«

»


Print this Post

இரண்டு வானோக்கிய சாளரங்கள்


ராமாயணம் பெரும் காவியம்தான். இந்திரஜித்தும், ஹனுமனும், லக்ஷ்மணனும், கும்பகர்ணனும், ராவணனும் மாபெரும் ஆளுமைகள்தான். ஆனால் மகாபாரதத்துக்கு அதை சமமாக சொல்ல முடியாது. உண்மையில் பாரதத்துக்கு ஈடான இலக்கியம் இது வரையில் வரவில்லை. யாரோ சொன்னது (நீங்கள்தானா?) நினைவுக்கு வருகிறது – இன்று வரை வந்த ஒவ்வொரு கதைக்கும் வேர் மகாபாரதத்தில்தான் இருக்கிறது!

RV
koottanchoru.wordpress.com

அன்புள்ள ஆர்வி,

மகாபாரதம் ராமாயணம் இரண்டையும் கொஞ்சம் நுட்பமாகவே ஒப்பிட வேண்டும். அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு என்பது புனைகதை இலக்கியத்தில் எப்போதுமே இருக்கும் அடிப்படையான ஒரு வேறுபாடாகும். தரிசனம், வெளிப்பாடு, பண்பாட்டுத்தொடர்ச்சி மூன்றிலுமே உள்ள வேறுபாடு என்று அதனைச் சொல்லலாம்.

ராமாயணத்தின் இயல்புகள் என்ன? நான் வான்மீகி ராமாயணத்தை வைத்தே ஆரம்பிக்கிறேன்

1. ராமாயணம் ஆதிகாவியம். மகாபாரதத்துக்கு காலத்தால் முற்பட்டது. பேரரசுகள் உருவாகாத ஒரு காலகட்டத்தைப்பற்றிப் பேசுவது. அதில் உள்ள கதை யதார்த்தத்தை விட தொன்மத்துக்கே நெருக்கமானது.

2  வான்மீகி ராமாயணத்தின் அமைப்பு மொழி இரண்டுமே எளிமையானவை. காரணம் அது அதிகமும் நாட்டார் [·போக்] பண்புநலன்களைக் கொண்டுள்ளது. அது நாட்டார் வாய்மொழி மரபில் இருந்து வந்திருக்கலாம் என்பதற்கான எலல ஆதாரங்களும் அதில் உள்ளன. அதன் வர்ணனைகள் நாட்டார் பாடல்களில் வருபவை போல எளிமையான மகத்துவமான கவித்துவம் கொண்டவை. அதன் விவேகம் நேரடியானது.ஆதிகாவியமான ராமாயணம் ஒரு வயதான நாட்டுப்புற கவிஞன் சொல்லும் தன்மை கொண்டது.

3 அதன் நாட்டார்த்தன்மை காரணமாகவே அது இலட்சியவாதத்தன்மை கொண்டது. ராமன் என்ற இலட்சியபுருஷனின் இயல்புகளைச் சொல்வது அது. பரதன், இலட்சுமணன் என எல்லா கதாபாத்திரங்களும் அவர்களின் இயல்பின் சிறந்த அம்சங்களால் காட்டப்படுகிறார்கள். ஒவ்வொரு விழுமியமும் ஒவ்வொரு இலட்சியமும் அதன் உச்சநிலைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.

4 எல்லா நாட்டார் காவியங்களையும்போல தீமைக்கும் நன்மைக்கும் நடுவே நிகழும் மோதலே வான்மீகி ராமாயணம். அதில் ராவணனுக்கு நாம் பிற்கால ராமாயணங்களில் காணும் சிறப்பெல்லாம் இல்லை. அவன் ஆசையாலும் அகந்தையாலும் அழிந்த அளவிலா வல்லமைகொண்ட அரக்கன் மட்டுமே. ராவணனின் மேன்மை குறித்த கதைகள் எல்லாமே பிற்காலத்தில் வந்த உத்தர ராமாயணத்தில் சொல்லப்பட்டவை.

