[திரௌபதி அம்மன்]
வெண்முரசு வரிசையின் ஐந்தாவது நாவலாகிய ‘பிரயாகை’ நேற்றுடன் முடிந்தது. ஒவ்வொரு நாவலை எழுதும்போதும் அதற்கென எல்லைகள் தெளிவற்ற ஒரு வடிவத்தை நான் உருவகித்துக்கொள்வதுண்டு. அதன் மையமாக அமையும் ஒன்றை முதலில் கண்டுகொள்வேன். பெரும்பாலும் அது தற்செயலாக அமைவதாகத்தான் இருக்கும். முந்தைய நாவல்களில் எங்கோ அதற்கான தொடக்கமும் இருக்கும்.
எழுதத் தொடங்கியதுமே நாவல் அதன் விசையில் என்னை கொண்டுசெல்லும். ஒன்றுடன் ஒன்று நிரப்பிக்கொண்டு தன் வடிவத்தைத் தானே அடைந்துவிடும். அவ்வாறு வடிவம் திரண்டு வருவதுதான் எழுதுவதிலுள்ள இன்பம் என்பது. நாவல் முதிர்ந்து தன் இறுதியை நெருங்கும்போதுதான் அதன் முழு வடிவம் ஓரளவேனும் கண்ணுக்குத்தெரியும். முழுமை நிகழ்ந்ததும் அந்த ஒருமை சற்று திகைப்படையச்செய்யும். எழுதுவதிலுள்ள இயக்கவிசை என்பதே நாம் இப்படி நம்முள் உறையும் ஒன்றை தொட்டுத் தொட்டு துலக்கிக்கொள்வதுதான்.
‘பிரயாகை’ என்றால் நீர்ச்சந்தி. ஐந்து பிரயாகைகளைக் கொண்ட கங்கையை பாஞ்சாலி என எண்ணியது மட்டுமே இந்நாவலின் தொடக்கம். துருவன் தற்செயலாக அமைந்தது. ஐந்து கணவர்கள் கொண்டவள் மட்டும் அல்ல திரௌபதி என்பதை இந்நாவலில் ஐந்து என்னும் எண் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காணும் வாசகன் உணரமுடியும்.
அவளுடைய கதைதான் இது. அவளுடைய தோற்றுவாய்தான் நாவலின் தொடக்கம். அவள் பெருகியெழும் கணத்தில் முடிகிறது. நீரில் தொடங்கி நெருப்பில். என்னையறியாமலேயே நிகழ்ந்துள்ள இந்த தலைகீழாக்கத்தை முடிந்தபின் வியப்புடன் கவனித்தேன். மகாபாரதத்தில் அவள் நெருப்பின் மகள். பின்னர் கங்கையுடன் ஒப்பிடப்படுகிறாள். இதில் அவள் கங்கையென எழுகிறாள். நெருப்பாக ஆகிறாள்.
ஒரு நாவலின் அகக்கட்டுமானம் என்பது அதன் படிம ஒருமை என்பதே என் எண்ணம். அது முற்றிலும் தன்னிச்சையாக, கனவுக்குரிய ஒருமையுடன், நிகழவேண்டும். அதன் புறவய இணைப்புகளை தகவல்கள் சார்ந்து அமைப்பதும் சில விடுபடல்களை அமைப்பதும் சற்றே செயற்கையான பணி. ஒரு வகை முடைதல் அது. அவற்றில் அனைத்தையும் முடைந்துசென்றாலும் சிலவற்றை வேண்டுமென்றே விட்டுவிட்டிருக்கிறேன். அடுத்த நாவல்களால் நிறைக்கப்படுவதற்காக.
நேற்று முன்தினம் 18-1-2015 அன்றுதான் இறுதி அத்தியாயத்தை எழுதினேன். அதை முடித்துவைக்க ஒரு கதையை எண்ணியிருந்தேன். அதை முற்றிலும் மறந்துவிட்டேன். அரங்கசாமியிடம் அந்தக் கதை எங்காவது சொல்லியிருக்கிறேனா என்று கேட்டேன். நினைவில் இருந்து எழவே இல்லை. ஆகவே இன்னொன்றை எழுதினேன். சொற்கள் வழியாக அதை நினைவுகூர முடியுமென்று நம்பி. அது இம்முடிவை நிகழ்த்தியது. அக ஆழம் கொள்ளும் வழிகளை வாழ்நாளெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கிறேன். தொட்டறிய முடிவதில்லை, மீண்டும் இனிமையாக தோற்கடிக்கப்பட்டேன்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்