‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 6

பகுதி 2 : ஆழ்கடல் பாவை – 3

காலையில் சிசிரன் வந்து அழைத்தபோதுதான் தருமன் கண்விழித்தான். முதலில் எங்கிருக்கிறோம் என்பதையே அவன் உணரவில்லை. உணர்ந்ததும் அங்கே சிசிரன் வந்ததைப்பற்றி சிறிய சீற்றம் எழுந்தது. ஆனால் அவன் உள்ளே வராமல் கதவுக்கு அப்பால் நின்றுதான் தட்டி அழைத்திருந்தான். ஆடையை பற்றி அணிந்தபடி எழுந்து நின்று சற்றே அடைத்த குரலில் “என்ன?” என்றான். “அமைச்சர் வந்துள்ளார்” என்றான் சிசிரன். “எந்த அமைச்சர்?” என்று கேட்டதுமே அவன் நெஞ்சு அதிரத் தொடங்கியது. அவன் “அஸ்தினபுரியின் அமைச்சர்” என்றான். தருமன் சிலகணங்கள் நின்றுவிட்டு “சற்று நேரத்தில் நீராடிவிட்டு வருகிறேன் என்று அவரிடம் சொல்” என்றான்.

விரைந்து கீழிறங்கி குளியலறைக்கு சென்றான். நீராட்டுச்சேவகன் ஆடைகளை அவிழ்க்கும்போது அந்த நேரம்கடத்தல் கூட நன்றே என்று எண்ணிக்கொண்டான். நீராடி ஆடையணிகையில் வேண்டுமென்றே பிந்துகிறோமோ என எண்ணியபோதுகூட அந்த விரைவு உடலில் கூடவில்லை. மீண்டும் மீண்டும் தன் குழலை சீவிக்கொண்டிருந்தான். முந்தையநாள் இரவில் திரௌபதி அவன் கூந்தல்கீற்றுகளில் கையளைந்து “இது என்ன சுருள்கள்?” என்று கேட்டது நினைவுக்கு வந்தது. அந்த வினா ஒரு கணம் அனலை அவியச்செய்ய, அவன் பேசாமலிருந்தான். அவள் அவன் அகஏடுகளை விரைவாக தொட்டுத் தொட்டு புரட்டி சுட்டு விரல்வைத்துத் தொட்டு “நன்றாகவே இல்லை… இனிமேல் இது தேவையில்லை…” என்றாள். புன்னகையுடன் “ம்” என்றபடி அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

படிகளின் ஓசை கேட்டபோதே அது திரௌபதி என்று அறிந்துகொண்டான். அவ்வோசையே தன்னை கிளரச்செய்வதை எண்ணி புன்னகை செய்தபடி ஆடிமுன் இருந்து விலகியபோது அவள் உள்ளே வந்து “அமைச்சர் காத்திருக்கிறார்” என்றாள். அவன் அவள் விழிகளை நோக்கி “ஆம், அறிவேன்” என்றான். அவள் விழிகளும் புன்னகைத்தன. பொதுவான கரவு ஒன்றை அறிந்த குழந்தைகள் போல சிரித்தபடி “இக்காலையில் அறிவுடையோர் வருவதில்லை” என்றான். “ஆம், வரும்படியான ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அமைச்சரின் உடல் நிலைகொள்ளாமலிருக்கிறது” என்றாள்.

இருவரும் இணைந்தே கீழிறங்கி வந்தனர். அவர்களைக் கண்டதும் அவைக்கூடத்தில் இருந்த விதுரர் எழுந்தார். தருமன் தலைவணங்கி “வணங்குகிறேன் அமைச்சரே” என்றதும் கை தூக்கி சொல்லின்றி வாழ்த்தியபின் அமரும்படி பீடத்தை காட்டினார். சாளரத்திரைச்சீலை கங்கைக்காற்றில் சிறகடிப்போசை எழுப்ப அதை திரும்பி நோக்கி எரிச்சலுடன் சூள் கொட்டினார். தருமன் நோக்க சிசிரன் ஓடிச்சென்று அதை சேர்த்துக்கட்டினான்.

தருமன் “இளவரசியை…” என தொடங்க விதுரர் “அவர்கள் இருக்கட்டும்…” என்றார். சிசிரன் தலைவணங்கி வெளியேறினான். தருமன் அமர்ந்துகொண்டு ஆடையை தன் மடிமேல் சீரமைத்துக்கொண்டான். உடனே அப்பழக்கம் அவளிடமிருந்து வந்ததா என அகம் வியந்தது. அது எழுப்பிய மெல்லிய புன்னகை அவனை நிலையமைத்தது. அப்புன்னகையை விதுரர் கண்டதை உணர்ந்தான் .அதுவும் நன்றே என எண்ணிக்கொண்டான்

அவள் பீடத்தில் அமர்வதை கண்டான். கைகள் இயல்பாக ஆடையின் மடிப்புகளை அழுத்தியமைத்தன. தோளை மிகமெல்ல அசைத்து அணிகளை சீராக முலைகள் மேல் அமையச்செய்தாள். இடக்கையால் குழல்சுருளை காதோரம் ஒதுக்கி செறிந்த இமைகள் சற்றே சரிய அரைத்துயிலில் அமர்ந்திருப்பவளென இருந்தாள். அவன் அவள் விரல்களை நோக்கினான். சுட்டுவிரல் நுனியில் மட்டுமே அவள் அகம் வெளிப்படுமென அவன் அறிந்துகொண்டிருந்தான். அது ஆடையின் நூலொன்றை சுழற்றிக்கொண்டிருந்தது.

