காடன்விளி [சிறுகதை]

il_340x270.1274577788_7wki

 

தூரத்துச்சொந்தம் என்பதனால் அவர்கள் நேராக எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டார்கள். அம்மாவும் பெண்ணும் சாயந்தர நேரத்தில் ஆற்றுக்கு அக்கரையில் ஒற்றைக்காளை வண்டியில் வந்து இறங்கினார்கள். கிழக்குத் திண்ணையின் விளிம்பில் நின்று தூரத்தில் சரிந்த செம்மண் சாலைமீது மஞ்சள் ஒளியில் அவர்கள் மெல்ல நடந்து வருவதைக் கண்டேன். அம்மா வலது இடுப்பில் கனத்த நார்ப்பெட்டியை வைத்து மறுபக்கமாக சரிந்து கைகளை வீசி நடந்தாள் . பெண் சாயப்புடவை கட்டி முந்தானையை நன்றாக போர்த்து சிலை நடப்பது போல. வண்டிக்காரர் காளையை அவிழ்த்துக் கட்டியதும் வண்டிக்குள்ளிருந்து ஒரு நார்ப்பெட்டியை கனத்து தூக்கி தலைமீது ஏற்றி அதன் எடையினடியில் அமுங்கி கைகளை வீசி ஓட்டமும் நடையுமாக வந்தார். நான் உள்ளே ஓடி அம்மாவிடம் ‘அம்மா அவங்க வந்தாச்சு! ‘ என்றேன்.

அம்மா ஒன்றும் சொல்லாமல் சோற்றுப்பானை மூடியைத் திறந்து கொதிக்கும் அரிசிநீர் மீது அகப்பையைப் போட்டு இளக்கினாள். ‘ அம்மா.. ‘

‘போடா. வந்தான்னா வருவாவ … ‘ என்று அம்மா திரும்பி சீறினாள்.

எங்கள் வீட்டுக்கு விருந்தாளிகள் வருவதேயில்லை .ஊர் மலைக்கு அடிவாரத்தில் . பண்ணிப்பொத்தை தாண்டினால் காடன்மலையின் புதர்களடர்ந்த ஏற்றம் . உச்சியில் கரிய எருமைப்பாறை. அதன் பெயர் காடன்சிரசு என்று அம்மா சொல்வதுண்டு. அதன் மீது ஒரு குழி உண்டு, அதுதான் காடனின் ஒற்றைக்கண். காடனுக்கு இரவிலும் கண்தெரியும். காடன் பார்வையை சுவர்கள் கூட மறைக்க முடியாது. காடனின் கண்கள் ஊரிலுள்ள அத்தனை பேரையும் எந்நேரமும் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களின் தவறுகளை காடன் கணக்கு வைத்திருக்கிறான் .ஒரு நன்மை செய்தால் ஒரு தவறை கழித்துக் கொள்வான். தவறுகளின் கணக்கு ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டும் போது காடன் மலையில் உள்ள ஏராளமான கரியபாறைகள் உருண்டு வந்து ஊர் மீது சரிந்து அத்தனை பேரையும் அழித்துவிடும். இதுவரை ஆறுமுறை அப்படி ஊர் அழிந்திருக்கிறது .இனி ஏழாவது முறை. அதன் பிறகு ஊரை யாருமே உண்டுபண்ண முடியாது. நான் இரவில் தூங்கும் போது தலைக்குமேல் தேங்கிய இருளுக்குள் கரிய கனத்த மெளனமான குளிர்ந்த பெரும் பாறைகளைத்தான் உணர்வேன். பாறைகளின் பார்வையை பயந்தோ என்னவோ எங்கள் ஊருக்கு யாருமே வருவதில்லை. கிழங்கு, தேங்காய், பாக்கு வியாபாரிகள் வருவார்கள். ஒரே ஒரு முறை காடன்கொடை நடந்தபோது மட்டும் ஊரெல்லாம் ஆட்கள் நிரம்பி நெரிந்தார்கள். ஆற்றங்கரையெல்லாம் மலம் குவிந்து கிடந்தது. பிள்ளையார் கோவில் முன்னால் உள்ள துறப்பு முழுக்க ஆட்கள் தங்கி வெட்டவெளியில் கல்மூட்டி சமைத்து சாப்பிடும்போது அந்தி மங்கலில் தீச்சுவாலைகள் அப்பகுதியில் சிவந்த பூக்கள் மலர்ந்து மண்டிவிட்டன என்று எண்ணச் செய்தன.

