«

»


Print this Post

தன்னறம்


இரண்டாயிரத்து மூன்றில் நான் குடும்பத்துடன் நண்பர் சோமசுந்தரத்தைப் பார்க்க டமன் சென்றிருந்தேன். அவர் எல்லைக் கடற்படையில் உயரதிகாரி.டமன் வருமாறு அழைத்துக்கொண்டே இருந்தார். டமன் நகரில் இருந்து ஏழு மணிநேரப்பயணத்தில் அஜந்தா இருக்கிறது. பேருந்தில் அஜந்தா சென்று வரலாம் என்று கிளம்பினோம்.

போகும்வழியில் ஒரு மோட்டலில் நிறுத்தினார்கள். நல்ல உயர்தரமான கட்டிடம். உள்ளே சென்று ஆளுக்கொரு லஸ்ஸி சாப்பிட்டோம். வெயிலுக்கு அது இதமாக இருந்தது. பேருந்து மீண்டும் கிளம்பியது. அஜிதன் பேருந்தில் வாந்தி எடுக்கக்கூடும் என்பதனால் அவனுக்கு மாத்திரை கொடுத்திருந்தோம். சைதன்யா சின்னப்பிள்ளை ஆனதனால் சளிபிடிக்கும் என லஸ்ஸி கொடுக்கவில்லை.

ஔரங்பாபாத் சென்று இறங்கினால் அஜிதன் உடம்பு கொதித்துக்கொண்டிருந்தது. இறங்கியதுமே வாந்தி எடுத்தான். சளியாக இருக்கும் என்று நினைத்து காய்ச்சலுக்கான மாத்திரை வாங்கிக்கொடுத்து விடுதி அறையிலேயே வைத்திருந்தோம். அது பெரிய முட்டாள்தனம். இரவெல்லாம் காய்ச்சல். அதிகாலையிலே கடுமையான காய்ச்சல். புலம்பவும் உருவெளிக்காட்சிகளைப் பார்க்கவும் ஆரம்பித்துவிட்டான்.

மறுநாள் விடுதியிலேயே கேட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைகளில் ஒன்றுக்குக் கூட்டிச் சென்றோம். ஒரு நான்குமாடிக்கட்டிடம். மூன்று சகோதரர்கள் நடத்தும் மருத்துவமனை. உடனே படுக்க வைக்கச் சொல்லிவிட்டார்கள். மூன்று பையன்களுமே எ·ப்.ஆர்.சி.எஸ் டாக்டர்கள். ஆழமானவர்கள். மிகமிகப் பண்பானவர்கள். மிகச்சிறந்த நிர்வாகிகளும் கூட. மூவருமே எங்கே வந்தாலும் கழுவுதொட்டி கழிப்பறை இரண்டையும் பார்க்காமல்செல்லமாட்டார்கள். தாதிகள் வேலைக்காரிகள் எல்லாருமே அன்பான மனிதர்கள். .அந்த மருத்துவமனைதான் நான் இதுவரை பார்த்ததிலேயே இலட்சிய மருத்துவமனை.

உணவு விஷமாகிவிட்டது என்றார்கள். அந்த லஸ்ஸி கெட்டுப்போயிருந்தது. ”வட இந்தியாவில் லஸ்ஸி சாப்பிடவே சாப்பிடாதீர்கள். மிஞ்சிய மோரில் மேலும் பாலை உறைகுத்திக்கொண்டே இருப்பார்கள். அதில் ஒருபகுதி பாலுக்கு வாரக்கணக்கில் கூட வரலாறு இருக்கும். அதில் சில தப்பான ரசாயனங்கள் இருக்கும்” அஜிதனுக்கு உள்ளே போன ரசாயனம் வாந்தியாக வரமுடியாமல் மாத்திரை தடுத்துவிட்டது.

சரி, உணவு விஷம் என்றால் அனேகமாக குடல் கழுவப்பட்டதும் சரியாகிவிடும் என்று நான் சொன்னேன். அருண்மொழி சைதன்யா இருவரையும் சோமசுந்தரத்துடன் அனுப்பி அஜந்தா எல்லோரா தௌலதாபாத் பார்த்து வரச்சொல்லிவிட்டு நான் ஆஸ்பத்திரியிலேயே இருந்தேன்.

ஆனால் மாலையில் காய்ச்சல் இன்னும் அதிகமாகிவிட்டது. என்னைப்பார்த்து ”அப்பா, உன் பக்கத்திலே யாரு ?” என்று கேட்க ஆரம்பித்தான். ‘அப்பா ஆனை! ஆனை!’ எழுந்து ஓட முயன்றான். முறிமருந்துகளின் கடுமை ஏறியபடியே சென்றது. நான் அருண்மொழி,சைதன்யா இருவரையும் சோமசுந்தரத்துடன் திருப்பி டமனுக்கே போய்விடும்படியும் நான் அங்கே இருந்து பார்த்துக்கொள்கிறேன் என்றும் சொன்னேன். அவர்கள் சென்றார்கள்.