விதுரர் அவனை நோக்காமல், “நேற்று யாதவ அரசியிடம் பேசினேன்” என்று தொடங்கினார். தருமன் தலைகுனிந்து அமர்ந்திருக்க “நீங்கள் திருதராஷ்டிர மாமன்னருக்கு எழுதிய திருமுகத்தை அரசியார் அறிந்திருக்கவில்லை என்று நேற்றுதான் நானும் அறிந்தேன்” என்றார். தருமன் சொல்லில்லாமல் அமர்ந்திருந்தான். “இளையோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா?” என்றார் விதுரர் . தருமன் ஆம் என தலையசைத்தான். “பாஞ்சாலத்தின் பறவைத்தூதை நீங்கள் கைக்கொண்டதாவது அவர்களுக்குத் தெரியுமா?” தருமன் விழிதூக்காமல் “இல்லை” என்றான்.

“அன்னை உங்கள் சொற்களை ஒப்பவில்லை” என்று சற்று தணிந்தகுரலில் விதுரர் சொன்னார். “அரசரின் ஒப்புதலின்றி வாரணவதத்தின் எரிமாளிகை நிகழ்வு திட்டமிடப்பட்டிருக்காது என்று அவர் எண்ணுகிறார். நான் பலமுறை அதை விளக்கினேன். அஸ்தினபுரியின் ஒற்றர்குழாமை முழுமையாகவே கைகளில் வைத்திருக்கும் எனக்கே அதை குண்டாசியின் நிலைகொள்ளாமை வழியாகத்தான் ஓரளவு உய்த்துணர முடிந்தது. என்ன நிகழவிருக்கிறதென்றுகூட எனக்குத் தெரியவில்லை. ஐயம் மட்டுமே இருந்தது. ஆகவேதான் குறிச்சொற்கள் வழியாக எச்சரிக்கையை அளித்து அனுப்பினேன்.”

“அரசருக்கு ஒற்றர்கள் இல்லை. இசையின் உலகில் வாழ்பவர் அவர். அவர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை என்றேன்” என்றார் விதுரர். “அறிந்தால் அதை எந்நிலையிலும் ஒப்பக்கூடியவர் அல்ல அவர். சிறுமைதீண்டாத மாமனிதர் என் தமையன். ஆனால் யாதவ அரசி அதை ஏற்கவில்லை. ஏற்க விழையாதவற்றை ஏற்கவைக்க எவராலும் இயலாது” என்றார் விதுரர். “குந்திதேவி இன்று அரசரைப்பற்றி மிகக்கடுமையான சொற்களை சொன்னார். அஸ்தினபுரியின் தீமையனைத்தும் விழியற்ற அம்மனிதரையே அச்சாகக் கொண்டிருக்கிறது என்றார். வெளியே கருணையையும் நீதியையும் காட்டியபடி பாண்டுவின் மைந்தர்களை அழிப்பதற்காகவே அவர் அங்கே வாழ்கிறார் என்று கூவியபோது அவர் கண்ணீர் விட்டார். முகம் குருதிப்பிழம்பாக இருந்தது.”

“ஆம், அன்னையின் அகம் அதுவே” என்றான் தருமன். “என்னாலும் அவரிடம் ஏதும் பேசமுடியவில்லை. ஏனென்றால் என்னில் இருப்பது ஒரு நம்பிக்கை மட்டுமே. ஆனால் மானுடரைப்பற்றி எதையும் முழுமையாக நம்பிவிடலாகாதென்றும் என் கல்வி என்னிடம் சொன்னது.” விதுரரும் அவனும் விழிதொட்டனர். “ஆகவேதான் நான் அந்த ஓலையைப்பற்றி அவரிடம் பேசவில்லை.”

“அமைச்சரே, காந்தாரர் சகுனி எப்படி பீஷ்மபிதாமகரை தன் உள்ளத்தில் எதிரியாக ஆக்கிக்கொண்டாரோ அந்நிலையில் இருக்கிறார் அன்னை. வென்று செல்லவேண்டிய எதிர்த்தரப்பின் மிகப்பெரிய எதிரி அங்குள்ள நீதியாளனே. எப்போதும் அநீதிக்கெதிராகவே பெரும்போர்கள் தொடங்குகின்றன. அவை நீதியைப்பற்றியே பேசுகின்றன. ஆனால் நீதியால் அல்ல, வெறுப்பின் ஆற்றலால்தான் களத்தில் போர்கள் நிகழ்த்தப்படுகின்றன. எதிர்த்தரப்பு முற்றிலும் அநீதியானது என்று நம்பாமல் போர்வெறி கொள்ள முடிவதில்லை. அதற்கு மிகப்பெரும் தடை எதிர்த்தரப்பிலுள்ள நீதியாளன். நம் நெஞ்சில் அவனை பெரும் அநீதியாளன் என்று ஆக்கிக்கொள்ளாமல் அவர்களுடன் பொருதுவது இயல்வதல்ல.”

“அத்துடன் பெரும் நீதியாளனைப்போல பெரும்அநீதியாளனாகச் சித்தரிக்க எளிதானவன் பிறிதொருவன் இல்லை. அவன் தன் நீதிமீதான நம்பிக்கையுடன் எப்போதும் கவசங்களும் படைக்கலங்களும் இன்றி களத்தின் முன்வரிசையில் நிற்கிறான். சிந்திக்காமல் சொல்தொடுக்கிறான். தன் சொற்களுக்கும் செயல்களுக்கும் முன்னரே விளக்கங்களை அமைத்துக்கொள்வதில்லை. ஆகவெ அவை உட்பொருட்கள் ஏற்ற எளிதானவை. தன் நீதி அவமதிக்கப்பட்டால் அவன் உடைந்து அழியவும் செய்வான்” தருமன் தொடர்ந்தான். “அமைச்சரே, போர்களெல்லாம் எதிர்த்தரப்பின் மாபெரும் நீதியாளனை முற்பலியாகக் கொண்டபின்னரே தொடங்குகின்றன. தன் தரப்பில் நின்று ஐயப்படும் நீதியாளனை முதல் களப்பலியாக அளித்துத்தான் வெற்றிநோக்கி செல்கின்றன”

