«

»


Print this Post

குடி,சினிமா,கேரளம்


அன்புள்ள ஜெயமோகன்,
மலையாளப்படங்கள் குறித்து உங்களுடைய பதிவுகளை படித்தேன். நீங்கள் வரிசைப்படுத்திய படங்களில் சிலவற்றை பார்த்து ரசித்து பரவசப்பட்டதுண்டு. இப்போ அண்ணன் தம்பி வரிசையில்தான்  போட்டிக்கு மாறி மாறி நிறைய படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. நீங்கள் ‘கத பறயும்போல்’ குறித்து எதுவும் சொல்லவில்லை. தமிழில் வந்த கிரீடம், குசேலன் இன்னும்  பல, நல்ல மலையாள படங்களை சிதைத்து குதறி படையல் பண்ணி வெளியிடப்பட்டவை.. பணம் படுத்தும் பாடுதான் எல்லாம்.

நேற்று ‘ரித்து’ என்ற மலையாள படம் பார்த்தேன். இது ஒரு ஷ்யாம் பிரசாத் தயாரிப்பு. ஒரு அழகிய நட்பு சிதைந்து போன கதை. எழுத துடிக்கும் ஒரு இளம்  படைப்பாளியின் கதை.  இன்றைய இளைஞர்களின் உணர்வுகளும் ஆசைகளும் அதை அடைகின்றபொழுது அவர்களின் இழப்புகளுமாக கதை சொல்லப்பட்டிருகின்றது. சரத் வர்மா என்ற இளைஞனின் கண்களூடாக காட்சிகள் விரிகின்றன. ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.

என்றாலும் ஒரு நெருடல்; படித்த நன்றாக சம்பாதிக்கின்ற இள மங்கையரும் ஆண்களும் மாலைப்பொழுதுகளில் குடியும் கும்மாளமுமாக வலம் வரும் காட்சி மிகைப்படுத்தப்படுவதாக நினைக்கிறேன், உங்கள் அபிப்பிராயம் எப்படி?
ரித்து  பார்த்துவிட்டீர்களா?  மோட்சம் என்ற படம் கூட நன்றாக இருந்தது. டொராண்டோவில் மலையாள சினிமா திரையரங்குகளில் பார்க்கவே முடியாது, ஆன்லைன்தான். உங்கள் அங்காடித்தெருவுக்கு போக காத்திருக்கிறேன்.
தமயந்தி

ரிது

அன்புள்ள, தமயந்தி,

நான் சமீப காலமாக மலையாள சினிமா குறைவாகவே பார்க்கிறேன். காரணம் இங்கே முன்பு போல மலையாள சினிமா வருவதில்லை. ஓடுவதில்லை என்று சொன்னார்கள். நான் திருட்டு டிவிடி பார்ப்பதில்லை.

மேலும் அண்ணன் தம்பி ரகமான படங்கள்தான் அதிகம் வெளிவந்து அவையே நன்றாக ஓடுவதாகச் சொல்கிறார்கள். அவ்வப்போது நல்ல படங்கள் வந்தாலும் அவற்றால் பொருளியல்வெற்றி அடைய முடிவதில்லை. அந்த அளவில் மலையாள சினிமாவிந் நிலைமை கவலைக்கிடம் என்பதே பேச்சு.

ரிது [பருவம்] நல்ல படம் என்றார்கள். நல்லபடங்கள் பல உள்ளன. வெறுதே ஒரு பார்ய, சூபி பறஞ்ஞ கத, பாலேரி மாணிக்கம் போன்றவை சமீபத்தில் வந்தன. நாவல்களை அடிப்படையாகக் கொண்டவை.

