இனிய ஜெயம்,
காலை ஒரு சஸ்பென்சாக இருக்க்கடுமே என்று விஜய் தொ காவில் வெண் முரசு நிகழ்ச்சி துவங்க அரை மணி நேரம் இருக்கையில் அம்மாவிடம்’அம்மா உம் புள்ள மூஞ்சி டீவீல வரப் போகுது’ என்று சொல்லி விஷயத்தை சொன்னேன். போன் கால்கள் பறந்தன. செய்தி ”எங்க வீட்டுக்கு வந்த ஜெயமோகன் டீவீல வர்றார்”. நிகழ்ச்சி முடிய தெரு மொத்தமும் என் வீட்டில். ‘அன்று’ வீட்டுக்கு ஜெயமோகன் வந்தது முதல் விடை பெற்றது வரை ,அம்மாவும் பெரிமாவும் மோனோ ஆக்ட்டில் நிகழ்த்திக் காட்டினர். இறுதி வரை நிகழ்ச்சியில் மூன்று வினாடி தலை காட்டிய என்னைப் பற்றி எதுவுமே சொல்ல வில்லை. சில வருடங்களாக தொடர்பில் இல்லாத மதினி போன் போட்டு வியந்தது மட்டுமே ஒரே ஆறுதல்.
நிகழ்ச்சியை மீண்டும் காண நேர்ந்தது இனிய நிகழ்வு. இழந்த கனவு ஒன்றை மீண்டும் வாழ்ந்து பார்த்தது போல இருந்தது. நிகழ்ச்சி இறுதியில் அருண்மொழி அக்காவை பார்த்ததும் [அம்மா முதன் முதலாக பார்க்கிறார்கள்] அம்மா ”நல்லா பாந்தமா,அழகா, கலகலப்பா இருக்காங்க. ஜெயமோகனுக்கு ஏத்த ஜோடி” என்றார்கள். நிகழ்ச்சியில் பாலகுமாரன் அவர்களைக் கண்டது ஒரு சிறிய பரவசம். ஒரு காலத்தில் நான் பாலகுமாரன் ரசிகன். ஜெயகாந்தன் கதை ஒன்றில் இடறி, பிடரியில் அடி வாங்கியவன் போல் ஆகி, மூச்சு சீற நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள் என்று கோபத்துடன் பாலகுமாரனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவர் நிதானமாக , வாசிப்பின் படிநிலை என்ன இலக்கியத்தில் ஜெயகாந்தன் இடம் என்ன என குறிப்பிட்டு வாசிப்பை மேலும் தொடர வாழ்த்தி ஒரு கடிதம் எழுதினார். அன்றுடன் பாலகுமாரன் புதினங்களுடனான என் தொடர்பு முடிவுக்கு வந்தது.
நிச்சயமாக அவரது மகாபாரதப் புனைவான பீஷ்மரை நாயகனாகக் கொண்ட ‘பெண்ணாசை’ அன்று என்னை ஸ்தம்பிக்க வைத்தது. இன்று நான் முதற் கனலை தொட அன்று அவரும் ஒரு படி நிலை. அதை மறுக்க முடியாது. பாலகுமாரனை அன்று அரங்கில் கண்டது ஒரு வாசகனாக எனக்கு பரவசமாக இருந்தது.
நிகச்சியை விஜய் டிவி எடிட் செய்திருந்த விதம் நேர்த்தி. இத்தகு அசை படங்கள் ஏதேனும் பார்த்தால் அதில் ஏதேனும் ஒரு ஷாட். என் மனதில் விழுந்து விடும். பின்னர் அந்த ஒரு ஷாட்டை மீட்டினால் போதும் மொத்த படமும் என் அகத்தில் விரிந்து வரும். உதாரணம் மழைத் துளி தயங்கி நின்று சொட்டும் இரும்புக் கம்பி, இந்த ஒரு ஷாட் மொத்த அங்காடித் தெரு படத்தையும் என் மனதில் விரித்து விடும்.
இந்த நிகழ்ச்சியிலும் அப்படி ஒரு ஷாட். கழுத்துவரை காட்டப் பட்ட ஒரு பெண் முகம். இடது கையால் முகத்தை தாங்கி, கட்டை விரல் தாவாங்கட்டையை தாங்க, சுண்டுவிரலும்,மோதிர விரலும், சற்றே வளைந்து நாடியை மறைக்க, நடு விரல் மேல் உதட்டுக்கு மேலே அமைய, சுட்டு விரல் மூக்குக்கு மேல் அமைய, ஓர வகிடு எடுத்து, சற்றே சாய்ந்த முகம். மென் நீல ஒளி பரவிய முகம், விழி ஓரம் நீல வைரம் ஒன்றின் ஒளித் தெறிப்பு. இரண்டே வினாடி வரும் ஷாட். ஸ்தம்பிக்க வைக்கும் ஷாட்.