மறுநாளும் அதே காய்ச்சல். உள்ளே சென்ற எதுவுமே நிற்காது. வாந்தி பேதி. காலராவாக இருக்கும் என்று சோதனை செய்தார்கள். காலரா இல்லை. வேறு என்ன? வயிறை பலமுறை கழுவியாகிவிட்டது. பலமுறை முறி மருந்து கொடுத்து விட்டார்கள். மூன்று சகோதரர்களும் மாறி மாறி வந்து பார்த்தார்கள். மறுநாள் காலையிலும் காய்ச்சல் இறங்கவில்லை. சகோதரர்கள் முகத்தில் கவலை படிந்துவிட்டது.

மாடியில் ஒரு சந்திப்புக்கூட்டம் போட்டு என்னை வரச்சொன்னார்கள். ”சிக்கலாக ஏதோ ஆகிவிட்டது. முடிந்தவரை செய்கிறோம்” என்றார்கள். ”மும்பை கொண்டுபோகட்டுமா?” என்றேன். ”பயணம் கடினமானது. உங்கள் விருப்பம்” என்றார்கள். நான் ”நான் உங்களை நம்புகிறேன் டாக்டர், நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்” என்றேன். டாக்டர் நெகிழ்ந்துவிட்டார்.

”இதற்குமேல் எவரும் எதுவும் செய்ய முடியாது… இன்னும் மதியம் வரை பார்ப்போம். அதன் பின் நான் இந்த ஔரங்காபாதில் உள்ள எல்லா முக்கிய டாக்டர்களையும் வரவழைத்துப் பார்க்கச் சொல்கிறேன். இன்றிரவுக்குள் மும்பையில் இருந்து எனக்குத்தெரிந்த ஒரு பெரிய மருத்துவரை விமானத்தில் வரவழைத்து பார்க்கச் செய்கிறேன். இதெல்லாம் என் செலவு” என்றார்

”செலவைப்பற்றி கவலை இல்லை” என்றேன். ”இல்லை எங்களால் நோயை ஊகிக்க முடியவில்லை என்பது எங்கள் தவறு” என்றார். அங்கே சாத்தியமான எல்லா சோதனைகளையும் செய்யலாம் என்று முடிவெடுத்து ஒவ்வொன்றாகச் செய்ய ஆரம்பித்தனர். குருதியில் கடுமையான நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகி உடல் மிகக்கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தது. ஆனால் எந்த பாக்டீரியா வைரஸ¤ம் இல்லை.

கடைசியில் மார்பு எக்ஸ்ரே எடுத்தபோது அதிர்ச்சி. இடது நுரையீரலில் நிமோனியா போல தெரிந்தது. நிமோனியாவா? குடித்த தயிர் எப்படியாவது நுரையீரலுக்கு போக நேர்ந்ததா? அதிர்ச்சியாக இருந்தது அவர்களுக்கு. என்னிடம் கேட்டார்கள். நான் நிமோனியாவுக்கு வாய்ப்பே இல்லை என்றேன்.

பையனுக்கு சுயநினைவு திரும்பவில்லை. காய்ச்சல் நீடித்தது. அந்த ஆஸ்பத்திரியில் இருந்த அத்தனை வட இந்தியப் பெண்களும் வந்து ‘பேட்டா’வுக்கு சாமி பிரசாதம் வைத்து விட்டார்கள். எனக்கு எதுவுமே தெரியாது. எல்லாமே பிற நோயாளிகளின் உதவியாளர்கள்தான் செய்தார்கள்.

அன்று மதியம் மூன்று டாக்டர்களின் தந்தையான டாக்டர் வந்தார். எண்பது வயது. டிராக் சூட் – ஷர்ட் போட்டுக்கொண்டு நடக்கச்சென்றவர் இங்கே வந்து அஜிதனைப் பார்த்தார். ஔரங்காபாதின் முக்கியமான மருத்துவர்களில் ஒருவராக இருந்து அந்த நிறுவனத்தை உருவாக்கியவர் அவர். தன் அறுபது வயதில் மருத்துவத்தில் இருந்து முழுமையாக விலகிக் கொண்டு தன் சொந்த மகிழ்ச்சிக்கான விஷயங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டாராம். அவருக்கு கோயில்களுக்கு நடந்து செல்வதுதான் அப்போதைய வாழ்க்கை. இந்தியா முழுக்க சென்றிருக்கிறார்.