குடி பற்றி. கேரளத்தின் சாயங்காலங்களை அது அழித்துவிட்டது. மொத்தகேரளமுமே சாயங்காலங்களில் குடிக்க  அமர்ந்துவிடுகிறது. இளைஞர்களின் உலகமே பார்தான். மதுக்கடைகளில் பெரும் கியூ வரிசைகள். ‘வைகுந்நேரம் எந்தா பரிபாடி?’ இதுவே கேரளத்தின் தாரக மந்திரம். சாயங்காலம் ஏழுமணிக்கெல்லாம் கேரளம் கடைகளைப் பூட்டி அடங்கிவிடுவதும் இதனாலேயே

எண்பதுகளில் இந்த பண்பாடு அறிவுஜீவிகளால் ஊக்குவிக்கப்பட்டது. குடி ஒரு கொண்டாட்டமாக,நாகரீகமாக,மீறலாக பார்க்கபப்ட்டது. கலைஞர்கள் எழுத்தாளர்கள் குடித்துவிட்டு குடியைப்பற்றி புகழ்ந்து பேசினார்கள். மெல்லமெல்ல ஒரு தலைமுறையே அப்படி உருவாகி வந்தது. குடியைப்பற்றிய மனத்தடைகள் மறைந்தன. குடியை எதிர்மறையாகப் பார்ப்பவர்கள் பத்தாம்பசலிகள் என அறிவுஜீவிகளால் முத்திரை குத்தப்பட்டார்கள்.

இன்று இலக்கிய வாசிப்பு, மாற்று அரசியல் அனைத்திலுமே மாபெரும் பின்னடைவை உருவாக்கியிருப்பது குடியே. காரணம் சாயங்காலங்களே கிடையாது. இன்று அறிவுஜீவிகள் அதைப்பற்றி கவலைப்படுகிறார்கள். பேசுகிறார்கள்.

ஆகவேதான் நான் தமிழகத்தில் தொண்ணூறுகளில் குடியை சிலாகிக்கும் அறிவுஜீவிகளை கண்டு எரிச்சல் உற்றேன். கடுமையாக அவர்களுக்கு எதிர்வினையாற்று பழமைவாதி என்ற பெயரையும் பெற்றேன்.

நம்மைப்போல குடிப்பது எந்த நாட்டுக்கும் பொருளியல் பண்பாட்டு இழப்பேயாகும். 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7014

15 comments

1 ping

Skip to comment form

 1. Vijay S

  //குடியைப்பற்றிய மனத்தடைகள் மறைந்தன. குடியை எதிர்மறையாகப் பார்ப்பவர்கள் பத்தாம்பசலிகள் என அறிவுஜீவிகளால் முத்திரை குத்தப்பட்டார்கள்.//

  கேரளம் பற்றி நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இந்தியாவின் பல பெருநகரங்களில் இன்றைய நிலை இது தான். மேலும், இலக்கியம், சினிமா போன்ற கலைத்துறைகளில் மாத்திரமல்ல; முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்த ஐ.டி. போன்ற துறைகளிலும் குடிக்காதவர்கள் முத்திரை குத்தப்படுதலும் வேட்டையாடப்படுதலும் நிறையவே நடக்கிறது. புதிய குடிகாரர்களோ தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

  ஐ.டி. துறை போன்ற துறைகளில் இயங்கும் அளவற்ற சுதந்திரம், அளவற்ற பணம், அத்துடன் சுயம் என்ற ஒன்று வலுவாக இல்லாதிருத்தல் போன்றவற்றின் காரணமாக, குடிப்பதே முற்போக்கு, குடிப்பதே நாகரிகம் போன்ற எண்ணங்கள் பரவலாக மற்றும் பலமாகவே நிறுவப்படுகின்றன. குடிப்பதை ஒரு “நாகரிகம்” ஆக்கும் போது என்ன ஒரு முக்கியமான சிக்கல் என்றால், குடிக்காமலிருப்பது “அநாகரிகம்” என்று மறைமுகமாக (சில சமயம் நேரடியாகவே கூட) நிறுவப்படுகிறது.

  குடியைத் தொடாமல் கல்லூரி தாண்டிய இளைஞர்கள் கூட, பன்னாட்டு ஐ.டி. நிறுவனங்களில் வந்து குடியில் விழுந்து விடுகிறார்கள். அப்புறம் எழுந்திருப்பதே இல்லை! ஒரு குடிக்குழுவும் சேர்ந்து விடுவதால், பதவி உயர்வுகள் முதல் சில நேரங்களில் சொந்த விஷயங்கள் வரை எல்லாமே குடிக்கும் மேஜையில் வைத்துத் தீர்மானிக்கப்படுகின்றன. இதில், இந்தக் குடிக்குழுவில் சேராத ஒருவன் அல்லது ஒருத்தி குழுவைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பெரும் சங்கடமாக இருக்கிறான்/இருக்கிறாள். அதனால், மெல்ல மெல்ல அவர்களுக்கு ட்டீம் “ஸ்பிரிட்”(!) இல்லை என்ற வகையில் தொடங்கி முத்திரை குத்தப்படுகிறது.