5 இக்காரணத்தால் ராமாயணத்தில் ஒரு பாட்டிக்கதை தன்மை உண்டு. அதன் கவித்துவம், அதன் தத்துவ வீச்சு ஆகியவற்றுக்கு அப்பால் அது குழந்தைகளுக்குச் சொல்லப்படவேண்டிய எளிமையான கதையும் கூட.

6 விழுமியங்களை , அறங்களை வலியுறுத்தும் காவியம் ராமாயணம். அவற்றை ஒரு பண்பாட்டின் ஆரம்பகாலத்திலேயே அம்மக்களின் அடிநெஞ்சில் ஆழ நிலைநாட்டும் தன்மை கொண்டது.

7. ராமாயணம் என்னென்ன பேசினாலும் அதன் மையம் என்பது குடும்ப உறவுகள், நட்பு போன்ற தனிப்பட்ட உறவுகளைச் சார்ந்தது.

மகாபாரதம் அப்படியல்ல. அதன் இயல்புகள் வேறானவை

1. அது காலத்தால் பிற்பட்டது. ஆகவே பேரரசுகளும் அதிகாரப்போட்டிகளும் உருவான பிறகுள்ள வாழ்க்கையைக் காட்டுவது.

2. மகாபாரதம் மிகமிகச் சிக்கலான ஒரு நூல். வியாச பாரதத்தை ஒருவன் வாசிக்கும்தோறும் அதன் உட்சிக்கல் பெருகிக்கொண்டே செல்லும். உறவுச்சிக்கல்கள்,  அரசியல் சிக்கல்கள், மறுபிறப்பு மூலம் உணர்த்தப்படும் விதியின் சிக்கல் என அது ஒரு அதிபிரம்மாண்டமான வலை. அந்த மகத்தான வலைப்பின்னலை நாம் உணரும்போது ஏற்படும் மலைப்பே அதன் தரிசனம்.

3 மேலும் மகாபாரதத்தின் தொகுப்புத்தன்மை காரணமாக பிற்காலத்தைய கதைகள் அதில் சேர்க்கப்பட்டன. துதிநூல்கள், சிறிய உபநிடதங்கள், நீதி நூல்கள் போன்றவை அதில் வந்துசேர்ந்துகொண்டே இருந்தன. அவற்றை இணைப்பதற்கான கதைகள் உருவாயின. விளைவாக அது ஒரு குட்டி கலைக்களஞ்சியம் போல ஆகியது.

4 அதாவது மகாபாரதம் முழுக்க முழுக்க ஒரு செவ்வியல் [கிளாஸிக்] ஆக்கம். செவ்வியலுக்கே உரிய எல்லா பண்புகளும் அதற்கு உண்டு.  உட்சிக்கல், முடிவிலா மறைபிரதி [சப் டெக்ஸ்ட்] தன்மை, பல்வேறுபிரதிகளை தொட்டு விரியும் இயல்பு, பல்வேறு வகையான மொழிபுகளை [நெரேஷன்] தொகுத்துக்கொள்ளும் தன்மை போன்றவை. அதாவது ராமாயணம் செவ்வியல் தன்மையை அடைந்த  ஒரு நாட்டார் பிரதி. மகாபாரதம் ஒரு தூய செவ்வியல்பிரதி.

5 மகாபாரதத்தில் முழுமையான இலட்சியக் கதாபாத்திரமே இல்லை. ராமாயணம் இலட்சியங்களைச் சொல்கிறது. மகாபாரதம் அந்த இலட்சியங்களின் நடைமுறைச் சாத்தியங்களை பற்றி பேசுகிறது. ராமாயணம் தர்மத்தை முன்வைக்கிறது. மகாபாரதம் அந்த தர்மத்தின் உட்சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறது

6 மகாபாரதம் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குள்ளும் தர்மமும் அதர்மமும் எப்படி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் கொள்ளும் அகமோதல்களையே அது சித்தரிக்கிறது. அக மோதல் இல்லாத ஒரே கதாபாத்திரமான யாதவ மன்னன் கண்ணன் ஒரு அச்சு போல இந்த சுழற்சியின் நடுவே நின்றிருக்கிறான்.

