இந்துமதம்,நாத்திகம்,ஆத்திகம்

அன்புள்ள ஜெ,

நித்யானந்தர் விவகாரத்தை ஒட்டி நீங்கள் எழுதிய கட்டுரைகளை தொகுத்து வாசித்தேன். என் நண்பர்கள் சிலருக்கும் வாசிக்க கொடுத்தேன். அவர்களில் ஒருவர் நிறைய வாசிக்கக்கூடியவர். ஆன்மீக நாட்டம் கொண்டவர். அவர் நீங்கள் நாத்திகவாதத்தை ஆத்திகம் என்ற போர்வையில் உள்ளே நுழைப்பதாகச் சொன்னார். நீங்கள் சொல்பவை ஆன்மீகத்துக்கு எதிரானவை என்றும் வாதம்செய்தார். நான் அத்துமீறி எதையும் கேட்கவில்லை என்றால் இதைப்பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்.

சுப்ரமணியம்.எஸ்

மதுரை

1

‘எழுதி வச்சிருக்கிற ஒண்ணையுமே நான் நம்புறதில்லீங்க’

அன்புள்ள சுப்ரமணியம்,

தொலைபேசியில் உங்களிடம் பேசியபின்னர் இந்த பதிலை எழுதுகிறேன். ஆகவே இந்தப்பதில் உங்களுக்காக மட்டும் அல்ல.

பொதுவாக சமகாலத்தில் இந்திய மதங்களைப்பற்றிப் பேசும்போது வரும் முக்கியமான இடர் இது. இந்த குழப்பங்களுடன் நான் நித்யாவிடம் பேசியதும் அவர் கொஞ்சம் கடிந்து என்னை திருத்தியதும் அதை தனிப்பட்ட அவமதிப்பாக எடுத்துக்கொண்டு நான் மனம் வருந்தியதும் நினைவுக்கு வருகிறது.

இந்த விஷயத்தை தெளிவாக்கிக்கொள்ளாமல் ஒருவர் இந்திய சிந்தனைகளுக்குள் செல்ல முடியாதென்றே சொல்லலாம். ஆனால் அது மிக கடினமான ஒன்றும் கூட. காரணம், நம் கல்வித்துறை மேலைநாட்டுச் சிந்தனைகள் சார்ந்தே அமைக்கப்பட்டிருக்கிறது. சொல்லாட்சிகள், தர்க்கங்கள் எல்லாமே மேலைநாட்டுச் சிந்தனை மரபில் இருந்து பெற்றுக்கொண்டவை. ஆகவே நாம் அவற்றின் அடிப்படையிலேயே சிந்திக்கப் பழகியிருக்கிறோம்

மேலும், இந்திய சிந்தனை மரபை நாம் மேலைநாட்டு இந்தியவியலாளர்களின் வழியாகவே கற்றுக்கொள்ள வேண்டிய நிலை இன்றுள்ளது. நம் மரபான தத்துவக்கல்விமுறையும் அதற்கான அமைப்புகளும் மறைந்துவிட்டன. ஆகவே நாம் மேலைச் சிந்தனையில் பிரதிபலிக்கும் கீழைச்சிந்தனையை கற்கிறோம்.

கடைசியாக, இந்திய சிந்தனையை நவீன கோணத்தில் ஆராய்ந்தவர்கள் பெரும்பாலும் மேலைநாட்டு கோட்பாடுகளைச் சார்ந்து சிந்தித்தவர்கள். எம்.என்.ராய், ராகுல சாங்கிருத்யாயன், டி.டி.கோஸாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்யாய போன்றவர்கள் மார்க்ஸிய நோக்குள்ளவர்கள். ஆகவே பொருள்முதல்வாத அணுகுமுறை கொண்டவர்கள்.

அதேபோல தாஸ்குப்தா, ஏ.எல்பாஷாம் போன்றவர்கள் மேலைநாட்டு கருத்துமுதல்வாத மரபுகளின் பாதிப்புள்ளவர்கள். அவர்கள் அந்தக்கோட்பாட்டின் கலைச்சொற்களை அப்படியே பயன்படுத்தினார்கள். அந்தவகை அணுகுமுறை இங்கே நான்கு தலைமுறையாக வேரூன்றிவிட்டது.

இந்த சிக்கலில் இருந்து கொண்டு நாம் யோசித்து வைத்திருப்பனவற்றை ஒரு இந்தியக் குருகுல அமைப்புக்குள் செல்லும்போது செருப்பைக் கழற்றி வைப்பது போல கழற்ற வேண்டியிருக்கிறது. அது எளிய விஷயம் அல்ல. நம் அகங்காரம் பெரிதும் அடிபடும்.

1

“என்னாது நோட்டீஸ் காலியா இருக்கு?”

