தமிழ் மின்னிதழ்

CSK

சி.சரவணக்கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளியாகும் மின்னிதழான ’தமிழ்’ நேற்று பிரசுரமாகியிருக்கிறது. இதை பரீக்‌ஷா ஞாநி வெளியிட்டிருக்கிறார். வெளியீட்டு விழாவும் இணையத்திலேயேதான்

இணையத்தில் உதிரி குறிப்புகளாக வெளியாகிக்கொண்டிருக்கும் எழுத்துக்களை ஒரே இடத்தில் பிரசுரிப்பது இதன் நோக்கம். பொதுவாக இணையதளம் என்பதே இணையஇதழாக இங்கே கொள்ளப்படுகிறது. ஆனால் இவ்விதழ் இணையம் மூலம் வாசிக்கக் கிடைக்கும் இதழ்.தரவிறக்கம் செய்தோ நேராகவோ வாசிக்கலாம்

ஏற்கனவே வெளிவந்த சில இணையஇதழ்கள் கணிசமான பங்காற்றியிருக்கின்றன. குறிப்பாக சொல்வனம் இதழ் தமிழ் இணையஇதழ்களில் முக்கியமானது என நினைக்கிறேன் பதாகை என்ற இணைய இதழும் குறிப்பிடத்தக்கது.

இணைய இதழ்கள் பல உற்சாகமாக ஆரம்பிக்கப்பட்டு காலப்போக்கில் வாசகர்கள் இல்லாமலாகின்றன. இணைய இதழின் ஒரு சாதக அம்சமே பாதகமாகவும் ஆகிவிடுகின்றது என்பதே காரணம். இணைய இதழுக்கு அச்சிதழ்போல பக்க வரையறை ஏதுமில்லை. ஆகவே அதில் எவ்வளவு வேண்டுமென்றாலும் பிரசுரிக்கலாம். மறக்கப்படும் விஷயம் என்னவென்றால் வாசகர்களுக்கு வாசிப்புக்கான வரையறை உண்டு என்பதே.

ஆகவே பெரும்பாலான இணைய இதழ்களில் எதுவும் வெளியாகும் என்ற நிலை உள்ளது. அதை ஆசிரியர்கள் வாசிப்பதில்லை. அதில் ஒரு தேர்வு இல்லை. விளைவாக ஏராளமான தரமற்ற பக்கங்கள் முன்வைக்கப்படும்போது வாசகன் காலப்போக்கில் சலித்து விலகிவிடுகிறான்

எந்த இதழிலும் அதன்பின் உள்ள ஆசிரியருக்கு என ஓர் ஆளுமை தேவை. அவரது ரசனை, நேர்மை போன்றவற்றை வாசகன் நம்பவேண்டும். அதிலுள்ள படைப்புகள் முதன்மையாக அவ்வாசிரியரால் பரிந்துரைக்கப்படுபவையாக இருக்கவேண்டும். அந்த அடிக்கோடுதான் உண்மையில் வலைத்தளங்களில் பிரசுரம் பெறுவதற்கும் இணைய இதழில் பிரசுரம் பெறுவதற்குமான வேறுபாடு

இவ்வகையான ஒரு கறார் தன்மையை இணையத்தில் கடைப்பிடிப்பதும் கடினம். பொதுவாக இணையம் ஒரு நட்பு வெளி. [சரி, பகைவெளியும் கூடத்தான்] நட்பு கொடுக்கும் கரிசனங்களுக்கு அப்பால் சென்று கறாரான மதிப்பீடுகளைக் கொண்டு தேர்வுகள் நடந்த்தப்பட்டாகவேண்டும். அதுவே அதில் எழுதுபவர்களுக்கும் நல்லது

தமிழ் மின்னிதழ் அவ்வகையில் ஒரு நற்பெயரை ஈட்டிக்கொள்ளும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்

தமிழ் மின்னிதழ்

முந்தைய கட்டுரைபுத்தகக் கண்காட்சி
அடுத்த கட்டுரைபெருமாள் முருகன் பற்றி