கேள்வி பதில் – 20

ரசனைகள் மாறும் பொழுதில் படித்த படைப்புகளின் தாக்கம் குறையுமானால் அது நல்ல படைப்பா?[உதாரணமாக பத்தாம் வகுப்பு படித்த போது ஒரு எழுத்தாளரின் கதை என்னை வெகுவாகப்பாதித்து கலவரப்படுத்திக்கொண்டிருந்தது. இன்றைய பொழுதில் அதன் தாக்கம் என்னிடம் கொஞ்சம் கூட இல்லை. இதெல்லாம் கதையா என்பது போலக் கருதுகிறேன். எங்கே தவறிருக்கிறது? இப்படியே போனால் இன்று சூப்பர் என்று சொல்லத்தோன்றும் ஜெயமோகனின் கதைகளில் சில கூட இருபது வருடங்கள் கழித்து அப்படித்தான் நினைக்கத்தோன்றுமா?]

— எம்.கே.குமார், சிங்கப்பூர்.

மனிதர்கள் மாறும்போது ரசனை மட்டுமல்ல கருத்துகள், நம்பிக்கைகள் எல்லாமே மாறும்; படைப்புகளின் தாக்கம் குறையும். ஒரு படைப்பின் தாக்கம் ஒட்டுமொத்தச் சமூகத்திலும் குறையுமென்றால் அது நல்ல படைப்பல்ல எனலாம். ஒரு மனிதனைப் பொருத்தவரை அதன் தாக்கம் குறைய எத்தனையோ காரணங்கள் உண்டே? முக்கியமான காரணம் நாம் அப்படைப்பின் சாரத்தை உள்வாங்கி அதைவிட வளர்ந்திருக்கிறோம் என்பது.

இளம்வயதில் உலகம் நாம் வெல்ல வேண்டிய ஒன்றாக நம்முன் கிடக்கையில் சாகசம் பிடிக்கிறது. பின்பு உறவுகள் பற்றிய எழுத்து. பின்பு சாராம்சங்கள் குறித்த எழுத்து. பின்பு உறுதிப்பாடுகளை அளித்து ஆறுதல் அளிக்கும் எழுத்து. இது தான் பொதுவான வாசகப்பயணத்தின் வரைபடம், இல்லையா?

இதற்கப்பால் ஒவ்வொருவருக்கும் உரிய தனிப்பட்ட வாழ்க்கையனுபவங்களும் உள்ளுணர்வின் பரிணாமமும் ரசனையைத் தீர்மானிக்கிறது. என் அனுபவங்களும் உள்ளுணர்வும் காஃப்கா, காம்யூ போன்றவர்களின் சுருங்கும்தன்மை கொண்ட வாழ்க்கைப் பார்வையை முற்றாக நிராகரிக்கிறது. என் ஆதர்சப் படைப்பாளியான தல்ஸ்தோயை அப்படி இன்னொருவர் நிராகரிக்கலாம்.

மேலும் வாசிப்பில் இரு கட்டங்கள் உண்டு. முதிராவாசிப்புக் காலம் இருபது வயது வரை இருக்கலாம். அப்போது புனைவைப் பரிசீலிக்கும் அளவுகோலாக நம்மிடம் யதார்த்தப் பிரக்ஞை இருப்பது இல்லை. சிலருக்கு இப்பருவம் இறுதிவரை நீளலாம். யதார்த்தப் பிரக்ஞை உருவாகியபிறகு அதன் எதிர்விசையைத் தாண்டி நம்மைக் கவர்ந்த நூல் அவ்வளவு எளிதில் பின்தங்கிவிடாது.

நல்ல எழுத்து ஒருவனைச் சாலையில் எதிரே வந்து சந்தித்துப் பின்னகரும் ஒன்றாக இருக்காது என்பதே என் எண்ணம். கூடவே சிலகாலம் வந்து, நாம் கைவிடவே முடியாத ஒன்றை அளித்துவிட்டு விடைபெறும் ஒன்றாகவே அது இருக்கும். அப்படித்தான் என் எழுத்துகளை நான் நினைக்கிறேன். காரணம் நல்ல எழுத்து ஒற்றைப்பரிமாணம் கொண்ட ஒன்றல்ல. நம் மனம் முதிரும்தோறும் அதில் மேலும் அதிக வாசல்கள் திறக்கும். நல்ல இலக்கியங்களின் பண்பு அப்படிப்பட்டது.

பேரிலக்கியங்கள் நம்மால் ஒருபோதும் வாசித்து, கடந்துசென்றுவிடக் கூடியவை அல்ல. வியாச மகாபாரதத்தை, கம்பராமாயணத்தை ஒருவர் கடந்து சென்றுவிடமுடியுமென நான் நம்பவில்லை.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 19
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 21