மின்தமிழ் அட்டை – ஒரு விவாதம்

sample8

அன்பு ஜெயமோகன்,

சரவண கார்த்திகேயன் கொண்டுவரும் தமிழ் மின்னிதழில் உங்கள் நேர்காணலைப் படித்தேன். அடர்த்தியான சொற்களில் அமைந்து வாசகனைத் தொந்தரவு செய்யும் சிற்றிதழ் பாணி தவிர்த்த கேள்விகள் மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தன. கூடவே, அக்கேள்விகள் வணிக இதழ்களுக்கான மேலோட்டமான பார்வையையும் கொண்டிருக்கவில்லை. அதற்காகவே சரவண கார்த்திகேயனைப் பாராட்டுகிறோம். மின்னிதழின் பெரும்பான்மையான பக்கங்களை உங்களின் நேர்காணலுக்காகவே ஒதுக்கி இருந்தது உறுத்தியது; உங்களைத் துதிபாடுவது போன்ற அட்டைப்படமும் நெருடலைத் தந்தது. மற்றபடி, நேர்காணலின் சில பதில்கள் வழியாகவே உங்களின் தனிப்பட்ட வாழ்வை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. அதற்காகவே தமிழுக்கு தனிப்பட்ட நன்றிகள்.

”எழுத்தில் சாதித்து விட்டதாகத் தோன்றிய பின் எழுதவே முடியாது” எனும் வாக்கியத்தில் எனக்கு முழு உடன்பாடு. என்றாலும், நம் ஒவ்வொருவர் மனமும் ஏதாவது காரியத்தை(உங்களுக்கு படைப்பு) முடித்தபின் ’ஏதோ சாதித்த நிறைவை’க் கொஞ்ச நேரமேனும் அனுபவித்தே தீருகிறது என நான் நம்புகிறேன். அந்நிறைவு அப்படியே நீடிக்காமல் கலைய அனுமதிப்பதலேயே நம்மால் இயங்கவும் முடிகிறது என்பதும் என் கோணம். தங்கள் செயல்களில் ’சாதிக்கும் நிறைவை’ எப்போதும் கொண்டவர்கள் கருத்தியல்வாதிகளாகவும், இலட்சியவாதிகளாகவும் உலா வருகிறார்கள். அரசியலில் சாதிப்பவர்களே அதிகாரத்தைப் பிடிக்கின்றனர். இலக்கியவாதிகள் என வெகுமக்கள் தளத்தால் கொண்டாடப்படும் பலர் இன்று அரசியல் பின்புலத்தால் இயக்க்கப்படுகின்றனர். அவர்களால் இலக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலாகி வருகிறதோ எனும் அச்சமும் எழுகிறது.

அம்மா தற்கொலை செய்து கொண்டபோது தங்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என என்னால் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. எதார்த்தம் கற்பனைகளையே விஞ்சக்கூடியது என்பதை வாழ்வு நமக்கு உணர்த்தியபடியே இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் மரணம் நிச்சயம். அது எப்போது எனும் புதிரை விடுவிக்கத் தெரியாதவர்களாகவே இன்றுவரை நாம் இருக்கிறோம். அம்மாவின் மரணமும், நண்பனின் மரணமும் நீங்கள் நிச்சயம் எதிர்பாராதவை. அதனாலேயே அதிகம் அலைக்கழிக்கப்பட்டீர்கள். என் வாழ்வில் நான் என் அப்பா மற்றும் பாட்டியின் மரணத்தை எதிர்பார்த்தே இருந்தேன். என்றாலும், அலைக்கழிக்கப்பட்டேன். எதிர்பார்ப்பும், எதிர்பாராமையும் நம்மைத் திகைக்க வைக்கின்றன. எதிர்பார்த்து இருந்தால் அவதியுற்றிருக்க மாட்டேன் என்றும், எதிர்பாராமல் இருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டேன் என்றும் அவரவர் தளங்களில் சமாதானமும் செய்து கொள்கிறோம். வாழ்க்கை நம் உணர்வுகளையும், அறிவையும் கணக்கில் கொள்ளாது ஊர்ந்தபடியே இருக்கிறது.