“அன்னை திருதராஷ்டிர மாமன்னரை மானுடரில் கடையனாக ஆக்கிக்கொண்டுவிட்டார். இத்தனை நாள் அவரை ஆற்றல்மிக்கவராக ஆக்கியது அந்த வெறுப்புதான். அதை என்னிடம் ஒருபோதும் முழுமையாக பகிர்ந்ததில்லை. என் இளையோரிடமும் சொன்னதில்லை. ஆனால் அதை நான் அறிவேன்” என்றான் தருமன். விதுரர் கசப்புடன் புன்னகைத்து “உண்மைதான் இளவரசே. ஆனால் வாழ்வின் துயர்மிக்க நடைமுறை இன்னொன்றும் உண்டு. குந்திதேவியின் இவ்வெறுப்பே மெல்லமெல்ல அரசரை அநீதியானவராக ஆக்கவும் கூடும். ஒவ்வொரு முறை அவர் நீதியின் எல்லைகளை மீறும்போதும் குந்திதேவியின் உள்ளம் மகிழ்ச்சியடையும். அவர் நம்புவது உண்மையாகிறதல்லவா?” என்றார்.

தருமன் விழித்து நோக்கி அமர்ந்திருந்தான். ”ஏனென்றால் நீதி என்பது மானுட இயல்பல்ல இளவரசே. அது மானுடர் கற்றுக்கொண்டு ஒழுகுவது. பெருங்கற்பு என்று அதையே நூல்கள் சொல்கின்றன. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் மானுடர் தங்கள் கீழ்மையால் மோதியபின்னரும் நீதியென இங்கு ஒன்று எஞ்சியிருப்பது வியப்பிற்குரியது. அது தெய்வங்களின் ஆணை என்பதற்கு அதுவே சான்று” என்றார் விதுரர். அவரது சினம் முழுமையாகவே ஆறிவிட்டிருந்தது. தன் பீடத்தில் முழுமையாக சாய்ந்துகொண்டு “ஓலையில் நீங்கள் அரசு மறுத்ததை அறிந்து குந்திதேவி கொதித்துக் கொண்டிருக்கிறார். என்னுடன் இங்கே வருவேன் என்று சொன்னார். அது முறையல்ல என்று சொல்லி நானே வந்தேன்” என்றார்.

“ஆம், நான் அரசை மறுத்தேன்” என்றான் தருமன். “அது ஒரு பேரழிவை தடுப்பதற்காக. திருதராஷ்டிர மாமன்னரின் உள்ளம் ஐயங்களால் கொந்தளித்துக் கொண்டிருக்கும் என நான் அறிவேன். எரிநிகழ்வுக்குப்பின் நாங்கள் ஒளிந்து வாழ்ந்ததை அறிந்த கணம் முதல் அவரால் துயின்றிருக்கமுடியாது. அது அவர் மீதான ஐயத்தின் வெளிப்பாடு என்றே எண்ணுவார். அவர் உள்ளம் தேடத்தேட அதற்கான சான்றுகளே எழுந்து வரும். ஏனென்றால் உண்மையிலேயே அது அவர் மீதான ஐயத்தின் விளைவுதான்.”

“ஆம்” என்றார் விதுரர். “நீங்கள் எழுதிய ஓலை அவ்வகையில் நிறைவளிக்கக் கூடியதே.” தருமன் “நன்கு சிந்தித்தே அதை எழுதினேன் அமைச்சரே. அரசரின் உள்ளம் என் விளக்கத்தில் நிறைவடையவேண்டுமென்றால் அரசை மறுப்பதற்காகவே ஒளிந்துவாழ்ந்தோம் என்ற ஒரு கூற்றைத்தவிர்த்து எதுவுமே உதவாது. என் இயல்புக்கு ஏற்றதும் அக்கூற்றே. அவர் தன் ஐயங்கள் விலகி அமைதியுறவேண்டுமென்று விழைந்தேன். ஆகவேதான் எவருக்கும் தெரியாமல் அதை எழுதினேன். என் இளையோர் என் உடலுறுப்புகள் போன்றவர். அன்னையிடம் பின்னர் விளக்கலாமென எண்ணினேன்” என்றான்.

சிலகணங்கள் அவர்கள் அமைதியாக இருந்தனர். சாளரத்திரைச்சீலை விடுபடத் தவித்தது. கங்கைக்கரையில் நின்றிருந்த படகு கயிறு முறுகும் ஒலியுடன் அசைந்தது. தருமன் “அமைச்சரே, தந்தையரின் உள்ளத்தைப்பற்றி காவியங்கள் மீளமீள சொல்லும் ஒன்றுண்டு. அவை எந்நிலையிலும் மைந்தருடன் நின்றிருப்பவை. எந்தக் கனிவும் கல்வியும் அதை மீறமுடியாது. எத்தகைய முறைமையும் நீதியும் அதை கடக்க முடியாது. தேவர்களும் மும்மூர்த்திகளும்கூட அதை விலக்க முடியாதவர்களே. ஏனென்றால் அது உயிர்களுக்கு விசும்புவெளியில் விண்மீன்களை இயக்கிநிற்கும் பிரம்மம் இட்ட ஆணை” என்றான்.

