர்ல்ஸன். ஆனால் முடியவில்லை என்பதே உண்மை. நான் சொன்னது உண்மையா என்பது மட்டுமே இங்கே முக்கியம்

 6. baski

  திரு வினோ,
  என் சந்தேகம், திருப்பதி போன்ற கோயில்கள் ஏன் உதவவில்லை என்ற பிறரின் கேள்விக்கு பதில் தெரியாததுதான். “நம் நாடு சாதித்ததை புரிந்து கொள்ளதவர்களுக்கும் , புரியாதது போல் நடிப்பவர்களுக்கும்…” என்ற வாதம் இதில் எங்கே வந்தது? பல்லாண்டுகளாக புலம் பெயர்ந்து வாழ்வதால் இந்தியா குறித்த பெருமையும் ஏக்கமும் எங்களைப் போன்றோருக்கு அதிகம் உண்டு. நேரமிருந்தால் என் தளங்களைப் பார்க்கவும்.
  அன்புடன் – பாஸ்கர்
  http://baski-reviews.blogspot.com

 7. ஜெயமோகன்

  இந்தியா முழுக்க எங்குமே இந்துக்கோயில்கள் அரசுக்குத்தான் சொந்தம். தில்லையிலும்கூடத்தான். நீங்கள் ஒரு தனியார் கோயிலை ஆரம்பித்து நடத்தி அதன் வருமானம் ஓர் எல்லையை கடந்தால் அதுவும் அரசால் ஏற்கப்பட்டுவிடும். சில டிரஸ்ட் கோயில்கள் சட்டவிதிகளின்படி தப்பித்துக்கொள்ளும்

  கேரள அரசின் 20 சத வருமானமே சபரிமலை மற்றும் குருவாயூர் காணிக்கையால்தான்!

  நீங்கள் நினைப்பதுபோல இந்து நிறுவனங்களில் பணம் கொட்டிக்கிடக்கவில்லை. மடங்கள் பெரும்பாலும் நிலங்களை நம்பி இருந்தவை. நிலங்கள் குத்தகைதாரர்களுக்கு அளிக்கப்பட்டபோது பெரும்பாலான இந்து மடங்கள் செயலிழந்துவிட்டன. சொற்பமான வாடகைகளால் அவை தாக்குப்பிடிக்கின்றன.

  கோயில்கள் இன்னமும் மோசம். கோயில் நிலங்களும் சொத்துக்களும் வாடகைக்காரர்களால் குத்தகைக்காரர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. நெல்லையப்பர் கோயிலுக்குச் சொந்தமாக 300 கடைகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக வாடகை வருமானம் என்பது வருடத்துக்கு 4000 ரூபாய். ஆமாம் பல கடைகளுக்கு வாடகை வ்ருமானம் மாதம் 15 ரூபாய். அவை மாதம் 30000 ரூபாய்க்கு மறு வாடகைக்கு விடப்பட்டுள்ளன! சமீபத்தில் ஒரு கோயில்நிர்வாக அதிகாரி வாடகைப்பணத்தை இரட்டிப்பாக்கினார். அதாவது 15 ரூபாயில் இருந்து 30 ரூபாய். அதற்கு எதிராக வணிகர்கள் சங்கம் வைத்து நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். ”அது எப்டீங்க ஒரேயடியா வாடகைய டபுள் ஆக்கலாம்?” என்று சங்கத்தலைவர் ஜூனியர் விகடனில் பேட்டி கொடுத்திருந்தார்

  மதுரை ஆலயம் நெல்லை ஆலயம் போன்றவற்றின் உட்பிரகாரங்களே அறங்காவலர்களான அரசியல்வாதிகளால் கடைகளாக ஆக்கப்பட்டுவிட்டன.

  இந்து மதம் அதன் சமயபரப்புக்கு, திருவிழாக்களுக்கு எதற்குமே பணமில்லாமல் கையேந்தும் நிலையிலேயே உள்ளது என்பதே உண்மை.

  ஜெ

 8. gomathi sankar

  ஆனால் இந்த செய்தி ஏன் மக்களிடம் சரியாக போய்ச் சென்றடைய வில்லை என்ற விஷயம் ஆய்வுக்கு உரியது எதிர் தரப்பு மிக வலுவான ஊடகங்களையும் பேச்சாளர்களையும் ‘அறிவுஜீவிகளையும் ‘ தனது பிடியில் வைத்திருக்கிறது இந்துமதத்தை காப்பாற்ற வந்திருக்கும் அமைப்புகளில் வலிமையான அறிவு ஆளுமை என்பதே ஏறக்குறைய இல்லை காட்டியர் போன்ற வெள்ளையர்கள் தான் அதற்கும் வரவேண்டி இருக்கிறது பொதுமக்கள் இருக்கட்டும் இந்த இயக்கங்களில் இருப்பவர்களின் அறியாமை அச்சமூட்டுகிறது நண்பர் பாஸ்கி போன்றவர்கள் கேள்வி கேட்கும்போது அவர்களால் சரியாக பதில் சொல்லமுடியாமல் விழிப்பதை பார்த்திருக்கிறேன் சராசரி இந்துவுக்கு இருக்கும் தத்துவ பின்புலம் கூட இவர்களுக்கு இருப்பது இல்லை

 9. va.srinivasan

  இதையெல்லாம் வெளிப்படையாக, பொதுவில் வைக்கும் துணிவும், தெளிவும் ஆச்சர்யப் பட வைக்கின்றன. வணிக, அசட்டு ஆத்திகமும், வறட்டு, வன்முறை நாத்திகமும் கோலோச்சும் கால கட்டத்தில் உங்கள் பணி மகத்தானது.

 10. sammuvam

  அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு

  கேள்வி கேட்டவரிடம் விஷய ஞானம் இல்லாமல் இருந்திருக்கலாம்.
  ஆனால், அதில் ஒரு முறை இருந்தது. உங்கள் பதிலில், விஷய ஞானமும்
  உண்மையும் இருந்திருக்கலாம். ஆனால் பதில் சொன்ன முறையில் அத்து
  மீறி இருக்கிறீரகள் என கருதுகிறேன்.