 2. hemikrish

  நம்மைப்போல குடிப்பது எந்த நாட்டுக்கும் பொருளியல் பண்பாட்டு இழப்பேயாகும்//

  நிஜம்…..குடியில் அடிமையான பெண்களை நான் கண்கூடாக பாத்து இருக்கிறேன்..மீளவும் முடியாமல் அவர்களின் எதிர்காலம் சிதைந்து போவது கொடுமை…

 3. sitrodai

  தற்போதெல்லாம் பன்னாட்டு IT கம்பெனிகளில் குடிப்பது என்பது ஒரு கலாச்சாரமாகவே ஆகி கொண்டுஇருக்கிறது. (நானும் ஒரு பன்னாட்டு IT கம்பெனியில் ‘உருப்படியாக’ வேலை செய்பவன்தான். )

  எங்கள் கம்பெனியில், சமிபத்தில் நடந்த பயிற்சி வகுப்பில், குடிப்பது எப்படி (social drinking) என்ற தலைப்பில் ஒரு நாள் முழுவதும் பயிற்சி கொடுக்கப்பட்டது. குடி பழக்கம் இல்லாதவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தபோது, குடிப்பதின் நன்மைகளை விளக்கி பிரசங்கம் வேறு நடத்தினார் பயிற்சி வகுப்பாளர். நாகரிசமுகத்தில் குடித்தே தீரவேண்டும் என்ற விளக்கமும் தரப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களில் பாதிக்கும் மேல் பெண்களே. (அவர்களில் பலருக்கு ஏற்கனவே குடி பழக்கம். மீதி பேர் அந்த பயிற்சி வகுப்பில் பழக்கி கொண்டனர். நாகரீக சமுக சமநிலை அடைய பட்டது.)

  குடிப்பது ஒரு சமூக கட்டாயமாக ஆகி கொண்டிருக்கிறது.

 4. soman1

  பின் நவீனத்துவம் என்ற பெயரால் பல தற்குறிகள் தங்களின் சொந்த ரசனையை உலக ரசனையாக பிரகடனப்படுத்துவதன் விளைவு தான் இது.

  எல்லா துறைகளிலும் இது மலிந்து விட்டது. இலக்கியத்திலும், கலை வெளிப்பாடுகளிலும்.

 5. gomathi sankar

  உண்மையில் எனக்கு ஒன்று புரியவே இல்லை நானும் குடித்திருக்கிறேன் குடி நம்முடைய புலன்களையும் உணர்வுகளையும் மொண்ணை ஆக்குவதை உணர்ந்திருக்கிறேன் சிலசமயம் பிரக்ஞை அளவுக்கு மீறிய சுமையுடன் அழுத்தும் போது மது தேவைப் படலாம் ஆனால் ஒரு இலக்கியவாதிக்கு அவனது நுண்ணுணர்வுகளை மழுங்க செய்யும் எந்த வஸ்துவும் விஷம் அல்லவா

 6. rajmunich

  கேரள மக்களின் குடி பழக்கத்தை பற்றி…
  http://news.bbc.co.uk/2/hi/south_asia/8557215.stm
  http://www.mathrubhumi.com/english/news.php?id=89377
  தமிழகத்தின் நிலையும் இதே தான்.

  அலுவலக கேளிக்கைகளில் மது அருந்தாமல் இருப்பது, நம்மை தனிமை படுத்திவிடும் என்ற கவலை தேவையற்றது.
  ‘குடிப்பது எப்படி?’ பயிற்சி வகுப்பெல்லாம் ரொம்ப அநியாயம். கண்டிக்கத்தக்கது.

