கர்மயோகம் : (8 – 13)

8. உனக்கான செயலை
செய்க
ஏனென்றால்
செயலின்மையை விடவும்
செயல் மேன்மை உடையது
செயலின்மை கொண்டாயென்றால்
உடலைப் பேணவே
முடியாதவனாவாய்.

9. வேள்வியென ஆற்றப்படும்
செயல்கள் தவிர்த்த பிறவற்றால்
இவ்வுலகம்
செயற்சுழலில் சிக்கியிருக்கிறது
ஆகவே குந்தியின் மகனே
அவ்வாறான செயலை
பற்றில்லாது செய்க.

10. பிரஜாபதி
ஆதியில்
வேள்வியுடன்
தன் மக்களைப் படைத்து
இந்த வேள்வியால்
நீங்கள் பெருகுவீர்களாக
இது உங்களுக்கு
விரும்பியதை அளிக்கும்
காமதேனுவாக அமைவதாக
என்று அருளினார்.

11. இந்த வேள்வியால்
தேவர்கள் பெருகுக.
அத்தேவர்கள்
உங்களை பெருகச் செய்க
ஒருவரை ஒருவர் பெருக வைத்து
முழுமையான சிறப்புகளை
அடைவீராக.

12. வேள்வியால் பெருகிய
தேவர்கள்
உங்களுக்கு
வேண்டும் நலன்களை அளிப்பார்கள்
ஆகவே
அவர்கள் அளித்த நலன்களை
அவர்களுக்கு அளிக்காமல்
நுகர்பவன்
திருடனேயாவான்.

13. வேள்வி மீதத்தை உண்ணும்
சான்றோர்
எல்லா பாவங்களிலிருந்தும்
விடுதலையடைகிறார்கள்
ஆனால்
தங்களுக்காக மட்டும்
சமைத்துக் கொள்கிறார்களோ
அந்த பாவிகள்
அந்தப் பாவத்தையே உண்ணுகிறார்கள்   

கர்மமும் யக்ஞமும்

கீதையின் இப்பகுதியில் வேள்வி என்று கூறப்படுவது என்ன? வேத விதிகளின் படி வகுக்கப்பட்ட யாகம், ஹோமம் முதலிய சடங்குகளைத்தான் என்பதே மரபான கீதை உரைகளின் விளக்கமாக இருக்கும். பெரும்பாலான நூல்களில் நாம் அதையே கண்டிருப்போம். ஆனால் அப்படி பொருள் கொள்ளுவோம் என்றால் கீதையின் இந்தக் கவித்துவச் சந்தர்ப்பத்திற்கு அது முற்றிலும் பொருந்தாது. இங்கே ஒரு வீரன் போர் புரிய களத்தில் இருக்கிறான். அவனிடம் உனக்கான செயலை நீ செய்வாயாக என்று கூறும்போது எங்கே யாகமும் ஹோமமும் வருகின்றன?

தத்துவார்த்தமாகப் பார்த்தால் கூட இந்த குறிப்பிட்ட வரிகளுக்குள்ளேயே அந்தப் பொருள் முழுமையான விளக்கத்தை அளிப்பதில்லை. செயலாற்றுவாயாக, இல்லையேல் உன்னால் உடலையும் பேண முடியாது என்று கூறிவிட்டு ஆதிப்படைப்பாளி மானுட குலத்தை வேதவேள்விகள் செய்யும் பொருட்டே படைத்தான் என்று கூறுவது அபத்தமான விளக்கமாகவே ஆகும். தொடர்ந்து விரிந்துவரும் பாடல்கள் வேள்வி என்ற சொல்லுக்கு வைதிக நடைமுறை சார்ந்த பொருளை அளிப்பதை தடுத்துக் கொண்டேதான் விரிகின்றன. அதாவது கீதையின் இவ்வரிகளுக்கு ஒரு குறைந்தபட்ச தத்துவ விளக்கம் அளித்தால்கூட இங்கே கூறப்படுவது வேதவேள்விகளை என்று எடுத்துக் கொள்ள முடியாது.

அனைத்தையும் விட முக்கியமானது ஒரு ஞான குருவாக கிருஷ்ணன் உலகியல் இலாபங்களை அளிக்கும் வேள்விச் சடங்குகளுக்கு எதிரானவர் என்பதும், ஞான நூலாகிய கீதை திட்டவட்டமாகவே அத்தகைய செயல்பாடுகளை பயனற்றவை என்று விளக்குகிறது என்பதுமாகும். உபநிடதங்கள் வேதத்தின் இறுதி. ஞான காண்டத்தைச் சார்ந்தவை அவை. கர்ம காண்டம் என்று வகுக்கப்பட்ட சடங்குகளுக்கு நேர் எதிரானவை. தொன்மையான ஞான நூலாகிய கீதையும் ஓர் உபநிடதமேயாகும்.

இங்கே வேள்வி என்று கூறப்படுவது வேதங்களின் யாக, ஹோமச் சடங்குகளையே என்று எடுத்துக் கொள்வதற்கான ஆதாரம் என்னவென்றால் இது கர்ம யோகம் என்பதும் வேதங்களில் கர்மம் என்று பொதுவாகக் குறிப்பிடப்படுவதும், கர்மகாண்டம் என்று வேதத்தில் பகுக்கப்படுவதும் வேள்விச் சடங்குகளையே என்பதும்தான். இது ஒரு வலுவான வாதமேயாகும். ஆனால் உபநிடதங்களைப் பொதுவாக வாசிக்கும்போது தத்துவ தளத்தில் கர்மம் என்ற சொல் வாழ்வின் மொத்தச் செயல்பாடுகளையும், பிரபஞ்ச நிகழ்வுகளை அனைத்தையும், ஒட்டுமொத்தமாகச் சுட்டிக்காட்டுவதற்கான கலைச் சொல்லாகவே காணப்படுகிறது என்பதே அதற்குப் பதிலாகும்.

