‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 8

பகுதி 3 : பிடியின் காலடிகள் – 2

சிசிரன் பின்னால் வந்து நின்ற ஒலி கேட்டு பீமன் திரும்பிப்பார்த்தான். சிசிரன் மெல்ல வணங்கி, “இளவரசி இன்னும் கிளம்பவில்லை. இன்று எழுபிறை நான்காம் நாள். அரண்மனையின் காவல் யட்சிக்கென சில பூசனைகள் உள்ளன” என்றான். பீமன் தலையசைத்தான். இன்று நான்காம் நிலவா என்று எண்ணியபடி வானைநோக்கினான். செம்மை அவிந்து இருள்திட்டுகளாக முகில்கள் மாறிக்கொண்டிருந்தன. எங்கும் நிலவை காணமுடியவில்லை.

சிசிரன் “இளவரசர் விழைந்தால் சூதர்கள் பாடுவார்கள். இளவரசி வருவதற்கு பிந்தியதனால் நான் அவர்களை வரவழைத்தேன்” என்றான். பீமன் புருவம் சுளித்து “தேவையில்லை” என்றபின் கைகளைக் கட்டியபடி நீர்வெளியை நோக்கி நின்றான். நீருக்குள் இருந்து எழுந்த ஒளி எஞ்சியிருக்க அதன்மேல் சிறிய பறவைகள் தாவிக்கொண்டிருந்தன. மிகத்தொலைவில் வணிகப்படகுகள் செவ்வொளி விளக்குகளுடன் சென்றுகொண்டிருந்தன. இறுதி முகிலும் அணைந்தபோது வானம் முழுமையாகவே இருண்டது.

பீமன் திரும்பி நோக்க அப்பால் அவனை நோக்கி நின்றிருந்த சிசிரன் அருகே ஓடிவந்து “இளவரசே” என்றான். “சூதர்கள் பாடட்டும்” என்றபடி பீமன் மேலேறிவந்தான். சிசிரன் “ஆணை” என்றபடி ஓடினான். பீமன் முற்றத்தில் சிலகணங்கள் நின்றபின் பக்கவாட்டில் திரும்பி சமையலறை நோக்கி சென்றான். அங்கே ஆவியில் வேகும் அக்காரத்தின் நறுமணம் எழுந்துகொண்டிருந்தது. அவன் அகம் மலர்ந்தது. கைகளை வீசியபடி படிகளில் ஏறி வளைந்து அடுமனைக்குள் சென்றான்.

அவனைக் கண்டதும் சூதர்கள் ஐவரும் எழுந்து முகம் மலர்ந்து “வருக இளவரசே” என்றனர். “மேகரே, அக்காரம் மணக்கிறதே” என்றபடி அவன் அடுமனையில் இருந்த பீடத்தில் அமர்ந்துகொண்டான். அடுப்பில் நெளிந்தாடிய தழல்களுக்குமேல் அகன்ற பித்தளை உருளி அமர்ந்திருந்தது. அதை மூடியிருந்த எடைமிக்க வங்கத்தின் சிறிய துளைகளைத் தூக்கியபடி ஆவி நீர்த்துளிகளுடன் வெடித்து வெடித்துச் சீறியது.

“அக்காரை என்று இங்கே நாங்கள் சொல்வோம். கோதுமை, தினை, வஜ்ரம் என்னும் மூன்று மணிக்கூலங்களுடன் வெளியே சொல்லாத ஒரு பொருளையும் சேர்த்து பொடித்து அதில் அக்காரமும் ஏலக்காயும் சேர்த்து ஆவியில் வேகவைப்பது” என்றார் மேகர். பீமன் மூக்கை சற்றே தூக்கி “அது என்ன என்று சொல்கிறேன்… சற்று பொறுங்கள்” என்றான். பின் விழிதிருப்பி “சளையீச்சையின் காய்கள்…” என்றான். மேகர் புன்னகைத்து “அது அஸ்தினபுரியிலும் உண்டா? மலைப்பகுதியில்தான் வளரும் என்றார்கள்” என்றார்.

“இல்லை, நான் அதை இடும்பவனத்தில் உண்டேன்” என்றான் பீமன். “அவர்கள் அதை பறித்து வெட்டி உலரச்செய்தபின் கொடிவலைக்கூடையில் இட்டு ஓடும் நீருக்குள் போட்டுவிடுகிறார்கள். அதன் நஞ்சு முற்றிலுமாக அகன்றபின்னர் எடுத்து சுட்டு உண்கிறார்கள்”. மேகர் “இங்கும் மலைமக்கள் அதைத்தான் செய்கிறார்கள். நாங்கள் அதை ஐந்துமுறை கொதிக்கச்செய்து ஊறலை களைவோம். அதன்பின் உலரவைத்து தூளாக்குவோம்” என்றார்.

