மரபும் வாசிப்பும்

அன்புள்ள ஜெயமோகன்,

    நலமா?  திண்ணை இணைய இதழில் தங்களின் பதுமை நாடகம் படித்தேன்.  வடக்கு முகம் படித்தபோது ஏற்பட்ட அனுபவமே இங்கும் ஏற்பட்டது. ஆனால் இறுதிப் பகுதியில் பீமன் திருதிராஷ்ட்ரன் மீது பாசம் காட்டும் போதும் , பதுமை திருதிராஷ்ட்ரனை ஒத்திருக்கும் விஷயம் வெளிப்படும் போதும் , கண்ணன் ‘ சில உண்மைகள் வெளிப்படுவது பெரும் பாவம்’ என கூறும் போதும் பேரதிர்ச்சி ஏற்பட்டது. சற்றும் எதிர்பாராத திருப்பம் அது. சற்றும் புரியவில்லை.

மற்றபடி இதுவும் ஒரு சிறந்த படைப்பு .மகாபாரத காவியத்தின் ஒரு சிறு பகுதியை மிக அருமையான நாடகமாக மாற்றியிருக்கிறீர்கள்.

shankaran e r

அன்புள்ள சங்கரன்

நன்றி.

ஓர் இலக்கிய ஆக்கத்தை வாசிக்கும்போது வாசகன் நிரப்பிக்கொள்ள வேண்டிய இடைவெளிகள் உண்டு. அந்த இடைவெளிகளால் ஆன ஒரு சொந்த பிரதியை அந்த படைப்பில் இருந்து அவன் உருவாக்கிக் கொள்ளுவான். அதையே மறைபிரதி [Subtext] என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு விதம் என்பதனால் ஒவ்வொரு வாசிப்பிலும் ஒரு நல்ல இலக்கிய ஆக்கம் ஒரு தனித்துவம் வாய்ந்த பிரதியை உருவாக்குகிறது. இவ்வாறு அது முடிவே இல்லாத பிரதிகளை உருவாக்குகிறது. இப்படி தன்னை பலவாக ஆக்கிக்கொள்வதன் மூலம்தான் அது இயங்குகிறது.

சொற்களால் ஆன ஒரு வடிவமே இலக்கியப் படைப்பு என்ற பேரில் நமக்குக் கிடைக்கிறது. அதிலிருந்து நாம் உருவாக்கிக் கொள்வதே இலக்கியத்தின் காட்சிகள், கதாபாத்திரங்கள், உணர்ச்சிகள் எல்லாமே. ஒருமுனையில் இருந்து எழுத்தாளன் கற்பனைசெய்கிறான். மறுமுனையில் இருந்து வாசகன் பதில்கற்பனைசெய்கிறான். இவ்வாறு எழுத்தாளனுடன் சேர்ந்தே படைப்பில் ஈடுபடுகிறான் வாசகன்.

வாசகன்  படைப்பின் இடைவெளிகளை எப்படி நிரப்பிக்கொள்கிறான்? இரண்டு வகையில். ஒன்று தன்னுடைய கற்பனை மூலம். இன்னொன்று தன் வாழ்வனுபவம் மூலம். இது நிகழாமல் நாம் வாசிப்பதே இல்லை. அழகான பெண் என்று கதையில் வந்ததுமே நம் மனக்கண்ணில் ஒரு முகம் வந்துவிடுகிறதல்லவா? அநிச்சையாக செய்யும் அதை இன்னமும் கவனமாக  நுட்பமாகச் செய்வதற்கான பயிற்சியை நாம் இலக்கிய ஆக்கங்களை வாசிக்கும்தோறும் அடைகிறோம். ஆனால் இது இலக்கிய ஆக்கம் எப்படி நிகழ்கிறதோ அதைப்போலவே ஆழ்மனம் சார்ந்து அனுபவம் சார்ந்து நிகழவேண்டும். மூளையை வைத்துக்கொண்டு செய்யக்கூடாது.

மகாபாரதம் ஏராளமான மர்மங்கள் இடைவெளிகள் கொண்ட ஆக்கம். அந்த மர்மங்கள் வாழ்க்கையின் முடிவில்லாத விசித்திரங்களால் ஆனவை. ஆகவே  மகாபாரதம் எழுதப்பட்ட காலம் முதல் இன்றுவரை மாபெரும் படைப்பாளிகள் மகாபாரதத்தின் இடைவெளிகளை தங்கள் கற்பனையால் நிறைத்து புதிய ஆக்கங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழில் பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’ அப்படிப்பட்ட ஒன்று.

பதுமை நாடகத்தில் மகாபாரதத்தின் ஓர் இடைவெளி கற்பனையால் நிரப்பப்பட்டுள்ளது. அந்த நாடகத்தின் இடைவெளிகளை உங்கள் சொந்த கற்பனையால், சொந்த வாழ்வனுபவத்தால் நீங்களும் நிரப்பிக்கொள்ள முடிந்தால் அது உங்களுக்கு மறைபிரதியை அளிக்கும். அது  கடினமான ஒன்றல்ல, வாழ்க்கையை வைத்து எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதே.