பையனைப் பார்த்தார். ஒன்றுமே பிடிபடாமல் நாற்காலியில் அமர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தார். நிமோனியா இல்லை என்று உடனே நிராகரித்துவிட்டார். அப்படியானால் என்ன? எக்ஸ்ரேயை வேறு கோணத்தில் எடுக்கச் சொன்னார். அது ஏதோ ‘மெக்கானிக்கல்’ பிரச்சினை என்றார். ‘சின்னவயதில் பிரைமரி காம்ப்ளெக்ஸ் இருந்ததா?” என்றார் கிழ டாக்டர் ”ஆமாம்” என்றேன்

பிரைமரி காம்ப்ளெக்ஸ் காரணமாக நுரையீரல் ஒருபகுதியில் கொஞ்சம் வீங்கி அது இன்னொரு நுரையீரலை அழுத்துகிறது. அதுதான் எக்ஸ்ரேயில் தெரிந்தது. பெரிய டாக்டர் நிலைகொள்ளாமல் இருந்தார். மாடியில் அமர்ந்து என்னிடம் மீனாட்சி கோயிலைப்பற்றி பேசினார். சட்டென்று எழுந்து ”எல்லா முறி மருந்துகளையும் நிறுத்துவோம்” என்றார்

பையன்கள் பதறினார்கள். ”முடியாது,அது ஆபத்து” என்று மூத்தவர் நேராகச் சொல்லாமல் சுவரைப்பார்த்து சொன்னார். கிழவர் ”நிறுத்து, நான் சொல்கிறேன்” என்றார். மூவரும் இருண்ட முகத்துடன் செய்தார்கள். நான் கிழவரை நம்பினேன். துல்லியமான ஓர் உள்ளுணர்வு சொன்னது, அவருக்கு ஆழம் உண்டு என

அன்றிரவே காய்ச்சல் குறைந்தது. மறுநாள் முற்றிலும் காய்ச்சல் இல்லை. மதியம் எழுந்து அமர்ந்துவிட்டான். தூங்காமல் ஒருமணிநேரத்துக்கு ஒருமுறை மென்மையான உணவை கொடுத்துக்கொண்டே இருக்கச் சொன்னார்கள். நான் இரவெல்லாம் பகலெல்லாம் விழித்திருந்தேன். அஜிதனுக்கும் தூக்கமில்லை. நான் தொடர்ந்து நான்குநாட்கள் ஒருநாளுக்கு  இரண்டுமணிநேரம்கூட தூங்காமல் இருந்த நாட்கள் அவை. உடலுக்கு மனம் விரும்பியபடிச் செல்லும் அபாரமான திறனுண்டு என உணர்ந்தேன்.அப்படியே இரண்டு நாட்கள்.

நான் அவனுக்கு மெல்லிய குரலில் கதை சொல்லிக்கொண்டே இருந்தேன். மொத்த மகாபாரதத்தையும்  ஆரம்பம் முதல் கடைசி வரை சொன்னேன். முடிக்க இரண்டுநாள் ஆகியது. ஏறத்தாழ இருபது மணிநேரம் சொல்லியிருப்பேன். கதையின் வேகமும் கிளர்ச்சியும் குழந்தையின் முகத்தில் ஏற்றும் உணர்ச்சி கொந்தளிப்புகளை இப்போதும் நினைவுகூர்கிறேன். கர்ணனுக்காக விசும்பி விசும்பி அவன் அழ ஒரு பாட்டி வந்து ‘வயிறு வலிக்கிறதா?’ என்று கேட்டு தடவி விட்டாள்.

மகாபாரதம் எத்தனை பெரிய வண்ண உலகம்! இன்றும் அஜிதன் அவன் வாழ்வின் பொன்னாட்கள் என அந்த இரு நாட்களை அடிக்கடிச் சொல்வான்.  அவன் அப்பா அவனை மட்டுமே கவனித்துக்கொண்டு அவனுடன் மட்டுமே இருந்த நாட்கள். ‘நல்ல வேளை அப்பலாம் செல்போன் கிடையாது. யாருமே கூப்பிடலை’ என்பான். நான் ஒரு மகத்தான கதைசொல்லி என  அங்கீகரித்த முதல்பெரும் வாசகன் அவனே.

முற்றிலும் சரியாகி விட்டபின் டாக்டரிடம் கேட்டேன், என்ன நடந்தது என. கிழவர் சொன்னார். அஜிதனின் உடம்பு அவர்கள் அளித்த முறிமருந்துக்களை கிருமியாக, விஷமாக நடத்த ஆரம்பித்திருந்தது என. அல்லது நான் அப்படி புரிந்துகொண்டேன். டாக்டர் மீனாட்சிகோயிலைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது வெளியே நாய்க்குரைப்பொலி கேட்டதாம். அப்போது அவருக்கு அந்த எண்ணம் வந்தது. ‘திருடனை துரத்த நாய் உள்ளே வந்தது. திருடன் ஓடியும் நாய் உள்ளேயே சுற்றி வருகிறது!’ அதுதான் தீர்வு.

