மின் தமிழ் பேட்டி 2

10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து தனித்த நகைச்சுவை எழுத்து என்பது இலக்கிய அந்தஸ்தைக் குறைக்குமா?

பதில்

நகைச்சுவைக் கதைகள், அங்கதக்கட்டுரைகள் என பொதுவாக தமிழின் தரம் மற்றும் அளவு மிகக்குறைவு என்பதே என் எண்ணம். நான் தமிழின் உயர்தர நகைச்சுவை எனக்கருதுவது ப.சிங்காரம், அசோகமித்திரன், நாஞ்சில்நாடன் படைப்புகளைத்தான். சுஜாதாவின் சிலகதைகளில் மட்டுமே [உதாரணமாக குதிரை] சிறந்த நகைச்சுவை சாத்தியமாகியிருக்கிறது

நகைச்சுவை என பொதுவாகச் சொல்கிறோம். அதை பல வகையாக பிரித்துக்கொள்வதே தெளிவான புரிதலை நோக்கிக் கொண்டுசெல்லும். அங்கதம் [satire] சிரிப்பூட்டுதல் [joke] சொல்நகை [wit] என பலவகைமைகள் உள்ளன. ஒவ்வொன்றின் இயல்பும் வேறுவேறு. அங்கதத்துக்கு மட்டுமே இலக்கியத்தில் இடமுண்டு. மற்றவை களிப்பூட்டும் எழுத்துமுறைகள் மட்டுமே.

அங்கதம் என்பது நகைச்சுவைத்தன்மை கொண்டிருந்தாலும் உள்ளடக்கத்தில் தீவிரமானது. அது ஒரு தீவிரமான விமர்சனத்தை முன்வைக்கிறது. சமூகவிமர்சனம், தத்துவ விமர்சனம். அது ஓர் அழகியல் வெளிப்பாடு

அத்தகைய அங்கதம் இங்கே குறைவாக இருப்பதற்கான காரணம், எதை அது பகடி செய்கிறதோ அதை ஏற்கனவே அறிந்த வாசகர்கள் அதற்குத்தேவை என்பதே. உதாரணம் நாஞ்சில்நாடனின் பாம்பு என்ற சிறுகதை. தமிழில் கல்வித்துறை ஆய்வுகள் செய்யப்படும் லட்சணத்தை கொஞ்சமேனும் தெரியாத ஒருவருக்கு அதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை. தெரிந்தவர் நினைத்து நினைத்துச் சிரித்துக்கொண்டிருப்பார்.

எனக்குப்பிடித்த அங்கத எழுத்தாளர் மலையாளத்தில் வி.கெ.என். கதகளி, சம்ஸ்கிருத நாடகம், சம்ஸ்கிருத காவியமரபு மலையாளப்பண்பாடு, தெரியாத ஒருவருக்கு அதில் பாதிப்பகடி புரியாது. நிறையத்தெரிந்தால் பகடி படு கீழ்த்தரமாகக்கூடப்போகும் என்பது வேறுவிஷயம் . கம்பராமாயணம் தெரிந்த ஒருவர் நாஞ்சில்நாடன் எழுதிய பகடிகளின் விபரீதம் தெரிந்து பகீரிட்டு பின் சிரிப்பார்.

தமிழின் சராசரி வாசகனுக்கு சினிமா பற்றி மட்டும்தான் தெரியும். ஆகவே அதைவைத்து செய்யப்படும் பகடி மட்டும்தான் புரியும். அங்கதம் என்பதே பரந்துபட்ட ரசனையும் வாசிப்பும் தகவலறிவும் கொண்ட வாசகனுக்குரியது

அங்கதநாவல் ஒன்று எழுதவேண்டும் என்ற திட்டம் உள்ளது. நாகர்கோயில் அருகே உள்ள தழுவியமகாதேவர் ஆலயத்தைப்பற்றி. அங்கே சிவலிங்கம் வளைந்திருக்கும். பார்வதி தழுவியதனால் முலை பட்டு வளைந்தது. சாமியே வளைந்திருப்பதனால் ஊரில் பெரும்பாலும் வீட்டுக்கொரு பைத்தியக்காரர் இருப்பார் என்பது நம்பிக்கை. ஒரு தெருவில் ஐம்பது பைத்தியம் இருந்தால் எப்படி இருக்கும் தெரு? அதுதான் கரு. எழுதவேண்டும்

writer_sujatha_bday


11. நீங்கள் எழுதிய குழந்தைகள் நாவல் பனி மனிதன். குழந்தை இலக்கியங்களின் முக்கியத்துவம் என்ன? பனி மனிதன் அது எழுதப்பட்டதன் நோக்கத்தை அடைந்ததா?

தமிழில் குழந்தைகள் நூல்கள் எழுதுவதில் உள்ள சிக்கலே தமிழ்ப்பெற்றோர் குழந்தைகளுக்கு தமிழ்நூல்களை வாங்கிக்கொடுப்பதில்லை என்பதுதான்.படிப்பு கெட்டுப்போய்விடுமாம். ஆங்கிலநூல்களைத்தான் வாங்கிக்கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு சொந்தமாக வாங்கவும் வசதி இல்லை

பனிமனிதன் என் நண்பர் மனோஜ் தினமணியில் பணியாற்றிய காலத்தில் கேட்டு வாங்கிப்போட்டது. அன்று குழந்தைகள் மிக விரும்பி வாசித்தனர். அதை வாசித்து என்னை அறிந்த பலர் இன்றும் என் வாசகர்களாக உள்ளனர். ஆனால் நூலாக வந்தபின் வாசித்த குழந்தைகள் மிகமிகக்குறைவு. என் வாசகர்கள்தான் அதையும் வாங்கிப்படிக்கிறார்கள்.

குழந்தைகளுக்கான எழுத்து எளிய நடையில் தீவிரமானதாகவே இருக்கவேண்டும் என நான் நினைக்கிறேன். குழந்தைகளுக்கு ஒரு தர்க்க புத்தி உண்டு. அதை அவ்வெழுத்து நிறைவுறச்செய்யவேண்டும். நாலைந்து சொற்களுக்கு மிகாத சொற்றொடர்களால் எழுதப்பட்டிருக்கவேண்டும். அதே சமயம் அவர்களை பெரிய காட்சியனுபவம் நோக்கிக் கொண்டு செல்லவேண்டும். பனிமனிதன் அப்படிப்பட்ட நூல்தான்

தமிழில் வாசிக்கும் குழந்தைகளுக்குரிய நல்ல நூல்கள் மிக்க்குறைவு. பெரும்பாலும் பொருத்தமற்ற மொழிபெயர்ப்புகள். குழந்தைக்கதைகள் என பெரியவர்கள் நினைத்துக்கொள்ளும் பழைமையான மாயக்கதைகள். வாரமலர்களின் கிறுக்கல்கள்…

சிலநாட்களுக்கு முன் வார இதழ் சிறுவர் இணைப்பை இலவசமாக வாங்கிச்சென்று வாசிக்க அண்ணனும் தங்கையுமாக இரு குழந்தைகள் அந்தி நேரத்தில் ஒரு பார்பர் ஷாப்புக்கு வந்து தயங்கி நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். பாவமாக இருந்தது. எத்தனை பசி. அவர்களுக்கு என்ன கொடுத்துக்கொண்டிருக்கிறோம்

கல்பற்றா நாராயணன்
கல்பற்றா நாராயணன்

12. ஜெ.சைதன்யா சிந்தனை மரபு நானறிந்த வரை முன்னோடியே இல்லாத முதல் முயற்சி. அதில் சொல்லப்பட்டவற்றுள் எவ்வளவு தூரம் கற்பனை எவ்வளவு நிஜம்? சைதன்யா வளர்ந்த பின் இப்போது அதைப் படித்தாரா? அவரது அபிப்பிராயம் என்ன?

பதில்: அது ஒரு புனைவு. சைதன்யா என்ற குழந்தை சொன்னது முக்கால்வாசி. சொல்லியிருக்கக் கூடுவது கால்வாசி. சைதன்யா இன்று தஸ்தயேவ்ஸ்கியையும் காஃப்காவையும் ஒப்பிட்டுப்பேசும் இலக்கிய வாசகி. கர்ட் வான்காட் வெறும் மொழிநடையாளர் என்று நிராகரிக்கும் அறிவுஜீவி. அவள் எட்டாம் வகுப்பிலேயே சைதன்யாவின் சிந்தனை மரபை வாசித்துவிட்டாள். அந்த குட்டிச்சைதன்யாவை அவளுக்கு மிகவும் பிடிக்கும்

அவளுடைய மேஜை மேல் ஒருவயதுள்ள தன் படத்தை வைத்திருந்தாள். கல்பற்றா நாராயணன் அதைப்பார்த்து சிரித்துக்கொண்டு என்னிடம் சொன்னார் “அவளுக்கு பிறக்கப்போகும் மகள்… இப்போதே கொஞ்ச ஆரம்பித்துவிட்டாள்”

13. இலக்கிய முன்னோடிகள் வரிசை நூல்கள் முந்தைய ஆளுமைகளுக்கு நீங்கள் செய்த கறார் மதிப்பீட்டின் வழியான மரியாதை (அவற்றை வாசித்த பின் அதே போல் சுஜாதா பற்றிய ஒரு நூல் விரிவாய் நான் எழுத வேண்டும் என நெடுநாளாய் என் மனதில் ஆசை இருக்கிறது). அந்த நூல் வரிசையைத் தொடரும் உத்தேசமுண்டா? ஆம் எனில் இனி அடுத்து யாரைப் பற்றிய நூல்களை எழுதப் போகிறீர்கள்?

