பெருமாள் முருகன் -விடாமல் ஒரு கடிதம்!

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

திருச்செங்கோடு http://www.jeyamohan.in/69674 – இந்த பக்கத்தினை
கடைசியாக படித்தேன். மாதொருபாகனை பற்றி உங்களது கருத்துக்களை(!)
தொடர்ந்து கண்டு வருகிறேன். இந்நிலையில் ஒரு ஐயத்தின் காரணமாக
கேட்கிறேன், நீங்கள் மாதொருபாகன் நாவலை படித்துவிட்டீர்களா?

மாதொருபாகனில் காட்டப்பட்டுள்ள கதைக்களம் – புவியியல் – சமுதாயம் –
சம்பவம் – விழாக்கள் – நம்பிக்கைகள் பெரும்பாலானவை நிதர்சனம். உள்ளூர்
மக்களுக்கு பிரசித்தமானவை. இந்த மெய்யுடன் (வாழைப்பழத்தில் ஊசி போல)
பொய்யை பிணைத்து இப்படித்தான் நடந்தது என்று சரித்திர நிகழ்வாக
காட்டியுள்ள இழி செயலை, கருத்துசுதந்திரம் என்று பெயரில் தாங்கள்
தொடர்ந்து பேசி வருவது பார்ப்பவர்கள் உங்கள் மீதுள்ள மரியாதையை குறைக்க
வழிகோலும்.

இனியும், அந்நாவலை வாசிக்காமல் மாதொருபாகன் நாவலின் கருத்து சுதந்திரம்
பற்றி கருத்துகூற வேண்டாம்.

மேலும், இந்த கருத்தை படித்துவிட்டு ஒரு எழுத்தாளன் படைப்பை பற்றிய
விமர்சனங்களை எதிர்த்து கருத்து கூறக்கூடாதா, பஞ்சாயத்து செய்துதான்
கருத்து சொல்ல வேண்டுமா என்று சிறுபிள்ளைத்தனமாக கருத்து கூற வேண்டாம்.

கருத்து சுதந்திரம் தேவை. ஒரு செய்திக்கு கீழ் கருத்துரை இட்டாலும் அதனை
பரிசீலித்து அனுமதிக்கும் விதியை தினப்பத்திரிகைகள், தனி நபர்கள்
இணையத்தில் எப்படி வைத்திருக்கிறார்களோ, அந்த அளவு கருத்துதணிக்கையாவது
தேவை. ஒரு எழுத்தாளன் கற்பனைக்கு, சமூகத்தில் இருக்கும் அவலத்திற்கு
கருத்து தெரிவிக்கலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட இடத்தை, மக்களை, புனித
இடங்களில் வரலாற்று ரீதியல் ஆராய்ச்சி செய்ததாக (ஆனால் ஆதாரம் இல்லாமல்)
கூறி இல்லாததை இருந்ததாதாக நிதர்சனத்தில் இருப்பவர்களுடன்/பவைகளுடன்
பிணைத்து இதுதான் வரலாறு என்று மிககேவலமான பாணியில் இளைஞர்களை
குறிவைத்து அவர்களை வாசிக்க வைத்து நம்ப வைக்கும் முயற்சியை கருத்து
சுதந்திரம் என்ற பெயரில் ஆதரிக்க முடியாது. இதற்கு பெயர் சதிசெயல்.
சமுதாயத்தை அழிக்க எழுத்தாளனால் தொடுக்கப்பட்டுள்ள யுத்தம். மேலும்,
இவரது இதர நாவல்களான ஆலவாயன், கெட்ட வார்த்தை பேசுவோம், கங்கணம்,
அர்த்தநாரி போன்ற நாவல்களிலும் இது போன்ற இழிவான சூழ்ச்சி மிக்க வாசங்கள்
உள்ளது.

உங்கள் கருத்துக்களை அம்பலபடுத்தும் முன், கருத்து கூறும் பொருளைபற்றி
தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இத்துடன் மேற்விவாதித்த நாவலை உங்கள்
வாசிப்பிற்காக இணைக்கிறேன்.

நன்றி,

Yuvasenthilkumar R,

முந்தைய கட்டுரைகருத்துச்சுதந்திரம்!
அடுத்த கட்டுரைபெருமாள் முருகன் – விடாமல்…