அவர்கள் ஆற்று நீரில் இறங்கி விட்டார்கள் என்பதைக் கண்டேன். அப்பெண் சிலைபோல நடந்து ஆற்றங்கரை புங்கமரத்தின் வேர்ப்படிகளில் ஏற அவள் அம்மா பின்னால் நார்ப்பெட்டியுடன் சிரமப்பட்டாள். அப்போதுதான் எனக்கு கவனத்துக்கு வந்தது , சுமையை அம்மா தூக்க மகள் அதை தொடக்கூட இல்லை என்பதை. அவளை கூர்ந்து பார்த்தேன் . அவள் பொம்மை போலத்தான் இருந்தாள். எங்கள் தோட்ட முகப்பில் ‘ஏமான், கொச்சேமான் ‘ என்ற மூச்சிளைப்புக்குரல் எழுந்தது . வண்டிக்காரர் முன்னால் வந்து மூங்கில்படல் கதவுக்கு அப்பால் நின்றுகொண்டிருந்தார். நான் ஓடிப்போய் படலை திறந்தேன். அவர் நார்ப்பெட்டியை கொண்டுவந்து திண்ணையருகே இருந்த சுமைதாங்கிப்பலகை மீது இறக்கி வைத்தார். முதுகிலும் மார்பிலும் வியர்வை வழிந்தது. சும்மாடாக வைத்திருந்த துண்டை எடுத்து முகத்தை அழுத்தி துடைத்தபடி திண்ணையில் அமர்ந்து ,திண்ணைக் கல் மீது செதுக்கப்பட்ட வெற்றிலைதாலத்தில் இருந்த மூன்று வெற்றிலைகளை எடுத்து நீவி நுனி கிழித்து நரம்பை உரித்தார்.

அம்மா உள்ளிருந்து ஈரக்கையை துடைத்தபடி வந்தாள். படலைத் திறந்தபடி அந்த பாட்டி உள்ளே வந்தபோது அவள் வேட்டி நுனி முள்ளில் மாட்டியது. சுழன்று அதை விடுவித்துக் கொண்டு முன்னால் வந்தாள். அம்மா ஓடிப்போய் பெட்டியை வாங்கியபடி , சிரித்து ‘ வரணும் நாத்தூனே. …காலத்தே புறப்பட்டதா ? ‘ என்றாள் .

‘ஓ ஒண்ணும் சொல்லாண்டாம் மீனாட்சியே. கர்மம் , அல்லாமெ என்ன ? ‘ திரும்பி ‘வாடி ‘ என்றாள். அப்பெண் நடந்து வந்தபோதுதான்

அவளது நடையில் உள்ள விசித்திரத்தன்மை என் கவனத்துக்கு வந்தது. அவள் கைகளை அசைப்பதேயில்லை, சட்டுவம்போல செங்குத்தாக இறுக்கமாக உடலோடு சேர்த்து வைத்திருந்தாள். கழுத்தும் விரைப்பாக இருந்தது.

‘வா லலிதே . உள்ள வா ‘ என்றாள் அம்மா. அவள் சிரிக்காமல் படிஏறினாள்.

அம்மா அவர்களை தேங்காயறைக்கு கொண்டு சென்றாள். அங்கிருந்த தேங்காயெல்லாம் மச்சிலே போட்டு, சுத்தம் செய்து கட்டில் போடப்பட்டிருந்தது. ‘ ஷீணம் மாத்துங்க நாத்தூனே. லலிதா நீ வேணுமானா கொஞ்சநேரம் படுத்துகோ.. ஷீணம் காணும் ‘ என்றாள் அம்மா.

