பெருமாள் முருகன் கடிதம் 11

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

பெருமாள் முருகனுக்கு நிகழ்ந்தது வருத்தத்திற்குரியதுதான் என்றாலும் இதில் கற்றுக்கொள்ளவேண்டிய படிப்பினைகள் நிறைய இருக்கிறது என்றே கருதுகிறேன்.. கூர் உணர்வு உள்ள பிரச்சனைகளை கையாளும்போது எழுத்தாளர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது. இது சரியா தவறா என்பது பிரச்சனை இல்லை. இதுதான் எதார்த்தம்.

இஸ்லாமியர்களை பொறுத்தவரை அல்லா, இறைதூதர், குரான் குறித்த விமர்சனங்களை அவர்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அதனை உயிரினும் மேலாக கருதுவார்கள். இதனை தெரிந்திருந்தும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவர்களைக்காயப்படுத்தும் போதுதான் பாரிஸில் நிகழ்ந்த சம்பவங்கள் போன்றவை நிகழ்கின்றன.

இதைப் போலத்தான் தமிழகத்தை பொருத்தவரை இந்து மத உணர்வு என்று ஒன்று இதுவரை இல்லை. சாதிய உணர்வுகள்தான் மேலோங்கி நிற்கின்றன. சாதிய உணர்வு போலவே பெண்களை பற்றிய விமர்சனங்களும் கற்பு பற்றிய மாற்று கருத்துக்களும் இங்கு ஏற்று கொள்ளப்படுவதில்லை. அதனால்தான் பிள்ளையார் சிலைகளை உடைத்தபொழுதும், இராமர் உருவங்களை செருப்பால் அடித்து ஊர்வலம் நடத்திய போதும், தாண்டவபுரம் நூல் வெளியானபோதும் வெளிப்படாத எதிர்ப்பு குஷ்புவிற்கும் சுஜாதாவிற்கும் ஏற்பட்டது.

சாதியம் கற்பு இரண்டையும் விவாதப் பொருளாக்கும்போது இத்தகைய எதிர்ப்பினை நிச்சயமாக எதிர் பார்த்திருக்க வேண்டும். நான்காண்டுகளுக்குப் பிறகு ஏன் இந்த எதிர்ப்பு என்று கேட்பதில் எவ்விதப் பொருளூமில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கம்ப ராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் திரு அண்ணாதுரை தீயிட சொல்லவில்லையா?தீ பரவட்டும் என்ற அவரது நூல் இன்றும் விற்பனையில் இருக்கிறதே!

எதிர்ப்பை தெரிவிப்பவர்கள் வாசகராயிருந்தால் எதிர்ப்பு உடனே வெளியாகியிருக்கும். யாரோ படித்து யாரிடமோ சொல்ல தங்கள் ஊரும் தங்கள் வழிபாட்டு முறைகளும் தங்கள் பெண்களும் கேவலப் படுத்தப்படுகிறார்களே என்ற கோபத்தின் வெளிப்பாடே இந்த எதிர்ப்புகள்! இதில் இந்து மதவாதிகளுக்கு எந்தொவொரு தொடர்பும் இல்லை என்றாலும் தமிழகத்தில் இந்து ஓட்டு வங்கி ஒன்றை உருவாக்க நினைப்பவர்கள் இம்மாதிரியான நிகழ்வுகளை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளப் பார்க்கிறார்கள். இதுதான் இன்றய அரசியலாகவும் இருக்கிறது.

ஆனால் இவற்றில் எதையும் கருத்தில் கொள்ளாது, எதோஒட்டு மொத்த இந்துக்களும் மாதொரு பாகனுக்கு எதிராகப் போராடுவதாக நினைத்து தொலை காட்சிகளில் விவாதங்களில் பங்கு பெறுபவர்கள் மாதொருபாகனை தடை செய்வதற்கு முன் மஹாபாரதத்தை கொளுத்த வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை கூறி பிரச்சனையை சிக்கலாக்குகிறார்கள்.

எல்லா மக்களுக்கும் எல்லா இயக்கங்களுக்கும் கூர் உணர்வு உள்ள அபிமானங்கள் என்று சில இருக்கின்றன.. இடதுசாரி இயக்கங்களையே எடுத்து கொள்வோம். புனைவு என்ற பெயரில் வெண்மணிநிகழ்வுகளை வேறு கோணத்தில் ஒரு புதினமாகப் படைக்க அனுமதிப்பார்களா? நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்த வந்த தொல் திருமாவளவனை வெண்மணி ஊருக்குள்ளே நுழையவே அனுமதி மறுத்தார்கள். ஏனென்றால் ஒரு வர்க்கப் போராட்ட நிகழ்வுகள் சாதிய நிகழ்வாக சித்தரிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தது. அது நியாயமான ஒன்றே.

இது போன்ற அச்சம் திருச்செங்கோடு மக்களுக்கு ஏற்பட்டிருந்தால் அதில் என்ன தவறு காண முடியும்? தங்களது ஆலயமும் அங்கு வரும் பெண்களும் மற்றவர்கள் பார்வையில் இழிவாகப் படுவார்களோ என்ற அச்சமும் கோபமும் அவர்களுக்கு ஏற்படத்தானே செய்யும். இவர்கள் மாதொருபாகனை மறுத்து புத்தகங்கள் வாயிலாக பதில் சொல்லலாமே என்பது சரியான வாதமாக இருக்க முடியுமா? திருச்செங்கோடில் பெருமாள் முருகனுக்கு இணையான இன்னொரு எழுத்தாளருக்கு அவர்கள் எங்கு போவார்கள்?

என்றாலும் பெருமாள் முருகனுக்கு நிகழ்ந்த கொடுமையினை யாரும் நியாயப் படுத்திவிடமுடியாது. கருத்து சுதந்திரம் குறித்து இன்று போப் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் எல்லோருக்கும் பொருத்தமுள்ளதாக இருக்குமென்று நினைக்கிறேன் “கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மற்றவர்களை காயப்படுத்தக் கூடாது. நண்பரே ஆனாலும் தாயைப் பற்றி தரக்குறைவாகப் பேசினால் தாக்குதல்தான் பரிசாக கிடைக்கும்” …….

கொ.வை அரங்கநாதன்

முந்தைய கட்டுரைபெருமாள் முருகன் கடிதங்கள் 10
அடுத்த கட்டுரைபெருமாள் முருகன் – 12 [கடைசியாக]