‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 3

பகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு – 3

பாண்டவர்கள் ஒவ்வொருவராக எழுந்து விலகிச் செல்வதை கேட்டபடி அனல்துண்டுகளாக எஞ்சிய எரிகுளத்தை நோக்கியவண்ணம் தருமன் தனித்து அமர்ந்திருந்தான். பாணன் தன் முழவை தோலுறைக்குள் போட்டுக் கட்ட விறலி நந்துனியின் கம்பிகளை புரியிளக்கி அஃகினாள். அதை தோல்மடிப்பில் சுற்றி தோளில் மாட்டும் வார் வைத்துக்கட்டினாள். பாணனின் மாணவர்கள் அவ்வாத்தியங்களை எடுத்துக்கொண்டனர். இரவுக்காற்று கங்கையிலிருந்து எழுந்து வீச கனல் புலிக்குருளை போல உறுமியபடி சிவந்தது.

காலடியோசை கேட்டு தருமன் திரும்பி நோக்கினான். பத்ரர் அருகே வந்து தலை வணங்கியபின் மெல்லிய குரலில் “பாணரே, நீரும் விறலியும் இங்கிருக்கலாம்” என்றார். பாணன் தருமனை ஒருகணம் நோக்கிவிட்டு “ஆணை” என்றபின் தன் மாணவர்களுக்கு விழிசுட்டி ஆணையிட்டான். அவர்கள் தலைவணங்கி விலகிச்சென்றனர். நெருப்புக்குப் பின்னால் பத்ரர் அமர்ந்துகொண்டு இரு பெரிய விறகுக்கட்டைகளை எடுத்து அதிலிட்டார். அருகே நெய்சிந்திக்கிடந்த சருகுகளை அதில் எடுத்துப்போட்டதும் சிவந்த நாக்குகள் எழுந்து விறகை பொதிந்தன.

பத்ரர் வரும் வழியிலேயே பாண்டவர்களை மீள அழைத்திருந்தார். அர்ஜுனன் தளர்நடையில் வந்து தருமனுக்கு இடப்பக்கமாக நெருப்பை நோக்கியபடி அமர அவன் பின்னால் நகுலனும் சகதேவனும் அமர்ந்தனர். பீமன் மீண்டும் அதே மரத்தில் கைகளைக் கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றான். பத்ரர் அர்ஜுனனிடம் “ஐவரும் கேட்டு அமையவேண்டியவை சில உள்ளன. அதைச் சொல்லும்பொருட்டு குலமூத்தார் என்னை பணித்தனர்” என்றார்.

விறலி பாணனின் அருகே கால்மடித்து அமரும் அணியோசை கேட்டு விழிதூக்கிய தருமன் அவள் கருவிழிகளின் ஆழத்தைக் கண்டு நெஞ்சு அதிர்ந்து விலகிக்கொண்டான். பத்ரர் “பாணரே, நீர் பாஞ்சாலத்தின் நெறிகளையும் முறைமையையும் அறிந்தவர். இன்று இளவரசருக்கு உமது சொற்றுணை தேவையாகிறது” என்றபின் “உமது விறலியும் உம் சொற்களை துணைக்கட்டும்” என்றார். பாணனின் கரிய முகத்தில் வெண்கீற்றாக புன்னகை எழுந்தமைந்தது. “ஆம் நிமித்திகரே. அகம் திறத்தல் இரவிலேயே மானுடருக்கு இயல்வது” என்றான்.

பத்ரர் நெருப்பை நோக்கியபடி சற்றுநேரம் அமர்ந்திருந்தார். தழல் மெல்ல எழுந்து விறகுருளைகளை தழுவிக்கொண்டது. விறகின் நுனி நீலச்சுடராக வெடித்து பின் சிவந்து கனலும் ஒலியுடன் அனலுமிழ்ந்தது. பத்ரர் பின் நீள்மூச்சுடன் உடல்குலைந்து “ஐவரை மணத்தல் இன்று பாரதவர்ஷத்தில் எங்குமில்லாத நெறி என நாங்களும் அறிவோம். ஷத்ரிய உள்ளம் அதை ஏற்கவும் தயங்கும். துர்வாசரின் ஆணைப்படி அன்னையிட்ட ஆணை பாஞ்சாலத்திலும் திகைப்பையே உருவாக்கியது. ஆனால் இன்று அதன் அரசியல் நுண்பொருளை அரசறிந்தோரும் குலமுறை முதன்மையை குடிகளும் உணர்ந்துவிட்டனர்” என்றார்.

நிமிர்ந்து தருமனை நோக்கியபடி “ஆனால் அதன் உட்பொருட்களை நீங்கள் முழுதறிந்துள்ளீரா என நான் அறியவில்லை. ஆகவேதான் இங்கு வந்துள்ளேன்” என்றார். அவர்கள் ஏதும் சொல்லாமலிருக்கவே பத்ரர் ”நீங்கள் அதைப்பற்றி உங்களுக்குள் பேசிக்கொள்ளவில்லை என்று உணர்கிறேன்” என்றார். அர்ஜுனன் மெல்லொலியால் குரல் தீட்டியபின் “ஆம் நிமித்திகரே, நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. தாங்கள் வந்தது அப்பேச்சு தொடங்குவதற்கான நல்முகமாக அமைந்தது. நிகழட்டும்” என்றான்.