கிஞ்சனர் திரும்பி “அவிந்துவிட்டது. உண்கிறீர்களா இளவரசே?” என்றார். மேகர் “அதற்காகத்தானே வந்திருக்கிறார்?” என்றதும் அத்தனை அடுமனையாளர்களும் நகைத்தனர். கயிறுகளைப்பற்றி வங்கத்தை மெல்ல தூக்கி அகற்ற ஆவி எழுந்து அடுமனைக்கூடத்தை மூடியது. “தேவர் வருக!” என்று சொன்னபடி மேகர் உருளிக்குள் ஒரு நீண்ட இரும்புக்கம்பியை விட்டு ஓர் அப்பத்தை எடுத்து தென்மேற்கு மூலையில் வைத்தார். பின்னர் அப்பங்களை எடுத்து எடுத்து அருகில் இருந்த பெரிய தாலத்தில் வைத்தார்.

“நூறு அப்பம் இருக்குமா?” என்றான் பீமன். “தாங்கள் உண்ணுமளவுக்கு இருக்காது இளவரசே, இன்றிரவுக்குள் மேலும் பலமுறை அவித்துவிடுவோம்” என்றார் கிஞ்சனர். அப்பங்களை பெரிய பனையோலைத் தொன்னைகளில் வைத்து அவித்திருந்தார்கள். பீமன் அப்பங்களை எடுத்து அவற்றின் ஓலையை சுழற்றி அகற்றி வெளியே தெரிந்த பகுதியை கவ்வி உண்ணத் தொடங்கினான். இடக்கையால் அவன் ஓலையின் மீது பற்றியிருந்தான். மிக விரைவாக அவன் உண்டபோதுகூட ஓலையை முற்றிலும் அகற்றி அப்பத்தை கைகளால் தொடவில்லை.

“பார்த்துக்கொள்ளுங்கள் மேகரே, உணவை உண்பதும் ஒரு தவம்” என்றார் கிஞ்சனர். “இளவரசே, எங்கள் ஆசிரியர் அசரர் முன்பொருமுறை விதேகமன்னரிடம் சமையற்காரராக இருந்தார். முழுவிருந்தொன்றை அரசர் முன் படைத்துவிட்டு அருகே நின்று முறைமைசெய்தார். அரசர் முதலில் ஒரு வாழைப்பழத்தை எடுத்து தோலை முழுமையாக உரித்துவீசிவிட்டு பழத்தை வெறும்கையில் பிடித்தபடி உண்ணத்தொடங்கினார். அசரர் சினம் கொண்டு அரசர் முன்னாலிருந்த உணவுத்தாலத்தை இழுத்து திரும்ப எடுத்துக்கொண்டார். குரங்கு போல உணவுண்ணத்தெரியாத உன்னால் என் சமையலை எப்படி உண்ணமுடியும் என்று கூவினார். வேண்டுமென்றால் என்னை தலைகொய்ய ஆணையிடு. உனக்கென இனி சமைக்க மாட்டேன் என்றார்.

“அரசன் அந்த உணர்ச்சியை எதிர்பார்க்கவில்லை. திகைத்தபின் தலைவணங்கி அடுநூலரே அறியாமல் செய்த பிழை பொறுத்தருள்க. எனக்கு உண்பதை எவரும் கற்பிக்கவில்லை என்றார்” என்றார் கிஞ்சனர். “அவனுக்கு உண்பதெப்படி என்று அசரர் கற்பித்தார். அதன்பின் அவன் உடுப்பதெப்படி என்று கற்றுக்கொண்டான். வாழ்க்கையின் அனைத்தையும் கற்றுக்கொண்டான். விதேகம் வளர்ந்து பேரரசானது அதன்பின்னர்தான் என்பார்கள். அசரர் அவனது அவையாசிரியராக இறுதிவரை இருந்தார்.”

பீமன் உண்டு முடித்து எழுந்து கைகழுவியபின் ஏப்பம் விட்டபடி திரும்பி “உண்பதை நான் விலங்குகளிடமிருந்து கற்றுக்கொண்டேன்” என்றான். “அதற்கு நான்கு நெறிகள்தான். இவ்வுணவு அரிதானது என எண்ணுதல். உண்ணும்போது உணவை மட்டுமே எண்ணுதல். வீணடிக்காது உண்ணுதல். பகிர்ந்துண்ணுதல்” என்றான். “அழுகிய ஊனை கிழித்துண்ணும் கழுதைப்புலிகள் கூட அப்படித்தான் உண்கின்றன. அவை உண்ணும் அழகு நடனம்போலிருக்கும்.”

“நல்லுணவு உண்ணப்படும் இடத்தில் உவகை நிறைந்திருக்கவேண்டும். அங்கே தெய்வங்கள் சூழும்” என்றார் கிஞ்சனர். “மண்ணில் உண்ணப்படும் ஒவ்வொரு அன்னமும் அன்னத்திற்கு அளிக்கப்படும் அவியே.” பீமன் “இனிய சளையீச்சையை வணங்குகிறேன். அதன் ஓலைகளில் இந்நேரம் குளிர்ந்த தென்றல் தழுவட்டும். அதன் வேர்களுக்கு அன்னை முலைகனிந்தூட்டட்டும்” என்றான்.