  சண்முகம்.

 11. Vino Kingston

  அன்புள்ள பாஸ்கி – நான் “நம் நாடு சாதித்ததை புரிந்து கொள்ளதவர்களுக்கும் , புரியாதது போல் நடிப்பவர்களுக்கும்…” என குறிப்பிட்டது உங்கள் கேள்வியை குறித்து அல்ல. ஜெயமோகன் அவர் பதில் கட்டுரையில் சுனாமி தாக்கத்திலிருந்து இந்தியா எந்த உதவியும் பிறரிடமிருந்து எதிர் பார்க்காமல் சுயமாக தேவைகளை சந்தித்தது என எழுதியிருந்தார்…நானும் நீங்கள் வசிக்கும் cypress ல் தான் வசிக்கிறேன்; பல இந்தியாவில் பிறந்து கல்லூரி படிப்பு வரை முடித்து, தொழிலுக்காக H1B ல் அமெரிக்க நாட்டுக்கு வந்த நண்பர்கள் இந்தியா குறித்து ஏளனமாக பேசுவார்கள் (அது பெற்ற தாய் குறித்து ஏளனம் செய்வது போல்) நான் அவர்களை குறித்து தான் சொன்னேன்…தவறாக தோன்றியமைக்கு வருந்துகிறோம்.
  அன்புடன்
  வினோ
  cypress TX

 12. tdvel

  பாஸ்கி அவர்களுக்கு. ஓரு கேள்விக்கு பொதுவில் வைத்து பதிலளிக்கும்போது அந்த பதில் கேள்வி கேட்டவருக்குமானது அல்ல. அப்போது இதைப்போன்ற கேள்வி கேட்கும் அனைவரையும் பொதுவாக்கி அதற்கான பதிலாக அது அமைகிறது. இத்தகைய ஒரு கேள்வியை அதிகமாக கேட்பவர்கள் பெரும்பாலும் இந்திய வரலாற்றின்மேல் தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள். இந்துமதத்தை இந்நாட்டின் குறையாய் காண்பவர்கள். ஆகவே இக்கட்டுரை சாடுவது அவர்களையே தவிர உங்கள் அல்ல என நான் கருதுகிறேன்.

 13. ஜெயமோகன்

  அன்புள்ள சண்முகம்
  நான் கேள்விகேட்ட பாஸ்கியை அல்ல அக்கேள்வியைக் கேட்கச் செய்த அயல்நாட்டவரின் மனநிலையைப்பற்றியே என் கசப்பை பதிவுசெய்திருந்தேன். அதை பாஸ்கி புரிந்துகொள்வார் என நினைக்கிறேன்

 14. motleyfool

  மிகவும் சரியான பதில். உங்கள் பதில் எங்களை எழுச்சி கொள்ள வைக்கிறது. நமது நாட்டை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது ஏராளம். உண்மையை சொல்ல R.S.S முத்திரை குத்தினாலும் ஒன்றும் இழப்பில்லை.

 15. Hari Venkat

  ஜெமோ,
  நல்ல பதிவு. தன் கலாச்சாரம் மற்றும் வரலாற்று வேர்களை அறியாத ஒவ்வொருவரும் சந்திக்கும் தடுமாற்றத்தை போக்கும் பதிவு. களத்தில் இருந்ததாக சொல்லியிருக்கிறீர்கள். அந்த தருணங்கள் குறித்து உங்களது பதிவை எதிர்பார்க்கிறேன். அந்தப் பதிவு இன்னும் பலருக்கு உபயோகமாக இருக்கும் என்று கருதுகிறேன். நன்றி.

 16. Hari Venkat

  உங்கள் அனுபவங்களை ஏற்கனவே பதிந்துள்ளதை நான் முன்பு கவனிக்கவில்லை. இப்போது தான் கவனித்தேன். நன்றி.

 17. sankar.manicka

  சூனாமிப் பேரலை அடித்துவிட்டுச் சென்றபின் களத்தில் இறங்கி வேலை பார்த்த ஆட்களில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் அதிகம். ஆனால் அச்சு, இணைய, ஒலி, ஒளி ஊடகங்கள் அவர்களைப் பற்றி வரும் செய்திகளை ஒதுக்கிவிட்டு, ஒரு கையில் பைபிளும் இன்னொரு கையில் புளியோதரை பாக்கெட்டுமாக அலையும் பாதிரிகளை பெருமையாகச் சித்தரித்ததனால் வரும் கேள்விகள் இவை.

 18. Vengadesh Srinivasagam

  ப்ரிய ஜெமோ சார்,
  தெளிவான, துணிவான பதிவிற்கு நன்றிகள்.

  ஒரு வாசகர் உங்களை RSS-ஆ என்று கேட்கிறார்; இன்னொருவர் உங்களை, ஆன்மீகக் கட்டுரைகள் வழியாக நைசாக நாத்திகத்திற்கு இட்டுச் செல்வதாகக் கோபப்படுகிறார்; என்ன ஒரு முரண்?

  உங்களின் ‘இங்கிருந்து தொடங்குவோம்’ கட்டுரை வழியாகவே நானும் தொடங்கினேன், நமது பண்பாட்டின் தேடலை.

