பகுதி 3 : பிடியின் காலடிகள் – 3
அலைகளற்று இருண்ட பெருக்காகக் கிடந்த கங்கையை நோக்கியபடி நின்றிருந்த பீமன் திரும்பி தன் மேலாடையைக் கழற்றி சுருட்டி படிக்கட்டின் மீது வைத்தான். இடைக்கச்சையைத் தளர்த்தி ஆடையை அள்ளி நன்றாகச் சுருட்டி சுற்றிக்கொண்டு நீரில் பாய்ந்தான். நீர் பிளந்த ஒலிகேட்ட சிசிரன் மாளிகையிலிருந்து ஓடிவந்து திகைப்புடன் நோக்குவதை காணமுடிந்தது. கைகளை வீசி நீந்தியபடி திரும்பி நோக்கி நீரை உமிழ்ந்தபின் மீண்டும் நீந்தினான். பனிமலைநீர் குளிருடன் தோள்களை இறுக்கியது. சற்று நேரம் தாண்டியதும் உடல் வெம்மை எழுந்து அக்குளிரை எதிர்கொண்டது.
துள்ளும் இளங்குதிரை போலிருந்தது கங்கை. அவன் கைவீசி வைத்த ஒவ்வொரு முறையும் நீர் அவனை அள்ளி அப்பால் கொண்டு சென்றது. சற்று தொலைவுக்கு சென்றபின் அவன் நீருக்கு எதிராக கைவீசத்தொடங்கினான். கைகளை வீசி எம்பி குதித்து மீண்டும் எம்பி ஒழுக்கை எதிர்த்து சற்று தூரம் சென்றபின் சலித்து மீண்டும் ஒழுக்கில் சென்றான். மூச்சு வாங்கத் தொடங்கியதும் கரைநோக்கி திரும்பினான்.
அப்பால் ஒளிவிடும் பொன்வண்டுபோல பந்த ஒளிகளுடன் படகு ஒன்று மாளிகை நோக்கி செல்வதை காணமுடிந்தது. அத்தனை சாளரங்களிலும் விளக்கொளிகள் எழ நின்றிருந்த மாளிகை நீரலைகளில் மிதந்தாடுவதுபோல் தெரிந்தது. படகு மாளிகையை அணுகுவதற்குள் சென்றுவிடவேண்டும் என்று எண்ணியவனாக அவன் கரையோரமாகச் சென்று ஒழுக்கு குறைந்த விளிம்பை அடைந்ததும் எதிரே நீந்தத்தொடங்கினான். கைகளை வீசி வீசி எழுந்து எதிரலைகள் மேல் சென்றான்.
எதிரே அந்த அணிப்படகு பெரிதாகியபடியே வந்தது. அதிலிருந்த அமரக்காவலன் அவனை கண்டுவிட்டான். முதலில் திகைப்புடன் நோக்கியபின் கைகளில் வில்லுடன் கூர்ந்து நோக்கி நின்றான். அம்பை செலுத்திவிடப்போகிறான் என எண்ணியதுமே அத்தனை அச்சம் கொண்டவன் ஓடும் படகிலிருந்து அலைமேல் அம்புவிடுபவனாக இருப்பானா என புன்னகையுடன் எண்ணியது அகம்.
படகு படித்துறையை அணுகியதும் காவலர் இறங்கிச்சென்றனர். இசைக்கலங்கள் இன்னொலி எழுப்ப மங்கலச்சூதரும் அணிப்பரத்தையரும் தொடர்ந்தனர். அமரத்தில் நின்றவன் கைசுட்டி சொல்ல காவலர் நால்வர் அம்புகள் பூட்டிய வில்லுடன் வந்து படகுத்துறை முகப்பில் நின்று பீமனை நோக்கி கண்கூர்ந்தனர். அதைக்கண்டு சிசிரன் ஓடிவந்து அவன் பீமன் என்று சொல்ல அவர்கள் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நோக்கி வில்தாழ்த்திக்கொண்டனர்.
படகிலிருந்து திரௌபதி இறங்கி உள்ளிருந்து வந்த அணிப்பரத்தையராலும் சூதர்களாலும் எதிர்கொள்ளப்பட்டு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டபோதுதான் பீமன் படித்துறையில் கால்வைத்தான். நீர் வழியும் உடலுடன் எழுந்து நீண்ட குழலை கையால் நீவி பின்னால் சரித்துக்கொண்டு படிகளில் ஏறி மேலே சென்று தன் மேலாடையை எடுத்தான். திரௌபதி மேலே மாளிகைப்படிகளில் நின்று கழுத்தைத் திருப்பி அவனை நோக்கினாள். அவள் இதழ்கள் சற்றே மடிந்து ஒரு சிறிய புன்னகை எழுந்தது.
மேலாடையால் உடலைத் துடைத்தபடி பீமன் அவளை அணுகினான். அவள் விழிகளை நோக்கி புன்னகையுடன் “நெடுநேரமாயிற்று. விண்மீன்களுக்குக் கீழே நீந்துவோமே என்று குதித்தேன்” என்றபடி அவளருகே சென்றான். “விண்மீன்களுக்குக் கீழே நீந்துவதில் என்ன சிறப்பு உள்ளது?” என்றாள் திரௌபதி. “அதை சொல்லத்தெரியவில்லை. விண்மீன்களை நோக்கியபடி இருண்ட நீரில் நீந்தும்போது நாம் வானில் நீந்தும் உணர்வை அடையமுடியும்” என்றான் பீமன். அவள் புருவங்கள் மேலெழ புன்னகைத்தாள்.