சிசிரன் வந்து பின்னால் நின்றான். பீமன் திரும்பியதும் “சூதர் அமர்ந்துவிட்டனர் இளவரசே” என்றான். பீமன் திரும்பி அடுமனையாளர்களிடம் விடைபெற்றுவிட்டு அவனுடன் நடந்தான். “இத்தனை நல்லுணவுக்குப்பின் கதைகேட்பதைப்போல சோர்வு அளிப்பது பிறிதில்லை சிசிரரே. என் கதையை கொண்டுவந்திருந்தால் பயிற்சி செய்யத் தொடங்கியிருப்பேன்” என்றான். சிசிரன் புன்னகைத்து “கதைகேட்பதும் பயிற்சியே” என்றான்.

கூடத்தில் ஏற்றப்பட்ட பன்னிரு திரி நெய்விளக்கின் முன்னால் மூன்று சூதர்கள் அமர்ந்திருந்தனர். பீமன் வருவதைக் கண்டதும் முதியவர் மட்டும் தலைவணங்கினார். பீமன் பீடத்தில் அமர்ந்துகொண்டான். நடுவே அமர்ந்திருந்த முதியவர் விழிகளால் இருபக்கமும் அமர்ந்திருந்தவர்களை தொடங்கச் சொன்னார். முழவும் யாழும் ஒலிக்கத் தொடங்கின. முதியவர் இறைவணக்கங்கள் பாடி பாஞ்சாலனின் குலத்தையும் கொடியையும் கோலையும் வாழ்த்தினார். கதைகேட்கும் பீமனின் குலத்தை வாழ்த்தினார். “ஜயவிஜயர்களால் எந்நேரமும் தழுவப்படும் மலைபோன்ற தோள்களை வணங்குகிறேன். வெல்வதற்கு அவர்களுக்கு இப்புவியே உள்ளபோது அவர்கள் எப்படி ஓய்வெடுக்க முடியும்?”

பீமன் புன்னகைத்துக்கொண்டான். சற்று கண்சொக்குவதுபோல் உணர்ந்தான். “இளவரசே, தாங்கள் விரும்பும் கதையை சொல்லலாம். பாடுகிறோம்” என்றார் முதுசூதர். பீமன் “எனக்கு முன்னரே தெரிந்த கதையைத்தானே நான் கேட்கமுடியும்?” என்றான். “நான் அறியாத கதை ஒன்றைப்பாடுக.” முதுசூதர் புன்னகையுடன் மீசையை நீவியபடி “பாரதவர்ஷத்தில் உள்ள அறியாத நாடொன்றைச் சொல்லுங்கள்… அந்நாட்டுக்கதையைப் பாடுகிறேன்” என்றார்.

பீமன் சிறிய கண்களில் சிரிப்புடன் “இங்கிருந்து வடக்கே சென்றால் எந்த நாடு வரும்?” என்றான். “இங்கிருந்து வடக்கே உசிநாரநாடு. அதற்கப்பால் குலிந்த நாடு.” பீமன் ”அதற்கப்பால்?” என்றான். “அதற்கப்பால் கிம்புருடநாடு… அங்கே வெண்முகில்களில் நடக்கக் கற்றவர்கள் வாழ்கிறார்கள்.” பீமன் தலையை அசைத்து “சரி, அதற்குமப்பால்?” என்றான். சூதர் சிரித்து “அதற்கப்பால் ஸ்வேதகிரி. ஹிமவானின் வெண்பனி மலையடுக்குகள்” என்றார்.

“அதற்கப்பால்?” என்றான் பீமன். ”அத்துடன் ஜம்புத்வீபம் முடிவடைகிறது. அதற்கப்பால் ஒன்றுமில்லை” என்றார் சூதர். “சரி அங்குள்ள கதையைப்பாடுக” என்றபடி பீமன் சாய்ந்துகொண்டான். சூதர் கைகாட்டி “வெண்பனி பெய்கிறது. எங்கும் வெண்மை நிறைந்திருக்கிறது! வெண்பனி பெய்கிறது. எங்கும் வெண்மை நிறைந்திருக்கிறது! “ என்று பாடினார். அவ்விரு வரிகளையும் மீண்டும் மீண்டும் பாடினார். “கதையைத் தொடங்குங்கள்” என்றான் பீமன். “இளவரசே, அங்கு இவ்விரு வரிகளில் உள்ள கதை மட்டுமே நிகழ்கிறது” என்றார் முதுசூதர். பீமன் வெடித்துச் சிரித்து தொடையில் அறைந்து “நன்று! நன்று” என்றான்.ந்

பின்பு மீசையை நீவியபடி “சரி, இங்கிருந்து தெற்கே?” என்றான். “சேதிநாடு. அப்பால் புலிந்த நாடு. அதற்கப்பால் விந்தியமலை.” பீமன் சிரித்துக்கொண்டு “சரி, அதற்குமப்பால்?” என்றான். ”விதர்ப்பம், வாகடகம்,அஸ்மாரகம், குந்தலம் என்று சென்றுகொண்டே இருக்கின்றன நாடுகள். அப்பால் வேசரம் திருவிடம் அதற்கப்பால் புனிதமான காஞ்சி பெருநகர். கல்வியும் கலையும் செறிந்த இடம். அங்குள்ள கதையொன்றைச் சொல்கிறேன்.”