இவ்வாறு கீதையின் பொருளை நோக்கி நகரும்போது நமக்குத் தேவையானது இரண்டுவகையான அணுகுமுறை என்று நடராஜகுரு குறிப்பிடுகிறார். இந்நூலில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் விஷயம்தான் அது. ஒன்று வரலாற்று நோக்கு இரண்டு தத்துவ நோக்கு. கீதையில் உள்ள ஒரு சொல்லை நம் சூழலில், நம் விவாதக்களனில் அது எந்தப் பொருள் தருகிறது என்ற நிலையில் நாம் புரிந்து கொள்ளக்கூடாது. அந்தச் சொல் இந்து ஞானமரபின் பரிணாமத்தில் எப்படியெல்லாம் மாறிவருகிறது என்று பார்க்க வேண்டும். கீதையின் காலகட்டத்தில் அந்த விவாதச் சூழலில் அது எப்படிப் பயன்பட்டிருக்கும் என்று பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில் கீதை கூறவருவது என்ன என்று புரிந்து கொள்ள முயல வேண்டும்.

இதன் அடுத்தபடியே அச்சொல்லை தத்துவார்த்தமாக புரிந்து கொள்வது. ஒரு சொல்லை ஒரு வரியில் அல்லது ஒரு பாடலில் நிறுத்திப்புரிந்து கொள்வதற்கு மாறாக கீதையின் விரிவான தத்துவ விவாதத்தின் புலத்தில் வைத்து அது எதை விவாதிக்கிறது என்று பார்ப்பதுதான் உகந்த வழிமுறையாக இருக்கும்.

இவ்விரு கோணத்திலும் கருமம் என்ற சொல்லைப் பார்ப்போம். நாம் இன்று நின்று பேசும், சூழல் பக்தி இயக்கத்தால் உருவாக்கப்பட்டது. இன்று நாம் பெரும்பாலான சொற்களை பக்தி இயக்கம் அளித்த பொருளை ஏற்றபடியே பயன்படுத்துகிறோம். வினைக் கோட்பாடு பெரிதும் முன்வைக்கப்பட்ட விவாதச் சூழல் என பக்தி காலகட்டத்தைக் கூறலாம். சைவம், வைணவம் இரு பெரு மதங்களுக்குமே பிறவிதோறும் மனிதர்களைத் தொடர்ந்து வந்து நன்மை தீமைகளை விளைவிக்கும் வினைப் பயன் மிகவும் முக்கியமான ஒரு கருதுகோள். இதைச் சுட்டும் சொல்லாகவே கருமம் என்ற சொல் புழக்கத்திலிருந்தது இன்றும் அப்படியே நீடிக்கிறது. இன்று நாம் ‘கருமம்! கருமம்!’ என்று தலையிலடித்துக் கொள்வது அந்தப் பொருளில்தான்.

பக்தி இயக்கத்திற்கு முந்தைய பெளத்த சமண கருத்து விவாதங்களில் கருமம் என்பது இந்த உலகிலும் பிரபஞ்சத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் முடிவிலாத நிகழ்ச்சிப் பிரவாகத்தைக் குறிக்கவே கையாளப்பட்டது. காரணத்தில் இருந்து காரியம், அதிலிருந்து அதையே காரணமாகக் கொண்டு மீண்டும் காரியம் என்று இப்பிரபஞ்சம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று பெளத்தமும் சமணமும் கூறின. பால் காரணம் என்றால் தயிர் காரியம். தயிர் காரணம் என்றால் வெண்ணெய் காரியம். வெண்ணை காரணம் என்றால் நெய் அதன் காரியம். இது சத்காரிய வாதம் என்று கூறப்பட்டது. பெளத்தம் இதை பிரதீத சமுத்பாதம் என்று விரிவான தத்துவக் கோட்பாடாக முன்னெடுத்தது.

இந்த செயல்ப்பிரவாகத்தில்தான் ஒவ்வொரு உயிரும் பிறந்து வந்துவிழுகிறது. அதுவும் செயல்பட்டாக வேண்டியிருக்கிறது. அது செய்வதற்கெல்லாம் உடனே விளைவு இருக்கிறது. அந்த விளைவில் இருந்த அடுத்த செயல் உருவாகிறது. இந்தப் பிரம்மாண்டமான தொடரியக்கத்தில் இருந்து எவருமே தப்ப முடியாது. ஆகவே அத்தனை உயிர்களும் அத்தனை ஜடப்பொருட்களும் அந்த பேரியக்கத்தில் தங்களுக்கு விதிக்கப்பட்ட செயலை ஆற்றிக் கொண்டிருக்கின்றன.

மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் அவர்களின் ஒரு கதையில் இப்படி ஒரு வர்ணனை வரும். மரம் முறிந்து விழுந்து இடிந்து விழுந்து தன்னைக் கொல்லப்போகும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேக வேகமாக கடிகாரத்தில் அடிக்கடி நேரத்தைப் பார்த்துக் கொண்டு ஓடிவந்து கொண்டிருப்பாள் ஒரு பெண். நல்ல வேளை சரியான நேரத்திற்கு வந்துவிட்டேன் என்று நினைத்தும் கொள்வாள். ஒரு பிரம்மாண்டமான நாடகத்தில் அவள் தனக்கான பங்கை நடித்துக் கொண்டிருக்கிறாள். அதற்குமுன் அவள் வீட்டை விட்டு கிளம்பியது, அதற்கும் முன்பு அவள் காலையில் தூங்கி எழுந்தது என்று அவள் இந்தப் புள்ளி நோக்கித்தான் வந்து கொண்டிருந்தாள். இங்கே பற்பல ஆண்டுகளாக மரம் உளுத்து மெல்ல மெல்ல இற்று அவளுக்காக தயாராகிக் கொண்டிருந்தது. பெளத்த சமண மதங்களின் கருத்துப்படி இதுவே கருமம் என்பது.

பெளத்தமும் சமணமும் இந்தக் கருத்துக்களை உபநிடதகால விவாதங்களில் இருந்து உருவாக்கிக் கொண்டன. உபநிடத விவாதங்களில் கருமம் என்ற சொல்லாட்சியானது இரு தளங்களில் பயன்படுத்தப்படுகிறது. பிரபஞ்சத்தில் நிகழும் இடையறாத தொடர்ச் செயல்பாட்டை குறிக்கவும், அதில் மனிதன் ஆற்றும் பங்கை குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே மேலோட்டமாக வாசிக்கும்போது கருமத்தில் இருந்து மனிதன் தப்ப முடியாது என்றும், கருமத்தை நிராகரிக்காமல் ஞானம் நோக்கி நகர முடியாது என்றும் உபநிடதங்கள் ஒரே சமயம் கூறுகின்றன என்ற பெருங்குழப்பம் வாசகனுக்கு ஏற்படக் கூடும். ஆனால் உபநிடத காலகட்டம் என்று நாம் இன்று கூறுவது எப்படியும் ஐநூறு வருடம் நீளமுள்ள ஒரு பெரிய வளர்ச்சிக் காலகட்டத்தை என்று பார்க்க வேண்டும். முதல்கட்ட உபநிடதத்தில் இருந்து கடைசி கட்ட உபநிடதத்திற்குள் கருத்து வளர்ச்சி பல படிகளைத் தாண்டியிருக்கும். விவாதங்கள் பல வகையான வளர்ச்சியும் மாற்றமும் அடைந்திருக்கும். அக்காலகட்டம் முடிந்த பிறகு அவற்றின் சிறந்த ஆக்கங்களாக திரண்டு வந்த சில நூல்களை ஒட்டுமொத்தமாக நாம் உபநிடதங்கள் என்று ஒன்றாக இன்று பார்க்கிறோம். இந்நூல்களுக்குள் சொற்பொருளிலும் கருத்துப் புழக்கத்திலும் உள்ள முரண்பாடுகளை வேறுவேறு காலகட்டத்தின் வெளிப்பாடுகளாகவே காணவேண்டும்.

அதற்கும் முந்தைய வேதங்களில் கர்மம் என்ற சொல் பெரும்பாலும் வேள்வியையே குறிக்கிறது. ஆனால் வேதத்தில் இறுதிப்பகுதி என்று கூறப்படும் ஞான காண்டச் செய்யுள்களில் அது விரிவான பொருளில் உலகச் செயல்பாடுகள், பிரபஞ்சச் செயல்பாடுகள் என்ற பொருளிலும் வருகிறது. கருமம் என்ற சொல்லை எடுத்துக் கொண்டு பேசும்போது அந்த நூல் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தது எதை முன்வைத்து விவாதிக்கிறது என்பதை நாம் கருத்தில் கொண்டேயாக வேண்டும். வேதங்களின் விளக்கங்களான ஆரண்யகங்களிலும் பிராமணங்களிலும் கர்மம் வேள்வி என்ற பொருளில் இருக்கும் உபநிடதங்களில் உலகச் செயல்பாடு என்ற பொருளிலும் பிரபஞ்ச இயக்கத்தில் ஈடுபடுதல் என்ற பொருளிலும் இருக்கும் கீதை ஒர் உபநிடதம்.

இதைப் போலவே வேள்வி என்ற சொல்லைப் பார்க்கவேண்டும். கீதையில் பயன்படுத்தப்படிருக்கும் சொல் ‘யக்ஞம்’ என்பதாகும். இச்சொல் சாதாரணமாக வேதவேள்விகளைக் குறிப்பதற்கு மட்டுமே கையாளப்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால் இங்கே இச்சொல்லை பொருள் கொள்ளும்போது மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. ஒன்று யக்ஞம் என்ற சொல் வேதவேள்விகளை மட்டுமே குறிக்கும் சொல்லாகத்தான் இருந்திருக்கிறதா? இரண்டு இந்த வரிகளின் உருவாக்க காலகட்டத்தில் இச்சொல் எப்பொருளில் பயன்படுத்தப்பட்டது. மூன்று, இந்தச் செய்யுள் பேசும் விஷயங்களை வைத்துப் பார்த்தால் எந்த அர்த்தம் பொருத்தமானது, முழுமையானது?