 19. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெயமோகன்

  இந்து இயக்கங்களின் மானுட சேவையை இருட்டடிப்பு செய்வதும் சில காலங்களானதும் அந்த சேவைகளையெல்லாம் தாங்கள் மட்டுமே செய்வதாக சொல்வதும் மேற்கத்திய ஊடகங்களால் திட்டமிட்டு மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றன. இந்த திட்டமிட்ட செயல்பாட்டின் மிகச் சிறந்த ஆதாரம் டாமினிக் லாப்பயர். அவருடைய ஆனந்த நகரம் (City of Joy) ஒட்டுமொத்த இந்திய அரசும் இந்து சமுதாயமும் ஏழைகள் மற்றும் நகரத்து சேரி வாழ் மக்களை மனிதர்களாகக் கூட பார்க்காமல் அவர்களை சுரண்டி கொழுத்து வாழ்வதாகவும் தெரஸாவின் கன்னியாஸ்திரீகள் மட்டுமே கல்லாலடிக்கப்பட்டும் இந்த சேரி மக்களுக்கு அன்பு காட்டுவதாகவும் விவரித்திருப்பார். அதே சமயம் ராமகிருஷ்ண மடத்து துறவிகளின் காவி உடையணிந்த ‘வெறுங்கால் கருணை தேவதைகள்’ போன்ற அமைப்பினர் இந்திய காவல்துறையின் உதவியுடன் புயலால் அனாதையான குழந்தைகளை இந்த துறவிகள் எடுத்து விபச்சார விடுதிகளுக்கு விற்பதாக அவர் சொல்கிறார். போபால் விஷவாயு பேரழிவு நடந்து ஏறக்குறைய 25 ஆண்டுகள் கழிந்து அதே டாமினிக் லாப்பயர் எழுதிய நூலில் தெரசாவின் மிஷினரீஸ் ஆஃப் சாரிட்டியின் சேவைகளே ஒளிவட்டமிட்டு காட்டப்பட்டு இந்திய அரசும் அதிகாரிகளும் மிக மோசமாக வில்லத்தனமாக காட்டப்பட்டுள்ளன. இத்தனைக்கும் அன்று போபாலில் காப்பாற்றும் பணிகளில் துணிந்து இறங்கியது இந்திய ராணுவமும் ஆர்.எஸ்.எஸ்ஸூம்தான். இன்றைக்கு ஆங்கில பத்திரிகைகளிலெல்லாம் டாமினிக் லாப்பெயர்தான் ஏதோ இந்தியாவை விரும்பும் இந்தியாவுக்கு சேவையை கற்றுத்தரும் பெருமனிதராக சித்தரிக்கப்படுகிறார். என்ன செய்வது? இந்து சேவை அமைப்புகள் ஊடக ஒளிவட்டத்துக்கு தம்மை தயார்படுத்துவதுமில்லை. அவ்வாறு செய்வதற்கான உபரி பெருமுதலீடோ அல்லது விளம்பரத்தந்திரமோ அவர்களுக்கு தெரிவதுமில்லை.
  பணிவன்புடன்
  அரவிந்தன் நீலகண்டன்

 20. Narendran

  ஜ,
  kindly answer this question for me. Don’t you all the terrorist activity on india from pak (pakistan terrorist) is due to activities of the right wing hindu activist like RSS, Bajrang Dal, etc. Don’t these group alienate the muslim community of india.
  note: i follow hinduism religiously.
  I would love type this in thamizh but, i don’t know tamil typing.

 21. Moderator

  தமிழில் டைப் செய்ய .

  பின்னூட்டப் பெட்டியின் மேல் Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g) க்கு முன்பாக டிக் உள்ளதா என பாருங்கள் . amma என டைப் செய்தால் அம்மா என மாறிவிடும் ,

  அல்லது http://www.google.com/transliterate/indic இதே வசதி தருகிறது ,

  அல்லது NHM writer நிறுவிக்கொள்ளுங்கள் ,http://software.nhm.in/sites/default/files/NHMWriterSetup1511.exe

  Thamil phonetic தேர்ந்தெடுத்தால் எங்கும் நேரிடையாக தமிழில் உள்ளிடலாம் .

 22. கோவை அரன்

  தார்மீகமான கோபத்துடன் உண்மையைச் சொன்ன கட்டுரை , கேள்வி கேட்ட பாஸ்கி நிச்சயம் இந்த கோபம் அவரை நோக்கியல்ல என்று புரிந்து கொண்டுள்ளார் என்றுதான் அவரின் பின்னூட்டம் காட்டுகிறது.

  இந்து அமைப்புகள் அந்த நேரத்தில் மதமாற்ற முயற்ச்சியில் இறங்கி வென்றிருந்தால் இவர்களின் பேச்சு என்னவாகியிருக்கும் ?

  காத்ரினா புயல் நேரத்தில் இவர்களின் கருணை செயல்படாததன் காரணம் அவர்கள் ஏற்கனவே ஆன்மாவை அறுவடைக்கு கொடுத்ததுதான்.

 23. L Muthuramalingam

  அன்புள்ள ஜெமோ, உஙகளின் மிக அற்புதமான ஒரு கட்டுரை, மிக நுட்பமாக அதே சமயம் தயவுதாட்சண்யம் இன்றி இருந்தது. ஒரு வாசகர் தங்களை ஆர்.எஸ்.எஸ் ஆ என்று கேட்டது மிக அருமை. என்ன செய்வது. இன்னும் கைகளில் அச்சுகளுடன் அலைகிறார்கள், எவன் முதுகு கிடைக்கும் என்று. தாங்கள் ஆர்.எஸ்.எஸ், காரர்களின் சுனாமி சேவை குறித்தும் பதிவு செய்யாமைக்கு இது தேவை தானோ. 1984ல் நான் தில்லியில் தனியாளாக இருக்கும் போது உடம்பு முடியவில்லை. மருத்துவரிடம் நான் போகும் முன் அடுத்தவீட்டு நண்பர் வந்து என்னை ஜெபிக்கசொன்னார், 1986ல் மதுரையில் ஒரு மருத்துவர் என் 4 நாள் ஆண் குழந்தை பிழிக்க என்னை ஜெபிக்க சொன்னார். 2001ல் மதுரை அப்போலோ மருத்துவமனை சி.சி.யு. வாசலில் நான் என் சகோதரிக்காக அரற்றியபடி நிற்கும் போது ஒரு சகோதரர் என் கையில் பைபிள் தர முயற்சி செய்தார். மூன்று வேளையும் நான் நல்லமுரையில் மறுத்துவிட்டேன். அதை இப்போதும் நினைத்து சந்தோசப்படுகிறேன்.

  பிதாவே, இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்.

 24. Sai Suresh

  அன்புள்ள ஜெ.
  தற்போது உள்ள அனைத்து கோவில் சொத்துக்களும் தனியாரின் ஆக்கிரமிப்பால்தான் இருக்கிறது. யாரும் எதிர்த்துக் கேட்க முடியாது. அக்காலத்து அரசர்கள் தெய்வத்திற்கென கொடுத்த இடங்கள், வயல்கள் நிலங்கள் எல்லாம் மனிதனால் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. எங்காவது சர்ச், அல்லது மசூதி சொத்துக்களை தனிநபர்கள் வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி உண்டா?

