«

»


Print this Post

அங்காடி தெரு,கடிதங்கள் 3


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
                                            நான் தமிழகத்தின் கடைகோடி(கன்னியாகுமரி ) மாவட்டத்தில் வாழ்பவன். நேற்று “அங்காடித்தெரு ” படம் பார்த்தேன். படத்தின் மொழி பயன்பாடு (திருநெல்வேலி தமிழ் ) என்னை மிகவும் ஒன்ற செய்துவிட்டது. மிகவும் அருமையான  ஒரு திரைப்படம். தமிழ் திரையுலகம் இன்னும் உயிருடன் உள்ளதை மீண்டும் ஊர்ஜிதம் செய்த ஒரு படம். வசந்தபாலனின் உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது. தங்களின் வசனங்கள் மிகக் கூர்மையாய் காட்சிக்குப் பொருத்தமானதாய் இருந்தது. நகைச்சுவை சொல்லவே தேவையில்லை. கின்டி கிழங்கு எடுத்துவிட்டீர்கள். 

 இந்த படம் வருடக் கணக்கில் அடைகாக்கப்பட்டு தாமதமாய் வெளியே வந்தாலும் “தங்ககுஞ்சாய்” வெளியே வந்துள்ளது. இந்த “தாமத” சாபக்கேடு வேறு  நல்ல படங்களுக்கும் வரகூடாது என்று பிராத்திக்கிறேன்.  மிகவும் நம்பிக்கையை ஊட்டிய ஒரு திரைப்படம். வசந்தபாலனின் அடுத்த படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருகிறேன் !! :)

பி கு :- அந்த ஊனமுற்றவரின் மனைவி அந்த குழந்தைப் பற்றி கூறும் காட்சி . நிஜமாகவே எனக்கு மயிர்கூச்சரிந்தன.  எப்படி இவ்வாறெல்லாம்  காட்சி யோசிக்கிறார்கள். மிகவும் அருமை. திரைஅரங்கில் கைதட்டு வெடித்தது.

நன்றி,
பிரவின் சி

அன்புள்ள ஜெ

அங்காடி தெரு படத்தை பார்த்து மகிழ்ந்து எழுதவில்லை. வருந்தி எழுதுகிறேன். ஒரு படம் படத்திலேயே முடிந்துபோனால் அது ஒரு விஷயம். ஆனால் இந்தப்படம் நம்மோடு வீட்டுக்கே வருகிறது. ராத்திரி தூங்குவதற்காக படுத்தால் பக்கத்திலேயே உக்காந்திருக்கிறது. மிகுந்த தொந்தரவுசெய்துவிட்டது ஜெ. எதுக்காக இந்த அளவுக்கு மனசை இது பாதிக்கிறது என்று நினைத்து பார்த்தேன். என்ன காரணம் என்றால் இன்றைக்குள்ள முக்கியமான ஒரு பிரச்சினையினை இந்தப்படம் காட்டுகிறது. அதாவது இப்போது தொழில்கள் வேகமாக வளர்கின்றன. பெரிய பெரிய கம்பெனிகள் வியாபாரத்துக்கு வந்துவிட்டன. கோடிக்கணக்கிலே வியாபாரம் ஆகிறது. சென்னையை சுத்தி முப்பது கார் கம்பெனிகள் இருக்கின்றன.

ஆனால் இதற்கு சமமாக மக்களுக்கு வளர்ச்சி இருக்கிறதா என்றால் கிடையாது. சென்னையிலே வாடகை கண்ணுக்கு எட்டாமல் போயிருக்கிறது. சம்பளத்திலே பாதியை கொடுத்தால்கூட இரண்டுரூம் வீடு கிடைக்காது. இது படித்தவர்களின் கதி. படிக்காதவர்களுக்கு அடிமைவேலைதான். கோயம்புத்தூரிலே இந்த கடைவேலையை விட பத்துமடங்கு கஷ்டப்படுகிறார்கள் பெண்கள். சுமங்கலி திட்டம் என்று ஒரு திட்டம். என்ன என்றால் பெண்கள் ஏழெட்டு வருஷம் இரவுபகல் பாராமல் வேலைசெய்தால் பத்துபவுனும் பட்டுப்புடவையும் கொடுப்பார்கள்.  ஆரம்பத்தில் ஒரு தொகை உண்டு. இந்தப்பணத்தை வட்டியுடன் கணக்குபோட்டல இது பெரிய மோசடி என்று தெரியும்.