“இல்லை, அதற்கும் அப்பால்?” என்றான் பீமன் “அதற்குமப்பால் தமிழ்நிலம்” என்றார் முதுசூதர். “சேரர்கள் சோழர்கள் பாண்டியர்கள். பாண்டியர்களின் தொல்நகரமான மாமதுரை… கருங்கால் பெருங்கோட்டை எழுந்தமையால் மதில்நிரை. கடல் அருகே அமைந்து அலைகள் கொண்டமையால் அலைவாய்.” பீமன் “அதற்கும் அப்பால்?” என்றான். “அதற்குமப்பால் தீவுகள். மணிபல்லவம், நாகநகரி.” பீமன் “சரி அவர்களின் கதைகளைச் சொல்லுங்கள்” என்றான்.

முதுசூதர் தலைவணங்கி “அலைகளின் மேல் கட்டுமரம் மிதக்கின்றது. நாகர்கள் மீன்பிடிக்கிறார்கள். இனிய தென்னங்காய்களுடன் மீனை உண்கிறார்கள். மீண்டும் காலையில் எழுகிறார்கள். மீன்பிடிக்கிறார்கள். இனிய தென்னங்காய்களுடன் மீனை உண்கிறார்கள். மீண்டும் காலையில் எழுகிறார்கள்” என்றார். சிரித்தபடி பீமன் கையை காட்டினான். முதுசூதர் சிரித்து “அவ்வளவுதான் அவர்களின் கதை இளையவரே. ஆனால் கலைமகள் தோன்றி கலைதோன்றா காலம் முதல் இது நிகழ்கிறது. நாம் முடிவில்லாமல் இதை பாடமுடியும்” என்றார்.

பீமன் நகைத்தபடி தொடையில் தட்டினான். “நன்று! பிறிதொருநாள் விடியும்வரை இந்தக்கதையைக் கேட்கிறேன். பாண்டியநாட்டின் கதையைச் சொல்லும்” என்றான். சூதர் தலைவணங்கினார். “அங்கு ஏதேனும் நிகழுமா? இல்லை முத்துக்குளித்தபடியே இருப்பார்களா?” என்றான் பீமன். முதுசூதர் “பாண்டிய இந்திரத்யும்னனின் கதையைச் சொல்கிறேன் இளவரசே” என்றார். “சொல்லும்” என பீமன் சாய்ந்துகொண்டான்.

கண்மூடி சிலகணங்கள் அமர்ந்துவிட்டு யாழின் மீட்டலுடன் தன் குரலை இழையவிட்டு பாட்டும் உரையுமாக முதுசூதர் தொடங்கினார். “விஷ்ணுவிலிருந்து பிரம்மன் பிறந்தான். பிரம்மனிலிருந்து சுயம்புமனு எழுந்தார். சுயம்புமனுவின் மைந்தர் பிரியவிரதர். அவரது குருதிவழி வந்தவர் அக்னீத்ரன். அவரது மைந்தர் பிரியவிரதன். அவருடைய கொடிவழியில் நாபி, ரிஷபன், பரதன், சுமதி என விரியும் குலமுறையில் வந்த மைந்தர் இந்திரத்யும்னர். அவர் வாழ்க!”

“ஆழிப்பெரும்பசு நக்கீத்தீராத அன்புக்குழவி மாமதுரை. துமிமழை பெய்யும் குளிர்நகர். அலையோசை சூழ்ந்த சுழல்வட்டத் தெருக்கள் கொண்ட வலம்புரிச்சங்கு. குமரியன்னை விழிதொட்டு அணையாது புரக்கும் அகல்சுடர்” என்றார் முதுசூதர். ”அந்நகரில் அரியணை அமர்ந்து வெண்குடை கவித்து முடிசூடி கோலேந்தி கடல்முகம் புரந்தான் இந்திரத்யும்னன். ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் அவன் கோலுக்குத் துணை நின்றன.

ஒருமுறையும் அவன் கோல் தாழவில்லை. ஆழிக்கைகள் அணைத்த பெருநகரை அடையும் எதிரியென எவரும் இருக்கவில்லை என்பதனால் உறைவிட்டு உடைவாளை உருவாமலேயே ஆண்டு வயதமைந்தான் அரசன். அறம் நிறுத்தி குலம் பெருக்கி அவன் நாடாண்டு முதிர்ந்தான். மண்ணில் விழுந்த வானுறை மூதாதையரின் வாழ்த்துச்சொல் அவன் என்றனர் புலவர்.