பதில்: அந்த நூல்வரிசையில் சா.கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், வண்ணநிலவன், வண்ணதாசன் பூமணி நாஞ்சில்நாடன் வரை எழுத எண்ணமிருந்தது. அப்போதே எழுதியிருந்தால் எழுதியிருக்கலாம். தவறிவிட்டது. நாஞ்சில் பூமணி பற்றி நூலே எழுதிவிட்டேன். பிறரைப்பற்றி எழுதவேண்டும்

14. வெண்முரசு, கொற்றவை போன்ற ஏற்கனவே எழுதப்பெற்ற இதிகாசங்களை, காப்பியங்களை மீட்டுருவாக்கம் செய்து எழுதுவதற்குப் பின்னான உந்துதல் என்ன? இதன் இலக்கிய அவசியம் என்ன? சமகாலத்தில் இதை வேறந்த மொழியிலும் யாராவது செய்கிறார்களா? (உதாரணமாய் இலியட்டை மீட்டுருவாக்கம் செய்வது)

பதில்: திருப்பி எழுதுவது என்பது நவீனத்துவத்திற்கு பிந்தைய எழுத்துமுறைகளில் முக்கியமானது. [பின்நவீனத்துவம் என்ற சொல்லை தவிர்க்கிறேன், அது இங்கே பாலியல் எழுத்து என்ற அர்த்தத்தை மட்டுமே கொண்டிருக்கிறது]. நவீனத்துவ எழுத்து எழுத்தாளன் என்ற தனிமனிதனின் அந்தரங்க உலகையே பெரிதும் வெளிப்படுத்தியது. அவனே புனைவின் மையமாக இருந்தான். எழுத்தின் வழியாக அந்த எழுத்தாளனின் தனியாளுமையை நாம் சென்று சேரமுடியும், அதாவது அவன் உருவாக்கிக் காட்டும் ஆளுமையை

நவீனத்துவம் கடந்தபின்னர் வந்த புதிய எழுத்துமுறை என்பது பலவகையிலும் நவீனத்துவ எழுத்துமுறையின் எல்லைகளைக் தாண்டிச்சென்றது. இலக்கியம் என்பது இன்னொருவகை சமான வரலாறாக மாறியது. மொத்தப்பண்பாட்டையும் வரலாற்றையும் மீண்டும் சொல்லத்தொடங்கியது. ஒட்டுமொத்த வரலாற்றின் மீதும் ஒரு முழுமையான விமர்சனத்தை முன்வைக்கத் தொடங்கியது.

கிரேக்கத் தொன்மங்களையும், செமிட்டிக் தொன்மங்களையும் பலவகைகளில் திரும்பச் சொல்லும் முயற்சிகள் மேலை இலக்கியத்தின் தொடக்கம் முதலே வலுவாக உள்ளன. சாதாரணமாகத் தேடினாலே ஆயிரக்கணக்கான நூல்களை நீங்கள் காணமுடியும். எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்தமான நூல்களில் நிகாஸ் கஸன்ஸகீஸின் லாஸ்ட் டெம்டேஷன் ஆப் கிறிஸ்ட் , எமிலி ஜோலாவின் பரபாஸ் ஆகியவை முக்கியமானவை. சமீபமாக இந்தியத் தொன்மங்களை வைத்து எழுதப்பட்ட ராபர்ட்டோ கலாஸோவின் கா ஒரு சுமாரான நூல்.

இந்த மறு ஆக்கங்கள் முழுமையடைந்த பின் அடுத்த அலையாக எழுபவை தான் இன்று அங்கே வந்துகொண்டிருக்கும் தொன்மங்களின் மறுஆக்கங்களின் மறுஆக்கம் என்று சொல்லப்படும் நூல்கள். தொன்மங்களை எடுத்துக்கொண்டு அவற்றின் உருவாக்கம் வரைச் செல்லக்கூடியவை. தொன்மங்களையும் அவற்றின்மீதான பண்பாட்டு எதிர்வினைகளையும் ஒன்றாகச் சேர்க்கும் நாவல்கள். அதாவது தொன்மங்களைக் ‘கையாளக்கூடிய’ நாவல்கள். ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸஸ் போல. ராபர்ட்டோ பொலானோவின் 2666 போல. அல்லது லோசாவின் ஸ்டோரிடெல்லர் போல. அவை தொன்மங்களை ஒருவகையில் அம்மானைக் கலைஞன் பந்துகளைத் தூக்கிப்போட்டு பிடிப்பதுபோல விளையாடுகின்றன.

இந்தியச்சூழலில் நாம் நம் தொன்மங்களுக்கான நவீன வாசிப்பையே ஆரம்பிக்கவில்லை. அவை நிகழ்ந்து விவாதிக்கப்பட்டபின்னர்தான் அடுத்தகட்டமே இங்கு சாத்தியம். கொற்றவை வெண்முரசு போன்றவை அந்த நவீன மறுவாசிப்புக்கான முயற்சிகள். இந்தியாவின் ஒட்டுமொத்தப் பண்பாட்டின் பின்புலத்தில் , இன்றைய பண்பாட்டுச்சூழலின் பின்புலத்தில் அவற்றைக் கொண்டு வந்து வைத்து பேசுகின்றன. விஷ்ணுபுரமும் அத்தகைய முயற்சிதான்

இந்தப் பிரம்மாண்டமான மறுஆக்கம் நிகழ்ந்தபின் புதிய வடிவம் கொண்டு வந்து நிற்கும் தொன்மங்களைக் கொண்டுதான் இங்கே ஒருவர் 2666 போன்ற தொன்மக்குறியீடுகளால் ஆன நூலை எழுதமுடியும். அதை போல நாமும் எழுதுவதைச் சொல்லவில்லை. அதற்கு நிகரான இங்கே மட்டுமே உருவாகும் ஓர் எழுத்துமுறையைச் சொன்னேன். எனக்கே அப்படி எழுதும் ஆசை உண்டு

கொற்றவை உட்பட இந்தவகை நூல்கள் முழுமையான கவனத்துடன் வாசிக்கப்படவில்லை. ஏனென்றால் இங்கே எழுதுபவர்களுக்கு தன் சொந்தவாழ்க்கையையும் கொஞ்சம் பகல்கனவையும் கொஞ்சம் சமகால அரசியலையும் கலந்து ‘சிறிய’ எழுத்துக்களை உருவாக்குவதில் மட்டுமே ஆர்வமிருக்கிறது. புனைவுகளின் பல அடுக்குகளை தொட்டுஎடுக்கும் வாசிப்புகளே இங்கில்லை. முற்போக்கா பிற்போக்கா என்ற வகையான மோட்டாவான ஒரு அரசியல் வாசிப்பு, எளிய அரசியல்சரிகளை மட்டும் கண்டடைவது- இதெல்லாம்தான் இங்கே நிகழ்கிறது. அத்கைய வாசிப்புதான் இவற்றை ‘மரபை திரும்ப எழுதுவது மட்டுமே, இதெல்லாம் பிஜெபி அரசியல் தோழர்’ என கடந்துசெல்லும்

சரி, உங்களுக்காக ஒன்றைச் சொல்கிறேன். கொற்றவை நாவலில் ஆறுபக்கத்துக்கு கிளிட்டோரிஸை பற்றி பேசப்பட்டிருக்கிறது என்பது தெரியுமா? கண்ணகியும் மணிமேகலையும் பேசப்படும் ஒருநாவலில் அந்தச் சித்தரிப்பு எப்படி உள்ளே வருகிறது? அது உருவாக்கும் தலைகீழாக்கம் என்ன? மொத்த மரபையே அது இன்னொன்றாக ஆக்கிவிடுகிறது அல்லவா? அதற்கான இடத்தை உருவாக்கவே இந்த மறுபுனைவுகள். அந்நாவலில் தமிழகத்தின் பெரும்பாலும் அனைத்து தொன்மங்களும் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளன. எல்லா தொன்மங்களுக்கும் இரண்டு வெவ்வேறு வடிவங்கள் அருகருகே வருகின்றன.

அந்நாவல் வந்து ஒன்பது வருடங்களாகின்றன. இன்றுவரை எவரேனும் அதைப்பற்றி பேசியிருக்கிறார்களா? ஏனென்றால் அதை நம்மூர் மோட்டா வாச்கர்கள், சின்ன எழுத்தாளர்கள் புரிந்துகொள்ள முடியாது. அதற்கான நுண்ணுணர்வு கொண்ட வாசகர்கள், அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் வருவார்கள். அதுவரை அந்நாவல் காத்திருக்கும்.

வெண்முரசைப்பற்றியும் அதையே சொல்வேன். அதன் ஒரு பக்கத்தை பொதுவாசகன் வாசித்துச்செல்வான். இன்னொருபக்கம் அது ஒரு முழுமையான தலைகீழாக்கத்தை செய்துகொண்டே செல்கிறது. நீலம் போன்ற ஒருநாவலின் தளம் நம் மரபை அறிந்து அதை தலைகீழாக கவிழ்த்தும் வாசிக்கும் ஒருவனுக்கே முழுமையாகக் கிடைக்கும். அது உருவாக்கும் பாலியல் உட்குறிப்புகளைக் கடப்பதற்கே ஒரு தனி வாசிப்புமுறை தேவை.

என் வரையில் இது ஒரு பெரிய தொடக்கம் என நினைக்கிறேன். ஒரு பிரம்மாண்டமான விதைத் தொகுதி.


15. வெண்முரசு அடுத்த பத்தாண்டுகளுக்கு உங்களது பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்ளப் போகிறது. வெண்முரசு, சினிமா, கட்டுரைகள் மற்றும் இன்ன பிற இணையச் செயல்பாடுகள் தவிர்த்து நீங்கள் புனைவில் ஈடுபடவியலாமல் போகலாம். பத்திரிக்கையாளர் ஞாநி கூட இதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். வெண்முரசு வியர்த்தமான முயற்சி என்ற அவரது பார்வையைத் தாண்டி அதில் உண்மை இருப்பதாகவே படுகிறது. உங்கள் இலக்கிய வாழ்வில் முக்கியமான அமையக்கூடிய அடுத்த பத்து ஆண்டுகளை வெண்முரசுக்கெனவே எழுதி வைத்ததை நீங்கள் எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்? உங்கள் திட்டப்படி நீங்கள் வெண்முரசு எழுதி முடித்தால் விஷ்ணுபுரம் உள்ளிட்ட உங்கள் பிற ஆக்கங்கள் பின்னுக்குக் தள்ளப்பட்டு அதுவே உங்கள் பிரதான இலக்கிய முகமாகும். அதைத் தான் விரும்புகிறீர்களா?

பதில்: இந்த விவாதங்கள் எல்லாமே வெண்முரசு என்ன வகையான எழுத்து என அறியாமல் வாசிக்காமல் அது மகாபாரதத்தை திருப்பி எழுதுவது என்ற ஒற்றை வரியின் அடிப்படையில் சொல்லப்படுபவை மட்டுமே. அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது?