ஆச்சரியமாக இருந்தது. மறுநாள் மூத்தவரிடம் கேட்டேன், அது ஏன் உங்களுக்கு தோன்றவில்லை என. அவர் சொன்னார் ”எந்த துறையிலும் உள்ளுணர்வே முதன்மையானது. அடுத்தது கற்பனை. அதற்கடுத்ததே தர்க்கமும் அதை வலுப்படுத்தும் கல்வியும் எல்லாம். அப்பா அபாரமான நுண்ணுணர்வால் ஆனவர். அதை அவர் குழந்தைத்தனமான கற்பனை மூலம் மீட்டி எடுக்கிறார். அது மிகச்சிறந்த ஒரு வழிமுறை. ஆனால் அதற்கு மனதுக்குள் அந்தக் குழந்தை இருந்துகொண்டே இருக்க வேண்டும். நவீனக் கல்விமுறை கொஞ்சம் கொஞ்சமாக அந்தக்குழந்தையை அழிக்கிறது. அதை மீறி அந்தக் குழந்தையை தக்கவைத்திருப்பவரே மேதைகள்”

டாக்டர் சொன்னார் ”அத்துடன் அவரது அனுபவம். அனுபவம் மூலம் உள்ளுணர்வை தீட்டிக்கொண்டே இருந்திருக்கிறார். நானும் அந்த அனுபவத்தை அடையும்போது என் உள்ளுணர்வும் கூர்மையாகலாம். என்ன இருந்தாலும் நான் அவரது மகன்” சிரித்துக்கொண்டே தம்பி டாக்டர் சொன்னர் ”நாவலாசிரியர்கள் மட்டும்தான் தியானிக்கிறார்கள், கற்பனை செய்கிறார்கள் என்று நினைக்காதீர்கள்…நாங்களும்தான் செய்கிறோம்”

பெரிய டாக்டர் அஜிதனுக்கு ஒரு பரிசு கொடுத்தார். சாதாரணமான கட்டணம் வந்தது. நான் கட்டணம் குறைவாக இருக்கிறதே என்றேன். ‘பரவாயில்லை, எங்களூருக்கு வந்திருக்கிறீர்கள்’ என்றார் டாக்டர். ஆச்சரியமாக இருந்தது அந்த மனநிலைகள். நேர் எதிரே ஜோஷி என ஒரு மராட்டிய பிராமணர் மருந்துக்கடை வைத்திருந்தார். முதல்நாள் மருந்து வாங்கும்போது ”முதல் பிரிஸ்கிருப்ஷனா?” என்றார். ஆமாம் என்றதும் ஒரு ராமர்படத்து முன் அதை வைத்து பிரார்த்தனை செய்து அதன் பின் மருந்து கொடுத்தார். அதன் பிறகு சிக்கல்கள் உருவானபோது ஒவ்வொரு நாளும் அவரது மனைவி மேலே வந்து பூஜைசெய்த பிரசாதம் அளித்துவிட்டுச் சென்றார்.

அஜிதன் மூன்றாம்நாள் அழுகையுடன் இருந்தான். அத்தனை தூரம் வந்துவிட்டு அஜந்தா பார்க்காமல் திரும்புவதா? மேலும் சைதன்யாவே பார்த்துவிட்டாளே. ஊருக்குபோய் மானத்துடன் வாழவேண்டாமா? டாக்டர்கள் கூடவே கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.’உடலில் வலிமையே இல்லை. பேருந்தில் டமன் சென்று ஒருநாள் ஓய்வெடுத்து அங்கே ஒரு டாக்டரை பார்த்துவிட்டு ஊருக்குக் கிளம்புங்கள்’ என்றார்கள்.

கிழடாக்டர் வந்து அஜிதனைப் பார்த்ததுமே ”என்ன பிரச்சினை பேட்டா, முகம் சப்பி இருக்கிறதே?’ என்றார். அவனே அஜந்தாவைப் பற்றி சொன்னான். ”அங்கே வெறும் பொம்மைதான். இங்கே பக்கத்தில் மிருகசாலை இருக்கிறது.போய்ப்பார்” என்றார். ”எனக்கு சிற்பங்கள்தான் பார்க்க வேண்டும். அங்கே போதிசத்வர் சிலைகள் இருக்கிறது”

