பெருமாள் முருகன் கடிதம் 8

ஜெ,

சார்லி ஹெப்டோ மற்றும் மாதொருபாகன் நிகழ்வுகளின் பின் கருத்துச் சுதந்திரம் குறித்து (மீண்டும்) ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கிறேன். இது போன்ற சில சமயங்களில் WWGD – What would Gandhi do – என்று யோசிப்பது பிரயோசனமாக இருந்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் மற்றும் அதன் எல்லைகள் குறித்த காந்திய பார்வை என்ன?

நான் யோசித்த வரை: சார்லி விஷயத்தில் கேலிச்சித்திரம் வாயிலாக கருத்தைச் சொல்லும் உரிமையை அங்கீகரிக்கும் அதே வேளையில், அவ்வுரிமையை அவர்கள் பிரயோகித்த விதங்களை ஆதரித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். ஒரு சமூகத்தினை காயப்படுத்துவதற்கென்றே ஒரு உரிமை பயன்படுத்தப் படுகின்றது என்றால் அதை அவரால் ஏற்றுக் கொண்டிருக்க முடியாது என்றே தோன்றுகிறது. சீண்டுவதற்கான உரிமை (right to provoke) போன்றவற்றை பயனற்ற செயல்பாடுகளாகக் கருதியிருப்பார் என்று நினைக்கிறேன். (அவர்களுக்கு எதிரான வன்முறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்தி இருக்க மாட்டார் என்று சொல்லத் தேவையில்லை)

மாதொருபாகன் விஷயத்தில், பெ.மு கண்டிப்பாக யாரையும் காயப்படுத்தவென்று எழுதவில்லை. எழுதி சில வருடங்கள் கழித்து சிலர் கிளம்பி ஆட்சேபித்த போது, பெருந்தன்மையாக ஊர் பெயரை எடுத்து விடுவதாகவும் அறிவித்தார். ஆதலால், இந்த விஷயத்தில் காந்திய நிலைப்பாடு என்பது முழுவதும் பெ.முருகனுக்கு ஆதரவாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி,

ஸ்ரீகாந்த் மீனாட்சி

அன்புள்ள ஸ்ரீகாந்த்,

காந்தியின் நிலைப்பாடுகளை அவரது செயல்களில் இருந்து இப்படித் தொகுக்கமுடியும்

1. செயல் அல்ல அதன்பின் உள்ள நோக்கமும் இலக்குமே முக்கியமானது. உயர்ந்த நோக்கம் கொண்ட நேர்மையான செயல்பாடு என்றால் அதை துணிவுடன் செய்யலாம்.

2. ஒற்றைப்படையான மூர்க்கமான உணர்ச்சிகரமான செயல்பாடுகள் அந்த இலக்கை எட்ட எவ்வகையிலும் உதவாது. மாற்றுத்தரப்புடன் ஓர் உரையாடலுக்கு வாய்ப்பிருக்கும் கருத்துக்கள் மட்டுமே எவ்வகையிலேனும் பயனுள்ளவை. மற்றவை எதிர்தரப்பை மேலும் மூர்க்கமாக ஆக்கும்

3. தற்காலிக சமரசங்கள் ஆற்றலை பெருக்கவே செய்யும். எந்த ஓர் அறிவியக்கச் செயல்பாடும் நெடுநாள் தொடர்ந்து செய்யப்படுவதாகவே இருக்கமுடியும்

ஜெ

முந்தைய கட்டுரைபெருமாள் முருகன் கடிதம் 7
அடுத்த கட்டுரைபெருமாள் முருகன் கடிதங்கள் 9