  எனது அனுபவத்தில் குடித்தே ஆக வேண்டிய கட்டாயம் என்றுமே என் மீது திணிக்க பட்டதில்லை.
  மதுவுடன் தண்ணீர்,பழ சாறு வகைகள்,கோலா,காபி,டீ போன்றவைகளும் பரிமாறுகிறார்கள்.
  வெளிநாட்டினர் நமது தேர்வை மதிக்கிறார்கள். நம்மை கட்டாயப்படுத்துவதோ, மது குடிக்க மறுப்பதால் தனிமை படுத்துவதோ இல்லை.அவர்களிடம் ‘குடிப்பது கேடு’ என்று பிரசங்கம் பண்ணாமல் இருந்தால் சரி.

  நம் மக்களுடன்(நண்பர்கள்) தான் குடிக்காமல் நேரம் கடத்துவது கஷ்டம். ரெண்டு கிளாஸ் உள்ள போன உடனே படுத்துவார்கள்.
  அவர்களை சமாளிப்பதற்க்காகவே, நாமும் ஜோதியில் ஐக்கியமாகணும் . :-)

 7. madupri

  இங்கே அளிக்கப்பட்ட ‘கமெண்டுகள்’ சிலவற்றை பார்த்தால் வேதனையாக இருக்கிறது…

  1) ஏதோ பன்னாட்டு ஐ.டி நிறுவனங்களில் எல்லாம் ஆண்களும் பெண்களும் எப்போதும் குடித்துவிட்டு உருளுவது போல எழுதுகிறார்கள். மதிப்பான ஐ.டி நிறுவனங்கள் யாரையும் குடிக்க வற்புறுத்துவதில்லை – குடிக்காத (என்னைப் போன்ற) பலர் இத்தொழிலில் வெற்றி பெற்றுள்ளனர். அதே சமயம் Consultants மூலம் இயங்கும் ஐ.டி. வர்த்தகத்தில் sales/client-facing என்பது முக்கியமான திறன். Client முன் குடித்துவிட்டு உளறினால் 10 மில்லியன் டாலர் காண்டிராக்ட்டும் கம்பனி மானமும் பறி போகும். புதிதாய் சேரும் இளம் வேலையாளருக்கு தரப்படும் பயிற்சியை ‘பலான’ training-ஓடு ஒப்பிட வேண்டாம்.

  2) “அளவற்ற சுதந்திரம், அளவற்ற பணம், அத்துடன் சுயம் என்ற ஒன்று வலுவாக இல்லாதிருத்தல் போன்றவற்றின் காரணமாக” – இதெல்லாம் சுத்த புருடா. சுதந்திரமும் பணமும் அவனவன் உரிமை. சுயத்தை தேடுதல் அவனவன் விருப்பம். உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகள், கலாசார முறைகள், தொழிற் குழுக்களின் dynamics – இவையெல்லாம் எப்போதுமே எல்லா தொழிலிலும் மோதிக் கொள்பவை தாம். ஒரு சிறிய வட்டத்துக்குள் உங்களுக்கு ஏற்பட்ட ஒரு சிறிய பின்னடைவை, மொத்த கலாச்சாரமும் சீர்கெட்டது என்றதன் அடையாளமாக சொல்லாதீர்.

  3) குடிப்பழக்கமும் ஒழுக்க சீர்கேடும் நிறைந்த சினிமாத்துறையால், இளம் வயதில் ஒழுக்கமாக சம்பாதித்து வெற்றி பெறக்கூடிய ஐ.டி. வர்த்தகம் மிகைபடுத்தப்படுவது ஈனத்தனமான விஷயம். அதற்க்கு இத்தகைய ‘கமெண்டுகள்’ நன்றாக துணை போகின்றன.

 8. sitrodai

  ஹாய் madupri,

  பன்னாட்டு IT கம்பெனிகளில் எல்லோரும் குடித்து உருளுகிறார்கள் என்று எங்கேயும் கூறப்படவில்லை.