இதன் இதுவரையிலான பக்கங்களில் வந்துள்ள சமகால அரசியல், சமகால உணர்வுநிலைகள் மிகப்பரந்துபட்டவை. ஓர் உதாரணம், பாஞ்சாலியின் பலகணவர் முறைபற்றிய பகுதிகள். அதன் பண்பாட்டுப்புலம். அவளுடைய பாலியல்சார்ந்த ஆழ்மன ஓட்டங்கள். அவற்றுடன் தொடர்புள்ள தொன்மங்கள் என அது செல்லுமிடம் சமகால அக ஆழமே. பாஞ்சாலி ஒரு நவீனப்பெண். அவளை ஆராய்வது ஒரு சமகால நோக்கு. ஆனால் அதை மேலோட்டமாக இங்கிருந்து விலக்கி தொன்மத்தில் கொண்டு வைத்தால் மட்டுமே முழுமையாக ஆராய முடியும்

இதன் அளவைப்பற்றி எல்லாம் பேசுகிறார்கள். இந்த எழுத்துமுறை என்பது இன்றைய,நாளைய சாத்தியம் என அவர்கள் அறிவதில்லை. பாருங்கள் ஒட்டுமொத்த சிலப்பதிகாரமும் நீட்டி அடித்தால் ஒரு குறுநாவல் அளவுக்கே வரும். ஏடுகளில் எழுதப்பட்ட பெரும்பாலான நூல்கள் மிகமிகச்சிறியவை. அச்சு ஊடகம் வந்ததும் நூல்கள் பத்துமடங்கு பெரியதாயின. பொன்னியின் செல்வன் அக்காலத்தில் மிகப்பெரிய திகைப்பை அளித்த நாவல்

இன்று மின்னணு ஊடகக் காலம். வெண்முரசு அச்சிலும் வெளியாகிறது. ஆனால் அது அச்சு ஊடகத்திற்குரியது அல்ல. அது சில ஆண்டுகளுக்குப்பின் அச்சிலேயே வராது போகலாம். ஆனால் மின்னணு வடிவில், இணையத்தில் இருக்கும். இணையத்தில் அது ஒரு டேட்டாபேஸ். ஒரு பெரிய கதைத்தொகுதி. ஒரு தொன்மக்குவியல். ஒரு தொன்மவிளையாட்டுக்களம். அதில் நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் எங்கிருந்துவேண்டுமென்றாலும் நுழையலாம். எந்தப்பகுதியை வேண்டுமென்றாலும் வாசிக்கலாம்.

இது காகிதம் அகன்றபின் நீடிக்கப்போகும் எழுத்து. இப்போதே 70 சதவீத வாசகர்கள் செல்பேசியில் வாசிக்கிறார்க்ள். செல்பேசி வாசிப்பு இல்லாவிட்டால் வெண்முரசு இல்லை என்பதே உண்மை.

யோசித்துப்பாருங்கள் இன்றைக்கு ஒரு சாதாரண மனிதன் வாசிப்பது சென்ற காலத்தை விட 10 மடங்கு அதிகம். ஃபேஸ்புக் வாசிப்புதான். ஆனாலும் அது வாசிப்புதானே. சென்றகாலத்தில் ஒருவாரத்தின் குமுதம் விகடன் உள்ளிட்ட அத்தனை இதழ்களையும் நாளிதழ்களையும் சேர்த்தால் வரும் அளவுக்கு இவன் ஒரே நாளில் வாசிக்கிறான். வாசிக்கும் ஊடகத்தின் வசதிதான் காரணம். எங்கும் எப்போதும் வாசிக்கலாம். இபப்டி வாசிப்பு பெருகியிருக்கும் இந்தக் காலகட்டத்திற்குரியது இவ்வெழுத்து

வெண்முரசு அது ஒரு சம்பிரதாயமான நாவல் அல்ல. அதை நூற்றுக்கும் மேல் சிறிய நாவல்களாக ஆக்கலாம். ஆயிரக்கணக்கான சிறுகதைகளாக ஆக்கலாம். அதை நீங்கள் பிறர் எழுதிக்கொண்டிருக்கும் நாவல்களுடன் ஒப்பிடக்கூடாது. அதில் இனிமேல் மேலும் மேலும் படங்கள் சேர்க்கலாம். அனிமேஷன் சேர்க்கலாம். விரைவிலேயே ஆடியோ சேர்க்கவிருக்கிறோம்.

முழுக்கமுழுக்க அது ஒரு ‘ஹைப்பர் டெக்ஸ்ட்’ எழுத்து. இப்போதே இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளிணைப்புகள் உருவாகி விட்டன. சிலவருடங்கள் கழித்து அதன் குறுக்கு நெடுக்காக மேலும் மேலும் இணைப்புகள் அளிக்கமுடியும். அதைமட்டும் தொகுத்து வாசகன் அவனுக்கான ஒரு நாவலை குறுக்காகத் தொகுத்துக்கொள்வான். விதுரனை மட்டும் தொகுத்து ஒரு நாவலாக்கிக்கொள்ளலாம். அந்தவேலையும் நடக்கிறது. ஒருவர் எழுதும் நாவல் அல்ல இது. இதில் இப்போதே பல நிபுணர்கள் பணியாற்றுகிறார்கள். எதிர்காலத்தில் இன்னும் பெருகும்

நீங்கள் இன்றுவரை அறியாத ஒரு பெரிய இலக்கியவகை இது. நாவல் என்ற வார்த்தை இதற்கு மிக சிறியது. இதை வேண்டுமென்றால் ஒரு ஹைப்பர்லிங்க் புனைவு என்று சொல்லுங்கள்.

16. கடந்த பத்தாண்டுகளாகவே அசோகவனம் என்றொரு பிரம்மாண்ட நாவலைத் திட்டமிட்டிருந்தீர்கள். அது எதைப் பற்றியது? அப்பணி எந்த நிலையில் இருக்கிறது? வெண்முரசு காரணமாக அது தாமதமாகிறதா? அது எப்போது வெளியாகும்?

ஒரு மூன்றுமாதம் அமர்ந்தால் முடித்துவிடமுடியும் நிலையில்தான் அசோகவனம் உள்ளது. 2016இல் அசோகவனமும் வெளியாகும் என நினைக்கிறேன். வெண்முரசு அதன் தாமதத்திற்குக் காரணம் அல்ல. விரிவான ஆராய்ச்சிதேவைப்பட்டது. கேரள வரலாறு. நாயக்கர் கால வரலாறு.

17. ஆரம்ப காலத்தில் (80களின் இறுதி?) வேறு பெயரில் பல ஜனரஞ்சகக் கதைகளை எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதே திசையில் தொடர்ந்திருந்தால் சுஜாதா மட்டுமே உங்களுக்குப் போட்டியாளராக இருந்திருப்பார் எனச் சொல்லி இருந்தீர்கள். அது பற்றிச் சொல்லுங்கள். அவற்றைத் தொகுத்து வெளியிடும் எண்ணம் உண்டா?

பதில்: இல்லை. பல கதைகள் கிடைக்கவில்லை. அதற்காக நேரம் செலவிடுவது வீண்வேலை என்று தோன்றுகிறது


18. மொழியின் உச்ச வெளிப்பாடு கவிதை. எந்த ஒரு மொழியிலும் கவிஞனே எழுத்தாளனுக்கு மேல் உயர்ந்தவனாய்க் கொண்டாடப்படுகிறான். (இரவு நாவலில் வரும் கவிதைகள் தவிர்த்து) நீங்கள் ஏன் கவிதை ஏதும் எழுதுவதில்லை?

பதில்: மொழியின் உச்சவெளிப்பாடு கவிதை அல்ல, காவியம்தான். இன்றைய கவிதை ஒரு முழுமையனுபவத்தை அளிப்பதில்லை. அது ஒரு துளியில் வாழ்க்கையை நோக்கி அமைகிறது. ஆகவே அது குறைபாடு கொண்டது. நவீனக் கவிதையின் இந்தத் துளித்தன்மை அதன் பலம். அதன் பலவீனமும் அதுவே. வரலாற்றை,பண்பாட்டை, மானுட அகத்தை நோக்கி எழுதும் எழுத்தாளனுக்கு அது ஆழ்ந்த போதாமையுணர்வை அளிக்கும்

இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான நாவல்கள் பெரும்பாலும் கவித்துவத்தால் ஆனவையே. பாஸ்டர்நாக் சொன்னார் இருபதாம் நூற்றாண்டில் கவிஞன் எழுதவேண்டியது நாவலையே என்று. கவிஞரான அவர் டாக்டர் ஷிவாகோ எழுதி அதனூடாகவே அறியப்படுகிறார். நான் கவிதைகள் எழுதினால் அது ஒரு நாவலின் பகுதியாகவே இருக்கும். என் வரையில் கொற்றவை, நீலம் இரண்டும் தமிழின் எந்த கவிஞரின் மொத்தக் கவிதைத் தொகுதிகளைவிடவும் கவிதைகளைக் கொண்டவை.

19. இதுவரையிலான உங்கள் எழுத்துக்களில் மாஸ்டர்பீஸ் நாவல், சிறுகதை, நூல் என எவற்றைக் கருதுகிறீர்கள்? அதில் ஒவ்வொன்றை பற்றியும் கொஞ்சம் பேசுங்கள்

விஷ்ணுபுரம்,பின் தொடரும் நிழலின் குரல், கொற்றவை.என நான் ஒன்றில் இருந்து ஒன்றுக்குத் தாவுகிறேன். ஒவ்வொன்றும் இன்னொன்றை நிறைப்பவை. என் வரையில் முழுமையாக்கும்போது வெண்முரசுதான் என் பெரும்படைப்பாக இருக்கும். அதைக் கடந்துசெல்ல எழுதிமுடித்ததுமே முயல்வேன்

20. ஓர் எளிய வெகுஜன வாசகன் உங்களை எங்கிருந்து வாசிக்கத் தொடங்கலாம்? என்னைக் கேட்பவர்களுக்கு ஆரம்பத்திலேயே விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், ஏழாம் உலகம் எனத் தொடங்கினால் ஒருவேளை மிரளக்கூடும் என்ற அடைப்படையில் வாசிக்க இணக்கமாய் இருப்பவை என்ற அடிப்படையில் நான் சிபாரிசு செய்வது விசும்பு, அறம், உலோகம். நீங்கள் வரிசைப்படுத்துங்களேன்.

