இரு முனைகளுக்கு நடுவே.

இனிய ஜெயம்,

நாளை ‘ பெருமாள் முருகனுக்கு ஆதரவாக’ போராட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறீர்கள். வேறு எந்த சந்தர்ப்பத்திலும் இல்லாத வகையில் எழுத்தாளர்கள் [கார்னர்] மூலையில் மடக்கப்பட்டது இது முதல் முறை என நினைக்கிறேன்.

ரசனை அடிப்படையில் மாதொரு பாகன் எந்த தனித்தன்மையும் நுண்மைகளும் அற்ற நாவல். இதில் சர்ச்சைக்குரிய பகுதிகள் ஆவணப் பதிவு என்றே ஆசிரியர் சொல்கிறார். எனில் ‘குறிப்பிட்ட’ விஷயத்திற்கு வாய்மொழி , இலக்கியம், கல்வெட்டு, அரசு ஆவணம் என அனைத்து சான்றுகளையும் ஆசிரியர் காண்பித்ததாக வேண்டும். இல்லாத பட்சத்தில் அது எழுத்தாளரின் தனிப்பட்ட தாக்குதலாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

இதில் பாதிக்கப்பட்டவர் புண்பட போராட எல்லா உரிமையும் உண்டு. இரண்டாவதாக இந்த சர்ச்சைக்கு கிடைத்த சர்வதேச ஊடக கவனம். இன்றைய சூழலில் இத்தகு ஊடக கவனம் என்ன விதமான கருத்தியலை இந்தியாவை பற்றி உருவாக்கும் என்றால். இந்துத்துவ பாசிசத்தாலும், சாதி அமைப்புகளாலும் கட்டி ஆளப்படும் இந்தியாவில் ‘கருத்து சுதந்திரம்’ கொண்ட எழுத்தாளன் ‘வேட்டையாடப் படுகிறான்’. என்பதே.

இனி உலக பல்கலைகழகங்களில் மாதொருபாகனின் ஆசிரியர் வாசிக்கும் எந்த ஒரு கட்டுரையும் இந்தியாவின் கலாச்சார பண்பாட்டு நஞ்சின் ‘ஆவணமாகவே’ ஏற்று பயிலப்படும். ஆக இங்கு யாருடைய வரலாற்றை, யார், யாருக்கு முன்னால், எதற்க்காக முன்வைக்கிறார் எனும் வினா முக்கியமானது.

ஆக பெருமாள் முருகனுக்கு ஆதரவாக எனும் பதத்தின் கீழ் செயல்படும் அத்தனை நிகழ்வும், மேற்கண்ட எதிர் மறை அம்சங்களுக்கு ஆதரவான ஒன்றாக அடையாளம் காணப்படப் போகும் எல்லா அபாயமும் இருக்கிறது.

இந்த நிலையை சுட்டி மௌனம் காத்தாலோ, கருத்தை முன் வைத்து எதிர்த்தாலோ அவை அனைத்தும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு எவ்வாறு இந்தியாவில் ஒரு படைப்பாளி சக ‘அதிகார அடிவருடி’ படைப்பாளிகளால் கைவிடப் படுகிறான் என்று மற்றொரு படம் ‘அங்கே’உருவாகும்.

மற்றொரு எல்லையில் இங்கு பாதிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபடும் குழுவினர் இலக்கிய வாசகர்களோ, அது செயல் படும் முறைமைகளோ, கருத்து செயல்பாடு எனும் தளங்களிலோ தேர்ச்சி அற்றவர்கள். இந்த விஷயத்தில் அவர்கள் அடையும் வெற்றி எழுத்தாளனின் அடிப்படை இயங்கு தளத்தையே நசுக்கக் கூடியது.

தகவல் சார் உண்மைக்கும், இலக்கியம் கையாளும் புனைவு சார் உண்மைக்குமான பாரதூரமான வேறுபாடு அறியாமல், புனைவு உண்மையை கையாளும் அனைத்து எழுத்தாளர்களையும் ‘புண்பட்டு விட்டோம்’ எனும் ஒற்றைச் சொல்லைக் கொண்டு எந்த குறுங்குழுவும் ஒடுக்கலாம் எனும் செயல்பாடு இனி வேக மடையும்.

ஆக ‘அறம்’ சொல்லும் எழுத்தாளர்கள் இந்த விவகாரத்தில் நிற்கவேண்டிய எல்லைக் கோடு மிக மிக மங்கலாக இருக்கிறது.

இங்கே எழுத்தாளரின் கருத்து சுதந்திரத்துடன், வாசகரின் கேள்வி கேட்கும் சுதந்திரமும் கேள்விக்கு உள்ளாகிறது. உதாரணமாக ‘கயத்தாறில்’ உள்ள கட்ட பொம்மன் சிலை, அச்சு அசல் நடிகர் திலகம் சிவாஜியின் உருவம். ஒரு வரலாற்று மாணவனாக அவர் கட்ட பொம்மன் எனும் வீரத் தமிழன் அல்ல.கெட்டி பொம்மு எனும் தெலுங்கர் என நான் அறிய வருகையில் மிக்க அதிர்ச்சி அடைந்தேன். இந்த வரலாற்றை அதன் மூலத்தை ஒரு வரலாற்று மாணவன் தேடிச் செல்ல, நாளை எந்த குறுங்குழுவும் முளைத்து வந்து தடை செய்யுமாயின், உண்மையில் அது அறிவியக்கத்தின் வீழ்ச்சி.

ஆக எப்படி நோக்கினாலும், எப்போதும் எழுத்தாளனின் சாரியில் நிற்கும் நீங்கள் ”கச்சிதமான” இக்கட்டு ஒன்றில் நிற்கிறீர்கள். வென்று வர, அல்லது ‘மீண்டு’வர வாழ்த்துக்கள்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைகருத்துரிமைப்போராட்டம், பிரபஞ்சன், தோப்பில்…
அடுத்த கட்டுரைகாந்தி-இந்துத்துவம்- அரவிந்தன் கண்ணையன்