‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’

பொதுவாக வெண்முரசு நாவல்களின் பிரசுரமாகும் பகுதிகளுக்கு ஏழெட்டு பகுதிகள் முன்னதாகத்தான் நான் எழுதிச்சென்றுகொண்டிருப்பேன். சிலசமயம் பதினைந்து பகுதிகள் கூட முன்னதாக சென்றிருக்கிறேன். நீலம் நெருக்கடியை சந்தித்தது. அன்றன்று எழுதி அன்றன்று பிரசுரமாக வேண்டியிருந்தது. காரணம் அது அன்று என்ன தோன்றுகிறதோ அதனடிப்படையில் எழுதப்பட்டது. முழுக்க முழுக்க அது கனவு.

பிரயாகையில் ஒரு தொடர்ச்சி இருந்தது. ஆகவே தொடர்ந்து எழுதிச்செல்ல முடிந்தது. ஆனால் ஒரு ஒழுக்கு முடிந்து அடுத்தது தொடங்குவதில் இடைவெளி நிகழ்ந்தது. மனம் எழவேயில்லை. நாள்கள் ஓடிச்சென்றன. அன்னைவிழி 1 தொடங்கும்போது மறுநாள் பிரசுரமாகவேண்டியிருந்தது. தொடர்ச்சியாக நெருக்கடியிலேயே எழுதமுடிந்தது. பலநாட்கள் மதியத்தில் கதையை பெற்று இரவுக்குள் வரைந்து கொடுத்திருக்கிறார் ஷண்முகவேல். அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

பொதுவாக அடுத்த நாவலுக்காக சற்று இடர்படுவேன். இருட்டில் முட்டி முட்டி அலைவேன். எங்கோ ஒரு திறப்பு நிகழும். நீலம் பல அலைக்கழிப்புகளுக்குப்பின் ஆரம்பித்தது. பின் பிரயாகைக்கும் பலநாட்களாகியது. பிரயாகைக்குப்பின் அடுத்த நாவலுக்கு இன்னொரு வடிவத்தை நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். ஆனால் பிரயாகையை முடிப்பதற்குள்ளாகவே இப்படி இந்நாவல் தொடங்கிவிட்டது எனக்குள்ளே. இனி எழுதவேண்டியதுதான் மிச்சம்.

19-1-2015 அன்று காலையில் நாவலை தொடங்கினேன். வெண்முகில் நகரம். இந்திரப்பிரஸ்தம் முகிலவனாகிய இந்திரனின் நகர். வெண்முகிலின் ,மின்னலின், மழையின், வானவில்லின் நகர். கனவின், வீரியத்தின், வேட்கையின், படைப்பூக்கத்தின் நகரம்.

சிறிய இடைவேளை. பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நாவல் வெளிவரும். ஏனென்றால் 15 பகுதிகளாவது நான் முன்னால் சென்றாகவேண்டும்.

ஜெ

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைகரிய பட்டில் வைரம்
அடுத்த கட்டுரைமயில்நீலம்