பெருமாள் முருகன் கடிதம்- 6

அன்பு ஜெயன் ,

இன்று பெருமாள் முருகனின் கருத்துச் சுதந்திரத்திற்காக போராடும் அறிவுஜீவிச் சமூகம், சென்ற 24 பெப்ரவரி மாதம் புதுமைப்பித்தனின் “துன்பக்கேணி” மற்றும் “பொன்னகரம்” ஆகிய இரண்டு சிறுகதைகள் சென்னை பல்கலைகழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது ,அப்பொழுது ஏன் இத்தனை கொந்தளிப்புக்கு உள்ளாகவில்லை. காரணம் புதுமைப்பித்தன் இறந்ததாலா? அல்லது அதன்பின்னணியில் இருந்த அரசியல் வாதங்களோடு இவர்களுக்கு உடன்பாடு இருந்ததாலா?

இந்து செய்தி

இந்து செய்தி 2

இவண்,
இளந்திரையன்.

ஜெமோ

எளிமையான கேள்வி. ஜோ டி குரூஸ் அவருடைய நாவலுக்காக கத்தோலிக்க திருச்சபையாலும் மீனவக் கிராமங்களாலும் ஊர் விலக்கு செய்யப்பட்டார். அவரே அதை மேடைகளில் சொல்லி நீதி கேட்டார். அவர் அநியாயமாக கத்தோலிக்கர்களை விமர்சித்ததனால் தகுதியான தண்டனைதான் அது என்றுதான் இப்போது கருத்துச் சொல்லும் ஞாநி வாதிட்டார். எல்லாருக்கும் ஒரே நியாயமா? இல்லை பெருமாள் முருகன் தனியா?

சபா

அன்புள்ள இளந்திரையன், சபா,

நான் என் முதல் குறிப்பிலேயே சொல்லியிருக்கிறேன். இதில் எப்போதும் so called முற்போக்காளர்களின் அரசியல் உள்ளது என்று. எனக்கு எதிராக சுசீந்திரத்தில் இந்துமுன்னணி -சாதி அமைப்புகள் சார்ந்து எழுந்த மிரட்டலும் இதேவகையானது. அதை ஆதரித்து மகிழ்ந்ததவர்கள்தான் இங்கு இப்போது கருத்துச்சுதந்திரம் பேசுகிறார்கள். அதை நான் பொருட்படுத்தவில்லை.

இப்போது இதை எதிர்க்கும் கருத்துச் சுதந்திரவாதிகளில் பலர் அவர்களுக்கு எதிராக பேசும் கருத்துக்களை ஒடுக்க தெருவில் இறங்கிய தமிழ்த்தேசியவர்திகள். எப்போதும் ஜனநாயகத்தின் குரலில் பேசிய ஒரே தரப்பு இடதுசாரிகள் மட்டுமே.

இந்த மிரட்டல் எப்போதும் உள்ளதுதான். வண்ணநிலவன் இதேபோல சாதியமைப்புகளால் மிரட்டப்பட்டபோது பிச்சாண்டி பானர்ஜி, கோமதிநாயகம் சின்ஹா என்று சாதியைக் குறிப்பிட்டு ஒரு கதை எழுதிய நினைவு உள்ளது.

புதுமைப்பித்தன் கதைக்கு எதிரான எழுந்த எதிர்ப்புக்கு எதிராக வலுவான அறிவார்ந்த குரல்கள் அச்சாதியில் இருந்தே வந்தன. அதைவிட சிறந்த முன்னுதாரணம் தமிழில் வேறு இன்றுவரை இல்லை. [ராஜ் கௌதமன், ரவிக்குமார்] பிராமணர்கள் அன்றி பிற சாதியில் சொந்த சாதிக்கு எதிராக அப்படி ஓர் அறிவார்ந்த குரல் எழுந்து நான் கண்டதுமில்லை.

இத்தகைய சாதிய குழுக்களின் எதிர்ப்பு ஒரு ‘டிரெண்ட்’ ஆக மாறியுள்ளது. எழுத்தாளன் போன்ற எளிய இலக்குகள் வழியாக அவர்கள் ஊடகத்தை வென்று அடைகிறார்கள். இப்போதேனும் இதை இங்கே நிறுத்தாவிட்டால் எங்கு சென்று சேருமென்றே சொல்லமுடியாது. எழுதும் சொல்லுக்கெல்லாம் சாதிசங்கங்களின் பஞ்சாயத்தில் சென்று அமரவேண்டியிருக்கும். எந்த நூலையும் இவர்கள் விட்டுவைக்க மாட்டார்ர்கள்.

ஆகவே இப்போது ஓரு வலுவான எதிர்ப்பை திரட்டுவதே அவசியம். பிறர் இப்போதெனும் கருத்துச்சுதந்திரத்தின் அவசியத்தை உணரட்டுமே. இந்நிலையில் ”நேற்று அதுக்கு என்ன செஞ்சீங்க?” என்ற கேள்வி இந்த எதிர்ப்பை நீர்த்துப்போகச்செய்யும் சாதிய- மதவாத உள்ளடக்கம் கொண்டதே

ஜெ

முந்தைய கட்டுரைபெருமாள்முருகன் கடிதங்கள்- 5 ‘பொங்கும் பெரியாரியர்களுக்கு’
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 88