 25. K.R அதியமான்

  அன்புள்ள ஜெ,

  Secular NGOs மூலம் கொடைகள் வெளினாடுகளில் இருந்து வருவது எத்தனை சதம் ?

  மனிதாபிமான நோக்கில், சுனாமி போன்ற பேரழிவுகள் மற்றும் இதர இன்னல்களை போக்க மேற்கத்திய நாடுகளில் இருந்து கொடை பெற்று, மதசார்பற்ற அமைப்புகள் மூலம் பெரும் சேவை நடபெருகிறதுதானே ? ரெட் கிராஸ், டாக்டர்ஸ் சான்ஸ் பிராண்டியர்ஸ் மற்றும் பல.

  கிருஸ்துவ அமைப்புகளின் மூலம் மேற்கிலிருந்து பணம் அனுப்புவர்களும் மனிதாபிமான நோக்கில் தான் அனுப்புகிறார்கள் என்று நம்புகிறேன். அல்லது அப்படி நம்பவே விரும்புகிறேன். மதம் மாற்றும் நோக்கமும் இருக்கலாம். ஆனால் மனிதாபிமானம் தான் major motive என்றே கருதுகிறேன்.

  மதம் மாறுவது தனி மனித உரிமை. (உதவி பெற்றோ அல்லது பெறாமலோ). மாறினால் மாறிவிட்டு போகிறார்கள். வெறுப்பையும், துவேசத்தையும் வளர்த்து கொள்ளாமல் இருந்தால் போதும். ஆனால்…

  மேலும் தலித்துகள் மற்றும் தாழ்ந்த, வறிய நிலையில் இருப்பவர்களை போல வசதிபடைத்த, படித்த, நகர்புற, ’இந்துக்கள்’ மாறுவதில்லை. சாதியமும், வறுமையும் இருக்கும் வரை மதமாற்றமும் தொடரும்.

  (மில்லியன் டாலர் கொடுத்தால் நான் கூட மதம் மாறத் தயார் !! :)) )

 26. tamilsabari

  தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள்

 27. M.A.Susila

  இந்த விஷயத்தை இத்தனை நேர்மையாகவும்,நடுநிலையோடும் துணிவாகவும் சொல்லத் திரு ஜெயமோகனால் மட்டுமே முடியும் .
  போலி மதச்சார்பின்மை பேசியபடி கிறித்துவத்தின் இன்னொரு பக்கத்தை தைரியமாக முன் வைக்கத் துணியாதவர்களின் கூட்டமே இங்கு மிகுதி.
  ஒரு முறை காலம் சென்ற திரு சுஜாதா தனது நாவல் ஒன்றில்
  ”selling soaps and selling prayers”
  என்று இந்தப்போக்கைத்தான் சுட்டிக் காட்டியிருந்தார்.
  புற்று நோய் வந்த ஒரு பெண்ணை மதம் மாறினால் நோய் குணமாகும் என ஆசை காட்டிக் கிறித்துவராய்ப் புதைத்த கொடுமையை நான் நேரில் கண்டிருக்கிறேன்.

 28. rsgiri

  உண்மை தெரியாமல் சிலர் ஏனோ தானோவென எதையோ புரிந்து கொண்டு செய்திகளைப் பரப்பி கேள்விகளும் கேட்கிறார்கள் (அந்த நண்பரின் நண்பரை சொல்கிறேன்). நல்ல பதில். ஆனால் கொஞ்சம் காட்டமாக இருப்பதாய் எனக்குப் படுகிறது.

 29. rsgopi

  Katrina is the result of failure of the government (both federal and local) not the american people nor its because of racism. Infact i would say USA is the least racist country in the word…The problems foreigners or for that matter blacks face in US is much much less than what south indians face in north or the north-eastern people face in most parts of india.

  Besides this i agree with most of your points!.

 30. gomathi sankar

  அரவிந்தன் நீலகண்டன் அவர்களுடன் முழுவதும் உடன்படுகிறேன் இது ஊடகங்களின் யுகம் விற்கத் தெரியாதவனும்தொடர்புகொள்ளத் தெரியாதவனும் இங்கு இறந்தவனுக்கு சமம் இந்து அமைப்புகள் ஊடக வெளியினை சரியாக கையாள கற்றுக் கொள்ளவேண்டும் இல்லாவிடில் இதுபோல் பொய்களும் பாதி உண்மைகளும் தான் பொதுக் கருத்தாய் இருக்கும்

 31. K.R அதியமான்

  ////கோயில்கள் இன்னமும் மோசம். கோயில் நிலங்களும் சொத்துக்களும் வாடகைக்காரர்களால் குத்தகைக்காரர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. நெல்லையப்பர் கோயிலுக்குச் சொந்தமாக 300 கடைகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக வாடகை வருமானம் என்பது வருடத்துக்கு 4000 ரூபாய். ஆமாம் பல கடைகளுக்கு வாடகை வ்ருமானம் மாதம் 15 ரூபாய். அவை மாதம் 30000 ரூபாய்க்கு மறு வாடகைக்கு விடப்பட்டுள்ளன! சமீபத்தில் ஒரு கோயில்நிர்வாக அதிகாரி வாடகைப்பணத்தை இரட்டிப்பாக்கினார். அதாவது 15 ரூபாயில் இருந்து 30 ரூபாய். அதற்கு எதிராக வணிகர்கள் சங்கம் வைத்து நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். ”அது எப்டீங்க ஒரேயடியா வாடகைய டபுள் ஆக்கலாம்?” என்று சங்கத்தலைவர் ஜூனியர் விகடனில் பேட்டி கொடுத்திருந்தார்
  மதுரை ஆலயம் நெல்லை ஆலயம் போன்றவற்றின் உட்பிரகாரங்களே அறங்காவலர்களான அரசியல்வாதிகளால் கடைகளாக ஆக்கப்பட்டுவிட்டன.
  ////

  ஒரு 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன் அனைத்து இந்து கோயிலகளும் மடங்கள் அல்லது லோக்கல் ‘பெரிய மனிதர்களின்’ நிர்வாகத்தில் தான் இருந்தன. இன்று அது சாத்தியமில்லை. அப்படி செய்தால், மேலே உள்ள சீரழிவு இன்னும் மோசமாகும். ஏற்கெனவே ஊழல் அதிகம். திருசபை மற்றும் வாக்கஃப் போர்டில் நடக்கும் ஊழல்களை பார்த்தாலே புரியும். அவற்றை அரசு கையகப்படுத்த முடியவில்லை. நாட்டில் பெருகி வரும் ஊழல் மற்றும் cynical attitudeஇல் மாற்றம் சாத்தியமில்லை.