ஆனாலும் சனங்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். என்ன காரணம் என்றால் இன்றைக்கு கிராமங்களிலே வேலை கிடையாது. விவசாயம் இல்லை. கொஞ்சம் படித்தால் எங்கே போவது என்று தெரியாது. இப்படி தமிழ் ஜனங்கள் எங்கேயெல்லாம் கிடக்கிறார்கள். எல்லாவற்றையும் சிந்திக்க வைத்துவிடுகிறது இந்தச் சினிமா. இப்படியே நம்முடைய நாடு வளர்ந்திகொண்டே போனால் பஞ்சப்பராரிகள் ஒருபக்கம் கோடீஸ¤வரர்கள் ஒருபக்கம் என்றுதான் இருப்பார்கள். அசுர வேகத்திலே போகக்கூடிய நம்முடைய நாட்டைப் பார்த்து போகிற திசை சரிதானா பார் என்று சொல்லுவதைப்போல இருக்கிறது அங்காடி தெரு. நான் உட்பட நம்முடைய இடதுசாரிகள் எல்லாம் பார்த்தாகவேண்டிய படம். செய்யவேண்டிய வேலை எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்துகொள்ள உதவக்கூடிய படம்.

வசந்தபாலனுக்கும் உங்களுக்கும் நன்றி.

சரவணன் ,கோவை

அன்புள்ள ஜெயமோகன் அண்ணனுக்கு ,
                                           வணக்கம். நேற்று மற்றும் அதற்கு முந்தயநாள் இரவுக்காட்சி என “அங்காடி தெரு ” படத்தினை  இரண்டுமுறை பார்த்தாகிவிட்டது .  கடந்த  நான்கு மாதத்துக்கு பிறகு நான் பார்த்த தமிழ் படம் இது . நான் உங்களை எனக்கு மிகவும் நெருக்கமானவராக பலமுறை உணர்ந்திருக்கிறேன்.அந்த ஈர்போடுதான் நான் ( உங்கள் உரையாடல் என்பதால்) இந்த படத்துக்கு சென்றேன்.

      மிக சிறிய கதைகளத்தில்  ( ஜவுளி கடை, இட்ட மொழி கிராமம்) படம் மிக சிறப்பாக இயக்கப்பட்டுள்ளது.

     செரி பழத்தினை பிடுங்கி போட்டிபோட்டு உண்ணும் லிங்க் நண்பர்களுக்கு பின்புறமாக வளர்ந்திருக்கும் கள்ளி செடி….

     ப்ரஹமான வீட்டை விட்டு வெளியேறும் லிங்கு , கனி ..மற்றும் வயதுக்கு வந்த கனியின் தங்கை இவர்களுக்கு எதிராக  பச்சை ,வெள்ளை சீருடை அணிந்து  கையில் ஸ்கூட்டியோடு  வரும் மாணவிகள் ………

காலிழந்த கதாநாயகியை மணக்க சம்மதித்து கைபிடிக்கும் இருவரையும் கடந்துசெல்லும் உறவினரற்ற பெண் மற்றும் செவிலி… போன்ற ஒப்பீடுகள்.மிக அருமை…

கனியின் தகப்பனான விக்ரமாதித்தனின் இயலாமை……….  குள்ளர் ஒருவரின் கண்ணீர்…….  ……….சோபி..ஊத்தவாயன்..சங்கரபாண்டி….மாடியிலிருந்து  விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் சகோதரி..கண்ணில்லாத வியாபாரி..என அணைத்து பாத்திரங்களும் இதயம் முழுவதும் நிறைந்து கனக்கிறது…

மிகசிறப்பாகவும் ….. சிரத்தையுடனும் …..சமூக அக்கறையுள்ள படத்தினை செதுக்கி இருக்கிற வசந்த பாலனின் உழைப்பிற்கு  வாழ்த்துக்கள்  மற்றும் நன்றி..
சில மிகைப்படுத்தப்பட்ட ஜவுளி கடை காட்சிகள் இருக்கிறது………. சரி பரவாயில்லை..

உங்களின் வசனம் வெகு இயல்பாக சோடனையற்று  மிளிர்கிறது…. “காதல் கடிதத்தில் கடவுள் வாழ்த்து “…..”சில்லாடி” போன்ற சொல்லறிமுகம்…  ” எப்ப சங்கரபாண்டி காதலிக்கலைன்னு சொன்னானோ அப்பவே அவ செத்துடா ….விழுந்தது அவ பொணம்தான்”….இவை அனைத்திற்கும் மேலாக ….  ” கனி இருப்ப காய் கவர்ந்தற்று“..உங்கள் சிந்தனைக்கு  சிரம் தாழ்கிறேன் அண்ணாச்சி …

மிக்க நட்புடன்,
ப.சுதகார்.
பட்டுக்கோட்டை.