  Client facing மற்றும் customer interaction சம்பந்தமாக நடந்த பயிற்சி வகுப்புகளில் நடந்த விஷயங்களை பற்றி மட்டுமே நான் கூறி இருந்தேன். குறிப்பாக social drinking என்று கூட குறிப்பிட்டு இருந்தேன்.(குடித்து விட்டு உளற கூடாது மற்றும் அதிகமாக குடிக்க கூடாது என்றும் அந்த வகுப்பில் அறிவுறுத்த பட்டது, தாங்கள் கூறியபடி :-))

  நான் கூற வந்தது குடித்தலை ஞாயபடுத்தும் போக்கை பற்றியும், அது சாதாரணமான/இயல்பான விஷயமாக ஆக்கபடுவதை பற்றியுமே.

 9. vasanthfriend

  அன்பு ராஜ்ம்யூனிச்…

  தங்களின் கருத்தில் கடைசியாக ஒரு ஸ்மைலி போட்டிருக்கிறீர்கள், பாருங்கள். அது தான் இந்த மிக சீரியஸான விஷயத்தை நீர்த்துப் போகச் செய்து விடுகின்றது.

  குடிப்பழக்கம் மிக மிக மோசமான பழக்கம் என்பதை ஒவ்வொருவரிடமும் வலியுறுத்த வேண்டிய கட்டத்தில் இருக்கின்ற வேளையில் இது போன்ற ‘ஜாலியாக’ எடுத்துக் கொள்ளப்படும் புள்ளி இன்னும் தாழ்நிலைக்கே கொண்டு செல்லும் என்பது என் ஒரு குறு அபி.

  நன்றிகள்.

 10. Orkut Paamaran

  //நம்மைப்போல குடிப்பது எந்த நாட்டுக்கும் பொருளியல் பண்பாட்டு இழப்பேயாகும்.//

  குடியே பிர‌ச்ச‌னையா இல்லை ந‌ம்மைப்போல் குடிப்ப‌து பிர‌ச்ச‌னையா?

 11. hemikrish

  //
  உண்மையில் எனக்கு ஒன்று புரியவே இல்லை நானும் குடித்திருக்கிறேன் குடி நம்முடைய புலன்களையும் உணர்வுகளையும் மொண்ணை ஆக்குவதை உணர்ந்திருக்கிறேன் சிலசமயம் பிரக்ஞை அளவுக்கு மீறிய சுமையுடன் அழுத்தும் போது மது தேவைப் படலாம //

  இப்படி கோமதி சங்கர் என்பவர் கூறி உள்ளார்…அளவுக்கு மீறி சுமை இருந்தால் மது தேவை பட வேண்டும் என்பதில்லை..நம்முடைய எண்ணங்களை வேறு திசைக்கு மாற்றலாம்……..

  .ஏனெனில் இப்படிதான் தொடங்கும் குடிபழக்கம்…நாட்டில் ஐம்பது சதவீதம் மன சுமையால் குடிபழக்கம் ஆரம்பித்தவர்கள்..மீதி ஐம்பது சதவீதம் நாகரீகம் என்று ஆரம்பித்தவர்கள்..எந்த நிலையிலும் அப்பழக்கம் வேண்டவே வேண்டாமே…

 12. gomathi sankar

  ஆனால் குடி நம் கலாச்சாரத்தில் எப்போதுமே இருந்திருக்கிறது சீதை கங்கைக்கு நூறு மதுக் குடங்களை பிரார்த்தனை பலித்தால் தருவதாக வேண்டிக் கொள்கிறாள் ராமனும் சீதையும் மது அருந்தினார்கள் என்பதுபோல் வருகிறது [ இல்லை அது தேன்தான் என்று சோ விளக்கம் சொன்னதாக ஞாபகம் ]கிருஷ்ணனும் அர்ச்சுனனும் சேர்ந்து மது அருந்தியதாக பாரதம் சொல்கிறது அதேசமயம் யாதவ குலமே குடியினால் அழிந்தது என்றும் சொல்கிறது மனு ஸ்மிருதி மது அருந்துதலை கண்டிக்கவில்லை சமணம் மட்டுமே கள் உண்ணாமையை வலியுறுத்தி சொல்கிறது ஆகவே இதை வெறும் பண்பாட்டு பிரச்சினை என்பதாக காண்பித்ததால்தான் அதை மீறியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்துக்கு நம் புரட்சியாளர்கள் தள்ளப் பட்டுவிட்டார்கள் அதிலும் கேரளாவில் புரட்சி அதிகம் அல்லவா