ஆவது அறிந்து அடைவது எய்து மூவது வென்று முதிர்வது அறிந்த இந்திரத்யும்னன் தன் மைந்தரை அழைத்து அவரவர் பணிகளை அறிவித்து மூத்தவன் கையில் முடியும் கோலும் அளித்து காடேகினான். மாமதுரை அருகே பஃறுளிப்பெருநதிக் கரையில் அமைந்த குமரிச்சோலை எனும் குறுங்காட்டில் சிறுகுடில் அமைத்து அதில் காயும் கனியும் உண்டு ஊழ்கமியற்றி விண்நுழையும் வழிதேடினான்.

நாள் செல்லச்செல்ல அவன் உடல் வலிமை குன்றி மெலிந்தது. கைகள் மெலிந்து உலர்சுள்ளியாகின. கால்கள் அவன் உடல் தாளாமலாயின. கிளைவிரித்த ஆலமரத்தடியில் வடதிசை நோக்கி தர்ப்பைப்புல் விரித்து அமர்ந்து விழிமூடினான். அவனில் எரிந்த ஐம்புலன்களும் அணைந்து பின்வாங்கின. தன்மேல் விழுந்த ஆலிலைச்சருகுகளைக்கூட எடுத்து விலக்கும் ஆற்றலற்றவையாயின அவன் விரல்கள். விழிதிறந்து நோக்கும் விசையற்றவையாகின அவன் இமைகள். எரியும் விடாய் கொண்டிருந்தாலும் நீரென்று சொல்லி நெகிழமுடியாதவை ஆயின அவன் இதழ்கள்.

ஆனால் அவன் உடல் மெலிய மெலிய உள்ளுறைந்த எண்ணம் வலுத்தபடியே சென்றது. பேருருவம் கொண்ட யானையென்றாகி அவன் மரங்களை வேருடன் பிடுங்கி உண்டான். காடதிர சின்னம் விளித்து துதிக்கைசுழற்றி நடந்தான். எதிர்பட்ட பெரும்பாறைகளைத் தூக்கி மலைச்சரிவில் வீசினான். மதம் வழியும் மத்தகம் கொண்ட பிடியானைகளை மறித்து மலையடுக்குகள் எதிரொலிக்க கூவியபடி புணர்ந்தான். துயிலற்றவனாக மலைச்சரிவுகளில் அலைந்தான்.

அவன் தன்னிலாழ்ந்து இருக்கையில் அவன் நாவில் இறுதித்துளி நீர் விடும்பொருட்டு அவனுடைய அறிவாசிரியராகிய அகத்தியர் அங்கே வந்தார். சருகுமூடிக்கிடக்கும் அவனைக் கண்டு அணுகி அமர்ந்து அவன் உலர்ந்த இதழ்களை நோக்கி தன் கொப்பரைக் கமண்டலத்தை சரித்தபோது அவன் உதடுகள் அசைவதைக் கண்டார். ஓசையின்றி அவன் சொன்னதென்னவென்று அறிந்து திகைத்து எழுந்தார். ”உளமறுவதற்குள் உடலறுக்க எண்ணிய மூடா. நீ விழைவதெல்லாம் அடைந்து எல்லை கண்டு அமைக!” என்று தீச்சொல்லிட்டு திரும்பிச்சென்றார்.

அங்கிருந்து மதமொழுகும் பெருங்களிறாக எழுந்தான் இந்திரத்யும்னன். மரங்களை கலக்கியபடி சுழல்காற்றென காட்டுக்குள் புகுந்தான். விழுதோடு கிளைபரப்பிய ஆலமரங்களெல்லாம் அவனுக்கு முன் கோரைப்புற்களாயின. உச்சிமலைகளில் ஏறி அங்கிருந்த பெரும்பாறைகளை அறைந்து உருட்டிவிட்டு தன் கரியபேருடல் திகழ நின்று துதிக்கை தூக்கி அறைகூவினான். “எனக்கு நிகர் எவர்?” என்று முழங்கினான்.

தென்குமரி நிலத்தின் நூறு மலைமுடிகளை அவன் வென்று சென்றபோது எதிரே குறுமுனி தன் கையில் கொப்பரைக் கமண்டலத்துடன் வருவதைக் கண்டு துதிக்கை சுழற்றி பிளிறியபடி அணைந்தான். அவர் தன் கமண்டலத்திலிருந்த நீரில் சில துளிகளை எடுத்து அவன் மேல் தெளித்து “உணர்க!” என்றார். அவர் காலடியில் ஒரு சின்னஞ்சிறிய கருவண்டாக அவன் சுழன்றான். அவர் அவனை தன் சுட்டு விரல் நுனியால் தொட்டு எடுத்து கண்முன் கொண்டுவந்தார்.