7 மகாபாரதம் தேர்ந்த இலக்கிய வாசகனை கோருவது. வாழ்க்கையில் ஒருவன் அனுபவம் மூலம் பண்படாவிட்டால் மகாபாரதக் கதாபாத்திரங்களை சரிவரப் புரிந்துகொள்ள இயலாது. அதிலும் ஏராளமான பாட்டிக்கதைகள், சாகசக்கதைகள் உண்டு. ஆனால் அவையெல்லாமே ஒரு செவ்வியல்தன்மையால் தொகுக்கப்பட்டிருக்கும்.

8 மகாபாரதம் விழுமியங்களை விவாதித்து புரிந்துகொள்ள முயலும் செவ்வியல் நூல். மகாபாரதத்துக்கும் ராமாயணத்துக்கும் உள்ள முக்கியமான வேறுபாடே இதுதான். ராமாயணத்தில் தர்மபிரபோதனம் [அற அறிவுரை] ஓடிக்கொண்டே இருக்கும். மகாபாரதத்தில் தர்மஸம்வாதம் [அற விவாதம்] ஓடிக்கொண்டே இருக்கும்

9 மகாபாரதத்தின் மையம் அரசியல். குடும்பக்கதை என்பது அந்த அரசியலின் ஒரு பகுதியே ஆகும்.

10. முக்கியமான ஒப்புமை இது. ராமாயணத்தின் மையம் தர்மத்தின் சிக்கல்களை தன் வாழ்வில் எதிர்கொள்பவனும்  உணர்வுபூர்வமானவனும், சுத்தவீரனுமாகிய ராமன். மகாபாரதத்தின் மையமோ தர்மச்சிக்கல்களுக்கு அப்பாற்பட்ட அகத்தெளிவுள்ளவனும், உணர்வெழுச்சிகள் இல்லாத சமநிலை கொண்டவனும், தத்துவ ஞானியுமான கிருஷ்ணன்.

இந்த வேறுபாடுகளை இன்று வரை உலகத்தில் உள்ள எல்லா பேரிலக்கிய மரபுகளிலும் காணலாம். தல்ஸ்தோயை ராமாயணத்தின் தரப்பைச் சேர்ந்தவர் என்றும் தஸ்தயேவ்ஸ்கியை மகாபாரதத்தின் தரப்பைச் சேர்ந்தவர் என்றும் சொல்லலாம். விக்தர் யூகோ ராமாயணத்தன்மை கொண்டவர் என்றால் மார்ஷல் புரூஸ்த் மகாபாரதத்தன்மை கொண்டவர். [நான் இங்கே கலைஞர்களை முற்றாக பகுத்து பட்டியலிடவில்லை. இது அவர்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு அணுகுமுறை மட்டுமே]

ஒன்று உணர்வுபூர்வமானது, நேரடியானது, எளியது, வாழ்க்கையில் இருந்து எழுந்த விவேகத்தின் பலத்தில் நிற்பது. இன்னொன்று அறிவார்ந்தது, சிக்கலானது, தத்துவத்தின் அடித்தளம் மீது நிலைகொள்வது.

நவீன காலகட்டத்தில்  இலக்கிய வாசகர்களுக்கு இரண்டாவதே முக்கியமானதாக தோன்றும். அறமையத்தை விட அறச்சிக்கல் மையமாவதே கொஞ்சம் அருகே உணரச் செய்கிறது. ஆனால் கலைக்கு அது எந்த தனிச்சிறப்பையும் அளிப்பதில்லை. அந்தக் கலைஞன் அவ்வியல்புக்குள் எந்த அளவுக்கு உள்ளே செல்கிறான் என்பது மட்டுமே முக்கியம்.

தஸ்தயேவ்ஸ்கி

நான் எழுதும் கதைகள் மகாபாரதத்தன்மை கொண்டவை என்றும் ஆனால் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் ராமாயணத்தன்மை கொண்டவர்கள் என்றும் நான் நினைப்பதுண்டு. தல்ஸ்தோய், விக்தர் யூகோ, நிகாஸ் கசந்த் ஸகிஸ், ஐசக் பாஷவிஸ் சிங்கர்  அவர்களின் எளிமையின் மகத்துவம் என்னை எப்போதுமே பிரமிக்கச் செய்கிறது.