மாளிகைக்குள் இருந்து மிருஷையும் அவர் மாணவிகளும் படியிறங்கி வந்து திரௌபதியை வாழ்த்தினர். “நாங்கள் ஒப்பனையாளர்கள் இளவரசி” என்றார் மிருஷை. சிரித்துக்கொண்டு “சற்றுமுன் நாங்கள் இளவரசரை அணிசெய்ய இரண்டுநாழிகை நேரம் பணியாற்றினோம்” என்றார். திரௌபதி சிரித்துக்கொண்டு பீமனை நோக்கினாள். பீமன் “அணிசெய்தபின் நான் அழகாகவே இருந்தேன். ஆனால் நடுவே சென்று அக்காரை உண்டேன். உணவுண்டால் உடலை அசைக்காமல் என்னால் இருக்கமுடியாது” என்றபின் சற்றே நாணம் தெரிய புன்னகைத்து “அதற்கென்ன, மீண்டும் ஒருமுறை அணிசெய்துகொள்வோம்” என்று மிருஷையிடம் சொன்னான்.
”இந்தக்கோலமே உங்களுக்கு இன்னும் பொருந்துகிறது இளவரசே” என்றாள் கலுஷை. பிற இருவரும் சிரித்தார்கள். மிருஷை “அறைக்கு வாருங்கள் இளவரசே, தங்களை வேற்றுடை அணிவித்து அனுப்புகிறேன்” என்றார். பீமன் அவர்களுடன் அணியறைக்குச் சென்று வெள்ளைநிறமான பட்டாடையும் மேலாடையும் அணிந்துகொண்டு ஈரம் விலகாத கூந்தலுடன் இடைநாழிக்கு வந்தான். சிசிரன் தலைவணங்கி “இளவரசி கிழக்கு உப்பரிகையில் இருக்கிறர்” என்றான்.
உப்பரிகையில் இருந்த திரௌபதி அவன் வரும் ஒலியைக் கேட்டதும் கழுத்தைத் திருப்பி நோக்கி புன்னகை செய்தாள். இலைவிழுந்த குளமென அவள் ஆடைகள் வழியாக ஓர் உடலசைவு கடந்து சென்றது. கண்களில் புன்னகையுடன் “கங்கையை எத்தனை முறை நீந்திக்கடப்பீர்கள்?” என்றாள். “தொடர்ச்சியாக ஏழுமுறை” என்றான் பீமன். அவள் வியப்புடன் “ஏழுமுறையா? இங்கே மிகச்சிறந்த நீச்சல்வீரர்களான குகர்கள் ஒருமுறை நீந்திக்கடந்து ஓய்வெடுத்து திரும்பவருவார்கள். அதற்கே குலதெய்வக் கோயிலில் பூசையிட்டு பரிவட்டம் கட்டி வாழ்த்துவார்கள் அவன் குலத்தார்” என்றாள்.
புன்னகையுடன் பீமன் பீடத்தில் அமர்ந்து தன் எடைமிக்க கரங்களை மடியில் கோர்த்து வைத்துக் கொண்டான். “இன்று நான்காவது வளர்பிறை” என்றாள் திரௌபதி. “அரண்மனையின் தென்மேற்குமூலையில் ஒரு யட்சி குடியிருக்கிறாள். அவளை முன்பொருநாள் பாஞ்சாலத்தின் குலமூதாதையொருவர் கின்னரநாட்டிலிருந்து கொண்டுவந்ததாக சொல்கிறார்கள். அரண்மனைப் பெண்களை அணங்குகள் கொள்ளாது காப்பவள் அவள். கருநிலவு மூன்றாம் நாள் அவள் எழுவாள். மூன்றுநாள் பூசனையும் பலியும் கொடுத்து அறையமரச்செய்வார்கள்.”
“ஆம், அறிந்தேன்” என்றான் பீமன். அவளுடைய மெல்லிய கழுத்தையும் விரிந்த தோள்களையும் விட்டு தன் விழிகளைத் தூக்க அவனால் முடியவில்லை. இருண்ட நீரின் அலைவளைவுகள் என அவை ஒளிகொண்டிருந்தன. அவள் அப்பார்வையை உணர்ந்தபோது அவள் கை இயல்பாக தலைமுடியை நீவி ஒதுக்கியது. ஒளிரும் விழிகளுடன் சற்றே தலைசரித்தபோது கன்னங்களின் ஒளி இடம்மாறியது. “நான் உங்களை என் தேரில் பூட்டிய அன்று என் மேல் சினம் கொண்டீர்களா?” என்றாள்.