டாக்டர் அயர்ந்து ”நீங்கள் சொன்னீர்களா?” என்றார். அஜிதன் ”எங்க அப்பாவை விட எனக்கு தெரியும். நானே புத்தகத்தில் வாசித்தேன்” என்றான். டாக்டர் சிரித்து ”இத்தனை சொல்கிறான். பார்க்காமல் போகலாமா? ஒரு கூடை ஆரஞ்சு வாங்குங்கள். அந்தச் சுளைகளை உரித்து கொடுத்துக்கொண்டே கூட்டிச் செல்லுங்கள். சக்கையை துப்பிவிடவேண்டும். வேறு எதுவுமே கொடுக்க வேண்டாம். ஆரஞ்சு சாறு எதுவுமே கொடுக்கக்கூடாது. நேராக பழத்தில் இருந்து வரும் சாறு மட்டுமே உணவு. போய்வாருங்கள்” என்றார்.

அதைக் கேள்விப்பட்டு பெரிய மகன் மறுத்தான். அப்பா டாக்டர் ”இது ஒரு டாக்டராக நான் சொல்வது அல்ல, ஒரு மகாராஷ்டிரியனாக நான் சொல்வது. ஔரங்காபாத் வந்து அஜந்தா பார்க்காமல் போகலாமா? அதுவும் ஒரு இளம் மேதை?” என்று அஜிதனைப் பார்த்து கண்ணடித்தார்.

ஒரு கூடை நிறைய ஆரஞ்சும் துப்புவதற்கு பிளாஸ்டிக் பையுமாக கிளம்பிச் சென்றோம். அஜந்தா அஜிதனை கொள்ளை கொண்டது. ஒரு கனவில் இருப்பது போல இருந்தான். பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஐந்து நிமிடம் அமர்ந்திருக்க வேண்டும் என்பது டாக்டரின் ஆணை. அஜந்தாவில் உள்ள நூற்றுக்கணக்கான மிகச்சிறிய கல்குகை அறைகளில் ஒன்றில் அமர்ந்தோம். இரு கட்டில் திண்டுகள். குளிர்ந்த கல். இருவருக்கு மட்டுமே இடமுள்ள குகை. ‘படுடா’ என்றேன். அவன் படுத்தான் இன்னொன்றில் நான் அமர்ந்தேன்.

மகாபாரதம் முன்தினமே முடிந்திருந்தது. அதில் நான் கீதையை சொல்லவில்லை. ‘கீதையைச் சொல்’ என்றான். கீதையை எப்படி ஐந்தாம் வகுப்புப் பையனுக்குச் சொல்வது? அதுவும் ஒரு சவாலே என்று சொல்ல ஆரம்பித்தேன். அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். புரியாத போது உதாரணங்களுக்கு தாவினேன். கீதையையும் நாற்பத்தைந்து நிமிடங்களில் சொல்லி முடித்தேன்

‘தன்னறம்’ [ஸ்வதர்மம்] பற்றி மேலும் கேட்டான். ”எது உனக்குரிய செயலோ அது. எந்தச் செயலுக்காக நீ பிறந்திருக்கிறாயோ அது. அதைச் செய்யும்போதே மனநிறைவும் வாழ்வின் முழுமையும் கிடைக்கும். அதுவே கீதையின் மையச் செய்தி” என்றேன். ”அதை எப்படி கண்டு பிடிப்பது?” என்றான்.

நான் டாக்டர் நோயைக் கண்டுபிடித்த விதத்தை சொன்னேன். ”எந்தத் துறையில் உனக்கு உள்ளுணர்வு திறக்கிறதோ அதுவே உன் தன்னறம்” என்றேன்

நேற்று அஜிதன் சார்ல்ஸ் டார்வினின் ‘ஆர்ஜின் ஆ·ப் ஸ்பீஸ’ஸை வாசித்துக்கொண்டிருந்தான்.  அவன் வயதுக்கு அது கடுமையான மூல நூல். நூற்றைம்பதண்டு பழைய கஷ்டமான ஆங்கிலத்தை மூச்சுபிடித்து வாசிப்பதைக் கண்டேன். ”நெறைய விஷயங்கள் டார்வினுக்கு தெரியல்லை. டிங்கோ நாய் பழகிய நாயில் இருந்து உருவான காட்டு இனம். இவர் அதை காட்டுநாய்க்கும் பழகிய நாய்க்கும் நடுவே உள்ளது என்கிறார்”  என்றான். ”இது பழைய புக்” என்றேன்

”நேச்சுரல் செலக்ஷன் வரை வந்திட்டேன்.. ராத்திரி படிச்சிட்டிருந்தப்ப திடீர்னு பயமா ஆயிட்டுது. அவருக்கு புதூசா நேச்சரல் செலக்ஷன்னு ஒரு விஷயம் தோணியிருக்கே. எவ்ளவு பயமா இருக்கும் அப்டி தோணுறப்ப” ”ஏன்?” ”பைத்தியம் புடிச்சிட்டுதுன்னா?” என்றான் .”எனக்கெல்லாம் நேத்து ரொம்ப பயமா இருந்தது”

”அப்ப விட்டுடு” என்றேன்.”இது எனக்க சொதர்மம்லா?” என்றபின் எழுந்து ”ஹை சொதர்மம்! ஆ அஜக்கு! ஆ குமுக்கு!” என்று ஆடிக்காட்டினான். இந்தப்பயலை எங்கேயுமே சேர்க்க முடியவில்லை என்பதே என் வாழ்க்கையின் முக்கியமான பிரச்சினை.

