ஜெமோ
தெளிவான சுருக்கமான கேள்வி. பெருமாள் முருகன் திருச்செங்கோடு மக்களைப்பற்றி எழுதியதை அவர்கள் இலக்கியமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும், மதநிந்தனையாக எடுத்துக்கொள்ளக் கூடாது, எதிர்ப்பு தெரிவிப்பது காட்டுமிராண்டித்தனம் என்கிறீர்கள், சரியா?
இஸ்லாமியர் அவர்களின் நபியின் படத்தை யார் வரைந்தாலும், குர்ஆனை எவர் விமர்சித்தாலும், நபியின் வாழ்க்கையை யார் ஆராய்ந்தாலும் அதை மதநிந்தனையாகக் கொள்கிறார்கள். தெருவில் இறங்கி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இதைக் கண்டிப்பீர்களா?
கருத்துச்சுதந்திரம் இருசாராருக்கும் உண்டா?
[இதை அ.மார்க்ஸ் அல்லது ஞாநி அல்லது மனுஷ்யபுத்திரனிடம் கேட்க முடியாது. அவர்களுக்கெல்லாம் தெளிவாகவே இரண்டு நிலைபாடுகள்தான். இஸ்லாமியர் பாவம், பாதிக்கபடுகிறார்கள். உலகம் முழுக்க அவர்களின் மத உணர்வுகள் புண்படக்கூடாது. ஆனால் ராமனுக்குச் செருப்புமாலை போடலாம். பிள்ளையாரை உடைக்கலாம்.]
சந்தானம்
அன்புள்ள சந்தானம்,
இஸ்லாமியர் செய்வது தவறு என்றுதான் சொல்வேன். ஆனால் அவர்கள் நவீனக்கல்வி கற்று, உலகம் சென்றுள்ள திசையை அறிந்து முன்னேறவேண்டும் என்றும் சொல்வேன். உலகுக்கே எதிராக அவர்கள் போராடமுடியாது என்று சொல்வேன். மதம் என்பது ஒவ்வொருவரும் அந்தரங்கமாக உணரும் மெய்ஞானமாகவே இருக்கமுடியும், அது மதகுருக்களால் ஆளப்படும் அமைப்பாக இருக்கமுடியாது என அவர்கள் உணரவேண்டும் என சொல்வேன். மதம் வேறு மத அரசியல் வேறு என அவர்கள் தெளிவடையவேண்டும் என்பேன்.
ஆனால் அதற்காக இப்போது அவர்களை விமர்சித்து அவர்களை மேலும் கோபவெறி அடையச்செய்யமாட்டேன். அவர்களிடம் இதைச் சொல்லும் சிந்தனையாளர்கள் அவர்களிடமே உருவாகவேண்டுமென விரும்புவேன். அதுவரை உலகம் காத்திருக்கவேண்டியதுதான்.
ஆனால் இந்துமதம் அந்தப் பன்மைத்தன்மையை, ஏற்புமனநிலையை, நிறுவனமற்ற நிலையை தன் அடிப்படையிலேயே கொண்டுள்ளது. நவீனக்கல்வியை மிக எளிதாக அது வந்தடைந்தது. நவீன அறிவியலை முரண்படாது ஏற்றுக்கொள்ளும்படித்தான் அதன் அடிப்படைத் தத்துவங்கள் உள்ளன. நவீன ஜனநாயகத்துக்கு உகந்ததாகவே அதன் பன்மைச் சிந்தனைப்போக்கு உள்ளது. அதில் எப்போதும் கருத்துச்சுதந்திரம் உள்ளது
ஆகவேதான் அதன் பழைமைவாதத்தையும் மூடநம்பிக்கைகளையும் கடுமையாகக் கண்டிக்கும் சீர்திருத்தவாதிகள் அதில் அலையலையாக வந்தனர். விவேகானந்தர் முதல் வள்ளலார் வரை. அவர்களனைவருமே இந்துக்களால் குருநாதர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். நூறாண்டுகளில் தன் சமூகம் சார்ந்த கொள்கைகளை நவீன ஜனநாயகத்துக்கு உகந்த முறையில் மாற்றிக்கொள்ள அதனால் முடிந்தது. ஒரு சராசரி இந்து நவீன உலகக்குடிமகனுக்கு நெருக்கமானவன்தான்
உங்களைப்போன்றவர்கள் சொல்வது இந்துக்கள் திரும்பி பல படிகள் இறங்கிச்செல்லவேண்டும் என்று. முஸ்லீம்களைப் பாருங்கள் என்றுதான் அத்தனை இந்துத்துவர்களும் நாத்தெறிக்கப் பேசுகிறார்கள். ஏன் பார்க்கவேண்டும் என்றுதான் நான் கேட்கிறேன்.
ஒரு முஸ்லீம் மதநிந்தனை என்று கோபம் கொள்வது மேலே ஏறி வரமுடியாத காரணத்தால். அது மன்னிக்கப்படலாம். ஓர் இந்து மதநிந்தனை என்று பேசுவது அவனுக்கு ஆசிரியர்களாக வந்த அத்தனை ஞானிகள் முகத்திலும் எட்டி உதைத்து பல படிகள் கீழிறங்குவதன் மூலம்
அந்தவேறுபாடுதான்.
ஜெ