‘நாங்க நாத்திகர்ங்க”

காரணம், அதுவரைக் கற்றதை மற என்று ஒருவர் சொல்லும்போது நமது கல்விசார்ந்து நம்மை உருவகம் செய்துவைத்திருக்கும் நாம் புண்படுகிறோம். நம்மை ஒருவர் முட்டாள் என்று சொல்லிவிட்டதாக நினைக்கிறோம். அது உண்மை அல்ல. அது வேரு ஒரு கல்விக்கான இடம் விடு என்ற கோரிக்கை மட்டுமே.

இந்திய சிந்தனை மரபை மேலைச்சிந்தனை மரபு உருவாக்கிய கலைச்சொற்கள் மற்றும் இருமைகள் [பைனரி] கொண்டு புரிந்துகொள்ளக்கூடாது. ஒரு தொடக்கத்துக்காக அப்படி சிந்திக்கலாம் என்றால்கூட மேலே போகப் போக நிறையச் சிக்கல்களைச் சந்திக்க நேரும்.

இப்போது நம்மிடம் புழங்கும் சொற்களையும் இருமைகளையும் பற்றியே பார்ப்போம். இந்த இருமைகளை இந்தியச்சிந்தனைச் சூழலில் மிக அழுத்தமாக நிறுவிய நூல் என்றால் அது தேவிபிரசாத் சட்டோபாத்யாய எழுதிய ‘இந்திய சிந்தனையில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும்’ தான். [தமிழாக்கம் கரிச்சான் குஞ்சு. விடியல் பிரசுரம்] தலைப்பிலேயே இருமை வந்து விடுகிறது

அந்த இருமைகளின் அமைப்பு இது. ‘நாத்திகம் X ஆத்திகம்’ என்ற பிரிவினை முதலில் செய்யப்படுகிறது.  ‘பொருள்முதல்வாதம் X கருத்துமுதல்வாதம்’ என்ற பிரிவினை அடுத்தபடியாக வருகிறது. நாத்திகமும், பொருள்முதல்வாதமும் ஒன்றே என அடுத்தபடியாக அடையாளப்படுத்தப்படுகின்றது. நாத்திக,பொருள்முதல்வாத தரப்பு முற்போக்கானது. ஆத்திக, கருத்துமுதல்வாத தரப்பு பிற்போக்கானது எனப்படுகிறது.

ஆத்திக, கருத்துமுதல்வாதத் தரப்பு ஆதிக்கசக்திகளின் கருத்தியலாக வரையறைசெய்யப்படுகிறது. அவை பிராமணியம் மற்றும் வைதிகத்தின் தரப்பாக அடையாளப்படுத்தப்படுகிறது. நாத்திகம் மற்றும் பொருள்முதல்வாதம் சுரண்டப்படும் அடித்தள மக்களின் தரப்பு என்று சொல்லப்படுகிறது. இபப்டியே இந்த எளிமைப்படுத்தல் வளர்ந்து செல்லும்.

இது அரசியலில் உள்ள இருமையாக்கம். இதேபோல மதத்தில் உள்ள  இருமையாக்கமும் எளிமையானதே. ஆத்திகம் என்றால் கடவுள் உண்டு என்று நம்பக்கூடியது. ஆகவே சடங்குகள் மற்றும் ஆசாரங்களை நம்பக்கூடியது. மறுபிறவி முதல் சோதிடம் வரை அனைத்தையும் நம்பக்கூடியது. நாத்திகம் என்றால் இவை அனைத்தையும் நிராகரிக்கக் கூடியது. அதாவது நம்புவது ஆத்திகம் நிராகரிப்பது நாத்திகம்.

இத்தகைய எளிமைப்பாடுகள் வழியாகவே சிந்தித்துப் பழகி எதையுமே உள்வாங்க முடியாதவர்களாக ஆகிவிடுகிறோம். எதை எடுத்துக்கொண்டாலும் இந்த அளவுகோலைப்போட்டு இரண்டாகப் பிரித்து விடுகிறார்கள். அனிச்சையாகவே இது நடந்துவிடுகிறது.

ஒரு கருத்து சொல்லபப்ட்டதுமே அது ஆத்திகமா நாத்திகமா, கருத்துமுதல்வாதமா பொருள்முதல்வாதமா, முற்போக்கா பிற்போக்கா என்று அடையாளம் செய்துவிடுகிறோம். சிந்தனையில் ஒரு பக்கவாதத்தை உருவாக்கி படுக்க வைத்துவிடுகிறது இது.

கெ.தாமோதரன்  போன்ற மார்க்ஸிய தத்துவசிந்தனையாளர்கள் இந்த எளிமைப்படுத்தலில் உள்ள அபத்தத்தை மிக விரிவாக எழுதியிருக்கிறார்கள். நித்ய சைதன்ய யதி அவரது நூல்களில் ஆன்மீகத்தில் உள்ள எளிமைப்பாட்டைப்பற்றி கடுமையாக கண்டித்திருக்கிறார்.

