கீதை, கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கீதையைப் பற்றிய உங்களின் முந்தைய கட்டுரைகள் வெளிவந்த போது, நவீன வாசகர்களுக்கு ஏற்றவகையில் கீதைக்கு நீங்களே ஒரு மொழியாக்கமும் விளக்கவுரையும் எழுதினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் ஏற்பட்டது. இப்போது முதல் இரண்டு அத்தியாயங்களையும் படிக்கிறபோது, இதற்கு முன்னோடியாகத்தான் அந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்கள் என்பது புரிகிறது. அர்ஜுன விஷத யோகமும் (மகத்தான மனத் தடுமாற்றம்), ஸாங்கிய யோகமும் (உலகாற்றும் நெறி) உங்கள் மொழி நடையில் படிப்பதற்குப் பரவசமாகவே இருக்கிறது. விளக்க உரையில் தரப்பட்டிருக்கும் ஏராளமான தகவல்களும் கருத்துக்களும் எனக்கு மிகப் புதியவை.

பள்ளி மாணவனாக, திடீரென மரபிலக்கியங்களால் கவரப்பட்டு குறளையும் சிலப்பதிகாரத்தையும் புறநானூற்றையும் கம்பராமாயணத்தின் சில காண்டங்களையும் படித்திருந்த வயதில், பகவத் கீதை படிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. பலசமயங்களில் புத்தகக் கடைகளிலும் நூலகத்திலும் கீதையைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு மேலோட்டமாகப் புரட்டியபடி நெடுநேரம் யோசித்துவிட்டு மீண்டும் ஷெல்ஃபிலேயே வைத்துவிட்டு வந்திருக்கிறேன். அந்த மனத்தடைக்குப் பல காரணங்கள்..

முதல் காரணம்.. கம்பராமாயணமோ குற்றாலக் குறவஞ்சியோ பக்தியிலக்கியங்களாக மனதுக்குத் தோன்றியதே இல்லை, அவற்றின் கவிச்சுவையே முன்னால் வந்து நின்றது. ஆனால் கீதையைப் பொறுத்தவரை அது இந்துக்களின் பைபிள் என்றுதான் புரிந்திருந்தது.

இரண்டாவது.. கர்ணன் திரைப்படமும், பாரதியாரின் பாஞ்சாலி சபதமும், பி.ஆர்.சோப்ரா  ரவி சோப்ராவின் ‘மகாபாரதம்’ தொலைக்காட்சித் தொடரும், மகாபாரத இதிகாசத்தின் மேல் உயர்ந்த மதிப்பை உருவாக்கியிருந்தன. அதன் தொடர்ச்சியாகவே நான் கீதையைப் படிக்க நினைத்ததும். ஆனால் கீதை ஒரு இடைச்செறுகள் என்ற கருத்து வலுப்பெற ஆரம்பித்தது நான் அதைத் தவிர்த்ததற்கு முக்கியக் காரணம். இடைச்செறுகல்கள் எப்போதுமே ஏமாற்றுவேலை, புராணங்களைத் திரிப்பவர்களின் உள்நோக்கம் நிச்சயம் நேர்மையானதாக இருக்காது என்ற எண்ணம் எனக்கிருந்தது. பைபிளிலும் கூட என் சிறு வயதிலிருந்தே நன்கு அறிமுகமாகியிருந்தது புதிய ஏற்பாட்டின் பகுதிகள்தான். ஆனால் பழைய ஏற்பாட்டை முழுக்கப் படித்தபோது அதுதான் உண்மையான பைபிள் என்றும் அவசியம் படிக்க வேண்டிய யூதர்களின் புராணம் என்றும் தோன்றியது. புதிய ஏற்பாட்டை அதன் இடைச்செறுகள் அல்லது துணை நூல் என்றும் மலைப் பிரசங்கத்தைத் தவிர்த்தால் அதில் படிப்பதற்கு ஒன்றுமில்லை என்றும் வலுவாகத் தோன்றியது.

மூன்றாவது காரணம்.. சிறுவயதிலிருந்தே எனக்கு கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் மீதிருந்த சார்புநிலை. நான் இனி சர்ச்சுக்குப் போவதில்லை என்று முடிவெடுத்து என்னை நானே ‘நாத்திகன்’ என்று அறிவித்துக்கொண்ட போது, தி.க. கருத்துக்களும் ஆட்கொண்டன. மனுநீதியும் கீதையும் வருணாசிரமத்தைக் கட்டியெழுப்பிக் காப்பாற்றுவதற்காக ஆரியர்களால் உண்டாக்கப்பட்டது என்கிற ‘உண்மை’யை நானே பலபேருக்குப் பரப்பியிருக்கிறேன்.