வேதங்களில் யக்ஞம் என்ற சொல் மிக விரிவான பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைக் குறித்து இந்திய ஞானமரபில் நிகழ்ந்த விவாதங்களைப் பற்றி ஒரு தனி நூலே எழுதிவிட முடியும். வேதங்களில் இச்சொல் ஒட்டுமொத்தமாகப் பயின்று வருவதைப் பார்த்தால் ‘பெரும் செயல்’ ‘தியாகமும் அர்ப்பணிப்பும் கொண்ட செயல்’ ‘ஒட்டுமொத்தமான கூட்டான செயல்பாடு’ என்ற பொருளில்தான் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேதங்களைப் பொருத்தவரை ஹோமமும் யாகமும்கூட அத்தகையவை என்பதனால் அவையும் யக்ஞம் என்று சுட்டப்பட்டன.

இந்த விஷயத்தை ஆரிய சமாஜ நிறுவனரான சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் தன் உரைகளில் மிக விரிவாக விளக்கியிருக்கிறார். யக்ஞம் என்ற சொல்லுக்கு சடங்கு சார்ந்த அர்த்தம் மட்டும் அமைத்து இன்றைய விளக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் உரையாசிரியரான சாயனர்தான் என்று கருதும் தயானந்த சரஸ்வதி சாயனரை வேதங்களை அழித்தவர் என்றே கண்டிக்கிறார். அரவிந்தரும் வேதங்களின் நுண்பொருட்கள் இத்தகைய சடங்கு சார்ந்த குறுக்கல் வாதங்களால் அழிக்கப்பட்டடுவிட்டது என்று கருதுகிறார். வேள்வி-யக்ஞம்-என்ற சொல்லை அவரும் விரிவான பொருளிளேயே பயன்படுத்துகிறார். பாரதியின் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் வேள்வி என்ற சொல் அரவிந்தரின் நோக்கில் பெரும்செயல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

கீதை உருவான உபநிடதத் தொடக்ககால கட்டத்தில் வேதங்களின் சடங்கு சார்ந்த தளத்தை விட மேலாக ஞானம் சார்ந்த தளத்தை முன்னெடுக்கும் முயற்சிகள் நடந்தன. உபநிடதங்களின் பணியே அதுதான். கீதை ஓர் உபநிடதம் என்ற அளவில் அந்த கருத்துநிலையே வெளிப்படையாக முன்வைக்கிறது. ஆகவே யக்ஞம் என்ற சொல்லை அது வேதங்களில் உள்ள ஞானகாண்டப் பகுதி எந்தப் பொருளில் பயன்படுத்தப்படுகிறதோ அப்படியே கையாண்டிருக்கும் என்று கொள்வதே உசிதமானதாகும்.

கடைசியாக இந்தச் செய்யுளை எடுத்துக் கொண்டால் கீதையின் விரிவான தத்துவ விவாதத் தன்மைக்கு வேள்வியைச் செய்க என்று கிருஷ்ணன் கூறுவது பொருத்தமற்றதாக உள்ளது. வேள்வி செய்யவே மனிதன், படைக்கப்பட்டான் என்று கிருஷ்ணன் கூறுவோரெனில் இந்த விவாதமே பொருளற்றுப் போய்விடும். அதைவிட கர்மத்தைவிட ஞானம் உயர்ந்தது என்று கிருஷ்ணன் கூறவதை எப்படிப் புரிந்து கொள்வது என்ற வினா எழும். வேத வைத்திகர்களைப் பொறுத்தவரை இறுதியான எல்லா நலன்களையும் அளிப்பது வேள்வி என்ற கருமம். அதைச் செய்வதை விட ஞானம் மேலென்றால் அது வேத நிராகரிகப்பேயாகும். கிருஷ்ணன் வேத விரோதி அல்ல. வேதங்களை வெற்றுச் சடங்குகளாக, உலகியல் நலன்களுக்காக மட்டும் ஆற்றுவதையே கீதை நிராகரிக்கிறது.

ஆகவே இந்த வரிகளில் வேள்வி என்ற சொல் மிக விரிந்த பொருளில்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வேள்வி என்ற சடங்கே கூட குறியீட்டுச் செயல்பாடாக இன்னும் விரிவான ஒன்றைச் சுட்டிக்காட்டத்தான் கூறப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் புதிய விஷயமல்ல. வேதங்களிலேயே வேள்விச் சடங்குகளைப் பற்றிப் பேசும் பல இடங்களில் அவை குறியீடாகவே கூறப்படுகின்றன. பிரபஞ்சம் உருவானது, இயங்குவது குறித்துப் பேசும் போது வேள்வியை ஒரு உருவமாகப் பயன்படுத்துவது வேதங்களின் இயல்பாகும்.

கீதையின் இந்தப் பகுதி வேதங்களில், குறிப்பாக ரிக்வேதத்தில், உள்ள ஞானகாண்டப் பகுதியை அப்படியே அடியொற்றி கூறப்பட்டிருப்பதை வாசகர் கவனிக்கலாம். இங்கு மானுட இனத்தின் பிறப்பு மற்றும் வாழ்க்கை நோக்கம் ஆகியவை வேதங்களில் இருந்த நேரடியாக எடுத்தாளப்பட்டிருக்கும் வேள்வி என்ற படிமம் மூலமும் பிரஜாபதி என்ற படிமம் மூலமும் கூறப்பட்டிருக்கிறது இந்த வரிகளுடன் ஒத்துபோகும் ஏராளமான வரிகளை நாம் ரிக்வேதத்தில் பார்க்க முடியும். சொல்லப்போனால் இந்த வரிகள் கீதையின் பொதுவான கூறுமுறை, மொழியமைப்பு இரண்டிலிருந்தும் வேறுபட்டு ரிக்வேதத்தின் எதிரொலி போலவே உள்ளன.