கம்பன்

இனி கம்பராமாயணம். கம்பனுக்கு முன் நூல் வான்மீகி ராமாயணம். எளிமையின் பேரழகு கொண்ட ஆக்கம். நாட்டார்தன்மையின் கவித்துவம் முற்றியது.. ஆனால் கம்பன் அதில் இருந்து மகாபாரதத்துக்கு நிகரான ஒரு செவ்வியல் படைப்பை உருவாக்கிவிட்டான். ஆகவேதான் வான்மீகி ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் கம்பராமாயணத்தில் பேருருவம் கொள்கிறார்கள்.

வான்மீகி ராமாயணத்தில் இல்லாத அகமோதல்கள் கொண்டவை கம்பனின் கதாபாத்திரங்கள். மிகச்சிறந்த உதாரணங்கள் கம்பராமாயணத்தின் கும்பகர்ணனும் விபீஷணனும். அவை முன்னுதாரணமான செவ்வியல் கதாபாத்திரங்கள். கம்பராமாயணம் அதன் வர்ணனையின் விரிவு மற்றும் ற்றோருக்கு மட்டுமே திறக்கும் அதிநுட்பங்கள், உக்கிரமான நாடகமோதல்கள், விழுமியங்கள் மீதான ஆழமான விசாரணைகள், ஒவ்வொரு செய்யுளிலும் நிகழ்ந்திருக்கும் முடிவிலாத மறைபிரதித்தன்மை ஆகியவற்றால் வியாச மகாபாரதத்துக்கு நிகரான ஒரு செவ்வியல் ஆக்கம். ஐயமே இல்லை.

இதற்கு நேர்மாறான ஒரு நிகழ்வும் உண்டு. மலையாளத்தில் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனின் மகாபாரதம் கிளிப்பாட்டு வியாசமகாபாரதத்தை ஒட்டிய ஒரு ஆக்கம். 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால் இது ஒரு நாட்டார்தன்மை மேலோங்கியது. வியாசபாரதத்தின் செவ்வியல்தன்மை முழுக்க கைவிடப்பட்டு அது ஒரு எளிய, இனிய நாட்டார் காவியமாக உருமாறிவிட்டது. அந்த அளவிலேயே அதற்கு அழகு உண்டு.

கோவை கம்பன் அறநிலை வெளியிட்ட  கம்பராமாயணத்தில் பேராசிரியர் அ.அ.மணவாளன் கம்பராமாயணத்தையும் பிற ராமாயணங்களையும் ஒப்பிட்டு மிக விரிவாக ஓர் ஆய்வு எழுதியிருக்கிறார். அதை வாசித்தால் பல திறப்புகள் கிடைக்கும். என்னுடைய பின் தொடரும் நிழலின் குரலில் வீரபத்ர பிள்ளை தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி இருவரையும் ஒப்பீட்டு எழுதிய ஒரு கட்டுரை உள்ளது. அதுவும் இந்த தளத்துடன் பொருந்துவதே

பொதுவாக இலக்கிய ஆக்கங்களை ஒப்பிடும் போது அவற்றின் அடிப்படையான வகைமைகளையும் கருத்தில்கொள்ளலாமென நினைக்கிறேன். வான்மீகி ராமாயணத்துக்கு அதன் எளிமையே மகத்துவம் என்றால் வியாச பாரதத்துக்கு அதன் சிக்கலே மகத்துவம். கம்பராமாயணத்துக்கு அதன் விரிவே மகத்துவம் என்றால் சிலப்பதிகாரத்துக்கு அதன் சுருக்கமே மகத்துவம்.

ஜெ

[மறுபிரசுரம் / முதற்பிரசுரம் 2010 ]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6982/

12 comments

3 pings

Skip to comment form

 1. csekhar

  உங்க தளத்தை தொடர்ந்து படிக்கும் பல ஆயிரம் வாசகர்களின் நானும் ஒருவன். சிறுகதை எழுதும் ஆர்வமும் உண்டு.