“சொல்லுங்கள்” என பத்ரர் தலையசைத்தார். அர்ஜுனன் “தனித்துச் சொல்வதற்கேதுமில்லை நிமித்திகரே. மூத்தவர் தோளும், என் வில்லும், இளமைந்தர் வாழ்வும் முழுமையாகவே எங்கள் தமையனுக்குரியவை. நாங்கள் வெல்வதும் கொள்வதும் அவர் பொருட்டே. பாஞ்சாலத்தில் நான் வென்ற குலமகளும் அவருக்குரியவளே. ஐவருக்கும் அறத்துணை அவள் என்று உலகறியட்டும். அவள் தமையனுக்கு மட்டும் இல்லத்துணையாக மட்டும் வாழட்டும்” என்றான்.

தருமன் தலையசைத்து “நானும் அம்முடிவிலேயே இருந்தேன் நிமித்திகரே. ஐவருக்கும் அறத்துணை என்பது ஓர் அரசியல் சூழ்ச்சி மட்டுமே. அது அகத்தில் நிகழவேண்டுமென்பதில்லை. அதை எங்ஙனம் இவர்களிடம் உரைப்பதென்ற எண்ணம் எனக்கிருந்தது. மானுட உள்ளங்களை எவரும் முழுதறிந்துவிட முடியாதென்பதையே மானுட உள்ளங்களைப்பற்றி பேசும் நூல்களிலிருந்து கற்றிருக்கிறேன். இத்தருணம் அதைப்பேச அமைந்தது நன்று” என்றான்.

சொற்களை ஒவ்வொன்றாக அகத்தில் கோர்த்தபடி தருமன் சொன்னான் ”இளையோன் சொன்னபடியே ஆகுக. ஆனால் ஒன்று, வில் குலைத்து இளவரசியை வேட்டவன் விஜயன். அவனுக்குரியவள் அவள் என்பதே முறை. அவன் அவளை இல்லத்துணைவியாக கொள்ளட்டும். பிறர் அவள் அவைத்துணைவர்களாக மட்டும் விளங்கலாம்.”

“அது இயல்வதல்ல மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “அவளை நாம் ஐவரும் மணந்ததே அவள் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக வேண்டும் என்பதற்காகத்தான். ஐவரில் ஒருவர் இருப்பது வரை அவள் மங்கலையாக நீடிக்கவேண்டும் என்பதே அன்னையின் விருப்பம். தாங்கள் கைப்பிடித்து இடப்பக்கம் அமரவேண்டியவள் பாஞ்சால இளவரசி. கோலும் முடியும் கொண்டு நீங்கள் அரியணையமரும்போது வைதிகர் சொல்முன்னும் அவர் எழுப்பும் எரிமுன்னும் நின்று அவளை உங்கள் துணைவியெனக் கொள்வதாக சொல்லவேண்டும்.”

தருமன் பேசமுற்படுவதை முந்தி அர்ஜுனன் தொடர்ந்தான் “நீங்கள் அறியாத வைதிக மந்திரங்கள் இல்லை. உடல், பொருள், ஆன்மா ஆகிய மூன்றுக்கும் அவளே துணைவி என நீங்கள் சொல்லவேண்டும். அவள் மஞ்சத்தை நிறைக்கவும் உதரத்தில் முளைக்கவும் குருதியில் தடமளிக்கவும் நீங்கள் உறுதி சொல்லவேண்டும்…”  தத்தளிப்புடன் கைநீட்டி தருமன் “நில் இளையோனே, அச்சொல்லை சொல்வதிலொன்றும் பிழையில்லை” என்றான்.

திகைத்து “எரிசான்றாக பொய்யுரைப்பதா?” என்றான் அர்ஜுனன். தருமன் “ஆம் பொய்யும் மெய்யே புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்றால். கல்வியற்றவனே பொய்யுரைக்கலாகாது. தீதன்று என்று உணர்ந்து பொய்யுரைக்கவே கல்வி கைகொடுக்கவேண்டும்” என்றான். ”இப்பொய்யால் தெய்வங்கள் நம்மை வாழ்த்தும்.”

“எவரிடமெல்லாம் பொய்யுரைப்பீர்கள் இளவரசே?” என்றார் பத்ரர். “ஊரிடம் பொய்யுரைக்கலாம். உறவிடமும் உரைக்கலாம். உங்களிடமே கூட உரைத்துக்கொள்ளலாம். நாளை உங்கள் குருதியில் எழப்போகும் மைந்தரிடம் உரைக்கலாகாது. அவர்கள் அறிவர் தந்தை எவரென்று. அவர்களுக்கு சொல் முளைக்கும் வரைதான் இது அரண்மனை மந்தணம்.” அர்ஜுனன் “ஆம், முற்றிலும் உண்மை” என்றான்.