பீமன் ”ஏன்?” என்றான். விரிந்த புன்னகையுடன் “காமம் கொண்டபெண்ணை ஆண் விரும்புவதல்லவா இயல்பு?” என்றான். அவள் சிரித்தபடி முகத்தருகே கைகளை வீசி ‘என்ன இது’ என செய்கை காட்டினாள். பின்னர் இதழ்களை உட்பக்கமாகக் குவித்து கன்னங்களில் செம்மை கலக்க சிரித்தாள். கங்கையிலிருந்து காற்று எழுந்து வந்து அவள் ஆடைகளை அசைத்தது. ஏதோ எண்ணிக்கொண்டதுபோல எழுந்து “நாம் கங்கைக்கரைக்குச் செல்லலாமே” என்றாள். “ஆம், எனக்கு மாளிகைகள் பிடிப்பதில்லை” என்றான் பீமன்.
அவர்கள் படிகளில் இறங்கி வெளியே வந்தனர். காவல் வீரர்கள் வியப்புடன் அவர்களை நோக்கி தலைவணங்க படித்துறையை அணுகி நின்றனர். அலைகள் துறைமேடையின் மரக்கால்களை அளையும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. “மாபெரும் சிங்கங்கள் நீர் குடிப்பதுபோன்ற ஒலி” என்று திரௌபதி சொன்னாள். பீமன் சிரித்துக்கொண்டு “சிறுவயதில் எனக்கும் இத்தகைய எண்ணங்கள் எழும்” என்றான். “இங்கு வரும்போது மட்டும் நான் மீண்டும் இளமைக்குச் செல்கிறேன்” என்றாள் திரௌபதி.
கங்கையிலிருந்து எழுந்துவந்த காற்றின் அலையில் அவள் மேலாடை எழுந்து மேலே பறக்க அதை அவள் அள்ளி சுற்றிக்கொண்டு ஒருமுறை சுழன்றுவந்தாள். அவள் விழிகளும் பற்களும் இருளில் ஒளிர்ந்து சுழன்றன. “என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?” என்றாள். “சூதர்கள் கதை சொன்னார்கள். நான் இளமையில் வாழ்ந்த இந்திரத்யும்னம் என்னும் ஏரிக்கரையை நினைத்துக்கொண்டேன். சதசிருங்கம் என்னும் மலைசூழ்ந்த காடு. அங்குதான் நான் பிறந்தேன்.”
திரௌபதி கங்கையை நோக்கியபின் கைசுட்டி “நான் அங்கே செல்லவிரும்புகிறேன். கங்கையின் நடுப்பெருக்கில்” என்றாள். “படகிலா?” என்றான் பீமன். சிரித்தபடி “படகுசெல்வதைப்பற்றி சொல்லவில்லை. நான் செல்ல விழைகிறேன்” என்று அவள் சொன்னாள். “வா, நீந்துவோம்” என்றான் பீமன் மேலாடையைக் களைந்தபடி. “ஆனால் எனக்கு நீச்சல் தெரியாதே” என்று அவள் சொன்னாள்.
பீமன் அவள் சொன்னது புரியாதவன் போல திரும்பி “ஏன்?” என்றான். ”பலமுறை கற்பிக்கப்பட்டிருக்கிறேன். என் உடல் நீச்சலுக்கு நெகிழவில்லை” என்றாள். தன் உடலை இருகைகளாலும் காட்டி “என் உடல் வளையாதது என்று எனக்குக் கற்பித்த விறலி சொன்னாள்” என்றாள். பீமன் “உனக்கும் சேர்த்து என் உடல் வளையும். வருக!” என்று கைநீட்டினான். “என்னைத் தூக்கிக் கொண்டுசெல்ல உங்களால் முடியுமா?” என்றாள் திரௌபதி கைகளை நீட்டியபடி. “என்னிடம் எவரும் இப்படி கேட்பதில்லை” என்றான் பீமன்.
அவள் அவனை விழிகளால் கூர்ந்து நோக்கியபடி தன் மேலாடையை களைந்தாள். அவள் மார்பின் மெல்லிய கரிய தோல்பரப்பின் மேல் நீரின் ஒளி மின்னுவதை கண்டான். அவள் “நீந்துவதற்குரிய உடைகள் இல்லையே” என்றாள். ”நீந்துவதற்குரிய உடை ஆடையின்மையே” என்றான் பீமன். அவள் சிறிய பறவை போல ஒலியெழுப்பிச் சிரித்தபடி தலையை பின்னால் சொடுக்கி கூந்தலை முன்னால் கொண்டுவந்து கைகளால் அள்ளிச்சுழற்றி கட்டினாள். “அதை பரவ விடு…” என்றான் பீமன். “ஏன்?” என்று அதே சிரிப்புடன் கேட்டாள். “காற்றைப்போலவே நீருக்கும் கூந்தல் பிடிக்கும்.”
சிரித்தபடி திரௌபதி படிகளில் இறங்கினாள். அவளுடைய பட்டாடை காற்றை ஏற்று விம்மிப் பெருத்தது. அதை இழுக்க பெருமூச்சுடன் மூழ்கியது. நீருளிருந்தபடியே ஆடைகளைக் கழற்றி சுழற்றி கரையில் வீசினாள். அதைப்பற்றி படிகளில் வைத்துவிட்டு பீமன் தன் இடைசுற்றிய சிற்றாடையுடன் நீரில் இறங்கினான். அவள் தோள்களைச் சுற்றி நீர்வளையம் நெளிந்தாடியது. முலைகளின் பிளவில் நீராலான ஓர் ஊசி எழுந்து எழுந்து அமைந்தது.