பிரஜாபதியும் வேள்வியும்

கீதையின் இவ்வரிகளில் வேள்வி என்ற உருவகம் இரண்டு தளங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல கருமம் என்ற சொல்லும் இரு தளங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வேறுபாட்டை உணரவில்லை என்றால் இந்தச் செய்யுளை புரிந்து கொள்ள முடியாது. ‘நியதம் கர்ம த்வம் குரு’ என்று கீதை எட்டாவது செய்யுளில் கூறும் கருமம் என்பது மனிதர்கள் ஆற்றக்கூடிய செயல்களையே குறிக்கிறது. ஆற்றியாக வேண்டிய செயல்கள் என்ற பொருளிலேயே ‘நியத’ என்று கூறுகிறது கீதை. ஒரு மனிதன் பிறந்துவிட்ட காரணத்தாலேயே அவன் செயலாற்ற வேண்டியிருக்கிறது. அவன் பிறந்து விடுவதே செயல்களிலான முடிவற்ற வலைப்பின்னலில்தான். அதைச் செய்தேயாக வேண்டும். செயல் மேன்மையானதா என்று கேட்டால் செயலின்மையை விட மேலானது என்பதே கீதையின் பதில். செயலின்மை கொண்டவன் அழிய வேண்டியவன். துடுப்புகளை அசைக்காத மீன் இறந்துவிட்ட ஒன்றுதான்.

இங்கே ‘நியத’ என்ற சொல்லை வகுக்கப்பட்ட என்ற பொருளில் எடுத்துக்கொண்டு ‘சாஸ்திரங்களால் வகுத்தளிக்கப்பட்ட’ என்று பொருள்தந்து கீதாசாரியன் இங்கே கூறுவது பிறப்பின் மூலம் ஒருவனுக்கு வந்து சேரக்கூடிய சாதியாசாரங்களையே என்று வலிந்து பொருள்தரும் பல உரைகளை நாம் காணலாம். இந்த ஒரே செய்யுளே அது எத்தனை தவறானது என்று காட்டுகிறது. மூச்சுவிடுதல் போன்றவற்றையும் உள்ளடக்கிய ஒரு செயல்குறித்தே கீதை பேசுகிறது. அதனாலேயே உடலைப் பேணக்கூட முடியாதவனாவாய் என்று அது கூறுகிறது. நியதமான செயல் என்றால் அதுதான். உணவு தேடுதல், உற்றார் பேணுதல், சுற்றமும் சமூகம் கோடும் கடமைகளைச் செய்தல். ஒருவனுக்கு பிறப்பிலேயே வந்து சேரும் செயல் கடமைகள் இவைதான். ஒரு பெற்றோரின் வயிற்றில் பிறந்துவிட்ட காரணத்தாலேயே அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தேயாக வேண்டியவர்களாகிறோம். அந்தச் செயல்தான் இங்கு கூறப்படும் ‘நியதம் கர்ம:’ என்பது.

அந்தச் செயல்களை வேள்வியென ஆற்ற வேண்டும் என்பதே கீதையின் கூற்று. ‘யக்ஞார்த்தாத கர்மண’ என்று கீதை கூறுகிறது. அதாவது ‘வேள்வியெனச் செய்யப்படும் செயல்கள்’. வேள்விச் செயல்கள் அல்ல, வேள்வியின் இயல்பு கொண்ட செயல்கள். வேள்வி என்ற வேதங்களும் உபநிடதங்களும் கூறுபவை தியாகமும் அர்ப்பணிப்பும் கூட்டான பங்களிப்பும் கொண்ட பெருஞ் செயல்கள் என்பதைக் கண்டோம். கீதையைப் பொறுத்தவரை மேலதிகப் பொருள் ஒன்றும் உள்ளது. வேள்விக்கு நிகரான செயல் என்பது பலன் கருதாதது, பற்றற்றது. விளைவுகள் அனைத்தையும் பிரம்மத்திற்கு அர்ப்பித்து சமநிலையில் நின்று ஆற்றப்படுவது. இப்பிரபஞ்சத்தில் மானுடன் ஆற்றும் எல்லா செயலையும் வேள்வியென ஆற்றலாம் என்பதே கீதை.

ஆனால் அப்படிப்பட்ட செயல்கள் மிகவும் அபூர்வமாகவே நிகழ்கின்றன. காம குரோத மோகங்களுடன் பலன் குறித்த இச்சையுடன் அகங்காரத்துடன் நிகழ்த்தப்படும் செயல்களே இங்கு அதிகம். அத்தகைய செயல்களால்தான் மானுட வாழ்க்கை முடிவில்லாத கர்மசக்கரத்தில் சிக்கியிருக்கிறது. இங்கே கீதை ‘கர்ம பந்தன’ என்கிறது. கர்மத்தில் கட்டுண்டிருத்தல் என்று பொருள். முந்தைய வரியில் உள்ள என்ற சொல் இப்போது இன்னும் விரிவான பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது மானுடன் செய்யும் செயல் அல்ல, அவன் சிக்கியிருக்கும் செயல். ஒன்றை தவிர்க்க முடியாமல் செய்ய நேர்ந்து, அதன் விளைவுகளால் மேலும் செயலாற்றி மீளவே முடியாது சிக்கியிருப்பது அது. அதை பெளத்த மரபு கர்மசக்கரமாக உருவகித்தது.