துதிக்கை தூக்கித் தொழுது இந்திரத்யும்னன் கேட்டான் “நான் விழைவதென்ன? எந்தையே, நான் ஆகப்போவதென்ன?” முனிவர் சிரித்து “உன் அரசவாழ்க்கையில் நீ எதிரியையே அறியவில்லை மைந்தா. நிகரான எதிரியை அறியாதவன் தன்னையும் அறியாதவனே” என்றார். செவிகேளா சிற்றொலியில் பிளிறி இந்திரத்யும்னன் கோரினான் “என் எதிரியெவர் என்று சொல்லுங்கள் ஆசிரியரே!”

அகத்தியர் அவனை நோக்கி புன்னகைத்து சொன்னார். “வடதிசை செல்க! அங்கே அருவிகளை வெள்ளி அணிகளாக அணிந்து பச்சை மேலாடை போர்த்தி முகில்ளைத் தொடும் மூன்று தலைகளுடன் நின்றிருக்கும் திரிகூட மலையை காண்பாய். அதனருகே தேவலசரஸ் என்னும் குளம் உள்ளது. அதற்குள் உனக்கு நிகரானவன் இருக்கிறான். எங்கு நீ மத்தகம் தாழ்த்துகிறாயோ அங்கு உனக்கு விடுதலை அமையும்.”

அவர் விரலில் இருந்து மண்ணில் விடப்பட்ட இந்திரத்யும்னன் பேருருவம் கொண்டு துதிக்கை சுழற்றி பெருந்தந்தங்கள் உலைய தலையசைத்து காட்டுக்குள் புகுந்து திரிகூடமலையடியில் தேவலசரஸ் என்னும் பெருங்குளத்தை அணுகினான். நீரலைத்துக் கிடந்த அந்தக்குளம் அவனுக்காகவே நூற்றாண்டுகளாக அங்கே காத்திருந்தது.

தேவலர் என்னும் முனிவர் தவம்செய்வதற்காக அவர் ஆணைப்படி பூதங்களால் அகழப்பட்ட பெருங்குளம் அது. அதனருகே ஒரு நெல்லி மரத்தடியில் அவர் அமர்ந்து நூற்றாண்டுகளாக ஊழ்கத்தில் மூழ்கியிருந்தார். ஒருமுறை சித்திரை முழுநிலவில் ஏழு வண்ணங்கள் கொண்ட ஏழு அப்சர தோழியருடன் கந்தர்வன் ஒருவன் விண்ணில் முகில்விளையாடினான். சினந்து ஒருத்தி விலகுகையில் கனிந்து ஒருத்தி அவனை அணைத்தாள். இருண்டு ஒருத்தி மறைகையில் ஒளிர்ந்து ஒருத்தி அருகணைந்தாள்.

ஆயினும் அவன் முகில்களை அள்ளிஅள்ளி தேடிக்கொண்டிருந்தான். ”என்ன தேடுகிறீர்கள் தேவா?” என்றாள் அப்சரப்பெண். “இன்னும் இளமங்கையர் இங்குண்டோ என்று” என்றான் கந்தர்வன். “நாங்கள் ஏழுபெண்டிர் இங்குளோம் அல்லவா?” என்றாள் அவள். “விண்ணில் ஏழுக்கு அப்பால் எண்ணிக்கை இல்லை என்று அறியமாட்டீரா என்ன?”

“கன்னியே, காமத்திற்கு ஏழாயிரம் வண்ணங்கள். ஏழுகோடி வடிவக் கோலங்கள். ஆண்மகன் ஆழத்தை நிறைக்க கணம்தோறும் பெருகும் பெண்கள் தேவை என்று அறிக” என்றான் அவன். சிரித்தபடி அவனைத் தழுவிய அப்சரப்பெண் “தன்னை தான் பெருக்கி முடிவிலா உருவம் கொண்டு எழ பெண்னால் முடியும். அவளுக்குத் தேவை ஓர் ஆடி மட்டுமே” என்றாள்.

ஆடியைத்தேடி அவர்கள் விண்வழியே பறந்துசென்றபோது தேவலரின் தவத்தால் நூற்றாண்டுகாலமாக தூய்மை அடைந்து தெளிந்து தெளிந்து படிகப்பெரும்பரப்பாகக் கிடந்த தேவலசரஸை கண்டார்கள். கந்தர்வன். முகில் விட்டிறங்கி அதில் அவர்களுடன் காமநீராடினான். ஏழு பெண்கள் தங்கள் படிமைகளை பெருக்கிப் பெருக்கி பெருவெளியாகிச் சூழ்ந்து அதில் அவனை சிறையிட்டனர். ஒன்றைத்தொட்டு ஓராயிரத்தை எழுப்பி திகைத்து திகைத்து திளைத்தாடினான் அவன்.