என்ன செய்வது எனத் தேடித்தேடி அலைந்து நீங்கள் எழுத்துக்குத் திரும்பியதாகச் சொன்னது போன்று நான் தேடவில்லை. என்றாலும், வறட்சியாக இருந்த வாழ்வின் நாட்களால் அதிகம் துயருற்றேன். அறிவால் நான் பெற்ற கருத்தியல்வாதமும், இலட்சியவாதமும் எனக்குள் கேள்விகளையே அதிகமாக்கின. மனதின் இருமைகளால் அதிகம் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் முருகன் அறிமுகமானான். சிறுவயதில் தீவிர முருக பக்தனாக இருந்த நான் “கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்ன்னு சொல்றாங்களே.. அப்புறம் ஏன் ஆஸ்பத்திரில லட்சம் ஜனம் படுத்துக்கிடக்கு. அத்தனை பேருக்கும் திருநீறைப் பூசிவிட்டா சரியாயிட்டுப் போறான்!” எனும் பெரியாரியவாதி ஒருவரின் பேச்சால் முற்றிலும் முருகனை விட்டு விலகியவன் ஆனேன். அப்போது நடந்தவற்றை இப்படி தொகுக்கலாம். எனக்கு இருந்த நோயை முருகன் குணப்படுத்துவான் என்றே நான் நம்பி இருந்தேன். ஆனால், பலவருடங்கள் தொடர்ச்சியான வழிபாட்டுக்குப் பின்னும் நோய் குணமாகவில்லை. நோய் அதிகமாகிக் கொண்டிருந்ததுதான் மிச்சம். அச்சமயத்தில்தான் திராவிடர் கழக்க்கூட்டம் ஒன்றுக்கு என் வகுப்பாசிரியர் அழைத்துச் சென்றார். அப்போதிருந்து நான் முருகனை நம்பாதவனாக மாறிப்போனேன்.

கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின் முருகனை ’அறிவுபூர்வமாக’ மட்டுமே நான் அணுகிவந்த உண்மையை விளங்கிக்கொள்ள முடிந்தது. அது எக்கணம் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அக்கணத்திலிருந்து நான் முருகனின் சீடனாக மாறிவிட்டேன். நுண்ணுணர்வு மனநிலையோடு முருகன் வடிவில் நான் காணும் காட்சிகளில் தொல்குடிகளும் வரலாறும் மரபும் மொழியும் இன்ன பிறவும் இன்றளவும் தொடர்ந்து வருகின்றன. முருகனின் சீடனான பின்புதான் நான் ஒவ்வொரு கணமும் ‘புதியவனாக’ இருக்கிறேன். நான் காணும் முருகன் ஒவ்வொரு கணமும் புதியவன்; அவன் வடிவம் விரிக்கும் காட்சிகளும் கண்ந்தோறும் புதியவை. முழுமைக்குள் இருக்கும் என்னையும், எனக்குள் இருக்கும் முழுமையையும் அடையாளம் காட்டியவன் அவனே. இப்போது முருகன் என்பது எனக்கு அறிவுப்பூர்வமான சொல்லன்று; உணர்வுமயமான அர்த்தங்கள். ”ஏகன் அனேகன் இறைவன்” எனும் மாணிக்கவாசகனின் சொல்லாடலில் ஏகன் என்பது சொல்லையும் அனேகன் என்பது அர்த்தங்களையும் சுட்டுவதாகவே நான் நம்புகிறேன்.

