ஏப்ரல் ஒன்றாம் தேதி எனக்கு ஏற்பட்ட மகத்தான மனத்தடுமாற்றத்தைப்பற்றி நிறையபேர் கேட்டார்கள். என்னுடைய நோக்கம் உண்மையில் பகடி அல்ல. ஏப்ரல் ஒன்று ஆனதனால் அதைப் பயன்படுத்திக்கொண்டே, அவ்வளவுதான். இந்தக்கட்டுரை ஒரு பரிசோதனை மட்டுமே.
இந்த கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளின் கணிசமானவை — கிட்டத்த கால்பங்கு– ஏதோ ஒருவகையில் அந்த அற்புதங்களை நம்பியோ அல்லது நிராகரிக்க முடியாமலோ எழுதப்பட்டவை. அதுதான் என்னுடைய கேள்விக்கான இடம். எப்படி அற்புதங்களுக்கான இந்த வேட்கை நம்முடைய மனத்தில் எழுகிறது?
என்னுடைய இந்த இணையத்தளத்தில் பௌதிக விதிகள் என்பவை மனிதன் அன்ற சின்னஞ்சிறு உயிரினத்தால் மீறக்கூடிய அளவுக்கு எளிமையாக இருக்க நியாயமில்லை என்றுஎ ழுதியிருக்கிறேன். அவை மகத்தானவை, ஆகவே அவையே அற்புதங்கள். அவற்றை ஒருவர் மீற முடிய்ம் என்றால் அவற்றை உருவாக்கிய இறைவன் என்ற கருத்தே அடிபட்டு போகிறது — அதாவது அற்புதம் என்ற பேச்சே இறைமறுப்பாகும். அதுவும் சமீபமாக அற்புதங்களுக்கு எதிராக விரிவாக எழுதியிருக்கிறேன். இருந்தும் எப்படி என் இணையதள வாசகர்களிலேயே ஒரு சாராருக்கு அந்த நம்பிக்கை தேவையாகிறது?
சின்னஞ்சிறு வயதில் குழந்தை எதிர்கொள்ளும் முதல் பிரம்மாண்டமே பௌதிக விதிதான். ஒரே சமயம் இரு நாற்காலிகளில் இருக்க முடியாதென்ற விதி. ஏன் என்னால் அங்கே போக முடியவில்லை, ஏன் சின்ன பாத்திரத்தில் பெரிய பாத்திரத்தை நுழைக்க முடியவில்லை என்று குழந்தை பீதியடைகிறது. குழம்புகிறது. விழுந்து அடிபட்டு ரத்தம் சிந்தி பௌதிக விதிகளை மீறமுடியாதென்று அது புரிந்துகொள்கிறது.
ஆனால் அதற்கான விழைவு மனதுக்குள் எங்கோ இருந்துகொண்டே இருக்கிறது. எல்லா குழந்தைக் கதைகளும் பௌதிக விதிகள் மீறப்படுவதைப்பற்றிப் பேசுபவையே. எல்லா கனவுகளிலும் பௌதிக விதிகள் மீறப்படுகின்றன. எப்போதுமே நம் மனம் மாயாஜாலங்களுக்காக ஏங்குகிறது. அந்த ஆழ்மன விழைவை நாம் கண்காணிப்பதில்லை. நம்மையறியாமலே அதற்கு ஆட்படுகிறோம்.
நாம் அறியும் ஒரு யதார்த்தம் உண்மை. மனித மனம் அந்த பௌதிக விதிகளுக்கு கட்டுபப்ட்டதல்ல. ஆகவே மனதின் அபாரமான ஆற்றலால் ஏதேனும் ஒரு வழியில் பௌதிக விதிகளை வெல்ல முடியுமா என நாம் எண்ணுகிறோம். அத்துடன் அதில் நம் அகங்காரமும் கலந்துகொள்கிறது. இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் நம் இடம் மிகமிகச் சிறிதே, நாம் அற்பமான துளிகளே என நாம் உணர்வதில்லை.ந் அம்மை பிரபஞ்ச நாயகமாக கற்பனைசெய்துகொள்கையில் அந்த அற்புதங்களை நிகழ்த்துவது சாத்தியமே என நினைக்கிறோம்.
அற்புதம் ஒன்று உள்ளது. இந்தகக்தை நடராஜகுருவின் உரையில் வருகிறது. நதியில் ஒரு சருகு ஒரே திசைக்கே செல்ல முடியும். அந்நதியில் போகும் படகு மூன்று திசைகளை தேர்வுசெய்ய முடியும். அந்த நதியில் உள்ள மீனோ நான்கு திசையிலும் செல்ல முடியும். அந்த நதிக்குமேல் பறக்கும் பறவை ஐந்து திசைக்கும் செல்லும்.