‘படுத்துக்கோட்டா ‘ என்று அந்த பாட்டி சொல்லி என்னிடம் சிரித்து ‘ உம்பேரு என்னலே ? ‘ என்றாள்.

‘அப்பு ‘

‘ஸ்கூள்ப்பேரு ? ‘

‘கெ. நாராயணன். ‘

‘பாட்டிகிட்ட வா மக்கா. உனக்கு நான் என்ன கொண்டு வந்திருக்கேன் தெரியுமா ? ‘ என்றபடி நார்ப்பெட்டியை திறந்து ஒரு சுருக்குப்ப்பையை தந்தாள். அதற்குள் பொரிகடலை இருப்பதை காண்பதற்குள்ளேயே அறிந்துவிட்டிருந்தேன். எனக்கு மூக்கு துல்லியம்.

‘எத்தனாம் கிளாஸ் படிக்கே ? ‘

‘ ஆறு. இந்த அக்காவுக்கு காச்சலா ? ‘

‘இல்ல மக்கா. சாமி கும்பிடல்லா போறம் ‘

‘எந்த சாமி ? ‘

‘மலைக்காடன்சாமிதான். இனிமே எல்லாம் காடன்தான் பாத்துக்கிடணும். ஏழைகளுக்கு வேற ஆருண்டு ? ‘

நான் பிரமித்து ‘காடன்மலைக்கு இந்த அக்கா ஏறிடுவாங்களா ? ‘

‘ஏறித்தானே ஆகணும் ? ஏழைக்கு வேற கெதி என்ன ? ‘ பாட்டி சட்டென்று கண்கலங்கி ‘ கிளிபோல வளத்தேனே. தெய்வங்களுக்கு கண்ணில்லையே…. ‘ என்றாள்

அக்கா எதையுமே கேட்டதாக தோன்றவில்லை. மிகமெலிந்து, சருமம் வெளுத்து, நோயாளிபோல இருந்தாள். அதே இறுக்கத்துடன் உட்கார்ந்து சுவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘வா மக்கா , மேலு கழுவி ஒரு வாய் வெள்ளம் குடிக்கணும்.. என்னப்போ முருகா! ‘

பாட்டிக்கு அம்மா வெந்நீர் பொட்டுக் கொண்டிருந்தாள் . செம்பு அண்டாவின் கீழே உலர்ந்த மட்டைகள் மீது தீ நடனமாடியது .அம்மா நெற்றியில் கரியுடன் திரும்பி ‘ குளிக்கலாம் நாத்துனே. நான் சாயா போடுதேன் ‘ என்றாள்.

‘உம். முருகா ‘ என்று பாட்டி உட்கார்ந்தாள். ‘நாளைக்கு மலை ஏறிப்போடலாம் . மழையில்லண்ணா கொள்ளாம் ‘

‘வந்த காலிலே போணுமா ? ஒரு நாள் ஷீணம் மாற்றி போனா என்ன ? ‘

‘அய்யோ எனக்க மீனாட்சியே, அங்க எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கெடியே. ஆருமில்ல. பிராயம் வந்த பெண்ணை பக்கத்துவீட்டில விட்டுப்போட்டாக்கும் வந்தது.. மலையெறங்கி நேராட்டு அப்டியே போலாமிண்ணாக்கும் இப்பம் .. ‘

‘அய்யோ… எறங்கி வாறதுக்கு ராத்திரியாயிருமே ‘

‘என்ன , வண்டிதானே ? போற கட்டை அப்ப்டியே செத்தாலும் செரிதான்.போ…. முருகா ‘

‘என்னலே அது ? ‘ அம்மா கேட்டாள்

‘பொரிகடலை. பாட்டி தந்தது… ‘

‘அம்பிடும் இப்பமே வாரி கேற்றவேண்டாம் . கொண்டு வை ‘

‘குமாரன் எங்கே ? ‘என்றாள் பாட்டி

‘தெக்கும்புரயிடத்திலே இண்ணைக்கு கொத்திநிரத்து . வாற நேரம்தான் ‘ அம்மா எழுந்து ‘ சங்கரன பிறகு ஆராவது பாத்து பேசினாகளா ? ‘ என்றாள்