தருமன் மீண்டும் ஏதோ சொல்ல முயல பத்ரர் “இளவரசே, இதை தந்தையென்றவனே சொல்ல முடியும். மைந்தனின் உடல் தந்தையை அறியும். தந்தையின் விழிகளே மைந்தன் எவனென்று ஊருக்கு சொல்லிவிடும். நீங்கள் அனலுக்குப் பொய்யுரைத்து இளவரசியை அரியணை அமர்த்துவீர்கள் என்றே கொள்வோம். நாளை அஸ்தினபுரியை ஆளப்போவது யார்? அவளில் எழும் இளையோனின் குருதியா? இல்லை நீங்கள் கொள்ளும் துணைவியில் பிறக்கும் மைந்தனா?” என்றார்.

“பட்டத்தரசியின் மைந்தனே பட்டத்துக்குரியவன்” என்றான் தருமன் தணிந்த குரலில். அதிலுள்ள இடரை அவன் விளங்கிக்கொண்டது தெரிந்தது. பத்ரர் அந்தத் தணிவை உணர்ந்து குரலெழுப்பினார். “ஆனால் அவன் அரசரின் மைந்தனல்ல என்று அறிந்திருப்பான். அதை உங்கள் குருதிக்குரியவனும் அறிந்திருப்பான். அஸ்தினபுரியில் அடுத்த தலைமுறையில் ஒரு பெரும் அரியணைப்போரை அமைக்கிறீர்கள்.”

சினத்துடன் தலைதூக்கிய தருமன் “அவ்வண்ணமென்றால் நான் மணம் கொள்ளப்போவதில்லை. என் குருதியில் மைந்தர் எழார்” என்றான். ”இதுநாள் வரை நான் காத்த காமஒறுப்பை எஞ்சிய நாளிலும் கொள்வதொன்றும் எனக்கு அரிதல்ல.” புன்னகையுடன் பத்ரர் “அதை உங்கள் இளையோன் பீமனிடமும் சொல்லமுடியுமா என்ன? அதைச்சொல்லும் உரிமை உங்களுக்கு உண்டா?” என்றார்.

தருமன் தலையை அசைத்து எதையோ தன்னிடமே மறுத்தான். பிறகு இயலாமை அளித்த சீற்றத்துடன் தலைதூக்கி பற்களைக் கடித்தபடி “என்னதான் சொல்கிறீர் நிமித்திகரே? வேறு வழியென்ன?” என்றான். ”என் இளையோன் வென்ற பெண்ணை நான் கொண்டால் அது முறையல்ல. அகடியமென்றே அதை என் அகம் சொல்கிறது.” பத்ரர் “என்ன அகடியம் என்கிறீர்கள்?” என்றார். தருமன் கையை அசைத்து “அதை அனைவரும் அறிவோம்” என்றான். “சொல்லுங்கள் இளவரசே, என்ன அறப்பிழை உள்ளது அதில்?” என்றார்.

தருமன் விழிதூக்கி நோக்கி வலிதெரிந்த முகத்துடன் “மானுட உள்ளம் அத்தகையது பத்ரரே. என் இளையோன் என் கைபற்றி வளர்ந்தவன். எனக்கென வாழ்க்கையை அளித்தவன். ஆனால் அவன் ஆண்மகன். தன்னால் வெல்லப்பட்ட ஒன்றை முற்றுதற அவன் அகந்தை ஒருபோதும் ஒப்பாது” என்றான். “அதன்மேல் ஆயிரம்கோடிச் சொற்களை அள்ளிப்போடலாம். தெய்வங்களும் அறியாமல் ஒளிக்கலாம். ஆனால் அது அங்கிருக்கும். அவள் அவனுக்குரியவள்.”

தருமன் தன் சொற்களை கண்டுகொண்டான். “நெறிகளை மூன்றடுக்குகளாகக் காண்கின்றன நூல்கள். அரசுநெறி அரசியற் சூழலால் உருவாக்கப்பட்டு அரசால் நிலைநிறுத்தப்படுவது. அது அமர்ந்திருக்கும் பீடமாகிய குலநெறி மூத்தோர் சொல்லால் நிகழ்வது. குலநெறியை தன் உள்ளங்கையில் வைத்திருக்கும் விலங்கு நெறியே தெய்வங்களால் செய்யப்பட்டது. என் இளையோன் துரோணரின் மாணவன். ஆனால் அவனுள் உள்ள விலங்கு ஞானத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது. அது அறியும் அவள் தன்னுடையவள் என்று.”

அனைவரும் அமைதிகொள்ள தருமன் தொடர்ந்தான். “எந்தச்செயலையும் அது தொடங்குமிடத்தில் உள்ள உணர்வுகளைக்கொண்டு மதிப்பிடலாகாதென்பதே அரசு சூழ்தலின் முதல் நெறி நிமித்திகரே. இங்கே இத்தருணத்தில் எங்களுக்கு திரௌபதி வெறும் விழித்தோற்றம் மட்டுமே. நாளை அவள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் பதிவாள். கனவுகளுக்குள் புகுவாள். அப்போது இன்றிருந்த உறுதி எவரிடமும் இருக்காது. இன்று சொன்ன சொற்கள் தளைகளாகும். அகவிலங்கு தளைகளை உடைத்து எழத்துடிக்கும்.”