  ச்மீபத்தில் இண்டர்நெட்டில்படித்த சிறுகதைகளைப் பற்றி உங்களிடம் சில கேள்விகள். இந்த கதைகள் நல்லாயிருக்கு. இப்படித்தான் எழுத வேண்டுமா.ஏன் எனக்கு இவை பிடித்ததுன்னு சொல்லத் தெரியல..உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ல் ஆர்வமாக இருக்கிறேன்.

  1. நீரோட்டம் – http://chithran.wordpress.com/2009/08/01/neerottam/
  2. ஒரு நிமிஷம் – http://bala-balamurugan.blogspot.com/2009/09/blog-post_30.html
  3. காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – http://beyondwords.typepad.com/beyond-words/2009/12/quartet_end_of_time.html
  4.புளிக்காரக்கா – http://www.narsim.in/2009/12/blog-post_15.html
  5. புதியதோர் உலகம் – http://solvanam.com/?p=3984

  உங்கள் நேரத்துக்கு நன்றி.

  சேகர்

 2. Vengadesh Srinivasagam

  நன்றி ஜெ சார்.
  மிக அருமையான தெளிவு தரும் கட்டுரை.
  சமீபத்தில் ஏழு வயதாகும் எங்கள் மகளுக்காக moserbaer – லிருந்து மகாபாரதம் VCD set வாங்கினோம் (for her exam holidays – here in Mumbai her exams were over now; she is seeing now one by one; she likes very much; her name is “இயல்” – உங்களின் ஆசீர்வாதமும் அன்பும் அவளுக்கு வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்). அடுத்த மாத சம்பளத்தில் இராமாயணமும் வாங்கி வைக்க வேண்டும்.

 3. ramji_yahoo

  பதிவும் கட்டுரையும் அருமை.

  ஆனால் ராமயணத்தை மகாபாரதத்தோடு ஒப்பிடுதல் சரியா.

  ராமாயணத்தை வால்மீகியின் மற்ற படைப்புக்களோடு ஒப்பீடு செய்ய வேண்டும், அதே போல பாரதத்தை வியாசரின் மற்ற படைப்புகளோடு ஒப்பீடு செய்ய வேண்டும்.

  தளபதியை நாயகனோடு ஒப்பீடு செய்ய கூடாது. தளபதியை படையப்பா, அன்னாமலையோடு ஒப்பீடு செய்ய வேண்டும்.

 4. ஜெயமோகன்

  அன்புள்ள ராம்ஜீ, பொதுவாக நீங்கள் தீர யோசித்து கூறும் ஆழமான கருத்துக்கள் எனக்குப் பிடிக்கும். அருமையாகச் சொன்னீர்கள். நீங்களே கூட உங்கள் விரிவான வாசிப்பில் இருந்து அப்படி ஒரு கட்டுரையை எழுதலாம். ஆனால் வான்மீகி எழுதிய கவிதைகள் நாவல்கள் சிறுகதைகள் பயணக்கட்டுரைகள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடக்கூடாது. ஒரு படைப்பை நாம் அதனுடன் மட்டும்தானே ஒப்பிடவேண்டும். வியாசர் எழுதிய நாவல்கள் புதுக்கவிதைகள் இலக்கியவிமரிசனங்களையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடாமல் அவற்றுக்குள்ளேயே ஒப்பிடுவது நல்லது. சிந்திக்க வேண்டிய விஷயம்.