பதில்: அறம் கதைகள். அவை அவன் கண்டு அறிந்த ஒரு மானுடமேன்மையை திரும்பச் சொல்கின்றன. வாழ்விலே ஒருமுறை, சங்க சித்திரங்கள் போன்ற நூல்களும் சிறந்த தொடக்கங்கள் என்பதைக் கண்டிருக்கிறேன்

sol


21. இடையில் சொல் புதிது என்ற சிற்றிதழைத் தொடங்கி சில காலம் நடத்தினீர்கள். அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள். இலக்கிய உலகிற்கு சொல் புதிது இதழ் செய்த பங்களிப்புகள் பற்றி? ஏன் அவ்விதழ் தொடர்ந்து வெளியாகவில்லை? சிற்றிதழ்களின் நிலையாமை தெரிந்தது தான். ஆனால் அது தவிர்த்து வேறு காரணங்கள் உண்டா?

பதில்: சொல்புதிதை என் நண்பர் எம்.கோபாலகிருஷ்ணனுடன் இணைந்து தொடங்கி சிலகாலம் நடத்தினோம். பின்னர் அவர் விலகினார். கடைசியில் நண்பர் சதக்கத்துல்லா ஹசனியின் ஆசிரியத்துவத்தில் நடத்தினேன். அது பதிவுசெய்யப்படாத இதழ். போட்டி சிற்றிதழாளர் குழுவினர் எவரோ அவர் இஸ்லாமிய தீவிரவாதி என புகார் செய்துவிட்டார்கள். அவரை கூட்டி வைத்து கொஞ்சநாள் விசாரித்தபின் விட்டுவிட்டார்கள். பதிவுசெய்ய முயன்றோம். நான் அரசூழியன் என் விலாசத்தை கொடுக்கமுடியாது. அவருக்கு சொந்த வீடு இல்லை. அவ்வாறு நீண்டு நீண்டு சென்று அப்படியே நின்றுவிட்டது

சொல்புதிது பலவகையில் பலதரத்தில் வெளிவந்த சிற்றிதழ். சிற்றிதழ்களில் அதிகமான பக்கங்கள் கொண்டதாக இருந்தது. என்சைக்ளோபீடியா அளவில் 120 பக்க அளவு கூட வந்துள்ளது. இலக்கியத்துடன் வரலாறு, பண்பாடு சர்ர்ந்த ஆழமான விரிவான கட்டுரைகளைப் போட்டதுதான் சொல்புதிது இதழின் சாதனை என்று சொல்லலாம். முக்கியமான நேர்காணல்களை எடுத்தோம். அவை இலக்கிய உரையாடல்கள் என்ற நூலில் உள்ளன. ஒவ்வொரு இதழிலும் புத்தகப்பகுதி என்ற பகுதி உண்டு. அதில் ஒரே தலைப்பின் கீழ் பலவகையான விஷயங்களைத் தொகுத்து அளித்தோம். மும்மாத இதழான சொல்புதிதை வாசித்து முடிக்க மூன்றுமாதமாகும் என்பார்கள் அன்று. அறிவியல் புனைகதைகள், முக்கியமான மொழியாக்கக் கதைகள் வெளிவந்தன

சொல்புதிதுதான் தமிழில் எழுத்தாளர்களை அட்டையில் பெரிய வண்ணப்படமாக போட்டு வந்த இதழ். அப்படி வெளியிடக்கூடாது என்ற எதிர்ப்புகள் வந்தன. சுந்தர ராமசாமியே கூப்பிட்டுச் சொன்னார். ஆனால் பின்னர் அதுவே ஒரு வழக்கமாக ஆகியது. வெங்கட் சாமிநாதனை அட்டையில் போட்டு வெளிவந்த இதழ்தான் சொல்புதிதின் முக்கியமான இதழ். தட்டச்சில் 700 பக்கம் அளவுள்ள விஷயங்கள் அதில் இருந்தன. அ.முத்துலிங்கம் உட்பட ஆறு கதைகள். தேவதேவனின் கவிதைகள். மிகவிரிவான எட்டு கட்டுரைகள்.

இப்போது சிந்தித்தால் நிறைவளிக்கும் இதழ் என்றே தோன்றுகிறது. ஆனால் கடும் உழைப்பு. ஒற்றை ஆள் வேலை.வெண்முரசு எழுதுவதெல்லாம் அந்த உழைப்புடன் ஒப்பிட்டால் குறைவுதான்

manushyaputhiran_5

22. சொல் புதிது இதழில் மனுஷ்ய புத்திரனை நொண்டி நாய் என விளித்துக் கட்டுரை வெளியானதாகக் கேள்விப்பட்டதுண்டு. உண்மையில் அதை எழுதியது யார்? நீங்கள் ஆசிரியராக அதைத் தவிர்த்திருக்க வேண்டும் தானே? உண்மையில் நடந்தது என்ன?

பதில்: நான் இருபத்தைந்தாண்டுக்காலமாக சிற்றிதழ் இலக்கியச் சூழலில் இருக்கிறேன். ஒருகுறிப்பிட்ட வகையான ஆட்களை கவனித்துக்கொண்டே இருக்கிறேன். எதையுமே வாசிக்க மாட்டார்கள். ஒரு இருபது பக்கம் அச்சடித்த எழுத்தை வாசிக்கச் சோம்பல்படுவார்கள். ஆனால் இலக்கியம் சார்ந்த எல்லா வம்புகளையும் தெரிந்து வைத்திருப்பார்க்ள். இதிலேயே இருப்பார்கள். காலப்போக்கில் ஒரு குட்டி இலக்கியவாதி என்ற அந்தஸ்து வந்துவிடும். அதற்கு வேண்டுமென்றால் ஒரு இருபது கவிதைகள் எழுதி குட்டி புத்தகமாக போட்டுக்கொள்வார்கள். இப்போது இவர்களெல்லாம் ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள் என்று அறிகிறேன்

இவர்களால் பேசிப்பேசி வாழவைக்கப்படும் வம்பு இது. சொல்புதிது எப்போதுமே மனுஷ்யபுத்திரனை போற்றிய சிற்றிதழ். அதில் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை கேட்டு வாங்கி பல பக்கங்களுக்குப் படங்களுடன் போட்டோம். அவர் சொல்புதிதில் நிறைய எழுதினார். நான் காலச்சுவடு இதழுடன் குறிப்பாக கண்ணனுடன் முரண்பட்டு வெளியே வந்த காலம். அப்போதும் மனுஷ்யபுத்திரன் சொல்புதிதில் எழுதினார்.

எனக்கு மனுஷ்யபுத்திரனுடன் எப்போதுமே நல்லுறவுதான். அவர் என்னைப்பற்றி மிகக் கடுமையாக எழுதியதுண்டு. ஆனால் ஒருபோதும் நான் கடுமையாக எழுதியதில்லை. கடுமையான மனவருத்தம் உருவானபோதுகூட அவரைப்பற்றி இனிமேல் பேசமாட்டேன் என்பதுதான் என் எதிர்வினை. ஏனென்றால் அவர் என் கவிஞர். அந்த இடத்தில்தான் இத்தனை ஆண்டுகளாக இருக்கிறார். அவர் தன் சிறிய ஊரில் ஒரு சிற்றறையில் தனிமையில் வாழ்ந்த இளமைக்காலம் முதல் தொடங்கிய உறவு அது.அவர் வீட்டுக்கு நான் சென்றிருக்கிறேன். அவரது கவிதைகளில் என்னை மீண்டும் மீண்டும் கண்டுகொண்டிருக்கிறேன். அது அவருக்கும் தெரியும்.

சதக்கத்துல்லா ஹசநீ அவர்கள் ஆசிரியராக இருந்த நாட்களில் சொல்புதிதில் வெளிவந்த பகடிக்கதை நாச்சார் மடத்து விவகாரங்கள். அது ஒரு பொதுவான பகடி.அதை எம்.வேதசகாயகுமார் எழுதினார். இன்று நீங்கள் வாசித்தால் அதில் எங்கே சுந்தர ராமசாமி சொல்லப்பட்டிருக்கிறார் அல்லது குறிப்புணர்த்தப்பட்டிருக்கிறார் என்றே தெரியாது. சதக்கத்துல்லா ஹஸநீ அதை வாஜ்பாய் அரசை பகடி செய்த கதை என்றே புரிந்துகொண்டார்.

அக்கதை பிரசுரமானபோது நான் ஊரில் இல்லை, குஜராத் அருகே இருந்த டாமனில் சோமசுந்தரம் என்ற நண்பரின் விருந்தினராகச் சென்றவன் அஜந்தா செல்லும் வழியில் அஜிதன் நச்சு உணவு காரணமாக பலநாள் ஆஸ்பத்திரியில் இருக்க நேரிட்டதனால் தாமதமாக திரும்பி வந்தேன்.

நான் வரும்போதே காலச்சுவடு அதை எனக்கெதிரான பெரிய ஒரு பிரச்சாரமாக ஆக்கியிருந்தது. எழுத்தாளர்களிடம் கையெழுத்து திரட்டி கண்டனத்தைப் பிரசுரித்தது. அக்கதையை தான் எழுதினேன் என வேதசகாயகுமார் அச்சிலேயே திட்டவட்டமாகச் சொல்லியும்கூட அதை நான் எழுதினேன் என்று அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.

அக்கதையில் நாய் வளர்க்கிறார் ஒரு பேராசிரியர் .அதில் ஒரு நாய் நொண்டி. அது மனுஷ்யபுத்திரனைக் குறிக்கிறது எனறார்கள். அதை எப்படி அவர்கள் மனுஷ்யபுத்திரனை மீறி செய்தார்கள் என பின்னர் காலச்சுவடில் இருந்து வெளியே தள்ளப்பட்டபின் அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார்’

நான் எப்போதுமே சொல்லவேண்டியதை வெளிப்படையாகச் சொல்லி விளைவுகளை எதிர்கொள்பவன் , மறைமுகமாகப் பேசுவது என் வழக்கம் அல்ல. ஒளிந்துகொள்வதும் இல்லை. ஆகவே காலச்சுவடின் அந்த தந்திரத்தால் சீண்டப்பட்டு சுந்தர ராமசாமி மீதான என் குற்றச்சாட்டுகளை நேரடியாகவே எழுதி அச்சிட்டு வெளியிட்டேன். இதுதான் நிகழ்ந்தது

பல ஆண்டுக்காலம் காலச்சுவடு தொடர்ந்து என் மேல் அவதூறுக்கட்டுரைகள் பிரசுரித்தது. புனைவுகளை தரமாக எழுதிக்கொண்டிருக்கும் வரை எந்த ஊடகமும் எழுத்தாளனை ஒன்றும் செய்துவிடமுடியாது என்பது என் நம்பிக்கை. அதையும் சோதித்துப்பார்ப்போமே என்று நினைத்தேன். அக்கட்டுரைகள் எனக்கு நல்ல வாசகர்களைப் பெற்றுத்தந்தன என்பதுதான் நடந்தது.