‘ஃபார்முலா சரிதான். ஆனா இந்த எடத்திலே ஒதைக்குதோன்னு  சின்ன சந்தேகம்’

 

ஆத்திகம் நாத்திகம் என்ற சொற்களை எடுத்துக்கொள்வோம். ஆஸ்திகம் நாஸ்திகம் என்ற வடமொழிச்சொற்கள் அவை. அஸ்தி என்றால் இருப்பு என்று பொருள். இருப்பதாகச் சொல்பவர்கள் ஆஸ்திகர்கள். ந – ஆஸ்திகர்கள் இருப்பதாகச் சொல்லப்படுவதை மறுப்பவர்கள் நாஸ்திகர்கள்.

இந்திய சிந்தனையில் ஒட்டுமொத்தமாக இச்சொற்கள் பழங்காலத்தில் புழங்கியதில்லை. ஒரு குறிப்பிட்ட விவாதத்திற்குள் ஒன்றை ஏற்பவன் ஆஸ்திகன் மறுப்பவன் நாஸ்திகன். அது ஒரு ஒட்டு மொத்த தத்துவ நிலைபாடோ, தர்க்க முறையோ ஆக இருந்ததில்லை. ஏனென்றால் இங்கே அப்படி ஒட்டுமொத்தமாக மறுப்பதும் ஏற்பதும் சாத்தியம் அல்ல.

மேலைநாட்டுச் சிந்தனையில் தீய்ஸம் [Theism] என்று ஆத்திகம் சொல்லப்படுகிறது. தேவ் என்ற வடமொழிச்சொல்லில் இருந்து கிரேக்க மொழிக்குப் போனது தே [Dei] இறை என்று அதற்குப் பொருள்.அதிலிருந்து உருவான சொல் தீய்ஸம். இறைவாதம் என்று மொழியாக்கம் செய்யலாம்.

திய்ஸம் பிரபஞ்சம் இறைசக்தியால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படுவதென நம்புவது. ஒரு கடவுளையோ பலகடவுள்களையோ அது நம்பக்கூடும். ஆனால் பிரபஞ்சம் அதற்கு ‘வெளியே’ உள்ள ஒரு இறைவனால் ஆளப்படுவது என்பது அதன் சாராம்சம்.

ஆனால் அது மட்டுமல்ல. அந்த ‘இறைவன்’ ஓர் ஆளுமையாக [பர்சனாலிட்டி] அதாவது இருப்பாக  இருந்தாகவேண்டும். வெறுமொரு கருத்தாக அல்லது உள்ளுறையாக இருந்தால் போதாது. அப்போதுதான் கிரேக்கச் சிந்தனை மரபின்படி அது இறைவாதம் ஆக முடியும்.மதாவது மையத்தில் ‘தெய்வம்’ இருக்க வேண்டும் – அதுவே ‘தெய்விசம்’.

அவ்வாறு நம்பும் இறைவாதத்தை நம்பாமல் இருப்பதே நம்பிக்கையின்மை வாதம் [ Atheism] இறைவனின் இருப்பைப்பற்றி அறியமுடியாது என்று சொல்வது அறியமுடியாமைவாதம் [Agnosticism] இறைவன் இல்லை இருக்க முடியாது என வாதிடுவது இறைமறுப்புவாதம் [ Antitheism]

நம் சூழலில் இந்தவகையான துல்லியமான பிரிவினைகள் இல்லை. நம்பிக்கையின்மைவாதம் மற்றும் இறைமறுப்புவாதம் இரண்டையும் சேர்த்து நாத்திகம் என்று சொல்கிறோம். அதற்கு இறைவனை மறுத்தல் என்று பொருள். அதற்கு பகுத்தறிவுவாதம் என்றும் பெயர் சொல்கிறார்கள்.

இங்கே இறைவனை மறுப்பவர்கள் மறுப்புடன் நின்றுவிடுகிறார்கள். இறைவன் இல்லாமல் பிரபஞ்சம் எப்படி உருவாகி எப்படி இயங்குகிறது என்று சொல்ல முற்படுவதில்லை. அதற்கான கொள்கைகள் ஊகங்கள் எதையும் முன்வைப்பதில்லை. ஆகவே இங்கே உள்ளது நம்பிக்கையின்மைவாதம் மட்டுமே.

கருத்துமுதல்வாதம் , பொருள்முதல்வாதம் என்பது மதத்தைவிட தத்துவத்துடன் தொடர்புள்ள உருவகம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் உண்மையிலேயே பொருண்மைத்தன்மையுடன் இருக்கின்றன என்று நம்புவது பொருள்முதல்வாதம். அப்பொருளைப்பற்றிய எல்லா அறிதல்களும் கருத்துநிலைகளும் அந்தப்பொருள்களின் இயல்புகளினால் உருவாக்கப்படுகின்றன என்று அது வாதிடுகிறது. புலன்களுக்கு தெரியும் இந்த பொருள்உலகம் புறவயமானது. மாறாதது. பொருளே முதனமையானது.