“அமைச்சரே, வாள்முனை போன்ற அறவுணர்ச்சி கொண்ட மாமனிதர் எந்தை. அதைவிட அவர் எங்களுக்கும் தந்தை. என் தந்தையின் தமையன். ஒருகணமும் அந்நினைவை அகற்றாதவர். எண்ணிநோக்குங்கள். நான் அரசரிடம் கௌரவர் செய்த வஞ்சத்தால் நாங்கள் கொல்லப்படவிருந்தோம் என்று சொல்லியிருந்தால் என்ன ஆகும்? அவர் அக்கணமே மதவேழமென எழுந்து பிளிறியிருப்பார். அத்தனை கௌரவர்களையும் காந்தாரரையும் கழுவேற்றியிருப்பார். அவர்களுக்கு நீர்க்கடன்கூடச் செய்திருக்க மாட்டார்.”

தருமன் தொடர்ந்தான் “ஆனால், அதன்பின் இருளில், தனிமையில், தன் ஆன்மாகூட கேளாத மெல்லியஒலியில் என்மேல் தீச்சொல்லிட்டிருப்பார். என் குலம் அழிய வேண்டும் என்று அவருள் வாழும் தந்தை அறியாமல் ஒருசொல் உரைத்துவிடுவார். பின்னர் அச்சொல்லை எண்ணி அவர் நெஞ்சில் அறைந்து கதறுவார். அதன்பொருட்டே எரிபுகவும் செய்வார். ஆனால் அச்சொல் அங்கே நின்றிருக்கும்.”

“ஆம், நான் அரசனைப்போல் பேசவில்லை. காட்டில் வாழும் முனிமைந்தனைப்போல் வெற்று நீதியை பேசிக்கொண்டிருக்கிறேன். அதை நானே அறிவேன். ஆனால் அமைச்சரே, நான் அவ்வண்ணமே ஆகியிருக்கிறேன். நான் கற்ற நூல்கள் என்னை மண்மறைந்த நகர்களின் அரியணைகளை நோக்கிக் கொண்டுசெல்லவில்லை. என்னை அவை இன்றும் தளிர்த்துக்கொண்டிருக்கும் அழியாத காடுகளையும் இப்போதும் நீரோடும் மகத்தான நதிக்கரைகளுக்கும்தான் கொண்டுசென்றிருக்கின்றன” தருமன் சொன்னான்.

“நான் தந்தையர் தீச்சொல்லை அஞ்சுகிறேன். எனக்கும் என் மூதாதையருக்கும் நடுவே இன்றிருக்கும் ஒரே கண்ணி அவரே” உளவிரைவால் தருமன் எழுந்தான். “அமைச்சரே, இதைச்சொல்ல நான் நாணவில்லை. அதோ அஸ்தினபுரியில் அமர்ந்திருக்கும் அந்த விழியிழந்த மனிதரின் பெருங்கருணையால்தான் நான் பாண்டுவின் மைந்தன் என்று இருக்கிறேன். என் அன்னை சொன்ன வார்த்தையாலோ அதை ஏற்ற வைதிகர்களின் நெருப்பாலோ அல்ல. அவர் அவையில் எழுந்து என் குருதியை மறுத்திருந்தால் நான் யார்?” விதுரரை நோக்கி கொந்தளிக்கும் நெஞ்சுடன் அவன் சொன்னான் “என் அன்னையின் பொய்யுரைக்கு மறுமொழியாக என்னை பாண்டு மைந்தனாக ஏற்றுக்கொண்டார் என்பதற்கு என்ன சான்று என அவர் கேட்டிருந்தால் எனக்கு என்ன முகம்?”

“பாண்டுவின் மைந்தனாக நான் உணர்வதுவரை அவரை வருத்தும் ஒரு சொல்லையும் சொல்லமுடியாது அமைச்சரே” என்று தருமன் சொன்னான். “அவரே இன்று வாழும் பாண்டு. இம்மண்ணில் இன்று பாண்டுவுக்கு மிக அண்மையானவர் அவரே”. அவன் உள்ளம் மெல்ல அமைந்தது. தோள் தணிய கைகளை கட்டியபடி அறையில் சிற்றடி எடுத்து வைத்து “நான் சொற்களை நம்புபவன். சொற்களுக்கு காலத்தைக் கடக்கும் வல்லமை உண்டென்பதற்கு என் கையிலிருக்கும் ஒவ்வொரு நூலும் சான்று. அமைச்சரே, இதோ இந்நகரங்களனைத்தும் அழியும். மானுடக்குலங்கள் மறையும். சொல் நிலைத்திருக்கும். அச்சொல்லில் எந்தை எனக்களித்த வாழ்த்து மட்டுமே இருக்கவேண்டும். தந்தையின் தீச்சொல் கொண்டு மணிமுடிசூடினான் மைந்தன் என்றிருக்கலாகாது.”

தன் நிலைபாடை தானே தெளிவுற உணர்ந்து எளிதான உள்ளத்துடன் “ஆம், எனக்கு அதுவே முதன்மையானது. அஸ்தினபுரி என்ன, பாரதவர்ஷத்தின் மணிமுடிகூட எனக்கு ஒரு பொருட்டல்ல” என்று தருமன் சொன்னான். பெருமூச்சுடன் திரும்பவந்து பீடத்தில் அமர்ந்துகொண்டான். “அன்னையிடம் சென்று சொல்லுங்கள் அமைச்சரே. என் சொற்களை இப்படியே சொல்லுங்கள். தாங்கள் வந்தது நன்று. இச்சொற்களை அன்னைமுகம் நோக்கிச் சொல்லும் ஆற்றலை நான் பெற்றிருக்கமாட்டேன்.”