அன்புள்ள ஜெயமோகன்

அங்காடி தெருவை பார்த்தேன். நான் சினிமா அதிகமாகப் பார்ப்பதில்லை. என் தொழில் அப்படி. உங்கள் இணையதளத்தை வாசிப்பேன். மதிப்புரைகளை கண்டுதான் படம் பார்க்கப்போனேன். கடுமையான வெயிலில் அரங்குக்குள்ளே உட்கார்ந்து படம் பார்ப்பது கொடுமையாக இருந்தது. முடிந்தபிறகு பயங்கரமான தலைவலி இருந்தது. ஆனால் நல்ல கூட்டம் இருந்தது. மக்கள் மிகுந்த மகிழ்ச்சியாக படத்தைப் பார்க்கிறார்கள். கண்ணீர்விட்டு அழுபவர்களைக்கூட பார்த்தேன். ஜனங்கள் அவர்களுடைய வாழ்க்கையை படத்திலே சொன்னால் அதைப் பார்க்கமாட்டார்கள் என்று இல்லை. சரியாகச் சொன்னால் பார்க்கத்தான் செய்வார்கள். படம் பார்க்கவந்தவர்களில் நிறையபேர் ஏழை ஜனங்கள் என்று தெரிந்தது.

எனக்கும்படம் நன்றாக பிடித்திருந்தது. முக்கியமான படம். சில குறைகள் என்றால் ஜாரிங் ஆன சிலஷாட்டுகளும் கட்டுகளும் இருந்தன. அவை படத்தை சுழுகமாக ஓடமுடியாமல் செய்தன. அப்புறம் பின்னணி இசை மிகவும் செயற்கையாக இருந்தது. சௌந்தரபாண்டி என்ற கதாபாத்திரம் அழும் காட்சி சரியாக வரவில்லை.  சில இடங்களில் அழுகை தொடர்ச்சியாக வந்தது மாதிரி இருந்தது. அதனால் சிலகாட்சிகள் எடுபடாமல் போய்விட்டன

மற்றபடி படத்தில் நடித்த எல்லாருமே அற்புதமாக நடித்திருந்தார்கள். கனி, லிங்கு,முதலாளி,கருங்காலி அந்த குண்டுப்பையன் எல்லாருமே நன்றாகச் செய்திருந்தார்கள். கனியின் அப்பா சொல்லும் வசனம் மனசை நெகிழச்செய்துவிட்டது. நான் இந்த வீட்டுவேலை ஒர்க்ஷாப் வேலைசெய்யும் பையன்களைப் பார்ப்பேன். நாக்குட்டி மாதிரி இருப்பார்கள். நாய் குட்டிகளை குப்பைக்கூடை அருகே கொண்டு போடுவதுமாதிரித்தானே கொண்டு போட்டுட்டு போகிறார்கள். மனசை மிகவும் பாதித்தது அந்த வரியும் அந்த பெரியவரின் அழுகையும்

நிறைய காட்சிகள் மனதை நெகிழ வைத்தன. எல்லாம் நம்ம ஊர் கருவாச்சி பையன்கள். ஆனால் அவர்கள் பௌடர் போடும் காட்சி சிரிப்புக்காக காட்டப்பட்டாலும் மனசை நெகிழச்செய்தது. பெரிய நகரத்தில் அவர்களுக்கு நிறமும் தோற்றமும் பெரிய காம்ப்ளெக்ஸைத்தான் கொடுக்கும். இயக்குநர் ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமாகச் செய்திருக்கிறார்.

பலமான படம். இப்படி நிறைய படங்கள் வரவேண்டும்

பாலசுப்ரமணியம்

அங்காடி தெரு கடிதங்கள் 2

அங்காடித்தெரு கடிதங்கள்

அங்காடித்தெரு இன்று

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7009/

10 comments

Skip to comment form

 1. vengku

  அன்புள்ள ஜெ

  அங்காடித்தெரு பார்த்தேன். இந்த 5 வருஷத்தில் நான் ஒரு படத்தை பார்த்து கண்கலங்கியது இதுவே முதல் முறை. என்னுடைய மனைவி அழுதுகொண்டே இருந்தள். எதற்கு அழுகிறாய் என்றேன். மக்கல் கஷ்டப்படுவதை நினைத்து அழவில்லை. எப்படியும் அவர்கள் அதிலே சந்தோஷமாக இருக்கிறார்களே என்று நினைத்து அழுதேன் என்று சொன்னாள். எல்லா கதாபாத்திரமும் யதார்த்தம். எல்லா காட்சிகளும் யதார்த்தம். வசனங்கள் மனதிலேயே நிற்கின்றன. அதிலும் விக்கிரமாதித்த்யன் கவிஞர் சொல்லும் வசனம் டாப். நாய் குட்டிகளை கொண்டு போடுறது மாதிரி வாழறேன். நாய் சென்மம். என்ன ஒரு இழிந்த வாழ்க்கை