ஆனால் அதனருகே அமர்ந்து யோகம் செய்யும் யோகியின் மனம் எல்லா திசைகளுக்கும் செல்லும். அதுவே உண்மையான அற்புதம். அங்குமட்டுமே மானுடன் பௌதிக விதிகளை மீறிச்செல்கிறான்
11 comments
Skip to comment form ↓
mazenimdad
April 3, 2010 at 12:23 pm (UTC 5.5) Link to this comment
//அதாவது அற்புதம் என்ற பேச்சே இறைமறுப்பாகும்//
நல்ல பதிவு… தொடருங்கள்.
gomathi sankar
April 3, 2010 at 1:05 pm (UTC 5.5) Link to this comment
குழந்தையின் கண்களில் ஒரு மனிதன் சைக்கிள் ஓட்டுவதே கூட ஒரு அற்புதம்தான் இல்லையா ஆனால் அது வளர்ந்தால் அதுவும் சைக்கிள் ஓட்டமுடியும் நம்முள் அற்புதங்களை நம்பும் இச்சை உள்ளே இருப்பதுபோல் எல்லாவற்றையும் இல்லை உண்டு என்று இருமுனைகளாக புரிந்துகொள்ளும் தன்மையும் இருக்கிறது ஏனெனில் அது எளிதாக இருக்கிறது ஏதாவது ஒரு முடிவுக்கு வந்துவிடுவது ஆசுவாசமாக இருக்கிறது இல்லையெனில் அவனுக்கு பித்து பிடித்துவிடக் கூடும்
senthilkumarav
April 3, 2010 at 1:45 pm (UTC 5.5) Link to this comment
மனிதமனம் அற்புதங்களை தான் தேடிக் கொன்டிர்ருக்கிறது. காரணம் நாம் சிறுவயதுமுதலே கேட்டுவந்த கதைகளினூடாக அது இருக்கலாம். மற்றொன்று நம் முன் நடக்கும் நிகழ்வுகளால் இருக்கலாம்.
சங்கரன்
April 3, 2010 at 2:34 pm (UTC 5.5) Link to this comment
அன்புள்ள ஜெயமோகன்,
அற்புதங்கள் ,சித்திகள் ஞான தேடலின் பெரும் எதிரிகள் என்பது பொதுவான உண்மை. ஏனெனில் அது சாதகனை பாதை மாற்றி படு குழியில் தள்ளி விடும். ஆனால் விவேகானந்தர் சித்திகள் இயற்கை விதிகளின் ஒரு பகுதியே என்று கூறுகிறார். அவரது ராஜ யோகம், பதஞ்சலி யோக சூத்ர உரை , மனத்தின் ஆற்றல் பற்றிய கட்டுரைகளில் இதைக் காணலாம். மற்றும் அவரே தான் நேரில் கண்ட ஒரு ஹைதராபாத் பிராமணரின் அற்புதத்தையும் பதிவு செய்திருக்கிறார். இதை பற்றி தங்களின் கருத்து ?
parthi6000
April 3, 2010 at 3:00 pm (UTC 5.5) Link to this comment
அன்புள்ள ஜெ.
அற்புதங்கள் எனப்படுபவை வெறும் கையில் திருநீறு வரவலைப்பது, மோதிரம் வரவலைப்பது என்று நானும் நம்பவில்லை. மனிதன் தன் புறத்திலிருந்து பெற்ற அறிவால் பொளதிகவிதிகளுக்கு எதிரான அறிவியல் சாதனங்களை உருவாக்கி கொண்டுள்ளான். அப்படி என்றால் தன் அக உணர்வு அதிகரிக்கும் போது பிரபஞ்த்துடன் கலக்கும் போது அவனால் நம் பௌதிக அறிவுக்கு அப்பால் இயங்க முடியும் என்றே என்னால் நம்ப முடிகிறது. நம் முன்னோர்கள் வானவியல் கலைகளை தன் அக உணர்வால் பொளதீக விதிகளுக்கு அப்பால் கண்டறிந்தார்கள்.
அட்வகேட் பார்த்திபன்
திருப்பூர்
ramji_yahoo
April 3, 2010 at 3:23 pm (UTC 5.5) Link to this comment
நல்ல பதிவு ஜெமோ, இது குறித்து இன்னும் விரிவாக எழுதுங்கள் தயவு செய்து.
ganesan
April 3, 2010 at 4:54 pm (UTC 5.5) Link to this comment
அன்புள்ள ஜெயமோகன்,
ஒரே கேள்வியை இரண்டாம் முறையாக கேட்டு உங்களை தொந்தரவு செய்கிறேன் என்று நினைக்கிறேன்.