‘ஓ, இனிமே பேசி ஒண்ணும் இல்ல . அவனுக்க காரியம் இனி பேசவேண்டாம் மீனாட்சியே. சக்கைஅரக்கிலே ஒட்டின ஈச்ச போலயாக்கும் ‘ ‘

‘அவளைக் கண்டா பண்ணி போலல்லா இருக்கு ? என்னத்த கண்டானோ. தங்கக்கொடம் போலத்த பெண்ண விட்டுட்டு… ‘

‘அதெல்லாம் ஈஸ்வரனுக்க களி கேட்டயா ? நான் இப்பம் அப்பிடித்தான் நினைக்கியது .இல்லேண்ணா இதுக்கெல்லாம் ஒரு நியாயமும் இல்லை… இந்த காரியத்தில மட்டும் ஓரோருத்தனுக்கு என்ன வேணும், எதுலே சந்தோசம் ஒண்ணும் சொல்ல முடியாது… ‘

அம்மா என்னைப்பார்த்த்து ‘போடா, அப்பா வாறாரா பாரு ‘என்றாள்

நான் திண்ணைக்கு வந்தபோது வண்டிக்காரர் படுத்துவிட்டிருந்தார். என்னிடம் ‘ கொச்சே , கஞ்சி கலம் எடுத்து உள்ள வைக்கணும் ‘ என்றார். அவர் கஞ்சிகுடித்த மண்சட்டி சுத்தமாக கழுவப்பட்டு ஓரமாக இருந்தது.

அவர் என்னிடம் பெயரும் படிக்கும் வகுப்பும் கேட்பதை தவிர்க்கும் பொருட்டு நான் படலை தாண்டிச் சென்று நின்றேன். வெயில் மங்கிவிட்டது. பறவைகள் கூட்டம் கூட்டமாக சென்றுகொண்டிருந்தன. தொலைவில் ஆற்றங்கரையின் விளாமரத்தின் மீது வவ்வால்கள் கலைந்து எழுந்து சுழன்றன. நேரம் வேகமாக இருட்டியது.

அப்பா கழுவிய மண்வெட்டியை தோளில் வைத்துக் கொண்டு வந்தார். ‘ம்ம் ? ‘ என்றார்.

‘ஒரு பாட்டியும் அக்காவும் வந்திருக்காங்க ‘

‘ம் ‘ என்றபடி முன்னால் நடந்தார். அவர் திண்ணைக்கு ஏறியதும் வண்டிக்காரர் எழுந்து ‘ கண்டம் கெளைப்பா ? ‘ என்றார்.

‘ஒரு துண்டு கெடந்தது. செரி நாலு கம்ப ஊணிவச்சா மழையில குருக்குமேண்ணு பாத்தேன். ‘ என்றபடி அப்பா திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலையை எடுத்தார். ‘எப்படியாக்கும் காரியங்க போவுது ? மழை உண்டுமா ? ‘

‘மழையெல்லாம் கணக்குதான். மரச்சீனிக்கு பழுதில்ல. கருங்கல் பக்கமாட்டு நெல்லுக்கு குறே அடி உண்டும். ‘

‘இந்த வருசம் கெழங்கு என்ன கணக்குக்கு போவும்ணு நெனைக்கேரு ? ‘ அப்பா என்னை பார்த்து ‘போ, புக் எடுத்து நல்ல நாலு எழுத்து படிக்கமுடியுமா பாரு ‘ என்றார்

நான் உள்ளே போன போது அந்த அக்கா அப்படியே அதே போல அமர்ந்திருப்பதைக் கண்டேன். புத்தகத்தை எழுத்துக் கொண்டு பத்தாயம் மீது எரிந்த குத்து விளக்கருகே அமர்ந்து எழுத்து கூட்டிப் படிக்க ஆரம்பித்தேன்.

