«

»


Print this Post

பெண்ணெஸ்வரனின் இணையப்பக்கம்


1991ல் நான் முதன்முதலாக பெண்ணேஸ்வரனை டெல்லியில் சந்தித்தேன். அப்போது அவர் மத்திய அரசில் ஏதோ ஓர் அமைச்சகத்தில் குமாஸ்தாவாக வேலைபார்த்துக்கொண்டிருந்தார்.அப்போது டெல்லியில் ஒரு இளம் நணபர்குழு இருந்தது. சுரேஷ் என்ற இலக்கியவாசகரான நண்பர். அங்கே வேலைபார்த்த அச்சுதன் அடுக்கா என்ற தி.அ.ஸ்ரீனிவாசன்… பொதுவாக டெல்லிக்குச் செல்லும் எழுத்தாளர்கள்,விடுதியில் அறை எடுக்க காசில்லாதவர்கள், பெண்ணேஸ்வரனின் இரண்டு அறைவீட்டில் தங்குவது வழக்கம். அல்லது டெல்லி பல்கலை தமிழ்பேராசிரியரும் நாடக ஒளி அமைப்பு நிபுணருமான ரவீந்திரன் அவர்களின் மாடி அறையில். அங்கே வெங்கட் சாமிநாதன் வருவார். இலக்கிய சர்ச்சைகள், ஊடே வசைபாடல்கள் நடக்கும். ஒட்டுமொத்தமாக ஒரு சிற்றிலக்கியச்சூழல் அப்போது அங்கே இருந்தது.

ஜகன்மித்யை கதைக்காக கதா விருது பெறுவதற்காகவே நான் டெல்லிசென்றிருந்தேன். வெங்கட்சாமிநாதன், வாசந்தி போன்றவர்களையும் அப்போதுதான் சந்திந்தேன். வழக்கம்போல வாசந்தி நான் அவரைப்பற்றி எழுதிய ஒரு விமரிசனத்தை தவறான பொருளில் தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தார். அத்தகைய கசப்புகள் என்னுடனான நேர்ப்பேச்சில் எளிதில் விலகுவதை கண்டிருக்கிறேன். நம்பகத்தன்மையை உருவாக்கக்கூடிய ஒரு அசட்டு சிரிப்பு எனக்கு இருக்கிறது என்று அருண்மொழி சொல்வதுண்டு. அப்போது வெங்கட் சாமிநாதனும் வாசந்தியும் இருபக்கமும் நிற்க நடுவே நான் நிற்கும் புகைபப்டம் ஒன்று என் ஆல்பத்தில் இருக்கிறது. அதில் அந்தச் சிரிப்பு இருக்கிறது.

பெண்ணேஸ்வரனையும் அப்போதுதான் அறிமுகம்.சுரேஷ¤ம் அவரும் சேர்ந்து வந்திருந்தார்கள். அவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி. நான் தருமபுரியில் வேலைபார்த்துவந்தமையால் உற்சாகமான நட்பு ஏற்பட்டது. அவர் அப்போது நவீனநாடகங்களில் திளைத்துக் கொண்டிருந்தார். நான் நவீனநாடகமென இரண்டுதான் பார்த்திருந்தேன். அவற்றில் நவீனம் எந்தப்பக்கமாக இருக்கிறதென புரியவுமில்லை. பெண்ணேஸ்வரன் தர்மபுரி மாவட்டத்துக் கூத்துக்கலை பற்றி விரிவாகப் பேசினார். பல கூத்துக்கலைஞர்களைப்பற்றி என்னிடம் விசாரித்தார்.

எனக்கு அந்த உற்சாகம் புரியவில்லை. காரணம் நான் பாலக்கோடுஅருகே ஒரு தெருக்கூத்துக்கு போயிருந்தேன். அது முக்கால்வாசி திரைப்படப்பாடல்களும் ஆபாச வசனங்களும் கொண்டதாக இருந்தது. ‘ஊருவிட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க’ என்று சீதை ராமனிடம் பாடி திங்கு திங்கென்று ஆடினாள்.கடத்திவந்த ராவணனுக்கு ஆத்திரம் தாளாமல் புடவையை தூக்கிக் காட்டினாள். மறுநாள் அலுவலகத்தில் தெருக்கூத்துக்குப் போன என்னை விபச்சார வீட்டுக்குப் போனவன்போல பார்த்தார்கள். உயிர்நண்பர் குப்புசாமி நான்குநாள் பேசவேயில்லை. என்ன காரணத்தால் அதை ஒரு கலை என்று இந்த மனிதர் சொல்கிறார் என்று வியந்து என் அனுபவத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். ‘வாய வச்சுட்டு சும்மா இருடே, அது தெருக்கூத்தே இல்ல’ என்று அச்சுதன் அடுக்கா அடக்கினார்.