அதற்கு எதிரானது கருத்துமுதல்வாதம். வெளியே உள்ள பொருட்களின் இயல்புகள் என நாம் அறிபவை நம்முடைய அறியும்தன்மையால் அப்படி அறியப்படுகின்றன. கல் ஏன் கடினமானது என்றால் நம் கை மென்மையானது என்பதனால்தான். ஆகவே அந்த அறிதல்தான அந்த பொருள் அந்த அறிதலுக்கு அப்பால் அந்தப்பொருள் உண்மையில் என்ன என்று நம்மால் சொல்லிவிடமுடியாது.

ஆகவே நம்மைப் பொறுத்தவரை ஒவ்வொரு பொருளும் அந்தப்பொருளைப்பற்றிய கருத்தின் பொருள்வடிவம் மட்டுமே என்று இவர்கள் சொல்கிறார்கள். அந்தக்கருத்து எவராலும் அறியப்படாவிட்டால்கூட அப்படித்தான் இருக்கும். அதாவது கருத்தே முதன்மையானது. பொருள் அதன் ஒரு தோற்றம் மட்டுமே.

உதாரணமாக, ஓர் அணு என்றால் அந்த அணுவை உருவாக்கியிருக்கும் விதிகள் மட்டுமே. அந்த விதிகளையே நாம் அந்தப் பொருளாகப் பார்க்கிறோம். ஆகவே இந்த பிரபஞ்சமே ஒரு கருத்துக் கட்டுமானம் மட்டுமே. நாம் அதை நம் இயல்பால் பொருளாக அறிகிறோம்.

இந்த இரு தரப்புகளும் எல்லா சிந்தனை மரபுகளிலும் மோதிக்கொண்டே இருக்கின்றன என்பதைக் காணலாம். தீராத விவாதம் இது. இன்று அணுப்பிளப்பு யுகத்தில் பழைய செவ்வியல் பொருள்முதல்வாதம் அர்த்தமிழந்து போய்விட்டிருக்கிறது.

பொதுவாக இந்தப்பிரபஞ்சம் கருத்துவடிவமானது என்பவர்கள் அக்கருத்தை உருவாக்கி நிலை நிறுத்தும் ஆற்றலாக கடவுளை முன்வைப்பார்கள். ஆகவே மேலைநாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை கருத்துமுதல்வாதிகள் இறைநம்பிக்கையாளர்களாகவும் இருந்தார்கள்.

பிரபஞ்சத்தில் நடப்பவற்றுக்கு அதற்கு அப்பால் இருந்து எந்த சக்தியும் பொறுப்பல்ல என்று வாதிட்ட இறைமறுப்பாளர்கள் பொதுவாக இந்த பொருள்வயப் பிரபஞ்சம் உண்மையானது என்று சொல்லக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். ஆகவே அங்கே இறைமறுப்பும் பொருள்முதல்வாதமும் கிட்டத்தட்ட ஒரே தரப்புதான்.

அந்த பிரிவினையைத்தான் இங்கேயும் அப்படியே போட்டுப்பார்க்கிறார்கள். ஆனால் இந்திய சிந்தனையில் இந்த பிரிவினை செல்லுபடியாவதில்லை என்பதைக் காணலாம்.

இங்கே நாத்திகம் ஆத்திகம் என்ற சொல்லேகூட தத்துவத்தில் வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள பருப்பொருட்கள் உண்மையிலே உள்ளனவா, இல்லை அவை நம்முடைய அகம் நமக்கு அளிக்கும் தோற்றம்தானா என்ற கேள்வி வேதாந்தம்,சமணம், பௌத்தம் ஆகிய மதங்களில் முக்கியமான ஒன்றாகும்.

இந்த விவாதத்தில் பருப்பொருள் உண்டு என்று சொல்பவர்கள் ஆஸ்திகர்கள் எனப்பட்டார்கள் அதாவது பொருள்முதல்வாதமே ஆஸ்திகம் என்று சொல்லப்பட்டது. அதை மறுப்பவர்கள் நாஸ்திகர்கள்! அதாவது கருத்துமுதல்வாதம் நாஸ்திகம் எனப்பட்டது. சமணமும் பௌத்தமும் எல்லா பொருளும் உண்டே என்று வாதிட்டன. அந்த வாதத்துக்கு சர்வாஸ்திவாதம் என்று பெயர். சமணம் அதை அனேகாந்தவாதம் என விரிவாக்கிக்கொண்டது. இந்த விவாதம் மிகவிரிவான ஒன்று. இதில் பல கொள்கைகள் உண்டு.

சரி, அதைவிட்டுவிட்டு வழக்கமான நாத்திக-ஆத்திக பொருள்கொண்டால்கூட பல சிக்கல்கள் உள்ளன. சமணத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு கோணத்தில் அது பொருள்முதல்வாதத்தை நம்புவது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களும் உண்மையில் உள்ளன என்று அது சொல்கிறது. அவை வெறும் கருத்துநிலையோ மாயையோ அல்ல.