பீமன் அவளருகே சென்று அவள் கைகளைப் பிடித்தான். “அச்சமின்றி தொடுகிறீர்கள்” என்று அவள் மெல்லிய குரலில் சொன்னாள். ”என்ன அச்சம்?” என்று பீமன் கேட்டான். “பெண்ணைத் தொடும் அச்சம்.” பீமன் நகைத்து “நான் ஏற்கெனவே பெண்ணை அறிந்தவன்” என்றான். கன்னங்களில் குழி அமைய உதடுகளை அழுத்தி “ஒரு பெண்ணைத்தானே?” என்று அவள் கேட்டாள். “ஆம், ஆனால் அவள் காட்டுப்பெண். நாணமற்றவள்” என்றான். “நான் அரண்மனைப்பெண் நானும் நாணமற்றவளே” என்றாள் திரௌபதி சிரித்தபடி.
அவன் அவள் இடையைப்பற்றித் தூக்கி கங்கையின் ஆழமான சுழிப்பை நோக்கி வீச அவள் பதறியகுரலுடன் நீரில் விழுந்தாள். ஒரு கணத்தில் இருண்ட வெளியில் ததும்பும் முலைகளும் திரண்ட இடையுமாக விண்ணிலிருந்து விழும் அப்சரப் பெண் எனத் தெரிந்தாள். பீமன் பாய்ந்து நீரில் மூழ்கி அவள் இடையை இடக்கையால் உந்தி மேலேற்றினான். நீர்மேல் எழுந்த விசையிலேயே அவள் மூச்சிழுத்து பின்பு நகைத்தாள். அவன் அவளருகே நீந்த அவன் தொடையில் தன் கால்பெருவிரலை ஊன்றி நீரில் எழுந்து கைகளை விரித்து அவள் நகைத்தாள். அவளுடைய நீள்கூந்தல் நீரில் விழுந்து நெளிந்து நுனியலைந்தது.
”எனக்கு எப்போதுமே நீர் அச்சமூட்டுவது. அந்த அச்சம்தான் என்னை அசையவிடாமல் செய்திருந்தது” என்றாள் திரௌபதி. “இப்போது அச்சமே இல்லை” என்று அவள் சொன்னதுமே ”சரி, அச்சம்கொள்” என்றபடி அவன் விலகிச்சென்றான். அவள் ஒரே உந்தில் அவனை அணுகி அவன் தோளில் மிதித்து மேலெழுந்து முகத்தை வருடி நீரை வழித்து சிரித்தாள்.
அவள் அவன் தோளில் மென்முலைகள் தோய அவனை பற்றிக்கொள்ள அவன் கங்கையின் ததும்பும் அலைகளுக்குமேல் ஏறிச்சென்றான். கால்களை நீரில் உதைத்து அவளைத் தூக்கிக்கொண்டு எம்பிக்குதித்து விழுந்து மூழ்கினான். இருண்ட நீருக்குள் அவளுடைய நிழலுருவம் கால்களை உதைத்து கூந்தல் நீண்டு பறக்க நெளிந்தது. அவள் இதழ்கள் குவிந்து பிறந்த குமிழி வெடித்து மேலெழுந்தது. அவன் அவள் வயிற்றில் மெல்ல கைகொடுத்து நீர்மேல் தூக்கினான்.
“மானுடனின் உடல் மண்ணால் ஆனது. கூந்தல் வானத்தாலும் கண்கள் நெருப்பாலும் மூக்கு காற்றாலும் ஆனவை. கைகள் மட்டும் நீராலானவை” என்றான் பீமன். “கைகளை அப்படியே விட்டுவிட்டாலே போதும். அவை நீரை அறியும்” அவள் அவன் ஒரு கையின் ஏந்தலில் நீரில் நெளிந்துகொண்டிருந்தாள். “பறக்கும் கொடியைப் பற்றியது போலிருக்கிறது” என்றான். ”கங்கையையே இமயமென்னும் கொடிமரத்தில் பறக்கும் கொடி என்று வித்யாதரர் சொல்கிறார்” என்றாள். “யாரவர்?” என்றான் பீமன். “கவிஞர். புராணமாலிகையின் ஆசிரியர்.” பீமன் “நானறிந்ததில்லை” என்றான்.
அவள் அவன் தோளில் மிதித்து துள்ளி நீரில் பாய்ந்து கைகால்களை அடித்து சற்றுதூரம் சென்று அமிழ்ந்தாள். அவன் சென்று அவள் தோள்களைப் பற்றி அள்ளித்தூக்கிக் கொண்டான். அவன் உடலில் அவள் நீரில் வந்த மெல்லிய வல்லி என சுற்றிக் கொண்டாள். “என்னை தொலைவுக்கு கொண்டு செல்லுங்கள்” என்று அவன் காதில் சொன்னாள். “எங்கே?” என்று அவன் கேட்டான். “தொலைவில்… நெடுந்தொலைவில்…” என்றாள் அவள். கைநீட்டி “அங்கே” என்றாள்.