பின்னர் வெங்கட் சாமிநாதன் தெருக்கூத்து என்ற தமிழ்க்கலையின் உன்னதம் ,நசிவு இரண்டைப்பற்றியும் என்னிடம் சொன்னார். திரும்பி நான் ஊருக்கு வந்தால் அப்படி ஒரு கலையே கிடையாது, ராத்திரி பதினொருமணிக்கு மேல் ஊர்ப்பெண்களை வாசலைமூடிபடுக்கச் சொல்லிவிட்டு எட்டூர் திரண்டுகூடி மேடைகட்டி ஆடும் தெருக்கூத்து மட்டும்தான் உண்டு என்றார்கள். மீண்டும் பலவருடங்கள் கழித்து மொரப்பூர் அருகே ஊத்தங்கரை என்ற ஊரில் உண்மையான தெருக்கூத்தைக் கண்டேன். அதில் கடைசிப்போரில் இந்திரஜித் ராவணனிடம் விடைபெறும் காட்சியை நான்கண்ட மிகச்சிறந்த நாடகக்காட்சிகளில் ஒன்றாக உணர்ந்தேன். தன் கண்ணீரை தம்பி காணாமலிருக்க ராவணன் பின்னால் திரும்பி நின்று கையசைத்து விடைகொடுத்தான். ஆனால் அதைப்பார்த்து நெகிழ நான் உட்பட ஒன்பது பார்வையாளர்களே விழித்திருந்தோம். நல்லவேளையாக அன்று பெண்ணேஸ்வரன் என்னை அப்போது அவமதித்து ஒன்றும் சொல்லவில்லை என்று நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.

அடுத்தவருடமே சம்ஸ்கிருதி சம்மான் விருது பெறுவதற்கு அருண்மொழியுடன் டெல்லி சென்றேன். அன்று என்னுடன் இதழியலுக்கான விருது பெற்றது ராஜ்தீப் சர்தேசாய். அவரது அலட்டலான உயர்குடிப்பாவனையும், எளியவர்களை, குறிப்பாக வெயிட்டர்களை துச்சமாக நடத்தும் தோரணையும் என்னை மிகவும் புண்படுத்தின. நான் வணக்கம் சொன்னபோது ‘வாட் யூ வாண்ட்?’ என்றார்,கோணலான இதழுடன். ‘இவனுகளுக்கு தமிழ்னா அவ்ளவு துச்சம்…உங்களுக்கு தெரியாது’ என்றார் கூடநின்ற நண்பர். ஆனால் பின்னர் பத்திரிகைப் பேட்டியில் அனல் கக்கும் புரட்சியாளராக ஆவேசப்பேச்சு பேசினார். இந்திய இதழியலின் மாபெரும் கள்ளநாணயங்களில் ஒன்றை அன்றே அறிமுகம்செய்துகொள்ள நேர்ந்தது.

அருண்மொழிக்கு ஒன்றும் தெரியாது. அன்று அவளுக்கு 20 வயது. மிரண்ட பெரிய கண்களுடன் அறிவுஜீவிகளைப் பார்த்து பீதியுடன் உட்கார்ந்திருந்தாள். வெங்கட்சாமிநாதனும் பெண்ணேஸ்வரனும் எங்களுக்கு ஓட்டலில் ஒரு விருந்து அளித்தார்கள். சாப்பாட்டுடன் அவர்கள் ஆளுக்கொரு பீர் குடித்தார்கள். அருண்மொழி ஒடுங்கிப்போய் அமர்ந்திருந்தாள். கைகழுவும்போது என்னிடம் தனியாக ”அவங்கள்லாம் குடிக்கிறது சாராயம்தானே?” ”இல்லை பீர்” என்றேன் ”அதும் சாராயம்தான்.எனக்கு தெரியும் ”என்றவள் ”ஜெயன், இவங்கள்லாம் கெட்டவங்களா?”என்றாள். எனக்கு உறுதியான பதில் ஏதும் தோன்றவில்லை.

வெங்கட் சாமிநாதனிடம் அருண்மொழி நவீன ஓவியம் பற்றி ஐயம் கேட்டாள். ஏன் இப்படி கோணல்மாணலாக வரைய வேண்டும்? நேராக வரையவேண்டியதுதானே? வெங்கட் சாமிநாதன் மிக நிதானமாக அவளுடைய புடவையின் டிசைனைப்பற்றி பேச ஆரம்பித்தார். அதன் வண்ணங்கள் கோடுகள் ஏன் அப்படி அமைந்திருக்கின்றன? ”வெளியே பார்க்கும் நிறங்களையும் வடிவங்களையும் நாம் நம் கற்பனையில் கலந்து நமக்கே உரிய வடிவங்களை உருவாக்கிக் கொள்கிறோம். அதன் மூலம் இயற்கையிலேயே நமக்குக் கிடைக்கும் அழகனுபவத்தை மேலும் பெருக்கிக் கொள்கிறோம். இயற்கையில் உள்ள சத்தங்கள் இனிமையானவை. ஆனால் நாம் அவற்றை  பலவாறாக மாற்றி அமைத்து இசை என்ற ஒன்றை உருவாக்கி ரசிக்கிறோம் அல்லவா, அதைப்போலத்தான் இதுவும்”