”குந்திதேவி அறிவார்” என்றார் விதுரர். “உங்களை உண்மையில் கட்டுபப்டுத்துவது எதுவென்று.” அச்சொற்களை முழுதுணர்ந்ததுமே துணுக்குற்று திரும்பி திரௌபதியை நோக்கினார். அவள் துயின்றுவிட்டாளா என்ற ஐயம் எழுந்தது. உச்சிவெயிலில் கிளைகளில் கழுத்தை உள்ளிழுத்து அமர்ந்திருக்கும் பறவை போலிருந்தாள். “குந்திதேவி அறிய விழைவது ஒன்றே. நீங்கள் அரசைத் துறக்கிறேன் என்று சொன்ன சொல்லின் பொருள் என்ன? திருதராஷ்டிர மன்னர் உங்களையன்றி பிறரை அரியணை அமர்த்தப்போவதில்லை என்று அவையிலேயே அறிவித்துவிட்டார். அஸ்தினபுரி திரும்பிய கௌரவர்களிடமும் அவ்வாணையை இந்நேரம் சொல்லியிருப்பார். என்னை அவர் இங்கு அனுப்பியிருப்பதே உங்களை அழைத்துச்செல்லத்தான். சென்றதுமே முடிசூட்டு விழா நிகழும் என்கிறார்.”

“இல்லை, நான் வரப்போவதில்லை” என்றான் தருமன். “இந்நிலையில் நான் வந்து அஸ்தினபுரியின் மணிமுடியைச் சூடலாகாது. என் சொல் பிழைப்பதற்கு நிகர் அது.” விதுரர் சற்றே பொறுமை இழந்ததை அவர் உடலசைவு காட்டியது. “உங்கள் சொற்களில் நீங்கள் நின்றிருக்கலாம் இளவரசே, அஸ்தினபுரியின் மணிமுடியை நீங்கள் கோரவேண்டியதில்லை. ஆனால் அதை அரசர் அளிக்கையில் மறுக்கவேண்டியதில்லை. ஏனென்றால் அது உங்கள் தந்தையின் ஆணை.”

“மீண்டும் அதையே சொல்கிறேன் அமைச்சரே. எங்கோ அவரது ஆழத்தில் ஒரு குரல் அவரது மைந்தன் முடிசூட ஏங்குகிறது. எங்கள் எரிபுகல்செய்தியைக் கேட்டதும் மெல்லிய நிறைவை அடைந்த ஆழம் அது.” விதுரர் ஒருகணம் அதிர்ந்து அமர்ந்து உடனே சினத்துடன் பாய்ந்து எழுந்து “என்ன பேசுகிறாய் மூடா! யாரைப்பற்றிப் பேசுகிறாய் அறிவாயா?” என்று உடல்பதற கூவினார். நடுங்கிய கைகளை நீட்டி “இப்போது நீ சொன்னதற்கிணையான ஒரு பழியை அவர்மேல் உன் அன்னையும் சுமத்தவில்லை… மூடா!” என்றார்.

தருமன் எழுந்து “எந்தையே, நாம் நம் வேடங்களைக் கலைத்து முகத்தோடு முகம் நோக்கி நிற்கநேர்ந்தமைக்கு மகிழ்கிறேன். தங்கள் கைகளால் என்னை அறைந்திருந்தீர்கள் என்றால் இந்நாள் என் வாழ்வின் திருநாளாக அமைந்திருக்கும்” என்றான். விதுரர் விழிகளை விலக்கி அக எழுச்சியால் வந்த கண்ணீரை மறைக்க சாளரத்தை நோக்கி திரும்பிக்கொண்டார்.

“தந்தையே, இம்மண்ணில் வாழும் மாமனிதர்களில் ஒருவர் என் மூத்த தந்தை என்பதில் எனக்கு ஐயமே இல்லை. ஒருபோதும் பிறிதொரு மானுடரை அவருக்கு நிகர்வைக்க மாட்டேன். பிதாமகர் பீஷ்மரையோ உங்களையோ கூட. ஆயினும் இது உண்மை. அவர் கொண்ட அந்த பெருந்துயர், இறப்பின் எல்லைவரைக்கும் சென்ற வதை. அவருள் எழுந்த அந்தச் சிறு நிறைவுக்குக் கொண்ட பிழையீடு மட்டுமே.”

தலையை இல்லை இல்லை என அசைத்தபடி விதுரர் திரும்ப அமர்ந்துகொண்டார். “தருமா, நூல்களில் இருந்து நீ கற்றது மானுடர் மீது கொண்ட இந்த நம்பிக்கையின்மை மட்டும்தானா?” தருமன் வந்து அவர் அருகே நின்று “தந்தையே, நூல்கள் மானுடரை மிகச்சிறியவர்களாகவே காட்டுகின்றன. கற்கும்தோறும் மானுடர் சிறுத்துக்கொண்டேதான் செல்கிறார்கள். மானுடரை இயக்கும் அடிப்படை விசைகள் பேருருவம் கொள்கின்றன. அவ்விசைகளை வைத்து விளையாடும் விசும்பின் கரவுகள் தெரியவருகின்றன. அந்த நுண்மைகளின் வாயிலற்ற கோட்டை முன் நம்மைக் கொண்டுவிட்டுவிட்டு நூல்கள் திரும்பிவிடுகின்றன. நூலறிந்தவன் அங்கே திகைத்து நின்று அழிகிறான்.”