  தமிழி சினிமா தமிழ் மக்களுக்கு எப்படி நேர்மையாக இருக்க முடியும் என்று காட்டிவிட்டார் வசந்தபாலன்.வசந்தபாலனுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கவும்

 2. Arangasamy.K.V

  முதலில் வசந்தபாலனுக்கு ஓர் அழுத்தமான கைகுலுக்கல்.

  முதலாளித்துவமும் அதிகாரமும் அதன் பரிவாரங்களும் கைகோர்த்துக் கொண்டு எளிய மனிதர்களின் உழைப்பையும் வாழ்க்கையையும் சுரண்டிக் கொழுப்பதை தைரியமாக அப்பட்டமாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர். இவர் காட்டியிருப்பது பனியின் முனையைத்தான் என்றாலும் பெருங்கடலின் ஆழத்தில் இன்னும் எத்தனை சுறா, திமிங்கலங்களின் கோரத்தாண்டவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ என்பதை நாம் யூகிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

  http://pitchaipathiram.blogspot.com/2010/03/blog-post_30.html

  வசந்தபாலன்+ஜெயமோகன்=100%

  http://www.ithutamil.com/[email protected]&postid=d1304ab9-ea73-402c-8a87-c2cdabdd543c

 3. ஜெயமோகன்

  அன்பு ஜெயமோகன் அவர்களே!!!

  அங்காடித்தெரு படம் பார்த்தேன். இடைவேளையின் போதே வீட்டுக்கு வந்துவிடலாமா என்று தோன்றியது. அந்த அளவிற்கு படத்தின் காட்சிகள் என்னை நிம்மதி இழக்க செய்தன. பிற்பாதி பார்த்து கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு மேல் அதன் தாக்கம் இருந்தது. அன்று இரவு என்னால் உறங்க முடியவில்லை.

  நல்லதொரு திரைப்படத்தை கொடுத்த உங்கள் குழுவுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். ஆனால் ஒரே ஒரு கேள்வி….

  வறுமையை காரணம் காட்டி அங்கு வேலை செய்யும் இருநூறு பெண்களையும் அடிமைகள் போல் சித்தரித்தது எந்த வகையில் ஞாயம். அவர்கள் உண்மையில் கொத்தடிமைகள் அல்ல. சம்பளத்திற்காக கொத்தடிமைகள் போல் நடத்தப்படுபவர்கள். அந்த இருநூறு பெண்களும் வறுமையின் மித்தம் அங்கு நடக்கும் அந்நியாயங்களை எல்லாம் சகித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்று ஏன் காட்சிபடுத்தினீர்கள்.

  ஒருவராவது அதற்கு எதிராய் குரல் கொடுத்து தோற்று போபவராகவோ அல்லது அந்த அநீதிகளை தாங்க முடியாமல் வறுமையின் கோரத்தை விட மானம் ரோஷமே முக்கியம் என்று கருதி மாண்டு போவதாகவோ ஏன் சித்தரிக்கவில்லை.

  அது தானே யதார்த்தம். அண்ணாச்சி கடைகளில் இப்படி துன்பப்படுவோரில் 99% பேரும் அதை சகித்துக்கொண்டு போகலாம்.ஆனால் ஒரு பெண்ணாவது அதிலிருந்து விடுபட நினைக்கமாட்டாளா?

  இப்படி மொத்தமாக அந்த ஏழை பெண்களை அடிமைகள் போல் சித்தரித்ததும் அவர்கள் எல்லாம் வறுமையின் காரணமாக எந்த வித அநீதிகளையும் பணத்திற்காக தாங்கிக்கொள்வார்கள் என்பது போன்ற சித்தரிப்பு என்னை பெரிதும் பாதித்தது.
  “நான் கடவுள்” திரைப்படத்தில் பூஜா இவர்களை விட கஷ்டங்களை அனுபவிக்கும் கதாபாத்திரம். அவள் கூட தன்னை வேறு ஒருவனுக்கு விற்கிறார்கள் என்று தெரிந்தவுடன் அதிலிருந்து விடுபட போராடுகிறாள். அந்த போராட்ட குணம் கூட அங்காடி தெரு பெண்களுக்கு இல்லாமல் சித்தரித்திருப்பது நிஜமாகவே என்னை பெரிதும் வேதனை அடைய செய்துள்ளது.