அவர் எனது நண்பரின் மனைவி. நண்பருக்கு உடனடியாக போன் போட்டேன். காட்சியை சொல்லி ”அண்ணா சான்சே இல்லன்னா செம்ம அழகு. தேஞ்சு போன வார்த்த, ஆனா வேற வார்த்தையும் இல்ல செம்ம அழகு அவ்வளவுதான் சொல்ல முடியும்” நான் எப்போதும் இப்படித்தான். இடம் பொருள் ஏவல் இங்கிதம் ஏதும் அற்றவன்.
மாறாக என் நண்பர் பெருந்தன்மையானவர் அவர் ”அப்டியா டே சொல்ற. நீ சொன்னா சரியாத்தாண்டே இருக்கும். அப்புறம் எனக்கும் அப்டி ஒரு சந்தேகம் உண்டு. ஆனா பாத்துக்கோ அவ இப்பவே ஆட்டமா ஆடிக்கிட்டு இருக்கா, இது வேற அவ காதுல விழுந்தா சாமி ஆட்டம் ஆடுவா. அதனால இத அப்புடியே அமிக்கிடுவோம். அதுதான் எனக்கு சேப்டி கேட்டியா?” என்றார்.
இனிய மனிதர். ஒரு கணத்தில் சட்டென்று அனைத்தும் ஒரு வரிசையில் நின்றது. நீலம். அந்த மென் நீலம். அதுதான் அனைத்தையும் மாற்றி வைக்கிறது. பொதுவாக நீலம் என் அகத்துக்கு மிக்கப்பிடித்த நிறம். கருமைக்குள் ஒளி பரவும் வண்ணம். ராமர் நீலம். சட்டென மனதில் மயில் கழுத்து கதை விரிந்தது.
எத்தனை அழகான கதை அது? சாமிநாதன் பாடும் [அனேகமாக விரகதாபம்] வரி ஒன்றின் குறுக்கே , கச்சிதமாக சந்திரா அறிமுகம் ஆகிறாள்.அவளது மயில் கழுத்து வண்ணப் பட்டு.அவளது பொன் மூங்கில் போன்ற உடல். அவளது பச்சை நரம்போடும் கழுத்து பாலுவை ஈர்க்கிறது.
கழுகு மலை விழா, தென் மாவட்டத்துக்குரிய இனிப்பு சேவு கடைகளுடன் களை கட்டுகிறது. ராமன் கும்பகோணம் குறித்து நினைவு கூர்கிறார் ‘அங்கெல்லாம் விழான்னா வெத்தில பாக்குதான். பாக்குலையே ஏழெட்டு வகை கிடைக்கும்’. ஒரு ருசி, ஒரு வாசம் ஊர் மொத்தத்தையும் இழுத்து வந்து விடுகிறது.
பின் அக்ரகாரம். அங்கு சிறுவர்கள் வாழை மட்டையால் ஒருவரைஒருவர் அடித்து விளையாடும் சித்திரம். பின் நாயக்கர் வீடு என கதை வாசகரை ராமன்,மற்றும் பாலு உடன் அழைத்துக் கொண்டு, கிராமம், அக்ரகாரம், வீடு என்று நகர்கிறது.
சுப்பு ஐயர், பாலு இவர்களுக்கு இடையேயான முதல் உரையாடலே அந்த இருவரும் எத்தகைய ஆளுமை என்று காட்டி விடுகிறது. குறிப்பாக சுப்பு குடிக்கிறீங்களா என ஜாடையில் கேட்க, பாலு ‘நான் அதுக்காக வரல’ என பதிலுரைக்கும் இடம்.
சுப்பு ‘நாங்க ராமநாதன கொஞ்சம் கிண்டல் பண்ணுவோம், கோபம் வந்தா கொஞ்சம் தாம்பூலம் போட்டுக்கோங்கோ’ என்று பாலுவை வாரி விடும் இடம் சுப்புவின் ஆளுமையின் அடுத்த விரிவை காட்டுகிறது. பாலு சுப்புவின் கை விரல்களை நோக்குகிறார். ‘சந்திரா என் கூடத்தான் வந்தா’ என்று சுப்பு சொன்னதும் பாலு மீண்டும் சுப்புவின் கைவிரல்களை நோக்கும் இடம், மற்றொரு தளம்.
அங்கிருந்து ராமனின் தவிப்பின் சித்திரம் மெல்ல மெல்ல உருவாகி வந்து உக்கிரம் கொள்கிறது. பாலுவும் சந்திராவால் ‘சலனம்’கொண்டவராகத்தான் இருக்கிறார். இந்த சலனம் அலைக்கழிப்பாக பரிமாணம் பெறுவது, கழுத்து சொடுக்கி சந்திரா பாலுவை திரும்பி நோக்கும் போதுதான்.
இரவு நேர அக்ரகார வர்ணனை ரெம்ப்ரன்ட் ஓவியம் போல அழகு. தெருவில் அங்கங்கே விழுந்து கிடக்கும் வாழை மட்டை, சித்தரிப்பின் நம்பகத்தை இன்னும் உயர்த்துகிறது.