விழி நன்றாகத் தெளிந்தமையால் நீரின் அலைவளைவுகளையும் மிகத்தொலைவில் நிழலுருவாக நின்ற கரைமரங்களையும் காணமுடிந்தது. காம்பில்யத்தின் துறைமுகப்பு நெடுந்தொலைவு தள்ளிச்சென்றுவிட்டது என்று பீமன் அறிந்தான். “நாம் இப்போதே நெடுந்தொலைவு வந்துவிட்டோம்” என்றான். “ஆம், இன்னும் அப்பால்” என்றாள் அவள். அவள் உடலில் நீர்வழியும் ஒளியை காணமுடிந்தது. புல்லாக்கு என மூக்கு நுனியில் நின்று ததும்பிச் சொட்டி மீண்டும் ஊறியது நீர்த்துளி. முகத்தில் சரிந்த கூந்தல் கன்னத்தில் ஒட்டியிருந்தது. கண்கள் கரியவைரத்துளிகள். கருமையின் ஒளியென பற்களின் வெண்மை.
அவன் அவள் இடையைப்பற்றி தன்னுடன் சேர்த்துக் கொண்டான். அவனுடைய பெருத்த கைகள் நீரில் எழுந்து துழாவிச்சென்றன. அவனுடலின் நெளிவுகளுடன் இணைந்தபடி அவள் அவன் முதுகின்மேல் பற்றிக்கொண்டு பறக்கும் சால்வை போல நெளிந்தாடினாள். மானுட உடலென்பது வருடுவதற்கானது, உரசிச்செல்வதற்கானது. தொடுகையில் உடல் எதுவோ அது மறைந்துவிடுகிறது. உடலுக்கு அப்பாலிருந்து வேறேதோ பேசத் தொடங்கிவிடுகின்றது. மெல்ல வழுக்கிச்செல்லும் உடல் சொல்கிறது, அது ஒரு நாகம் என.
அவள் கூந்தல் எழுந்து வந்து அவன் முகத்தை மூடியது. கற்றைகளை கைகளால் விலக்கினான். அவன் பின்கழுத்து வளைவில் அவள் முலைக்குவடுகள் பொருந்தின. அவன் கன்னத்தில் உதடுகள் பட்டன. “இப்படி எவரையேனும் சுமந்து நீந்தியதுண்டா?” என்றாள் திரௌபதி. “இளவயதில் இளையோர் மூவரையும் சேர்த்து சுமந்துகொண்டு கங்கையில் நீந்துவேன்” என்றான் பீமன். “ம்ம்ம்ம்? பெண்களை?” என்றாள். “இல்லை… நான் பெண்களை அணுகியதில்லை.”
அவள் அவன் காதுமடலை மெல்லக் கடித்து “அவர்களும் அணுகியதில்லையா?” என்றாள். “இல்லை” என்றான். ”ஏன்?” என்று அவள் கேட்டாள். “தெரியவில்லை” என்றான். ”நான் சொல்லவா?” என்றாள் அவள். “சொல்.” அவள் அவன் காதுக்குள் “உங்கள் உடலைக் கண்டு பெண்கள் அஞ்சுவார்கள். எந்தப்பெண்ணும் இந்த முழுமையுடல் மேல் காமம் கொள்ள மாட்டாள்” என்றாள். பீமன் நீரை அள்ளி உமிழ்ந்தபடி “சற்று முன் மிருஷையும் அதைத்தான் சொன்னார்” என்றான். “ஆனால் நான் காமம் கொண்டேன்” என்றாள் திரௌபதி.
சிரித்தபடி திரும்பி அவளை அடியிலாக்கி புரண்டு எழுந்து பீமன் “ஏன்? நீ பெண்ணல்லவா?” என்று கேட்டான். “பெண்களெல்லாம் பூனைகள். எலிகளைத்தான் விரும்புகிறார்கள். நான் வேங்கை. யானையைக் கிழித்து உண்டாலும் குருதிப்பசி அடங்குவதில்லை” என்றபின் அவன் தோளில் மிதித்து எம்பி காற்றில் குதித்து அப்பால் நீரில் விழுந்து மூழ்கி எழுந்து சிலமுறை கைவீசி நீந்திச் சென்று அமிழ்ந்தாள். அவள் அமிழும் இடத்தில் சரியாக பீமனின் கைகள் சென்று அவளை ஏந்தி மேலெழுப்பின.
அவள் நீரைக் கொப்பளித்து குழலை தள்ளியபடி “நீங்கள் கங்கைக்குள் மூழ்கி நாகர்களின் உலகுக்குச் சென்றதாக ஒரு கதை சூதர்களால் பாடப்படுகிறதே?” என்றாள். “ஆம், உண்மைதான்” என்றான் அவன். “நான் ஏதோ ஓர் உலகுக்குள் சென்று மீண்டேன். அது நீருக்குள் உள்ளதா என்று என்னால் சொல்லமுடியாது.” அவள் அவன்மேல் மெல்லுடலால் வழுக்கிச்சென்று சுழன்று வந்து “நாகங்கள் இருந்தனவா?” என்றாள். “ஆம்… பெருநாகங்கள்.”