”நவீன ஓவியங்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையே”என்றாள் அருண்மொழி. ”ஏன் புரிந்துகொள்ள வேண்டும்?இந்த ஸாரியை என்ன புரிந்துகொண்டு எடுத்தாய்? பல ஸாரிகளைப் பார்த்தாய். கொஞ்சம் கொஞ்சமாக அவற்றில் இந்த டிசைன் நன்றாக இருக்கிறது என்று உனக்குத் தோன்றியது… இதைத்தான் ரசனை என்கிறோம். நிறைய ஓவியங்களைப் பார். கொஞ்சம் கொஞ்சமாக நல்ல ஓவியம் பிடிக்க ஆரம்பித்துவிடும்… ஒரு ஓவியம் என்ன உணர்ச்சியை தருகிறதோ அதுதான் அதன் அர்த்தம்…”

அருண்மொழி சுட்டிக்காட்டிய அருவச் சுவர் சித்திரத்தைக் காட்டி ”தண்ணியிலே மஞ்சளா புன்னைமரப்பூ விழுந்து கிடக்கும் நம்மூர்லே…பாத்திருக்கியோ? நீலமும் மஞ்சளுமா கலந்து அவ்ளவு அழகா இருக்கும். அந்த அழகை வேற மாதிரி மாத்தி வரைஞ்சிருக்கார் இந்த ஓவியர்னு வை”என்றார். அருண்மொழியின் முகம் மலர்ந்தது. அறிவுஜீவிகள் கெட்டவர்கள் அல்ல என்று அவளுக்குப் புரிந்ததுது. அதிலும் வெங்கட் சாமிநாதன் என்றால் ஒரு தனி பிரியம். மேலும் அவர் அவலுடைய தஞ்சைசீமைக்காரர்.

இப்போது பதினைந்து வருடம் தாண்டிவிட்டிருக்கிறது. இன்றும் எங்காவது பெரிசின் படத்தைப் பார்த்தால் அருண்மொழிக்குப் பரவசம்தான்.அவளது பிரியமான எழுத்தாளர் அசோகமித்திரன். அவரை யார் விமரிசனம் செய்தாலும் வெடிப்பாள். ஆனால் வெங்கட் சாமிநாதன் அசோகமித்திரனை பிடிபிடி என்று பிடித்தால் ஒன்றும் சொல்ல மாட்டாள் ”என்னமோ சொல்றாரு”என்று ஒரு தஞ்சாவூர் இழுப்பு. அவளும் வெங்கட் சாமிநாதனின் பிரியமான மாணவரான அ.கா.பெருமாளும் அவரைப்பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொள்வார்கள்.

பெண்ணேஸ்வரனை அதன்பின் டெல்லிக்குப் போனபோதெல்லாம் பார்த்திருக்கிறேன், ஆனால் நான் டெல்லிக்கே நான்குமுறைதான் போயிருக்கிறேன். அவர் யதார்த்தா என்ற நாடக இயக்கத்தை ஆரம்பித்தார். சி.சு.செல்லப்பாவின் முறைப்பெண் நாடகத்தை இந்தக்குழு மேடையேற்றியது. தொண்ணூறுகளில் ·போர்டு நிறுவன ஆதரவால் மேடையில் கயிறுகட்டி ஆடுவதும் தெருக்கூத்து மாதிரி வேடமிட்டு வந்து ஏழரைக்கட்டையில் பேசுவதுமாக தமிழ் நாட்கமேடை தமாஷ் பண்ணிக்கொண்டிருந்தபோது அந்த யதார்த்த நாடகம் மூலம் ஒரு அதிர்ச்சியை உருவாக்க அவரால் முடிந்தது. அவரை தமிழ்நாடகத்தை பின்னோக்கி இழுக்கிறார் என்று வைதவர்களை நான் கேட்டேன்.ஆனால் பின்னர் இங்கே யதார்த்த நாடகங்கள் வர ஆரம்பித்தன

பெண்ணேஸ்வரன் சமீபமாக ‘வடக்குவாசல்’என்ற சிற்றிதழை நடத்தி வருகிறார். டெல்லியிலிருந்து வரும் இந்த இதழ் அதிக ஆதரவில்லாமல் பிடிவாதமாக அவரால் கொண்டுவரப்படுகிறது. பெண்ணேஸ்வரனின் சனிமூலை என்ற இணையப்பக்கத்தை வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறேன். தமிழ் இலக்கியவாதிகளைப்பற்றிய நினைவுகளும் பதிவுகளும் நிறைந்த உற்சாகமான வாசிப்புதரும் இணையப்பக்கம் இது.

http://sanimoolai.blogspot.com

ஞாநி இணையதளம்

ஷாஜியின் வலைப்பூ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/698

1 ping

  1. jeyamohan.in » Blog Archive » போதகரின் வலைப்பூ

    […] பெண்ணெஸ்வரனின் இணையப்பக்கம் […]

Comments have been disabled.