23. சுந்தர ராமசாமி, நீங்கள் போன்ற இலக்கிய எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகமானது 1990களின் இறுதியில் குமுதம் வெளியிட்ட தீபாவளி இலக்கிய இணைப்பு மலர்களின் வழியாகத் தான். அது இல்லாது போயிருந்தால் நான் ஒருவேளை சுஜாதாவோடே நின்றிருக்கக்கூடும். இலக்கியத்தரமாக எழுதினாலும் ஜெயகாந்தன் ஆனந்த விகடன் வழி வெகுஜனத்தைச் சென்றடைந்தார். எஸ்.ராமகிருஷ்ணன் இன்னொரு உதாரணம். சங்க சித்திரங்கள் தொடருக்குப்பின் நீங்கள் ஏன் பிரபல இதழ்களில் எழுதவில்லை?
(தி இந்துவில் எழுதும் கட்டுரைகள் தவிர்த்து). அறம் தொகுப்பில் உள்ள கதைகள் வெகுஜன இதழ்களில் வெளியாகி இருந்தால் இன்னமும் பன்மடங்கு அதிகம் பேரை சென்றடைந்திருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. வெஜன இதழின் சட்டகத்துள் நின்று இயங்குவது படைப்பாளியின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என நினைக்கிறீர்களா?

பதில்: வெகுஜன இதழ்கள் அவற்றுக்கான வரைமுறை கொண்டவை. பக்கவரையறை மட்டும் அல்ல உள்ளடக்க வரையறையும்கூட. அவற்றுடன் சமரசம் செய்துகொண்டு எழுதவேண்டும். அங்கே முக்கியமான படைப்புகளை எழுதமுடியாது. எழுதும் படைப்புகளுக்கு ஒரு பதாகையை அங்கே நட்டு வைக்கலாம் , அவ்வளவுதான்

சங்க சித்திரங்கள் எனக்கு ஒரு வாசகப்பரப்பை உருவாக்கி அளித்தது. ஆனால் ஆனந்தவிகடனுடன் எனக்கு ஆரம்பம் முதலே ஒத்துப்போகவில்லை. மறைந்த பாலசுப்ரமணியனுடன் குறுகிய கடிதப்போக்குவரத்தே இருந்தது. அவரது ‘எஜமானத் தோரணை’யை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் பணக்காரராக பிறந்தவர். முதலாளி. ஏதோ ஒருவகையில் அனைவரிடமும் கட்டளையிட்டு பழகியவர். நான் எங்கும் கட்டளைகளை வாங்கிக்கொள்பவனாக இருந்ததில்லை. இருபத்தைந்தாண்டுக்கால அரசூழியர் வாழ்க்கையில்கூட. அது ஆணவமாகக் கூட இருக்கலாம். அப்படி பழகிவிட்டேன். .

என் சுதந்திரப்போக்கால் நான் பெரிய ஊடகங்களிடம் நெருங்கவில்லை. சிற்றிதழ்களிலும் ஓம்சக்தி போன்ற இதழ்களிலும்தான் என் படைப்புகள் வெளிவந்தன. என் நண்பர்கள் எவரேனும் பெரிய ஊடகத்தில் இருந்து அவர்கள் கேட்கும்போது மட்டுமே நான் அவற்றில் எழுதியிருக்கிறேன். ஓம்சக்தி இதழின் ப.சிதம்பரநாதன் என் பலகதைகளை கேட்டு பிரசுரித்தவர்

ஓரளவுக்கு மேல் நாம் வாசகர்களிடம் செல்லக்கூடாது என நினைக்கிறேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை நான் தவிர்க்க இதுவே காரணம். நான் எழுதுவது புதியவாசகர்களுக்குத் தெரியவேண்டும். அதற்கு சில செய்திகள், பேட்டிகள் போன்றவையே போதும். அதன் பின் அவன் என்னைத் தேடிவரவேண்டும். நான் ஒரு மர்மமாக .சவாலாக அவனுக்குத் தெரியவேண்டும். என்னை முட்டித்திறந்து அவன் உள்ளே வரவேண்டும். என் நல்ல வாசகர்கள் பலர் என்னுடன் மோதியவர்கள். அதில் ஒரு அறிவார்ந்த அழகு உள்ளது

அந்த வாசகனுக்காக நான் சமைத்துப்பரிமாறும் எளிய உணவையே அவன் உண்டுகொண்டிருக்கக் கூடாது. அது என் பெரிய எழுத்துக்கள் மீதான அவனுடைய வசீகரத்தை இல்லாமலாக்கிவிடும். ஜெயகாந்தன் மேல் இல்லாத வசீகரம் என் மீது இன்றும் இளம் வாசகனுக்கு உள்ளது. காரணம் அவன் முன் என் எழுத்து ஒரு சவாலாக நின்றுகொண்டிருக்கிறது.
k

24. உங்களைப் பற்றி தொடர்ச்சியாய் வைக்கப்படும் முதன்மைக் குற்றச்சாட்டு நீங்கள் இந்துத்துவ சித்தாந்தத்திற்கு ஆதரவானவர் என்பது. நான் உங்களைக் கடந்த 15 ஆண்டுகளாக வாசிக்கிறேன். பெரும்பாலும் எனக்கு அப்படித் தோன்றியதில்லை. இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் போன்ற விஷயங்களை எழுதியவர் என்பதற்காக ஒருவர் உங்களை அப்படி விளித்தால் அதை விட முட்டாள்தனம் வேறில்லை. Self restrospective செய்து சொல்லுங்கள். நீங்கள் ஓர் இந்துத்துவவாதியா? இல்லை எனில் இந்தப் பிழையான லேபிள் உங்களுக்கு சங்கடம் ஊட்டுகிறதா?

பதில். நான் எழுதவந்த காலகட்டத்தில் ஒரு கட்டுரையில் உபநிடத மேற்கோள் ஒன்றை அளித்திருந்தேன். என் ஆசான் ஞானி அதை வெட்டிவிட்டு நிகழ் சிற்றிதழில் வெளியிட்டார். நான் அவரிடம் அதைப்பற்றி கேட்டேன். அது மதசிந்தனை, நவீன இலக்கியத்தில் அதற்கு இடமில்லை என்றார். அதே இதழில் நான்கு வெவ்வேறு மேலைநாட்டு அறிஞர்களைப்பற்றிய மேற்கோள்கள் இருந்தன. அவர்கள் நேரடியாகவே மதசிந்தனையாளர்கள்தான். அதைப்பற்றி கேட்டபோது அதுவேறுவிஷயம் என்றார் ஞானி

அந்த மனநிலை எனக்கு வியப்பளித்தது. அதைக் கடந்தேயாகவேண்டும் என முடிவெடுத்தேன். நமக்கு இங்கே மூவாயிரம் வருடத் தொன்மையுள்ள ஒரு மரபு உள்ளது. கலைகள் தத்துவம் இலக்கியம் தொன்மங்கள் என. அவை எல்லாம் மதமாகத்தான் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தூக்கி வீசிவிட்டு நாம் என்னதான் சுயமாக எழுதிவிடமுடியும் என நினைத்தேன்

நான் என் எழுத்தை முழுக்கமுழுக்க இந்தியத்தன்மை கொண்டதாக அமையவேண்டும் என எண்ணுகிறேன். இங்குள்ள மரபிலிருந்து எழுவது. இதை விமர்சிப்பது, கடந்துசெல்வது. இதில் இருந்து துண்டித்துக்கொண்டு அரைகுறையாகத் தெரிந்த மேலைநாட்டு எழுத்துக்களை நகல்செய்து எழுதும் முறையை அபத்தம் என்று மட்டுமே என்னால் சொல்லமுடிகிறது

இதுவே விஷ்ணுபுரம் போன்ற நாவலின் பின்னணி. விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்தபோது எந்த இலக்கியத்தையும் புரிந்துகொள்ளமுடியாத அ.மார்க்ஸ் போன்ற மோட்டா விமர்சகர்கள் அதன் தலைப்பை மட்டும் வைத்து அது ஒரு இந்துத்துவப்பிரதி என்று பேசினார்கள். நம்மூரில் படிக்காமலேயே பேசும் கும்பல் அதிகம். ஒரு வாகான கருத்து கிடைத்தால் அதை தன் கருத்தாகச் சொல்லிவிடுவார்கள். அப்படியே அது ஒரு கருத்தாக ஆகியது

பின் தொடரும் நிழலின் குரல் அடுத்த வருடமே வந்தது. அது இடதுசாரிகளை கடுமையாக விமர்சனம் செய்வது. மார்க்ஸியத்தை அதன் ஆன்மீகசாரத்தின் அடிப்படையில் தத்துவத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வது. அவ்விமர்சனத்தை எதிர்கொள்ளமுடியாதவர்கள் ‘அந்தாள் இந்துத்துவா… பாருங்க தோழர், விஷ்ணுவப்பத்தி எழுதியிருக்கார்’ என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள்

சமீபத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றிருந்தேன்.அம்பேத்கர் பண்பாட்டுப் பாசறையைச் சேர்ந்த பால்ராஜ் சொன்னார். ‘இப்பதான் விஷ்ணுபுரம் வாசிச்சேன். எத வச்சு அதை இந்துத்துவ பிரதின்னு சொன்னாங்கன்னே தெரியல்லை” நான் “விஷ்ணுவ வச்சு” என்றேன் “அது விஷ்னுவே இல்லியே. தலித்துக்களோட மூப்பன் தானே?” நான் புன்னகைசெய்தேன்.