“அவை உங்களுக்கு நஞ்சூட்டினவா?” என்று மீண்டும் கேட்டாள். “ஆம், என் உடலெங்கும் அந்நஞ்சு உள்ளது.” அவள் சிரித்தபடி அவன் தலையைத்தழுவி “ஆம் நான் அறிவேன்” என்றாள். பின் அவன் தோள்களில் வளைந்து “அங்கே நாகினிகள் இருந்தனவா?” என்றாள். “இல்லை” என்றான். “ஏன்?” என்றாள். ”ஏனென்றால் நான் அன்று சிறுவன்.” அவள் சிரித்துக்கொண்டு மேலெழுந்து மூச்சை சீறி விட்டு நெளிந்தபடி “நானும் நாகமே” என்றாள். “நானூட்டும் நஞ்சு ஒன்று உண்டு.” நீரொலியுடன் இணைந்த ரகசியக் குரல்.
அவன் அவள் கால்களைப்பற்றி இழுத்தான். அவள் நீரில் மூழ்கி அவன் முகத்தருகே குமிழிகள் பறக்கும் முகத்துடன் தெரிந்தாள். வாய்திறந்து அவனை கடிக்க வந்தாள். அவளை அவன் பிடித்துத்தள்ள மேலெழுந்து மூச்சுவிட்டு நகைத்தாள். பலமுறை நீள் மூச்சு இழுத்தபின் “என் கைகள் நீரை அறியத்தொடங்கிவிட்டன” என்றாள். “இன்னும் சற்று நேரம். நீந்தத் தொடங்கிவிடுவாய்” என்றான் பீமன்.
நீரிலாடுவதற்கென்றே உருவானது உடலென உணர்ந்தான். உடல் உடலைத் தொட்டு உரசி வழுக்கிச் சென்றது. உடலால் உடலுக்களிக்கும் முத்தங்கள். அவன் முகத்தில் படிந்து இழுபட்டுச்சென்றது அவள் மெல்லிருங்கூந்தல். பொன்னிறத்தில் மின்னிச்சென்ற அவள் அகபாதங்களை மூழ்கிச்சென்று முத்தமிட்டான். அந்த உவகையில் ஒருகணம் செயல்மறந்தபோது கருக்குழந்தையெனச் சுருண்டு பறந்து விலகிக்சென்றான். கைநீட்டி எம்பி அவளை அணுகி தோள்தழுவினான். எழுந்து ஒரே சமயம் மூச்சுவிட்டு நகைத்தனர்.
“உங்களுக்கு களைப்பே இல்லையா?” என்றாள் திரௌபதி. “உண்மையைச் சொன்னால் என் வாழ்வில் இதுவரை களைப்பு என எதையும் நான் அறிந்ததில்லை. பசியை மட்டுமே அறிந்திருக்கிறேன்” என்றான் பீமன். அவள் மீண்டும் அவன் பிடியை உதறி கைவீசி நீந்தினாள். அவள் செல்லும் தொலைவுவரை விட்டுவிட்டு பின் அணுகி அவளைப்பற்றிக்கொண்டு மேலெழுப்பினான்.
மேலும் சிலமுறை நீந்தியபோது அவள் உடல் நீருடன் இணைந்துகொண்டது. அவள் நெடுந்தூரம் கைவீசி நீந்திச் சென்று மூச்சு வாங்கியபோது அவன் அருகே சென்று அவளை தோளிலேற்றிக்கொண்டான். அவள் திரும்பி நோக்கி வியந்து “இத்தனை தூரம் நானே வந்திருக்கிறேன்” என்றாள். பீமன் “ஆம், நீ நீந்தக்கற்றுக் கொண்டுவிட்டாய்” என்றான். “நீந்துவதைப்போல் எளியதேதும் இல்லை” என்றாள் திரௌபதி.
அவனருகே எழுந்து தழுவி செவிநோக்கி இறங்கி மெல்ல “இடும்பியுடன் நீந்தியதுண்டா?” என்று திரௌபதி கேட்டாள். “அவர்கள் நதியில் இறங்குவதில்லை” என்றான் பீமன். ”ஆனால் மரங்களில் நீந்துவார்கள்.” திரௌபதி வியப்புடன் “மரங்களிலா?” என்றாள். “ஆம், இலைகளின் வழியாக காற்றில். இதோ நீ அமிழும்போது என் கரம் வருகிறதே அப்படி ஒரு மரக்கிளை வந்து ஏந்திக்கொள்ளும்.”
சிலகணங்களில் அவள் அதை அகக்கண்ணால் கண்டுவிட்டாள். “வியப்புதான்” என்றாள். “என்றாவது ஒருநாள் அவளுடன் அதைப்போல நீந்த விழைகிறேன்” என்றபின் “ஆனால் அவள் என்னை கீழே விட்டுவிடுவாள்” என்று சிரித்து கூந்தலை முகத்திலிருந்து விலக்கினாள். தாடையில் இருந்து நீர் வழிந்தது. “இல்லை, அவளுக்கு அத்தகைய உணர்வுகள் எழாது. அவர்களின் குலம் அவ்வுணர்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது” என்றான் பீமன். “பொறாமையே இல்லையா?” என்றாள் அவள். “இல்லை” என்றான் அவன். ”வஞ்சம், காழ்ப்பு?” பீமன் “இல்லை” என்றான். “ஏனென்றால் அவர்களுக்கு விழைவுகளில்லை.”