வண்டிக்காரர் ‘அப்பம் நான் எறங்குதேன். இருட்டு கேறிபோச்சு . காளை ஒற்றைக்காக்கும் நிக்குது. புலியெறங்குத ஊரு ‘ என்றார். ‘நான் காலம்பற வாறேன். ‘

‘ம் ‘ என்றார் அப்பா வெற்றிலை மென்றபடி

‘ அம்மிணிக்கிட்ட நல்லதா பேசி வச்சுக்கிடணும். கட்சீல மலை கேறினபிறகு அய்யோ அமம்மாண்ணு ஆயிட்டா நல்லதுக்கில்ல ‘

‘ம் ‘

அவர் போனதும் பாட்டி மெல்ல வந்து அப்பாவின் அருகே அமர்ந்தாள். அப்பா திரும்பாமலே இருட்டை பார்த்திருந்தார்.

‘காலம்பற எந்திரிச்சு மலைகேறி பொலிய போடுட்டு வந்திட்டா கொள்ளாம் குமாரா ‘

‘ம் ‘

‘இனி வேற கெதியில்ல. ஏழைண்ணா சாமிகளுக்கும் எளக்கமாக்கும். ‘

‘கஞ்சி குடிச்சாச்சா ? ‘

‘குடிக்கணும் .நீ வரட்டுமிண்ணு நிண்ணேன். ‘

‘ம் ‘

‘சின்னவளுக்கு ஒரு ஆலோசனை வந்திட்டுண்டு. கேக்குதது கூடுதலுதான்.பையன் போலீஸுகாரன். சர்க்காரு காசுண்ணா அதுக்கொரு உறப்புண்டு . ‘

‘என்ன கேக்கான் ? ‘

‘வீடும் புரயிடமும் கேக்கான். வீடில்லண்ணா அம்பது பவன் ‘

‘வீட்ட குடுத்துட்டு நீ தெருவிலயா கெடப்பே ? ‘

‘குடும்பவீட்டில எனக்கும் பங்குண்டில்லா ? ஒத்தைக்கு ஒரு ஒரு கிழவி . இனி எத்திர நாளைக்கு ? ‘

‘பாத்து செய்யணும் ‘

‘சர்காருக்க ஒரு கண்ணுண்டில்லா ? பிடிக்கல்ல போடாண்ணு சொன்னாண்ணாக்க போய் சொல்ல மேல சிலரு உண்டில்லா ?அது போரும்… ‘

அப்பா ஒன்றும் சொல்லவில்லை.

பாட்டி சிறிது நேரம் கழித்து பெருமூச்சுவிட்டாள் . ‘ ஈரேழு ஜென்மத்தில மோட்சம் கிட்டாது. அது எனக்கு தெரியாம இல்லை. கிடந்தா கண்ணடயல்ல எனக்கு…. ‘

‘நீ கண்ட கச்சடயெல்லாம் நினைச்சு குழப்பாண்டாம். ஒக்கே காடன் சாமிக்க விளியாக்கும். நீயும் நானும் ஆரு ? புழு, பக்கி போல.டதுக்கும் கீழ . வேற என்ன ?சிந்திச்சு தலைய கனக்க வைக்கிறதில ஒரு காரியமும் இல்ல ‘

‘இருந்தாலும் குமாரா, தலையிலயும் இடுப்பிலயும் வச்சுல்லா வளத்தேன் ? பெத்த வயிறுல்லா ? ‘ பாட்டி விசும்பி அழுதாள். அழுகை அதிகரித்து மார்படைத்த விசித்திரமான ஒலிகளுடன் குலுங்கி அதிர்ந்தாள்.

அம்மா உள்ளறையில் நின்று ‘டேய் நீ கஞ்சி குடிச்சிட்டு படு ‘ என்றாள்.