பின் சலித்து சோர்ந்து மூழ்கி ஆழத்தை அடைந்தான். தவித்து உந்தி மேலெழுந்தவனை அணுகி தாமரைக்கொடிக் கைகளால் கால்பற்றி இழுத்து அடியில்கொண்டுசென்று சூழ்ந்து நகைத்துத் திளைத்தனர் பெண்கள். அலைநெளிவுகளில் எல்லாம் அவர்களும் நெளியக் கண்டான். முடிவற்றது பெண்ணுடல், முடிவற்றது பெண்ணின் மாயம் என்றறிந்தான்.

குளத்தின் ஆழத்தை தொட்டகாலை உந்தி அவன் மேலெழுந்தபோது நீர் கலங்கி அவனருகே கொல்லும் சிரிப்புடன் நெளிந்த நூறு கன்னியரை மறைக்கக் கண்டான். அக்குளத்தைக் கலக்குவதே தான் விடுதலை கொள்ளும் வழி என்று கொண்டான். ‘இதோ ஏழாயிரம் கோடி கன்னியரை மீண்டும் எழுவராக்குகிறேன்’ என்று அக்குளத்தைக் கலக்கினான். நூற்றாண்டுக்காலமாக அடியில் படிந்திருந்த வண்டலும் சேறும் எழுந்து மேலே வந்தன.

கலங்கிய நீரலைகள் எழுந்து வந்து நெல்லிமரத்தடியில் புற்றுக்குள் அமர்ந்திருந்த தேவலரைத் தொட சினந்தெழுந்த அவர் நீராடிக்கொண்டிருந்த கந்தர்வனை நோக்கி “நீ யார்? இது என் குளம். உன் பெயரென்ன?” என்றார். காமத்தில் களித்து கள்வெறி கொண்டிருந்த கந்தர்வன் “ஹூஹூ!” என்று கூவி பதில் சொன்னான். “சொல், உன் பெயரென்ன?” என்றார் தேவலர். “ஆம் அதுதான் என்பெயர், ஹூஹூ!” என்று அவன் கூவிச்சிரித்தான்.

“இனி உன் பெயர் அவ்வண்ணமே ஆகுக! நீர் விளையாட்டில் தன்னை மறந்த நீ இக்குளத்திலேயே ஆயிரம் வருடம் நீராடுக! உன்னை நிகர்வல்லமை கொண்ட ஒருவன் வந்து இழுத்துக் கரைசேர்க்கும் வரை உனக்கு மீட்பில்லை” என்று தேவலர் சொன்னார். ஹூஹூ ஒரு பெருமுதலையாக மாறி அந்தக்குளத்தில் வாழலானான். நீரின் அலையடிக்கும் எல்லைக்கு அப்பால் செல்ல அவனால் முடியவில்லை. கரைவந்த யானைகளையும் புலிகளையும் அவன் கவ்விக்கொண்டான். அனைத்தும் அவனுடன் நீருள் வந்து அவனுக்கு உணவாயின. பல்லாயிரமாண்டுகளாக அவன் காத்திருந்தான்.

நீரிலிறங்கி துதிக்கை விட்டு அள்ளிக்குடிக்க முற்பட்ட இந்திரத்யும்னனின் கால்களை ஹுஹு பற்றிக்கொண்டான். சினம் கொண்டு துதிக்கையால் அவனை அறைந்தும் மறுகாலால் மிதித்தும் இழுத்து கரைசேர்க்க முயன்றான் இந்திரத்யும்னன். சிலகணங்களிலேயே முற்றிலும் நிகர்வல்லமை கொண்டது அம்முதலை என்று அறிந்துகொண்டான். மலைகள் யானைகளாகி எதிர்க்குரலெழுப்ப சின்னம் விளித்து தரையை மிதித்து சேற்றைக்கலக்கி முதலையை இழுத்தான். நாற்புறமும் ஏரிநீர் அலையெழுந்து கரையை அறைய வாலைச்சுழற்றி நீரில் அடித்து துள்ளினான் ஹூஹூ.

இருவர் விசையும் மாறிமாறி எழுந்து விழுந்து பின் ஒற்றைப்புள்ளியில் முழுச்சமன் கொண்டன. அசைவின்மை ஒரு கணமாக ஒரு நாளாக ஆயிரமாண்டுகளாக நீடித்தது. இறுதிமுயற்சியாக முதலையை முழுவிசையாலும் கரைநோக்கி இழுத்தபோது இந்திரத்யும்னன் தலை தாழ்ந்தது. அக்கணம் ஹூஹூவின் முழு உடலும் கரை வந்தது. அப்போது மின்னல் என விண்ணிலெழுந்தது ஆழிக்குரியவனின் ஆழி.