விஷ்ணுபுரம் தொடர்பான கேள்விக்கான உங்கள் பதில் எளிய வாசகர்களுக்குமானது. ”தத்துவத்தைக் கற்கும் மனநிலை கொண்டவர்களாலேயே விஷ்ணுபுரத்தை வாசிக்கவும், விளங்கிக்கொள்ளவும் முடியும்” என நீங்கள் சொல்லி இருந்தீர்கள். அதில் எனக்கு ஓரளவுதான் உடன்பாடு. மெய்ம்மையை நோக்கி பித்து பிடித்த தேடலுடன் அலைந்து கொண்டிருப்பவர்களே அந்நாவலை ஓரளவுதான் நெருங்க முடியும். அந்நாவல் பலருக்கானதன்று; மிக மிகச்சிலருக்கானது. ஆழ்படிமங்களையும், தொன்மங்களையும் அறிவுத்தளம் கடந்து நுண்ணுணர்வால் அணுகுபவர்களுக்கானது. விஷ்ணுபுரம் மேலோட்டமான சொல்லன்று; உள்ளுக்குள் பன்முக அர்த்தங்களைக் கொண்டிருக்கும் ஒரு குறியீடு. “விஷ்ணு புரண்டு படுப்பார்” என்பது புராணக் கதையொன்றின் சாதாரண வாக்கியம். ஆனால், அதுதானே உங்களையே புரட்டிப் போட்டிருக்கிறது. எவ்வித அசைவுமற்ற சிலையொன்றுக்குள் அசைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தைக் கண்டு கொள்வதற்கு விஷ்ணுபுரம் வழிகாட்டுகிறது. பயணிப்பதும் மறுதலிப்பதும் நம் உரிமை.

விஷ்ணுபுரத்தை பல அமர்வுகளில் வாசித்து முடிக்க 24 மணி நேரங்களுக்கும் மேலானது. மிகச்சமீபமாய்த்தான் நான் அந்நாவலைப் படித்தேன். பதஞ்சலியின் இராஜ யோகத்தையும் தன்வந்திரியின் ஆயுர்வேத்தையும் குறித்த ஒரு பத்தி அப்படியே மனதில் திகைப்பாய் தேங்கி இருக்கிறது. அந்நாவல் தொடர்பான விரிவான பல கடிதங்களை உங்களுக்கு எழுதுவதாகவும் இருக்கிறேன்.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.

CSK

அன்புள்ள முருகவேலன்,

இலக்கிய இதழ்களைப் பற்றிய அறிமுகமின்மையே உங்களின் மனப்பதிவுக்கான அடிப்படை. வணிக இதழ்களில் அட்டையில் நடிகர் படம் வந்தால் இலக்கிய இதழ்களில் எழுத்தாளன் படம் வருகிறது.

மின்தமிழ் ஆசிரியர் சரவணக்கார்த்திகேயனின் எண்ணம் அதுவாக இருக்கலாம். அதற்கு அவரைப்போட்டு மிதித்து எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். பாவம் தேறி வரட்டும்.

PartisanReview

எழுத்தாளனுடன் மிகநீளமான ‘exclusive’ பேட்டிகள் , அவனைப்பற்றிய விரிவான எழுத்துக்கள், அவனை முன்னிறுத்தி ஓர் இதழைத் தயாரித்தல் போன்றவை இலக்கியநோக்கமுள்ள தனியிதழ்கள் என்ற கருத்து தோன்றியபோதே உடன் தோன்றியவை. என்கௌண்டர், பார்டிசான் ரிவியூ போன்ற இதழ்களின் வழிமுறை அது.

தமிழில் நமக்கு எழுத்தாளர்கள் மேல் உண்மையான மதிப்பு இல்லை. அவன் சமூகத்திற்கு எவ்வகையில் முக்கியமானவன் என்ற தயக்கம் உள்ளூர உள்ளது. ஆகவே அரசியல்வாதியோ திரைப்படக்காரரோ பெறும் முக்கியத்துவத்தை எழுத்தாளன் அடைந்தால் துணுக்குறுகிறோம். அதை வெவ்வேறு சொற்களில் முன்வைக்கிறோம்

சுபமங்களா வெளிவந்தபோது இதை கோமல் சுவாமிநாதனிடம் பேசியிருக்கிறேன். பேரிதழ்களில் சுபமங்களா எழுத்தாளர்களை அட்டையில் போட்டு விரிவான பேட்டியுடன் வந்த இதழ். அதற்கே பெரிய எதிர்ப்பு இருந்தது – இலக்கியவாசகர்களிடமே.