அவள் மல்லாந்து கைகளை வீசி நீந்தினாள். அவள் இளமுலைகள் நீருக்குமேல் தாமரைமொட்டுகளென உலைந்தாடின. மூழ்கப்போனதும் கவிழ்ந்து அவனைப்பற்றியபடி “நல்லவேளை நான் அப்படி இல்லை. எனக்குள் ஆசையும் அகந்தையும் நிறைந்திருக்கின்றன. ஆகவே வஞ்சமும் காழ்ப்பும் பழியும் கொண்டவளாகவே இருந்துகொண்டிருக்கிறேன்” என்றாள். “அவள் நீர், நீ நெருப்பு. அவரவர் இயல்பு” என்றான் பீமன். “ஆம், அப்படித்தான் கொள்ளவேண்டும்” என்றபின் அவள் மீண்டும் மல்லாந்து நீந்தினாள். அவள் அலையும் முலைகளுக்குக் கீழே உந்தியும் தொடைவளைவுகளும் நீரில் தெரிந்தன.
மீண்டும் மூழ்கி எழுந்து அவனைப்பற்றியபடி “நீங்கள் சொன்னது சரிதான். விண்மீன்களின் கீழே நீந்தும்போது வானில் நீந்துவதைப் போலவே இருக்கிறது” என்றாள். “கந்தர்வர்களைப்போல, தேவர்களைப்போல.” மூச்சு அடங்கியதும் அவள் மீண்டும் பாய்ந்து கை சுழற்றி வீசி நீந்தத் தொடங்கினாள். அவள் இடைவளைவுக்கு மேல் நீர்நாகம்போல கூந்தல் நெளிந்துலைந்தது.
பீமன் அவளுடன் இணைந்து நீந்தியபடி “நீ ஆண்களைப்போல் நீந்துகிறாய்” என்றான். “அப்படியா?” என்றாள். “ஆம், பெண்கள் இதைப்போல கைவீசி நீந்துவதில்லை. அத்துடன் கைவீசி நீந்தும்போது எவரானாலும் சற்று கோணலாகவே செல்வார்கள். ஏனென்றால், இருகைகளில் ஒன்றின் விசை கூடுதலாக இருக்கும். நீ செலுத்தப்பட்ட அம்பு என செல்கிறாய்.” அவள் மூழ்கி நீரள்ளி உமிழ்ந்து சிரித்து “அதனால்தான் நான் நீந்த இத்தனை பிந்தியதோ என்னவோ?” என்றாள்.
மீண்டும் மல்லாந்தபடி “விண்மீன்கள்… நான் இளமையில் அவற்றை நோக்கி கனவுகாண்பேன். ஆனால் ஒருமுறைகூட நீரில் மிதந்தபடி அவற்றை நோக்குவேன் என எண்ணியதில்லை” என்றாள். “நீ விரும்பிய விண்மீன் எது?” என்றான் பீமன். “எனக்குரியது மகம். இளமையிலேயே என்னை அருந்ததியை நோக்கு என்று சொல்லி வளர்த்தனர். நான் எப்போதும் நோக்குவது துருவனை” என்றாள் திரௌபதி. ”மாறாதவன்” என்றான் பீமன். “ஆம்,ஒளிமிக்கவன், தன்னந்தனியவன்” என்று திரௌபதி சொன்னாள்.
நீரில் கால்துழைந்தபடி அவள் வானை நோக்கினாள். “அதோ, துருவன்” என்றாள். அவன் மல்லாந்து அதை நோக்கினான். “அதை நான் நோக்குவதில்லை. என் தந்தை அதை நோக்குவார் என்று மூத்தவர் சொல்வதுண்டு. அதன் தனிமை அச்சுறுத்துகிறது. கோடானுகோடி குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்க உறுத்து நோக்கி அசையாமல் இருக்கிறது ஒருகுழந்தை என்று தோன்றுகிறது” என்றான் பீமன்.
மல்லாந்தவாறே எம்பி நீரில் விழுந்து எழுந்து “குழந்தையாக இருக்கையில் என்னை வளர்த்த செவிலியான அனகையிடம் ஒருமுறை துருவனைக் காட்டி அழகாக உள்ளது அல்லவா என்று சொன்னேன். துருவனை நோக்காதே, அவனை நோக்குபவர்கள் உலகியலை விட்டு துறவுபூண்டு ரிஷிகளாகி விடுவார்கள் என்றாள்” என்றான் பீமன். “அதுவேகூட அந்த அச்சத்திற்கு அடிப்படையாக இருக்கலாம்.”
“துருவனை நோக்குபவர்கள் சக்ரவர்த்திகளாக ஆவார்கள் என்றாள் என் செவிலி” என்றாள் திரௌபதி. “இருக்கலாம். இருவருமே முற்றிலும் தனித்தவர்கள் அல்லவா?” என்று பீமன் சிரித்தான். திரௌபதி மேலே நோக்கியபடி “சக்ரவர்த்திகளையும் முனிவர்களையும் தன் பார்வையாலே உருவாக்குபவன். தனக்குள் முழுமையானவன்” என்றாள். ”அவனை நோக்குகையில் ஒளி மிகுந்தபடியே வருகிறான்.”