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Mar 30, 2010

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7005

15 comments

2 pings

Skip to comment form

 1. krishnan ravikumar

  வணங்குகின்றேன். வேறெதுவும் சொல்ல முடியவில்லை.

 2. muthu prakash

  அன்பிற்குரிய ஜெ!

  வணக்கங்கள்…….2001ல் தங்களின் வீட்டிற்கு வந்த போது பார்த்தது சைதன்யாவையும் அஜிதனையும்; எத்தனை முயற்சித்தாலும் இருவரின் முகங்களும் ஞாபகத்தில் வரத்தான் மறுக்கின்றன… நித்யானந்தர் sr & jr, யதி, பேராசிரியர் அப்துல்லாஹ், வசந்தபாலன் பற்றியெல்லாம் எழுதப்பட்ட கட்டுரைகளில் சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படம் இடம் பெற்றதாக நினைவு …ஆனால் அதே அளவுகோல் அஜிதனின் விசயத்தில் பின்பற்றப்படாததின் தன்னறத்தை நீங்கள் தான் மெச்சிக் கொள்ள வேண்டும் (இதே அநீதி முன்பு பலமுறை சைதன்யாவுக்கும் இழைக்கப்பட்டது)

  இளம்மேதை பட்டைபோட்ட தகவல் சற்று நாட்களுக்கு முன்னால் அறிந்த உடனேயே அவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமென முதலில் நினைத்து, பின் அவரை ஏன் மேலும் கலவரபடுத்த வேண்டுமென விட்டுவிட்டேன்…அஜிதனுக்கு விளையாட்டுகளில் ஆர்வமுண்டா…பிடித்த வீரர்? …எனக்கு மிகவும் பிடித்தவர் derek redmond… இந்த சுட்டியை அவனிடம் பார்க்க சொன்னதாக சொல்லுங்கள்…சைதன்யாவிடமும் தான்

  http://www.youtube.com/watch?v=Nifq3Ke2Q30

  முன்பே பார்த்த ஒன்று தானா !

 3. Dondu1946

  //”அப்ப விட்டுடு” என்றேன்.”இது எனக்க சொதர்மம்லா?” என்றபின் எழுந்து ”ஹை சொதர்மம்! ஆ அஜக்கு! ஆ குமுக்கு!” என்று ஆடிக்காட்டினான். இந்தப்பயலை எங்கேயுமே சேர்க்க முடியவில்லை என்பதே என் வாழ்க்கையின் முக்கியமான பிரச்சினை.//
  அதானே “செக்கச் சிவந்திருக்கும் முகத்தில் புளிரசமும்” என்று அறுபது டிகிரி கோணத்தில் முகத்தை வைத்து கைகளால் மூடி மெதுவாக பிரிக்கும் இந்த விஷமக்கார பயல் அவன் மேலே சொன்னது போல ஆடியதும்தான் உண்மையாண குணம் அடைந்தான் என மனம் தேறினேன்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 4. ஜெயமோகன்

  அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு!
  Natural selection- தங்களின் காடு நாவலை படித்தபோது, அங்கு இருக்கும் தாவர மற்றும் விலங்குகளின் தகவமைப்பு என் மனக்கண்ணில் விரிந்து கொண்டே இருந்தது. குட்டப்பன் கூறும் யானையை பற்றிய விவரங்கள், அந்த மிளா மற்றும் அந்த பழங்கள் சொரிந்த பலா மரம்! டார்வினை எங்களைப்போன்ற மரபியலாளர்களுக்கு பிடிக்காது natural selection உண்மையானது என்றாலும். Mendel அளித்த மரபியல் விளக்கம் டார்வின் தரப்பு ஆட்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டது, முக்கியமாக அவரின் மைத்துனர் நகேலி என்பவரால்! இப்போது natural selection-க்கு நிரூபிக்கப்பட்ட மரபியல் காரணங்கள் இருக்கிறது, Mendalism மூலமாக. Mutation, Hybridization (Interspecific and intra specific), poly ploidy! அஜிதனின் மன எழுச்சியை நான் அறிகிறேன்! அந்த கணங்கள் மிதப்பது போல் தோன்றும்! கீதை தருணம் எனக்கு இப்படி அமைகிறதா என்று நினைக்கிறேன்! வியக்கிறேன்!
  Dr. M. Dhandapani,