  திருப்பதி கோயில் வருமானத்தை ஆந்திர அரசு எடுக்க முடியாது என்று தான் கேள்விப்பட்டேன். ஒரு காலத்தில் அப்படி எடுக்க முயற்சி செய்து, கடும் எதிர்ப்புகளுக்கு பின் அம்முயற்சி கைவிடப்பட்டன என்றும் கேள்விப்பட்டேன். ஊழல் இருந்தாலும், திருப்பதியின் நிர்வாகம் மற்றும் சேவைகள் பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது

 32. karthik

  அன்பு ஜெ

  இன்றைய கோவில்களின் நிலையை பற்றி சில மாதங்கள் முன்பு பதிவிட்டேன். அதை நேரம் கிடைத்தால் படிக்கவும் http://lksthoughts.blogspot.com/2010/02/blog-post.html
  சுனாமி சமயத்தில், நாகை சென்று பணியாற்றியவன் என்ற முறையில் சொல்கிறேன், விசயம் கேள்வி பட்டவுடன் முதலில் களமிறங்கியது சேவா பாரதி என்ற ஹிந்து அமைப்புதான்

 33. parthi6000

  ஜெ அண்ணா

  நான் RSS பற்றி தெரிந்தவன். நான் பா.ஜ.க வின் ஆதரவாளன். கட்சிப் பொறுப்பாளன். இன்னும் சொல்லப்போனால் நான் மாட்டுக்கறி சாப்பிடுபவன். மனிதனை பிரம்ம நிலைக்கு உயர்த்தும் ஆன்மிகக் கருத்துகள் எந்த மதம் சொன்னாலும் நான் அந்த மதம் தான். நான் ஆர் எஸ் எஸ் அல்லது பா.ஜ,க கருத்துகளில் உடன்பட்டதால் அவற்றை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. என் சுதர்மத்திற்கு அவை ஒத்துள்ளன என்பதற்காக அணில் சேவை செய்கிறேன். நான் சுனாமி பேரழிவின் போது ஆர் எஸ் எஸின் சேவாபாரதி சார்பில் நாகபட்டிணம் கீச்சாங்குப்பம் பகுதியில் 3 நாட்கள் வேலை செய்தேன். சுனாமி தாக்கிய 5 வது நாளில் நான் சென்ற டீம் அங்கு சென்றது. அங்கு செல்வதற்கு முன் நாங்கள் எங்கள் ஊரில் பா.ஜ.க இளைஞரணி சார்பில் சுனாமியால் பாதிக்கப்பட்வர்களுக்காக வீட்டிற்கு ஒரு படி அரிசி கொடுங்கள் என்றுகேட்டு ஊர் முழுவதும் அரிசி சேகரித்தோம். அந்த சமயத்தில் எங்கள் பகுதியில் கம்யூனிஸ்ட் நண்பர்களும் பொது மக்களிடமிருந்து நிவாணப் பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தார்கள். அரிசி மற்றும் துணிகளை சேகரித்த பிறகு சேவாபாரதி சார்பில் எங்கள் டீம் நாகபட்டிணம் சென்றோம். நாங்கள் சேவாபாரதி முகாமில் தங்கியிருந்தோம். முதல் நாள் என் அணியை மீட்புப்பணிக்கு அனுப்பினார்கள். நாங்கள் கீச்சாங்குப்ப பகுதிக்கு சென்றோம். நாங்கள் மீனவர்கள் வசிக்கும் பகுதிக்குள் சென்றோம். அப்போது அங்கே ஒரு வீட்டில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதை ரானுவ வீரர்கள் அனைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து எங்கள் அணி தீயை அணைக்க உதவியது. பின்பு அதை தாண்டி உள்ளே சென்றோம். எங்கும் பிணவாடை வீசியது. கடல் ஓரத்தில் அதிக பாதிப்புகள் இருந்தது. அந்த பகுதியில் முற்றிலும் சேதமடைந்திருந்த ஒரு வீட்டின் முன்பு சுமார் 38 வயதுள்ள ஒருவன் கதறி அழுது கொண்டிருந்தான். வீட்டில் பிரோவில் இருந்த நகைகள் எல்லாம் கடலலையில் அடித்து சென்று விட்டதாக கதறி அழுது கொண்டிருந்தான். கடலின் சீற்றம் குறைந்த அன்றுதான் அவன் தன் வீட்டிற்கு வந்து காணாமல் போன தன் மனைவியையும் நகைகளையும் தேடிஉள்ளான் என்பது அவன் கதறியபடி பேசியதில் தெரிந்தது. ரானுவ வீரர்கள் சிறிய மோட்டார் ரம்பத்தை கையில் வைத்துக் கொண்டு இடிபாடுகளை களைந்து கொண்டிருந்தார்கள். அந்த வீட்டின் மேற்கூரை ஓலைகளால் மேயப்பட்டிருந்தது. அப்போது இடிபாடுகளுக்கிடையே அழுது கொண்டிருந்தவனின் மனைவியின் பிரேதம் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருப்பது தெரிந்தது. அந்த பிரேதம் மிக அழுகிய நிலையில் இருந்ததால் கெட்ட வாடை அடித்தது. அப்போது ரானுவ வீரர்கள் அந்த பாடியை எடுக்க தயங்கினார்கள். அந்த நேரத்தில் என்னை பார்த்த ஒரு ரானுவ வீரன் நீங்க ஆர் எஸ் எஸ்ஸா? என்றார் நான் போட்டிருந்த காக்தி டாயரை பார்த்து. நான் ஆமாம் நாங்கள் ஆர். எஸ்.எஸ் தான் என்றேன். உடனே இந்த பாடியை கொஞ்சம் எடுத்து கொடுத்து விடுங்கள் என்று சொன்னார். எங்கள் டீம் படு உற்சாகமாக அந்த இடிபாடுகளில் சிக்கி கொண்டிருந்த அந்த பாடியை வெளியே எடுக்க முயன்றது. எங்களுடன் வந்த அருள் என்பவர் இடிபாடுகளுக்கிடையே கிடந்த ஒரு பெரிய மூங்கிலை எடுத்து அந்த பாடியை வெளியே தள்ள முயன்றார். பாடி இடிபாடுகளுக்கிடையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தது. அப்போது துர்நாற்றம் மிக மிக அதிகமாக வீசியதால் ரானுவ வீரர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டனர். அப்போது அந்த பெண்ணின் பிரேதத்தை நான் நன்றாக பார்க்க முடிந்தது. உடல் மிகவும் உப்பிய நிலையில் கோரமாகவும் நிர்வாணமாகவும் கிடந்தது. அதை பார்த்ததும் என் உடன் வந்திருந்த என் நண்பன் ஸ்டாலின் வாந்தி எடுத்தான். பின்பு பிரேதம் அப்புறப்படுத்தப்பட்ட
