அ.கா.பெருமாள் ஒருமுறை சொன்ன உண்மைச்சம்பவம் இது. நாகர்கோயிலில் நாற்பதுகளில் ஒரு விதவை அம்மாள் ஓட்டல்மாதிரி ஒன்று வைத்திருந்தார்கள். காலணாவுக்குக் கஞ்சி. பிரவர்த்தியார் ஆபீஸ் முன்பக்கம் என்பதனால் ஏழைபாழைகள் வந்து கஞ்சிகுடித்துச் செல்வார்கள்.
காலணா கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள காணத் துவையல் கட்டுப்படியாகாது. மேலும் முடிந்தவரை முதலெடுக்க முயலும் குமரிமாவட்ட மக்களிடம். ஆகவே எப்போதுமே அங்கே சக்கைப்புளிக்கறிதான். சக்கை என்றால் பலா. தேங்காயை புளி வைத்து அரைத்து பலாக்காயை முள்ளைமட்டும் சீவிவிட்டு அப்படியே வெட்டிப்போட்டு வைக்கப்படும் நீர்த்த குழம்பு அது. பலா சீசன் இல்லாதபோது சீமைப்பலா.
அந்த அம்மாளுக்கே சக்கைப்புளிக்கறி என்று பெயர் வந்துவிட்டது. அவளுடைய அழகிய மகளை ஒரு பணக்கார வக்கீல் மூன்றாந்தாரமாக மணந்துகொண்டு அவள் பியூக் காரில் செல்லத் தொடங்கியதும் அப்பெயரை வயிறெரியப்பெற்ற அனைவரும் சொல்லத் தொடங்கினர். நேரில் கூப்பிடமாடார்கள், வக்கீல்கள் புலிகளாக இருந்த காலம். கார் போனபின் சொல்லிச்சிரிப்பார்கள். நான்கு பையன்கள் நேரிலேயே சொல்லிவிட்டார்கள்
அம்மாள் மகளிடம் சொல்ல மகள் கணவனிடம் கண்கலங்க வக்கீல் ஒரு வழி செய்தார். நேராக கோர்ட்டில் ஒரு புகார் கொடுத்தார். நீதிபதி கேலிசெய்த நான்கு பையன்களையும் பிடித்துவரச்சொன்னார். விசாரணையில் குற்றம் ஒத்துக்கொள்ளப்பட்டது. தண்டனை சுடச்சுட வழக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு கோர்ட் கலையும்வரை சிறை.
‘இனிமேல் மேலேமுக்கு வெள்ளக்குட்டியம்மாள் மகள் சரஸ்வதியம்மாளை நாங்கள் சக்கைப்புளிக்கறி என்று சொல்ல மாட்டோம்’ [பெயர் இதல்ல] என்று அட்டையில் எழுதி கையில் பிடித்தபடி கோர்ட் வாசலில் நிற்கவேண்டும் என்று நீதிமன்ற ஆணை. நின்றார்கள்
மறுநாள் அக்கால திருவனந்தபுரம் தினமலரின் உள்ளூர் நிருபர் சி.பி.இளங்கோ செய்தி வெளியிட்டார். ‘ மேலேமுக்கு வெள்ளக்குட்டியம்மாள் மகள் சரஸ்வதியம்மாளை எவரும் சக்கைப்புளிக்கறி என்று அழைக்கக் கூடாது. நீதிபதி ஆணை!’ அக்குடும்பம் ஊரைவிட்டே போகவேண்டியிருந்தது. சமீபகாலம் வரைக்கும் அந்த சாலைச்சந்திப்புக்கே சக்கைப்புளிக்கறி ஜங்ஷன் என்றுதான் பெயர்
திருச்செங்கோட்டைப்பற்றி மலையாள தொலைக்காட்சி பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தால் முக்கியமான சுற்றுலாத்தலமாக அதை கவுண்டர்கள் மாற்றிவிட்டது தெரிகிறது. வாழ்க.