  இடைவேளைக்கு முன்பு ஒரு பெண் தற்கொலை செய்துகொள்வதாக காட்சி அமைத்திருந்தீர்கள். அவள் தன் காதலன் தன்னை வேசி என்று சொன்ன வலி தாங்காமல் மரிக்கிறாள். அதற்கு பதிலாக அந்த கடையில் நடக்கும் அநீதிகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்வதாய் சித்தரித்து இருந்தால் அந்த பெண்களை நினைத்து நெஞ்சை நிமிர்த்திக்கொள்ள முடிந்திருக்கும். மாறாக அருவின் கீழ் நோக்கிய வீழ்ச்சி போல் அந்த கதாபாத்திரங்களின் சப்மிஸிவ் சித்தரிப்புகள் என்னை எரிச்சலடைய செய்தது.

  இதை பற்றி முன்னரே நிச்சயம் விவாதித்து இருப்பீர்கள். எனினும் காட்சி அமைப்புகள் அப்படி சித்தரிக்காதது உங்களை பொறுத்தவரை எவ்வாறு ஞாயப்படுத்துவீர்கள்.

  அதி மேதாவியாய் கேள்வி கேட்பதாய் நினைக்க வேண்டாம்.மனதில் தோன்றியதை சொல்லியிருக்கிறேன்.

  மற்றபடி படம் சமுதாயத்தின் மீது நேரடியான ஒரு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும்.

  இதை இவ்வளவு தைரியமாக கையாண்டு வெற்றி பெற்றமைக்கு என் பாராட்டுக்கள். நான் குறையை மட்டும் சுட்டிக்காட்டுவதாய் நினைக்க வேண்டாம். நிறைகள் என் மனதின் ஆழத்தில் போய் தங்கிவிட்டன. குறைகளே கொப்பளித்துக்கொண்டிருக்கின்றன. உங்களை போல எழுத்தாளர்கள் திரைப்படங்களில் சம்மந்தப்படுவது எங்களை போன்றோர் தங்கள் ஐயங்களை கேட்டு தெளிவு பெற உதவுகிறது. அந்த வகையில் மிக்க நன்றி.

  நேரமிருப்பின்….கேள்வியில் தரம் இருப்பின்…பதில் சொல்லவும்.

  அன்புடன்.
  விசா

  (நானும் உங்க ஊர் காரன் தான் அய்யா மார்த்தாண்டம். அதை பற்றி நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. பிறகு எழுதுகிறேன்)

 4. ramji_yahoo

  அருமையான படம் .

  ஆனால் இந்த படம் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறதா. உண்மையில் ரசிகர்களை பாதித்து இருந்தால், அந்த அங்காடிகளுக்கு வரும் வாடிக்கையாளர் கூட்டம் பத்து சதவீதம் குறைந்து இருக்க வேண்டும், அல்லது அங்கு வேலை பார்க்கும் இரண்டு சதவீதம் ஊழியர்களாவது ராஜினாமா செய்து வேற வேலை, வியாபரத்திற்கு சென்று இருக்க வேண்டும்.

  இன்றும் அந்த அங்காடிக்கு கூட்டம் போகத்தான் செய்கிறது. மற்ற அங்காடிகளை விட தரம் குறைந்தாலும் பரவ இல்லை, விலை இரண்டு ரூபாய் குறைவு என்று செல்லும் கூட்டம் நம் தமிழ் கூட்டம்.

  இந்த மாதிரி அங்காடிகள், மென்பொருள் நிறுவனங்களில் கப்பம் வாங்கி கொண்டு , கம்ம்யுனிச கட்சிகளும் இந்த அங்காடிகளில் தொழில் சங்கம் ஆரம்பிக்க எந்த வித முயற்சியும் செய்வது இல்லை.

 5. ஜெயமோகன்

  திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

  தாங்களது பங்களிப்பில் வெளிவந்த அங்காடித்தெரு படத்தை பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(28/3/10) பார்த்தேன். இரண்டு நாட்களாக தூக்கம் வரவில்லை, எப்போதும் நினைவலையில் நின்று கொண்டு நிழல் போல துரத்திக்கொண்டிருக்கிறது அங்காடித்தெரு.