“இத்தனை சொற்களிடம் வாதிட என்னால் இயலாது” என்று விதுரர் கைகளை பூட்டிக்கொண்டார். “அவ்வண்ணமென்றால் நீ செய்யவிருப்பதென்ன? அதைமட்டும் சொல்” அவர் குரல் எழுந்தது. “உன் அன்னை என்ன சொல்கிறாள் தெரியுமா? ஷாத்ரநெறிப்படி அநீதியால் நிலம் பறிக்கப்பட்ட ஷத்ரியன் தன் இறுதி ஆற்றலாலும் அதற்கு எதிராகப் போராடவேண்டும். வெல்லவேண்டும், இல்லையேல் உயிர்துறக்கவேண்டும். நீ அந்த ஆற்றலற்றவன், உன்னில் ஓடுவது ஷத்ரிய குருதி அல்ல, பாண்டு தன் அச்சத்தை உன்னில் ஏற்றிவிட்டுச் சென்றிருக்கிறார் என்கிறாள்.”

தருமன் புன்னகைத்தான். அதை சற்று குழப்பத்துடன் நோக்கியபடி “இளவரசே, உங்களை விலக்கிவிட்டு பீமனை அஸ்தினபுரியின் அரசனாக்குவேன் என்று குந்திதேவி கூவினார்” என்றார் விதுரர். “பாஞ்சாலத்தின் படைகளையும் யாதவப்படைகளையும் திரட்டிக்கொண்டு அஸ்தினபுரியை வெல்லவிருப்பதாக அறைகூவினார்.” தருமன் “பீஷ்மர் இருக்கும் வரை அது நிகழுமென எண்ணுகிறார்களா?” என்றான். “ஆம், அதையே நானும் கேட்டேன். பீஷ்மரை வெல்ல கிருஷ்ணனால் முடியும் என்றார். அப்படி முடியாதென்றால் இரு தரப்பும் முழுமையாக அழியும். அவ்வழிவை முன்னுணர்ந்தால் அவர்கள் அடிபணிவார்கள் என்று சொன்னார்.”

“ஆம், அது உண்மை” என்றான் தருமன் புன்னகையுடன். பீடத்தில் சாய்ந்துகொண்டு மடியில் கைகளை வைத்துக்கொண்டான். “அதில் ஒரே ஒரு இடர்தான். பீமன் அதை ஒப்பவேண்டும்.” விதுரர் கண்களில் ஒரு மெல்லிய மின்னல் வந்துசென்றது. “ஒப்பிவிட்டாரென்றால்?” என்றார். “இல்லை, அது நிகழாது” என்றான் தருமன். “மந்தன் என் மகன். அவன் என்னை என்றேனும் மறுதலிப்பான் என்றால் அது அவனுடைய மைந்தனுக்காக மட்டுமே.”

விதுரர் புன்னகையுடன் “சரி, இது ஒரு பேச்சு மட்டுமே. பீமன் ஒப்பிவிட்டாரென்றால், படைகொண்டு சென்று உங்கள் மணிமுடியை கொண்டார் என்றால் என்ன செய்வீர்கள் என்று சொல்லுங்கள்” என்றார்.

“அமைச்சரே, இதுநாள் வரை இம்மண்ணில் வந்த எந்த ஷத்ரியனையும் போன்றவன் அல்ல நான்… அவர்களால் கோழை என்றும் தெளிவற்றவன் என்றும் நான் எண்ணப்படலாம். அதை நான் அறிவேன். ஆனால் எனக்குள் நான் எத்தருணத்திலும் ஷத்ரியனே என்று நேற்றிரவு அறிந்தேன். இன்றுகாலை முதல் நான் வேறொருவன்.” அறியாமல் திரௌபதியை நோக்கியபின் விழிதிருப்பிக்கொண்டார் விதுரர்.

தருமன் சொன்னான் “ஷத்ரியனாகவே இம்மண்ணில் வாழ்வேன். மூதாதையர் உலகை அடைவேன். ஒருபோதும் மணிமுடியை துறக்கப்போவதில்லை. என் மணிமுடியை கவர எண்ணுபவன் துரியோதனன் என்றாலும் பீமன் என்றாலும் எனக்கு நிகர்தான். முறையான மணிமுடிக்காக உடன்பிறந்தோர் எனினும் போரிடலாமென்றே நூல்கள் சொல்கின்றன. ஏனென்றால் தன் முடியைத் துறப்பவன் தான் செய்தாகவேண்டிய அறங்களையும் துறந்தவனாகிறான்.”

சற்றுநேரம் தன் உள்ளத்தை நோக்கிவிட்டு பின் தணிந்த உறுதியான குரலில் தருமன் சொன்னான் “இதை என் அரசியல் அறிவிப்பாகவே கொள்ளுங்கள் அமைச்சரே. என் முடிக்காக துரியோதனனை கொல்வேன் என்றால் பீமனையும் கொன்று மணிமுடியை வெல்ல தயங்கமாட்டேன்.” பின்பு இதழ்கள் ஒருபக்கமாக சற்று இழுபட்டு விரிந்த புன்னகையுடன் “அதை மிக எளிதாக என்னால் செய்யவும் முடியும். ஐந்து பாண்டவர்களிலும் ஆற்றல்மிக்கவன் நானே. அதை நால்வரும் அறிவார்கள்” என்றான்.

விதுரர் திகைப்புடன் நிமிர்ந்து அவனை நோக்கினார். முதன்முதலில் சொல்வடிவம் கொண்ட அந்த உண்மையை அவர் முன்னரே அறிவார் என்று தோன்றியது. அவன் அவர் விழிகளை நோக்கியபடி தொடர்ந்தான் “நீங்கள் அறிந்ததே, தோள்வல்லமை கொண்டவன் போரிடலாம், படைநடத்தலாம். ஆனால் மானுடரை இணைப்பவனே நாடாள்கிறான். மேலும் மேலும் மானுடரை இணைப்பவன் சக்ரவர்த்தியாகிறான். அதை இன்று பாரதவர்ஷத்தில் எனக்கிணையாக செய்யக்கூடுபவன் இளைய யாதவன் ஒருவனே.”