“எனக்கு அவள் மேலுள்ள உரிமை அவளுக்கு மாலையிட்டேன் என்பது மட்டுமே. அவ்வுரிமை பிற நால்வருக்கும் கூட உண்டு. நாளை அவர்களும் அவ்வுரிமையால் அவளை அகத்தே விழையலாம். அர்ஜுனன் உரிமையோ மாறாதது. அதை எவரும் மீறமுடியாது” தருமன் சொன்னான். “இது ஒன்றே வழி. பிறிது எதையும் இங்கே பேசவேண்டியதில்லை.”

அர்ஜுனன் “மூத்தவரே, தங்கள் பட்டத்தரசியை நான் அகத்துணைவியாகக் கொள்வதென்பது ஒரு கீழ்மை. அது என்னால் ஆகாது. எதன்பொருட்டென்றாலும் ஒளிந்துசெய்தலை என் அகம் ஏற்காது. அவளை நீங்கள் ஏற்றுக்கொள்வதொன்றே வழி. பிற அனைத்தும் உங்கள் உள்ளத்தயக்கங்களே” என்றான். தருமன் சீற்றத்துடன் திரும்பி “அவ்வண்ணமே ஆகட்டும். அதற்கு முன் முன்னால் வந்து இந்த எரிதொட்டு ஓர் ஆணையிடு… அவள்மேல் உன் அகத்தில் இன்று சற்றும் காமம் இல்லை என்று” என்றான்.

அர்ஜுனன் திகைத்து “என்னை அவமதிக்கிறீர்கள்!” என்றான். மூச்சிரைக்க தருமன் “ஆணையிடு… அது போதும் எனக்கு. அவளை ஏற்கிறேன்” என்றான். அர்ஜுனன் நெஞ்சு விம்மி அமைய அசையாமலிருந்தான். “சொல்” என்றான் தருமன். பத்ரர் “போதும் இளவரசே, மானுடரின் அகத்துள் நுழைய குருவன்றி எவருக்கும் உரிமையில்லை” என்றார்.

“அதை நான் அறிவேன்…” என்றான் தருமன். “ஆகவேதான் சொன்னேன். உட்கரந்த காமம் அங்கே வளரும். காடுறை முனிவரும் வெல்லமுடியாதது காமம். வேண்டாம், அது வினைவிதைக்கும்” என்றான். அர்ஜுனன் அக எழுச்சியால் நடுங்கும் குரலில் “நானும் அறிவேன் மூத்தவரே, உங்கள் விழிகளுக்கு அப்பாலுள்ள காமத்தை நானும் கண்டேன். நீங்கள் தீ தொட்டுச் சொல்லுங்கள், உங்களுக்குள் காமம் இல்லை என்று. சொல்லுங்கள். இல்லையென்று சொன்னால் நான் ஒப்புகிறேன்” என்றான்.

தருமன் நடுங்கி கைகள் அதிர ”என்ன சொல்கிறாய் இளையோனே?” என்றான். “சொல்லுங்கள்… உங்களுக்கு அவள் மேல் காமம் இல்லை என்று சொல்லுங்கள்.” தருமன் இரு கைகளாலும் நெற்றியை பற்றிக்கொண்டான். பத்ரர் “இளவரசே” என்று அர்ஜுனனை அதட்டினார். “ஆம், என்னுள் காமம் இருந்தது. ஆனால் நான் பெண்களை அறிந்தவன். பெண்களில் திளைப்பவன். இனி நாளையும் அப்படியே வாழ்வேன். இவர் அப்படியல்ல. அவர் விழைந்த பெண்ணை அடைந்து நான் வாழமுடியாது” என்றான்.

பாணன் கைகளைத் தட்டி உரக்கச் சிரித்தபடி “உங்கள் ஐவருக்கும் அவள் மேல் காமம் இருப்பதை அறிய நூல் பயிலவேண்டியதில்லை இளவரசர்களே” என்றான். “பீமசேனர் ஒருபோதும் காமத்தை மறுத்துச் சொல்லப்போவதில்லை.” பீமன் அசைந்து எழுந்து நின்று கைகளை தொங்கப்போட்டபடி “ஆம், நான் மறுக்கவில்லை, ஏனென்றால் நான் அவளை முன்னதாகவே கண்டு விழைவுகொண்டுவிட்டேன்” என்றான். “பிறரிடம் கேட்கவேண்டியதேயில்லை” என்றான் பாணன். “அவ்வண்ணம் காமம் கொள்ளவில்லை என்றால்தான் அது வியப்புக்குரியது.”