அப்படியானால் பௌத்தமும் சமணமும் முழுக்க பொருள்முதல்வாதமா என்ன? இல்லை. சமணத்தைப் பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் ஆன்மா உண்டு. ஆன்மா என்று அவர்கள் சொல்வது சாராம்சமான கருத்துநிலையைத்தான். புழுவுக்கு புழுவின் ஆத்மா உண்டு. கல்லுக்கு கல்லின் ஆத்மா உண்டு. கல்லின் கல்தன்மையை தக்கவைப்பது அந்த கல்லின் ஆத்மாதான். ஆக, சட்டென்று வேறு ஒருவகையில் கருத்துமுதல்வாதத்துக்குள் சென்று விடுகிறது சமணம்.

அதாவது பொருளும் உண்டு. பொருளுக்குள் கருத்தும்  உண்டு.ஆகவே சமணத்தை ‘பொருள்முதல்வாத கருத்துமுதல்வாதம்’  என்று சொல்ல வேண்டும். அதாவது அந்த பிரிவினையே இங்கே செல்லுபடியாகாது.

சரி, கருத்துமுதல்வாத நம்பிக்கை இருப்பதனால் சமணம் ஒரு இறைவாதமா? மேலைநாட்டு இறைவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் சமணம் இறைவாதமே அல்ல. சமணத்தில் பிரபஞ்சத்தை படைத்துக்காக்கும் கடவுள் இல்லை. அவர்கள் பிரபஞ்சம் படைக்கப்பட்டதல்ல என்றும் அது வளர்வதோ மாறுவதோ இல்லை என்றும் நம்புகிறார்கள். ‘மூவா முதலா உலகம்’ என்பது சீவக சிந்தாமனியின் முதல் பாடல் முதல்வரி.

அப்படியென்றால் அவர்கள் இறை மறுப்பாளர்களா? அதுவும் இல்லை. பிரபஞ்சம் பொருள்வயமான விதிகளின்படி செயல்படுவது அல்ல. அதன் சாராம்சமாக உள்ள கருத்தின் அடிப்படையிலேயே அது நிகழ்கிறது. அந்தக் கருத்து என்பது கிட்டத்தட்ட கடவுள் போன்றதுதான் அவர்களுக்கு.

கடவுளின் இடத்தில் அவர்கள் பிரபஞ்சத்தில் உள்ளுறைந்துள்ள ஆதார விதியை வைக்கிறார்கள். அந்த விதி எல்லா பொருட்களையும் உயிர்களையும் கட்டுப்படுத்துகிறது. அதையே அவர்கள் ஊழ் என்றார்கள். அந்த ஊழின் அடிபப்டையில் ஓயாது சுழலும் சக்கரமே இப்பிரபஞ்சம், இந்த இயற்கை, மனித வாழ்க்கை முழுக்க.

இது ஆத்திகமா நாத்திகமா? சரியாக மேலைநாட்டு வரையறைப்படிச் சொன்னால் அடித்தளத்தில் முழுமையான நாத்திகம். மேலே செல்லச் செல்ல ஆத்திகம். உச்சியில் முழுமையான  ஆத்திகம்!

‘கடவுளுக்கு பயப்படுவதே பயத்தின் ஆரம்பம்’

இதேபோல பௌத்ததுக்குள் செல்வோம். பௌத்தத்தின் யோகாசார மரபின்படி பருப்பொருள் என்பதே கிடையாது. பிரபஞ்சம் என்பது நம் பிரக்ஞையில் நிகழும் ஒரு பெரிய நிகழ்ச்சிதானே ஒழிய தூலமானதும் மாறாததுமான் பொருள் அல்ல. பிரபஞ்சம் என்பது பிரபஞ்சத்தின் சாராம்சமான கருத்தே. அதாவது பிரபஞ்சமாக நாம் அறிவது பிரபஞ்சத்தின் நியதிகளையே. அந்த நியதிகளையே பௌத்தம் ‘தர்மம்’ என்கிறது.

அதாவது சரியான பொருளில் பௌத்தம்தான் இந்திய மரபின் ஆகப்பெரிய கருத்துமுதல்வாத சிந்தனை. அப்படியானால் பௌத்தம் கடவுளை நம்புகிறதா? இந்த பிரபஞ்சத்தில் உள்ள செயல்களை எல்லாம் கடவுள் கட்டுப்படுத்துகிறார் என்று நினைக்கிறதா? இல்லை. பௌத்தத்தில் கடவுளே இல்லை. பிரபஞ்சத்தின் சாரமாகிய தர்மமே மையப்பேராற்றல். அது செயல்படுவதனால் பிரபஞ்சமென்ற தோற்றம் உருவாகிறது. அல்லாமல் அது பிரபஞ்சத்தை ஆளும் கடவுள் அல்ல.