  அன்புள்ள தண்டா

  உங்கள் வாழ்க்கையில் முக்கியமான வழி ஒன்றை நீங்கள் ஏற்கனவே கண்டடைந்திருந்தால் அந்த தருணம் நிகழ்ந்திருக்கும். கண்ணன் எந்த வடிவில் வருவான் என்று சொல்ல முடியாது என்பார் நித்யா. ஒரு துறவி என்னிடம் சொன்னார். அவருக்கு இளமையிலேயே கட்டற்று அலைவதில் ஆசை. காடு மேடெல்லாம் சுற்றிக்கொண்டிருந்தார். ஒருமுறை ஒரு பாறைமேல் அமர்ந்திருக்கையில் விறகு பொறுக்க அங்கே அவ்ந்த கிழவரிட்ம் ” எவ்ளவும் பசுமையா இருக்கு இல்லையா?” என்றார் இவர். கிழவர் சொன்னார் ”பெண்ணும் பிடைக்கோழியும் வீட்டிலே இருந்தால் வெறகுதான் கண்ணிலே படும். பச்சையும் அழகும் படணூமானா தோளிலே சுமை இருக்கக் கூடாது”

  அப்போது புரிந்தது, வாழ்க்கையில் அழகும் மகத்துவமும் தெரியவேண்டுமென்றால் வாழ்க்கையில் சிக்கிக்கொள்ள கூடாது என்று. சிக்கிக்கொண்டால் சுயநலமும் பயமும் கலந்து அந்தப்பார்வை மங்கிவிடும் என்று. அதுதான் அவரது கீதை தருணம், அவர்தான் கண்ணன் என்பார்

  ஜெ

 5. kanpal

  அன்புள்ள ஜெயமோஹன்,

  உங்கள் சொல்லாட்சியால் நான் மிகவும் கவரப்பட்டுள்ளேன். ஓரிரு வாரங்களாக. தமிழ் விக்சனரியில் உங்கள் இணையதளக் கட்டுரைகளிலிருந்து ஒவ்வொரு வாக்கியங்களை தமிழ்/ஆங்கிலச் சொற்களுக்கு எடுத்துக்காட்டாக (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) பயன்படுத்திக்கொண்டுள்ளேன். அதில் உங்கள் இணையதளத்தின் இணைப்பையும் ஆதாரமாகத் தந்துவிட்டு. உதாரணமாக, இன்று ‘உருவெளிக்காட்சி’ என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டு இந்தக் கட்டுரையிலிருந்து எடுத்துள்ளேன்.

  உங்களிடம் முன்பே அனுமதி கேட்டிருக்கவேண்டும். இருப்பினும், நான் அவ்வாறு உங்கள் வாக்கியங்களை அங்கே எடுத்துக்காட்டலாமா?

  நான் பல மாதங்களுக்கு முன் நீங்கள் கலிஃபோர்னியா வந்திருந்தபோது, உங்களைப் பார்க்கமுடியாமல் போய்விட்ட, உங்களின் அண்மைய வாசகன்.

  அன்புடன்,
  பழ. கந்தசாமி

 6. Muthu

  இப்படிப்பட்ட மகத்தான மருத்துவர்கள் பற்றி கேள்வியுறும்போது தன்னிச்சையாக மனம் பொங்குகிறது. இப்படி மனம் பொங்க எழுச்சியுற உங்களது சொற்களை பின்னிரவில் வாசிப்பதில் ஒரு சுகம்.

  அஜிதன் தங்களது தோளில் கைபோட்டபடியே நீங்கள் இருவரும் நடைசெல்லும் புகைப்படம் பார்த்தபோதே சொல்ல நினைத்தேன். இப்போது சொல்கிறேன். உங்களது ஆளுமையை தாண்டி தனக்கான அடையாளம் தேடிக்கொள்ளும் சவாலும் சுவாரஸ்யமும் நிறைந்த சூழலை நீங்கள் அவனுக்கு அமைத்துக்கொடுத்திருப்பது புரிகிறது. கொடுத்து வைத்த பொடியன்(சுகள்). இரு காதுகளிலும் புகை, வேறென்ன சொல்ல … :த

  அன்புடன்
  பொன்.முத்துக்குமார்

 7. stellaselvam

  வெறுமே பொழுதுபோக்குக்காக மட்டும் அல்ல உங்கள் எழுத்துக்கள்.அஜிதன் சைதன்யா பற்றிய உங்கள் பதிவுகளை படிக்கும் போது கிடைக்கும் பயன் மிகு மறைமுக குறிப்புகள் பல.ஆளுமை நிறைந்த இனிய தகப்பன் எல்லா குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை.Hats off to u and best wishes to ur kids.