ஐவரும் தலைகுனிந்து அமர்ந்திருக்க பாணன் சொன்னான் “ஏனென்றால் அவள் பேரன்னை. அன்னையில் கனிந்திருப்பதே கன்னியில் பொலிந்திருக்கிறது. அதை விரும்பாத மானுடர் இருக்கவியலாது. உங்களில் எவர் அவளை அடைந்தாலும் பிறர் அவருக்கு எதிரியாவீர்களென்பதில் ஐயமே இல்லை. பல்லாயிரம் முறை உள்ளத்தால் போர்செய்வீர்கள். அப்போர்கள் உங்களை மேலும் மேலும் நஞ்சு கொண்டவர்களாக்கியபின் வாளெடுத்து உடன்பிறந்தான் தலைவெட்ட எழுவீர்கள்.”

பாணன் ஒரு சுள்ளி எடுத்து தீயிலிட்டான். “இன்று கன்னியாக அவளிருக்கையில் ஒருவேளை நீங்கள் காமத்தை வெல்லக்கூடும். நாளை அவள் இளம் அன்னையாக இருக்கையில் அவள்மேலெழும் பெருங்காமத்தை ஒருகணமும் வெல்லமுடியாது. பெண்கள் பெருங்காமத்தையூட்டும் பருவம் அதுவே. அப்போது காய் கனிந்திருக்கிறது. கன்னித்தெய்வம் தன்னை அன்னையெனக் காட்டும் மாயம் சூடியிருக்கிறது. அது ஆண் நெஞ்சில் வாழும் குழவியை தொட்டெழுப்புகிறது. மதநீரை விட நறுமணம் மிக்கது பால்மணம்.”

அச்சொற்களால் ஆடைகளையப்பட்டவர்கள் போல அவர்கள் இருளுக்குள் செல்ல விழைந்தனர். அமைதியைக் கொண்டு போர்த்திமூட விரும்பினர். தருமன் மட்டும் நிமிர்ந்து நோக்கினான். “ஐவருமே அவளைக் கண்டதும் காதல் கொண்டீர்கள். அவளை அடைவதுகுறித்து கனவுகண்டீர்கள். அவளை இளையவர் வென்றபோது நீங்களும் மகிழ்ந்தீர்கள். ஏனென்றால், நீங்கள் ஐவரும் ஒன்றென உணர்பவர்கள்.”

“ஐவரும் அவளை அடைய அன்னை ஆணையிட்டபோது உங்கள் அகம் கிளர்ந்தெழுந்தது. அவ்விழைவை நீங்கள் அஞ்சினீர்கள். ஆகவே அதை வெல்ல முயன்றீர்கள். அந்தப்பொறுப்பை உங்கள் அன்னையே ஏற்றதை எண்ணி அகமகிழவும் செய்தீர்கள். அவள் கரம்பற்றும்போது உங்கள் உள்ளம் குளிர்ந்தது. அவளுடன் மணமேடையில் நின்றபோது உங்கள் தலைகள் தருக்கி நிமிர்ந்திருந்தன” என்றான் பாணன். “எவரிடம் அதை ஒளிக்கவேண்டும்? அன்னையை குழவியர் நாடுவதிலென்ன பிழை?”

பாணனின் குரல் எழுந்தது. “பிரம்மனின் படைப்பில் நொய்மையானதன் மேல் அனைத்தையும் ஏற்றிவைக்கிறோம். இளவரசர்களே, காமத்தின் மேல் ஏற்றப்படும் எடையாலேயே அது பெருவல்லமை கொள்கிறது. அதை அறியுங்கள். அதை வழிபடுங்கள். அது தென்றல் மரத்திலென உங்களில் திகழட்டும். இந்தக் கிணைப்பறையை மீட்டி நாங்கள் நாடெங்கும் நடந்து பாடுவது இது ஒன்றையே.”

நகுலனையும் சகதேவனையும் நோக்கி பாணன் சொன்னான் “இளையோரே, நீங்களிருவரும் அவளில் கண்டுகொண்டதென்ன என்று என்னுள் வாழும் கவிஞன் சொல்லமுடியும். உங்களை விலக்கும் அன்னையை மட்டுமே அறிந்திருக்கிறீர்கள். அணைக்கும் அன்னையை விழைகிறீர்கள். உங்களை எண்ணும் அன்னையை அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் எண்ணி ஏங்கும் அன்னையை விழைகிறீர்கள்.” அவன் சிரித்து தன் தொடையைத் தட்டினான். “வல்லமை வாய்ந்த அன்னையின் மைந்தர் எளிய பெண்களை காமுறுவதில்லை.”

தொடையிலேயே தாளமிட்டு பாடுவதுபோல பாணன் சொன்னான் “அவள் உங்கள் நெஞ்சத்தசையில் குத்திய முள். அவள் நிமிர்வு நடந்துபோகும் பாதையின் மரவுரி விரிப்பு நீங்கள். அப்பாதங்களை ஏற்று நீங்கள் அடையவிருப்பதே இப்பிறவியின் பேரின்பம். கொன்றுண்ணும் வேங்கையின் செவ்விதழ் கண்டு காமுறுகிறீர்கள். ஆம், காமத்தின் உச்சம் அதுவே.”