அதாவது ஆக்ஸிஜன்,ஹைட்ரஜன் இரண்டையும் இணைத்து அந்த மூலக்கூறுகளை நெகிழ்வாக ஒன்றுடன் ஒன்று கட்டாமல் விட்டிருக்கும்வியற்கையின் விதியையே நாம் நீர் என்கிறோம். அதுவே ஆறு, அதுவே அருவி, அதுவே கடல். அதுவே அலை. அந்த விதி நீருக்கு வெளியே இருந்து நீரை கட்டுப்படுத்தவில்லை. அந்த விதியேதான் நீர். அது செயல்படுவதனால்தான் நீர் இருக்கிறது. செயல்படாவிட்டால் நீர் இல்லை. அந்த விதியும் இல்லை.

அப்படியானால் பௌத்தம் என்ன, ஆத்திகமா நாத்திகமா? ஒருகோணத்தில் நாத்திகம் ஒரு கோணத்தில் நாத்திகம் என்றுதான் சொல்லமுடியும். கடவுள் இல்லை என்பதனால் அது நாத்திகம். கடவுளுக்கு இணையாக தம்மம் என்ற ஒன்றை முன்வைப்பதனால் அது ஆத்திகம்.

கே.தாமோதரன் அவரது இந்திய சிந்தனை என்ற நூலில் தேவிபிரசாத் சட்டோபாத்யாயவின் பிரிவினையை கடுமையாக நிராகரிக்கிறார். ஆத்திகம், கருத்துமுதல்வாதம், பிராமணியம், ஆதிக்கசக்திகள் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரே பெட்டிக்குள் போட்டுப் பார்ப்பது மிகமிக அபத்தமான பார்வை என்கிறார்.

உதாரணமாக முழுக்க முழுக்க பிராமணிய மதம் என்றால் அது பூர்வமீமாம்சம் தான். வேதங்களை முழுமுதல் கடவுளின் நிலைக்குக் கொண்டு செல்பவை அவை. யாகம் வேளி போன்றவற்றின் மூலமும் பிராமணர்களுக்கு தானம் அளிப்பதன் மூலமும் விரும்பிய எல்லாவற்றையும் பெறலாம் என்று சொல்லக்கூடியவை.

ஆனால் பூர்வமீமாம்சத்தை மேலைநாட்டு அர்த்தத்தில் இறைவாதமாகக் கொள்ளவே முடியாது. அவர்களுக்கு பிரபஞ்சத்தை உருவாக்கி ஆளும் இறைவடிவம் ஏதும் இல்லை. பிரபஞ்சம் அதன் நியதிகளினால் ஆனது. அந்த நியதிகள் சொல்லப்பட்டிருக்கும் நூல்கள் வேதங்கள். அந்த நியதிகளுக்கு தெய்வங்கள் கூட கட்டுப்பட்டவையே. அதாவது இன்ன யாகம் செய்தால் இன்ன தெய்வம் அருள்புரிய வேண்டும் என்றால் அதை அந்த தெய்வமே கூட மீற முடியாது.

தெய்வங்கள் வேத மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அதேபோல பூர்வமீமாம்சகர்கள் கருத்துமுதல்வாதிகளும் அல்ல. அவர்கள் பொருள்முதல்வாதிகள். ஆம், அவர்களைப்பொறுத்தவரை இந்த பொருள்வயப் பிரபஞ்சம் என்பது ஒரு கருத்துநிலை அல்ல, உண்மை. அது சில விதிகளால் கட்டப்பட்டது. நெய்யை வேள்வித்தீயில் போட்டு ஒரு மந்திரத்தைச் சொன்னால் அதற்கான விளைவு நிகழ்ந்தாகவேண்டும்.

அதாவது சாராம்சத்தில் வைதிக மதம் என்பது நாத்திகவாதமே.  உலகியல்வாதமே அதன் மையம். ஆகவேதான் கீதை உட்பட்ட உபநிடத நூல்கள் வேதங்களில் உள்ள கர்மகாண்டத்தை, அதாவது வைதிக [பிராமண] மதமாகிய பூர்வமீமாம்சையை, நிராகரிக்கின்றன. சங்கரர் முதல் ராமானுஜர் வரை உள்ள பிற்கால வேதாந்திகளும் வைதிக மதத்தை நிராகரிக்கிறார்கள்.

அதேசமயம், ஒடுக்கப்பட்ட மக்கள் என்று தேவிபிரசாத் சொல்லும் பழங்குடி மக்களின் மதங்கள் எந்தவகையிலும் நாத்திகத்தன்மை கொண்டவை அல்ல. பொருள்முதல்வாத தன்மை கொண்டவையும் அல்ல. அவற்றில் பலவகையான இறைநம்பிக்கைகள் மூடநம்பிக்கைகள் உள்ளன என்கிறார் தாமோதரன்.

