பூமணி விழா -மதி

maa

விழாவில் ஜெவின் மிக அற்புதமான உரையை நேரில் கேட்கும் அனுபவம் வாய்த்தது. உரையினை சிறிய சிறிய கதைகளின் மூலமும் வாழ்க்கை அனுபவங்களின் மூலமும் ஆழமாகவும் அபாரமாகவும் கொண்டு சென்றார். குறிப்பு எடுத்துக் கொள்ளவில்லை என இப்போது வருந்துகிறேன். நினைவில் இருந்து….

சிறில் அலெக்ஸ்
சிறில் அலெக்ஸ்

மனிதனுக்கும் மண்ணுக்கும் உள்ள உறவில் தொடங்கினார்… ‘புறப்பாடு’ நாட்களில் சென்னையில் தான் ‘அத்து அலைந்த’ வாழ்வின் ஒரு நாளில் பாரீஸ் கார்னரில் தன் சொந்த ஊரின் நினைவுகள் சட்டென்று தாக்கியது போல உணர்ந்தேன் என்றார் ; சாதாரணமாக அல்ல , பின்மண்டையில் ஒரு அருவி வந்து வீழ்வது போல; ஊர் குறித்த நினைவுகள் அலை அலையாக வந்து வீழ்ந்த காரணத்தை ,அந்நிகழ்வின் திடீர்த்தன்மையை விளங்கிக் கொள்ள முயல்கையில் அருகில் இருந்த காய்கறி லாரியில் எடுத்து வரப்பட்டிருந்த சேனைக் கிழங்குக் குவியலைக் கண்டு அவை எங்கிருந்து வந்ததென விசாரித்தேன்; லாரியில் இருந்தவர் ‘அருமனை பகுதியிலிருந்து’ என்றதும் தன் மண்ணின் மணம் ஆழ்மனதைத் தூண்டி ஊர் நினைவுகளை கொண்டு வந்து கொட்டியிருக்கிறது’ என்று உணர்ந்து கொண்டேன் என்றார்.

மண்ணுக்கும் மனிதனுக்குமான உறவு அத்துணை நெருக்கமானது. அதிலும் எழுத்தாளனுக்கு மண் மீதும், மண்ணுக்கு எழுத்தாளன் மீதும் உள்ள உறவு இன்னும் ஒருபடி மேலான நெருக்கம் கொண்டது என்றார்.

செந்தில் குமார் தேவன்
செந்தில் குமார் தேவன்

நிலத்தின் ருசி மிகச் சிறிய தூர மாற்றங்களுக்குள்ளேயே மிகப் பெரும் மாற்றங்களை கொண்டிருக்கக் கூடியது என்றார். அந்த ருசி மாறுபாட்டினை, அந்நிலத்தின் பிரத்தியேக ருசியையே எழுத்தாளனின் எழுத்தும் எழுதிக் கொண்டிருக்கிறது என்றார் . அது தொடர்பான தன வாழ்க்கை அனுபவம் ஒன்றின் மூலம் அதை விரிவு செய்தார்.

தன பால்ய நாட்களில் (ஆட்டுக்)கறி சமைப்பது என்பது ஒரு திருவிழா போல கொண்டாடப் படும்;உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குடும்பங்கள் ஒன்று சேர, தேர்ந்துக்கப்பட்ட ஆடுகள் வாங்கி வரப்பட்டு சமையல் நடைபெறும் ; அதற்காக ருசி நிறைந்த ஆட்டினை வாங்க கரிசல் பகுதி வரை பயணித்து தேர்வு செய்து தன தந்தையும் நண்பர்களும் வாங்கி வருவார்கள் ; காரணம் கேட்ட போது ‘வெயில் பகுதியில் வாழும் ஆடுகள்தான் ருசி மிகுந்தவை ; அது வெயிலின் தனி ருசி’ என்று தன தந்தையார் சொல்வார் என்றார். கரிசல் நிலத்தின் வெயிலின் ருசியை எழுத்தில் கொண்டவை பூமணியின் எழுத்துக்கள் என்றார்.

ராஜகோபாலன்
ராஜகோபாலன்

உறவுகளின் வலிமையை ,வலையை சொல்லி மேற்சென்றார். தன் தந்தை வாழ்ந்த நாட்களில் அவரது நட்பு வட்டம் மிக நெருங்கிய ஒன்றாக இருந்தது , அனேகமாக அவர்கள் தினசரி சந்தித்து சிரித்துப் பேசிக் குலவுவார்கள் என்றார் .அரங்கர் ஒரு முறை தன இல்லம் வந்திருந்தபோது அவரைத் தன பூர்வீக ஊருக்கு அழைத்துச் செல்கையில், ஜெ.யின் தந்தையின் புகைப்படத்தை அரங்கர் காண விரும்பியதால் , தன தந்தையின் நண்பர் மகன் ஒருவரின் இல்லத்திற்கு ஜெ.அழைத்துச் சென்று காட்டியிருக்கிறார். ஜெயின் தந்தை இறந்த சில மாதங்களுக்குள்ளேயே தந்தையின் நண்பரும் இறந்ததை நண்பரின் மகன் மூலம் அறிந்திருக்கிறார். அவர் மட்டுமன்றி தந்தையின் மொத்த நட்பு வட்டமுமே தந்தை இறந்த இறந்த ஓராண்டுக்குள் இறந்து போனதை பின்னாட்களில் அறியவந்ததாகச் சொன்னார.