 13. Prakash

  குடி ஒரு நிலையில் நல்லது இன்னொரு நிலையில் கெடுது. எப்பொழுதாவது தான் குடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றால் அது மன சுமையை அகற்றும் வல்லமையை பெற்றது. அடிகடி குடிபேன் என்றால், அது உடலுக்கும் கேடு, மனதிற்கும் கேடு , உயிருக்கும். அறிவு சார்ந்த மக்களுக்கு குடி opposite extreme கொண்டு செல்வதால் ஒரு விடுதலை கிடைகின்றது அதனால் ஒரு பரவசம் – மூத்திரம் பொத்து கொண்டு வரும் போது போகும் பரவசம் போல. ஆனால் அதுவே வாடிக்கயானால் எல்லாம் நாசம்.

 14. vijayan

  எனக்கு மற்ற மாநிலங்களை பற்றி தெரியாது, ஆனால் தமிழ்நாட்டில் குடி வருவதற்கு முன் ,வந்த பின் என்ற இரண்டு நிலையையும் பார்த்தவன்.1970 க்கு பின் இளம்வயது விதவைகள் எண்ணிக்கை அதிகமானது.alcoholic என்ற நோயாளிகள் அதிகமானார்கள்.காமராஜரின் ஆட்சியின் போது எளிய மக்களின் குடிசைகளில் வறுமை இருந்தபோதும் கண்ணியம் இருந்தது.படித்து முன்னேறவேண்டும் என்ற ஆர்வம் சகல தரப்பிலும் இருந்தது.

 15. Vijay S

  அன்புள்ள madupri,

  //இங்கே அளிக்கப்பட்ட ‘கமெண்டுகள்’ சிலவற்றை பார்த்தால் வேதனையாக இருக்கிறது//
  நானும் எனது வேதனையைத் தான் எழுதினேன் என்று புரிந்து கொள்ள முயலுங்களேன்!

  1. உங்கள் அனுபவத்தில் நீங்கள் பார்க்க நேராமல் இருந்திருக்கலாம்; ஆனால் நான், பன்னாட்டு ஐ.டி. கம்பெனியின் பார்ட்டியில் மக்கள் குடித்துவிட்டு உருளுவதையே, ஆம் உண்மையிலேயே உருளுவதையே, பார்த்திருக்கிறேன். குடிக்காதவர்களைக் குடிக்க வற்புறுத்துவதும் நடந்திருக்கிறது—எனக்கே. அதுவும், ஏதோ இங்கொன்றும் அங்கொன்றும் நடக்கும் சம்பவங்கள் அல்ல; பொதுமைப்படுத்திச் சொல்லத்தக்க அளவில் சம்பவங்கள் நிகழத் தான் செய்கின்றன. ஆகையால், இல்லவே இல்லாததை யாரும் இங்கு சொல்லவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தன் துறை சார்ந்த பெருமிதம் இருக்க வேண்டியது தான்; ஆனால், தன் துறையின் உண்மையான நலனை முன்னிட்டு (மற்றும், மேலும் பரந்த நிலையில் சமூகம் மொத்தத்தின் நலனையும் முன்னிட்டு) ஒரு பொறுப்புணர்ச்சியோடு அணுகினால், “அதெப்படி நீ என் துறையைத் தவறா சொல்லப் போச்சு” என்ற கோபத்தோடு மறுத்துப் பேச விரையாமல் உண்மை நிலையை ஒரு நடுவுநிலைமையோடு அணுகுவீர்கள். அதற்கு மேற்கொண்டு ஏதாவது பேச வாய்ப்புண்டு.