இறுதிக் காரணம்.. எப்போதோ ஏதோ ஒரு புத்தகத்தில் நான் படித்து ஆழமாக உள்வாங்கிக்கொண்ட ஒரு கருத்து! ‘கீதையை வெறுமனே படித்தால் புரியாது. அதற்கு ஒரு குரு அவசியம். காரணம் ஒவ்வொரு வரியாகப் படித்துப் புரிந்தால்தான் எந்தப் புத்தகத்தையும் முழுவதும் படித்துப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் கீதையைப் பொறுத்தவரை முழுவதையும் புரிந்துகொண்ட ஒருவருக்குத்தான் ஒவ்வொரு வரியும் புரியும். ஆகவே ஒரு குரு இல்லாமல் கீதையைப் படிக்கவே முடியாது’

இத்தனை ஆண்டுகள் கழித்து. உங்கள் இணையக் கட்டுரைகளைப் படித்தபோதுதான் கீதையின் முக்கியத்துவம் புரிந்தது. எனக்கு குரு கிடைத்துவிட்டதாகவே தோன்றியது. உங்களிடம் தொலைபேசியில் பேசியபோதுகூட அப்படிச் சொன்னதாக நினைவு. நீங்கள் தொடர்ந்து கீதையை விளக்கி எழுதவேண்டும். நான் இப்போது முழுக்க உள்வாங்கிக் கொள்வேனா தெரியாது. ஆனால் என்றாவது வாழ்க்கையின் சுழற்சியில் சிக்கித் தத்தளிக்க நேர்ந்தால் பற்றிக்கொள்வதற்கு இது உதவும் என்று மட்டும் உறுதியாகத் தோன்றுகிறது. முழுவதும் எழுதிமுடித்த பிறகு புத்தகமாகவும் ஈ புக் ஆகவும் வெளியிட வேண்டும். கப்பலில் எப்போதும் தயாராக இருக்கும் லைஃப் போட் போல அது பலருக்கு உதவலாம்.

சார்லஸ்.

..

அன்புள்ள சார்லஸ்

உங்கள் கடிதம் கிடைத்தது. கீதைக்கு பல உரைகள் உள்ளன. அவை காலத்தால் பழமையாகிவிட்டிருக்கின்றன. கணிசமானவை பக்தி என்ற கோணத்தில் விளக்கப்பட்டவையாக உள்ளன. இன்றைய வாசகனுக்கு அவை ஆர்வமூட்டுவதில்ல என்பதே நடைமுறை. கீதையின் வரிகளை படிக்கும்போது இயல்பாக ஒரு நவீன மனிதனுக்கு எழும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதாகவும் கீதை என்ற தத்துவ நூல் விவாதிக்கப்பட்ட விவாதசூழலை விரிவாக அறிமுகம் செய்வதாகவும் என் உரை இருக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. கடிதங்கள் அப்படி வந்திருப்பதை உறுதி செய்கின்றன. என் மனம் எப்போதுமே தத்துவ, அறநூல்களில் ஈடுபடுவது. என்றுமே கீதை,தம்மபதம்,பைபிள், குறள் போன்றவற்றை தொடர்ந்து கற்றுவருகிறேன். அடுத்து குறள் குறித்து உரை ஒன்றை எழுத எண்ணம் உண்டு.

பைபிளை விழுமியங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து ஒரு நூல் எழுதவேண்டுமெனற கனவும் உண்டு. கத்தை கத்தையாக குறிப்புகள் கையில் உள்ளன. அதாவது பக்தி ,விசுவாசம், சரணாகதி, மறு உலகம் என்று கிறித்தவ மதம் பைபிளைப்பற்றி ஒரு சித்திரத்தை அளிக்கிறது. கிறித்தவன் அல்லாத எனக்கு அதை ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை. என் வாசிப்பில் குலம்சார் விழுமியங்களில் தொடங்கி உலகுதழுவிய விழுமியங்களை நோக்கி மெல்ல வளர்ந்து செல்லும் நூல்களின் ஒரு தொகைவரிசையாகவே பைபிள் பொருள்படுகிறது. பழைய யூத நூல்களான போன்றவை குலநீதியின் தளத்தில் நிற்பவை. புதிய ஏற்பாடு உலகுதழுவிய விழுமியத்தை அடைவது. இந்தப்பயணத்தை நாம் பார்த்தோமெந்றால் புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டில் இருந்து முளைத்த இயல்பான விளைகனி என்று உணரலாம். கிறிஸ்து அதன் குரல். முழுமையாக எழுதி முடித்தால் ஒரு நல்ல நூலாக இருக்குமென எண்ணுகிறேன்.