  படத்தின் நாயகன் அந்த உணவுக்கூடத்தை பார்க்கும் பார்வயைப்போல ஆறு வருடங்களுக்கு முன்பு திருப்பூரில் உள்ள ஏற்றுமதி கம்பெனிகளில் உள்ள உணவுக்கூடத்தை கண்டு மிரண்டவன், அதை மீண்டும் காட்சியாக பார்க்கும் போது அழுதே தொலைத்து விட்டேன். திருப்பூரில் நடக்கும் கொடுமைகள் இதைவிட பெரியது, தென்மாவட்டத்து ஆண்களை உழைப்பால் பிழிவதும் கேரள பெண்களை உடலால் பிழிவதும் இந்திய ஏற்றுமதி புள்ளிவிவரப்பட்டியலுக்குள் புதைந்து போய்விடுகிறது.

  இதை அண்ணாச்சிகளுக்கு எதிராக படமாக பார்க்கமல் விழிம்புநிலை மனிதர்களின் விடியலாகவே பார்க்க‌த்தோன்றுகிறது. அங்காடித்தெருவிலுள்ள துணிக்கடைகளின் துகிலை உரியும் உங்கள் கூட்டணிதான் இட்டமொழியின் இன்னல்களையும் இனம் காட்டுகிறது. HATS OFF VASANTHA BALAN AND JAYAMOHAN.

  இந்த படத்தை எவ்வளவு நுட்பமாக செதுக்கியிருக்கிறார்கள் என்பதை படத்திலுள்ள கதாப்பாத்திரங்களுக்கு சூட்டியுள்ள பெயரின் மூலம் என்னால் உணர்வுப்பூர்வமாக அடையாளம் கண்டுகொள்ளமுடிகிறது.

  இராஜபாளையம் அருகே உள்ள மம்சாபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு சிறிய தெருவிற்கு பெயர் சேர்மக்கனி நாடார் தெரு. அந்த தெருவில் வசிக்கும், தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனாரை குலதெய்வமாக கும்பிடும் குடும்பங்களில் உங்கள் கதாப்பாத்திரத்திற்கு சூட்டியிருக்கும் பெயர்கள் இன்றளவிலும் பிரபலம் (சேர்மக்கனி, சேர்மச்சாமி,சேர்மத்தாயி, ஜோதிலிங்கம், ஜோதிமணி, வண்ணியராஜ், தேரிராஜன், தேரிப்பழம், தேரிச்செல்வம்……). இந்த குடுப்பத்தை சேர்ந்தவர்கள் அந்தக்காலத்தில் கருவாடு வியாபாரம் செய்வதற்காக தேரிக்குடியிருப்பிலிருந்த்து இந்த பகுதிக்கு வந்தவர்கள். கதாப்பாத்திரத்திற்கு பெயர் வைப்பதில் கூட எவ்வளவு கவனம்!

  ஜெயமோகன் சார் இந்த படத்திற்கு நீங்கள் உரையாடல் மட்டும் எழுதவில்லை உணர்வாய் இருந்துள்ளீர்கள்.

  அன்புடன்

  காத்தவராயன்

 6. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெ. வணக்கம்.

  அங்காடித்தெரு படம் பார்த்து விட்டு உங்களிடம் சிறிது நேரம் பேசமுடிந்தது. படம் பற்றி நிறைய எழுத வேண்டும் நினைத்து வலைக்குள் நுழைந்தால் நான் எழுத நினைத்த பலவற்றையும் பலரும் எழுதி விட்டார்கள். இருந்தாலும் என் மனதில் பட்ட சில விஷயங்களை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

  நல்ல படம் தரமான படம்.. நுணுக்கமான காட்சியமைப்புகள் கொண்ட படம்.

  கடையில் வேலை பார்க்கும் பெண்கள் முகத்தில் லேசான வியர்வை தென்படும். அது இந்த படத்தில் இயல்பாக இருந்தது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

  இருந்தும் சொல்ல வேண்டிய விஷயம். இந்த படத்தில் இரண்டு இடங்களில் படத்தில் யதார்த்தமாக காட்டுகிறேன் என்று வக்கிரத்தை டைரக்டர் நினைத்திருந்தால் காண்பித்திருக்கலாம்.

  1.

  ‘மாரைக்கசக்கினான்’ என்று அஞ்சலி சொல்லும் போது நடந்த நிகழ்ச்சியை நினைத்து பார்வையாளர்களின் மனது வேதனைப்படும். சே பாவப்பட்ட பொண்ணப்போய் இப்படிப்பண்ணிட்டானே என ரசிகர்கள் மனது துணுக்குற்று கருங்காலியை சபிக்கும். டைரக்டர் யாதார்த்தம் என்று வன்முறையாக இந்த காட்சியை வைத்திருந்தால் காட்சியில் ஆபாசம் வெளிப்பட்டிருக்கும். இந்த இடத்தில் உங்களின் நான்கு வார்த்தை வசனம் தான் பார்வையாளனுக்கு வேதனையை உணரும் அனுபவத்தைக்கொடுத்திருக்கும்.