  து. பிரேதத்தை அப்புறப்படுத்தையில் பாரத் மாதாக்கீ ஜே என்று கோசம் போட்டோம். இதை பார்த்துக்கொண்டிந்த மக்கள் காக்கி டவுடரைப் பார்த்தாலே எங்களை கூப்பிட ஆரம்பித்தார்கள் தங்கள் வீட்டில் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் பிணங்களை எடுக்க. பிறகு எங்கள் டீம் அடுத்த பகுதிக்கு சென்றது. கடற்கரையில் ஒரு பாலம் கட்டி பாதி நிலையில் சாரத்துடன் இருந்தது. அந்த சாரத்தில் சிக்கி கொண்டிந்த ஒரு முதியவரின் பிரேதம் ஒரு சுமார் 3 வயது குழந்தையின் பிரேதத்தை கட்டி பிடித்த படி கிடந்தது. அது வரையில் ஏதோ ஒரு சாகஸ செயலில் ஈடுபடுவதைப்போல ஆர்வத்துடன் மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நான் மரணத்தின் உண்மையையும், வாழ்கையின் மரணப்போராடத்தையும், வாழ்க்கையின் வெறுமையையும் உணர்ந்தேன். அப்போது மேலும் சில உடல்கள் அந்த சாரத்தில் சிக்கியிருந்ததை பார்த்து அந்த பிரேதங்களையும் கைப்பற்றினோம். அந்த நேரத்தில் 3 அல்லது 4 பேர்கள் அங்கு வந்தார்கள். அவர்கள் எங்களிடம் தாங்கள் அந்த பகுதியில் வசிப்பவர்கள் என்றும் தங்கள் வீடு, சொந்தம், சொத்து எல்லாவற்றையும் கடலலை அடித்து சென்று விட்டது. வாழ வழி இல்லை. எனவே பிணத்தில் உள்ள நகைகளை எடுத்துக் கொள்கிறோம் என்றார்கள். நாங்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்தோம். வந்தவர்களின் தோற்றம் வாழ்க்கையை இழந்தவர்கள் போல் இருந்தது. நாங்கள் சரி என்று தலையாட்டினோம். வந்தவர்களில் ஒருவன் நாங்கள் எரிப்பதற்காக கைப்பற்றி வைத்திருந்த ஒரு பெண்ணின் சடலத்திலிருந்து தாலி மற்றும் கம்மல்களைக் கழட்டினான். பின்பு நன்றி உணர்வுடன் தலையாட்டி விட்டு போனார்கள். நாங்கள் கையோடு எடுத்து சென்றிருந்த கெரசின் மற்றும் உடைந்து கிடந்த மரப்படகுகளின் கட்டைகளைக் கொண்டு கைபற்றிய சடலங்களை எரித்தோம். பின்பு கடற்கரையை ஒட்டிய பகுதியின் தெருக்களில் சென்றோம். நான் அவ்வப்போது திரும்பி கடலை பார்த்தபடியே நடந்தேன் சுனாமி வந்தால் ஓடுவதற்காக. அப்போது அந்த தெருவில் தபால்காரர் ஒருவர் தனது சைக்கிளைத் தள்ளியபடி ஒரு வீட்டில் நின்று கொண்டு அந்த வீட்டுக் பெண்ணிடம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். அந்த கிழவி அந்த வீட்டில் இருந்தவர்களை எல்லாம் கடலலை அடித்து சென்று விட்டதாகக் கூறிக்கொண்டிந்தார். அந்த தெருவில் அந்த பெண் இருந்த வீட்டைத் தவிர எல்லாம் காலியாக இருந்தது. தெருவே மயான அமைதியாக இருந்தது. காலியாக கிடந்த தெருவின் ஒரத்தில் 3 பேர்கள் மணலில் உட்கார்ந்து கொண்டு 100 தாள்களை வைத்து எண்ணிக்கொண்டிருந்தார்கள். அந்த நோட்டுகள் ஈரமாக இருந்தது. அதை ஒவ்வொன்றாக லுங்கியில் துடைத்படி எண்ணிக்கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் ஒருவன் தலையில் டிவி பெட்டியை தலையில் வைதது எடுத்துக்கொண்டு போய்கொண்டிருந்தான். எனக்கு அவர்கள் எல்லாம் கிடைத்த பொருட்களை திருடிக்கொண்டிருக்கிறார்களா என்ற சந்தேகம் வந்தது. சற்று நேரத்திற்கு முன் அந்த பெண்ணின் பிரேதத்திலிருந்து நகைகளை கழட்டியவர்களும் திருடர்களோ என்ற எண்ணம் வந்தது. பின்பு அந்த பகுதியில் ஒரு வீட்டிலிருந்து கட்டிலில் படுத்து கிடந்த முதியவர் ஒருவரை உயிருடன் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தோம். அன்று மட்டும் ஏழு அல்லது எட்டு பிணங்களை அடக்கம் செய்திருப்போம். கடைசியில் நாங்கள் தங்கியிருந்த முகாமிற்கு திரும்பினோம். வழியில் டிவி ரிப்போட்டர்கள் கரைவேட்டிகளைக் பேட்டி எடுத்துக்கொண்டிருப்தை பார்தேன். உடன் அரசு அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். அடுத்த நாள் எனக்கு முகாமை பாதுகாக்கும் பணி தரப்பட்டது. நாகபட்டினத்தில் இருந்த கல்யாண மண்டபம் முகாமிற்காக ஏற்பாடாகியிருந்தது. நா