1

அதன்பின் சிற்றிதழ்களில் சொல்புதிது அதேபோல எழுத்தாளர்கள் மற்றும் ஞானிகளின் அட்டைப் படம்போட்டு வெளிவந்தது அதற்கு மேலும் எதிர்ப்பு. சிற்றிதழ் புனிதம் கெட்டுவிட்டது என்று. எழுத்தாளர்களை முன்னிறுத்த்லாமா என்று. அனைத்துக்கும் உலக இலக்கிய வரலாற்றில் இருந்து உதாரணம் அளித்தேன்

நான் பொதுவாக எந்த எழுத்தாளரைக் குறிப்பிடுகையிலும் படம் அளிப்பது வழக்கம். ஒரு நூலுக்குப்பின்னால் இருந்து அவ்வாசிரியன் நம்முடன் பேசுகிறான். அவனுடைய முகம் அவனை அணுகியறிய மிக முக்கியமானது. அசோகமித்திரனின் முகமும் பஷீரின் முகமும் அவர்களின் எழுத்து அளவுக்கே எனக்கு முக்கியமானது. முகமறியாத கம்பனுக்கும் வள்ளுவனுக்கும் நாம் முகம் அளித்துக்கொள்வதும் இதனால்தான்.

solputhithu

இப்போது மீண்டும் அதே விவாதம், அதே விளக்கம். தமிழில் புதியவாசகர்கள் கிளம்பி வர வர இதைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால் இது தமிழகப் பண்பாட்டுச்சூழலில் இருந்து கிளம்பி வரும் ஓர் அடிப்படை மனநிலை.

எழுத்தாளன் செத்துப்போனால் படம் போட இங்கே அனுமதி உண்டு. சின்னதாக போடலாம். ஆனால் சுந்தர ராமசாமிக்கு அஞ்சலிக்கட்டுரைகள் எழுதப்பட்டதற்கே ’விசை’ என்ற இடதுசாரி இதழ் கண்டனக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது இங்கே. சின்னச்சின்னத் தோழர்கள் செத்துப்போனதற்கெல்லாம் வருடம் முழுக்க அஞ்சலி செலுத்தும் இதழ் அது. ஆம், அதே கமிசார் மனநிலைதான்.

உதாரணமாக அக்காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம். பக்கம் முழுக்க பாவண்ணனின் முகமுள்ள பெரிய அட்டை போட்ட சொல்புதிது இதழை தன் அம்மாவிடம் ஒரு வாசகர் காட்டினார். “யாரு இவன்?” என்று அம்மா கேட்டார். அது எழுத்தாளர் என்றதும் அம்மா துணுக்குற்று, “கதை எளுதற பயலையா இம்புட்டு பெரிசா போட்டிருக்கானுவ?” என்றார். அதை அந்நண்பர் எனக்கு எழுதியிருந்தார்.அந்த மனநிலையை தமிழகம் கடக்க இன்னும் ஒரு தலைமுறை ஆகும்.

thumb

என்னைப்பொறுத்தவரை அட்டையில் வருவது புதிய விஷயமும் அல்ல. அட்டையில் நான் இடம்பெறத்தொடங்கியது நான் எழுதவந்தபோதே நிகழ்ந்துவிட்டது 1997லேயே மலையாள சிற்றிதழின் அட்டையில் இடம்பெற்றுவிட்டேன். 1998ல் குமுதம் தீபாவளி இலக்கியமலரின் அட்டையில் நான் வந்தபோது என் பக்கத்துவீட்டுக்காரர் ‘சார் உங்கள மாதிரியே ஒருத்தர்’ என வியந்தபோது நான் மறுக்கவில்லை. இத்தனை வருடங்களில் பதினைந்து முறைக்குமேல் என் படம் இதழ்களின் அட்டையில் வந்திருக்கிறது.

இருநூறாண்டு பாரம்பரியம் கொண்ட, மலையாளத்தின் மிகப்பெரிய இலக்கிய இதழான பாஷாபோஷிணியின் இந்தவருடத் தொடக்கத்தின் முதல் இதழ் அட்டையில் என் படம் இருப்பதைக் கண்டு மலையாளத்தில் எவரும் துணுக்குற மாட்டார்கள். தமிழில் நாம் சின்னச்சின்னத் துணுக்குறல்கள் வழியாகக் கடந்து சென்று அங்கே சென்று சேர்வோம்.

ஜெ

தமிழ் மின்னிதழ்

முந்தைய கட்டுரைஅன்பின் வழியே இரண்டு நாட்கள்- பூமணி விழா
அடுத்த கட்டுரைபெருமாள் முருகனை ஆதரித்து கண்டனக் கூட்டம்