‘பாட்டி ? ‘

‘பாட்டியும் அப்பாவும் பிறகு குடிப்பாங்க ‘

வழக்கமாக எங்கள் வீட்டில் இரவில் மயக்கிய மரச்சீனி கிழங்கும் கஞ்சியும்தான். அன்று அம்மா பப்படம் பொரித்து பயறுத்துவரனும் வைத்திருந்தாள். சாப்பிட்டதுமே எனக்கு தெற்கு சாய்ப்பில் கட்டிலில் பாய்போட்டு விட்டாள். நான் தலையணையை போட்டு படுத்து மச்சுக்கூரையை பார்ந்தேன். மச்சில் உள்ள மரப்பலகையில் விதவிதமான வடிவங்களை பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் எனக்கு தூக்கம் வரும்.

கண்ணயர்ந்து விழித்தபோது அறையெல்லாம் இருட்டு. திண்ணையில் மட்டும் ஒரே விளக்கு எரிந்தது. அதன் அருகே அப்பாவும் பாட்டியும் அம்மாவும் உட்கார்ந்திருந்தார்கள். நான் எழுந்து சென்று நின்றேன்.

‘ எல்லாம் பகவான் விட்ட வழீண்ணு வச்சுக்கோ. இண்ணைக்கு நேத்தைக்கு உள்ள சம்பிரதாயமில்லை . நம்ம குடும்பத்திலே மட்டும் இதும் நானறிஞ்சு அஞ்சாவது. காடன்விளியை ஆரு தடுக்க முடியும் ? அவன் கண்ணு படாத எடம் எங்க இருக்கு இந்த ஏழுதேசத்திலே ? ‘ என்றார் அப்பா.

‘காடன்விளி வந்த பெண்ணுக்கு ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆனாக்கா அந்த விளி குடும்பத்தில அடுத்த பெண்ணுக்குல்லா வரும். வந்த விளி கொண்டுட்டுதான் போகும் .அது உறப்பாக்கும் ‘ என்றாள் அம்மா ‘என்னலே ? ‘

‘ஒண்ணுக்கு ‘

‘வா ‘ என்று எழுந்து என்னை அழைத்துசென்று மாமரத்தடியில் ஒன்றுக்கு இருத்தினாள்.

‘அம்மா காடன்சாமி ஏன் எருமை மாதிரி இருக்கு ? ‘

‘அதெல்லாம் நாளைக்கு பேசலாம் . நீ போய் படு ‘

இரவு ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. மரங்களின் வழியாக காற்று சலசலவென்று கடந்து சென்றது. எனக்கு ஏனோ புல்லரித்தது. எருமை ஒன்று காதுகளை அடிப்பதுபோன்ற ஒலிகேட்டது. எங்கள் தொழுவம் தோட்டத்தில் இருந்தது. ஜான்ரோஸ் அங்கே படுத்திருப்பான். அவன் எடத்துவா பள்ளிக்கு நேர்ச்சைக்கு போகும்போது நான் அப்பாவுடன் போய்ப் படுத்திருப்பேன். இரவில் தூங்கி எழும்போது எருமைகள் காதை அடிக்கும் ஒலிகள் கேட்கும்.

‘வாடா எம்பிடு நேரம் ? ‘

‘அம்மா எருமைச்சாணி மணக்குல்லா ? ‘

‘ஆமா, எருமைச்சாணி. போய் படுலே ‘

அறைக்குள் அந்த அக்கா அப்படியே உட்கார்ந்திருந்தாள். முகம் இருட்டுக்குள் இருந்தது. நான் படுத்துக் கொண்டு போர்வையை எடுத்து தலைக்கு மேல் போர்த்தினேன். வெளியே ஏராளமான பறவைகள் தென்னை ஓலைகள் வழியாக ஊடுருவிப்பறப்பது போல காற்று ஓலமிட்டது. வெகுநேரம் எதையோ எதிர்பார்ப்பதுபோல அசையாமல் படுத்திருந்தேன். பின்பு தளர்ந்து தூக்கத்தில் விழுந்தபோது எருமையின் காதடியொலி கேட்டது. நான் அம்மா அம்மா என்று கூவினேன், ஆனால் குரலே எழவில்லை என்பதையும் உணர்ந்தேன். நான் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை , எல்லாம் கனவு என்று தோன்றியது. எவ்வளவு திமிறினாலும் விழித்து எழ முடியவில்லை.