  ஜெயமோகன்

 5. Vengadesh Srinivasagam

  அன்புள்ள ராம்ஜீ, பொதுவாக நீங்கள் தீர யோசித்து கூறும் ஆழமான கருத்துக்கள் எனக்குப் பிடிக்கும். அருமையாகச் சொன்னீர்கள். நீங்களே கூட ///

  //உங்கள் விரிவான வாசிப்பில் இருந்து அப்படி ஒரு கட்டுரையை எழுதலாம். ஆனால் வான்மீகி எழுதிய கவிதைகள் நாவல்கள் சிறுகதைகள் பயணக்கட்டுரைகள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடக்கூடாது. ஒரு படைப்பை நாம் அதனுடன் மட்டும்தானே ஒப்பிடவேண்டும். வியாசர் எழுதிய நாவல்கள் புதுக்கவிதைகள் இலக்கியவிமரிசனங்களையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடாமல் அவற்றுக்குள்ளேயே ஒப்பிடுவது நல்லது. சிந்திக்க வேண்டிய விஷயம்.//

  Sorry Jeyamohan Sir,
  Took some minutes for me to realise; after understanding….this is enough for today to keep my face laughing during office hours till evening.

 6. Arangasamy.K.V

  //வான்மீகி எழுதிய கவிதைகள் நாவல்கள் சிறுகதைகள் பயணக்கட்டுரைகள்//

  ஜெ ,

  நல்ல பார்ம்ல இருக்கீங்க போல ,ஆனா அவரு பாவம் :) விட்டிருங்க. நடுரோட்ல நின்னு சிரிச்சிகிட்டிருக்கேன்.

 7. RV

  அன்புள்ள ஜெயமோகன்,

  மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள். குறிப்பாக நாட்டார் vs செவ்வியல் மரபு பற்றிய கருத்துகள் அபாரம்.

  ஆனால் ராமாயணமோ, மகாபாரதமோ, மனதில் இருக்கும் பிம்பத்தில் எது வால்மீகியிடமிருந்து வந்தது, கம்பனிடமிருந்து வந்தது, எது வ்யாசரிடமிருந்து வந்தது, எது வில்லியிடமிருந்து வந்தது (என் கவிதை அலர்ஜியையும் தாண்டி நான் வில்லிபாரதத்தை முழுதுமாக “படித்திருக்கிறேன்”), எது ராஜாஜியின் புத்தகங்களிலிருந்து வந்தது, எது விக்கிபீடியாவிலிருந்து வந்தது, எது ராமானந்த் சாகர்/பி.ஆர். சோப்ராவிடமிருந்து வந்தது, எது பாட்டியிடமிருந்தும் அம்மாவிடமிருந்தும் வந்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை. எல்லாம் கலந்து கட்டி இதுதான் மகாபாரதம், இதுதான் ராமாயணம் என்று ஒரு பிம்பம் உருவாகி இருக்கிறது. வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் தமிழ்/ஆங்கில மொழிபெயர்ப்பு எதையாவது சிபாரிசு செய்வீர்களா?

  ஆனால் ஒன்று: நீங்கள் என்ன சொன்னாலும் மகாபாரதம் மட்டுமே எனக்கு உலகத்தின் தலை சிறந்த இலக்கியம். ராமாயணம் அருகே வரமுடியாது. :-) இது லாஜிக், அறிவுபூர்வமான அணுகுமுறை போன்றவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது. :-) (ராம்ஜி காலை வாரியது போல அடுத்தது என் காலை வாருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். :-))

 8. Vijay S

  “பின்நவீனத்துவம் ஒரு கடிதம்” பதிவில் (http://www.jeyamohan.in/?p=244) நீங்கள் சொன்னது:
  “நவீனத்துவ இலக்கியம் ‘வலியுறுத்தும்’ ஆக்கங்களை உருவாக்கியது. பின்நவீனத்துவ இலக்கியம் ‘விவாதிக்கும்’ படைப்புகளை உருவாக்கியது”

  கேள்வி கேட்கிற எனக்கே இது கொஞ்சம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற மாதிரி தான் இருக்கு. இருந்தாலும், உங்கள விட்டா யார் கிட்ட இந்த சந்தேகங்களைக் கேக்க முடியும்! :)

  ஒரு வகையில், இந்த “வலியுறுத்தும்” மற்றும் “விவாதிக்கும்” ஆக்கங்கள் என்கிற கோணத்தில், ராமாயணத்துக்கும் மகாபாரதத்துக்கும் இடையில் இருக்கக் கூடிய வேறுபாட்டை நவீனத்துவ மற்றும் பின்நவீனத்துவப் போக்குகளுக்கிடையே உள்ள வேறுபாடாகப் புரிந்து கொள்ளலாமா?