இந்திய வரலாற்றில் பிராமணிய ஆதிக்க சக்திகளுக்கு எதிராக கடுமையான மக்கள் எதிர்ப்பை உருவாக்கியவை சமணமும் பௌத்தமும். பிராமணர்களின் பூர்வ மீமாம்சம் பொருள்முதல்வாத நோக்கு கொண்டது. பௌத்தமும் சமணமும் கருத்துமுதல்வாத நோக்கு கொண்டவை.

அதேபோல இந்தியாவின் பக்தி காலகட்டத்திலும் மறுமலர்ச்சிக் காலகட்டத்திலும் அடித்தள மக்களின் குரலாக ஒலித்த பல ஞானிகள் கருத்துமுதல்வாத நோக்கு கொண்ட அத்வைதிகள். விவேகானந்தர், நாராயணகுரு, அய்யா வைகுண்டர் போன்றவர்கள் உதாரணம்.

” கடவுள்னு ஒருத்தர கண்டுபிடிச்சோம்னு வச்சுக்க, இது எல்லாத்துக்கும் அவர் மேல பழிய போட்டுரலாம்”’

 

ஆக, இந்த வகையான பிரிவினைகளைக் கொண்டு இந்திய சிந்தனையை ஆராய்ந்தால் அபத்தமான ஒற்றை வரிகளுக்கே சென்று சேர முடியும். அதையே நாம் எங்கும் கேட்கிறோம். பௌத்தம் ஒரு நாத்திகவாதம் என்றும் ஆகவே அது பொருள்முதல்வாத நம்பிக்கை கொண்டது என்றும் சொல்பவர்கள் உண்டு. சமணம் நாத்திகவாதம் என்று சொல்பவர்கள் உண்டு. இங்கே இந்தப் பிரிவினைகளுக்கே அர்த்தமில்லை. இங்குள்ள தர்க்கமுறைகளே வேறு.

இனி, நாத்திக ஆத்திக விவாதத்துக்கு வருவோம். இந்து மத அமைப்பு மூன்றடுக்கு முறை கொண்டது. முதல் அடுக்கில் குலதெய்வங்கள்,நாட்டார் தெய்வங்கள், மூதாதை தெய்வங்கள் உள்ளன. இரண்டாம் அடுக்கில் சைவ ,வைணவ, சாக்த பெருந்தெய்வங்கள் உள்ளன. மூன்றாவது அடுக்கில் தத்துவமே மையமாக உள்ளது.

மூன்றாவது அடுக்கில் உள்ள இறையுருவகங்களில் பிரம்மம் முதன்மையானது. சிவசக்தி உருவகம் இன்னொன்று. பராசக்தி உருவகம் மூன்றாவது. அவை அனைத்தும் முழுக்க முழுக்க தத்துவார்த்த கருத்துநிலைகள். இப்பிரபஞ்சத்தின்  உருவாக்கம், செயல்பாடு குறித்த பல்வேறுவகையான தரிசனங்கள்தான் அவை. பலவகையான நுண்ணிய தர்க்கமுறைகளால் அவை விளக்கப்பட்டுள்ளன, விவாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்றும் ஒன்றை ஒன்று வலுப்படுத்தும்படியாக கலந்திருக்கின்றன.முதல் அடுக்கில் உள்ள மாரியம்மனை பராசக்தி என்று சொல்வார்கள். பிரம்ம சொரூபிணி என்றும் சொல்வார்கள். ஒரேசமயம் மூன்றாகவும் ஆகி சாலை ஒரத்தில் வேப்பிலை சாத்தப்பட்டு மஞ்சள் அப்பப்பட்டு எல்லைக்கல் வடிவில் அமர்ந்திருக்கும்!

அதேபோல தூய தத்துவ வடிவமான பிரம்மத்தை இறையுருவகமாக ஏற்ற சங்கரரும் ராமானுஜரும் மத்வரும் எல்லாமே தெய்வங்களை வணங்கி போற்றியிருக்கிறார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சரும் நாராயணகுருவும் இறைவழிபாடு செய்திருக்கிறார்கள். அந்த இறைவடிவங்களை அவர்கள் பிரம்மமாக உருவகித்தார்கள்.

இந்து ஞானமரபின் மூன்றாவது அடுக்கான தத்துவ தளத்தில் முழுமையாக தங்களை நிறுத்திக்கொண்ட ஒருவருக்கு பிற இரண்டும் ஏற்புடையனவாக இருக்காது. அவர்களுக்கு விஷ்ணுவோ சிவனோ கடவுள் அல்ல. பிரபஞ்சத்தின் அடிப்படையாக அறிய முடியாத, வரையறை செய்ய முடியாத ஒரு பெரும் விதி அல்லது மனம் உள்ளது அதுவே பிரம்மம். அதுவே அவர்கள் காணும் இறைச்சக்தி

அந்த சக்தியை அதை வழிபட வேண்டியதில்லை. அதற்கு சடங்குகளோ கோயில்களோ தேவை இல்லை.  அதை பிரபஞ்சம் முழுக்க எங்கும் பார்க்கலாம். பாரதி சொன்னது போல செத்த புழுவை இழுத்துச்செல்லும் புழுவும் கோடானுகோடி மைல்கள் நீளமுள்ள வாலை இழுத்துச்செல்லும் தூமகேதுவும் அதன் வெளிப்பாடுகள் மட்டுமே.