மின்னல் தாக்கி துள்ளிச்சுருண்டு நீரிலமிழ்ந்தான் ஹூஹூ. ஒளிமிக்க பொன்னுருவுடன் கைகூப்பி அலைமேல் எழுந்தான். துதிக்கை கருகி பின்னால் சரிந்தான் இந்திரத்யும்னன். செம்மலர் செறிந்த ஒரு பூமரமாக காட்டில் எழுந்தான். இருவரும் முழுமை கொண்டனர். முதுசூதர் பாடி முடித்தார். “அணையாத காமம் கொண்ட வேழத்தை வாழ்த்துவோம். முடியாத காத்திருப்பு கொண்ட முதலையையும் வாழ்த்துவோம். அவர்கள் தங்களைக் கண்டடைந்த அமரகணத்தை வாழ்த்துவோம். ஓம் அவ்வாறே ஆகுக!”

அவர் கைகூப்பி யாழ் தாழ்த்தியபோது பீமன் சொல்மறந்து அவரையே நோக்கி இருந்தான். பின்பு பெருமூச்சுடன் எழுந்து “சொற்களையும் சொல்லின்மைகளையும் உணர்ந்துகொண்டேன் சூதரே” என்றான். “மதுரை மிகமிக அகலே இருக்கிறது” என்றார் சூதர் நடுங்கும் முதியகைகளை தூக்கி அவனை வாழ்த்தியபடி. “ஆனால் நாம் அதை மிக எளிதில் அணுகும் ஒரு குகைப்பாதை உண்டு…” பீமன் தலையசைத்து “ஆம்” என்றான்.

பரிசில்பெற்று சூதர்கள் கிளம்பிச்சென்றனர். பீமன் அவர்களைத் தொடர்ந்து படகுத்துறை வரைக்கும் சென்றான். அவர்கள் மீண்டும் அவனை வணங்கி பலகை வழியாக ஏறி உள்ளே சென்று அமைந்ததும் ஏதோ கூவ விரிந்த இதழ் போல பாய் விரிந்தது. படகு முகம் தூக்கி அலையில் ஏறிக்கொண்டது. கொடி படபடத்து படகை இழுத்துச்செல்வதுபோல தோன்றியது.

அவன் விண்மீன்களை நோக்கிக்கொண்டு நின்றிருந்தான். பின்னர் நினைத்துக்கொண்டு விண்ணில் தேடினான். நான்காம் நிலவை காணமுடியவில்லை. மேலும் மேலும் விண்மீன்கள்தான் இருண்டவானின் ஆழத்திலிருந்து எழுந்து வந்துகொண்டிருந்தன. சிசிரன் அருகே வந்து நின்று “இளவரசியார் கிளம்பிவிட்டார்கள். இன்னும் சற்று நேரத்தில் அணிப்படகு கரைசேரும்” என்றான். அவன் தலையசைத்தபின் மீண்டும் விண்மீன்களை நோக்கினான் பீமன்.

தருமன் அத்தனை விண்மீன்கூட்டங்களுக்கும் பெயரும் கதையும் சொல்வான் என்று எண்ணிக்கொண்டான். சிறுவயதில் அவனை அருகே அமர்த்தி மீண்டும் மீண்டும் அந்த விண்மீன்களை அவனுக்குக் கற்பிக்க முயன்றிருக்கிறான். பின்னர் சலித்து “மந்தா, உன் அகத்தே இருப்பது பெருங்கற்பாறை” என்பான். பீமன் புன்னகைத்துக்கொண்டான். அவனுக்கு எப்போதுமே விண்மீன்கூட்டம் பெரும் பொருளின்மையையே அளித்தது.

சதசிருங்கத்தின் காடு. அங்குள்ள ஏரி. அதன்பெயர், ஆம் அதன் பெயர் இந்திரத்யும்னம். சூதர் சொன்ன கதை அவனை கனவிலாழ்த்தியது அதனால்தான். ஏரியின் நீலநீர்விரிவின் கரை. அங்கே விண்மீன்கள் மேலும் துல்லியமாகத் தெரியும். மிக அருகே. கைநீட்டினால் அள்ளிவிடக்கூடும் என்பதுபோல.

“மூத்தவரே இவற்றை கலைத்திட்டவர் யார்?” என்றுதான் கேட்டுக்கொண்டிருந்தான். தருமன் சலிப்புடன் “பிரம்மன்” என்றான். “ஏன்?” என்றான் பீமன். தருமன் மேலும் சலிப்புடன் “ஏனென்றால் பிரம்மன் கலைத்துப்போட விழைகிறான். மனிதர்கள் அடுக்கிவைக்க விழைகிறார்கள்” என்றான். ”ஏன்?” என்று பீமன் மீண்டும் கேட்டான். தருமன் ஒன்றும் சொல்லவில்லை. “ஏன்?” என்று மீண்டும் கேட்டபின் பீமன் மீண்டும் ஓசையின்றி “ஏன்” என்றான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைநவீன அடிமைமுறை-கடிதம்
அடுத்த கட்டுரைமீசை