ஜெ

அன்புள்ள ஜெ,

உங்களுடைய ‘தேவியர் உடல்களும்’ அதை தொடர்ந்து ‘காந்தியும் காமமும்’ படிக்கும் போது இந்த வரி எனக்கு ஒரு பழைய நினைவை கொணர்ந்தது, “சாக்தம் வலுவாக வேரூன்றிய இடங்கள் வங்கமும் கேரளமும் ஓரளவுக்கு ஒரிஸாவும்.”. எனது இளம் கலையில் தமிழ் ஆசிரியர் சொன்ன தகவல் அது. கலாச்சார ரீதியாகவும்   அரசியல் பண்பாட்டு ரீதியாகவும் கேரளமும் வங்கமும் ஒத்திருபதற்க்கு, வரலாற்று காரணமும் உண்டு அது சேரன் செங்குட்டவன் கனக விசயரை வெல்வதற்கு வடக்கே இமயம் வரை படை நடத்தி சென்று போரிட்டு அதிலே காயம் பட்டவர்களை அவ்விடமே விட்டு வந்தது தான் என்பார். அதாவது தற்போதைய வங்கத்து மக்களின் முதாதையர் அக்காலத்து சேர மக்களே!, இதை பற்றி விளக்கவும், நன்றி .

அன்புள்ள
சக்திவேல், சென்னை

அன்புள்ள சக்திவேல்,

ஒரியா மற்றும் வங்கத்துக்கு தென்னகத்துடன் ஆழமான தொடர்பு உண்டு. ஆனால் அந்தத் தொடர்பு தமிழகத்துடன்தான் அதிகம். என் நண்பர் ஆய்வாளர் ஒரிஸா பாலசுப்ரமணியம் அந்த தொடர்புகளைப்பற்றி விரிவாக ஆராய்ந்து ஏராளமான அரிய கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்.

ஒரிஸா கலிங்கம் என்று பழைய தமிழில் அழைக்கப்படுகிறது. தமிழ் நாட்டுக்கு முன்னர் நல்ல பட்டு அங்கிருந்தே வந்தது. ஆகவே பட்டுக்கு கலிங்கம் என்று பெயர் இருந்தது. கலிங்கம் கடல்வணிகத்தில் முக்கியமான மையமாக இருந்துள்ளது. ஒருவேளை அவர்கள் விற்ற பட்டு சீனாவில் இருந்து கடல்வழி வந்திருக்கக் கூடும்.

சோழர்களுக்கும் கலிங்கத்துக்கும் நட்பும் பகையும் உண்டு. கடல்வழியாக கலிங்கம் அவர்கள் மிக எளிதாக அணுகக்கூடிய இடம். கலிங்கத்தை கருணாகரன் வென்றமைக்காகப் பாடப்பட்டதே கலிங்கத்துப் பரணி. தமிழகத்தில் உள்ள பல மக்கள் [குறிப்பாக ஒட்டர்கள்] கலிங்கத்தில் இருந்து வந்தவர்கள் என பாலசுப்ரமணியம் சொல்கிறார். அதேபோல ஒரிஸாவில் உள்ள ஏராளமான குடும்பப் பெயர்கள் தூயதமிழ்ப்பெயர்களின் மருவுகளே என்கிறார்.

ஒரிஸா வழியாக வங்கத்தில் இருந்து சாக்தேய தாந்த்ரீக வழிபாடு தென்னகத்துக்கு வந்தது. சோழர்காலத்தில் கொண்டுவரப்பட்டு போர்க்காலங்களில் வழிபடப்பட்ட நிதம்பசூதனி அத்தகைய ஒரு தாந்த்ரீக தெய்வம். யோனிவழிபாட்டின் தேவி அது.

ஆனால் கேரளத்துக்கும் கலிங்கத்துக்கும் நேரடியான வணிகம் நிகழ்ந்ததாக தகவல் இல்லை. தொல்காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். பின்னர் சேரர்கள் எப்போதுமே கடல் வணிகம் செய்யுமளவுக்கு வலிமையானவர்களாக இருக்கவில்லை.

மதம் சார்ந்த படிமங்களும் மரபுகளும் பரவுவதற்கும் நிலைகொள்வதற்கும் இப்படி மக்கள் இடப்பெயர்வு சம்பந்தமான காரணங்களை தேடுவது சரியா என்று தெரியவில்லை. அந்த இடங்களில் உள்ள பழங்குடி வழிபாட்டில்தான் தேடவேண்டும். இந்தப்பகுதிகளில் உள்ள பழங்குடிகள் தாய்த்தெய்வ வழிபாட்டுக்குள் இருந்தால் இயல்பாக சாக்தம் அங்கே வேரூன்றுகிறது அவ்வளவே

ஜெ

http://beyondwords.typepad.com/beyond-words/2009/07/jeyamohan_vadakkumugam.html

முந்தைய கட்டுரைபதுமை (நாடகம்)
அடுத்த கட்டுரைஅங்காடி தெரு,கடிதங்கள் 3