அன்பான ஜெயமோகன்,
உங்களின் அன்பான கடிதம் கிடைத்தது.அக்கடிதம் எனக்கோர் புது உற்சாகம் அளித்தது மிக்க. நன்றி. இப்போது பூரண சுகம் பழைய மௌனகுரு ஆகிவிட்டேன்.எனினும் அவதானத்துடன் செயல்படுகிறேன்.புதியதொரு வீடு தயாரிப்பு வேலைகளை மெதுவாக ஆரம்பித்துள்ளேன்.
இத்துடன் 2010 இராவணேசன் பற்றி பேராசிரியர் அனஸ் எழுதிய கட்டுரையை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன் வாசித்துப்பாருங்கள்.உங்களுக்கு நான் தந்த இராவணேசன் DVD 2005 இல் நான்தயாரித்த இராவணேசன் DVD ஆகும்.அதுஉங்களை அவ்வளவு கவர்ந்திராது ..2010 தயாரிப்பு வித்தியாசமானது.கூடிய கலை நயம் கொண்டது.அதற்கான உழைப்பு அதிகம்
இராவணேசனை நான் 2005,2010,2014ஆகிய ஆண்டுகளில் தயாரித்தேன். 2005இல் இராவணேசன் நாடகம் இராவணன்மீது நாடகம் குவிமையம் கொண்டது.2010இல்இராவணேசன் நாடகம் மண்டொதரி மீது நாடகம் குவி மையம் கொண்டது.2014இல்இராவணேசன் நாடகம் இந்திரஜித் மீது நாடகம் குவி மையம் கொண்டது.போரைஎதிர்கொண்ட விதத்தில் மூவரும் வேறுபடுகிறார்கள்
மௌனகுரு இராவணேசனில் மாத்திரம்தான் நிற்கிறார்.இவருக்கு வேறு எதுவும் வராதா என்றொரு குற்றச் சாட்டை என்மீது அதிருப்தி அல்லது காழ்ப்பு கொண்டஎனது மாணவர்கள் சிலர்வைக்கிறார்கள். இதுவரை ஆக்கபூர்வமாக எதையும் படைக்காமல் இவர்கள் இப்படி கூறுகிறார்கள்.அவர்களையும் நான் புரிந்து கொள்கிறேன். அழித்து அழித்து அழகாக உருவாக்குதல் முழுமையை நோக்கிய பயணம் அது.அதில் கிடைக்கும் இன்பமே அலாதி.அது ஒரு வகைப் படைபின்பம்
2000 தொடக்கம் 2014 வரை 4 தலைமுறைகளூடாக இராவணேசனை மேடையிட்டு வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு புதுப்படைப்பு.ஒன்றுபோல ஒன்றில்லை.
கருவில் பெரு மாற்றம்.உருவில் சிற்சில மாற்றங்கள். சிங்கபூரில் காணொளியாக இது இரு தடவைகள் அகலத் திரையில் காட்டப்பட்டது.அங்கு இதனை அவதானித்த பேராசிரியர் பெர்னாற் பானீ இதனை ஒரு வளர் இதிகாச நாடகம்என வர்ணித்தார்.
நமது நண்பர்சகங்களுக்கு இது புரியமாட்டேன் என்கிறது .என்ன செய்ய முடியும்.?நமது சிலரின்பார்வை எல்லைஅவ்வளவுதான்.
இது பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதவுள்ளேன்.2010 இல் வந்த பேராசிரிய அனாசின் கட்டுரையும் 2010 இராவணேசனின் சில படங்களும் இத்துடன் இணைத்துள்ளேன்
2014 இராவணேசன் பற்றிய விமரசனமும் அதன் படங்களும் பின்னர் அனுப்புகிறேன்
இப்படங்கள் நாடகத்தின் தன்மையை உங்களுக்கு விளக்கும்.வீட்டில் அனைவருக்கும் என் அன்புரைக்குக
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மௌனகுரு அவர்களுக்கு,
செவ்வியல் கலைகளில் அல்லது நாட்டார்கலைகளில் பழக்கம் இல்லாமல் வணிகக் கலைகளில் மட்டுமே புழங்கி வருபவர்கள் கலைஞர்கள் மேல் எப்போதுமே சொல்லிவரக்கூடிய குற்றச்சாட்டுதான் உங்கள் மேல் சுமத்தப்படுகிறது.