ஆகவே கீதை செயலை வேள்வி என்று செய்க என்கிறது. தெளிவாகவே வேள்வியாகும் செயல் பற்றற்று செய்யப்படுவது என்கிறது. இங்கே கீதை சுட்டுவது அர்ஜூனன் செய்யப்போகும் போரைத்தான். பற்றிலாது பொது நலத்தின் பொருட்டுச் செய்யும் பெருஞ்செயலையே இவ்வாறு கீதை வேள்வி என்கிறது.

தொடர்ந்து கீதை பிரஜாபதி என்ற உருவத்தை கூறுகிறது. இப்போது நேரடியாகவே வேள்வி என்பது ஒரு குறியீடாக முன்வைக்கவும் படுகிறது. பிரஜாபதி என்ற செயலை படைப்புக்கடவுள், பிரம்மா என்றெல்லாம் எளிமையாகப் பொருள்தரும் கீதை உரைகள் உண்டு. வேதங்களின் முக்கியமான கவியுருவகம் இது. இதைப் புரிந்து கொள்ளாமல் கீதையைப் புரிந்து கொள்ள முடியாது.

பிரஜாபதி வேதங்களின் எல்லைக்கு வெளியே வந்து தனியான ஓர் இறைவடிவமாக மலர்ச்சி கொள்ளாத ஒரு ஆதி உருவகம். இதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். எந்தெந்த உருவகங்கள் வேதகாலத்திற்குப் பிறகு தனியான தெய்வ வடிவங்களாக மாறினவோ அவற்றுக்கு வேதகாலத்தில் வழிபாடு இருந்திருக்கும். சிவருத்ரன், விஷ்ணு, இந்திரன், சூரியன் போன்ற தெய்வங்கள் உதாரணம். ராத்ரிதேவி, உஷைதேவி முதலியவை எக்காலத்திலும் இறைவடிவங்களாக ஆகவில்லை. காரணம் அவை வேத காலத்திலேயே கூட இறைவடிவமாக வழிபடப்பட்டவை அல்ல. அவை கவித்துவ உருவகங்கள் மட்டுமே.

அதைப்போன்ற ஒரு கவித்துவ உருவகமே பிரஜாபதிகள். அது ஒரு தெய்வமல்ல. நவீன தத்துவத்தில் கூறப்படும் கவியுருவகம் (metaphor) போன்ற ஒன்று என்று கூறலாம். அந்த கவியுருவகம் ஒரு கருவிதான். அதை வைத்து கவிஞன்-தத்துவ ஞானி அவன் நினைக்கும் கருத்தைக் கூறமுற்படுகிறான். இக்காரணத்தால் பிரஜாபதி என்ற உருவகத்திற்கு ஒரு சீரான வரலாற்றை அல்லது கதையை நாம் வேதங்களில் இருந்து எடுத்து கூறமுடியாது. அதாவது இது ஒரு தொன்மம் அல்ல. இதற்கென்றே ஒரு கதையும் இல்லை. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பிரஜாபதி முன்வைக்கப்படுவார்.

எப்படிப் புரிந்து கொள்வது பிரஜாபதியை? சொல்பொருள் எடுத்துப் பாரத்தால் பிரஜாபதி என்றால் மக்களின் தலைவன்.(பிரஜா+பதி) இன்னும் நுட்பமாக கறாராகப் பார்த்தால் மக்களால் ஆனவன். இந்த இரண்டாம் அர்த்தமே சரியானதாகும். இந்தப் பூமியில் வாழும் அனைத்து மானுடர்களையும் ஒன்றாக ஆக்கினால், ஒரே மானுட உடலாக, ஒரே ஆளுமையாக ஆக்கினால், எது வருமோ அதுவே பிரஜாபதி. இன்னும் வரிவான தளத்தில் இந்தப் பூமியில் இதுவரை பிறந்து, இறந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை மானுடர்களுக்கும் ஒரு ஒட்டுமொத்த ஆளுமை இருக்குமென்றால் அதுவே பிரஜாபதி. பிரஜாபதி சில இடங்களில் வைஸ்ஸாநரன் (உலக மானுடன்) என்றும் கூறப்படுவதுண்டு.

இன்னும் விரிவாக எடுத்துக் கொண்டால் இந்த ஒட்டு மொத்த மானுடம் ஒரு மரம் என்றால் இதற்கு விதையாக ஒரு மனிதனை உருவகிக்க முடிந்தால் அதுவே பிரஜாபதி. வேர்மனிதன் அல்லது விதைமனிதன். இந்த ஒட்டுமொத்த மானுடமும் ஒரு மானுடனில் இருந்து உருவாகியது. அவனே அனைத்து மானுடருக்கும் தந்தை என்று கூறவோமென்றால் அதுவே பிரஜாபதி. அதாவது முழு முதல் தந்தை. இந்த எல்லா பொருளிலும் பிரஜாபதி என்ற கருத்துருவகம் வேதங்கிளல் வந்தபடி உள்ளது.