 34. parthi6000

  சுனாமி பேரழிவின் போது எழுதிய வரிகள்

  கடல்நீர்க் கொந்தளிப்பால்
  உடல்களைப் பிரிந்த உயிர்களிடத்தும்,
  உறவுகளை இழந்த உள்ளத்துள்ளும்
  அமைதி நிலவட்டும்..
  நம் கண்ணீர்க்கடலால்
  அந்தக் கடலும் மூழ்கட்டும்…

  கருணைக்கடலே
  உன் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை
  இனியும் தொடராதே….
  நாங்கள் உன் பிள்ளைகள்
  மறவாதே……

  உணர்வுடன்
  அட்வகேட் பார்த்திபன்
  திருப்பூர்

 35. bala

  ஜெ..

  அட்வகேட் பார்த்திபன் அவர்களுக்கு என் வணக்கங்கள். அதே போல் மனிதாபிமானத்துடன் செயலில் இறங்கிய அனைவருக்கும். மற்றவர்கள் பற்றி யோசிக்கக் கூடத் தேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து. தீமையை எதிர்க்காதே என்பது ரமணர் வாக்கு. உலகச் செல்வம் அனைத்தையும் கொடுத்தாலும் என் நம்பிக்கைகளை யாரும் மாற்றி விடப் போவதில்லை. மாற்றுபவர்களை/ மாறுபவர்களைப் பற்றிக் கவலைப் பட ஒரு வாழ்க்கை போதாது.
  why waste time??
  அதேபோல், வெறும் பிரச்சாரத்தினால் மிக அதிக நாள் நன்மையை மறைத்தோ, தீமையை உயர்த்தியோ காட்டிவிட முடியாதென்றும் கருதுகிறேன்.

  RSS உண்மையிலேயே மக்களுக்கு நன்மை செய்யும் நிறுவனம் என்றால், அது ஒரு நாள் மக்களிடம் போய்ச் சேர்வதை சில பத்திரிகைகளோ/ தொலைக் காட்சியோ தடுத்து விட முடியாது.

  பாலா

 36. Dondu1946

  இது சம்பந்தமாக நான் இட்ட பதிவு http://dondu.blogspot.com/2006/09/rss-conspiracy-of-silence.html

  அதிலும் இது சம்பந்தமாக உங்கள் அப்போதைய பதிவு குறிப்பிடப்பட்டுள்ளது. பார்க்க: http://rozavasanth.blogspot.com/2005/01/blog-post_07.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 37. ramkathir

  அன்புள்ள குரு ஜெமோ,

  இந்தக்கட்டுரை பின்மண்டையில் அறைந்தாற்போல சில விசயங்களை உணர்த்தியிருக்கிறது.

  இந்துக்களின் ஒரே இணைப்புப்புள்ளியான புனிததலங்களை அரசாங்கம் கையகப்படுத்துவது எந்த நாட்டிலும் நடக்காதது. ஆலயங்களின் நிதிகளை எடுத்துக்கொள்வதும்கூட. சில தொன்மையான மடாலயங்களை தேவஸ்தானத்தின் கீழ்கொண்டுவருவதற்கான அசாய சந்தர்ப்பத்திற்கு ஆட்சியாளர்கள் காத்திருக்கிறார்கள். இதன்மூலம் பெரும்பான்மையான இந்துமதத்தின் செயல்பாடுகளை கட்டிப்போட்டுவிட்டார்கள். இதை நம்மால் உணரமுடியாமல்போனது வருத்ததிற்குரியது.

  உண்மையை எடுத்துச்சொல்ல RSS ஆக இருக்கவேண்டிய அவசியமில்லை. விவாதத்திலோ, வாய்ச்சண்டையிலோ தர்க்கசிந்தனை இல்லாதவர்கள் மண்வாரி தூற்றிசெல்வதுபோல நீ பார்ப்பனன், நீ கீழ்சாதி, நீ நொண்டி, நீ RSS என்ற முத்திரை குத்துகிறார்கள்.

  தமிழக அரசுசார்நிறுவனங்களிலே செயலிழந்த நிர்வாகம், மிகைஊழல் கொண்டது தேவஸ்தானம்தான். ஒரு கடைநிழை தேவஸ்தான ஊழியர்கூட தனக்குவேண்டியவர்களையோ அல்லது தனியாக பணம் வசூலித்துக்கொண்டோ சிறப்புக்கட்டண தரிசனத்திற்கு அனுப்பமுடியும். தேவஸ்தானம் எந்தக்கோவிலை கையகப்படுத்தினாலும் தொன்மையான பழங்குடிவழிபாட்டினை தடைசெய்து ஆகமவழிபாட்டினை புகுத்துவார்கள். நம் உடன்பிறப்புக்களுக்காகவும் இரத்தத்தின் இரத்தங்களுக்காகவும் உருவாக்கப்பட்ட அறங்காவலர்கள், கடைகளை அனுமதிப்பது மற்றும் தனக்கு வருமானம் வரும் பணிகளை இனிதே செய்வார்கள். கோவிலுக்குள் கடைவைத்துவிட்டால் காவல்நிலயம், நகராட்சி, விற்பனைவரித்துறை என எதற்கும் மாமூல் அல்லது சுங்கம் தரவேண்டியதில்லை. கோவில் நிர்வாக அதிகாரிக்கும் அறங்காவலருக்கும் கொடுத்தால்மட்டும் போதும்.