விதுரர் விழி விலக்கிக் கொண்டார். தருமன் “ஈடிணையற்ற படைக்கலம் ஒன்று என்னிடமிருக்கிறது அமைச்சரே, அறம். எந்நிலையிலும் அதை நான் மீறமாட்டேன் என்று பாரதமெங்கும் நான் உருவாக்கியிருக்கும் நம்பிக்கை. அதுவே என்னை நோக்கி மானுடரை ஈர்க்கிறது. அரசனை தெய்வமாக்கும் ஆற்றல் அறம் ஒன்றே.” என்றான். “இந்த பாரதவர்ஷமெங்கும் இன்று புதிய சில குரல்கள் எழுந்து வருகின்றன. ஷாத்ரநீதிக்கு அப்பால் இன்னுமொரு பெருநீதிக்காக ஏங்கும் குலங்களின் குரல்கள் அவை. யாதவர்கள், மச்சர்கள், வேடர்கள், அசுரர்கள், அரக்கர்குடிகள். அவர்கள் இன்று நம்பி ஏற்கும் ஒரே அரசன் நானாகவெ இருப்பேன். பாரதவர்ஷத்தின் எந்தச்சக்கரவர்த்திக்கும் நிகரான படைகளை நான் ஒருவனே திரட்டிவிடமுடியும்”

பிடித்துக்கொண்டிருந்த கைகளை உதறுபவர் என விதுரர் மெல்ல அசைந்தார். பின்னர் சால்வையை சீர்செய்யும் அசைவினூடாக தன்னை மீட்டார். “இளவரசே, சற்று முன் தாங்கள் தங்கள் தந்தைகுறித்துச் சொன்னதையே உங்களிடம் நான் கேட்கிறேன். என்றேனும் தங்கள் குருதியில் பிறந்த மைந்தர்களுக்காக தாங்கள் அறம்பிழைக்கலாகுமா? ஒருகணமேனும்…” தருமன் அவர் விழிகளை சற்றும் நிலையழியா விழிகளால் நோக்கி “இல்லை, அது நிகழாது” என்றான். விதுரர் திகைப்புடன் அவன் விழிகளையே நோக்கினார்.

“நான் மானுட உயிர்களுக்குரிய அவ்வெல்லையை கடப்பதை அன்றி பிறிது எதையும் இலக்காகக் கொள்ளவில்லை அமைச்சரே. சொல் கற்று சொல்நினைத்து நான் செய்யும் தவம் அதற்காகவே” என்றான் தருமன். “மானுடர் தாங்கள் இயல்பிலேயே நல்லவர்கள் என்றும், அறத்தில் நிற்பவர்கள் என்றும் நம்புகிறார்கள். அநீதியை செய்யும்போதுகூட அது நீதியின்பொருட்டே என்று நம்பிக்கொள்கிறார்கள். தங்களை நிறுவிக்கொள்ளவே மானுடஞானத்தின் சொற்களனைத்தும் செலவிடப்படுகின்றன. நான் மானுடரின் அனைத்து கீழ்மைகளையும் நேர்விழி கொண்டு நோக்குகிறேன். அவற்றை கடந்துசெல்ல முயல்கிறேன். எனக்கு சொல்லன்னை துணையிருப்பாள்.”

விதுரர் தளர்ந்தார். “அவ்வண்ணமே ஆகுக!” என்றபின் பெருமூச்சுவிட்டு, “இனி என்ன செய்யவிருக்கிறீர்கள் இளவரசே?” என்றார். தருமன் கைகளை மார்பில் கட்டிக்கொண்டு “காத்திருக்கிறேன்” என்றான். விதுரர் விழிதூக்கினார். “தந்தையின் இறப்புக்காக” என்றான் அவன். அவர் மெல்ல அசைய “அதைச் சொல்ல மைந்தர் தயங்குவார்கள். உண்மையின் முன் நாணம் எதற்கு? அவர் நிறைவுடன் மறையட்டும். அதன்பின் முடிவெடுப்போம் அஸ்தினபுரி எவருக்கென்று” என்றான்.

சற்று முன்னால் சரிந்து அவன் தொடர்ந்தான் “அதுவரை நானும் என் இளையோரும் இங்கேயே இருக்கிறோம். நாங்கள் இங்கிருப்பதே இவர்களின் வல்லமையை கூட்டும். பீமனும் அர்ஜுனனும் இருக்கையில் துருபதரின் படைகளை எவரும் வெல்லமுடியாது. எங்களுடன் ஷத்ரியநாடுகள் இணையட்டும். .இளையோருக்கு சிறந்த மணமக்களை அவர்களிடம் தேடுவோம். புதிய அரசுகள் வந்து சேர்ந்துகொள்ளட்டும். வல்லமை வாய்ந்த படைக்கூட்டுடன் நான் இங்கே காத்திருக்கிறேன். என் நாட்டை நான் போரில் வென்றெடுக்கிறேன். அஸ்தினபுரியின் கோட்டையை உடைத்து வந்து அரண்மனை முற்றத்தில் நிற்கிறேன். அதுவே ஷத்ரிய முறைமை.”