இதுதான் இங்கே நிகழ்கிறது. இந்த மொண்ணைத்தனத்துடன் மோதுவதில்லை. நல்ல வாசகன் வருவான் என காத்திருக்கிறேன்

நான் நூற்றுக்கணக்கான முறை சொல்லிய்ருக்கிறேன். என் இணையதளத்திலேயே குறைந்தது நூறு தடவை இது எழுதப்பட்டுள்ளது. இந்துஞானமரபும் பண்பாடும் வேறு, இந்துத்துவ அரசியல் வேறு. இந்த வேறுபாட்டை விளங்கிக்கொள்ளாமல் இந்திய யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது. இடதுசாரிகள் இன்று ஒருவகை குறுங்குழுவாக கண்மூடித்தனமான மூர்க்கத்துடன் உள்ளனர். இந்த வேறுபாட்டை அறியாமலிருப்பது அவர்களை தோற்கடித்துக்கொண்டே இருக்கிறது.

இந்துத்துவ அரசியல் அடிப்படையில் ஐரோப்பியத்தன்மை கொண்டது. ஐரோப்பாவில் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் நவீனத்தேசியங்கள் உருவாகி வந்தன. கத்தோலிக்க திருச்சபையின் முற்றாதிக்கத்துக்கு எதிராகவே அவற்றை உருவாக்க வேண்டியிருந்தது. ஆகவே வட்டாரப் பண்பாட்டுக்கூறுகளின் அடிப்படையில் மக்களைத் தொகுத்து வலுவான அடையாளங்களை உருவாக்கி தேசியங்களை எழுப்பினர்.அந்த வலுவான தேசியங்கள் உறுதியான மையம் கொண்ட அதிகாரமாக ஆக முடியும் என்றும் க்ண்டார்கள்.

ஆகவே இனம், மொழி, மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான தேசிய உருவகங்கள் பிறந்தன. நாசிசமும் பாசிசமும் அதன் உச்சகட்ட எதிர்விளைவுகள். ஆனால் ஐரோப்பாவின் எல்லா தேசியங்களும் அப்படிப்பட்ட பண்பாட்டு அடிப்படை கொண்ட தேசியங்களே. இனம் மொழி ஆகியவை அடித்தளமாக அமைந்தன.பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் நவீன ஜனநாயகத்திற்கு வந்தனர். நவீன ஜனநாயகம் ஒற்றை அடையாளத்தை, மையத்தை முன்வைப்பது அல்ல. அது தொகுப்புத்தன்மை கொண்டது. அனைவரையும் உள்ளடக்க முனைவது

ஐரோப்பாவில் இருந்துதான் நமக்கும் நவீனத் தேசியம் என்ற கருத்துக்கள் வந்தன. மாஜினி கரிபால்டி போன்ற பெயர்கள் இங்கே புகழ்பெற்றன. பாரதியே கூட மாஜினி கூறுவதாக கவிதை எழுதியிருக்கிறார். அதேபாணியில் சிவாஜி தன் படைகளுக்குக் கூறுவது என்ற கவிதையை எழுதினார்.

ஐரோப்பாவின் இரண்டு வகை தேசியங்களும் இங்கே வந்தன. ஏற்கனவே இங்கே இந்துமத மறுமலர்ச்சி தொடங்கிவிட்டிருந்தது. அந்த எழுச்சியில் இருந்து ஒரு நவீன ஜனநாயக தேசியம் நோக்கி காங்கிரஸ் சென்றது. காந்தி அதை வழிநடத்தினார். அதற்கு மாற்றாக இந்து மறுமலர்ச்சியில் இருந்து பண்பாட்டு அடையாளங்களை எடுத்துக் கொண்டு மதம்சார்ந்த ஒரு பண்பாட்டுத்தேசியத்தை நோக்கி சென்றவர்களே இந்துத்துவர்கள் எனப்படுகிறார்கள். இந்த இரண்டு அரசியலும்தான் இந்திய அளவில் இங்கு உள்ளன.

இந்த இந்துத்துவ அரசியலுக்கும் இங்குள்ள கோடிக்கணக்கான மக்களின் பாரம்பரியத்திற்கும் நேரடித் தொடர்பு ஏதும் இல்லை.இம்மக்களின் பல்லாயிரமாண்டுக்கால நம்பிக்கைகள், ஆசாரங்கள், குறியீடுகள், தொன்மங்கள் ஆகியவை இந்துமதமாக இன்று திரண்டுள்ளன. அவற்றிலிருந்தே அவர்கள் தங்கள் கலையிலக்கியங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். தங்கள் அறங்களை அமைக்க முடியும். அவற்றை நம்பியே அவர்கள் கனவுகாண முடியும்

இந்துத்துவ அரசியலை எதிர்க்கிறோம் என்ற பேரில் இங்குள்ள இடதுசாரிகள் இந்துமரபுடன் மோதிக்கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவ அரசியலும் இந்துமரபும் ஒன்று என வாதிடும்போது நூறாண்டுக்கால வரலாறுள்ள இந்த்துவ அரசியலை மூவாயிரமாண்டுக்கால வரலாறுள்ள இந்துமதத்துடன் பிணைக்கிறார்கள். இந்த வேறுபாட்டை நான் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறேன். இந்த மூடர்களிடமிருப்பது ஆணவமா அறியாமையா என்றே எனக்குப்புரியவில்லை

இந்தியா என்ற இந்த நிலப்பரப்பு பல்லாயிரமாண்டுக்காலமாக மக்கள்திரள் இடம்பெயர்ந்து கலந்து உருவானது. இங்குள்ள பெரும்பாலான நிலப்பரப்புகளில் பலவகை இன, மொழி, மத மக்கள் வாழ்கிறார்கள். ஆகவே இந்தியா என இன்றுள்ள இந்த அரசியலமைப்பு மட்டுமே இங்கே உண்மையான வளர்ச்சியை அளிக்க முடியும். இந்த அமைப்பு சிதறுமென்றால் வட்டார அளவில் பெரும்பான்மைவாதமே மேலெழும். மானுடவரலாற்றின் மாபெரும் அகதிப்பெருக்கே எஞ்சும். மிகச்சிறிய போடோ, நாகா பிரிவினைவாதக் குழுக்கள் கூட சக பழங்குடிகளைக் கொன்றுகுவிப்பதை நாம் கண்கூடாகவே காண்கிறோம்

இந்தத் தேசியமானது இந்தியத் தேசியநாயகர்களால் உருவாக்கப்பட்டது. காந்தியும் அம்பேத்கரும் நேருவும் அதன் தலைவர்கள். இது நவீன ஜனநாயக இந்தியத் தேசியம். தொகுப்புத்தன்மை கொண்டது. அனைவரையும் உள்ளடக்கியது. இதைச் சிதைக்க எண்ணுபவர்கள் அனைவருமே சாதியமோ மொழிவாதமோ இனவாதமோ பேசும் குறுங்குழுக்கள். பாசிஸ்டுகள் என்பதைக் காணலாம்.

இந்தியதேசியம் என்பதே இந்துதேசியம் என்று ஒரு பிரச்சாரத்தை இங்குள்ள மதவெறியர்கள், அவர்களை இயக்கும் அன்னியசக்திகள் முன்னெடுக்கின்றன. அவற்றை நம்பும் முற்போக்கினர் இந்தியாவின் நவீன ஜனநாயக தேசியத்தையே சிதைக்க எண்ணுகிறார்கள்.

நான் இந்து ஞானமரபில் பற்றுள்ளவன். இந்தியாவின் நவீன ஜனநாயக தேசியத்தில் நம்பிக்கை கொண்டவன். இந்துத்துவ அரசியல் இந்தியாவின் ஞானமரபின் அனைத்தையும் உள்ளடக்கும் பண்பை, விவாதங்களை அனுமதிக்கும் இயல்பை, கிளைவிட்டுப்பிரியும் செழுமையை அழித்து அதை ஒற்றைப்படையாக ஆக்கமுயல்கிறது என நினைக்கிறேன். ஆகவே அதை எப்போதும் எதிர்த்தே வருகிறேன். இதை நீங்கள் சென்ற பத்தாண்டுக்காலத்தில் மதமாற்றத் தடைச்சட்டம்,எம்.எஃப் ஹுசெய்ன் முதல் இன்று மாதொருபாகன் சர்ச்சை வரை நான் எழுதிய கட்டுரைகளில் காணலாம்

நான் இந்தியா நவீன ஜனநாயக தேசமாக ஒன்றாக இருக்கவேண்டுமென விரும்புகிறேன். அதன் மேல் தாக்குதல் தொடுக்கும் பிரிவினைவாத அமைப்புகளின் கீழ்மை மிக்க ஃபாசிசப்போக்குகளை தொடர்ந்து அம்பலப்படுத்துபவம் ஆனால் நான் இதை இந்துத்துவர்கள் ஓர் இந்து தேசியமாக எண்ணுவதை ஏற்கமாட்டேன். இது இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உரிய நவீன நாடு என்றே எண்ணுகிறேன். என் தேசிய உருவகம் நேருவால் முன்வைக்கப்பட்டதே. எப்படியும் ஒரு ஐம்பது கட்டுரைகளில் இதை எழுதியிருக்கிறேன்.