இங்கே ஒரு உபசெய்தி. வேதங்களில் இரு இடங்களில் மண்ணில் பிறந்து இறந்து மீண்டும் பிறக்கிறான் என்று வருகிறது. பிரஜாபதி ஒரு விதை போல இறந்து உயிர்த்தெழுகிறான் என்றும் வருகிறது. இதை வைத்து வேதங்களில் கூறப்பட்டிருக்கும் பிரஜாபதி மக்களின் தலைவனாகிய ஏசுதான் என்றும், இந்து வேதங்கள் ஏசுவின் வருகையை முன்னறிவுப்பு செய்கின்றன என்றும் ஒரு கேரளப் பாதிரியார் தொடர்ந்து எழுதினார். அந்த உண்மையை பிராமணர் மறைத்துவிட்டார்கள் என்றார். இந்த அபத்தம் அறிஞர்களால் நகைத்துத் தள்ளப்பட்டாலும் எளிய மக்களிடையே ஒரு ஆர்வத்தை உருவாக்குகிறது என்று கண்டறியப்பட்ட பிறகு மதப்பிரச்சார்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழில் கிட்டத்தட்ட ஐம்பது நூல்கள் இதுசார்ந்து எழுதப்பட்டுள்ளன. கீதையின் இக்குறிப்பிட்ட வரிகள் கூட அந்நூல்களில் ‘விளக்கம்’ அளிக்கப்பட்டுள்ளன.

வேதங்கள் மிகவும் தொன்மையான காலத்தில் உருவானவை. ஆதி வேதத்தின் தொடக்கச் செய்யுள்களைப் பார்க்கும்போது அவற்றின் பழங்குடித்தன்மையை தெளிவாகவே உணர முடியும். தத்துவ விவாதங்கள் உருவாகாத காலகட்டத்தில் பிறந்தவை அவை. எளிய மனம், ஆனால் பிரபஞ்சப் பிரம்மாண்டத்தை உணரும் அளவுக்கு நுண்மைக் கொண்ட மனம், உருவாக்கிய கவித்துவ தரிசனங்கள் அப்பாடல்களில் உள்ள உலகமெங்கும் பழங்குடிகளின் மொழி படிமங்களும் உருவகங்களும் நிரம்பியதே. மிகப் பிரம்மாண்டமாக உணர்ந்த ஒன்றை தன் அன்றாட வாழ்க்கையின் செயல்களைக் கொண்டு புரிந்து கொள்ளும் முயற்சி அது. உதாரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள காணிப் பழங்குடியினர் அவர்களின் வடக்கு எல்லையாக விளங்கும் முத்துக்குளிவயல் என்ற மாபெரும் மலை அவர்களின் தெய்வமாகிய மலங்காளி அல்லது நீலி சாப்பிடும்போது சோற்றில் இருந்து எடுத்துப் போட்ட கல் என்கிறார்கள். அதிபிரம்மாண்டமான ஓர் ஆளுமையை உருவகிப்பதற்கான ஒரு முயற்சி அது.

பிரஜாபதி என்ற உருவகமும் அப்படி உருவானதே. ‘நாமனைவரும் ஒன்று’ என்ற உணர்வில் இருந்து கிளைத்தது அது. ‘நாம்’ என்பதை ஒரே மானுட ஆளுமையாக உணர்வது. நாமனைவருக்கும் சேர்த்து ஒரே விதை அல்லது வேர் அல்லது மூலம் உண்டு என்று உணர்வது. பிற்பாடு வேதங்கள் தத்துவ சிந்தனையாக வளர்ச்சி அடைய அடைய பெரும் கவிஞர்கள் உருவாகி வந்தார்கள். அவர்கள் இந்தக் கலியுருவகங்களை மேலும் மேலும் நுட்பமாக வளர்த்து தத்துவ ஆழம் ஏற்றினார்கள். அதற்குப் பிறகு வந்த கீதை அந்த செறிவுபடுத்தப்பட்ட கவியுருவகத்தையே பயன்படுத்துகிறது.

மானுட குலம் உருவாக்கப்பட்டதே செயலுக்காகவும் செயல் மூலம் பெருகுவதற்காகவும்தான் என்பதே பத்தாவது செய்யுளின் நேர்ப்பொருள். பிரஜாபதி தன் மக்களைப் படைத்தது கூடவே வேள்வியையும் சேர்த்துத்தான். வேள்வி என்பது அவர்கள் பெருகி நிறைவதற்குத் தேவையான செயல்பாடு. பெருகுங்கள் பரவுங்கள் என்ற வரத்துடன் அல்லது ஆணையுடன் மானுடம் படைக்கப்பட்டது. அதற்குத் தேவையான செயல்கள் அனைத்துமே இங்கு வேள்வி என்று கூறப்படுகின்றன.

வேள்வியை குறியீடாகக் கொண்டு மானுட இனத்தின் அடிப்படைக் கடமைகளை விளக்க முனைகிறது கீதை. ‘இந்த வேள்வியால் தேவர்கள் பெருகட்டும் தேவர்களால் நீங்கள் பெருகட்டும்’ என்ற வரியை வேதம் சார்ந்த சில கருத்துக்களுடன் இணைத்தால் மட்டுமே புரிந்து கொள்ளமுயலும். அதாவது இந்திரன் வருணன் முதலிய தேவர்கள் ஏற்கனவே விண்ணில் இருப்பவர்கள் வேள்வி மூலம் அவர்களை வணங்கி மகிழ்வித்து லாபம் பெறலாம் என்பதுதானே சரியாகும்? அவர்களை எப்படி வேள்வி மூலம் உருவாக்கவும் பெருகச் செய்யவும் முடியும்?