சந்திரா வருவது தெரிந்திருந்தால் ராமனை வந்திருக்க சொல்லி இருக்க மாட்டேன் என்கிறார் சாமிநாதன். ஆக இந்த இரவு ராமனுக்கு முக்கிய இரவு. இசை தரும் பித்தும், சந்த்ராவின் இருப்பு தரும் நிலை அழிவும் அவரை தத்தளிக்க வைக்கிறது. சுப்புவின் இசையும், சந்திராவின் புறங்கை ஸ்பரிசமும் பாலுவை ஸ்தம்பிக்க வைக்கிறது. ராமன் மூர்ச்சித்து விழுகிறார்.
பின்பு வருகிறது நீலத்தின் விஸ்வரூபம். நஞ்சின் வசீகர நீலம். எத்தனை நுட்பங்கள். சந்திராவுக்கு என்ன வேண்டும்? ஒரு சீனப் படம் பார்த்தேன் தற்காப்புக் காலையில் வெல்ல இயலாத நாயகன் முன் வில்லன் துப்பாக்கியை ஏந்துகிறான். நாயகன் சொல்கிறான். துப்பாகியால் கொல்ல மட்டுமே முடியும் வெல்ல முடியாது. ஆம் அதுதான் இங்கும். சந்திராவால் கலையை தீண்டவே முடியாது. எனவே அவளால் கலைஞ்சனை வெல்ல முடியாது. ஆனால் அவளால் கலைஞ்சனை காமத்தில் வீழ்த்தி ‘கொல்ல’ முடியும்.
ராமன் சொல்கிறார் ‘சுப்பு இதுக்கெல்லாம் அப்பார்ப் பட்டவர். அவர் கடலுக்குள்ள ஒரு தீவுல இருக்கார். அங்க யாராலையும் போக முடியாது.சந்திராவால கூட’
ராமன் சொல்வதாக கதையில் ஒரு வரி வருகிறது. ”பாடணும்னு ஆச. முடியல அதனால எழுதுறேன்” இங்குதான் ராமனின் அடிப்படை அலைகழிப்பு துவங்குகிறது. ராமன் தேடுவது என்ன? படைப்பாளிக்கும் படைப்புத் திறனுக்குமான ஆதார ஆற்றலைத்தானே? எழுத்து வழியே ராமன் அந்த ஆற்றலின் மூலத்தை தேடுகிறார். ராமனின் எழுத்தின் பின் உள்ளது காமம் அல்ல என பாலு கோட்பாடாக விளக்குகிறார். ராமன் ‘அப்டியா சொல்றேள்’ என்றுவிட்டு அமைதி ஆகி விடுகிறார்.
ஆக, பெண்கள் வழியே, தன் எழுத்தின் வழியே ராமன் தேடுவது எதை. சாமிநாதன் ராமன் குறித்து சொல்கிறார் ‘ஒரு மாதிரி நிலை இல்லாம பின்னால திரிவார். ஆனா அத்து மீறவும் மாட்டார்” இந்த அலைக்கழிப்பின் இறுதியை தான் அன்றைய இரவு சுப்பு பாடலின் வழியே ராமன் அடைகிறார். அது ஒரு ‘கண்டடைதல்’. ராமன் பாடகராக இருந்திருந்தால் இந்த கண்டடைதளுக்கு முன்பே வந்து சேர்ந்திருப்பார். சுப்புவின் பாடலின் வழியே தனது படைப்பு திறனின் முகம் என்ன என்று ராமன் ”அறிந்து” கொள்கிறார். கிட் டத்தட்ட ஒரு தியானி மெய்ம்மை எய்துவது போல.
மாலை அறைக்குள் இதைத்தான் பாலு கோட்பாடாக அதை ராமனுக்கு சொல்லுகிறார். அப்போது புரியாத ஒன்றை இப்போது ”அறிந்து ”கொள்கிறார் ராமன். ராமனின் கலைக்கும் பாலுவின் கலைக்கும் உள்ள வேறுபாடும் இதுதான். அறிந்துகொள்ளுதலுக்கும் புரிந்துகொள்ளுதலுக்கும் உள்ள வேறுபாடு.
ராமன் ”அறிந்து” கொண்டதை ஏன் பாலுவால் தீண்ட இயல வில்லை. ராமன் தன்னை ஒப்புக் கொடுக்கிறார். பாலு முன்பே சொல்லி விட்டார் ‘நான் அதுக்காக வரல’. கலை எனும் கடலில்தான் சுப்புவும் ,ராமனும் ,பாலுவும் மிதக்கிறார்கள். சுப்பு தீவாக. பாலு துருவக் கடல் பனிப் பாறையாக, ராமன் உப்புக் கட்டியாக.
நீலம் நஞ்சும் அமுதும் ஒன்றே ஆன நிறம். எனக்குப் பிடித்த நிறம்.
கடலூர் சீனு