«

»


Print this Post

வென்றவர்களின் கதைகள்..


அண்ணா ,

தன்னறம் டாக்டர் , கடைசி கட்ட காடு கிரிதரன் ,வர்கீஸ், இரவு நாயகன் மற்றும் பல இடங்களில் தொழில் செய்வதற்க்கான மனநிலை , வெற்றி தோல்விகளைப் பற்றி அங்கங்கே இருக்கும் ,

நீண்ட நாட்களாக உங்களிடம் இருந்து முழுக்க ஒரு பிஸ்னஸ் படைப்பு எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன் , தமிழில் யாருமே தொடாத பகுதி , சுயமுன்னேற்ற புத்தகங்களை தவிர அதில் எதுவுமே வந்ததில்லை , உங்களை தவிர யாரும் எழுதப் போவதுமில்லை.

ஒரு வெற்றியாளனின் வாழ்க்கையை எழுத கூடாதா ? இலக்கியம் தோல்விகளை பற்றி மட்டுமே பேசுமா?,வெற்றிகான மனநிலையை எப்படி உருவாகொள்வது என்று சில இடங்களில் சொல்லியிருக்கிறீர்கள் ,

அங்காடிதெரு கழிப்பறை தொழிலதிபர் , மனிதர்களை நம்பி கடைவிரித்தவர் என பாசிடிவ் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது ,

என்றாவது அப்படி ஒன்று எழுதப்பட்டால் மிக மகிழ்வேன் , ஒரு நல்ல வெற்றிக்கதை எவ்வளவோ பேருக்கு தூண்டுதலாக இருக்கும் .

நண்பர் வர்கீஸின் முன்னேற்றம் பற்றி கொஞ்சம் எழுதியதே எவ்வளவோ எழுற்ச்சி தந்தது , (நீங்கள் எழுதிய அந்த கடிதம்! ).

கோல் என்று ஒரு புத்தகம் இதுபோல படித்தேன் .

http://en.wikipedia.org/wiki/The_Goal_(novel)

http://groups.yahoo.com/group/Maraththadi/message/30992?l=1


Fellow Us Google Buzz : http://www.google.com/profiles/universys

With Best Regards,

For Universys,

Arangasamy.K.V

அன்புள்ள அரங்கசாமி

உண்மைதான். பொதுவாக இலக்கியம் தோற்றவர்களைப்பற்றியே அதிகம் எழுதுகிறது. வென்றவர்களின் கதை என்றால் அது வீரகதைகள் மட்டுமே.

காரணம், இலக்கியம் எப்போதுமே விதியைப்பற்றிப் பேசுகிறது என்பதே. விதி என்றால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட நியதி என்ற பொருளில் சொல்லவில்லை. பிரபஞ்ச விதிகள், அவற்றின் உறுப்புகளான இயற்கை விதிகள், அவற்றில் சிக்கியிருக்கும் மானுட வாழ்க்கையின் கோடானுகோடி நிகழ்ச்சிகள், அந்நிகழ்ச்சிகளின் இணைவுகள் பிரிவுகள் மூலம் உருவாகும் சமநிலைக்கோடே விதி என்பது.

பேரிலக்கியங்கள் விதியின் கதைகள். மானுட வாழ்க்கை எப்படி பின்னிப்பிணைந்து பெருகி ஓடிக்கொண்டே இருக்கிறது என்ற பெரும் சித்திரத்தை அளிப்பவை. சொல்லப்போனால் வாழ்க்கையை ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த வாழ்க்கையின் குறுகிய எல்லைக்குள் இருந்து அணுகுவதை நாற்புறமும் உடைத்துத் திறந்து ஒட்டுமொத்தவாழ்க்கையைப் பார்க்கசெய்பவை பேரிலக்கியங்கள்.