 8. elama

  I am really proud of The Father, The Son and the Holy Spirit in between you. Best Wishes

  Elamparuthy

 9. bala

  எங்கள் மகனும் (ஆறாம் வகுப்பு) அவ்வண்ணமே.. “அப்பா வெயில்ல நீ வ்ராதப்பா.. சொட்டை கிளேர் அடிக்குதுங்க்றான். இவனுங்க சொதர்மமே அப்பனைக் கிண்டல் செய்வதுதானோ என்று தோன்றுகிறது

 10. kanpal

  அன்புள்ள ஜெயமோஹன்,

  என் மகளுக்குப் பதினைந்து ஆகிறது. தன்னறத்தைப் படித்துமுடித்ததும், நீங்கள் அஜிதனுடன் பகிர்ந்துகொண்ட அருங்கதைகளையும், அற்புதக் கணங்களையும் என்போன்ற சாமானியனால் எப்படி அவளுக்குத் தரமுடியும் என்ற ஒரு ஆதங்கம், இன்னும் தரமான நேரத்தை அவளுடன் செலவிடவேண்டுமே, அதற்காக என்னை வளர்த்துக்கொள்ளவேண்டுமே என்ற ஓர் எண்ணம், ஊக்கம் ஏற்பட்டுள்ளது. காலம் கடந்த ஞானமோ என்னவோ?

  பழ. கந்தசாமி

 11. siddharthans

  ஏதாவது ஒரு விஷயத்தை படித்தாலோ பார்த்தாலோ சில நிமிடங்களுக்காவது மனதில் ஒரு அமைதி, பரவசம் ஏற்பட்டால் அது ஒரு சிறந்த படைப்பு என்று நினைக்கிறேன். இம்மாதிரி கட்டுரைகளை தூங்க போவதற்கு முன் படித்தல் உத்தமம். அற்புதம்!!!

 12. senthilkumar

  ஜெ
  /அப்போது புரிந்தது, வாழ்க்கையில் அழகும் மகத்துவமும் தெரியவேண்டுமென்றால் வாழ்க்கையில் சிக்கிக்கொள்ள கூடாது என்று. சிக்கிக்கொண்டால் சுயநலமும் பயமும் கலந்து அந்தப்பார்வை மங்கிவிடும் என்று. அதுதான் அவரது கீதை தருணம், அவர்தான் கண்ணன் என்பார்/

  /.எந்தத் துறையில் உனக்கு உள்ளுணர்வு திறக்கிறதோ அதுவே உன் தன்னறம்/

  சுயநலமும் பயமும் இருந்தால் உள்ளுணர்வும் திறக்காமல் போய் விடுகிறது .

  வாழ்க்கையில் சிக்கி கொள்வது பற்றி மேலும் விரிவாக கூறவும்.

 13. nvselvendran

  சிந்திக்க தூண்டிய பதிவு..நன்றி..

 14. stride

  அன்புள்ள ஜெ,

  ”பெண்ணும் பிடைக்கோழியும் வீட்டிலே இருந்தால் வெறகுதான் கண்ணிலே படும். பச்சையும் அழகும் படணூமானா தோளிலே சுமை இருக்கக் கூடாது” என்று கிழவர் சொன்னது மிக அருமை.

  வீட்டில் பெண்ணும் உண்டு பிடைக்கோழியும் உண்டு, சொன்னது போல் விறகு தான் எப்போதும் கண்ணில் தெரிகிறது. ஆனால் பிடைக்கோழி இல்லாத போது பெண் கழுத்தைக்கட்டி உப்புமூ தூக்கு உப்புமூ தூக்கு என்று கொஞ்சும் போது எனக்கு அது கீதை தருணம் தான். சீக்கிரம் அதுவும் ஒரு பயங்கர கனவாகும் என்று தெரிந்த போதிலும் :)

  சிவா

 15. va.srinivasan

  //இந்தப்பயலை எங்கேயுமே சேர்க்க முடியவில்லை என்பதே என் வாழ்க்கையின் முக்கியமான பிரச்சினை.//…………உங்களை? :-)

 1. Tweets that mention jeyamohan.in » Blog Archive » தன்னறம் -- Topsy.com

  […] This post was mentioned on Twitter by dagalti. dagalti said: @complicateur @equanimus I see a shortfilm appealing to classically inclined http://www.jeyamohan.in/?p=7005 […]

 2. மனப்பாடம்

  […] தன்னறம் […]

Comments have been disabled.