விதுரர் அவனை நோக்கியபடி அமர்ந்திருந்தார். அவரது கழுத்துத்தசை இறுகி இறுகி தளர, தாடியுடன் தலை ஆடிக்கொண்டிருந்தது. “அமைச்சரே, என் எண்ணங்களை அன்னையிடம் சொல்லுங்கள்” என்றபடி தருமன் எழுந்தான். “இவற்றை அவர்களிடம் நான் நேரில் சொல்லும் தருணம் வாய்க்காமைக்கு நன்றி. இதோ நான் பாஞ்சாலத்தின் இளவரசியை மணம் புரிந்துகொண்டுவிட்டேன். அரசியலை முற்றிலும் என் கைகளில் எடுத்துக்கொண்டுவிட்டேன். அவர்களுக்கு ஐயமிருக்கலாம், நான் ஷத்ரியனா என்று. ஆம் என்று அவர்களிடம் சொல்லுங்கள். ஷத்ரியன் தன் இறுதி முடிவுக்கு எதிராக நிற்பவர் எவரையும் எதிரியென்றே எண்ணுவானென்று சொல்லுங்கள். அவர்கள் புரிந்துகொள்வார்கள்.”

தருமன் தலைவணங்கியபடி திரும்பி அறைவாயிலை நோக்கி செல்ல விதுரர் “இளவரசே, ஒரே ஒரு வினா. திருதராஷ்டிரருக்கு பின்னால் நீங்கள் அஸ்தினபுரியை வென்றால் உங்கள் நீதி எவரை எப்படி தண்டிக்கும்?” என்றார். தருமன் சற்றும் நிலைமாறா விழிகளுடன் “காந்தாரரை அவரது நாட்டுக்கு திருப்பி அனுப்புவேன். அவருக்களிக்கப்பட்ட வாக்கு மீறப்பட்டிருப்பதனால் அஸ்தினபுரியிடமும் நிகரான பிழையிருக்கிறது. ஆனால் ஷத்ரிய நெறியை மீறி அந்த எரிநிகழ்வை திட்டமிட்டமைக்காக அவரது நாட்டிடம் பெரும் பிழையீடு பெற்றபின்னரே அவரை அனுப்புவேன். கணிகரை கிழக்குக் கோட்டைவாயிலில் கழுவேற்றி இறந்த விலங்குகளுடன் எவரும் அறியாத இடமொன்றில் புதைப்பேன். நூறுதலைமுறையானாலும் அவருக்கு நீர்க்கடன்கள் செல்லாது” என்றான்.

விதுரர் தன் உடலெங்கும் பதற்றம்போல பரவிய மெல்லிய அச்சத்தை உணர்ந்தார். தருமன் சொன்னான் “அவைகூட்டி துரியோதனனையும் துச்சாதனனையும் என் நெஞ்சொடு சேர்த்து அணைத்தபின் அவர்களுக்கு என் பாதி நாட்டை அளிப்பேன். துரியோதனனுக்கு என்று தன்னிச்சையான மணிமுடியும் செங்கோலும் இருக்கும்படி செய்வேன். அவர்கள் என்றும் என் அருகில் துணைநாட்டவர்களாக நின்றிருக்கவேண்டுமென்று விழைவேன். குருகுலத்தில் மூத்தவனாக என் இளையோர் செய்த அனைத்துப்பிழைகளையும் மும்முறை பொறுத்தருள கடமைப்பட்டவன் நான். என் தாய்வயிற்று இளையோருக்கு முற்றிலும் நிகராக அவர்களையும் என் அன்பிலேயே வைத்திருப்பேன்.”

”அவர்கள் அதற்கு ஒப்பார்கள் என்றால் துரியோதனனையும் துச்சாதனனையும் என் இளையோனிடம் போரிட்டு மடியவைப்பேன். ஏனென்றால் அவர்கள் ஷத்ரியர்கள். வீரசொர்கத்திற்கு தகுதிகொண்டவர்கள்” என்றான் தருமன். விதுரர் அவரை அறியாமல் கைகளை தளரவிட்டார். “சூதமைந்தன் கர்ணனை அவைக்கு அழைக்காமல் என் அறைக்கு அழைத்து தனியாக வாரணவதத்து எரிநிகழ்வை ஏற்றுக்கொண்டானா என்று கேட்பேன். ஏற்றுக்கொண்டான் என்று அறியவந்தால் அவனை வாள்போழ்ந்து கொன்று என் மூதாதையர் உறங்கும் தென்திசைச் சோலை ஒன்றில் எரியூட்டுவேன்.” விதுரர் ஏதோ சொல்வதற்குள் தருமன் வெளியே சென்றுவிட்டான். அவன் மரப்படிகளில் ஏறிச்சென்ற ஒலி கேட்டது.

பெருமூச்சுடன் அவர் மீண்டும் பீடத்தில் சாய்ந்துகொண்டார். திரும்பி திரௌபதியை நோக்கி ஏதேனும் சொல்ல வேண்டுமென்று அவர் எண்ணுவதற்குள் அவள் திரை ஓவியம் காற்றில் உலைவதுபோல் உயிர்கொண்டு “யாதவஅரசியிடம் நான் ஏதேனும் பேசவேண்டுமா அமைச்சரே?” என்றாள். விதுரர் திடுக்கிட்டு அந்த வினாவிலிருந்த நெடுந்தொலைவைக் கடந்து “இல்லை, இப்போது சொன்னதற்கு அப்பால் என்ன?” என்றார்.

திரௌபதி தன் ஆடையை இடக்கையால் பற்றிக்கொண்டு எழுந்து பீடத்தின் வலப்பக்கம் போடப்பட்டிருந்த தன் நீள்கூந்தலை எடுத்து பின்னால் இட்டு தலையை மயில் என சொடுக்கி அதை சீர்ப்படுத்தியபின் “வணங்குகிறேன் அமைச்சரே” என்றாள். விதுரர் எழுந்து தலைவணங்கினார். அவள் நடந்துசெல்லும்போது அலையடித்த கூந்தலை அவர் நோக்கிக்கொண்டிருந்தார்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைராய் மாக்ஸ்ஹாம் ஒரு சந்திப்பு
அடுத்த கட்டுரைவிஜயன் -கடிதம்