பெருமாள் முருகன் கடிதம் 7

சார்லி ஹெப்டோ படுகொலைகளைவிடக் கொடூரமானது பெருமாள் முருகனுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை.அந்த பயங்கரவாதிகள் ஒரேயடியாக உயிரை எடுத்தார்கள்.இங்குள்ள பயங்கரவாதிகள் ஒரு நல்ல படைப்பாளியை நாள்தோறும் அணுஅணுவாகக் கொன்றுகொண்டிருக்கிறார்கள்.

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

ஜெமோ

இது நீங்கள் முன்வைக்கும் கருத்துரிமைப்போராளி மனுஷ்யபுத்திரனின் முகநூலில் ஒரு முஸ்லீம் எழுத்தாளர் எழுதியது. இந்த சித்திரத்தைத்தான் உண்டுபண்ண விரும்புகிறீர்களா?உலகம் முழுக்க கொண்டுபோய் இப்படி ஒரு சித்திரத்தைத்தானே பெருமாள் முருகன் உருவாக்குகிறார்.

ஆரம்பம் முதலே அவரிடம் திருச்செங்கோடு என்ற பேரை நீக்கவேண்டும் என்பதற்கு மேல் எதையுமே திருச்செங்கோட்டின் எட்டு சாதிகள் அடங்கிய குழு கேட்கவில்லை. [கவுண்டர்கள் மட்டும் கேட்டார்கள் என்பது பெரிய புளுகு] அவரை எந்த வகையிலும் மிரட்டவில்லை. அதற்கு ஒப்புக்கொள்ளாமல் ஆங்கில மீடியாக்களை தேடிப் போனார். ஆங்கில ஊடகங்களிலே அது இந்துத்துவ கட்சிகளின் சதி என்று சொன்னார். உடனே சாதியமைப்புகள் அவர்களை கலந்துகொள்ளவேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.

அவர் ஊர் ஊராகப்போய் மீடியாவில் பேசப்பேசத்தான் பிரச்சினை பெரிதானது. பிடிவாதமாக அதெல்லாம் உண்மையில் நடந்தது, புனைகதை கிடையாது என்று அவர்தான் சொன்னார். புனைகதைக்கும் வரலாற்றுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்று திருச்செங்கோடு மக்களைச் சொல்கிறார்கள். அது புனைவு இல்லை உண்மை, ஆனால் தகவலாளிகளைக் காட்டிக்கொடுக்க முடியாது என்பதனால் பேசாமல் இருப்பதாக ஆங்கில மீடியாவிலே சொன்னவரே அவர்தான்

மீடியாவுக்கு திருச்செங்கோடுக்காரர்கள் போகவில்லை. எந்த வகையிலும் ஜனநாயக விரோதமான எதையும் செய்யவில்லை. நீதிமன்றம் செல்வோம் என்பதற்கு மேல் எதையுமே பெருமாள் முருகனிடம் பேசவில்லை. பேசியதாக அவர் சொல்லட்டும். ஒரு ஆதாரத்தைக் காட்டட்டும்.

நடந்தது அரசாங்கம் கூட்டிய சமரசக்கூட்டம். கட்டைப்பஞ்சாயத்து கிடையாது. அதில் அவர் உள்ளே வந்ததுமே நூலில் இனிவரும் பதிப்புகளில் திருச்செங்கோடு என்ற பெயர் இருக்காது என்றும் வெளிவந்த இதழ்களை நிறுத்திவிடுவதாகவும் சொன்னார். அதைத்தான் சாதிக்கூட்டமைப்பு ஆரம்பம் முதலே கேட்டுக்கொண்டிருந்தது.உடனே சாதிக்கூட்டமைப்பும் இனிமேல் போராடுவதில்லை, சமாதானமாகப் போய்விடுவோம் என்று எழுதிக்கொடுத்தார்கள். அந்த கடிதமே இணையத்தில் வந்திருக்கிறது.

ஆனால் அவர் வெளியே போய் அவர் இனிமேல் எழுதவே போவதில்லை, அவரது எழுத்துக்களை தீயிட்டு கொளுத்தபோகிறார், அவரை எழுதவிடாமல் தடுத்து கட்டளையிட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் உருக்கமாக அறிவித்தார். ஆங்கில மீடியா முழுக்க அதைச் சொல்கிறார். பிபிசி செய்தி வெளியிடுகிறது. டைம்ஸ் நவ் விவாதத்தில் அவருடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறதாகவும் அதனால் அவர் எழுதுவதை நிறுத்திவிடுவதாகவும் சொல்கிறார்கள். பிபிசியும் அப்படித்தான் சொல்கிறது.

பிரச்சினை ஆரம்பித்த இத்தனைநாட்களாக அவர் பிடிவாதமாக அவர் எழுதியது சரிதான் ஆதாரம் இருக்கிறது ஆனால் சொல்லமாட்டேன் என்றெல்லாம் சொல்லியபடி இதே திருச்செங்கோட்டில்தான் இருந்தார். என்ன ஆபத்து வந்தது? இப்போது திருச்செங்கோட்டு மக்கள் மனிதவேட்டை ஆடுகிறார்கள் என்று உலகம் முழுக்க கொண்டு போய்விட்டார். இது என்ன அரசியல்? இதில் உள்ள நேர்மை என்ன? எழுத்தாளர்கள் என்றால் உண்மையைப் பார்க்கவேண்டியவர்கள் அல்லவா? இதைப்பார்க்க மாட்டீர்களா? இதில் என்ன நடக்கிறது?

சிவகுமார் திருச்செங்கோடு

அன்புள்ள சிவக்குமார்

ஈஸ்வரன் என்பவர் பெருமாள் முருகனையே தடைசெய்யவேண்டும் என்று சொல்கிறார். அவர் வீட்டுமுன் தர்ணாவில் அமர்ந்து இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்

நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைசென்ற வாரம் முழுக்க…
அடுத்த கட்டுரைபெருமாள் முருகன் கடிதம் 8