அந்த அனுபவத்தை சரிவுகள் தோல்விகள் அளிப்பது போல வெற்றி  அளிக்குமா என்ன? வெற்றியில் நாம் அந்த தனிமனிதனைப் பார்க்கிறோம். தோல்வியில் அவனைத்தோற்கடித்த விதியை பார்க்கிறோம். ஆகவேதான் அவலம் [டிராஜடி] என்பது இலக்கியம் உருவான நாள்முதல் இன்றுவரை மையமானதாக இருந்து வருகிறது. அனைத்து வகையான நற்குணங்களும் கொண்ட ஒரு கதாபாத்திரம் விதியால், தன் தவறுகளால் சரிவதே அவலம் என்பது அரிஸ்டாடிலின் நிர்ணயம். அதாவது அவலம் என்றாலே அதில் கதைமையம் விதியே

வென்றவனின் கதையாக இருக்கும்போது கூட அதை தோற்றவனின் அவலமாக நாம் வாசிக்கிறோம். ராமாயணம் வென்றவனின் கதை. ஆனால் நாம் ராவணனுக்கும் அதே முக்கியத்துவம் அளிக்கிறோம்.  அர்ஜுனனை விட நமக்கு கர்ணன் மனதுக்குரியவனாக இருக்கிறான். வென்றவனின் கதையில் விதி நேர்நிலை சக்தி. ஆகவே அவனுக்கு கீழே , அலைச்சறுக்கு வீரன் காலடியில் அலை போல, விதி பொங்கி வருகிறது. நாம் அவனையே பார்க்கிறோம். தோற்றவனுக்கு முன்னால் அது உறுதியான மாமலைச்சிகரமாக எழுந்து வழிமறிக்கிறது. அதை பார்க்காமல் தவிர்க்கவே முடியாது.

ஆனாலும் வென்றவனின் கதையை எழுதலாம்தான். விதியின் பிரம்மாண்டமான விளையாட்டை அதன் மூலம் எழுத முடியுமென்றால். அவனது அறிவுக்கூர்மை, நுண்ணுணர்வு ஆகியவற்றை குறைத்துக் காட்டாமல் அவன் காலடியில் விதி சுடுண்டு எழுந்து வருவதைக் காட்ட முடியும் என்றால்

பார்க்கலாம்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7043

2 comments

 1. அதுசரி

  //
  விதியின் பிரம்மாண்டமான விளையாட்டை அதன் மூலம் எழுத முடியுமென்றால். அவனது அறிவுக்கூர்மை, நுண்ணுணர்வு ஆகியவற்றை குறைத்துக் காட்டாமல் அவன் காலடியில் விதி சுடுண்டு எழுந்து வருவதைக் காட்ட முடியும் என்றால்
  //

  உண்மை தான்….அரசியல் பக்கங்களை அதிகம் தொடாது எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதலாமோ என்று தோன்றுகிறது..ஆனால் அவரது சினிமா, அரசியல், அதன் மூலம் உருவாக்கப்பட்ட பிம்பங்கள் தவிர்த்து உண்மையான எம்.ஜி.ஆர் யார் என்பது யாருக்காவது தெரியுமா என்று தெரியவில்லை. கருப்பு கண்ணாடி, தொப்பி போல மிக அழுத்தமான அந்த திரை கிழித்து உள் நுழைந்து பார்த்தால் மஹாபாரதத்தின் அர்ஜூனனை அடித்து வீழ்த்தும் கர்ணனின் வரலாறு தெரிய வரலாம்.

  ஆனால், எம்.ஜி.ஆர் பற்றி எனக்கு மிகவும் குறைவாகவே தெரியும்..அதே சமயம் விலக்கப்பட்டவர்கள் என்று நீங்கள் எழுதிய ஒரு விஷயமும் ஞாபகம் வருகிறது. ஒரு வேளை அது தான் விதி சுருண்டு எழுந்து வருவதற்கான சமகால அடையாளமோ? தெரியவில்லை.

 2. Arangasamy.K.V

  விரைவில் எழுத சுவாமி சிவானந்தலகரி மகராஜ் அருள்புரிவார் என நம்புகிறேன்

Comments have been disabled.