இங்குள்ள எல்லாமே அதுதான் [ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம்] அதை அறியும் நம் பிரக்ஞையும் அதுவே [பிரக்ஞானம் பிரம்மாஸ்மி] அறிதலும் அறிபடுபொருளும் அறிவுமாக இருக்கும் நாமே அதுதான் [தத்வமஸி]   அதை உணர்வுபூர்வமாக உள்ளறிந்து அதுவே தான் என அறிந்து இருப்பதே முழுமை நிலை [அகம் பிரம்மாஸ்மி]

தத்துவ தளத்தில் இருந்து கீழிறங்காத வேதாந்தம் எப்போதுமே இந்து ஞானமரபில் இருந்துகொண்டிருக்கிறது. அத்வைதத்தில் அதற்கு சுத்தாத்வைதம் என்று பெயர். அதை மேலைநாட்டு பொதுபோக்கிலே நாத்திகம் என்றுதான் சொல்ல முடியும். ‘சுத்த அறிவே சிவம் என்று சொல்லும் சுருதி’ களை மட்டுமே அது ஏற்றுக்கொள்கிறது. அறிவே அதன் வழிமுறை. முழுமையறிவே உச்சகட்ட இலக்கு.

அப்படிப்பட்ட ஒன்றை இந்து மதத்தின் முதல் தளத்தில் மட்டுமே நின்றுகொண்டு மட்டுமே பார்க்கும்போது அது நாத்திகம் என்று தோன்றக்கூடும். ஆனால் இந்துமதம் என்பது ஒற்றைப்படையான நம்பிக்கை அல்ல என்று நாம் உணரவேண்டும். அது ஒரு ஒட்டுமொத்த வழிமுறையே ஒழிய ஒரு குறிப்பிட்ட இறைநம்பிக்கையோ ஒரு குறிப்பிட்ட கருத்துத் தொகையோ அல்ல.

இந்து ஞான மரபில் மிக வலுவான பொருள்முதல்வாத தரப்புகள் உள்ளன. சாங்கியம் யோகம் நியாயம் வைசேஷிகம் ஆகிய நான்கு தரிசனங்களுமே அடிப்படையில் பொருள்முதல்வாத தன்மை கொண்டவை . நம் மரபில் ஜடவாதம் என்று அதற்கு பெயர். ஆனால் அவை மேலைநாட்டு பொருள்முதல்வாதமும் அல்ல. அவற்றின் உயர் விளக்கத்தில் கருத்துமுதல்வாதம் உள்ளே வந்துவிடும்.

உதாரணமாக வைசேஷிகம் தூய பொருள்முதல்வாத அடிப்படையில் பிரபஞ்சத்தை விளக்குகிறது. ஆனால் பொருட்களின் அடிப்படை இயல்பைப்பற்றிப் பேசும்போது தன்மாத்ரா என்ற கருத்துமுதல்வாத கூறு உள்ளே வந்துவிடுகிறது. ஒவ்வொரு பொருளும் பொருண்மைத்தன்மையும் கருத்தும் கலந்து உருவாவது என்று வைசேஷிகம் சொல்கிறது. என்னுடைய இந்துஞானமரபில் ஆறு தரிசனங்கள் [கிழக்கு பதிப்பகம்] வாசித்துப்பாருங்கள்.

இந்துமதம் ஓர் எல்லையில் உயர்தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்றுகொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல். அந்த உரையாடல் பல ஆயிரம் வருடங்களாக நடந்து நடந்து பலவகையான அபூர்வமான இணைப்புகளை உருவாக்கியிருக்கிறது.

ஆகவே பழங்குடிச்சடங்கு ஒன்றையேனும் செய்யாத இந்து என யாரும் இல்லை. உயர்தத்துவத்தில் ஒரு துளியேனும் அறியாத இந்துவும் எவரும் இல்லை. நாத்திகம் ஆத்திகம் என்றெல்லாம் இந்து ஞானத்தை பிரித்துவிட முடியாது. அதன் மூலம் இந்து மதத்தின் சாராம்சமான ஞான விவாதத்தில் இருந்து நாம் விலக்கப்பட்டுவிடுவோம்.

மறுபிரசும்/முதற்பிரசுரம் Apr 6, 2010 @ 0:00

முந்தைய கட்டுரைசிலைகள், மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகோவை வெண்முரசு வாசகர் அரங்கு