  2. //சுதந்திரமும் பணமும் அவனவன் உரிமை. சுயத்தை தேடுதல் அவனவன் விருப்பம்.// அந்த விருப்பத்தைச் செயல்படுத்துவது பொதுவாக அதிகம் நடப்பதில்லை என்பது தான் நான் பிரச்சினையின் காரணம் என்று சொன்னேன். “A beautiful girl doesn’t have to be interesting” என்று சொல்வது போல, ஐ.டி. துறையினர் பலருக்கு (கவனிக்க: “எல்லோருக்கும்” என்று சொல்லவே இல்லை) இளவயதிலேயே பணமும் அதனால் ஏற்படும் சுதந்திரமும் கிடைப்பதால், தன் சுயம் என்பதைத் தேடி அடையவோ அல்லது உருவாக்கவோ தேவையான நீங்கள் சொன்ன “விருப்பம்” என்பதே பலருக்கு உண்டாவதில்லை. “25 வயசுல வாழ்க்கைல ஜெயிச்சிட்டேன்; உலகம் பூராப் பறந்திட்டேன்; வீடு/கார் வாங்கிட்டேன்; ஆண்/பெண் ‘சிநேகிதர்கள்’ புடிச்சிட்டேன்; இதுக்கு மேல எனக்குத் தெரியாதது என்ன? இனி வாழ்க்கை குடித்து இன்புறுவதற்குத் தான்” என்ற ஒரு மயக்கம் உருவாவதற்கான காரணங்களைத் தான் சொன்னேன். அது புருடா என்றால், பின்னர் “குடிப்பதே முற்போக்கு குடிப்பதே நாகரிகம்” போன்ற எண்ணங்கள் எப்படி, எதனால் எளிதில் நிறுவப்படுகின்றன என்று சொல்கிறீர்கள்? பலமான சுயம் கொண்டவனை/வளை அவ்வளவு எளிதில் அசக்கிப் பார்க்க முடியாது என்பதையாவது ஒப்புக்கொள்வீர்களா?

  3. நீங்க இதை ஏதோ ஒண்டிக்கு-ஒண்டி ரேஞ்சுல எடுத்துக்க வேண்டாம். இங்கு யாரும் சினிமாத் துறை ஐ.டி. துறையை விட எவ்வளவோ மேல் என்று சொல்வதாக நினைத்துக் கொள்ள ஒன்றும் இல்லை. சொல்ல வந்தது என்னவென்றால், கலைத் துறைகளில் தான் “கலைஞர்கள் சமுதாயத்தின் சாதாரண ஒழுக்கம் சார்ந்த கருத்துக்களால் கட்டுப்பட மாட்டார்கள்” என்றெல்லாம் சால்ஜாப் சொல்லிச் சொல்லியே குடிப்பதும் மற்றும் பலவும் ஆண்டாண்டு காலமாக நியாயப்படுத்தப்பட்டு வந்திருக்கிறதென்றால், மதிக்கத்தக்கதாக வளர்ந்திருக்க வேண்டிய ஐ.டி. போன்ற தொழில்நுட்பம் சார்ந்த துறைகளிலும் கூட இந்தப் பழக்கம் பரவி இருக்கிறது என்பதே. தயவு செய்து “வெள்ளைக்காரன் ஒன்னும் பொய் சொல்ல மாட்டான்” என்று சொல்வது போல “ஐ.டி. துறையினர் எல்லாம் அப்படி ஒன்னும் இல்ல!” என்று அப்பாவியாகவோ அல்லது நகைக்கத்தக்க முன்முடிவுகளுடனோ இதை அணுக வேண்டாமே; கண்ணுக்குத் தெரியும் உண்மைகளை மறுத்துப் பயனில்லை. ஆகையால், தென்னை மரத்தில் தேள் கொட்டினால் மரத்தில் உட்கார்ந்திருக்கும் அணிலுக்கு நெறி கட்ட வேண்டியதும் இல்லை. (தங்கள் தகவலுக்காக: நானும் ஐ.டி. துறையைச் சேர்ந்தவனே.)

 1. Tweets that mention jeyamohan.in » Blog Archive » குடி,சினிமா,கேரளம் -- Topsy.com

  […] This post was mentioned on Twitter by Ram Ramachandran. Ram Ramachandran said: 'குடி பற்றி. கேரளத்தின் சாயங்காலங்களை அது அழித்துவிட்டது. ' http://www.jeyamohan.in/?p=7014 தமிழகமும் அப்படியே தான்! […]

Comments have been disabled.