அவனில் ஒரு பித்து குடியேறியது. வெறித்த கண்களும் முகத்தில் நகைப்புமாக அவன் அர்ஜுனனை நோக்கி விரல் சுட்டினான். “பெண்களெனும் உடல்பெருக்கை அறிபவர் நீங்கள். இளவரசே, நீங்கள் விழிநோக்க அஞ்சும் ஒரு பெண்ணை விட்டு உங்கள் சித்தம் விலகாது. கட்டுத்தறியற்ற மாடு காட்டில் எதையும் மேயாதென்றறிக! உங்களுக்குள் என்றுமிருந்து பொசுக்கும் இந்நெருப்புத்துளியில் அறியும் காமத்தையே இனி அத்தனை பெண்ணுடல்களிலும் அறியவிருக்கிறீர்கள். தூண்டில் முள்ளில் மீன் இறுதிப்பேரின்பத்தை அடைகிறது.”

சிரித்தபடி பீமனை நோக்கினான் பாணன். “சித்தம் சலித்துக் கசந்து வழிய ஒவ்வொரு முறையும் நீங்களுணரும் உண்மை ஒன்றுண்டு வலியவரே, நீங்கள் வெறும் தசைத்திரள் மட்டுமே. உங்கள் தசைத்திரளை மட்டுமே அறியுமொரு பெண்ணிலிருந்து எப்படி விடுதலை கொள்வீர்கள்? அவள் எரியெனில் நீங்களல்லவா விறகு?”

தருமனை நோக்கி அவன் புன்னகைத்து “நான் சொல்லவிருக்கும் சொற்களை முன்னரே அறிந்துகொண்டுவிட்டீர்கள் மூத்தவரே. அறிவென்பது ஆடை. அணிகொண்ட ஆடை. வண்ணங்கள் விரிந்த ஆடை. சுற்றிச்சுழன்று கவ்வி இறுக்கி உங்களை நீங்களெனக் காட்டும் ஆடை. அவ்வாடைகள் அனைத்தையும் கழற்றும் இருவிழிகள் முன் வெற்றுடல் கொண்டு நிற்கவேண்டுமல்லவா நீங்கள்? உங்கள் மேல் கொட்டிச்சிதறிப்பெருகும் அவ்வருவியில் நீராடுவதைவிடப் பெரியதாக எதை உணரப்போகிறீர்கள்?” என்றான்.

தருமன் ஏதோ சொல்ல வருவதற்குள் அவனைத் தடுத்து ஆழ்ந்த இன்குரலில் விறலி சொன்னாள் ”ஐந்து முலைக்காம்புகளால் குருளைகளுக்கு அமுதூட்டும் ஓநாய் என அவளை கொள்ளுங்கள். உங்கள் ஐவரையும் நிறைக்கும் கனிவு அவளிடமுள்ளது.” ஐவரும் அவளுடைய ஆழ்ந்த விழிகளை நோக்கினர். “ஐந்து மைந்தரை பெற்றெடுக்க முடியும் என்றால் ஐந்து ஆடவரை காதலிக்கவும் பெண்ணால் முடியும்” உரக்க நகைத்து அவள் சொன்னாள். “ஆயின் தன் முதற்குருளையைக் கிழித்து உண்டுதான் தன் முலைகளில் பால்நிறைக்கிறது ஓநாய்…”

“ஆம் இளவரசே, நீங்கள் ஐவரும் இளவரசியை அகத்துணையாகவும் கொள்வதே உகந்த வழி” என்றார் பத்ரர். “அதுவே பாஞ்சாலத்தின் முறை. ஐவரும் அதற்கான முறைமைகளை இன்றே வகுத்துக்கொள்ளுங்கள். அம்முறைமையை மீறாதவரை அனைத்தும் சீராகவே நடக்கும். ஒருவருடன் இருக்கையில் அவள் அவர் துணைவியென்றாவாள்.” தருமன் மீண்டும் ஏதோ சொல்ல வர கையசைத்து “இளவரசர்களே, இப்படித்துறையில் வந்தணைந்த கங்கையில் மட்டுமே நாம் நீராடுகிறோம். அவள் வந்த தொலைவும் செல்லும் இலக்கும் நாமறியாதவை” என்றார்.

பாண்டவர்கள் மீண்டும் தலைகுனிந்தனர். பீமன் பெருமூச்சுடன் கைகளைக் கட்டியபடி மீண்டும் மரத்தில் சாய்ந்துகொண்டான். பத்ரர் “இனி நான் சொல்வதற்கேதுமில்லை. ஆகும் முறைமை என்ன என்று விறலி சொல்வாள். அவளே அதற்கேற்றவள்” என்றபின் எழுந்துகொண்டார். பாணனும் எழுந்து தலைவணங்க அவர்கள் இருவரும் விலகிச்சென்றனர். அவர்கள் சென்று இருளில் மறைவதை தருமன் நோக்கினான்.