யுவன்
யுவன்

இந்த உறவின் நெருக்கத்தை கரிசல் பகுதியின் உடைமுள் தொகுதியோது ஒப்புமைப் படுத்தி அந்நிலத்தின் உடைமுள் கிளைகளை வெட்டுகையில் தனியொரு கிளையை வெட்டி எடுக்க இயலாது, ஒன்றோடு ஒன்று பிணைந்த பல்வேறு கிளைகளின் அடியை முதலில் தொடர்ந்து வெட்டிக் கொண்டே சென்று மொத்தமாக சேர்த்து ஒரு தொகுதியாகத் திரட்டியே எடுக்க இயலும் என்றார். அவ்வாறான உறவின் நெருக்கங்களை சிக்கல்களைப் பேசும் கதைகள் பூமணியின் கதைகள் என்றார்.

கவிதா சொர்ணவல்லி
கவிதா சொர்ணவல்லி

எல்லாவற்றுக்கும் மேலாக பூமணி பெருங்கலைஞனாக எழுந்து நிற்கக் காரணம் அவர் கதைகள் மீள அன்பினைப் பேசுபவை என்றார். பூமணியின் ‘வெக்கை’யிருந்து உதாரணம் சொன்னார்.பதினைந்து வயது சிறுவன் ஒருவன் தன் அண்ணனைக் கொன்ற ஒருவனைப் பழிவாங்க செய்யும் கொலையில் துவங்குகிறது கதை ; அங்கிருந்து அவனும் அவன் தந்தையும் தப்பி ஓட தலைமறைவாக பல்வேறு இடங்களைக் கடந்து பயணித்து முடிவதில் முடிந்து விடுகிறது அக்கதை.

ஆயினும் அப்பயணத்தின் ஊடாக அச்சிறுவன் பசியோடு இருந்த பொழுதென்று ஒன்று கூட இல்லை; போகுமிடம் தோறும் அன்னைகள் , அக்காக்கள், சித்திகள், மாமிகள் என்று அமுதூட்டும் கரங்களின் ஊடாக அன்பினை அவன் மேல் பொழிந்து கொண்டே இருக்கிறார்கள்.அது போல பூமணியின் அனைத்துக் கதைகளும் அன்பைச் சுட்டி செல்பவை; அன்பின் பெருவல்லமையைப் பேசும் கலைஞனை வணங்குகிறேன் என்று முத்தாய்ப்பாக முடித்தார்.

me

விழாவின் மற்ற பேச்சாளர்களான செந்தில்குமார் தேவன், ஜாஜா மற்றும் கவிதா சொர்ணவல்லியும், பேராளுமைகளான யுவன் ,சா. கந்தசாமி ஆகியோரும் அருமையாகப் பேசினார்கள்.தனாவின் நன்றியுரை சரளமாக இருந்தது. அவர்கள் அனைவர் உரைகளையும் எழுத ஆசை. பழக்கமின்மையால் எழுத்தில் சரளம் வரவில்லை.

ஏற்புரை வழங்கிய பூமணி ஒவ்வொரு வாக்கியம் பேசும்போதும் மலர்ந்தார்.மிகவும் நெகிழ்ந்து போயிருந்ததாக எனக்குத் தோன்றியது.

puu

சிறில் அலெக்ஸ் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். அவர் என் அலுவலக நண்பர் என்பதால் ஜெ.அவர்களையும் விஷ்ணுபுரம் நண்பர்களையும் அறிமுகம் செய்து வைக்கும்படி வெகு நாட்களாக நச்சரித்துக் கொண்டே இருந்தேன். இதற்கு முன் வெண்முரசு விழாவிலும் இப்போது இந்த விழாவிலும் பல்வேறு விஷ்ணுபுர நண்பர்களை மீண்டும் மீண்டும் அறிமுகம் செய்து வைத்தார்.

தனசேகர்
தனசேகர்

அவர்கள் அனைவரும் குழும எழுத்துக்கள் மற்றும் புகைப்படம் மூலம் நான் நன்கறிந்தவர்கள். மனதுக்கு நெருக்கமானவர்கள்.ஆனால் நான் குழுமத்தின் ஊமை உறுப்பினன் என்பதால் என்னை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆயினும் அன்பு பாராட்டினார்கள். இன்னும் சில விழாக்களில் பங்கேற்று என் இயல்பான தயக்கம் களைந்து அவர்களுடன் தொடர் நட்பில் இருக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் அவா மேலும் வலுப்பட்டது.என்றேனும் ஜெ.யுடனும் குழும உறுப்பினர்களுடனும் ஒரு ஐந்து நிமிடம் பேசி விடும் தகுதியைப் பெற்று விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
saka

விழா தொடங்கு முன்னர் அரங்குக்கு வெளிய சிறிலுடன் நான் பேசிக்கொண்டு நின்றிருந்த இடத்தருகே ,அரங்கருடன் வாகனத்தில் ஜெ . வந்து இறங்க, அவருக்கு சிறில் என்னையும் என் சிறு மகளையும் அறிமுகம் செய்து வைத்தது என் வாழ்வின் பொற்கணங்களில் ஒன்று !

முந்தைய கட்டுரைகாந்தி , கோட்ஸே- கடிதம்
அடுத்த கட்டுரைசக்கைப்புளிக்கறி