  2.வசந்தபாலனைத்தவிர வேறு சில டைரக்க்டர்ராக இருந்தால் சினேகா ஷூட்டிங் நடக்கும்போது இரவில் கடையில் மாட்டிக்கொள்பவர்கள் காட்சியைக்கூட உறவுக்காட்சியாக.. நடந்ததை யதார்த்தமாக காண்பிக்கிறேன் என‌ ஆபாசத்தை அள்ளித்தெளித்திருப்பார்கள். பெரிய டைரக்டர்கள் என மார்தட்டிக்கொள்ளும் பல டைரக்டர்களின் படத்தில் யதார்த்தம் என்று கூறி ஆபாசக காட்சிகளைத்தாராளமாககாணலாம்.

  மொத்தத்தில் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு மறக்கமுடியாத படங்களில் ஒன்றாக அங்காடித்தெரு வெகுநாட்கள் பேசப்படும். இந்த சினிமாவுக்கு பலம் நீங்கள்தான். புகழ்ச்சிக்காகசொல்லவில்லை. அந்த படத்தை உணர்ந்து பார்த்ததால்சொல்கிறேன்.

  நான் தனியாகச்சென்று படம் பார்த்து விட்டேன். இனி மனைவியுடன் சென்று பார்க்க வேண்டும்.

  அன்புடன்,

  திருவட்டாறு சிந்துகுமார்

  [email protected]

 7. tdvel

  இன்னொரு விஷயமும் யாரும் கூறவில்லை. நாயகனும் நாயகியும் தங்கள் முதல் காதல் அனுபவங்களை பகிரிந்துகொள்ளல் வெறும் நகைச்சுவைக்காக அல்ல. கதை நாயகன் தன் முதற்காதலியை அற்பமான விஷயத்திற்காக விட்டுவிடுகிறான். அதைப்போல் இப்போதும் விட்டுவிடுவானா என்று நாயகியின் உள்மனதில் ஒரு உறுத்தல் இருப்பதால்தான் நாயகனின் நண்பன் சொல்வதை சரிபார்க்காமலேயே அதை நம்பிவிடுகிறாள். அவளுடைய முதல் காதலும் கிட்டத்தட்ட இதே காரணத்தினால் தான் நின்றுபோகிறது.

 8. nm_vassan

  அன்பின் ஜெயமோகன்

  தமிழ்த் திரைப்படத்தில் தூளியும் எனக்கு ஆர்வமில்லை. அங்காடித் தெரு படம், உங்களைப் போன்று மன உழைப்பில் முன்னோடியானவருக்கு வெற்றி என்பதில் மகிழ்ச்சி.

  ஒரு தொழில் நிறுவன உரிமையாளன்/முதலீட்டாளன் என்ற வகையில் – இணையத்தில் தமிழ்ப்படங்களை அனுமதியின்றி வலையேற்றும் சிறுமதியாளர்களைக் கண்டு கோபம் வருகிறது.

  அ.தெரு படத் தயாரிப்பாளர் கவனத்திற்கு இது:

  http://www.***.com/video/angadi-theru/

  வாசன்
  நியு மெக்ஸிக்கோ/யூ எஸ் ஏ

  கொள்ளிடம்

 9. V.Ganesh

  டியர் ஜெயமோகன்,
  நேற்று பொதிகையில் இப்படத்தின் நேரலை நிகழ்ச்சி பார்த்தேன் ( சானல் மாற்றும் போழ்து கிடைத்தது). அது என்ன நீங்க வெக்க பட்டு ஒரு ஓரத்தில. ஆனா மட்டும் போன் ட்ரை பண்ணி பாத்தேன். ஒரு முறை பேசி விடலாம் அப்படியே ஒங்கள ஒழுங்கா ஒக்கரா சொல்லலாம் என்றும். :) லைன் கிடைக்கவில்லை. TV கு வரமாட்டேன் என்று சொல்லி விட்டு இது வேறயா ( எப்படி நம்ம கன்னியாகுமரி குசும்பு)

 10. Srinivas

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

  முதலில் உங்களுக்கும், திரு. வசந்தபாலனுக்கும் இப்படி ஒரு நல்ல அருமையான திரைப்படம் அளித்ததற்கு மிக்க நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.