  போக்கில் (approach) உள்ள வேறுபாட்டை மட்டுமே சொல்கிறேன்; ஆக்கங்கள் என்கிற வரையில் இவை இரண்டுமே நவீனத்துவமோ பின்நவீனத்துவமோ அல்ல, தத்தமது வகையில் செவ்வியல் ஆக்கங்கள் என்பது புரிகிறது.

  இதைத் தட்டச்சும் போதே பிறந்த குழப்பம்: அறிவியல் மைய நோக்கு மற்றும் உலகளாவிய நோக்கு (http://www.jeyamohan.in/?p=6089) என்பன தவிர நவீனத்துவம் வேறு எவ்வகையில் செவ்வியல் படைப்புகளிலிருந்து வேறுபடுகிறது? மேலும், “modern classics” என்று வேறு சொல்லப்படுகின்றனவே (நவீன-செவ்வியல் படைப்பு என்று சொல்லலாமா?), அவற்றுக்கான இயல்புகள் யாவை?

 9. krishnan ravikumar

  Dear Jey,
  Sorry for writing in English. I feel quite difficult to write in Tamil..unable to figure out the right words for many expressions. Please don’t mind.

  This comment is about ‘Padumai’ drama. Due to some techincal difficulties, i am not able to post a comment there, so here:

  1. A nice drama with lot of philosophical depth and touching on the complexities of human relationships..which is your forte.

  2. Thanks for giving Krishna Paramathma a main role in this drama. In your earlier stories, Lord Krishna usually gets a side role :P examples : I don’t remember the names, but the story about Abhimanyu’s death; Story in which Vyasa rishi materializes a vision of Martyr’s paradise; Drama about Bheeshma etc.

  But in this story, krishna gives the direction..seems the nature of the story itself demands it but very good portrayal.{ I remember shedding tears on the scene where NTR enters the Duriyodan’s palace in the movie Karna. classic. Had a similar experience on reading this story as well.} The way Krishna treats even the ‘Pattar’ and the ‘Naagar’ respect fully and the insight of his dialogues…excellent.

  But i have two minor doubts:

  1. Why in your stories which describe post Kurukshetra, Arjuna is depicted as opposing Bhagavad Gita : In this story as well as in the one where Vyasa shows the vision of Martyr’s paradise. He says those are just ‘deceiving, magical words’. I mean Arjuna would have been a completely transformed man after the Gita Darshan and he would have become a staunch Karma Yogi right? [Or is my understanding wrong].

  2. The secret of Krishna’s birth is revealed when he kills his uncle Gamsa right? So why is the pattar and couple of other characters keeping referring to him as ‘Yaadava’ or is it because he is the king of Yaadavas..that is why?

  Thanks again.

 10. krishnan ravikumar

  Oh no :D just now i read the reply to ramji’s post. don’t massacre me like that. :D தப்பா கேட்ருந்தா விட்டுடுங்க… :)

 11. ஜெயமோகன்

  அன்புள்ள கிருஷ்ணன்,

  மகாபாரதத்தில் கீதை ஓர் இடைசெருகல்; ஆகவே கீதைக்குப்பின்னரும் அர்ஜுனனின் குணச்சித்திர மாறுவதே இல்லை. விஸ்வரூபமாக கிருஷ்ணனைக் கண்டவன் போல அவன் செயல்கள் இருக்காது. துன்புறுபவனாக, கண்ணனையே பழிப்பவனாக அவனை பல இடங்களில் காண்கிறோம். கீதையில் கேட்கும் அதே மனத்தடுமாற்ற வினாக்களை பிறகும் கேட்கிறான் – உதாரணம் அபிமன்யுவின் மரணம்.