இங்கே இந்துமதம், இந்தியா மீது தொடர்ந்து தாக்குதலை முன்வைத்துவரும் கூலி அறிவுஜீவிப்படை ஒன்று உண்டு. இவர்கள் பெரும்பாலும் இங்கு சுதந்திரமாகச் செயல்பட்டுவரும் மதமாற்ற, மதவெறி அமைப்புகளிடம் நிதி பெற்று செயல்படுபவர்கள். பல்வேறு ஏகாதிபத்திய நிதியமைப்புகளின் கையாட்கள். இவர்களை நான் அம்பலப்படுத்தி விமர்சிக்கும்போது தங்களை காத்துக்கொள்ள என்னை இந்த்துவத்தை பேசுவதாகச் சொல்லி முத்திரை குத்துகிறார்கள்

ஒரு பத்துபக்கம் தொடர்ந்து வாசிக்கும் அறிவுத்திறன் இல்லாத பெருங்கும்பல் இந்த கூலிப்படையினரின் ஒற்றை வரிகள் வழியாக என்னை அறிந்து திரும்பித்திரும்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறது

நான் நாராயணகுருவை, நித்யசைதன்ய யதியைத்தான் ஆன்மீக தளத்தில் முன்வைத்து வருகிறேன். எந்த வகையிலும் அவர்கள் இந்துத்துவத்தை அல்லது இந்து பழமைவாதத்தை ஏற்றவர்கள் அல்ல. சொல்லப்போனால் இடதுசாரிகளுக்கே நெருக்கமானவர்கள்.காந்தியையும் நேருவையும் அம்பேத்கரையுமே முன் வைத்து வருகிறேன். வேறெந்த அரசியலாளரையும் அல்ல

மீண்டும் மீண்டும் இதைச் சொல்லி வருகிறேன். இந்துமெய்ஞான மரபின் மேல் மதிப்புள்ள ஓர் இந்து நான். இந்திய நவீன தேசியம் மீது பற்றுள்ள ஓர் இந்தியன் நான்.

nehru_ambedkar_20120820

25. எழுத்து தவிர்த்து ஓர் எழுத்தாளனின் சமூகக் கடமை என எதைக் கருதுகிறீர்கள்? மேற்கில் எழுத்தாளர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் போராளிகளாகவும் இருந்துள்ளனர். ஓர் எழுத்தானை மதிப்பிடுகையில் அதுவும் கணக்கில் கொள்ளப்பட வேண்டுமா? எதிர்ப்போ ஆதரவோ சார்பற்ற, நேர்மையான கருத்துக்களைப் பதிவு செய்வதையும், உண்மையான வரலாற்றை எழுதுவதையும் தாண்டி அவன் நேரடிக் களப்பணி ஆற்ற வேண்டியது அவசியமா? உங்கள் பங்களிப்பு இதில் எவ்வகை எனக் கருதுகிறீர்கள்?

பதில்

களப்பணி ஆற்றுவதும் ஆற்றாமலிருப்பதும் அந்தந்த எழுத்தாளனின் இயல்பை சார்ந்தவை. இளமையில் நான் தொழிற்சங்கம் மற்றும் சூழியல் செயல்பாடுகளில் நேரடியாக களப்பணியாற்றியவன். நான் எழுதியவற்றில் சூழியல் துண்டுப்பிரசுரங்கள் அதிகம் உண்டு

ஆனால் காலப்போக்கில் ஒன்றூ தெரிந்தது. களப்பணிக்கு ஓர் ஒற்றைப்படையான வேகம் தேவை. அதுதான் நம்பிக்கையை அளிக்கிறது. சூழியல் போராளிகளை எடுத்துக்கொண்டால் சூழியல் பிரச்சினையை சரிசெய்தால் உலகம் சரியாகிவிடும் என்பார்கள். அந்த நம்பிக்கை இல்லாமல் அவர்கள் செயல்படுவது இயலாதது

ஆனால் அந்த ஒற்றைப்படை வேகம் இலக்கியத்திற்கு எதிரானது. இலக்கியம் எப்போதும் அனைத்து பக்கங்களையும் பார்ப்பதாகவே இருக்கவேண்டும். ஆகவே எந்தவகையான தீவிரச் செயல்பாடும் இலக்கியத்தை வலுவிழக்கச்செய்யும் என்றே நினைக்கிறேன்.

தமிழின் புகழ்பெற்ற இதழாளர்கள் எழுதும் கட்டுரைகளையும் என் கட்டுரைகளையும் ஒப்பிட்டால் இதைக் காணலாம். அவர்கள் எப்போதும் ஒற்றைப்படையான குரல்கள்தான். அக்குரல்களுக்கு ஒரு மதிப்பு உண்டுதான். ஆனால் நான் எல்லா பக்கங்களையும் பார்க்கவே எப்போதும் முயல்கிறேன்

மேலும் மொழி என்பது ஒரு விசித்திரமான ஊடகம். எல்லா கலையும் அப்படித்தான் என்றாலும் மொழி இன்னும் சிக்கலானது. அது அன்றாடச்செயல்பாடு முதல் ஆழ்மனக் கனவு வரை பல அடுக்குகள் கொண்டது. அதிலேயே இருந்து அதிலேயே வாழ்ந்தாலொழிய அதில் உண்மையில் எதையும் சாதிக்கமுடியாது.

gandhi

26. எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் இடையே தூரம் இருக்கலாமா? உதாரணமாய் முதலாளித்துவத்தை எதிர்த்து எழுதும் ஒருவர் ஒரு கடைந்தெடுத்த முதலாளித்துவ நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருக்கலாம். உங்கள் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே கொள்கை அடிப்படையில் ஒற்றுமை இருக்கிறதா?

பதில்: எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் இடையே தூரம் இருக்கக்கூடாது என்பதே என் எண்ணம் . என் வாழ்க்கைக்கும் என் எழுத்துக்கும் முரண்பாடு இருந்தால் எவரும் அதை சுட்டலாம். என் வாழ்க்கையில் ரகசியங்கள் என ஏதும் இல்லை. நான் எதை எழுதுகிறேனோ அதுவே நான்.

எழுத்தாளன் வாழ்வதற்காக சமரசம் செய்துகொள்ளக்கூடும். ஒத்துப்போகக்கூடும். ஆனால் அதையும் எழுத்தாக முன்வைக்கலாம். மறைத்தால் அவன் பொய் சொல்கிறான். ஒரு பொய் எல்லாவற்றையும் பொய்யாக ஆக்கிவிடும்

முதலாளித்துவ ஊடகத்தில் வேலைபார்த்துக்கொண்டு முதலாளித்துவத்தை எதிர்க்கலாம். ஆம், நான் இங்கே வேலைபார்க்கிறேன் என அவன் சொல்லும் பட்சத்தில் அது ஒரு தரப்புதான்

முன்பு இங்கே இடதுசாரி தீவிரவாத இயக்கங்களில் அரசு உயரதிகாரிகள் பணியாற்றினர். மக்கள்தொடர்புத்துறை உயரதிகாரி ஒருவர், திமுகவுக்கு மிக நெருக்கமான ஜால்ராக்காரர், ஒரு நக்சலைட் கட்சியை தலைமைவகித்து பத்திரிகையும் நடத்தினார் என்றால் நம்ப மாட்டீர்கள். மாளிகை மாதிரி வீடு கட்டி கப்பல் மாதிரி காரில் வாழ்ந்தார் அவர். அவரை நம்பிய பல இளைஞர்கள் மனநோயாளிகள் ஆனார்கள்.

இந்தவகையான இரட்டைவேடங்கள் படைப்பூக்கத்தையே போலியாக ஆக்கிவிடும். ஒருபோதும் எழுத்து இதிலிருந்து எழமுடியாது. சரி, உங்களை மறைத்துக்கொண்டு ஒரு போலிவடிவில் நீங்கள் எழுதினால் என்ன ஆகும்? கொஞ்சம் கொஞ்சமாக அவ்வடிவை நீங்கள் கட்டி எழுப்பி நிறுவ ஆரம்பிப்பீர்கள். அது எழுத்தை போலியாக ஆக்கும்

எழுத்தாளனின் சோதனைச்சாலை அவன் மனம் தான். அவன் வாழ்க்கைதான். அதைத்தான் அவன் வாசகர் முன் வைக்கிறேன். என் எழுத்துக்கள் என் அகம்தான்.


27. கடவுள் நம்பிக்கை தொடர்பான நிலைப்பாடே ஒருவரின் எல்லாச் சிந்தனைகட்கும் மைய அச்சு என்பது என் புரிதல். நீங்கள் ஆத்திகரா நாத்திகரா? நான் வாசித்த வரை உங்கள் எழுத்துக்களில் ஆன்மீகத் தேடல், இந்து மதக் கோட்பாடுகளின் தத்துவ தரிசனம் இருக்கிறதே ஒழிய நீங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்பதற்கான தடயங்கள் தட்டுப்படவில்லை. ஓர் எழுத்தாளராக உங்கள் ஆன்மீக நிலைப்பாடு எவ்வாறு உங்களைப் பாதிக்கிறது? (அல்லது வழிநடத்துகிறது என்றும் கொள்ளலாம்)

பதில்” ஆத்திகரா நாத்திகரா என ஒருமுறை ஜெயகாந்தனிடம் கேட்டேன். இது எத்தனை பழைய கேள்வி? நான் நாத்திகன் ஆனால் இந்து. நான் இறைநம்பிக்கை அற்றவன் ஆனால் ஆன்மீகவாதி என்றார். அதுவே ஏறத்தாழ என் பதில்

நாத்திகம் ஆத்திகம் என்ற வாதம் செமிட்டிக் மதங்களின் முழுமுதல் இறைவன் என்ற கருதுகோளில் இருந்து வருவது. அதாவது படைத்துக் காத்து அழிக்கும் இறைவன் ஒருவன் உள்ளான் என நம்புகிறவன் ஆத்திகன். மறுப்பவன் நாத்திகன்.

இந்து, பௌத்த, சமண மதங்களுக்கு இந்தக்கேள்வியே பொருந்தாது [எளிமையாக வாசிக்க கார் சகனின் காட்ண்டாக்ட் நாவலிலேயே இந்த விவாதம் வரும்] இங்கே தெய்வ உருவகங்கள் மூன்று. எளிய அன்றாட தெய்வங்கள், அதாவது சிறுதெய்வங்கள் ஒரு தளம்.படைத்துக்காத்து அழிக்கும் பெருந்தெய்வங்கள் இரண்டாவது தளம். மூன்றாவது தளம் ஒன்று உண்டு. அது பிரபஞ்ச தத்துவம் ஒன்றை ஏற்றுக்கொள்வது. பௌத்தர்களின் தர்மம் போல. சமணார்களின் பவசக்கரம் போல வேதாந்திகளின் பிரம்மம் போல. அதுஒரு கருத்து, ஒரு தத்துவ உருவகம் மட்டும்தான்.

இப்பிரபஞ்சம் இப்படி இயங்கலாம் என்ற ஒரு உருவகம் அது. அதில் நம்பிக்கை கொண்டவன் கடவுள் நம்பிக்கை கொண்டவன் அல்ல. அவனுக்கு பக்தி இல்லை. சடங்குகள் தேவை இல்லை. ஆகவே ஒருகோணத்தில் அவன் நாத்திகன். ஆனால் இங்கே நிகழ்வன அனைத்தும் வெறும் தற்செயல் என அவன் நினைக்கவில்லை. இவற்றை வெறும் அன்றாட நோக்கால் அணுகவில்லை. ஒரு மொத்த தர்க்கத்தை நோக்கிச் செல்ல முயல்கிறான். ஒரு சாராம்சமான உண்மையை அடைய நினைக்கிறான். ஆகவே அவன் ஆன்மீகவாதி.

