அன்பு ஜெயமோகன்,
வெண்முரசு நூல் வெளியீட்டு விழாவின் காணொளியில் என்னை மிகவும் கவர்ந்தது கடைசி ஒரு நிமிடம்தான். அந்நிமிடத்தில்தான் அக்கா அருண்மொழிநங்கை கெளரவப்படுத்தப்பட்டார். அவரைத் தெரியாதவர்களுக்கு அது ஒரு சம்பிரதாய நிகழ்வாகவே இருந்திருக்கும். எனக்கோ அது முக்கியமான ஒன்றாகப்பட்டது. அதுவும் தமிழ் மின்னிதழில் உங்கள் பேட்டியைப் படித்த பின்பு.
அருண்மொழிநங்கை அக்காவை நான் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நிகழ்வில் கடந்த மாதம்தான் பார்க்கிறேன்; பேசவில்லை. முதன் முதலாய் அங்குதான் உங்களையும் பார்த்தேன். சு.வேணுகோபாலனுடனான கலந்துரையாடல் நிகழ்வின் தேநீர் இடைவேளையின்போது நமக்குள் திடீர் அறிமுகம் நிகழ்ந்தது. இருவரும் சில கணங்கள் தழுவிக்கொண்டோம். அப்போது என்னைப் பற்றி அக்காவிடம் சொன்னீர்கள். அதன்பிறகு நாம் பேசிக்கொள்ளவில்லை. உடன் வந்திருந்த நண்பருடன் ஊர் திரும்பிவிட்டேன். ஊருக்கு வந்தபின்தான் அக்காவிடமும், சைதன்யாவிடமும் பேசாமல் வந்துவிட்டோமோ எனும் வருத்தம் எழுந்தது. என்றாலும், அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் எப்படி பேசுவது எனும் தயக்கம் நியாயமானதாகவும் தோன்றியதால் அமைதியானேன்.
சரவணகார்த்திகேயனின் பெருமுயற்சியால் வெளிவரும் தமிழ் மின்னிதழின் நேர்காணலில் அக்காவுக்கும், உங்களுக்கும் காதல் மலர்ந்த தருணம் பற்றிச் சொல்லி இருந்தீர்கள். பரவசமாய் நீங்கள் எழுதியிருந்த கொன்றைப்பூமரக் குறிப்பின் வழியாகவே அக்காவின் முகம் எனக்கு நெருக்கமானது. ஏனோ, அக்குறிப்பை என்னால் எளிதில் கடந்துவிட முடியவில்லை. மூன்று வரிகளில் நீங்கள் உங்கள் காதலைச் சொல்லிவிட்டாலும் அது உங்கள் இருவருக்குமான பலகதைகளைச் சுமந்தபடி இருக்கும் என்றே கருதுகிறேன். அறிவார்ந்த ஆணவத்தால் பெண்களைத் தவிர்த்தது குறித்து மனம்திறந்து பேசிய உங்களின் வாழ்வில் அக்காவின் பங்கை அளப்பரியதாகவே நான் பார்க்கிறேன். அக்கா உங்களுக்குக் கிடைத்ததை நல்லூழ் என்று சொல்லி இருந்தீர்கள். அஜிதனும், சைதன்யாவும் அப்படியே என்கிறேன் நான்.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.
அன்புள்ள ஜெ,
நலம் தானே. நேற்று (ஞாயிறு – 18/01/2015) விஜய் தொலைக்காட்சியில் வெண்முரசு வெளியீட்டு விழா பார்த்தேன். மிக நன்றாகத் தொகுக்கப் பட்ட நிகழ்வு. ஒளிப்பதிவு செய்தவருக்கு யார் யாரையெல்லாம் பதிவு செய்ய வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. அதை விட அதை தொகுத்தவருக்கு (editing என்பதைத் தொகுத்தல் என்று தானே சொல்வது) மிக நன்றாகத் தெரிந்திருக்கிறது. அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைத்தது போல் உங்கள் மனைவிக்கு பரிசு கொடுத்ததை நிகழ்வின் இறுதியில் உச்சமாக வைத்திருந்தது அபாரம். மீண்டும் படத் தொகுப்பு செய்தவர் பாராட்டுக்குரியவர். அந்தப் பரிசைப் பெறும் பொழுது நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய உடல்மொழி தந்த பரவசம் எந்த காதல் திரைப்படமும் தந்திராதது. என்ன தான் நடித்தாலும் உண்மையை விஞ்ச முடியுமா என்ன?
உங்களின் குடும்பத்தைப் பற்றியும், உங்கள் மனைவியுடனான காதலைப் பற்றியும் பல முறை உங்கள் எழுத்துக்கள் வழியாக என்னுள் ஒரு பிம்பம் வளர்ந்துவிட்டிருக்கிறது. அந்த பிம்பம் முற்றிலும் உண்மை என்றே நேற்றைய நிகழ்வு எனக்கு உணர்த்தியது. இடையிடையே காட்டப்பட்ட தங்கள் மனைவியின் முகத்தில் தெரிந்த பூரிப்பே அதற்கு சாட்சி. வெளியில் தெரியாவிட்டாலும் உங்களின் வேர் அவர் தானே!!! உண்மையில் உங்களின் நல்லூழ் தான் நீங்கள் அவரைக் கண்டுகொண்டது.
நீங்கள் தமிழ் மின்னிதழில் கொடுத்த பேட்டியில் உங்களுக்கு காதல் வந்த தருணத்தைச் சொல்லியிருந்த விதம், படிக்கும் போதும் சரி, படித்த பின்பும் சரி முகம் முழுவதும் புன்னகை இருந்தது. உங்களை வாழ்த்தும் அளவு வயதில்லை. ஆனால் இதே போன்ற அறிவுத் துணை உங்களுக்கு கிடைத்ததற்கு ஆண்டவனிடம் நன்றி சொல்கிறேன். என் வாழ்வில் ஒரே பெண் தான் ஒரே காதல் தான் என்ற உங்கள் வாக்கியம், அது உங்களுக்குத் தரும் பெருமிதம் என்னால் உணர முடிகிறது.
அன்புடன்,
ராஜன்