இரு புதிய வாசகர்கள்

மதிப்பிற்க்குஉரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

கடந்த இரண்டு மாதங்களாக நான் தங்களது வலை தளத்தை வாசித்து வருகிறேன். தங்களது படைப்புகள் மிகவும் அருமயாகவும் கருத்து செறிவுடனும் உள்ளது, நான் தற்கால படைப்புகளில் மிகவும் விரும்பி படிப்பது திரு எஸ்ரா அவர்களின் படைப்புகள்.

கடந்த ஏழு வருட அயல் நாட்டு வாசத்தில், எனக்குள் இருந்த சிறிய இலக்கிய தொடர்பும் அறுந்து விட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நான் தங்களின் வலைதள அறிமுகம் கிடைத்தது. முதலில் என்னை ஈர்த்தது தங்களின் நகைச்சுவை பகுதிதான். பின்பு சிறுது சிறிதாக தங்களின் எழுத்து வல்லமை பிற பகுதிகளையும் படிக்க செய்தது.

தங்களின் அறம் சிறுகதைகளை வாசித்த பின் என்னுள் பெரிய தாக்கதயும் (சோற்று கணக்கு, யானை டாக்டர், நூறு நாற்காலிகள்), சொல்ல முடியாத உணர்ச்சிகளையும் அடைந்தேன்.

உங்களின் வேகம் என்னை வியக்க வைக்கிறது. எனது நாட்களின் வெறுமையை (நான் இங்கு கத்தர் நாட்டில் அலுவலக காரியதரிசியாக உள்ளேன், தனிமை, உளவியல் ரீதியான அடக்குமுறை, கிளர்ச்சி ஏற்படுத்தாத தினசரி அலுவல்கள்), உங்கள் எழுத்தின் வாசிப்பை கொண்டு நீக்கி கொண்டு இருக்கிறேன். மிக்க நன்றி. வாழ்க உங்கள் எழுத்து பணி.

இப்ராஹிம்

***

அன்புள்ள இப்ராகீம்,

நன்றி

மனிதனுக்கு அவன் வாழும் உலகம் போதாது. எந்த மனிதனுக்கானாலும். அவன் கற்பனை வாழ்க்கையைவிடப் பெரியது. அதை நிறைக்கவே அவனுக்கு கலைகளும் இலக்கியமும் தேவையாகின்றன

வாசிப்பு மிகச்சிறந்த ஒரு நிகர் உலகை உருவாக்கி உங்களை நிறைவடையச்செய்யும்/ அதை அடைந்திராவிட்டால் வம்புகளில் உங்கள் ஆன்மபலத்தை இழந்திருப்பீர்கள். தமிழகத்தில் அரசியல், சினிமா இரண்டுமே மிகப்பெரிய வம்புலகங்கள்

தற்செயலாக வந்தாலும் இனிய அழகிய உலகில் வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

ஜெ

வணக்கம் ஐயா ,

நான் இத்தனை நாள் ஜெயமோஹனை படிக்க தவம் இருந்திருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும்.

சுஜாதாவை கடைசியாக படித்து படிக்கும் பழக்கத்தை நிறுத்திய பின் , சென்னை புத்தக கண்காட்சியில் தங்களது 4 புத்தகங்கள் வாங்கினேன். இவர்கள் இருந்தார்கள் படித்து முடித்தேன்.

ஏனோ எல்லோருமே இறக்கும்போது ஒரு வலி வருகிறது ஒவ்வொரு அத்தியாதிலும். இந்த புத்தகத்தில் பெரும்பாலானோர் உங்களது இளமை பருவத்தில் இருந்திருப்பதால் இப்போது இல்லை. நிதர்சனம் என்றாலும் பொறுக்க முடியவில்லை.
இன்றைய கல்வியை பற்றிய தங்களது ஒரு சொற்பொழிவு கண்டேன். அருமை.
உங்கள் படைப்புகளை தேட ஆரம்பிக்கிறேன்

இவண்

அசன் குமார் ச

***

அன்புள்ள அசன்குமார்,

ஒருவர் இறக்கும்போது நம் மனதில் முழுமைகொள்கிறார். அது ஒரு வளர்ச்சிதான். குறிப்பாக எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர்களைப்பொறுத்தவரை

அதையே இவர்கள் இருந்தார்கள் நூல் காட்டுகிறது. தொடர்ந்து வாசியுங்கள். என் இணையதளம் ஒரு நல்ல வாசல்

ஜெ

***