அங்காடி தெரு கடிதங்கள் 4

அன்புள்ள ஜெயமோகனுக்கு,
வணக்கம்.
அங்காடித்தெரு திரைப்படத்தை நானும் மனைவியுமாகச் சென்று ரொறொன்ரோ திரையரங்கு ஒன்றில் பார்த்தோம். பிரமிக்கவைத்தது. இனிமேல் தமிழ் சினிமாவின் முகம் நிச்சயம் மாறும். என் பதிவு கீழே.

http://amuttu.com/index.php?view=pages&id=106

அன்புடன்

அ.முத்துலிங்கம்

அன்புள்ள அ.மு.சார்

உங்கள் மதிப்புரைக்கு நன்றி. பொதுவாக தமிழ் சினிமாக்களை பார்க்கப்போகிறவர்கள் ஒரு வித கேளிக்கை மனநிலையில்தான் செல்கிறார்கள். அதற்கான படங்களே வருகின்றன. அவ்வப்போதாவது வரும் யதார்த்தத்தைச் சொல்லும் இத்தகைய படங்களை எழுத்தாளர்களில் இருந்து சாதாரணர்கள் வரை வரவேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது

நன்றி

அன்புள்ள ஜெயமோகன்
இந்த வார சொல்வனத்தில் http://solvanam.com/?p=7575 வந்த கட்டுரையை கீழே இட்டுள்ளேன். இந்த சினிமாவில் தொடப்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக எனது எண்ணங்கள் சில்வற்றையும் இன்னொரு பதிவாக அனுப்பியிருந்தேன் அது அடுத்த சொல்வன இதழில் வரும் என்று நினைக்கிறேன். கீழே இடப்பட்டுள்ளது சினிமா பற்றிய பார்வையை மட்டும் சொல்வது. படத்தை அணுகுவதற்கு ரசிப்பதற்குத் தடையாக இசை, காமிரா, லைட்டிங், எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்கள் இல்லாத வரை அவை எனக்கு பெரும் பொருட்டல்ல. நன்றாக இருப்பதை உணர்ந்தால் பாராட்டலாம் அதற்கு மேல் பெரிதாகச் சொல்லவோ குறை சொல்லவோ எனக்கு சினிமா சார்ந்த டெக்னிக்கல் அறிவு கிடையாது. என்னைப் பொருத்தவரை படத்தின் கரு, சொல்லப் பட்ட விதம், தாக்கம், யதார்த்தம், அபத்தம் இல்லாத காட்சிகள், தேவையற்ற காட்சிகளின் தவிர்ப்பு ஆகியவையே முக்கியம். அவற்றை மட்டுமே நான் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். அந்த வகையில் தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான மாற்று சினிமா இது. நம்மிடம் உள்ள பிரச்சினைகளை அழுத்தமாகச் சொல்வதும், அவற்றை பற்றி மக்களின் மனசாட்சியுடன் பேசுவதும் கூட நல்ல படைப்பின் கடமை. அதை நிச்சயமாகச் செய்திருக்கிறது இந்த அங்காடித் தெரு. அந்த மாற்றத்தை நோக்கி ஒரு பயணத்தை துவங்கி வைத்த உங்களுக்கும், வசந்த பாலனுக்கும் எனது பாராட்டுதல்கள்.
அன்புடன்
ராஜன்

அன்புள்ள ராஜன்

அங்காடித்தெருவில் தொழில்நுட்ப பிழைகள் உள்ளனவா என்று சொல்லத்தெரியவில்லை. நான் அந்த தளத்தில் இல்லை. ஆனால் நாம் கண்மூடி பார்க்காமல் போகிற யதார்த்தத்தைச் சொல்கிறது. முகத்தில் அறைந்ததுபோல சொல்லியாகவேண்டுமென்பது நம் சூழலின் விதி. அப்படி சொல்லியிருக்கிறது.

நன்றி

dear jayamohan
yesterday i had been to angadi theru.i was so impressed by the movie and the desperate love.the images came haunting setting a delicate uneasiness,but still a kind of aesthetic feel.a much needed film at the present environement,i strongly feel.

veli rangarajan

அன்புள்ள வெளி ரங்கராஜன்

நன்றி. படம் சார்ந்த தொழில்நுட்ப குறைபாடுகளை உங்களைப்போன்ற நடிப்பு குறித்த விஷயமறிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும். யதார்த்தப்படங்களில் தமிழில் சிறந்த சில படங்களில் ஒன்று என்ற அளவில் அதன் இடத்தை அது நிறுவிக்கொண்டிருக்கிறது. உங்கள் பாராட்டு உற்சாகமளிக்கிறது
ஜெ

முந்தைய கட்டுரைகர்மயோகம் : (8 – 13)
அடுத்த கட்டுரைகர்மயோகம் : (14 – 15)