நாராயணகுரு வேதாந்தத்துக்கும் பௌத்தத்துக்கும் நடுவே ஒரு தரிசனத்தை முன்வைத்தார். அவரது குருமரபில் வந்த நித்ய சைதன்ய யதியின் மாணவன் நான். அதுவே என் ஆன்மீகம். அது இறைநம்பிக்கை அல்ல. ஆகவே நான் நாத்திகனே. நாத்திகன் என்றால் மற்றவர்களைப்போல சும்மா ஃபேஸ்புக்கில் சொல்வது அல்ல. எல்லா வகையிலும். சொல் செயல் அனைத்திலும். அதேசமயம் நான் வேதாந்தி, இந்து

28. நீங்கள் ஏன் மது அருந்துவதில்லை? உடல் நலன் கருதியா அல்லது ஒழுக்கக் கேடாகக் கருதுகிறீர்களா? அசைவ உணவுப் பழக்கம் பற்றிய உங்கள் கருத்தென்ன? (ஓர் எழுத்தாளனின் நேர்காணலில் இது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது எனில் பொதுவாய் எல்லாப் படைப்பாளிகளுமே குடிக்கிறார்கள், போதை உச்சபட்ச படைப்பூக்கத்தையும் கற்பனை ஆற்றலையும் வழங்குவதாகச் சொல்பவர்கள் கூட உண்டு. இதில் நீங்கள் விதிவிலக்காக இருக்கிறீர்கள். அதனாலேயே கேட்கிறேன்.)

பதில்

நான் கல்லூரியில் சேர்ந்த முதல்நாள் என் அப்பா என்னை அழைத்துப்போய் மூன்று அறிவுரைகளை மாமரத்தைப்பார்த்தபடி சொன்னார். குடிக்காதே, குடித்தால் தெருவில் கிடப்பாய். ஒருபெண்ணுக்குமேல் உறவு தேவை இல்லை, அவர்கள் உன்னை ஆட்டிப்படைப்பார்கள். தொழில் ஏதும் செய்யாதே, உன்னால் முடியாது

என்னை மிக நன்றாக அறிந்த ஒருவர் சொன்னது. மேலும் அவர் உடனே செத்தும் போய்விட்டார். ஆகவே அதை மீறமுடியவில்லை. அவர் சொன்னது மிகச்சரி என பின்னர் உணர்ந்தேன். நான் குடித்திருந்தால் பெருங்குடிகாரனாகி அழிந்திருப்பேன். என் இயல்பு அது

நான் விதிவிலக்கு அல்ல. குடிக்கும் படைப்பூக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை. தமிழின் மிக உச்சகட்ட படைப்பாளிகள் எவரும் குடித்தவர்கள் அல்ல. புதுமைப்பித்தன், ஜானகிராமன், அசோகமித்திரன்…. தொட்டாலே கை அதிருமோ என அஞ்சவைக்கும் உச்சகட்ட படைப்புமனநிலையில் எப்போதும் இருக்கும் என் ஆதர்சம் ஒருவர் உண்டு, குடிப்பதில்லை அவர். இளையராஜா.

குடிப்பவர்கள் இருவகை. வெறும் குடிகாரர்கள். குடியின் குற்றவுணர்ச்சியை மறக்க கவிஞர், கலைஞர் என்றெல்லாம் பாவலா செய்பவர்கள். எண்ணிக்கையில் இவர்களே 90 சதவீதம்.

படைப்புமனநிலையின் உச்சநிலையில் இருந்து இறங்கியதும் அந்த தட்டை வாழ்க்கையைத் தாளமுடியாமல் குடிக்கத் தொடங்கி பெருங்குடிகாரர்கள் ஆனவர்கள் உண்டு. அது ஒரு தவறான முடிவின் விளைவு. அவர்கள் குடிப்பதனால் எழுதுவதில்லை. எழுதாதபோது, அல்லது எழுத முடியாதபோது, குடிக்கிறார்கள். அவர்கள் மிகச்சிலர்.

என் ஆசானாகிய மலையாள எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணன் அத்தகையவர். என்னிடம் மீளமீளச் சொன்னார், குடிக்காதே என. மூளையைக் கொதிக்கவிடு, குடியை ஊற்றி அணைக்காதே என. நான் கேட்டேன், வெடித்துவிடும்போலிருக்கிறதே மாஷே என்று. எங்காவது ஓடு. பயணம் போ. எவரையாவது திட்டு. எங்காவது சென்று அடி வாங்கு. ஆனால் மூளையைக் கொதிக்கவிடு, அதைக் கவனித்துக்கொண்டு இரு என்றார்.

போதை என்பது ஒரு மனமயக்க நிலை. மந்த நிலை. அதில் எந்த படைப்பூக்கமும் இல்லை. படைப்பூக்கம் என்பது பலமடங்கு கூர்மையான அகவிழிப்பு நிலை. வெண்முரசு போன்ற ஒரு நாவல்தொடரின் பல்லாயிரம் பக்கங்களை முழுமையாக நினைவில் வைத்திருந்து எழுதும் நிலை மனமயக்கத்தில் வருவது அல்ல. அது மூளை முழுமையாகச் செயல்படும் ஓர் உச்சநிலை. இறங்கி வந்தால் அது இருக்காது. ஒன்றுமே நினைவில் இருக்காது. நாலைந்து நாள் எழுதாவிட்டால் எழுதவே முடியாதோ என பயம் வந்துவிடும். எழுதி அச்சில் வந்த நூலைக் கண்டாலே பீதியாக இருக்கும், எப்படி எழுதினோம் என

ஆனால் இதுவும் ஒரு போதை என்று சொல்லலாம்தான். மூளையின் ஒரு சில சாத்தியங்கள் முழுமையாக விழிக்க பல இடங்கள் அணைந்து போகின்றன. ஓரளவு மேனியா அல்லது அப்ஸெஷன் என்று சொல்லத்தக்க மனப்பிறழ்வு நிலை. நாம் கையாளக்கூடிய ஒரு கிறுக்கு நிலை.

உண்மையில் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கிறுக்கு நிலையை உருவாக்கிக்கொள்ள தடையாக குடி அமையும். அந்த கிறுக்குக்குத் தேவையானது தனிமை. தன்னைத்தானே அவதானித்துக்கொண்டிருக்கும் ஒரு நிலை. அதாவது மனச்சோர்வு நோயாளி அளவுக்கு பயங்கரமான தனிமை. கூட்டம் சேர்ந்து குடித்துக் கூத்தாடுவதுபோல அதற்கு எதிரானது ஏதுமில்லை

எழுத்தாளனின் கடமை வெளியே கவனிப்பது. கூடவே தன்னையும் கவனிப்பது. மிகச்சிறந்த பார்வையாளனே எழுத்தாளனாக முடியும். எப்போதும் அவன் மூளை விழித்து கூர்ந்திருகக்வேண்டும். சாதாரண சமயங்களில் உள்ளே சென்று தேங்குவதே படைப்பின் வேகத்தில் வெளிவருகிறது. மூளையை மழுங்கடிப்பவை இரண்டு. ஒன்று போதை. இன்னொன்று வழக்கமான ‘ரொட்டீன்’ வாழ்க்கை.

29. சகல விஷயங்களுக்கும் உங்களிடம் கருத்து உண்டு என உங்களைப் பற்றி சிலர் கேலியாய் குறிப்பிடுவதுண்டு. ஆனால் மிகச்சில விதிவிலக்குகள் தவிர்த்து ஒரு விஷயத்தில் உங்கள் அறிவு அல்லது அனுபவம் கணிசமான அளவு இருந்தால் தான் கருத்து சொல்கிறீர்கள் என்பதே என் புரிதல். எழுத்தாளன் எல்லா விஷயங்களுக்கும் எதிர்வினையாற்ற வேண்டுமா? ஒரு விஷயத்துக்கு கருத்து சொல்லாத போது கள்ள மௌனம் என ஜோடிக்கப்படுகிறது. நிறைய விஷயங்களுக்குக் கருத்துச் சொன்னால் துறைசார் பாண்டித்யம் இல்லாமல் சொல்லப்படும் கருத்து என விமர்சனம் எழுகிறது. இதில் உங்கள் நிலைப்பாடு என்ன? ஒரு விஷயத்துக்கு எதிர்வினையாற்ற வேண்டுமா, வேண்டும் எனில் எப்போது என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்?

பதில்: பலமுறை சொல்லியிருக்கிறேன். சகலவிஷயங்களுக்கும் நான் கருத்து சொல்வதில்லை. எனது துறை என நான் நினைப்பது இலக்கியம், இந்தியதத்துவம், தமிழக வரலாறு. இம்மூன்றிலும் மட்டுமே நிபுணனாகக் கருத்துச் சொல்கிறேன். இவற்றுடன் தொடர்புள்ள அரசியல், பண்பாட்டு விஷயங்களிலும் கருத்துச் சொல்கிறேன். இத்துறைகளில் எவருக்கும் குறையாத வாசிப்பும், அவதானிப்பும் எனக்கு உண்டு. விஷயம் தெரிந்த எவரும் என் கருத்துக்களை புறக்கணிக்கமுடியாது.

தொழில்நுட்பம், அறிவியல், சினிமா, இசை,பொருளியல் என எதிலும் கருத்து சொல்வதில்லை. சிலசமயம் இத்துறைகளில் ஓர் எளிய வாசகனாக பிறரது கட்டுரைகளை வழிமொழிந்திருப்பேன் அவ்வளவுதான். உங்களுடைய ஒரு அறிவியல்கட்டுரையைக்கூட அப்படித்தான் வழிமொழிந்தேன்.

கருத்துத் தெரிவிப்பதற்கு சில விதிகளை வைத்திருக்கிறேன். ஒரு பிரச்சினை போதிய அளவு பேசப்பட்டு அடங்கிய பின்னரே கருத்து தெரிவிப்பேன். அப்பிரச்சினையில் பிறர் சொல்லாத ஏதேனும் விஷயத்தை எழுத்தாளனாக நன் சொல்வதற்கிருந்தால் கருத்து தெரிவிப்பேன். அப்போது நான் ஏதும் தீவிரமாக எழுதாமலிருந்தால்தான் கருத்து தெரிவிப்பேன்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 50