  முன்று தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தை பார்த்தேன், எதோ சாதாரண படமாக இருக்கும் என்று தான் தற்செயலாக பார்த்தேன், ஆனால் என்னால் முன்று தினங்களாக, என்னால் எதிலும் சரியாக செயல் பட முடியவில்லை, சரியாக உறங்க கூட முடியவில்லை, இந்த படம் என்னுள் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவேயில்லை.
  நம்முள் பலர் பலமுறை இத்தகைய மனிதர்களை நம் வாழ்கையில் கடந்து சென்று இருப்போம், ஆனால் இவர்களுக்குள் இப்படி ஒரு உலகம் இருக்கும் என்று பலரும் எண்ணி இருக்கமாட்டார்கள், அவர்களை திரும்பி பார்க்கவைத்த திரு. வசந்தபாலனுக்கும், உங்களுக்கும் பல நன்றி கலந்த வாழ்த்துக்கள். உங்களுடைய வசனம் இந்த கதைக்கு மேலும் சிறப்பாக அமைத்துள்ளது.

  படம் பார்த்தவர்களை மிகவும் பாதிக்கவைத்து, மிகவும் சிந்தனை செய்ய வைத்ததற்கு உங்களுடைய கூர்மையான வசனங்கள் மட்டுமே காரணம் என்று நம்புகிறேன். அவற்றுள் பின்வரும் சில வசனங்கள் எல்லோர் மனதிலும் ஈட்டியை போல் சொருகியதை உணரமுடிந்தது….

  1 ‘மாரைக்கசக்கினான்’ பேசாம நின்னே – பிறகு மண்எண்ணெய் ஊத்தி தீ குளிக்கவா?….சோத்துக்கு இல்லாம எச்சி பொளப்புக்கு வந்தாச்சி….. என்று சொல்லிக்கொண்டு மேரூன் கலர்ல காட்டன் பொடவை காமிக்கவா? – என்று தன் வேலையை பார்க்கும் பொழுது அவளின் வறுமை நிலைய தெள்ளதெளிவாக காண்பித்தது…

  2 செல்வராணி சாகும் தருவாயில் பேசும் கடைசி வார்த்தைகள்…

  3 உலகத்துல இந்த ஆம்பளகிட்டயாவது மானம், ரோசத்தோட இருக்கிறேன்…

  4 நம்மள மாதிரி ஆளுங்க எல்லாம் யோசிச்சி யோசிச்சி தான் வாழணும்…

  5 மாதவரத்தில் தங்கச்சிக்காரியின் எஜமானியம்மாவின் கதாபத்திரத்தின் செயல்கள்…அதற்கு கனியிடம் இருந்து வரும் வசனங்கள் மிகவும் நச்….

  6 அந்தக் குள்ள மனிதனுக்கு குழந்தை பிறந்ததும் அவன் மனைவி பேசும் வசனங்கள்……..இன்னும் பல…..

  உங்களுக்கே உரித்தான பாணியில் எழுதிய சில காதல்/குறும்பு மற்றும் கிராமத்து வசனங்கள்…

  7 “என் தங்கச்சி உன்னை யாருன்னு கேட்டா?”

  “அதுக்கு நீ என்ன சொன்ன?”

  “ம்ம்ம்.. சிரிச்சேன்”

  8 கனிஇருப்ப காய் கவர்தற்று… :)

  9 கக்கூஸ் கழுவியே முன்னேற ஆரம்பிக்கும் அந்த ஆசாமி…பழைய சட்டையை துவைத்து விற்கும் அந்த ஆசாமி…

  10 ”ஏலே நில்லுலே ராகு காலத்திலே பொறந்தவனே

  நீருல்லாவே நேரம் பாத்திருக்கணும்?”

  11 யானை வாழும் காட்டிலேதான் எறும்பும் வாழுது…

  12 விக்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்ச்வன்…

  13 கவிஞர் முகத்தை பாத்தியா, அடுத்து பத்தாம் கிளாச் கடவுள் வாழ்த்தை எழுதி வச்சிருக்க போறாரு…

  இவ்வாறு சொல்லி பாராட்டி கொண்டே போகலாம்……

  மேலும் தமிழ் சினிமாவில் இதைபோல் ஒரு நல்ல சமுதாய சிந்தனை உள்ள நல்ல படங்களை நமது தமிழ் இயக்குனர்கள் மற்றும் கதாசிரியர்கள்/ வசனகர்த்தாக்களும் தர முன்வரவேண்டும் என்று எதிர்பார்க்கும் தமிழ் ரசிகன். வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  ஸ்ரீநிவாஸ்

Comments have been disabled.