பின்னர் திரும்பி கைவீசி நீந்திவந்து அவனைப்பற்றிக்கொண்டு மூச்சிரைத்தாள். ”அது என்ன அசைகிறது? முகில்நிழலா?” என்றாள். “இல்லை, அது ஓர் ஆற்றிடைக்குறை” என்றான் பீமன். “ஆறு அதனருகே சுழிக்கிறது.” அவள் நோக்கிவிட்டு “நாம் அங்கே கரையேறுவோம்” என்றாள். பீமன் “கங்கையின் ஆற்றிடைக்குறைகள் பெரும்பாலும் மணற்சதுப்புகள். நிற்கமுடியாதவை” என்றான். அவள் கூர்ந்து நோக்கியபடி ”அங்கே கோரைப்புல் வளர்ந்திருக்கிறதே” என்றாள். “புல் எங்கும் வளரும்” என்றான் பீமன். திரௌபதி “நாம் அங்கு சென்றுதான் பார்ப்போமே… அது சதுப்பு என்றால் அடுத்த ஆற்றிடைக்குறைக்கு செல்வோம்” என்றாள்.
திரும்பி இருண்ட அலைகளாகத் தெரிந்த கங்கையை நோக்கி “அங்கே காம்பில்யத்தில் நாம் இறந்துவிட்டோம் என்று அவர்கள் எண்ணியிருக்கக் கூடும்” என்றான் பீமன். “ஆம், இறந்துவிட்டோம்… பாதாள உலகுக்கு சென்றுவிட்டோம். அங்கே உங்களுக்கு அமுதளித்த மூதாதையருடன் நெளிந்தாடிக்கொண்டிருக்கிறோம்” என்றாள் திரௌபதி. பின் எம்பி அவன் தோள்களில் கையிட்டு அணைத்து “நஞ்சுண்ணப்போகிறோம்” என்றாள்.
அவர்கள் அந்த ஆற்றிடைக்குறையை நோக்கி நீரலைகளில் எழுந்தமைந்து விரைந்து சென்றார்கள். “பறவைகள் பறந்திறங்குவதுபோல” என்றாள் திரௌபதி கைகளை விரித்தபடி. “நான் ஓர் அன்னம். இமயத்திலிருந்து இணைப்பறவையுடன் இந்த சிறு தீவுக்கு வருகிறேன். முட்டையிட்டு அடைகாக்க.” பீமன் சிரித்துக்கொண்டு “அங்கே ஒரு சிறு கூட்டை கட்டிக்கொள்வோம்” என்றான்.
ஆற்றிடைக்குறையை நெருங்கியதும் பீமன் அவள் கையை பற்றிக்கொண்டான். “நீர் அதனருகே வளையும். அங்கே சுழி இருக்கும்… மறுபக்கமாக நீர் விரைவழியும், அங்கே கரையேறுவோம்” என்றான். அவர்கள் ஆற்றிடைக்குறையை அடைந்தபோது அதன்மேல் கோரைநுனிகளை அலைத்தபடி காற்று கடந்தோடும் ஒலியை கேட்கமுடிந்தது. இடக்கால் தரையைத் தொட்டதும் பீமன் அடுத்த காலை ஊன்றி நின்று அவள் இடையை பற்றிக்கொண்டான்.
அவள் அவன் மேல் மெல்ல பறவையென எடையில்லாது அமர்ந்தபடி “வானில் பறந்து வந்து கிளையில் இறங்கியது போல” என்றாள். ”உறுதியான நிலம்” என்றான் பீமன். “இதுவரை நீங்கள் உறுதியான நிலமாக இருந்தீர்கள். ஒவ்வொரு முறை மிதிக்கையிலும் பாறை என்றே அகம் எண்ணியது” என்றாள் திரௌபதி.
பீமன் சேற்றில் கால் வைத்து நடந்து ஆற்றிடைக்குறையில் ஏறியபடி “நீ சொன்ன வித்யாதரரின் நூலில் நீரரமகளிர் பற்றிய கதை உள்ளதா?” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “சற்று முன் நீருக்குள் நீ என்னை கடிக்க வந்தபோது நான் ஒரு கதையை நினைவுகூர்ந்தேன். கடலுக்குள் சென்று நீரரமகளிருடன் கூடி மறைந்த மாளவ இளவரசன் அஸ்வகனின் கதை.” பீமன் விழிகளில் ஒரு மெல்லிய சுருக்கம் வந்தது. ”ஆம், அக்கதை நினைவுள்ளது” என்றாள் திரௌபதி.
“என் தமையன் அதை ஒருமுறை எனக்கு சொல்லியிருக்கிறார்” என்றான் பீமன். “நான் உன்னை நீருள் நோக்கியபோது அக்கதையின் மாளவ இளவரசன் நானே என்று எண்ணினேன். நீர் விட்டு எழுந்தபோதுதான் அது நானறிந்த கதை என்று நினைவுகூர்ந்தேன். வியப்பென்னவென்றால் அந்தக்கதையை நேற்றோ முன்தினமோ ஏதோ சுவடியில் நான் வாசித்தேன் என்று என் நினைவு சொன்னது. நான் சுவடியைத் தொட்டு பல்லாண்டுகளாகின்றன.”
இடை வரை நீரில் நின்று அவனை கூர்ந்து நோக்கிய திரௌபதி பின் கலைந்து திரும்பி தன் நீள்குழலை அள்ளி சுழற்றிக் கட்டியபடி ஆற்றிடைக்குறையின் புல்மேடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்