விழித்துக் கொண்டபோது காடன்மலையின் உச்சிப்பாறையை தெளிவாக காணமுடிவது போலிருந்தது. எப்படி , நான் வீட்டுக்குள்தானே படுத்திருக்கிறேன் என்ற எண்ணமும் ஊடே எழுந்தது. அப்போதுதான் அந்த மூச்சொலியை கேட்டேன். திரும்பிப் பார்க்க முயன்றாலும் கழுத்துப் பொருத்துக்கள் இறுகி அசைவின்றி இருந்தன. காதுகளை அடிக்கும் ஒலி. கனத்த குளம்புகள் தரையை அழுந்த மிதித்து செல்லும் ஒலி. சட்டென்று மூக்கை அடைக்கவைக்கும்படி எருமைச்சாணியின் வீச்சம் எழுந்தது .

எருமை தன் கனத்த உடலுடன் ரகசியமாக வீடு முழுக்க நடந்தது . சுவர்களை அதன் உடல் உரசிச் செல்லும் ஒலி. மூலைகளை அது முகரும் ஒலி. அது என்னை நெருங்கி வருவதை என் சருமம் கண்டது . எருமை திமில் அசைய அழுத்தமான நிதானத்துடன் வந்து என் கட்டிலின் கால்களை முகர்ந்தது. மூச்சின் காற்றில் கட்டில் மெல்ல அதிர்ந்தது. கனத்த உடலுடன் அது மெல்ல திரும்பி அம்மாவின் கட்டிலை நெருங்கி அசைவற்று நின்றது. அது அங்கே இல்லை என்றும் எல்லாம் கனவு என்றும் தோன்றும் அளவுக்கு மெளனமாக நின்றது. வெகுநேரம். பின் அதன் கரிய சருமம் சற்றே அசைய பின் தொடைகளின் இறுகிய தசைநார்கள் நெகிழ்ந்து இழுபட அக்கணத்தில் நான் எழுந்து ‘அம்மா ‘ என்றேன் .

முதலில் இருட்டில் எதுவுமெ தெரியவில்லை . எருமை அப்படியே பின்னால் காலெடுத்து வைத்து இருளுக்குள் நகர்ந்து சென்ற பிறகுதான் சன்னல் வழியாக வந்த நிலவொளி தெளிந்தது .அம்மாவின் முகம் மீது நிலவின் ஒளி மாமர இலைநிழல்களுடன் அசைந்தது. அவள் முகத்தில் தாங்கமுடியாத எதையோ பார்ப்பது போல தவிப்பு தெரிந்தது. அழப்போகிறவள்போல. ‘அம்மா அம்மா ‘ என்று பீதியுடன் அநை¢த்தேன். அவள் கேட்கவில்லை. முகத்தில் மெல்ல ஒரு புன்னகை விரிந்தது . முகம் நன்றாக ஒளிபெற்றது. அம்மாவை அந்த அளவுக்கு அழகாக நான் பார்த்ததே இல்லை .சன்னலைப்பார்த்தேன். காற்றில் கிளைவிலக நிலவின் வட்டம் நன்றாக தெரிந்தது. கிளை திரும்பிவர அம்மாவின் முகம் சாதாரணமாகியது. ஆழமான தூக்கத்தின் ஒலி சீராக கேட்டது.