விறலி தன் கருமுலைகள் அசைய கண்களும் புன்னகையும் ஒளிர தன் குழல்கற்றையை மேலே தூக்கி கட்டினாள். ”முறைமையை நான் சொல்கிறேன் இளவரசர்களே. நானும் பெண் என்பதனால் இதுவே அன்னைக்கும் உகந்ததாக அமையுமென எண்ணுங்கள்” என்றாள். “வசந்தத்தை இளையவர் சகதேவனுக்கு அளியுங்கள். ஒவ்வொரு மலரும் இதழ்விட்டெழும் பருவம். தளிர்களும் சிறகுகளும் கூழாங்கற்களும் மாதர் விழிகளும் மலர்களாகும் மாதம். கந்தர்வர்களின் காலம். இளையோன் இருக்கும் முதிரா இளமைக்குரியது அது.”

“கிரீஷ்மம் நகுலனுக்குரியது. ஏனென்றால் கோடையில் இளையோர் ஆற்றல் கொள்கிறார்கள். கோடைச்சூரியனும் இளையோனே. நிழல்களை எல்லாம் உறிஞ்சி உண்டு அவன் ஆற்றல் கொள்கிறான். வேம்பும் புங்கமும் ஆலும் அரசும் தளிர்விடும் காலம். இளந்தென்றல் வீசும் இனிய இரவுகளினாலான பருவம். அந்தியில் முல்லையும் காலையில் பாரிஜாதமும் மலரும் பொழுதுகளை வாழ்த்துவோம்.”

“வர்ஷம் கார்முகில்களுக்குமேல் இந்திரனின் வஜ்ராயுதம் எழும் பருவம். உச்சிமலைப் பாறைகள் வானருவியிலாடிக் குளிர்ந்து கருக்கொண்ட முலைமேல் காம்புகள் என கருமை கொள்கின்றன. சாளரங்கள் தோறும் மழை வீசியடிக்கிறது. இருண்ட இரவுகளின் இனிய பூடகங்களை கிழித்து எடுத்து நோக்கி நகைக்கிறது மின்னல். மழைக்காலத்தை அர்ஜுனனுக்கு அளியுங்கள். இடியோசையால் வாழ்த்தப்பட்டவன் அவளுடன் அதை பகிரட்டும்” என்றாள் விறலி.

“சரத்காலம் பெருங்காற்றுகளால் ஆளப்படுகிறது. ஆலமரங்களை நடனமிடச்செய்யும் ஆற்றல் மிக்க கரங்களை வாழ்த்துவோம். அதை பீமனுக்கு அளியுங்கள்” என்று தொடர்ந்தாள். “பெரும்புயங்களால் வெல்லப்படமுடியாதவள் அவள் என அவள் உணரவேண்டுமல்லவா? காற்று கரும்பாறையை தழுவ மட்டுமே முடியுமென்று நிறுவப்படவேண்டுமல்லவா?” வெண்பற்கள் தெரிய நகைத்து “வெல்லும் கணம்போல பெண்ணை காமநிறைவடையச் செய்வது எது?” என்றாள்.

“ஹேமந்தம் இனியது. இருண்ட அந்திகள். மெல்லிய குளிர்காற்றுகளால் வாழ்த்தப்பட்ட இரவுகள். இனிய மென்சொற்களுக்குரிய பருவம் அது. சொல்லப்படும் ஒவ்வொன்றும் சிந்தையில் முளைக்கும். மூத்தவர் தருமனுடன் அவளிருக்கட்டும்” என்றாள் விறலி. “அச்சிரம் அவளை அறிதலில் அமரச்செய்யட்டும். புவியாளும் மைந்தர் அவள் கருவில் முளைக்கட்டும். தன் குலமறிந்த பெருங்கற்பையெல்லாம் அவள் அவர்களுக்கு அளிக்கட்டும்.”

“எஞ்சியிருப்பது சிசிரம். இருண்டது. குளிர்ந்து உறைந்தது. தனிமைக்குரிய அந்தப் பருவத்தை அவளிடமே விட்டுவிடுங்கள். பெண் மட்டுமே அறியும் காமம் என்பது அவளுள் எழுந்து அவளுள் அடங்குவது. அப்பருவத்தில் அவளை விண்ணளக்கும் தெய்வங்கள் அறியட்டும். யாழ்மீட்டிவரும் கந்தர்வர்கள் அறியட்டும். சொல்மீட்டி வரும் கின்னரர் அறியட்டும்” விறலி தெய்வமெழுந்ததென மெல்ல ஆடியபடி சொன்னாள்.

அவள் குரல் எழுந்தது “அந்நாளில் அவளில் விழியொளிரும் பாதாளநாகங்கள் அணையட்டும். நாபறக்க அவளுடைய இருளுக்குள் அவை சுருண்டு படமெடுக்கட்டும். பற்றி எரியும் அதலவிதலங்களில் இருந்து கரியபேருருவங்களுடன் ஆழுலகத்து தெய்வங்கள் எழுந்து வந்து அவளுக்கு அருளட்டும். அவர்களின் ஆற்றல்களால் அவள் வெல்லமுடியாதவளாக ஆகட்டும்.”