நம் மக்களுக்கு ஆன்மிகம் வேறு, பக்தி (அற்புதம், மாய மந்திரம் அடங்கியது) வேறு என்று புரியவைக்கமுடியாது என்றே தோன்றுகிறது. உங்கள் பிராயச்சித்தம் வீணாகின்றதா?
– கணேசன்
Marabin Maindan
April 3, 2010 at 7:57 pm (UTC 5.5) Link to this comment
சைவ மரபில்,இறையடியார்களுக்கு நிகழும் அற்புதங்கள் பற்றிய குறிப்புகள்
அகச்சான்றுகளுடன் காணப்படுகின்றன.ஆனால் அவை பக்தியின் பக்க விளைவுகளே தவிர பக்தியின் நோக்கமன்று என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது.
பெரிய புராணத்தின் தொடக்கத்தில் மனுநீதிச் சோழனின் வரலாறு பேசப்படுகிறது.இத்தனைக்கும் மனுநீதிச் சோழன் 63 அடியார்களில்
ஒருவரல்லர்.சோழனின் மகன் தேர்க்காலில் விழுந்து கன்றொன்று
இறக்கிறது.தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை அடிக்கிறது.தன் மகனை
தேர்க்காலில் சாகச் செய்கிறார் சோழன்.சிவனருளால்,கன்று-இளவரசன்
உயிர் பெறுகின்றனர்.இதைச் சொன்ன கையோடு,”இதைப்பார்த்து வியந்து நிற்க வேண்டாம்’என்று சொல்கிறார் சேக்கிழார்.அதற்கு அவர் சொல்லும் காரணம் மிக எளிமையானது.”யார்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத செயலுளதோ”!
அடுத்து நிகழும் 63 அடியார்களின் சரித்திரங்களையும்,அவற்றில் நிகழும் அதிசயங்களையும் எதிர்கொள்ள,தாண்டிச்செல்ல சேக்கிழார் பயன்படுத்தும் உத்தி இது.
இறைசக்திக்குப் பாத்திரராகிறவர் வாழ்வில் அற்புதங்கள் சாத்தியம்.அவற்றைப் பக்க விளைவுகள் என்று புரிந்து கொள்பவர்கள்,
அடுத்த படிநிலைக்கு நகர்கிறார்கள்
K.R அதியமான்
April 6, 2010 at 11:56 am (UTC 5.5) Link to this comment
Dear J,
Hope you must have read Somerset Maughaum’s ‘Razaor’s Edge’, a very important novel in which an important character is based on Ramanar. The importance or unimportance of ‘miralces’ are beautifully expalined by Maughaum. It is a must read for all who are interested in philosophy and life.
bala
April 6, 2010 at 10:01 pm (UTC 5.5) Link to this comment
அன்புள்ள அதியமான்,
மாம் எழுதியது உண்மையா என்று ரமணாசிரக் குறிப்பேடுகளில் சரி பார்த்துக் கொள்ளவும்.
பாலா
Tharamangalam Mani
April 8, 2010 at 11:13 am (UTC 5.5) Link to this comment
அன்புள்ள ஜெமோ,
spirituality க்கும், religion க்கும் வித்யாசம், முதலாவது, தேடுவது. பின்னது நம்புவது. ( spirituality உண்மையை தேடுவது religion உண்மையை நம்புவது. – Jaggi வாசுதேவ்) தேடலில் வுள்ள பல நிலைகளில், பல நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இவற்றில் சித்து எனப்படும் மாயா விளையாட்டுக்களும் ஒன்று. பல சாமியார்கள் இந்த சித்துக்கள் கிடைத்தவுடனே தேடலை கைவிட்டு விடுகிறார்கள். இவை இவர்களுக்கு பக்தி வியாபாரத்திற்கு வெகுவாக வுதவுகின்றன. இத்தகைய சாமியார்கள் ஒருபோதும் முடிவை அடைவதில்லை. இறுதி இலக்கை மட்டும் குறியாக கொண்டவர்களுக்கு இந்த magickugal மிக சுளுவானதாக இருப்பினும், அவர்கள் அதை சட்டை செய்வதில்லை. ரமணர் ஒரு சிறந்த எடுத்துகாட்டு. – இந்த கருத்து நான் படித்த கேட்ட விஷயங்கில் இருந்து புரிந்து கொண்டது. தங்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்