இருட்டையே கூர்ந்து பார்த்தேன், அங்கே அது நிற்கிறதா என. இல்லை என்று பொதுவாக தோன்றினாலும் கூர்ந்து பார்த்தால் கரிய சருமத்தின் அசைவை காணவும் முடிந்தது. கட்டிலில் துவண்டு சரிந்து உடல் மோத விழித்த போதுதான் நான் தூங்கி விட்டிருப்பதை அறிந்தேன். ஒரு கணம் அப்படியே பிரமித்து இருந்தபிறகு பாய்ந்து எழுந்து அறை வாசலுக்கு சென்றேன். வீடு முழுக்க ஒரு விரைப்பு பரவியிருந்தது. சுவர்கள் தொங்கவிடப்பட்ட சீலைகள் போல நெளிந்துகொண்டிருந்தன. வெகுதொலைவில் யாரோ சிணுங்கி அழுவது போலவும் உரக்க மூச்சுகள் விட்டு ரகசியமாக ஏதோ சொல்வது போலவும் கேட்டது. சில நிமிடங்கள் கழித்து அது தேங்காயறையில் என்று கண்டேன்.

தேங்காய் அறையின் கதவு இறுக மூடியிருந்தது . அதற்கு உள்ளே தாழே இல்லை என்று நினைவு கூர்ந்தேன். எங்கள் வீட்டில் வச்சுபூட்டு அறைக்கு மட்டும்தான் உள்ளே தாழ். உள்ளே யாரோ கதவை அழுத்திப் பிடித்திருக்கிறார்கள். கதவின் பலகை இணைப்பின் இடுக்கு வழியாக உள்ளே கூர்ந்து பார்த்தேன். சிணுங்கல்களும் மூச்சுகளும் உடலசைவு ஒலிகளும் . கண்கள் தெளிவு கொண்டபோது எருமையை கண்டேன். அதன் கரிய பின்பக்கம் ஈரமான மலைப்பாறைபோல மெல்லிய பளபளப்பு கொண்டிருந்தது. அது அசைவில் திரும்பியபோது கொம்பு ஒன்று தெளிவடைந்து வந்தது. கொம்பின் கரிய வழவழப்பு ,வரிகள், நுனியின் மொண்ணையான கூர்மை….

பிறகு எனக்கு நினைவு வந்தபோது தரையில் குப்புற விழுந்து தூங்கிக் கொண்டிருந்தேன். வாயிலிருந்து எச்சில் வழிந்து தரையில் பரவியிருந்தது. துடைத்துக் கொண்டு எழுந்து தள்ளாடி நடந்து என் கட்டிலில் படுத்து பலவிதமான பள்ளிகூடச் சித்திரங்கள் சிதறி அழிய தூங்கிப் போனேன்.

அம்மா என்னை உசுப்பியபோதுதான் எழுந்தேன். எதிர்ச்சன்னல் வழியாக காலை ஒளி சட்டங்களாக விழுந்து சாணித்தரை மின்ன தூசிகள் பறந்து சுழன்றன. சற்று தலை சுழன்றது.

எழுந்து போய் மாமரத்தடியில் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும்போதுதான் உலுக்கலுடன் எல்லாம் நினைவுக்கு வந்தன. சமையலறைக்கு ஓடி, தரையிலமர்ந்து கிழங்கு அரிந்து கொண்டிருந்த அம்மாவைப் பார்த்து ‘அம்மா நீ.. ‘ என்றேன்

‘என்னடா ? ‘

‘ஒண்ணுமில்லை. பாட்டி எங்கே ? ‘

‘அவங்க விடிகாலையிலேயே மலை ஏறியாச்சே ? ‘

‘எப்ப திரும்பி வருவாங்க ? ‘

‘அப்டியே போயிடுவாங்க ‘ என்றாள் அம்மா ‘ போய் பல்லுதேய். மணி எட்டாச்சு ‘

‘அந்த அக்கா ? ‘

‘சீக்கிரம் பல்லுத்தேச்சிட்டு வந்து கீழக்கண்டத்துக்கு எளங்குடி கொண்டு போடா. ‘ என்றபடி அம்மா துண்டுக்கிழங்குகளுடன் எழுந்து கொண்டாள்.

முந்தைய கட்டுரைஎன் பெயர்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைக.நா.சு.கடிதங்கள்