பைபிள் சொல்லும் மீட்பு என்பது நியாயத்தீர்ப்பு நாளில் கல்லறை விட்டு எழுந்து சொர்க்கத்துக்குப் போய் பிதாவின் காலடியில் அமர்ந்து பாடல் இசைப்பது என்று எடுத்துக்கொள்ளாத ஒருவனுக்கு அது சொல்லும் மீட்பு என்பது உலகுதழுவிய, மானுடம் தழுவிய பேரறம், முழுமை விழுமியம் ஒன்றை தன் ஆளுமையாக அடைவது மட்டுமே என்பது புரியவரும். ஓரளவு அதை பின் தொடரும் நிழலின் குரலில் எழுதியிருக்கிறேன். அதைப்பற்றிய ஒரு புரிதலை எனக்கு ஆரம்பகாலத்தில் உருவாக்கியவர் தல்ஸ்தோய் ,தஸ்தயேவ்ஸ்கி இருவர். பின்னர் எழுத்தாளர் பால் ஸகரியாவின் தாய்மாமனும் புகழ்பெற்ற தனித்த கிறித்தவ போதகருமான  ஜோச·ப் புலிக்குநேல். மலையாள இலக்கிய விமரிசகரான கெ.பி.அப்பன் பைபிள் உருவாக்கும் அறக்கோட்பாட்டை பற்றி இலக்கிய நோக்கில் நல்ல நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். தமிழில் மத முத்திரைகுத்தல் ஓங்கியிருக்கும் சூழலில் அத்தகைய வாசிப்புகளுக்கான இடம் இருக்கிறதா என்ற ஐயமும் சிறு அச்சமும் என்னை தொடர்கிறது என்பதையும் மறுக்கவில்லை. இந்நூல்கள் ஒன்றையொன்று நிரப்பும் ஒரு பெருநூலாக என் மனதில் உள்ளன. பார்ப்போம். காலம் இருக்கிறது.

ஜெயமோகன்

ஜெயமோகன்,

கீதை உரையை பலமுறை அச்சு எடுத்து வாசித்தேன். நான் பலகாலமாகவே ஆன்மீக இலக்கியங்களில் ஈடுபட்டு வரக்கூடியவன். ஆனால் இந்த அளவுக்கு விரிவான தகவல்களுடனும் விவாதங்களுடனும் நான் கீதை  உரை எதையும் படித்ததே இல்லை என்று சொன்னால் வீண்புகழ்ச்சி என்று எண்ணமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.கீதையை ஒரு தத்துவ உரையாடலாக நீங்கள் எடுத்துக்கொண்டபோதே உங்கள் தனித்துவப்பார்வை வெளிப்பட்டுவிட்டது. சென்ற கட்டுரையில் சொல்லப்பட்டவிஷயங்கள் மிக மிக முக்கியமானவை. வாழ்க்கையில் நமக்குரிய செயல்களை சிறப்பாகச் செய்வதே போதும் என்ற எண்ணம் இளவயதில் இருக்கும். அப்படி சிறப்பாகச் செய்து ஒருகுறையும் இல்லாமல் இருப்பவன் நான். ஆனால் இப்போது அந்தச்செயல்களுக்கு என்ன அர்த்தம் என்ற எண்ணம் எழும்போது எனக்கு வெறுமையே தோன்றுகிறது. செயல் ஞானமாக மாறி நம்மை கனியச்செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருக்கிறது. அப்படி ஞானமாகவும் விவேகமாகவும் மாறக்கூடிய செயல்களைத்தான் செய்தேனா , அவ்வாறு மாறும் விதத்தில் அவற்றை யோகமாக செய்தேனா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது. என்னுடைய பிள்ளைகளை வளர்த்ததில் மட்டுமே என்னிடம் அர்ப்பணிப்பு அதாவது யோகம் இருந்திருக்கிறது. அந்த யோகத்திலேயே பிறசெயல்களையும் செய்திருந்தால் எனக்கு இன்றுள்ள வெறுமை இருந்திருக்காது. கர்மம் ஞானம் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் இடங்கள் மிகமிக முக்கியமானவை. இளவயதில் கீதையை கற்கவேண்டும் என்று ஏன் சொல்லியிருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் உணர்கிறேன்.

சண்முகசுந்தரம்
சென்னை

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் கீதை உரை எனக்கு ஒரு பாராயண நூலாகவே ஆகிவிட்டிருக்கிறது. அதை படி எடுத்து நண்பர்களுக்கு அனுப்புகிறேன். ஆரம்பத்தில் நீங்கள் சங்கர வேதாந்தத்தின் அடிப்படையில் அணுகுகிறீர்களோ என்ற எண்ணம் ஏற்பட்டது. சென்ற கட்டுரையின் முடிவில் நீங்கள் சொல்லியிருக்கும் வரிகள் உங்கள் நடுநிலை நோக்குக்குச் சான்று. விசிஷ்டாத்வைதத்தில் விசிஷ்டமாக உள்ளது கைங்கரியமே என்ற வரியை பலமுறை சொல்லிப்பார்த்தேன். சிந்தனை செய்பவர் பலர் இருக்கலாம் எழுத்தாளனால்தான் இப்படிஎழுதமுடியும்.

நாராயணன் குடந்தை

முந்தைய கட்டுரைவலியின் தேவதை:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇந்தியா கடிதங்கள்