அந்தக் குற்றச்சாட்டு வேறொருவகையில் இலக்கியத்திலும் ஒலிக்கும். கவிதை போன்ற நுண்ணிய கலைவடிவங்களைக் கையாள்கிறவர்களிடம் வணிக இலக்கியத்தில் ஊறியவர்கள் அதைச் சொல்வார்கள். திரும்பத்திரும்ப ஒன்றையே செய்கிறீர்கள் என்பார்கள். சமீபத்தில் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் பற்றிய விவாதத்தில் அதைக் குறிப்பிட்டேன்
வணிகக் கலை என்பது அக்கலைக்கென தனியான ரசனைப் பயிற்சி ஏதும் இல்லாதவர்களும், பொதுவான கேளிக்கை மனநிலை மட்டும் கொண்டவர்களும், பலதரப்பட்டவர்களுமான ரசிகர்களை நோக்கி முன்வைக்கப்படுகிறது. அதற்கு முன் உள்ள முதன்மையான அறைகூவல் என்பது ரசிகனின் கவனத்தை தன்பால் ஈர்ப்பதும் அதை கடைசிவரை தக்கவைத்துக்கொள்வதும் மட்டுமே. அதை மட்டுமே செய்தால்கூட அது வெற்றிபெற்றுவிடுகிறது.
எப்போதுமே கவனத்தை உடனடியாகக் கவரக்கூடியது புதுமைக்கவர்ச்சி [novelty] தான். அது ரசிகனுக்கு ஓர் அதிர்ச்சியை அளிக்கவேண்டும். அதாவது மண்டையில் ஒன்று போட்டு திரும்பிப்பார்க்கச் செய்யவேண்டும். அவனுடைய சிந்தனை பிரமித்து உறைந்துவிடவேண்டும். அவன் மீளமுடியாதபடி தொடர்ந்து புதியதாக, எதிர்பாராததாக ஏதாவது ஒன்று நிகழ்ந்து கடைசிவரை அவனை கொண்டு செல்லவேண்டும். வணிக சினிமா, வணிக எழுத்து ஆகியவற்றின் செயல்முறை இதுவே
இதற்காகவே வணிகக்கலையும் இலக்கியமும் முடிந்தவரை தன்னை திருகிக்கொள்கின்றன. அங்கே வாழ்க்கையின் உண்மைகளுக்கு பெரிய இடமில்லை. அவை ரசிகனிடமும் வாசகனிடமும் விளையாடுகின்றன. அவனை திசைமாற்ற வைத்து ஏமாற்றுகின்றன. அவன் எதிர்பாராதபடி திடீரென்று எதையாவது வெளியே எடுக்கின்றன.
வணிகக் கலை- இலக்கியங்களில் பயின்றவர்கள் மூன்று மனநிலைகளைக் கொண்டிருக்கிறார்கள். 1. அவர்கள் புதியவற்றை எதிர்பார்க்கிறர்கள் 2 ஆசிரியனிடம் அல்லது கலைஞனிடம் விளையாட முற்படுகிறார்கள். சூதாட்டத்தின் மறுமுனையாகக் காண்கிறார்கள் 3 வாழ்க்கையை இந்த விளையாட்டுக்கான ஒரு தகவல்களமாகவே காண்கிறார்கள்
அவர்களுக்குச் செவ்வியல் கலைகளும் நாட்டார் கலைகளும் சலிப்பூட்டுகின்றன ஒரு சினிமா ரசிகன் கதகளியை பத்துநிமிடம் பார்க்கமுடியாது. சினிமாப்பாட்டு ரசிகன் கர்நாடக இசையை கேட்டு ரசிக்க முடியாது “என்னடாது திரும்பத்திரும்ப ஒன்னையே செஞ்சுட்டு” என்று சலித்துக்கொள்வான்
கலையும் இலக்கியமும் ஒன்றை அறிந்திருக்கும். வாழ்க்கை என்பது சாராம்சத்தில் வேறுபாடுகள் கொண்டது அல்ல. அனைவர் வாழ்க்கையும் பெரும்பாலும் ஒரே போன்ற நிகழ்வுகளால் ஆனதே. உணர்வுகளும் ஒன்றே. மானுடவாழ்க்கையையே சுருக்கமாகச் சில நிகழ்வுகள், சில உணர்வுகளாக தொகுத்துக்கொள்ள முடியும்
செவ்வியல் என்பது அப்படி தொகுத்துக்கொள்வதை இலக்கணமாக ஆக்கிவிடுகிறது. திணைகள், ரசங்கள் [மெய்ப்பாடுகள்] போன்றவை இப்படி வாழ்க்கையை சுருக்கி தொகுத்துக்கொண்டு உருவானவை. இவற்றை ஒட்டியே தன்னை வெளிப்படுத்தவேண்டும் என செவ்வியல் கலை தனக்கென ஒரு கட்டுப்பாட்டை விதித்துக்கொண்டிருக்கிறது.