  மகாபாரதத்தின் கிருஷ்ணன் மெய்ஞானியாகிய யாதவ மன்னன் மட்டுமே. அவனே கீதையில் சொல்வது போல ஜனகன் முதலிய ராஜ ரிஷிகளில் ஒருவன். கடவுள் அல்ல. அவந் சூதர் பாடல்கள் வழியாக மெல்லமெல்ல கடவுளாக ஆனபோதே பாகவதத்தில் அவனைப்பற்றிச் சொல்லப்பட்டுள்ள கதைகள் உருவாயின. கிருஷ்ண லீலைகள் எல்லாமே பாகவதத்தில் உள்ளவை, பாரதத்தில் அல்ல.

  பாகவதக்கதையை பாரதத்தில் சேர்த்தவர் ராகி மன்சூம் ராஸா — சோப்ராவின் மகாபாரதத்துக்கு திரைக்கதை அமைத்த பேரறிஞர். அது குறித்து அப்போதே விமர்சனம் எழுந்தது. ஆனால் எழுதியவர் ராஸா என்பதனால் அது அபப்டியே சென்றுவிட்டது.

  கீதை கிருஷ்ணன் என்ற வரலாற்று மனிதரால் எழுதபப்ட்ட ஒரு வேதாந்த நூல். மகாபாரதம் எழுதப்படுவதற்கு பல நூற்றாண்டு முந்தையது. பின்பு அதற்கு கதை சேர்க்கபப்ட்டு இன்றைய வடிவம் அளிக்கப்பட்டு பாரதத்தில் சேர்க்கப்பட்டது.

  இதை விளக்கமாக என்னுடைய கீதை உரைகளிலே காணலாம். முதல் ஐந்து அறிமுகக் கட்டுரைகளை வாசிக்கவும்.

  கிருஷ்ணன் பாரதத்தில்க் யாதவன், யாதவ மன்னன் என்றே குறிப்பிடப்படுகிறான் – மூலமாக உள்ள வரிகளில்

  ஜெ

 12. tdvel

  என்னால் இன்னமும் கீதை ஒரு பிற்சேர்க்கை என்று என்னால் ஒத்துக்கொள்ளையல்வில்லை. கீதை என்ற மாணிக்கக்கல்லை பதிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தங்கப்பதக்கமாகவே நான் ம்காபாரதத்தைக் கருதுகிறேன். அர்ச்சுனனை கீதையை கேட்கிறான் ஆனால் கீதை வழி நடப்பதற்கான பக்குவம் அவனுக்கு வந்துவிட்டதாக நாம் எப்படி எடுத்துக்கொள்ள முடியும். அவனால் கண்னனின் விஸ்வரூப தரிசனத்தை காணவியலவில்லையென்றால் என்ன பொருள். அவன் அறிய மட்டுமே செய்கிறான் அதன்வழி நடப்பதற்கு அவன் நீண்ட வழி இன்னும் செல்ல வேண்டியுள்ளது. என்னதான் கீதையை கண்ணனே நேரில் சொன்னாலும் கீதையை கேட்டல் மட்டுமே போதுமானதல்ல என்பதையே இது காட்டுகிறது.
  தத்துவ நூல்களை படித்தல் (அல்லது கேட்டல்) என்பது நாம் எந்த நிலையில் இருக்கிறோம் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை அறிவதற்கு மட்டுமே. இரமணர் ஒரு உவமை இதற்காக கூறுவார். என்னதான் உயர்ந்தரக கண்ணாடியாயிருந்தாலும் அதை எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் நம் முகம் சவரம் செய்யப்பட்டுவிடாது என்று

 1. மகாபாரதம் சார்ந்த படைப்புகள் « சிலிகான் ஷெல்ஃப்

  […] எல்லாம் எடுத்து சொல்லி ஒரு அருமையான பதிவு எழுதி இருந்தார், ஆனால் யார் என்ன […]

 2. இரண்டு வானோக்கிய சாளரங்கள் « ஜெயமோகனின் "விஷ்ணுபுரம்"

  […] ஜெயமோகன்.இன் ல் இருந்து […]

 3. மகாபாரத கதைகள் -தொகுப்பு (முந்தையவை)

  […] – (மகாபாரதம் – இராமாயணம் ஒப்பீடு) – http://www.jeyamohan.in/?p=6982 4. மகாபாரதப் போர்முறைகள் […]

Comments have been disabled.