வேதங்களில் அப்படியும் கூறப்பட்டிருக்கிறது என்பதே அதற்குப் பதில். அதாவது வேதங்களில் வேள்விகள் போன்றவை நேரடியான சடங்குகளாகவும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது இன்றைய எளிய பூஜை புனஸ்காரங்கள் போல. பழங்குடியினர் தங்கள் உணவின் ஒரு பகுதியை தங்கள் கடவுளுக்குப் படைப்பது போல. ஆனால் கூடவே மிக நுட்பமான குறியீட்டுத்தளத்திலும் அவை பயன்படுத்தப்பட்டிருக்கும். ஒரு கவிஞனுக்கு அது யதார்த்தம். இன்னொருவருனுக்கு அதுவே கவித்துவ உருவகம், தத்துவத்தின் கருவி. இந்தச் சிக்கலே வேதங்களைப் புரிந்துகொள்வதற்கான பெரிய இடர்பாடாகும். எங்கே நேர்ப்பொருள் கொள்வது எங்கே குறியீட்டுப் பொருள் கொள்வது? அரவிந்தர் எங்கும் குறியீட்டுப் பொருள் கொள்கிறார். சாயனர் எங்கும் நேர்ப்பொருள் கொள்கிறார். இரண்டுமே பொருத்தமானதல்ல.

வேதங்களில் தேவர்கள் மானுட சிருஷ்டிக்கு முன்னரே இருப்பவர்கள் என்று பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் பிரபஞ்ச நியதிகளின் தூய உருவகங்கள். மழை, ஒளி போன்றவற்றுக்கான அடையாளங்கள். மானுடர்களுக்கு அப்பாற்பட்ட, மானுட வாழ்வை ஆட்டிப்படைக்கக் கூடிய சக்திகள். அந்தப் பேராற்றல்களை அஞ்சி வழிபட்டு அருள் வேண்டி இறைஞ்சும் வேதபாடல்கள் பல உள்ளன. அந்தப் ஆற்றல்கள் இப்பிரபஞ்சத்தை ஆக்கி நடத்தும் மாபெரும் பேராற்றலின் துளிகளே என்ற பிரக்ஞையை அடைந்து பிரமிப்பும் மனவிரிவும் கொள்ளும் பாடல்களும் உள்ளன. முதலில் கூறியதையே நாம் பள்ளிகளில் படித்திருப்போம். ‘ஆரியர்கள் இயற்கை சக்திகளை அஞ்சி அவற்றை வழிபட்டார்கள்’ என்று. ஆனால் அது உண்மையல்ல. வேதங்கள் அப்படி ஒற்றைப் படையாக கூறத்தக்கவை அல்ல.

காரணம் வேதங்கள் என்பவை மிகப்பெரிய கால அளவை உள்ளடக்கியவை. இக்கால அளவுக்குள் நடந்த பல்வேறு வகை சிந்தனையோட்டங்களும் தரிசனங்களும் வேதங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மாறுபட்ட தரப்புகள் உண்டு. முரண்பாடுகளும் மோதல்களும் உண்டு. வளர்ச்சி மாற்றங்களும் உண்டு. ஆகவே எந்த ஒரு கருத்தும், உருவகமும், வேதங்களில் சீராகவோ ஒத்திசைவுடனோ இருப்பதில்லை. வேள்விப்பயனும் அப்படித்தான்.

ஒப்புநோக்க கீதையில் கூறப்படும் இந்த வேள்வி குறித்த உருவகம் தத்துவார்த்தமானது. காரணம் வேதத்தின் ஞானகாண்டத்தின் நீட்சியே கீதை என்பதுதான். இங்கே தேவர்கள் இயற்கையின் சக்திகளாக உருவகிக்கப்படவில்லை. விழுமியங்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு சமூகம் மேலும் மேலும் அன்பை வளர்க்கிறது என்று கொள்வோம். அச்சமூகத்தில் அன்புக்குரிய தேவதையாக கருதப்படும் தெய்வம் வளர்கிறது என்றுதானே பொருள். அன்பு வளர்கிற போது அச்சமூகம் மேலும் அன்பு கொள்கிறது என்றுதானே பொருள். கீதை பேசும் வேள்வி என்பது எளிய ஹோமம், யாகம் அல்ல என்பதற்கும் இந்த வரியே சான்றாகும்.

வேள்வி என்று கிருஷ்ணன் குறிப்பிடும் மாபெரும் செயல்களின் விளைவுகளினால் மானுட சமூகம் மேலும் செழிக்கும் என்று இவ்வரிகளைப் பொருள் கொள்ள முடியும். வேள்விகளால் தேவர்கள் பெருகி அந்த தேவர்களால் வேள்வி செய்பவர்கள் பெருகுவதுபோல. அவ்வாறு பெருகுவதற்கான ‘ஆணை’ மானுட குலத்தில் உருவாகத்திலேயே அமைந்துள்ளது. உங்களை பெருகவைக்கும் உயிரிய விழுமியங்களை நீங்கள் பெருக்கிக் கொள்ளுங்கள் என்பதே பிரஜாபதியின் ஆணையாகும் என்றுதான் கீதையின் இந்தப் புகழ் பெற்ற வரிகளில் கூறப்பட்டுள்ளது என்று கொள்ளலாம். அதுவே கீதை உருவாக்கும் ஒட்டுமொத்த அர்த்தத்துடன் ஒத்துப்போவதாகும்.

[மேலும்]

முந்தைய கட்டுரைமனிதராகி வந்த பரம்பொருள் 3
அடுத்த கட்டுரைஅங்காடி தெரு கடிதங்கள் 4