  கோவிலில் கடைவைத்திருப்பவர்கள், வாழ்க்கைக்கு உதவாத தரமில்லாத சீனதயாரிப்புகளை கூவிக்கூவி விற்று நம் ஏழைபக்தர்களின் மொட்டைத்தலையில் ஏற்றிவிடுகிறார்கள். பழனி மலைப்படிகளில் கடைவைத்திருப்பவர்களில் கனிசமானோர் முஸ்லீம்கள். அதேபோல மசூதிகளின் சர்ச்சுகளின் வெளிப்புறத்தில் கடைவைத்திருப்பவர்கள் கனிசமானோர் இந்துக்கள். இதை மதநல்லினக்கமாக பார்க்கவேண்டும்.
  ஆனால் இந்தியாவில்தான் நகராட்சிகள், இறைவழிபாட்டுத்தலங்கள், சாலையோரங்கள், சந்துகள் என்று எங்கு பார்த்தாலும் கடையைகட்டி கல்லாக்கட்டுவது பொருளாதாரபெருக்கத்திற்கா அல்லது மக்களை ஒட்டிச்சுரண்டுவதற்கோ என்ற சந்தேகம் எழுகிறது.

  மதமாற்றிகள், இயேசு அற்புதம் செய்கிறார் என்ற பிரச்சாரத்தாளை நம்கையில் வலியத்திணிக்கிறார்கள். இந்தக்கயவர்களின் இலக்கு மருத்துவமனைகளில் நோயுற்றுபடுத்திறுப்பவர்கள்தான். சென்னை தாம்பரம் சானடோரியம் அரசுமருத்துவமனையின் மரத்தடியில் நூற்றுக்கணக்கான நோயாளிகளைதிரட்டி மதமாற்றிகள் மதப்பிரச்சாரம் செய்வதை முன்பு அவ்வப்பொழுது கண்டிருக்கிறேன்.

  அட்வகேட் பார்த்திபன் அவர்களே, உங்கள் மற்றும் ஆர் எஸ் எஸ்ஸின் சேவாபாரதியின் சேவை மெய்சிலிர்க்க வைக்கிறது. சுனாமியின்போது நான் பார்த்த படித்த அத்தனை ஊடகங்களும் ஆர் எஸ் எஸ்ஸின் சேவையை பற்றி மூச்சுவிடவில்லை.

  கதிரேசன், ஒமன்

 38. K.R அதியமான்

  ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும், ம.க.இ.க தொண்டர்களுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. சுயநலமற்ற பொதுசேவை எண்ணம், தியாகம் செய்யும் மனோபாவம், நேர்மை, கொள்கை பிடிப்பு, கடும் உழைப்பு, எளிமை போன்ற குண நலன்கள். ஆனால் அவர்களின் கொள்கைகளை தான் ஏற்க்க முடியவில்லை. Mid guided idealists என்று சொல்லலாம். பல நேரங்களில் அவர்களின் கொள்கைகள் வன்முறை மற்றும் வெறுப்பை வளர்க்கும் resultsகளுக்கு இட்டு செல்கின்றன.

  கோவை எனக்கு இரண்டாவது சொந்த ஊர் போன்றது. பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். எமது தந்தையும் அந்த காலத்தில் அங்கு படித்தவர். கோவை மக்கள் பற்றி அறிவேன். அருமையான மக்கள். மரியாதை, பண்பு நலன்கள் அதிகம். நல்ல் ஊர். 1980 வரை மதக்கலவர்கள் என்றால் என்னவென்று அறியாத மக்கள். 80களில் அயோத்தியா ’பிரச்சனையயை’ பி.ஜெ.பி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.இ.ப முன்னெடுத்தில் ஆரம்பித்தது வினை. Action led to reaction and violence and mob frenzy. மிக அமைதியான, அழகான ஊர் நாசமடைந்தது. வெறுப்பும், துவேசமும், சந்தேகமும், குரோதமும் வளர்ந்தன / வளர்தப் பட்டன. 1998இல் நடந்த தொடர் குண்டு வெடிப்புதான் climax. பெரும் உயிர் சேதம் மற்றும் இழப்புகள். இரண்டு தரப்பினருக்கும் பிறகு புத்தி வந்தது. அந்த சமயத்தில் உருவான பொருளாதார மந்தம் (due to East Asian economic crisis), இந்த புத்தி தெளிதலுக்கு பெரும் வழி வகுத்தது. இரண்டு தரப்பிற்க்கு ‘ஆதாரவு’ நல்கும் patronகள் பொருளாதார சிக்கலில் தவித்தது நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது !! இனி கோவையில் மதக்கலவரம் உருவாகாது.

  அருட் செல்வர் ந.மகாலிங்கம் அவர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன். அவரின் கல்வி நிறுவனத்தில் தான் படித்தேன். காந்தியவாதியான அவர் கோவை கலவரங்களின் போது (குண்டு வெடிப்புகளுக்கு முன்) காந்திய முறையில் சமாதானத்திற்க்கு முயற்சி செய்யாதது பெரும் ஏமாற்றம் அளித்தது. அவர் முயன்றிருக்கலாம். ஆனால்…

  நண்பர் பார்த்திபன்,

  உங்கள் சேவைகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். திருப்பூர் அடிக்கடி வருவேன். உங்களை அங்கு சந்திக்க ஆவல்.

 39. parthi6000

  நண்பர் அதியமான்

  நிச்சயம் சந்திப்போம்…
  நிறைய சிந்திப்போம்…

  பார்த்திபன்
  parthi6000gmail .com

 40. krupasamudhran

  http://www.vigilonline.com/index.php?option=com_content&task=view&id=843&Itemid=௧௦௯

  என்கிற புத்தகத்தில் விலாவாரியாக NGO கள் செய்யும் மோசடிகள் தொகுக்க பட்டுள்ளன.

 1. மீண்டும் சுனாமி « நெடும் பனை

  […] மனிதாபிமான வணிகம்) […]

Comments have been disabled.