அணங்கெழுந்தவள் போல சொல்லிச்சொல்லி முன்குனிந்த விறலியின் குழல்கட்டு அவிழ்ந்து விழுந்து அவள் முகம் முழுமையாக மறைந்தது. அவர்கள் அவளை நோக்கியபடி அசையாமல் அமர்ந்திருந்தனர். எழுந்தாடிய தீயில் விறகு வெடித்த ஒலி கேட்டு அவள் அதிர்ந்தாள். குழலை அள்ளி பின்னால் தள்ளிவிட்டு நிமிர்ந்து வெண்பல்நிரை ஒளிர புன்னகைத்தாள்.

“ஆம், நீ சொல்லும் நெறியை பேணுகிறோம். அது ஒன்றே வழி” என தருமன் மெல்லிய குரலில் சொன்னான். ”மெல்லிய குரலில் சொல்பவை அனைவருக்கும் கேட்கின்றன” என்றாள் விறலி நகைத்தபடி. “ஆண்மகன் அகத்தை அறிந்த விறலி நான். உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இப்போது ஓடுவது பிறநால்வரே” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்று தருமன் சீறியதும் கை நீட்டித் தடுத்து “ஆம்” என்றாள் விறலி. அவன் விழிதிருப்பி தலைகுனிந்தான்.

“பிறரை எண்ணலாகாதென்று எண்ணுகிறீர்கள். அது மடமை. எண்ணாதிருக்க இயலாது. எண்ணுவதை கட்டுப்படுத்தினால் ஏதும் அடையவும் இயலாது” என்று விறலி தொடர்ந்தாள். “எண்ணுக! ஒவ்வொருவரும் பிற நான்கு உடல்களிலும் புகுந்தாடுக! ஏனென்றால் நீங்கள் பிற அனைத்திலும் இதுவரை அவ்வண்ணமே இருந்தீர்கள். அர்ஜுனனுடன் வில் குலைத்தீர்கள். பீமனுடன் கதை சுழற்றினீர்கள். தருமன் அறிந்த மெய்மையெல்லாம் நீங்கள் ஐவரும் கொண்டதுதான். இளையோர் துள்ளித்திரிந்த தொலைவெல்லாம் பிறரும் சென்றீர்கள்.”

“பருவங்களை மாற்றிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பருவத்திலும் வாழுங்கள். எப்போதும் ஒரு பருவம் எஞ்சியிருக்கிறது என்பதை உணருங்கள். அந்த இருண்ட கருவறைக்குள் ஒருபோதும் காலடி வைக்காதீர்கள். அங்கு போரிட்டுக்கொண்டிருக்கும் விண்தெய்வங்களும் இருளுலக தெய்வங்களும் எளிய மானுடரை விரும்புவதில்லை.”

“ஐந்தெனப் பிரிந்து அவளுடனிருங்கள். அவளோ ஐந்தையும் ஒன்றென ஆக்கி உங்களை அறிவாள்” என்று விறலி தொடர்ந்தாள். “பெண்ணென ஆகி வந்துள்ளது பெருவிழைவென்று அறிக! உண்ணவும் கொள்ளவும் முகிழ்க்கவும் நிறைக்கவும் எழுந்த பேரவா. ஐந்து முகம் கொண்டு எழுக அனல். ஐவருடனும் கூடியாடும் ஐந்து தேவியரை வணங்குகிறேன். ஐவரில் உறைந்து அனைத்தையும் நோக்கி அகன்றிருக்கும் அன்னை சண்டிகையை வணங்குகிறேன்.”

கைகூப்பியபின் விறலி எழுந்தாள். தலையைச் சொடுக்கி குழல்கற்றையை கையால் அள்ளிச் சுருட்டி கட்டிக்கொண்டாள். முலைமுகைகள் நடுவே அசைந்த கல்மணிமாலையில் செந்தழல் பட்டு கனலெனக் காட்டியது. எழுந்து நின்றபோது அவள் முகம் இருண்ட விண்ணில் இருந்து குனிந்து நோக்குவதுபோலிருந்தது.

பெருமூச்சுடன் எழுந்த தருமன் “உன் சொற்கள் இன்னும் நெடுநாட்கள் எங்கள் நெஞ்சில் முளைத்தெழுந்துகொண்டிருக்கும் விறலியே” என்றான். தன் கையிலிருந்த கணையாழியைக் கழற்றி “அவற்றுக்குரிய பொருள் அளிக்க அரசர்கள் எவராலும் இயலாதென்றாலும் இதை ஏற்றருள்க” என்று நீட்டினான்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

விழியில் அனல் தெரிய திரும்பிய விறலியைக் கண்டு அச்சம் கொண்ட தருமனின் கை தாழ்ந்தது. மெல்லிய குரலில் “தங்கள் கொடைசிறக்கட்டும் இளவரசே” என்று அவள் கை நீட்டினாள். அவள் விழிகளை நோக்காமல் அவன் அதை அவள் கைகளில் வைத்தான். சிலம்புகள் ஒலிக்க அவள் நடந்து செல்லும் ஒலியைக் கேட்டபடி எரிசெம்மையை நோக்கிக்கொண்டு நின்றிருந்தான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைமதமெனும் வலை
அடுத்த கட்டுரைஎனது அரசியல்