காரணம் இவற்றுக்கு அப்பால் உள்ள நடைமுறை வாழ்க்கையின் நிகழ்ச்சிகளில் உள்ள வேறுபாடுகள் தீவிரமான கலையிலக்கியத்தைப் பொறுத்தவரை மிக மேலோட்டமானவை. அவற்றை அது பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.
உதாரணமாக Gravity சினிமாவில் கதைநாயகியைக் காப்பாற்ற ஒருவர் விண்வெளியில் குதிக்கிறார். அந்த சூழல், அந்த தருணம் எதுவும் பெரிய முக்கியத்துவம் உள்ளது அல்ல, அதில் தியாகம் என்பதை மட்டுமே கலை- இலக்கியம் கவனிக்கும். அது எங்கே நடந்தாலென்ன? அந்த தியாகத்தில் புதியதாக என்ன இருக்கிறது? அதுவே முக்கியம்.
அந்த வேறுபாடு மிகமிகச் சிறியது. மிக நுட்பமாக மட்டுமே அந்த வேறுபாட்டைக் காட்டமுடியும். அந்த நுண்மையை மட்டுமே ரசிகன் கவனிக்கவேண்டும், பிற சூழல் சந்தர்ப்பங்களைக் கவனிக்கக் கூடாது என்று செவ்வியல் கலை கருதும். ஆகவே வழக்கமான கதை, வழக்கமான சந்தர்ப்பம், வழக்கமான உணர்ச்சிகள் என எடுத்துக்கொண்டு அந்த வேறுபாட்டை மட்டும் மேலதிகமாக சேர்த்து அளிக்கும்.வைரத்தை எடுத்து கரியவெல்வெட்டில் வைப்பதுபோல
அந்த தியாகம் என்பதைச் சொல்ல ஜடாயு ராவணனுடன் போர் புரியச் சென்ற காட்சியே போதும். பழைய கதை, பழைய சந்தர்ப்பம். ஆனால் இப்போது தியாகத்துக்கு என்ன பொருள் என கலைஞன் நினைக்கிறானோ அதைச் செய்யமுடியும். இன்று ஒரு கலைஞன் அக்காட்சியை நடிக்கையில் ஜடாயு சிரித்துக்கொண்டே அதைச்செய்து சாவதாக காட்டினால் அனைத்துமே அவனுடைய கதையாக ஆகிவிடுகிறது.தியாகத்துக்கு அவன் கொடுக்கும் அந்த மேலதிக விளக்கம் மட்டுமே ரசிகனிடம் சென்று சேரும் .
இதைத்தான் நுண்மையாக்கம் [improvisation ] என்கிறார்கள். திரும்பத்திரும்ப நுட்பமாக ஆக்கிக்கொண்டே செல்லுதல். வேறுவேறு வகைகளில் சொல்லிப்பார்த்தல். இலக்கியத்தில் கவிதையிலும், பெரும்பாலான நுண்கலைகளிலும் இவ்வழக்கமே ஆள்கிறது. பரதநாட்டியத்தில் எப்போதும் ராதாகிருஷ்ண சல்லாபம்தான். கர்நாடக சங்கீதத்தில் அதே ராகங்கள், அதே பாடல்கள்தான். கலைஞனின் மனோதர்மம் நுண்மையாக்கலில் வெளிப்படுவதே அவற்றை கலைநிகழ்வாக்குகிறது. அதற்காகவே செவ்வியல் ரசிகர்கள் வந்திருக்கிறார்கள்
கதகளி இந்த நுண்மையாக்கத்தை மட்டுமே செய்யும் ஒரு பெரும் செவ்வியல் கலை. அதிலுள்ள கதைகள் பெரும்பாலானவை இருநூறாண்டுப் பழக்கம் கொண்டவை. அக்கலை உருவானதுமே உருவானவை. அனைத்தும் மகாபாரத ராமாயணக் கதைகள். கதகளி அதில் அந்நடிகர் அப்போது அளிக்கும் நுட்பமான மேலதிக கற்பனையை மட்டுமே ரசிக்கும் ரசிகர்களுக்கானது
என் பாட்டியும் அப்பாவும் திரும்பத்திரும்ப கதகளி பார்ப்பார்கள். கதைச் சந்தர்ப்பம் தெரிந்தது, பாடல்வரிகள் தெரிந்தவை, நடிகரும் பல்லாண்டுகளாக அதே வரிகளுக்கு அதே மேடையில் நடித்தவர். ஆனால் ஆர்வத்துடன் சென்று அமர்வார்கள். முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு வருடமும் அங்கே நளன் அன்னப்பறவையை தமயந்திக்கு தூதனுப்பும் காட்சி நடிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் வெவ்வேறு அன்னப்பறவைகள்!
ஜெ